செவ்வாய், 12 ஜனவரி, 2010

புத்தகத் திருவிழா..


கடந்த சனிக்கிழமை புத்தகத் திருவிழா சென்று வந்தேன். ஊரே அங்கு மொய்க்கும்போது நான் மட்டும் போகாமலிருந்தால் ஊரை விட்டு ஒதுக்கிவைத்து விடுவார்களோ என்ற பயமும் காரணம்!





   போய் வந்தது சொந்த திருப்திக்கு. ஆனாலும் எல்லோரும் இதைப் பற்றி பதிவிடும்போது நாம் மட்டும் விடுவது சரியல்ல என்று தோன்றியதாலும், பதிவுக்கு ஒரு நல்ல மேட்டர் கிடைக்கும்போது நழுவ விடாதே பாலகுமாரா என்று ஒரு குரல் உள்ளுக்குள் ஒலித்ததாலும் பதிவிட முடிவெடுத்தேன்.
   ஏற்கெனவே படிக்காத புத்தகங்கள் இருக்கும் போது மேலும் மேலும் புத்தகங்கள் வாங்குவது தம்பட்டம் அடிக்கவே என்று கிருஷ் சார் சொல்லி உள்ளதால் நான் வாங்கிய புத்தகங்களை பட்டியலிடப் போவதில்லை.


மறுநாள் கடைசி நாள் என்ற நிலையில் இனியும் ஒத்திப் போட வழி இல்லாத நிலையில் சனிக்கிழமை கிளம்பி மதியம் பனிரண்டரை முதல் இரவு ஏழரை வரை செலவழித்து சுற்றினேன்.உடன் பெரிய ஆசிரியரும் வந்திருந்தார்.


உள்ளே கிடைத்த டீயும் காபியும் மூன்றாம் தரத்தில் இருந்தாலும் விலையில் முதலிடம். என்ன செய்வது புத்தகத்துக்கு முதலிடம் கொடுத்தாலும் வயிறு என்று ஒன்று இருக்கிறதே... பசிக்கிறது என்றால் வெளியே சென்றுதான் சாப்பிட வேண்டும்.
   வெளியே இருந்த கடை 'ஸ்ரீ கிருஷ்ணா' காரர்களுடையது. கால் பாகம் சுற்றிய பிறகு சாப்பிட வந்தால் மெனு பார்த்து வரிசையில் நின்று ஞாபகம் வைத்துக் கொண்டு நாம் விரும்பியதைக் கேட்டால், அங்கு இருந்த மாமா ஜெருகண்டி..ஜெருகண்டி பாணியில் நாம் கேட்பது எல்லாற்றையும் மறுத்து பதிலுக்கு வேறு ஒன்று சொல்லி எதை எடுத்தாலும் 35 ரூபாய் விலையில் பெயர் எழுதா சீட்டு கிழித்துக் கையில் கொடுத்து துரத்தி விட, அதை வாங்கும் இடத்தில் நாம் சொல்வது ஒன்று அவர்கள் போட்டுக் கொண்டிருப்பது ஒன்று என்று குழப்பம். அடை அவியல், ஆனியன் ஊத்தப்பம், தோசை என்று எதை எடுத்தாலும் முப்பத்தைந்து ரூபாய்.
   ஐந்திணைப் பதிப்பகத்தைப் பார்த்ததும் கிருஷ் சார் 'சு(வாசிக்கப்)போறேங்க' வலைப் பக்கத்தில் மகனுடன் நடந்த உரையாடல் பற்றி சொன்னது நினைவு வந்தது. ஐந்திணையையே விலைக்கு வாங்க வேண்டும் போல இருந்தது அங்கு இருந்த புத்தக வரிசை...என்ன செய்வது...எனக்கு சக்தி இல்லையே...சக்தி இல்லையே...!


உயிர்மைப் பதிப்பகத்தில் சாரு நிவேதிதா நின்று கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார். வெண்ணிற இரவுகள் கார்த்தி சொன்ன சாரு புத்தகங்கள் பெயர் மறந்து போனாலும் வேறு புத்தகம் வாங்கி கடமையாய் அவரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டேன். (எல்லோரிடமும் கேட்கும் உங்கள் பெயர் என கேட்ட உடன் சொன்னேன்..எழுதிக் கையெழுத்திட்டார். என்ன செய்றீங்க என்று சம்ப்ரதாயமாய்க் கேட்டதும் நான்...எங்கள் ப்ளாக் என்று தொடங்கினேன்...தலையாட்டிக் கொண்டேகேட்டு அனுப்பினார்!) 




