- தமிழ் நாட்டில் ஏராளமான திருமணங்களுக்கு சென்றிருக்கிறேன். மேடை அமைப்பு எல்லாத் திருமணங்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கும். உயரமான இடம் அல்லது சாதாரணமான இடம் ஏதோ ஒன்றில் சுற்றிலும் பூ, பழங்கள், தட்டுகள் தாம்பாளங்கள் நிறைந்திருக்க, ஹோமம் வளர்க்கப் பட்டு திருமணம் நடைபெறும்.
சமீபத்தில் சென்று வந்த திருவனந்தபுரம் திருமணத்தில் பார்த்த மேடை வித்யாசமாக இருந்தது. மேடையிலேயே ஒரு வட்ட மேடை அமைக்கப் பட்டிருந்தது. அது இருந்த வடிவத்துக்கு எந்த நிமிடமும் சுழலக் கூடிய சுழல் மேடை போலக் காட்சி அளித்தது. பூவினால் அலங்காரம் செய்யப் பட்டு வட்டமாக இருந்த அதில்தான் ப்ரோஹிதர் அமர்ந்து திருமணம் நடத்தத் தயாராய் இருந்தார்.
இன்னும் ஒரு விஷயம் கவர்ந்தது. மேலே ஒரு சிறிய அண்டா போன்ற பாத்திரம், ஈரிழை தாம்புக்கயிறால் இணைக்கப் பட்டு கயிற்றின் முனையை மேடைக்கு வலது புறம் சற்றே ஒதுங்கி நின்று ஒருவர் பிடித்து தயாராய் நிற்கிறார். அந்த அண்டாவில் (அண்டா என்றும் சொல்ல முடியாது. சுற்றிலும் ஆட்டும்போது விழும் வகையில்) வழிய வழிய பூவிதழ்கள் நிரப்பி, தாலி கட்டும் நேரம் மற்றும் முக்கிய நேரங்களில் அதை அசைத்து அசைத்து பூவிதழ்கள் மணமக்கள் மேல் விழும்படி வைத்திருக்கிறார்கள். நல்ல ஏற்பாடு என்று தோன்றியது.
மேடையில் காணப் பட்ட இந்த கெண்டி வித்யாசமாய் தெரிந்தது. அகத்தியர் கை கெண்டி போல காணப் படும் இதை தமிழ்நாட்டுத் திருமணங்களில் கண்ணில் பட்டதில்லை! எனவே அது ஒரு ஸ்நேப்!
வித்யாசங்கள்:
சாப்பிடும் இடத்தில் இலையில் பல்வேறு புதிய பதார்த்தங்களுடன் ஒரு எலுமிச்சம் பழமும் வைத்திருந்தார்கள். அந்த ஊர் வழக்கமாம். வைலட் நிறத்தில் கூட ஒரு பச்சடி இருந்தது. ரசத்துக்கும் மோர் அல்லது தயிருககும் முக்கியத்துவம் கிடையாது போலும். முதலில் பருப்பு பரிமாறப் பட்டு சப்பிட்டான பின் சாம்பார். அது முடியும் போது பாயசம், அடுத்து என்ன என்று பார்த்தால் மீண்டும் பாயசம், சரி அடுத்து நிச்சயம் வேறு ஐட்டம் என்று பார்த்தால் மீண்டும் மீண்டும் மூன்றாம் வகைப் பாயசம்...("நாயர் வீடுகள்ல ஏழு வகைப் பாயசம் வைப்பார்கள் சார்!") சரி இனியாவது ரசம் வரும் என்று பார்த்தால் .....வந்தது... எல்லோரும் கையைக் குவித்து ரெடியாகக் காத்திருக்க கையில் ஒரு ஒரு கரண்டி ஊற்றி மறைய அதே போல மோரும்! பாயசம் போட்ட உடனேயே விருந்து நிறைவுக்கு வந்து விடுகிறதாம். அருகில் இருந்தவர் தகவல். சீரகம் போட்டுக் காய்ச்சிய செந்நிறக் குடி தண்ணீர். சிகப்பு அரிசி சாதம் , வெள்ளை அரிசி சாதம் இரண்டும் சாய்ஸ் தந்தார்கள் என்பது ஆறுதல்.
முதல் நாள் பெண் வீட்டில் வரவேற்பு என்று சொன்னார்கள். அழைத்த மாதிரி தெரியவில்லையே, இப்போது சொல்கிறார்களே என்று யோசித்தபடி போய்ப் பார்த்தால் மாப்பிள்ளையைக் காணோம். எங்கே என்று கேட்டால் அவர் வரமாட்டார் என்றார்கள். "இந்த ஊர் வழக்கம் சார், பொண்ணு வீட்டு ரிசப்ஷன்..மாப்பிள்ளை வரமாட்டார்.." நிகழ்ச்சிகளில் மாப்பிள்ளை இல்லை என்பதைத் தவிர வித்யாசம் இல்லை. விருந்து, ஃபோட்டோ இத்யாதி இத்யாதி..
