டிசம்பர் இரண்டாம் தேதி, ஆண்டு 1971. அவர்கள் கேட்டிருந்தபடி, எல்லா சான்றிதழ்களும் எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். புறப்படுவதற்கு முன்பு, என்னுடைய எக்ஸ்-ரே யை, ஒரு புதிய மஞ்சள் நிற காகித கவரில் போட்டு, ரிப்போர்ட் இருந்த கவரை வீட்டிலேயே விட்டு, கிளம்பினேன்.
மருத்துவப் பரிசோதனைக்கு மொத்தம் ஐந்து பேர் வந்திருந்தனர். கௌதமன், பாஸ்கர், அனந்தராமன், விஸ்வநாதம் (ஆமாம் - தம் தான்) ஷ்யாம் சுந்தர் ரெட்டி - என்று ஞாபகம். ஐந்தாவது நபர் சரியாக ஞாபகம் இல்லை.
எல்லோரையும் மருத்துவ மையம் வாசலில் நிறுத்தி, எக்ஸ் ரே மற்றும் வாக்சினேஷன் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு, பெயர்கள் எழுதிக் கொண்டு, உள்ளே ஒரு அறையில் சென்று அமரச் சொன்னார்கள். அனைவரும் உள்ளாடை மட்டும் அணிந்து, ஒரு வெள்ளை நிற பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டோம்.
ஒரு மணி நேரம் இப்படி சங்கோஜமான நிலைமை. அவ்வப்போது கையில் / காலில் அடிபட்டு, டிஞ்சர் போட்டுக் கொள்ள வந்த இரண்டொரு தொழிலாளர்கள், அதிசயமாக எங்களைப் பார்த்து, அருகில் இருந்த கம்பவுண்டரிடம், 'யாரு இவங்க எல்லாம்? ஏதேனும் திருடிட்டு செக்யூரிடி அலாரம்ல மாட்டிகிட்டான்களா?' என்று ரகசியமாகக் கேட்டார்கள். கம்பவுண்டர், அவர்களிடம், 'இல்லைபா, சூப்பர்வைசர் ட்ரைனிங் கு புதுசா சேர வந்திருக்கின்ற ஆளுங்க.அவங்களுக்கு மெடிக்கல் எக்சாமினேஷன்'' என்றார்.
ஒவ்வொருவரையும் எடை மெஷினில் நிறுத்தி எடை பார்த்தார்கள். நான் முப்பத்தைந்து கிலோதான் இருந்தேன். எடை பார்த்தவர், "வரும்பொழுது நிறைய வாழைப் பழம் சாப்பிட்டு வந்திருக்கக் கூடாதா? வெயிட் கொஞ்சம் அதிகமாகக் காட்டியிருக்குமே " என்று கேட்டார். 'முன்னரே சொல்லியிருக்கக் கூடாதா' என்று நினைத்துக் கொண்டேன். அதற்குப் பிறகு ஆளுக்கு ஒரு சோதனைக் குழாயைக் கையில் கொடுத்து அந்தப்புரத்திற்கு அனுப்பினார்கள். 'சோதனை மேல் சோதனை போதுமடா சாமி' என்று மனதினுள் பாடியபடி சென்றேன்.
பிறகு நடந்தது என்ன என்றால் ...
அட! பதிவுல சென்சார் புகுந்து சில பகுதிகளை கட் செய்துவிட்டார்கள்!
டாக்டரை சந்திக்க ஒவ்வொருவரும் தனித் தனியே அழைக்கப்பட்டார்கள் (ஆமாம், ஆமாம் உள்ளாடை மட்டும்தான் - இப்பவும்) ஒவ்வொருவருக்கும் பத்து முதல், பதினைந்து நிமிடங்கள் ஆயின. என்னுடைய முறை வந்ததும், அறையினுள் சென்றேன்.
டாக்டர் வயதானவர். உயரமாக, புன்னகை தவழும் முகத்தோடு, வழுக்கைத் தலையுடன், வெள்ளைக் கோட்டு, வெள்ளை பாண்ட் அணிந்து, பருமனான மனிதராக இருந்தார். (பெயர் தெரியும். சொல்ல மாட்டேன்! ) என்னை நூறு சதவிகிதம் தேகப் பரிசோதனை செய்த பின், என்னுடைய எக்ஸ்-ரேயை அங்கிருந்த ஒளி பொருந்திய ஸ்டாண்டில் மாட்டினார். எக்ஸ்-ரே யை சில வினாடிகள் உற்றுப் பார்த்தார்.
பக்கத்து அறையில் இருந்த அவருடைய உதவியாளரை, சத்தமாக அழைத்தார். (உதவியாளர் பெயர் ஞாபகம் இல்லை). என்னுடைய சப்த நாடிகளும் ஒடுங்கிப் போயின.
டாக்டர், 'ஹியர் இஸ் எ கேஸ் ஆப் அக்யூட் பிராங்கிடிஸ் விச் மே டெவலப் இண்டு எ சீரியஸ் அண்ட் மாலினன்ட் ஒன் அண்டர் அனட்டென்டட் சர்க்கம்ஸ்டான்சஸ் ....' என்று சொல்லி, உதவியாளர் உதவியோடு, என்னை ஆம்புலன்சில் ஏற்றி, சென்னைப் பொது மருத்துவமனைக்கு கொண்டுபோய் விட்டு விடுவாரோ என்ற பயம் வந்துவிட்டது, எனக்கு.
உதவியாளர் வந்தார் .....
மீதி அடுத்த பதிவில் பார்ப்போம்.