மனுஷ்ய புத்திரனும் வந்திருந்தார். போன வருடம் வாங்கிய உயிர்மைப் பதிப்பக 'சுஜாதா கேள்வி பதில்கள்' புத்தகத்தில் கடைசி சில பக்கங்கள் இல்லாமலிருந்ததை கொண்டு வராமல் போய் விட்டோமே என்று வருந்தினேன்.
இட்லிவடையில் படித்த ரகோத்தமன் புத்தகம் கடமையாய் வாங்கிக் கொண்டேன். பா ரா புத்தகம் எங்காவது கண்ணில் படுகிறதா என்று பார்த்தேன். பதிப்பகம் பார்க்காமல் வந்து விட்டோமே என்று வருந்தினேன்...கிருஷ் சார் விமர்சனம் செய்திருந்த எம்டன் புத்தகம் (திவாகர் எழுதியது) பார்த்தேன். விலை 200 ரூபாய் என்று போட்டிருந்தது. புரட்டி விட்டு வந்தேன்.
  லயன் காமிக்ஸ் முத்து காமிக்ஸ் புத்தகங்கள் கிடைப்பதை போட்டிருந்தார்கள்..ஆர்வமாய் தேடிச் சென்றும் கண்ணில் படவில்லை. 5 ஆம் எண் ஸ்டால் என்று போட்டிருந்ததாய் ஞ்பாபகம். அங்கு ஆல்பா காரர்கள் பாட சம்பந்தப் பட்ட புத்தகங்கள் விற்றுக் கொண்டிருந்தார்கள்! ஏமாற்றம்!
   தணல் பதிப்பகம் அருகே ஒரு உற்சாகக் கூட்டம் கண்டதும் சந்தேகத்துடன் நின்று பார்த்தேன் ப்ளாகர்ஸ் போலத் தெரிகிறதே.... ஒன்றிரண்டு தெரிந்த முகம் போலத் தோன்றினாலும் நிச்சயமாய்த் தெரியாததால் சற்று நின்று விட்டு கேட்கலாம் என்று அருகே சென்றேன்...என் நண்பன் என்னை நிறுத்தினான். 'அவர்கள் முகத்தில் பார் என்ன ஒளி? உன்னைப் பார்த்தால் நம்புவார்களா? வந்து விடு..நானும் கூட இருக்கும்போது ரிஸ்க் எடுக்காதே' என்றான்... தயங்கி உண்மைதான் என்று தோன்றியதால் செல்லில் ஒரு போட்டோ எடுக்கலாம் என்று பார்த்தேன். உடன் ஒரு பெண்ணும் நின்றிருந்தார். எனக்குத் தெரிந்த பெண் பதிவர் பெயரெல்லாம் நினைத்துப்பார்த்தேன்.ம்..ஹூம்...ஒரு பெண் நின்ற காரணத்தினாலேயே போட்டோ எடுப்பதையும் எண் நண்பன் தடுத்து விட்டான். அங்கு நின்று உற்சாகமாய்ப் பேசிக் கொண்டிருந்தது பதிவர்கள்தான் என்று நம்புகிறேன்...
   மீனாக்ஷி பதிப்பகத்தார் மதுரை பெயரையும் வேறு சில விவரம் சொன்னதும் அடையாளம் தெரிந்துகொண்டு சகாயம் செய்தது சந்தோஷம்.
    பொதுவாகவே பதிப்பகத்தார் நன்றாக உரையாடினாலும் திராவிடர் கழக ஸ்டாலில் அவர்கள் நூல்களை அறிமுகப் படுத்தியது நன்றாக இருந்தது. ஹிக்கின் பாதம்ஸ் வினோத், அவர்களிடம் இல்லாத அல்லது தீர்ந்து விட்ட நூல்களைப் பற்றி கேட்டால் கூட தலைப்பை சரியாய் எடுத்துச் சொல்லி பதிப்பகம் சொல்லி வழி காட்டியது நல்ல அனுபவம். நக்கீரன் காரர்கள் ஏதாவது கேள்வி கேட்டால் முன்னால் விசாரணைக் கௌண்டருக்கு போகச் சொன்னதோடு, அந்தப் புத்தகம் உங்களுக்கு கிடைக்காதே, தடை செய்து விட்டார்களே, கேள்விப் பட்டதே இல்லை போன்ற பதில்கள் சொன்னார்கள். வானதியில் ஒரு வித முறைப்போடு பதில் சொன்னார்கள்...பில் போட்டுக் கொண்டிருந்த பெரியவர் தவிர..
இந்தப் படத்துக்கான கமெண்ட் .... !!


