[ 4 ]
முன்கதைசுட்டிகள்... [ 1 ], [ 2 ], [ 3 ]
காதலைப் பற்றிப் பேச்சு வந்ததால் அப்பாவை நிமிர்ந்து பார்த்தேன். 'தொடர்ந்து சொல்லு' என்பது போலப் பார்த்தார். மறுபடியும் சுவரிலிருக்கும்
அவர் ஃபோட்டோக்களையும் சோஃபாவையும் பார்த்துக் கொண்டு தொடர்ந்தேன்.
"பாட்டி
மூலமாத்தான் முதலில் சொல்லிப் பேசணும்னு நெனைச்சிருந்தேன்.... ஆனால்
அதுக்குள்ள உங்க கோபம், வெடிகுண்டு வச்சா மாதிரி ஆத்திரம், வேக வேகமா
அடுத்தடுத்த நடவடிக்கைகள் எங்களை அல்லது என்னை பயமுறுத்திடிச்சிப்பா....
அப்பவும் அவர் பொறுமையா இருக்கச் சொன்னார்... உங்க வேகத்தையும் கோபத்தையும்
பார்த்த நான்தான் பதட்டப் பட்டு அவர்கிட்ட வீட்டை விட்டுக் கிளம்பும்
யோசனையைச் சொன்னேன். நீங்க அந்த நேரம் ஆளைக் கண்டுபிடித்துக் காலி பண்ணச்
சொல்லி ராஜப்பா கிட்டப் பேசப் போவதாய் சொல்லிகிட்டிருந்த நேரம்... உண்மையோ, என்னை பயமுறுத்தவோ.. எனக்கு என்னால் அவர் உயிருக்கு ஆபத்து என்றதும்
பதட்டமாப் போச்சு... அந்த நேரம் தனியா இருந்த சந்தர்ப்பத்துல என்கிட்ட
உங்களை சப்போர்ட் செஞ்சிப் பேசின பாட்டி கிட்டயும் எதுவும் சொல்லக்
கூடாதுன்னு முடிவு செஞ்சேன்.."
சற்று இடைவெளி விட்டு அப்பாவைப் பார்த்தேன். பேசாமல் என்னையும் அவ்வப்போது தூங்கும் பவானியையும் பார்த்துக் கொண்டிருந்தார்.
"அப்போ
நீங்க எனக்கு இப்படிப் பேச நேரமே கொடுக்கலப்பா.... பேசவே விடல.... உங்க
பார்வைல இப்போ இருக்கற பவானி மாதிரி அப்போ என்னை நீங்க
நினைச்சிருக்கலாம்.... அது அப்புறம் நான் யோசிச்சது... அதனால் சொல்லாமக்
கிளம்பிட்டோம்பா...."
"எப்படி ஊரை விட்டு போனீங்க.... நான் உடனேயே ஊரைச் சுத்தி ஆள் வச்சி யாரும் போக முடியாத படி செஞ்சேனே...."
கொஞ்ச
நேரம் மெளனமாக இருந்தேன். எவ்வளவு சொல்வது... உதவியவர்களைக் காட்டிக்
கொடுக்காமல் இருக்க எதை மறைப்பது என்று எனக்குள் சற்று நேரம் யோசனை ஓட,
அப்பா பொறுமையின்றி லேசாக அசைந்தார்.
"உடனே போகலைப்பா....." நகத்தைப் பார்த்துக் கொண்டு சொன்னேன்.
"அப்புறம்...?" அவர் குரலில் வியப்பு இருந்தது.
"அப்புறம் மூணு மாசம் அங்கதான் இருந்தோம்.... நீங்க உங்க ஆளுங்களை வச்சு உடனே தேடத் தொடங்கிடுவீங்கன்னு தெரியும். அங்கங்க ஆள் நிறுத்திடுவீங்கன்னும் தெரியும். அவர்தான் இந்த ஐடியா கொடுத்தார். சினிமாக்காரர் இல்லையா.... அவர் ப்ளான் வேற மாதிரி இருந்தது."
