Kalki short story competition. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Kalki short story competition. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.6.12

கோமா, பிரதமர், தற்கொலை, ஜனாதிபதி, பால் ஐஸ்.... வெட்டி அரட்டை!




"மே டே... மே டே....."
    
இன்னுமொரு தற்கொலை.
               
ஏன்?  காரணம் தெரியாது. பொறியியல் மூன்றாமாண்டு படிக்கும் (படித்துக் கொண்டிருந்த) மாணவன் பி கே தர்மா. பெற்றோர் உயிர் காப்புறுதி நிறுவனத்தில் வேலை பார்க்கின்றனர். இந்த மாணவன் சிறந்த கிரிக்கெட் வீரரும் கூட. உள்ளூர் மேட்சுகளில் ஆடி முன்னேறி வரும் (வந்த) வீரர். 
    
தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகச் செய்தித் தாள் கூறுகிறது. தொலைக் காட்சியிலும் காட்டினார்கள். கடைசி மேட்ச்சில் நன்றாக விளையாடவில்லை என்று ஒரு செய்தியும், கல்லூரியில் ஒரு தலைக் காதல் என்று ஒரு காரணமும் படித்த நினைவு. 

எதுவாக இருந்தால் என்ன? சிறு தோல்வியையும் தாங்க முடியாத மனப் பக்குவத்தில்தான் இன்றைய இளைய சமுதாயம் தயாராகி வருகிறதா? தோல்வி வெற்றியின் முதல்படி, 'எப்படி விழுந்தாய்' என்பதில் அல்ல, 'எவ்வளவு சீக்கிரம் எழுந்தாய்' என்பதில்தான் வெற்றியின் வாசனை இருக்கிறது என்றெல்லாம் படிப்பது மார்க் வாங்கவும் நண்பர்களுக்கு எஸ் எம் எஸ் ஃபார்வேர்ட் செய்யவும்தானா? 
   
வெற்றியை வெறியாய்த் தேடும் இவர்களின் மனப்பாங்குக்கு யார் காரணம்? பெற்றோரா, கல்வி கற்கும் இடமா, நண்பர்களா, போட்டிகள்  நிறைந்த இந்த உலகமா?
  
வாழ்க்கையை எப்படி வாழ்வது என்றே நம் சமுதாயம் இளைய சமுதாயத்துக்குக் கற்றுக் கொடுக்க மறந்து விட்டதா? வெளி நாட்டு வேலைகளையும், பணம் சம்பாதிப்பதையும் நோக்கியே கற்பிக்கத் தொடங்கி,  கல்வியே ஒரு இயந்திரமயமான வியாபாரமாகிப் போனதா? பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஒப்பீட்டிலும்,  தங்கள் கனவுகளை அறுவடை செய்யும் ரோபாட்டுகளாகவும் நினைப்பதை நிறுத்தி அவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் மனங்களில் என்ன ஓடுகிறது என்று பார்க்க வேண்டும். பழைய கூட்டுக் குடும்ப வாழ்வை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அதில்தான் எத்தனை வடிகால்கள்? 
    
இந்தக் காலத்தில் அதை இனி எதிர்பார்க்க முடியாது என்றாலும் தங்கள் குழந்தைகள் மேல் அதிக பட்ச அக்கறை எடுப்பது பெற்றோரின் கடமை ஆகிறது. இனி பள்ளிகளிலேயே ஒரு மனவியல் நிபுணரை வைத்து வாரத்துக்கு ஒரு வகுப்பாவது இது சம்பந்தமாக வகுப்பு எடுத்தால் என்ன? குறைந்த பட்சம் ஆறாம் வகுப்பிலிருந்தாவது இந்த உளவியல் கல்வி தொடங்கலாம். ஒவ்வொரு மாணவ, மாணவியரையும் தனித் தனியாகக் கவனிக்கும் திறன் படைத்த மருத்துவர்களோ அல்லது அத்தகுத் திறம் வாய்ந்தவர்களோ வகுப்பெடுக்கலாம். அதிலும் எதாவது பரீட்சை வைத்து விடக் கூடாது. உடனே யோசித்து எதாவது செய்ய வேண்டிய நேரம் இது....   
====================================   

எங்கள் விருப்பம்...

குடியரசுத் தலைவர் தேர்தல் செய்திகள் தொடர்ந்து செய்தித் தாள்களில் இடம்பிடிக்கின்றன. எல்லா செய்தித் தாள்களும், எல்லா சேனல்களும் நிறைய யோசனைகளை சொல்கின்றன. 

'எங்கள்' பங்குக்கு நாங்களும் ஒரு யோசனை சொல்வது என்று ஆவல் பிறந்து விட்டது!

மன்மோகன்சிங் தான் ஜனாதிபதி. 

