அறிவு ஜீவியின் புலம்பல் கேட்க மிகவும் கஷ்டமாக இருந்தது. "போச்சு போச்சு எல்லாம் போயே போச். போயந்தி It's gone " என்று அமிர்தாஞ்சனம் விளம்பரம் மாதிரி கூவிக் கொண்டே வந்தார்.
"என்னய்யா என்ன ஆயிற்று?" என்று கேட்டால், "எல்லாம் அந்த அது படுத்தும் பாடு தான் எவ்வளவு கஷ்டப்பட்டு அவ்வளவு புத்தகம், ஒலி நாடா, பாட்டுக் குறுந்தகடு இன்னும் என்னவெல்லாமோ சேர்த்து வைத்திருந்தேன். எல்லாம் போச்சு." என்று கொஞ்சம் விவரமாகவே புலம்ப ஆரம்பித்தவர், 'போன வாரம் நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு மந்திரம் சொன்னோமே நினைவிருக்கிறதா? யாருக்கு என்ன திரும்பிக் கிடைத்தது ?' என்று கேட்டார்.
லட்சுமிக் குட்டி வந்து, 'என்னுடைய ரப்பர், பென்சில் எல்லாமே கிடைச்சுட்டது ' என்றாள். அம்மா வந்து கைத் தவறுதலாக வைத்துவிட்டு தேடிக் கொண்டிருந்த தன் மூக்குத்தி கிடைத்து விட்டது, 'மந்திரம் சக்தி வாய்ந்தது தான். ஆனா நாம எவ்வளவு நம்பிக்கையுடன் சொல்கிறோம் என்கிற ஒரு அளவு கொண்டு தான் எல்லாம் நடக்கும் போலுள்ளது' என்றாள்.
"ஏன் சார் ஒரு மாதிரி இருக்கிறீர்கள்?" என்று அறிவைப் பார்த்துக் கேட்டுக் கொண்டே ஷ்யாம் பிரசன்னமானான். அறிவு மீண்டும் ஒரு முறை தன் நஷ்டங்களைப் பற்றி முறையிட்டு ஓய்ந்தார். ஷ்யாம், "அப்போ மற்றவர்கள் எல்லோரும் உங்களை விட மகா நம்பிக்கையுடன் மந்திரத்தை சொல்லி இருப்பார்கள் போலிருக்கிறது. உங்கள் புத்தகங்களில் எவ்வளவு நீங்களே வாங்கி சேர்த்தது?' என்று வினவ, அறிவு 'அது ... வந்து......" என்றிழுக்க, "ஆக, எல்லாமே சுட்டவை - எனவே அதது அவரவர் வீட்டுக்குத் திரும்பி விட்டன இல்லையா?' என்று கேட்டான்.
மந்திரத்தின் மகாத்மியம் எங்களுக்கும் புரிய ஆரம்பித்தது!
(நன்றி : தினகரன் ஆன்மீக சிறப்பு மலர்.)
