திங்கள், 27 டிசம்பர், 2010

புத்தகத் திரு விழா...வாசகர்களுக்கு ஒரு கேள்வி...




முப்பத்தி நான்காவது புத்தகத் திருவிழா ஜனவரி நாலாம் தேதி முதல் தொடங்குகிறது.

போனவருடம் பொங்கலுக்கு முன்னாலேயே முடித்து விட்டார்கள் என்று ஞாபகம். இந்த முறை ஜனவரி பதினேழு வரை இருக்கிறது என்று அறிவித்திருக்கிறார்கள். சந்தோஷம். பொங்கல் விடுமுறையில் கொஞ்சம் மேயலாம்.

"போன வருஷம் வாங்கிய புத்தகங்கள் எல்லாம் படிச்சாச்சா"

இல்லைதான். பல புத்தகங்கள் ஏற்கெனவே தொடராக் வந்த போது படித்தவை. நம் கையிருப்பில் இருக்கட்டுமே என்று வாங்கி வைத்தவை.


"ஏற்கெனவே படித்ததை ஏன் வாங்க வேண்டும்?"

ஏற்கெனவே படித்து நல்லாயிருக்கு என்று தெரிந்ததாலும் அவ்வப்போது மீண்டும் படித்து இன்புறவும்...! புத்தகம்தானே? கெட்டா போகப் போகிறது?


படிக்காத புத்தகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக படிக்க வேண்டும். அதற்காக இந்த வருடம் புத்தகங்கள் வாங்காமல் இருக்க முடியுமா? இது ஒரு போதை...


சென்ற வருடம் பதிப்பகங்கள் தந்த லிஸ்ட்டை செக் செய்து பார்க்கலாம் அவர்கள் ஏதாவது ஒரு மொத்த லிஸ்ட் தருகிறார்களா தெரியவில்லை.

இந்த வருடம் என்னென்ன புத்தகங்கள் வாங்குவது என்று ஒரு லிஸ்ட் போட வேண்டும்.

இதில்தான் வாசகர்களையும் கலந்து கேட்கலாம் என்பது எங்கள் எண்ணம்.

நண்பர்களே,

நீங்கள் ஒரு லிஸ்ட் இந்த வருடம் வாங்க தயாராக இருப்பீர்கள். உங்கள் லிஸ்ட் என்ன? இங்கு பகிர்ந்து கொண்டால் எல்லோருக்குமே ஒரு பகிர்தல் கிடைத்து நம் எல்லோருக்குமே சில புத்தகங்கள் நம் லிஸ்ட்டில் சேர்க்க முடியும். நிறைய பேர் நாஞ்சில் நாடன் புத்தகம் வாங்குவார்கள் என்று நம்பலாம். அதுபோல நேற்று ஞாயிற்றுக் கிழமை வெளியிடப் பட்ட கீழைக் காற்றின் எட்டு நூல்களில் ஏதாவது இடம்பெற்றிக்கலாம். மற்ற சக பதிவர்கள் ஏதாவது புத்தகம் எழுதி இருக்கிறார்களா என்று நண்பர்கள்தான் சொல்ல வேண்டும்.


எங்கள் லிஸ்ட்டில் வண்ண நிலவன் சிறுகதைகள், அசோகமித்திரன் சிறுகதைகள் சேர்க்க சொல்லியிருக்கிறார் ஆசிரியர். நாஞ்சில் நாடன் புத்தகம், சென்ற முறை சாரு புத்தகம் இரண்டு வாங்கியதால் இந்த முறை அவரின் ஸீரோ டிகிரி...

கண்ணதாசன் கவிதைகள் வாங்க வேண்டும்...திரைப் பாடல்கள் அனைத்தும் சேர்ந்து இருக்கிறதா என்று பார்த்து. வைரமுத்து கவிதைகள் சினிமாப் பாடல்கள் சேர்ந்ததா என்று தெரியவில்லை. ஆனால் அறுநூறு ரூபாயாம்...ஐயோ...