"எங்க இருந்தீங்க... ஊர் முழுக்கத் தேடினேனே..."
"ஆமாம்பா... ஊர் முழுக்கத் தேடினீங்க.... வெளிலதான் தேடுவீங்கன்னு தெரியும். பகல் எல்லாம் உங்க புது ஆபீஸ்ல இருப்பேன். அங்கங்க வேற வேற இடத்துல மாறிகிட்டே இருப்பேன். என்னைத்தான் அங்க யாருக்கும் அடையாளம் தெரியாதே.... ராத்திரில நம்ம அவுட் ஹவுஸ்ல இருப்பேன்."
அப்பாவின் முகம் இறுகியது.
"இருப்பேன்னா அவன் எங்க இருந்தான்....உன் கூட இல்லையா?"
"இல்லப்பா..... பகல்ல கொஞ்ச நேரம் அல்லது அவ்வப்போ சந்திச்சுப் பேசுவோம்.... தனித் தனியாத்தான் இருந்தோம்.... நீங்க தேடறது ஜோடியாத்தான் தேடுவீங்க... தனியா இருக்கறதுதான் நல்லதுன்னு சொன்னார்... வெளில போய் வர்றதுக்கெல்லாம் பர்தா உபயோகமா இருந்தது.
உங்களைப் பார்த்துகிட்டே இருந்தேன்பா.... பக்கத்துலதான் இருந்தேன்... ஆனா தூரத்துல இருக்கறா மாதிரி ஃபீலிங்.... உங்க கோபம் ஆத்திரம் எல்லாம் பார்த்து பக்கத்துலையே வர முடியாமத் தவிச்சேன். ஒரு சில நாட்களிலேயே உங்க கிட்ட நான் பேசி சமாதானப் படுத்திட முடியும்னு நினச்சது நடக்கலை.... "
சிறிய இடைவெளி விட்டேன். இதுவரை எந்த அளவு சொல்லியிருக்கிறோம் என்று ஒருமுறை ரீவைண்ட் செய்து பார்த்துக் கொண்டேன். நடந்ததைச் சொல்லும் ஆர்வத்தில் உதவிய நல்ல உள்ளங்களைக் காட்டிக் கொடுத்து விடவும் கூடாதே....
"ம்... அப்புறம்.." அப்பா பொறுமையில்லாமல் குரல் கொடுத்தார். சற்றுமுன் அவர் கண்களில், முகத்தில் இருந்த நெருக்கம் இப்போது இல்லையோ என்று தோன்றியது.
"அப்புறம்.... கொஞ்ச நாள்ல நீங்க எங்களைப் பத்திப் பேசறதும் தேடறதும் குறைஞ்சாலும் விடவில்லை. உங்களுக்கு என்ன சந்தேகமோ உள்ளூரிலேயே தேடிக்கிட்டிருந்தீங்க.... அப்பத்தான் அவர் உங்களைத் திசைத் திருப்ப மதுரைலேருந்து 'லேண்ட் லைன்'லேருந்து ஒரு கால் வர வச்சார்..."
"ஆமாம்... ஞாபகம் இருக்கு... யாருமே பேசாம ஒரு ஃபோன்கால்.. நீதான்னு நினைச்சிகிட்டிருக்கேன். நீயில்லையா.."
