அந்தக் காலத்தில் விரும்பிப் படித்த பல நாவல்களை புத்தக வடிவில் வாங்கும்போது 'ஆனாலும்...' என்ற ஒரு சின்ன ஏக்கம் இருக்கும்! அதாவது அப்போது தொடர்கதையாக வந்த போது வாராவாரம் கதைகளுக்கு ஜீவன் சேர்த்த ஓவியங்கள் இல்லாமல் புத்தகம் படிப்பது ஏதோ இழந்தது போலத்தான் இருக்கும். பைண்ட் செய்து வைத்திருக்கும் புத்தகங்கள் வசதியானவை. படங்களுடன் படித்து ரசிக்கலாம். ஆனால் எங்கள் வீட்டு விசிறி வாழை, வாஷிங்டனில் திருமணம் பொன்னியின் செல்வன், யவனராணி போன்ற பல புத்தகங்கள் பூச்சி அரித்து வீணாய்ப் போனது கஷ்டமாக இருந்தது.
புத்தகமாகப் போடுகிறவர்கள் வாராவாரம் வந்த அந்தப் படங்களையும் சேர்த்து போடக் கூடாதோ என்று தோன்றும். யவனராணி போன்ற கதைகளில் டைபீரியசையும் யவனராணியையும் அட்டையில் மட்டுமே காண முடியும். உள்ளே வரிகள், வரிகள், வரிகள்.....
விகடன் முதல்முறையாக அந்தக் குறையைப் போக்க வருகிறது. அதைப் படித்த நாள் முதலே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. நிறையப் பேருக்கு ஏற்கெனவே தெரிந்தும் இருக்கும். படித்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள். ஆனாலும் சும்மா பகிர்ந்து கொள்கிறேன்!
2216 பக்கங்களில் 5 பாகங்களாக கெட்டி அட்டையுடன் 1,350 ரூபாய், ஆனால் 31-12-2011 க்குள் முன்பதிவு செய்தால் பொன்னியின் செல்வன் புத்தகம் 999 ரூபாய்க்குத் தருவதாக விளம்பரம். ஓவியர் மணியம் தீட்டிய ஒரிஜினல் வண்ண ஓவியங்களுடன் என்பதுதான் விசேஷம். (புத்தகத்தில் கருப்பு வெள்ளைதான் வந்தது - முதல் முறை) "இது வரை நீங்கள் பார்த்திருக்கவே முடியாத பிரமிப்பான வடிவில்" என்று ஆசை காட்டுகிறது.
ரூபாய் அதிகம் என்று தோன்றினாலும் நிச்சயம் நிறைய பேர் விரும்புவார்கள் என்றுதான் தோன்றுகிறது. (ஓவியங்கள் இல்லாத பதிப்புகள் 250 ரூபாயிலிருந்து 300 ரூபாய்க்குள் கிடைக்கிறது - ஐந்து பாகங்களும். ஐந்து பாகங்களும் ஒரே புத்தகமாய்க் கூட கிடைக்கிறது. டைரி சைஸில் என்ற விளம்பரத்துடன்)
****************************************************
பத்து நாட்களுக்குமுன் படித்த இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். கடத்தப் பட்ட 22 டைனோசர் முட்டைப் படிமங்களை சீனாவிடம் அமெரிக்கா தந்ததாகப் படித்த செய்தி.
வயது 6.5 கோடி ஆண்டுகளுக்கும் மேல் இருக்கலாம் என்றும் ஏலம் விடப் படுவதற்கு இவை கடத்தப் பட்டதாகவும் தெரிகிறது.
சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த முட்டைகளில் 19 முட்டைகளில் உயிர் பெறக் கூடிய முதிர்வுறாக் கருவுரு உயிர் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்ற செய்திதான்.
மூன்றாவது முறை அமெரிக்கா இப்படி திருப்பி தந்திருக்கிறதாம்.
ஒவிராப்டர் வகையைச் சேர்ந்த முட்டைகளாம். சீனாவின் தெற்குப் பகுதியில் இருக்கும் குவாங்க்டன் மாகாணத்தில் கிடைக்கப் பெற்றதாம்.
***********************************************************
மறைந்த தேவ் ஆனந்த் பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்றும் படித்தேன். தேவ் ஆனந்துக்கு முஹம்மது ரஃபி பல பாடல்கள் பாடியிருக்கிறார்.
ஆனால் முஹம்மது ரஃபிக்காக தேவ் ஆனந்த் ஒரு பாடல் பாடியிருக்கிறாராம். 1966 ஆம் வருடம் பியார் மொஹப்பத் என்ற படத்தில் ஒரு பாடலின் இடையே வரும் வரிகளை தேவ் ஆனந்த் பாடினாராம்.
************************************************************
கடிதங்கள் எழுதும் காலத்தில் போஸ்ட் கார்டாக இருந்தாலும் சரி, இன்லேன்ட் லெட்டராக இருந்தாலும் சரி எங்கள் குடும்பத்துக்கே ஒரு வழக்கம் உண்டு. சுருக்கமாக எழுதிப் பழக்கமே இல்லை! பொடிப் பொடியாக எழுதுவது முதல் மார்ஜினில் கோணம் மாற்றி எழுதுவது, ஸ்கெட்ச் பேனாவில் - ஏற்கெனவே எழுதியிருக்கும் இடையே பெரிய எழுத்துகளில் ஒரு செய்தி என்றெல்லாம் எழுதி ஒட்டிய பின்னும் அனுப்புனர் முகவரியின் மேலும் கீழும் கூட சில வரிகள் எழுதி அனுப்புவோம்!
இது எதற்கு நினைவுக்கு வந்தது என்றால், பொன்னியின் செல்வன் செய்தியை மட்டுமே பகிரும் எண்ணம் இருந்தாலும் ஒரு பதிவில் நிறைய இடம் கீழே வேஸ்ட் ஆகிறதே (!!!) என்று இன்னும் இரண்டு செய்திகளை இதோடு இணைத்து விட்டேன்.
கொசுறு தகவல். இன்று எவர்க்ரீன் படம் மிஸ்ஸியம்மா மறுபடி பார்க்கப் பட்டது. மிக அழகிய சாவித்திரி, மிக அழகிய ஜெமினி கணேசன் இனிமையான பாடல்கள் என்று அலுக்காத, அருமையான படம்.
கொசுறு 2 : தினமணியில் மதியின் கார்ட்டூன்..."ஐயோ அடுத்த வருடம் 12-12-12 என்ற ஒரு சிறப்பான நாளில் வரும் ரஜினியின் பிறந்த நாளை - இன்ப அதிர்ச்சியை -அவர்தம் ரசிகர்கள் எப்படி தாங்கப் போகிறார்களோ..." !!!!!!!