உடன் வரும் நண்பர்களில் இரண்டு வகை உண்டு... ஒருவகை நண்பர்கள் "அதே புத்தகங்கள்....புத்தகம் புத்தகம் புத்தகமாய்..." என்று சொல்லியபடி முதுகில் கை வைத்து நெம்பி வெளியில் கொண்டு வந்து விடுவார்கள்...ஓரிரு புத்தகமும், ரவா தோசையும் பஜ்ஜியும்தான் செலவு!

இரண்டாவது வகை நம்மை விட அதிக ஆர்வம் பிடித்தவர்கள். வாங்கிய புத்தகங்களை தூக்க ஆள் அழைத்து வருபவர்கள்...


கம் ஆன்... உங்கள் தெரிவுகளை அள்ளி விடுங்கள்...


படங்கள் : நன்றி கூகிள், மூவிகேலரி.இன், கனெக்ட்.இன்.,

28 கருத்துகள்:

  1. இந்த வருடம் என் பொண்ணுக்காக சில புத்தகங்கள் தேட வேண்டும்

    பதிலளிநீக்கு
  2. ஆனால் அறுநூறு ரூபாயாம்...ஐயோ...///

    விலை தான் பல நேரங்களில் தயக்கத்தையும், பயமுறுத்தலையும் தருகிறது.

    பதிலளிநீக்கு
  3. பொதுவாச் சொல்லாம ஒரு லிஸ்ட் கொடுத்தா படிக்கிறவங்க தெரிஞ்சிப்பாங்களே எல்கே... மற்றவர்களுக்கும் ஒரு ஐடியா கிடைக்குமே..

    தமிழ்...உங்களை விருப்ப லிஸ்ட் சொல்லவில்லையே...

    பதிலளிநீக்கு
  4. குழந்தைகள் புத்தகம் தேட வேண்டும். குறிப்பிட்டு எதுவும் இல்லை. குழந்தைகளுக்கான நல்ல புத்தகங்கள் . வாசகர்கள் பரிந்துரைத்தால் நல்லது

    பதிலளிநீக்கு
  5. என்னுடைய பட்டியலில் இந்த வருடம் அசோகமித்திரன், நாஞ்சிலின் அனைத்து நாவல்களும் உள்ளன, இது தவிர,

    சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ள கு.அழகிரிசாமி சிறுகதைகள் தொகுப்பு
    ஆதவனின் காகித மலர்கள்
    ஆ. மாதவனின் புனலும் மணலும்
    தஞ்சை பிரகாஷ் சிறுகதைகள் (காவ்யா என்று நினைக்கிறேன்)

    பதிலளிநீக்கு
  6. த‌யவுசெய்து நாஞ்சில் நாடனது நாவலை வாங்குங்கள். சிறுகதைகளை வாங்காதீர்கள். அவருக்கு சிறுகதை வராது என்பதுதான் அவருக்கே தெரிந்த ஒன்றுதானே. ஏனோ தெரியல விருத மாத்தி தருவது சாகித்ய அகாதமிக்கு எப்பவுமே பொருந்தும் போல• நாடனாவது அத சொல்லிருக்கலாம் ஆனா காலதாமதம் பத்திதான் சொன்னாரு
    -mani

    பதிலளிநீக்கு
  7. ஆகா! பார்ப்பதற்கே நன்றாக இருக்கிறதே, போக முடிந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

    போகன் தன் பதிவில் எழுதியிருந்த நூல்களை வாங்கத் தோன்றுகிறது.

    க்ருஷ்ணகுமார் நாவல்கள் கிடைக்குதா பாருங்க.

    சுப்ரமண்ய ராஜூ சிறுகதைத் தொகுப்பு அட்டகாசமான புத்தகம் (இருபது முப்பது கதைகளில் பத்து தேறும் என்றாலும் பத்தும் முத்து). கிழக்குப் பதிப்பகம் என்று நினைக்கிறேன்.