"இல்லைப்பா... நான் இல்லை. இவரோட ஐடியா. ஒண்ணும் பேசாம சின்ன வளையோசையோட மூச்சு விடற சத்தம் மட்டும் கேக்கணும். அதுவும் லேசா டைம் விட்டு பெருமூச்சா இருக்கணும்னு சொல்லித் தந்து அவருக்குத் தெரிஞ்சவங்களை விட்டு ஃபோன் பண்ணச் சொன்னார்... நினைத்த மாதிரியே வெளியூர்க்கால் நம்பர் ட்ரேஸ் பண்ணி உங்கள் ஆட்களை மதுரைக்கு அனுப்பினீங்க... அப்புறமும் டைம் கொடுத்து, அப்புறம் சென்னைக்கு வந்தோம்பா... ஆனாலும் எனக்கு உங்களைப் பற்றிய நினைவாகவே இருந்தது. இவர் கிட்டச் சொன்னேன். இவர் என்னைப் புரிஞ்சிகிட்டதோட உங்களைப் பற்றி அவரும் ரொம்பக் கவலைப் பட்டார்... உங்க பணம் மேல அவருக்கு ஆசையே கிடையாதுப்பா.... அதை இத்தனை வருஷங்கள்ல உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்... எல்லா உண்மையும் உங்களுக்குத் தெரியற வரைக்கும் உங்களுக்குச் சில விஷயங்கள் தெரியக் கூடாதுன்னு அவர் ஏற்கெனவே திட்டம் போட்டு சில ஏற்பாடுகள் செய்திருந்தார். உங்கள் ஆட்களை நம்பவைக்க என்கூடப் பேசறா மாதிரி ஏற்பாடு செய்த ஆள் அவர் நண்பர். அவர் அப்புறம் வெளிநாடு போய் விட்டார். ஆனால் இவர் பெரும்பாலும் உங்கள் அருகிலேயே இருந்தார்....கொரியர் காரன் மாதிரி... கம்பெனி ஆள் மாதிரி... ஏஜென்ட் மாதிரி... இவர் ஐடியா படி வருஷத்துக்கு இரண்டு தடவையாவது உங்களை நாங்கள் வந்து பார்ப்போம்பா... ஊர்த் திருவிழால நான் உங்க பக்கத்துலையே நின்னுருக்கேன்... லேசா மேக் அப் மாத்தி ஆளை மாத்திடுவார். நீங்க கவனிக்கும் முன்னாடி நகர்ந்துடுவேன்."
"பாட்டி செத்துப் போனப்போ யாரோ மாதிரி கூட்டத்தோட கூட்டமா வந்துட்டுப் போனேன்பா...." தழுதழுத்து அழுதேன்.
சற்று நேரத்தில் சுதாரித்து, "நீ அங்க வந்திருந்தியா?" நம்ப முடியாத திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்த அப்பாவைப் பார்த்தேன்.
"போன வருஷம் உங்களுக்கு லேசா மயக்கம் வந்து ஆபீசிலேயே தடுமாறி உட்கார்ந்துட்டீங்களே... அப்போ ஆபீஸ்ல வேலை பார்க்கறவரைப் பார்க்க வந்ததாச் சொல்லி உங்களிடம் பேசி தன் மாமாவுக்கு இப்படித்தான் இருந்ததாகச் சொல்லி உங்களை டாக்டர் கிட்ட கூப்பிட்டுகிட்டுப் போனாரே.... அவர்தான்பா என் வீட்டுக்காரர்"
"அவரா..... அவரா.... " அவர் முகம் எப்படியிருந்தது என்று யோசித்துப் பார்த்தார் அப்பா. ஞாபகத்துக்கு வரவில்லை. அப்போதுதான் அவருக்கு இன்னொரு விஷயமும் உரைத்தது. கீழே ஹாலிலும் தன்னுடைய போட்டோ மற்றும் தன்னுடைய அம்மாவின் போட்டோ... மேலேயும் தனது போட்டோ... இவர்கள் போட்டோ எதுவும் காணோம்... ஏன்? கேட்டும் விட்டார்.
