புதன், 7 ஆகஸ்ட், 2013

பாடி வா........ கிரிக்கெட், கபடி மலரும் நினைவுகள்


கபடி விளையாடியிருக்கிறீர்களோ.... நான் விளையாடி இருக்கிறேன். எங்கள் டீம் ஜெயிக்க நான் காரணமாயும் இருந்திருக்கிறேன்.

நம்புங்கள். நிஜம்.

தஞ்சாவூர் ஹவுசிங் யூனிட்டில் இருந்த காலம். சுதந்திரதினம், குடியரசுதினம் வந்தால்  போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என்று காலனியே அமர்க்களப்படும். சுமார் 300 வீடுகள்.

                                               
சந்தோஷமான பதின்ம தினங்கள்! உற்சாகமாக எல்லோரும் பங்கு கொள்வோம். பெரும்பாலும் நான் பார்வையாளனாகப் பங்கு கொள்வேன்.

பின்னே?

எல்லோரும் போட்டியிடச் சென்று விட்டால் ஆடியன்ஸாக யார் இருப்பது? யார் கை தட்டுவது? எனவே அந்தப் பணியை நான் சிறப்பாகச் செய்து வந்தேன்.

                     

ஆனாலும் வயசுக் கோளாறு! 'சில' காரணங்களால் சில நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளவேண்டி வந்தது. அதில் கிரிக்கெட் மேட்ச் ஒன்று. இன்னொன்று கபடி. கிரிக்கெட் மேட்சில் பெயர் கொடுத்ததும் காலனி முழுக்க ஒரே பேச்சாயிருந்தது. 'ஸ்ரீராம் விளையாடறானாமே.. பெயர் கொடுத்திருக்கானாம்.....' என்று. எந்தத் தெருவுக்குப் போனாலும் இதே பேச்சு. 

பேசியவர்கள் யார்? பேசியவர்'கள்' இல்லை, பேசியது............. நான்தான்!

நான் நல்ல பேட்ஸ்மேன் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. முதல் வாரம் முழுவதும் பயிற்சி பொறி பறந்தது.

                                                          

விளையாடும் நாள் அன்று எங்கள் டீம் கேப்டன் டீமை அறிவித்தார். நான் '12த்' மேன். வெறுத்துப் போனேன். வெள்ளை பேன்ட் வெள்ளைச் சட்டை, வெள்ளைத் தொப்பி என்று கடன் வாங்கிப் போட்டு வந்திருப்பது, விளையாடுபவர்களுக்குத் தண்ணீர் கொடுக்கவும், பந்து பொறுக்கிப் போடவும்தானா?  ஓரமாக நின்று நான் வெறுப்புடன் வேடிக்கை பார்க்க, ஆட்டம் தொடங்கியது.

முதல் இரண்டு ஓவர் முடிவதற்குள்ளாகவே சிறிய பரபரப்பு இருந்தது. தர்ட் டவுன் இறங்கவேண்டிய பேட்ஸ்மேன் வரவில்லை. என் நண்பர்கள் அப்போதே என்னைப் பார்த்தபடியே கை தட்ட ஆரம்பித்து விட்டார்கள். கேப்டன் என் அருகில் வந்து காதைக் கடிக்க, ('ஆ....வலிக்கிறது' என்று நான் அலறவில்லை) போர்டில் மூன்று ஓட்டங்கள் இருந்த நிலையில் இரண்டு பேர்கள் 'பெவிலியன்' திரும்பி இருந்தார்கள்.

                                                     

பெவிலியன் என்ன பெவிலியன்?  பெவிலியன் என்பது மைதானத்துக்கு அருகில் இருந்த பாலர் பள்ளிதான். எனவே, நான் உடனே இறங்க வேண்டிய கட்டாயம். 

'நல்லா அடித்து ஆடு.... ஸ்கோர் ஏறணும்...'  கேப்டன் சொல்லி அனுப்பினான். மண்டையை 'ஓகே'  என்ற அர்த்தம் வரும் வகையில் ஆட்டினேன். கட்டைவிரலை உயர்த்திக் காட்டி விட்டு 'பேட்டை'க் கையில் எடுத்தேன்.  

'பேட்டை'க் கையில் வைத்து சுழற்றியபடி நான் மைதானத்தின் உள்ளே நுழைந்தேன். டிவியில் பார்த்ததில்லையா என்ன?