    அண்ணாதுரையின் கம்பரசம் படிக்க ரொம்ப நாளா ஆசை.

    சாண்டில்யனின் கடல்புறா - தொலைந்து போன புத்தகம்.

    பாக்கியம் ராமசாமி புத்தகங்கள்

    புஷ்பா தங்கதுரை எழுதிய ஊதாப்பூ.

    பதிலளிநீக்கு
  8. புத்தகங்கள் நிச்சயாமாய் பொக்கிஷங்கள். என் அப்பா எனக்கு கொடுத்து சென்ற சொத்து அதுதான். கிட்டத் தட்ட 500 புத்தகங்கள் சேர்த்து வைத்து இருந்தார். உடல் நலிவுற்ற போதும் வாங்கிக் குவித்தார். உங்களால் தான் படிக்க முடியவில்லையே ஏனப்பா இன்னும் என்றேன். உனக்காகத்தான் என்றார்.. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. போன வருட வாங்கின புத்தகங்கள் படித்தாச்சு. காமராஜர் பற்றி ஒரு புத்தகம்,லாசர,திஜா வின் சிறுகதைகள் .வேறு அட்டை போட்டிருந்ததால் இருக்கும் புத்தகத்தையே வாங்கி விட்டேன்.
    இந்தத் தடவை நம் பதிவர்கள் வெளியிட்டிருக்கும் புத்தகங்களை வாங்க வேண்டும். போன வருடம் தோழியுடன் போனதால் புத்தகங்கள் பற்றிப் பேசியவாறு சென்றது ரசித்தது. அவர் பிரபலமானவரும் கூட. இந்தத் தடவை ,....ம்ம்
    யோசிக்கணும் :))

    எழுத்தாளர்கள்,
    பாக்கியம் ராமசாமி,
    ஜெ.எஸ்.ராகவன்,
    கடுகு ,ஸ்ரீவேணுகோபாலனைன் திருவரங்கர் உலா,
    எஸ்ரா வின் உப பாண்டவம்.இதெல்லாம் வாங்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. வண்ணநிலவன், அசோகமித்ரன் சிறுகதைகள் நல்ல தெரிவு. சமீபத்தில் வாசித்ததில் யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் என்னை வெகுவாகக் கவர்ந்தது. கிழக்கு வெளியீடான இந்த நூலையும் உங்கள் பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.

    இந்த ஆண்டு புத்தகக் காட்சி பற்றி வந்த முதல் பதிவு. வாழ்த்துகளும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  11. எஸ்ரா நூறு நாவல்களை அவருடைய தளத்தில் சொல்லியுள்ளார். ஜெமோ நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம் நூலில் நிறைய புத்தகங்களை சொல்லியுள்ளார். ஜெமோவின் கண்ணீரைப் பின்தொடர்தல் நூலில் உள்ள 22 நாவல்களும் முக்கியமானவை.

    இது போக பயணக் கட்டுரைகள், சிறுகதைகள், ஹாஸ்யக் கதைகள் \ கட்டுரைகள், கடிதத் தொகுப்பு உண்டு.

    வரிசையாகப் பின்னூட்டங்கள் போடுகிறேன்

    பதிலளிநீக்கு
  12. எல்லாரும் சிறந்த புத்தகங்களைத்தான் சொல்லி இருக்கீங்க.. :))

    பதிலளிநீக்கு
  13. வாங்குவது என்றால் என் தெரிவுகளும் யோசனைகளும்...