"சும்மாதாம்பா... தோணலை. உங்க போட்டோ கிட்ட பேசிகிட்டு இருப்பேன். எங்க போட்டோ எங்க பெட்ரூம்ல இருக்குப்பா... அவ்வளவுதான். உங்க கிட்ட எங்களைப் பற்றி அவ்வப்போது நாங்களே வெவ்வேறு விதத்தில் வெவ்வேறு ஆட்கள் மூலமாகத் தகவல்கள் சொன்னோம். உங்கள் கோபம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியதைப் பார்த்ததும் எங்களை வெளிப் படுத்திக் கொள்ளலாம் என்று தோன்றியது. நாங்களும் கொஞ்சம் சொல்லிக் கொள்கிறா மாதிரி இந்த வீட்டுக்குக் குடி வந்தோம். அதுதான் அட்ரசையே உங்கள் கைகளில் தற்செயலா கிடைக்கற மாதிரி கொடுக்க வைத்தார் இவர்."
தான் ஒரு விளையாட்டு பொம்மை போல ஏமாற்றப் பட்டிருக்கிறோமோ என்று கோபமும் ஆத்திரமும் எழுந்தது அவர் முகத்தில்.
"அப்பா.... எங்கள் மேல் இப்போ புதுசாக் கோபம் வரும் உங்களுக்கு.... உங்களுக்கே என்மேல்தான் கோபம் குறைந்ததே தவிர அவர்மேல் குறையவில்லை. பேத்தியைப் பார்க்கும் ஆவல்தான் உங்களுக்கு என்மேலும் கூடக் கோபம் குறையக் காரணம். அதனால்தான் நீங்கள் இங்கு வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்பா... நீங்கள் நேற்று கிளம்பிவிட்டீர்கள் என்று தெரிந்ததும் வந்த சந்தோஷத்தில் அழுகைதான்பா வந்தது.... ஐ லவ் யூப்பா...எனக்காக இவர் இத்தனை காரியமும் செய்தாலும் அவருக்கும் உங்கள் மேல் பாசமும் மரியாதையும் உண்டுப்பா.... என்னையும் உங்களையும் சேர்த்து வைப்பதற்காக இவர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சம் இல்லைப்பா.... இரண்டு முறை வந்த நல்ல பட வாய்ப்பையும் இழந்தார். ஆனாலும் கவலைப் படவில்லை. கவலைப் பட்ட என்னையும் தேற்றினார். 'எது முக்கியம்'னு என்னை சமாதானப் படுத்தினார். இப்போ அவர் வெளியூர் போயிருக்கிறது கூட உங்களுக்குச் சங்கடம் இருக்கக் கூடாது என்றுதான். உங்கள் மனதை நோகச் செய்து விட்டோம் என்று ரொம்பவே வருத்தப் படுவார். ஆரம்ப காலத்துல உங்ககிட்ட எங்க காதலைச் சொல்லும் சமயம் அவர் வேற மாதிரி உங்க கிட்ட எல்லாம் பேசணும்னு சொல்லிகிட்டிருந்தார். அதுக்குள்ள உங்காளுங்க சொல்லிட்டதால களேபரம் ஆயிடுச்சு. இந்தப் பாவத்துக்குப் பிராயச்சித்தமே கிடையாதுன்னு அடிக்கடிச் சொல்வார். இப்ப கூட அப்பாவைப் பார்த்த சந்தோஷத்துல எல்லாவற்றையும் சொல்றேன்னு பேசி அவரை டென்ஷன் பண்ணிடாதே'ன்னு சொன்னார். அப்பா...அப்பா... உங்களைப் பார்த்ததும் எனக்குக் கட்டுப்பாடே போயிடிச்சுப்பா.... எல்லாத்தையும் ஒரே மூச்சுல சொல்லிடணும்னு ஆசை. அதோட அவர் எந்த அளவு உங்களை மதிக்கிறார்னு உங்களுக்கும் தெரியணும்னும் ஆசை.... லவ் பண்ணது தப்புதாம்பா.... ஆனால் இன்னமும் கூட நாங்கள் வேதனைலதான் வாழறோமே தவிர உங்களோட சேர்ந்ததும்தான் நாங்க சந்தோஷமா இருக்க முடியும்னு தோணிப் போச்சுப்பா...."
கொஞ்சம் இடைவெளி.