பேசா மடந்தை, சாக்குப் போக்குச் சமர்த்தர் என்ற பழிச் சொல்களிலிருந்து தப்பித்துக் கொள்ள நல்ல வாய்ப்பு! வேலை என்னவேலை, இங்கயும் அங்கயும் ஒரே வேலைதானே...!

அப்போ பிரதமர்? ஒண்ணு பிரணாப் முகர்ஜி அல்லது நம்ம சிதம்பரம் அய்யா....! ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் முறைச்சிக்கிட்டு நிக்கிறவங்கதான்! பிரணாப் பிரதமரானால் சிதம்பரம் உள்துறை மந்திரி. முப்பத்திரண்டு ரூபாய்ப் புகழ் மாண்டேக் சிங் அலுவாலியா நிதி மந்திரி. 

 

சுற்றுலாத்துறை அல்லது வெளியுறவுத்துறை அமைச்சர்...  ? கைவசம் நல்ல கேண்டிடேட் இருக்காங்களே... பல கோடி ரூபாய் செலவில் உலகம் சுற்றிய, பிரதீபா பாட்டில் குடும்ப உறுப்பினர் யாராவதுதான்!
    
எப்பூடி...?    
====================================    

ஐஸ்... ஐஸ்... பால் ஐஸ்... கப் ஐஸ்...

வெய்யில் காலத்துக்கு 'அருணி'லிருந்தும், 'குவாலிட்டி'யில்ருந்தும் இன்ன பிற கடைகளிலிருந்தும் ஃபேமிலி பேக், பத்து ரூபாய்க் கப், கொர்னட்டோ என்றெல்லாம்  ஐஸ் க்ரீம் வாங்கிக் கொண்டு வந்து சாப்பிடுவது வழக்கமாகி விட்டது. என்னையும் கேட்பார்கள். டி ஜி எல் பயமுறுத்துவதால் எப்போதாவது நானும்! 
  
ஆனால் ஒன்று அந்த நாட்களில் பத்துப் பைசாவுக்கு 'பால் ஐஸ்' என்று ஒன்று தருவார்கள். உருண்டைக் குச்சியில் வெண்மையாக நான்கைந்து கோடுகள் கொண்ட அல்லது இல்லாத குச்சி ஐஸ். அந்த டேஸ்ட் அந்தக் காலங்களில் இதனுடன் கிடைக்கும் கிடைக்கும் முப்பத்தைந்து பைசா, எழுபத்தைந்து பைசா என்றெல்லாம் ஏற்றமிகு விலைகளில் கிடைக்கும், மெல்லிய பேப்பர் சுற்றிய ஆரஞ்சு , திராட்சை ஐஸ்களை விட சுவை நிறைந்தது. இப்போ நினைத்தாலும் 'ஸ்....ஸ்.....ஸ்....' எச்சிலூறுகிறது. 
     
அது இப்போ கிடைக்க மாடேங்குதுங்க.... எனக்குதான் எங்காவது கிடைத்து தெரியவில்லையா.... அல்லது நிஜமாகவே கிடைக்கவில்லையா? தெரியவில்லை. ஐஸ்க்ரீம் கடைகளில் கேட்டால் கூட பொறுமையாக பதில் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். தற்போது கிடைக்கும் வெனிலா ஐஸ் எடுத்துக் கொடுத்து 'அதான் இது' என்கிறார்கள்....
               
என்ன கொடுமை சார் இது....!
=======================================   
    
இன்று படித்த வேதனையான செய்தி இது... கன்னியாகுமரி மாவட்டத்தில் ஷோபா என்ற பெண்ணைப் பற்றியது. பதிமூன்று வருடங்களாகக் 'கோமா'வில் இருக்கிறாராம்.
          
ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தவர் அப்படியே நினைவின்றிக் கோமாவில் ஆழ, மாற்றி மாற்றி என்ன வைத்தியம் செய்தும் இன்னும் எழாமல்....
                
அந்தப் பெண் குழந்தைக்கு இப்போது பதின்மூன்று வயது. அம்மாவை வந்து எழுப்பி, எழுப்பிக் கதறுகிறாளாம். கணவனும் கைவிட்டு விட்ட நிலையில், பெண்ணின் தந்தையும் காலமாகி விட, ஷோபாவின் தங்கைக்கும் திருமனாகிச் சென்று விட, வயதான தாயார்தான் இப்போது ஷோபாவைப் பராமரித்து வருகிறாராம். பதிமூன்று வருடங்கள் கோமா.... அப்பா...  நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
                   
அந்தத் தாயின் நம்பிக்கையும், பெண்ணின் பாசமும் சீக்கிரம் பலிக்கட்டும், ஜெயிக்கட்டும்.     
===========================   
                
ஒரு நல்ல செய்தி... இந்த தடவையும் கல்கி சிறுகதைப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. ஏகப்பட்ட உறுதி மொழிகள் கேட்கிறார்கள் என்று கோபித்துக் கொண்டு எழுதவில்லை!  :)))