    பி.எஸ். ராமையாவின் மணிக்கொடிக்காலம்.
    மணிக்கொடி கே சீனிவாசனின் எழுத்துக்கள்.
    ஆர் கே நாராயணின் மை டேஸ்.
    ஆர் கே நாராயணனின் மை டீச்சர்.
    ந. பிச்சமூர்த்தி சிறுகதைகள்.
    கு அழகிரிசாமி சிறுகதைகள்.
    திரு வி கவின் பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை.
    லா ஸா ரா வின் சிந்தா நதி, புத்திர,
    வ.வு.சியின் சுயசரிதை,
    மறைமலை அடிகளின் மனம்போல வாழ்வு.
    புதுமைபித்தன் சிறுகதைகள் (ஜெயமோகன் தொகுப்பு)
    பாரதியார் கட்டுரைகள்

    திருப்பூர் கிருஷ்ணனின் சுவடுகள், இலக்கிய முன்னோடிகள்..

    பதிலளிநீக்கு
  14. புத்தகத்திருவிழா முன்னோட்டம் சிறப்பாக இருக்கிறது...
    இந்த சமயத்தில் ஊரில் இல்லையே எனும் ஏக்கம் நிரம்ப உள்ளது...

    அத்தனை புத்தகங்களை கண் கொண்டு பார்த்திருக்கலாம்...

    அசோகமித்திரன், ரா.கி.ர, பாலகுமாரன் புத்தகங்கள், எஸ்.ரா வின் புதிய படைப்புக்கள்.. வாத்தியார் புத்தகங்கள் பார்ப்பதனைத்தும் எடுத்து அப்புறம் படித்ததை கழிப்பது.. என கொஞ்சம் குதூகலமாக இருக்கவேண்டிய தருணங்களை இழந்து நிற்கிறேன்..

    புத்தக கண்காட்சி விஜயம் முடிந்து வந்தவுடன் அனுபவங்களை பதியுங்கள்

    பதிலளிநீக்கு
  15. குரோம்பேட்டைக் குறும்பன்29 டிசம்பர், 2010 அன்று 7:11 AM

    ஆமாம், ஆமாம்! புத்தகம் வாங்குபவர்கள், வாங்கியவர்கள் எல்லோரும் என்ன புத்தகங்கள் என்பதை பட்டியல் கொடுங்கள் அய்யா. நான் என்ன புத்தகங்களை யாரிடம் ஓசி காஜி அடிப்பது என்று ஒரு பட்டியல் தயார் செய்யவேண்டும்!

    பதிலளிநீக்கு
  16. எஸ்ரா பரிந்துரைக்கும் நூறு நாவல்கள்

    http://www.sramakrishnan.com/?p=447

    கண்ணீரைப் பின்தொடர்தல் நூலில் குறிப்பிடப்படும் மொழிபெயர்ப்பு நாவல்கள்

    http://baski-reviews.blogspot.com/2010/03/blog-post_8409.html

    மேற்சொன்ன பதிவின் பின்னூட்டத்தில் பாருங்கள்

    அந்நிய மொழிபெயர்ப்பு நாவல்கள்: புதுமைப்பித்தன் மொழி பெயர்த்த உலக இலக்கியம். க நா சு மொழிபெயர்த்த உலக இலக்கியம்

    பதிலளிநீக்கு
  17. சிறுகதைகள்: கதாவிலாசம் (எஸ்ரா) புத்தகத்தில் குறிப்பிடப்படும் அனைத்து எழுத்தாளர்களும்.

    சமீபத்தில் நான் படித்ததில் பிடித்த சில புத்தகங்கள்: பாஸ்கர் சக்தி சிறுகதைகள், ச தமிழ்ச்செல்வன் சிறுகதைகள், சாகாவரம் நாவல் (இறையன்பு), தமிழ்க் கடவுள் (வாலி)

    பதிலளிநீக்கு
  18. குரோம்பேட்டை குறும்பன்... ஒரே ஊர்க்காரர்.. ஏதோ நீங்க ஓசிகாஜி அடிச்சதை அப்படியே இந்தப் பக்கம் கொஞ்சம் கவனிங்க..

    பதிலளிநீக்கு
  19. நூறு நாவல்கள் சுட்டி கொடுத்ததற்கு நன்றி Gopi Ramamoorthy.