"புரிஞ்சுக்குங்கப்பா.... ப்ளீஸ் இப்போ சொல்லுங்கப்பா.... முதல்ல சொன்னீங்களே... நாங்களா உங்களை நினைக்காம இருக்கோம்.... சொல்லப்போனா........."
மேலே சொல்லாமல் இடைவெளி விட்டேன். மௌனமான ஐந்து நிமிடங்கள் கழிந்தன. குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தவர் நிமிர்ந்து என்னைப் பார்த்தார். கோபமில்லா முகத்துடன் சொன்னார்.
"என்னைத்தான் சொல்லணும்னு சொல்றியா கயல்.....உண்மைதாம்மா... காலம் சில சமயம் ஒண்ணு சேர்க்குது... சில சமயம் கோபம் ஆறாமப் பார்த்துக்குது. அவங்கவங்க மன பலத்தை, பாசத்தைப் பொறுத்ததும்மா இதெல்லாம்.... இப்பவும் நான் பழசை நினைக்க விரும்பலை.... அது சரி... மாப்பிள்ளை எப்போ வருவார்மா...."
'மாப்பிள்ளை...!'
"ஃபோன் செய்தால் ரெண்டு மணி நேரத்துல வந்துடுவார்ப்பா....."
சந்தோஷமாகப் புன்னகைத்தேன்.
[ நிறைவு ]
படங்கள் : நன்றி இணையம்.
மனதுக்கு நிறைவான முடிவு.
பதிலளிநீக்கு/காலம் சில சமயம் ஒண்ணு சேர்க்குது... சில சமயம் கோபம் ஆறாமப் பார்த்துக்குது. அவங்கவங்க மன பலத்தை, பாசத்தைப் பொறுத்ததும்மா இதெல்லாம்.... /
ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே உள்ளது. மனசு மாறாமலே இருந்து விடுகிறவர்களையும் பார்க்கிறோமே.
அப்பாடா! நல்லவிதமாக முடித்துவிட்டீர்கள்.
பதிலளிநீக்குமுடிவு எதிர்பார்த்தபடி சுபம்.
பதிலளிநீக்குவேஷம் மாற்றி வந்ததை அப்பா கவனிச்சிருக்க சான்ஸ் இல்லாமப் போயிருக்கலாம். ஆனா, கூட இருந்த சொந்தபந்தங்களில் ஒருத்தர்கூடவா கண்டுபிடிக்கலை? போட்டுக் கொடுக்கன்னே ஒரு சொந்தக்காரர் இருக்கணுமே எல்லா இடத்திலும்!
அப்பா இத்தனை காலத்திற்குப் பின் தேடி வந்ததற்கு, தாத்தா-பேத்தி பாசம் என்பதோடு, வயதான காலத்தில் தனிமைப்பட்டு நிற்கும் காரணமும் ஒன்றாக இருக்கலாம். இல்லையா?
(ஸாரி, ரொம்ப கேள்வி கேகுறேனோ? எனக்கென்னவோ இந்த ஓடிப்போய் கல்யாணம் பண்றதுங்கிறது ஒத்துக்கவே முடியறதில்லை - கதைகளில்கூட)
மருமகன் தான் சரியான வார்த்தை.
பதிலளிநீக்குமாப்பிள்ளையெல்லாம் நெருக்கம் அதிகமாக அதிகமாக இன்னொரு மகனாக மாறிப்போவதும் உறவின் உன்னதம்.
சினிமாக்காரர் கதையல்லவா? சினிமா காட்சி போன்றே வசனம்--அதுவும் கயல்-- 'அப்பா, அப்பா' என்று நிறைய அப்பா ஸ்மரணையில் கொஞ்சம் தூக்கல் தான்.அந்தக் கால கே.எஸ்.கோபால கிருஷ்ணன் நினைவுக்கு வந்தார்.
முடிவில் சுபம்... நன்றி...
பதிலளிநீக்குநிறைவான முடிவு.