அடுத்த இரண்டு ஓவர்கள் நான் ரன்னராகவே நிற்க வேண்டி இருந்தது. அவ்வளவு பயிற்சி எடுத்திருந்த எனக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்காதது குறையாகவே இருந்ததற்குக் காரணம் என் திறமையில் எனக்கிருந்த நம்பிக்கை. அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே வெங்கடேஷ் ஒரு சிங்கிள் எடுக்க, எனக்கு வந்தது வாய்ப்பு. நான் ஏற்பாடு செய்து வைத்திருந்த இரண்டு மூன்று பேர்கள் சோகையாக கை தட்டினார்கள்.

பௌலர் ஓடி வந்தான்.

                                                    

எப்போது பந்தை வீசினான், எப்போது ஸ்டம்ப் பெயர்ந்தது என்று தெரியாது. ஸ்டம்ப் பெயர்ந்தது தெரியாமல் நான் சில நொடிகள் நின்று விட்டு, அப்புறம் எல்லோரும் திட்டிய பிறகு திரும்பி ஸ்டம்பைப் பார்த்து விட்டு உள்ளே வந்தேன். பௌலருக்கு என்னைப் போலவே அவன் திறமையில் நம்பிக்கை இருந்திருப்பதும், அவன் முந்தின வாரம் மட்டுமல்ல, தினமுமே ப்ராக்டீஸ் செய்வதும்  பின்னர் தெரிய வந்தது. எங்கள் டீம் பத்து ரன்னுக்கே அவுட் ஆனதும், எதிரணியினர் அதை இரண்டே ஓவர்களில் எடுத்ததும் உங்களுக்குத் தெரிய வேண்டாம்.

கபடி என்று அல்லவா ஆரம்பித்தான் இவன், என்னமோ சொல்லிக் கொண்டு இருக்கிறானே என்று நீங்கள் பொறுமை இல்லாமல் ஸ்க்ரால் செய்வது தெரிகிறது. என்ன செய்ய எந்தத் தலைப்பில் பேத்த, ச்சே... ஸாரி, பேச ஆரம்பிக்கிறேனோ...ஓ ... அதுவும் தவறா? சரி, எழுத ஆரம்பிக்கிறேனோ அந்தத் தலைப்பு சம்பந்தப்பட்ட விஷயத்துக்குக் கடைசியில்தானே வருவேன்.... உங்களுக்கே தெரியுமே....

18 கருத்துகள்:

  1. நல்ல நினைவுகள்:))! எனக்கும் ஸ்போர்ட்ஸுக்கும் ரொம்பத் தூரம். த்ரோ பாலில் பந்து வலையைத் தாண்டியதே இல்லை. யார் டீமில் சேர்ப்பார்கள்? ஆனாலும் விளையாட ஆசையும் ஆர்வமுமாய் இருக்கும். இதற்கென பள்ளிக்கு காலையில் சீக்கிரமே போய் ப்ராக்டிஸ் கூட செய்து பார்த்தேன். ஊஹூம்:)!

    பதிலளிநீக்கு
  2. வலையைத் தாண்டாது என்பது சர்வீஸில். அதே நேரம் எட்டாவதிலிருந்து +2 வரை ‘டிஸ்க் த்ரோ’வில் வகுப்பிலேயே அதிக தூரத்துக்கு வீசும் முதலிருவரில் ஒருவராக இருந்திருக்கிறேன். விந்தைதான், இல்லையா? எப்படி இது? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. எல்லோரும் போட்டியிடச் சென்று விட்டால் ஆடியன்ஸாக யார் இருப்பது? யார் கை தட்டுவது? எனவே அந்தப் பணியை நான் சிறப்பாகச் செய்து வந்தேன்.

    சிறந்த பார்வையாளர் விருது வழங்கிக்கொள்ளுங்கள்..!

    பதிலளிநீக்கு
  4. //நான் ஏற்பாடு செய்து வைத்திருந்த இரண்டு மூன்று பேர்கள் சோகையாக கை தட்டினார்கள்.//

    என்ன கொடுத்தீங்க??? லஞ்சமாத்தான்! :)))))அப்போல்லாம் தீப்பெட்டிப் படம், கோலிக்குண்டுகள், சீட்டுக்கட்டுகள் என லஞ்சம் பெறப்பட்டிருக்கும். இல்லையா?