    பதிலளிநீக்கு
  20. போன வருசம்.. புத்தகக் கண்காட்சிக்கு வரவாய்ப்பு கிடைத்தது.. இந்த வருசம் முடியாது.. என்னதான் நெட்ல pdfஆ புத்தகங்களை தரவிறக்கி படிச்சாலும்.. இப்படிக் கண்காட்சிகள்ல போய் வாங்கி படிக்கறமாதிரி வராது..

    பதிலளிநீக்கு
  21. வாங்க சங்கர்,
    ரொம்ப நாளாச்சு...கடைசியா உங்கள் கேரளா பயணக் கட்டுரை படித்தது என்று ஞாபகம்...எங்கே ஆளைக் காணோம்? அடிக்கடி வாங்க...

    நன்றி மணி, நாஞ்சில் நாடன் எழுத்து இனிமேல்தான் படிக்கணும்...

    வாங்க அப்பாதுரை,
    சுப்ரமணிய ராஜு புத்தகம் கிடைத்தால் ஒன்று வாங்கி வைக்கிறோம்..மற்ற புத்தகங்களும்தான். போகன் பதிவு சென்று பார்க்க வேண்டும். சாண்டில்யனின் யவன ராணி வைத்திருக்கிறீர்களோ?

    வருக சிவகுமாரன்,
    இங்கும் நிறைய புத்தக கலெக்ஷன் உண்டு. அது சரி...புத்தகக் கண்காட்சி சென்றால் என்ன வாங்க விரும்புவீர்கள் என்று சொல்லவில்லையே...

    வாங்க வல்லிசிம்ஹன்,
    நீங்க சொல்லியிருக்கற லிஸ்ட்டோட துளசி கோபால் எழுதிய ஃபிஜித் தீவுகள்....சரியா..? நீங்கள் உங்கள் தளத்தில் சொல்வது போல வாங்குகிறோமோ இல்லையோ...அங்கு போய் எல்லாவற்றையும் கண் குளிரப் பார்த்து வர வேண்டும்!

    வாங்க சரவணக்குமார்,
    நீண்ட இடைவெளிக்குப் பின் வந்திருக்கிறீர்கள். உங்கள் விருப்ப லிஸ்ட் என்ன என்று சொல்லாதது குறைதான்..

    வாங்க Gopi Ramamoorthy,
    சொன்ன மாதிரியே இரண்டு பின்னூட்டங்கள் இதுவரை...நூறு நாவல்கள் சிபாரிசு நல்ல சுட்டி. வாசகர்கள் அங்கு சென்று பயனடைவார்கள்.

    வாங்க தேனம்மை,
    பாராட்டுக்கு நன்றி. ஆனால் உங்கள் லிஸ்ட் சொல்லவில்லையே...

    வாங்க பாஹே,
    பெரிய லிஸ்ட் தந்துள்ளீர்கள். வாங்கவா பார்க்கவா...!

    வருக பத்மநாபன்,
    புத்தகக் கண்காட்சியின் சுவாரஸ்யத்தை சொல்லியிருக்கிறீர்கள். அதை இழப்பது கஷ்டம்தான்.

    வருக குரோம்பேட்டைக் குறும்பன்,
    ஓசி காஜி என்றாலும் விருப்ப லிஸ்ட் என்ன என்று சொல்லியிருக்கலாமோ..

    வருக அப்துல்,
    புத்தகக் கண்காட்சி வர முடியாவிட்டாலும் வாங்க விரும்பும் புத்தக லிஸ்ட் தந்திருக்கலாமே...

    எல்லோரிடமும் எதிர்பார்த்தது அதுதான். எங்களுக்கும் உங்களுக்கும் ஒரு பகிர்தலும் திட்டமிடுதலும் கிடைக்குமே...

    பதிலளிநீக்கு
  22. யவன ராணி மறந்தே விட்டது... முழுக்க படிச்சதில்லை.