பதிலளிநீக்குஇப்படிக்கூட ஒரு காதல் கதை முடியக் கூடுமா. கிட்டத்தட்ட ஒரு சினிமாக் கதை மதிரி நடந்திருக்கிறது.
பதிலளிநீக்குஅப்பாவோட நெருக்கம் வேண்டும் என்று பெண் விரும்பியது சரி.அப்பாவின் மனம் இரங்கவே இல்லையே. பெண்ணின் முயற்சி அப்பாவைக் கொண்டுவந்துவிட்டது.
நல்லதொரு கதை.
வணக்கம் சார், கடந்த ஒரு வார காலமாக எந்த வலைபூ பக்கமும் செல்ல முடியவில்லை. உடல்நிலை சரி இல்லாததால் பதிவுகளை வாசிக்க முடியவில்லை. சிறிது காலத்திற்கு பதிவு உலகம் விட்டு தள்ளி இருக்கலாம் என்று தான் நினைத்தேன், தற்போது எந்த பிரச்னையும் இல்லை. இனி தொடர்ந்து வருவேன்.
பதிலளிநீக்குகதை அருமை, வேறு விதமாக முடியும் என்று நினைத்தேன், நல்ல வேளை அப்படி முடித்து இருக்கவில்லை. வார்த்தைக் கையாடல்கள் அனைத்தும் அருமை சார். நல்ல சிறப்பான சிறுகதை
எதையும் புரிந்து கொள்ள காலம் வரவேண்டும். கதையின் முடிவு நிறைவை தருகிறது.
பதிலளிநீக்குNice story
பதிலளிநீக்குமொத்தமாய் எழுதி வைத்து பின் நீளம் கருதி நான்கு பாகமாக வெளியிடப் பட்ட இந்தக் கதைக்கு(ம்) முதலிலிருந்தே தொடர் ஆதரவளித்து உற்சாகப் படுத்திய...
பதிலளிநீக்கு@ராமலக்ஷ்மி, நன்றி!
@ஹேமா (HVL ), நன்றி.
@ஹுசைனம்மா நன்றி. உங்கள் கேள்விகள் சரிதான். எல்லாவற்றையும் கதையில் கொண்டு வந்தால் இன்னும் நீளமாகி விடுமே...! :))
@ஜீவி சார்... தொடர் ஊக்கத்துக்கு மிக்க நன்றி. கடைசி பாகத்தில் வசனம் கொஞ்ச...ம் நீண்டு விட்டது! வேறு வழி தெரியவில்லை! முடிக்கணுமே!
@திண்டுக்கல் தனபாலன், நன்றி.
@அமைதிசாரல், நன்றி.
@வல்லிசிம்ஹன்.. உற்சாகம் காட்டி ஊக்கப் படுத்தியதற்கு மிக்க நன்றி.
@சீனு.. பாராட்டுக்கு மிக்க நன்றி.
@மீனாக்ஷி, நன்றி.
நன்றி middleclassmadhavi.
ஹூசைனம்மா கட்சிதான் நானும், என்ன இருந்தாலும் பெற்று வளர்த்துக் கஷ்டப்பட்டு ஆளாக்கிய அப்பா, அம்மாவை விட எங்கிருந்தோ வரும் ஒருத்தன் எப்படி உயர்ந்தவன் ஆவான்? இது புரியாத புதிரே.:( இதை என்னாலும் ஏற்க முடியறதில்லை. மற்றபடி கொஞ்சம் அவசரமா(?) முடிச்சாப்போல் தெரிஞ்சாலும் அப்பா, மகள் ஒண்ணு சேர்வது எதிர்பார்த்ததே.
பதிலளிநீக்குசினிமா அப்பா, மகள் பாசம் மாதிரியும் சில சமயம் தோன்ற வைக்கிறது. நிஜ வாழ்வில் இப்படி நடக்குமானு யோசிக்கவும் வைக்குது. :))))