World Blood Donors day June 14. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
World Blood Donors day June 14. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14.6.12

அலேக் அனுபவங்கள் 05::உதிரம் கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே!

                    
இன்று உலக இரத்த தானம் செய்வோர் தினம். (ஜூன் பதினான்கு) 
                     
'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்று எங்கோ படித்த ஞாபகம் உள்ளது. அதைவிட, 'உதிரம தானம் செய்தோர், உயிர் கொடுத்தோரே' என்று சொல்லிவிடலாம். 
                     
எனக்கு வெகுநாட்கள் வரை இரத்ததானம் செய்வதற்கு பயம் இருந்து வந்தது. என்னுடைய இரத்த வகை என்ன என்று கூட அறியாமல் இருந்து வந்தேன். அசோக் லேலண்டில் குறைந்த பட்சம், வருடம் ஒருமுறையாவது இரத்த தான முகாம் நடைபெறும். அசோக் லேலண்டு தொழிலாளர்கள் ஆயிரக் கணக்கில் இரத்த தானம் செய்வார்கள். சில சமயங்களில், தொடர்ந்து ஒரு வாரம் எங்கள் டிரெய்னிங் சென்டரில், இரத்த தான முகாம் நடைபெறும். 
இரத்ததானத்தின் சிறப்பு பற்றி எடுத்துக் கூறி, என்னை இரத்த தானம் செய்ய அனுப்பி வைத்தவர், என்னுடைய மறக்க முடியாத இனிய நண்பர், இளவேனில். அவர் அதுவரையிலும், நாற்பதுக்கு மேற்பட்ட முறைகள் இரத்ததானம் செய்தவர். (அவரைப் பற்றிய பல விவரங்கள் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் விவரமாகப் பதிவிடுகின்றேன்.) 
                
முதல் முறையாக டிரெய்னிங் சென்டரில், நண்பர் இளவேனிலுடன் சென்று இரத்ததானம் செய்து வந்தேன். அதற்கு ஒரு வாரம் கழித்து, எனக்கு, 'இரத்த தானம் செய்வோர் அடையாள அட்டை' (Voluntary Blood Donors Association Card) வந்து சேர்ந்தது. அதில், என்னுடைய இரத்த வகை A2(-) என்று குறிப்பிட்டிருந்தார்கள். அசோக் லேலண்டின் சிறப்பு இரத்ததானப் பிரதிநிதி ஒருவர் (பெயர் மறந்து போய் விட்டது) இயந்திரப் பழுது பார்க்கும் பகுதியை சேர்ந்தவர் (என்று நினைக்கின்றேன்) என்னை இன்டர்காமில் அழைத்து, "சார் உங்க பிளட் க்ரூப் ரேர் வகை. இனிமேல் பிளட் டொனேஷன் காமப்களில் இரத்தம் கொடுக்காதீர்கள். அவசியம் ஏற்படும்பொழுது மட்டும் இரத்ததானம் செய்யுங்கள்" என்றார். 
அதற்குப் பிறகு, பொன்னேரி பஸ் ஸ்டாண்ட் அருகே ஸ்வீட் கடை வைத்திருக்கும் ஒருவரின் நான்கு வயது சிறிய பையனுக்காகவும், அண்ணா நகரில் இருக்கும் ஆஷ்லி என்ற ஒரு குழந்தைக்காகவும், ஆஸ்பத்திரிக்குச் சென்று இரத்ததானம் செய்து வந்தேன். 
          
வாசகர்களில், இரத்ததானம் செய்தோருக்கு, செய்வோருக்கு, பல்லாயிரக் கணக்கான இதய நன்றிகள். இரத்ததானம் பற்றி ஐயங்கள் எதுவும் இருந்தால், பின்னூட்டமாகப் பதியுங்கள்; எங்களுக்குத் தெரிந்த மருத்துவர்கள் யாரையாவது அணுகி, விளக்கம் பெற்று, வெளியிடுகின்றோம். 
     
உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம்.