    பதிலளிநீக்கு
  23. துளசி கோபால் புக் போட்டிருக்காங்களா?! அவங்க பயணக் கட்டுரைகள் ரொம்ப நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  24. பதிவர்கள் எழுதிய புத்தகங்களின் விவரம் தமிழ்மணம் வலைத்தளத்தில் உள்ளது.

    அப்பாதுரை சார், ஆம் துளசி கோபால் மேடம் ஒரு புத்தகம் போட்டிருக்கிறார்கள்.

    ஹாஸ்யத்திற்கு தேவன் எழுதிய அனைத்தும் வாங்கிப் படிக்கலாம். குறிப்பாகத் துப்பறியும் சாம்பு, மிஸ் ஜானகி, மைதிலி, நடந்தது நடந்தபடியே, ராஜத்தின் மனோரதம்

    ஆன்மீகம்: தெய்வத்தின் குரல், குறையொன்றுமில்லை (முக்கூர்), ராமகிருஷ்ண மடத்தின் புத்தகங்கள்.

    வாலி புதுக்கவிதை வடிவில் எழுதிய அவதார புருஷன், பாண்டவர் பூமி, ராமானுஜ காவியம், இவர்கள் இன்னும் இருக்கிறார்கள், தமிழ்க் கடவுள்.

    கடிதங்கள்: கு அழகிரிசாமி கிராவுக்கு எழுதியது. கிராவும் சுராவும் ஒருவருக்கொருவர் எழுதிக் கொண்டது.

    கட்டுரைகள்: ஜெயகாந்தன், அசோகமித்திரன், நாஞ்சில் நாடன், ச தமிழ்ச்செல்வன்

    பயண நூல்கள்: நடந்தாய் வாழி காவேரி

    புதுமைப்பித்தன் எழுத்துகள் பற்றி மற்றவர் எழுதியவை: பொதியவெற்பன், ராஜ் கவுதமன், ராஜமார்த்தாண்டன், ஜெமோ, வேதசகாயகுமார்.

    ஹாப்பி ரீடிங்!!

    பதிலளிநீக்கு
  25. நன்றி! இந்த திருவிழாவுக்கு நிச்சயம் செல்ல வேண்டும். எல்லோருடைய பரிந்துரையும் அருமையாக இருக்கிறது, படிக்க ஆவலாகவும் இருக்கிறது. நான் வாங்க நினைத்திருப்பது ராஜாஜியின் - வியாசர் விருந்து, ஜெயகாந்தனின் சில புத்தகங்கள், அகிலனின் - சித்திர பாவை, லக்ஷ்மியின் - கூண்டுக்கு வெளியே - அரக்கு மாளிகை. இன்னும் நிறைய இருக்கிறது. மேலும் நேரில் பார்க்கும்போது வேறு சிலதும் வாங்க தோன்றும். அதனால் பட்ஜெட் பார்த்து வாங்க வேண்டும்.

    குரோம்பேட்டை குறும்பன் நீங்க தயார் செய்ற லிஸ்டுக்காக வெயிட் பண்றவங்க லிஸ்டுல என்னையும் கொஞ்சம் சேத்துக்கங்க. ஹிஹிஹி.....

    பதிலளிநீக்கு
  26. போகனின் பதிவிலிருந்து சுட்டது:

    1. மோகினி-கோட்டயம் புஷ்பநாத்-திருமகள் நிலையம்-ரூ120

    2. தலைத் தாமிர பரணி -முத்தலங்குரிச்சி காமராசு-காவ்யா-ரூ 600

    இரண்டாவது புத்தகம் கொஞ்சம் மிரட்டுகிறது. விலை மட்டுமில்லை, விவரமும்.

    பதிலளிநீக்கு
  27. அப்பாதுரை,மஞ்சளழகி மறக்கவில்லையா:)

    பதிலளிநீக்கு
  28. I am also a big fan of S.Ramakrishnan like Gopi Ramamoorthy.
    My all time favourite is தேசாந்திரி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!