    //ஸ்டம்ப் பெயர்ந்தது தெரியாமல் நான் சில நொடிகள் நின்று விட்டு, அப்புறம் எல்லோரும் திட்டிய பிறகு திரும்பி ஸ்டம்பைப் பார்த்து விட்டு உள்ளே வந்தேன். //

    ஹிஹிஹிஹி, நல்லா இருக்கு. ஜாலியா இருக்கு. தம்பி விளையாடுகையில் நான் தான் அம்பையர்! அப்பாவுக்குத் தெரிஞ்சிருந்தா கொன்னே போட்டிருப்பார். எல்லாம் தெரியாமல் தான்!!!! :))))) பம்பரம் மட்டும் நல்லாவே விளையாடி இருக்கேன். ஒரே சுழற்றில் அப்ப்ப்ப்பீபீபீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்! :)))))

    //சரி, எழுத ஆரம்பிக்கிறேனோ அந்தத் தலைப்பு சம்பந்தப்பட்ட விஷயத்துக்குக் கடைசியில்தானே வருவேன்.... உங்களுக்கே தெரியுமே....//

    தெரிஞ்ச விஷயம் தானே! கபடி பத்தி எழுதறச்சே என்ன தலைப்பு வரும்னு இப்போவே யோசிச்சு வைச்சுக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. இதை ஒரு தொடர்பதிவா ஆக்குங்க. அவங்க அவங்க கிரிக்கெட் (நி)கனவுகளைப் பகிர்ந்துக்கட்டும். பெண்கள் உட்பட! :))))))

    பதிலளிநீக்கு
  6. //பேசியவர்'கள்' இல்லை, பேசியது............. நான்தான்!// ஹா ஹா ஹா செம டைமிங்

    ஹா ஹா ஹா சூப்பர்

    பதிலளிநீக்கு
  7. //Geetha Sambasivam said...
    இதை ஒரு தொடர்பதிவா ஆக்குங்க. அவங்க அவங்க கிரிக்கெட் (நி)கனவுகளைப் பகிர்ந்துக்கட்டும். பெண்கள் உட்பட! :))))))//



    ஆகா நாடு தாங்காது... தாங்கவே தாங்காது.,... கூப்ட பதிவுகளையே நான் இன்னும் எழுதி முடிகள :-)

    பதிலளிநீக்கு
  8. சரி, எழுத ஆரம்பிக்கிறேனோ அந்தத் தலைப்பு சம்பந்தப்பட்ட விஷயத்துக்குக் கடைசியில்தானே வருவேன்.... உங்களுக்கே தெரியுமே..
    >>
    தெரிங்சுக்கிட்டேன்

    பதிலளிநீக்கு
  9. சூப்பர்... ஒரு காலத்துல, கபடில கோடி கட்டி பறந்தவன்.... இப்போல்லாம் விளையாடுறதே இல்ல. நெஞ்சில் கடந்து செல்லும் நிமிடங்கள்...!

    பதிலளிநீக்கு
  10. கடமை தவறாத பார்வையாளராக இருந்திருக்கீங்களே....:))

    கபடி நினைவுகளும் தொடரட்டும்..

    எனக்கு OUTDOOR GAMES என்றாலே அலர்ஜி....:)) சீட்டு விளையாடி அம்மாவிடம் நிறைய உதை வாங்கியிருக்கிறேன்... கோலி, பம்பரம் முதலியவையும் விளையாடியிருக்கிறேன்.

    திருமணமான பின் தைரியமாக என்னவருடன் சீட்டு விளையாடுவதுண்டு...:))

    பதிலளிநீக்கு
  11. //பௌலருக்கு என்னைப் போலவே அவன் திறமையில் நம்பிக்கை இருந்திருப்பதும், அவன் முந்தின வாரம் மட்டுமல்ல, தினமுமே ப்ராக்டீஸ் செய்வதும் பின்னர் தெரிய வந்தது. எங்கள் டீம் பத்து ரன்னுக்கே அவுட் ஆனதும், எதிரணியினர் அதை இரண்டே ஓவர்களில் எடுத்ததும் உங்களுக்குத் தெரிய வேண்டாம். // hayyo hayyoo... super anna.. chanceless!

    பதிலளிநீக்கு
  12. பரவாயில்லை இரண்டு பால்களுக்காவது நின்று ஆடி இருக்கிறிர்களே:)டீம் பத்து ரன்னுக்கே அவுடானதால் உங்களைக் குறை சொல்ல முடியாது!!!!
    நல்லதொரு பகிர்வு.

    பதிலளிநீக்கு
  13. கிரிக்கெட் நினைவுகள் ஜோர்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. கிரிக்கெட் நினைவுகள் அருமை, நல்ல நகைச்சுவை.
    நான் பேரனுடன் விளையாடிய அனுபவம் உண்டு.

    பதிலளிநீக்கு
  15. கிரிக்கெட் அருமையாக விளையாடி இருக்கிறீர்கள். எனக்கும் இந்த மாதிரி நடு ரோடில் கிரிக்கெட் விளையாடின அனுபவம் இருக்கிறது.

    அந்த வயதெல்லாம் திரும்ப வருமா?
    என் இனிமையான சிறு வயது நினைவுகள் மலர்ந்தன.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!