வயசான காலம்....புத்தக ஆசை...இவ்வளவுதான்...ஆனால் தூக்க முடியவில்லையே...!





ஒரு ஸ்டால்....திருமகள் புத்தக நிலையம் என்று ஞாபகம்...ஒரு பெண்ணும் புத்தகக் கடைக்காரரும்...பெண் கையில் "மணிபல்லவம் நா பா" என்றிருக்க, பெண் கடைக்காரரிடம், "ஏங்க ! இது யார் எழுதியது?" என்றார். அவர், "போட்டிருக்கு பாருங்கம்மா...நா பா...." என்றார். "நா பா ன்னா...?" பெண்.  அவர் ஒருமுறை அந்தப் பெண்ணை நிமிர்ந்து நிதானமாகப் பார்த்து விட்டு, "நா. பார்த்தசாரதி" என்றார். பெண் விடாப்பிடியாக, "புது எழுத்தாளரா..?"  கடைக் காரர் பேசாமல் நகர்ந்து சென்று விட்டார்.
        இன்னொரு ஸ்டால். வாசகர் கையில் புதுமைப்பித்தன் சிறுகதைகள். கடைக்காரரிடம் "ஏங்க...இதுல புதுமைப் பித்தன் பாடல்களும் சேர்ந்திருக்கா..." என்றார். "இல்லை சார்" என்றார் கடைக்காரர். அருகிலிருந்த ஒருவர், " சார் பாட்டு எழுதினது புதுமைப்பித்தன் இல்லை சார், புலமைப் பித்தன்..அவர் வேற.." என்று கூறி தன் புலமையைக் காட்டினார்.  இருவரும் கடைக்காரரை ஒரு மாதிரி பார்த்து விட்டு நகர்ந்து சென்றனர்.

21 கருத்துகள்:

  1. நல்லா எழுதியிருக்கீங்க, வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. நூறு-நூற்றைம்பது பக்கங்களில், எழுத்தாளருக்கு ராயல்டி கொடுக்க வேண்டிய அவசியமே இல்லாத மொழிபெயர்ப்புப் புத்தகங்களையே நூற்று இருபது ரூபாய் என்று பதிவர்களைக் கூவ வைத்து விற்கிற பதிப்பகங்களோடு ஒப்பிடுகையில், பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்ட SMS எம்டன் புத்தகத்தை வாங்கியிருக்கலாம்!

    புத்தகங்களை, நான் விலையை வைத்து மதிப்பிடச் சொல்லவில்லை ஸ்ரீராம்!

    பக்கங்கள், விலை எல்லாவற்றையும் விட, புத்தகங்களில் பேசப்பட்டிருப்பவை நமக்குள் நடக்கும் அனுபவமாகவே ஆகிவிடுவதைப் பார்ப்பது தான் மிகவும் முக்கியம்!

    இன்றைக்கும் கூட, தி.ஜா, மோகமுள் நாவலின் முதல் அத்தியாயத்தில், கும்பகோணத்தின் புழுதிபடிந்த வீதிகளில், இன்னமும் புழுதியைக் கிளப்பிக் கொண்டு போகிற பேருந்தை வைத்து ஆரம்பித்து, கதாநாயகன் பாபுவை அறிமுகம் செய்கிற அறிமுகப் படலம் இருக்கிறதே!

    எண்பதுகளில் புதுக் கவிதைமோகம் பற்றிக் கொண்டு எரிந்தபோது, பக்கங்களின் எண்ணிக்கையையோ, விலையையோ, பொருட்படுத்தவில்லை!

    பதிலளிநீக்கு
  3. ஏங்க குப்பை படத்தப் பத்தி 1000 பதிவு வரும் போது, புத்தகங்களைப் பத்தி எழுதுறது என்ன தப்பு சொல்லுங்க.

    நீங்கள் பட்டியலிடாததில் எனக்கு உடன்பாடு இல்லைங்க (ஆனா, உங்கள் ப்ளாக், உங்களின் இஷ்டம் தான் :) ). கிருஷ் சார் பதிவுலயே நான் பின்னூட்டமிட்டிருக்கேன்.

    மேலும், படிக்காத புத்தகங்கள் இருக்கும் போது புதிய புத்தகங்கள் வாங்கக் கூடாது என்பதின் லாஜிக் எனக்கு சுத்தமாக புரியவில்லை.

    பதிலளிநீக்கு
  4. கிருஷ் என்ன சொல்ல வருகிறார்? மோகமுள் அத்தியாயங்களை அவ்வப் போது அப்டேட் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை என்றே நம்புகிறேன்.

    நான் ஒரு தி. ஜானகிராமன் அபிமானி. அவர் எழுத்துக்களில் காணப்படும் வீச்சும் ஆழமும் சுபாவமான உரைநடையும் வேறு பலருக்கும் கை கூட வில்லை என்பது என் அபிப்பிராயம். உதாரணமாக ஒரு சிறு வாக்கியம்: " அட பலாப்பழத்துக்கு ஈயை புடிச்சா உடணும்? "

    பதிலளிநீக்கு
  5. புத்தக லிஸ்ட் போடும் போது, யாரும் பாரு நான் எவ்வளவு பெரிய அறிவாளி, என்ன மாதிரியான புக்ஸ் படிக்குறேன்னு சொல்றத்துக்காக போடுறது இல்ல. அப்படியே நினைச்சு பதிவு போட்டாலும், படிக்குறவங்க, தனக்குத் தெரியாத எதாவது புக்ஸ், நல்ல புக்ஸ் இருந்தா, தானும் வாங்கி படிக்கலாமே என்ற எண்ணத்துல தான் , புக் லிஸ்ட் பதிவுகளை படிக்க வருகிறார்கள் என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  6. இப்ப எம்டன் புத்தகத்த எடுத்துக்கிட்டீங்கன்னா கிருஷ் சார் எழுதலைன்னா சத்தியமா எனக்கு அந்த மாதிரி ஒரு நல்ல புத்தகம் வந்திருக்குன்னு தெரிஞ்சு இருக்காது.

    பதிலளிநீக்கு
  7. நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை...

    பதிலளிநீக்கு
  8. கிருஷ் சார்,

    விலை அதிகம் என்றோ, அதனால் வாங்கவில்லை என்றோ சொல்லவில்லை. வாங்க வேண்டிய பிற புத்தகங்களின் பட்டியல் இருந்ததால் வாங்கவில்லை.
    நல்ல புத்தகங்களுக்கு நானும் விலை பார்ப்பதில்லை.
    புத்தகங்களில் கிடைக்கும் அனுபவம் எனக்குப் பாடல்களிலும் கிடைக்கும். மனதில் தங்கிய பாடல்களை பாடல்களைக் கேட்கும்போது அதை நாம் முதலில் கேட்ட காலத்துக்கும், இடத்துக்கும் மனம் சென்று விடுவது இயல்பு.
    தி. ஜானகிராமனுக்கு நாங்கள் எல்லோரும் ரசிகர்களே. மோகமுள், மரப்பசு போன்ற புத்தகங்கள் சிறு வயதில் எங்கள் வீட்டு கலெக்ஷனில் இருந்து எடுத்துப் படித்தது நினைவு இருக்கிறது

    பதிலளிநீக்கு
  9. பின்னோக்கி,
    முற்றிலும் உண்மை. புத்தகத்தைப் பற்றி நிறையப் பேசலாம்.கிருஷ் சார் பெயரை இழுத்திருந்தாலும் புத்தகங்களை பட்டியலிடுவதில் தம்பட்ட எண்ணம் இருக்கிறதோ என்றுதான் எனக்கும் தோன்றும். எனவே பட்டியலிடவில்லை.

    புத்தகங்கள் படிக்கப் பட்ட பின்தான் புதியவை வாங்க வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடில்லை என்பதை கிருஷ் சார் பக்கத்திலேயே சொல்லி உள்ளேன்.

    புத்தக அறிமுகமாக இருக்கும் என்று நீங்கள் சொல்வதை நானும் ஏற்கிறேன். வெண்ணிற இரவுகள் செய்த விமர்சனத்தை வைத்துதான் சாரு புத்தகங்கள் இரண்டு வாங்கினேன். இதற்கு முன் அவரை நான் வாசித்ததில்லை. ஆட்டோக்ராப் போடும்போது இதை அவரிடமும் சொன்னேன்.

    கிருஷ் சார் - திவாகர் புத்தகம் - அதே...அதே...எனக்கும்.

    பதிலளிநீக்கு
  10. நன்றி புலிகேசி...

    சொந்த ஊர் வந்தாச்சா...நண்பர்களைப் பார்த்தாச்சா...

    பதிலளிநீக்கு
  11. குரோம்பேட்டைக் குறும்பன்12 ஜனவரி, 2010 அன்று 2:12 PM

    படங்கள் நன்றாக உள்ளன - படத்தின் மீது கிளிக்கிப் பார்க்கையில் - முதல் படம் மிகவும் துல்லியமாக உள்ளது.
    என்ன காமிரா கொண்டு எடுத்தீர்கள் ஸ்ரீராம்?

    பதிலளிநீக்கு
  12. எத்தனையோ சட்டை பேன்ட் இருந்தாலும் புதிதாக வாங்குவதில்லையா? படிக்காத புத்தகம் கிடந்தாலும் புதுப் புத்தகம் வாங்குவதில் தவறில்லை. அடுத்தவர் என்ன சொல்வாரோ என்று அஞ்சி புத்தகம் வாங்காமல் இருந்துவிடாதீர்கள். பகட்டுக்காகவே புத்தகம் வாங்கினதாக இருக்கட்டும் - big deal, what the ..?

    ஓய்வு நாள் கனவுகளின் நாயகி/கன் புதுப்புத்தகம்.

    இத்தனை வருடங்களாகத் தொடர்ந்து நடக்கிறதே - ஆச்சரியம் தான்! புத்தகக் கண்காட்சி. (திருவிழா? ம்ம்ம்.... there may be something in it).

    பதிலளிநீக்கு
  13. புத்தகக் கண்காட்சிக்குப் போகாததில் நிஜமாவே இப்ப வருத்தப் படறேன். நல்ல இடுகை, நல்ல படங்கள். ஏற்கனவே சாரு என்றால் பிளாக்கர்களுக்கு பிள்ளையார் கோயில் ஆண்டி, இதைப் படித்தால் இன்னும் ஜாஸ்தியாகிவிடும். இந்த கையெழுத்துப் போடுகிற வேலையை சுஜாதா ரெண்டாயிரத்தி ஆறிலோ, ஏழிலோ செய்தார் என்று ஞாபகம்.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  14. "நா பா ன்னா...?" பெண். அவர் ஒருமுறை அந்தப் பெண்ணை நிமிர்ந்து நிதானமாகப் பார்த்து விட்டு, "நா. பார்த்தசாரதி" என்றார். பெண் விடாப்பிடியாக, "புது எழுத்தாளரா..?" கடைக் காரர் பேசாமல் நகர்ந்து சென்று விட்டார்.
    ////

    ///


    ஹா ஹா

    பதிலளிநீக்கு
  15. "நா பா ன்னா...?" பெண். அவர் ஒருமுறை அந்தப் பெண்ணை நிமிர்ந்து நிதானமாகப் பார்த்து விட்டு, "நா. பார்த்தசாரதி" என்றார். பெண் விடாப்பிடியாக, "புது எழுத்தாளரா..?" கடைக் காரர் பேசாமல் நகர்ந்து சென்று விட்டார்.


    ஹ ஹா

    நல்ல காமெடி போங்க

    பதிலளிநீக்கு
  16. கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள் ராம்.. அருமை ...பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  17. /கிருஷ் என்ன சொல்ல வருகிறார்? /

    /மேலும், படிக்காத புத்தகங்கள் இருக்கும் போது புதிய புத்தகங்கள் வாங்கக் கூடாது என்பதின் லாஜிக் எனக்கு சுத்தமாக புரியவில்லை./

    புத்தகங்களைக் கொஞ்சமாவது படித்து விட்டுப் பதிவு எழுதுங்கள்,அதுதான் நன்றாக இருக்கும் என்று தான் அங்கேயும் சரி, இங்கேயும் சரி நான் சொல்ல விரும்புவது.

    வாசிப்பது ஒருஅருமையான அனுபவம் என்றால், அதைத் தாண்டிப் போவதும் இன்னொரு அற்புதமான அனுபவம்! புத்தகங்கள் வாசிப்பையும் தாண்டிப் போக வேண்டியதன் அவசியத்தைச் சொல்பவை!

    வாழ்க்கையின் சின்னச்சின்னத் தருணங்களையும் ரசிக்க ஆரம்பிக்கும் நிலை அது!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!