அசோக் லேலண்டில் நிறைய விஸ்வநாதன்கள் உண்டு.
நான் இப்போ குறிப்பிடப்போவது என்னுடன் அப்ரண்டிஸ் ஆகச் சேர்ந்த ஜி விஸ்வநாதம் என்பவர் பற்றி.
நண்பர் திருப்பதி காலேஜில் படித்தவர்.
அப்ரண்டிஸ் ஆகச் சேர்ந்த முதல் நாளே ட்ரைனிங் சென்டரில் காத்திருந்த கொஞ்ச நேரத்தில், பயிற்சி நிலைய வகுப்பில், சிகரெட் பற்றவைத்து, இழுத்து, பாட்ரிக்கைப் பதற வைத்தவர்.
சேர்ந்த புதிதில் அவருக்குத் தமிழ் அவ்வளவாகத் தெரியாது. மாம்பலம் ரங்கநாதன் தெருவிற்குப் பக்கத்தில் சரவணா மேன்சன் என்ற இடத்தில், பாச்சிலர் குடியிருப்பு ஒன்றில் நண்பர்களோடு தங்கி இருந்தார்.
அறை நண்பர்கள் பல வேறுபட்ட அலுவலகங்களில் பணி புரிபவர்கள். விஸ்வநாதம்தான் எனக்கு ஏ எம் ஐ இ படிப்புக்கு எங்கே, எப்படி அப்ளை செய்யவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தவர். காலையில் அலுவலகம் வரும்பொழுது, அவர் ரயிலில் கோட்டை நிலையம் வந்து, அங்கிருந்து ஒரு ஐம்பத்தாறு சி (சிறப்புப்) பேருந்து (அசோக் லேலண்டுக்கு ஆறு ஐம்பத்தைந்துக்கு ஹை கோர்ட் ஸ்டாண்டிலிருந்து கிளம்பி வரும். பெரும்பாலும் அதில்தான் அவர் எண்ணூர் அ லே வரை வருவார்.
நான் சில சமயங்களில் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் ரயில் தாமதமானால் அல்லது ரயிலை பிடிக்க நேரம் இல்லை என்றால், கோட்டை ஸ்டேஷனுக்கு வந்து, இந்த சிறப்புப் பேருந்தை பிடித்து செல்லுவேன். அந்தப் பேருந்தில் வழக்கமான பயணிகள் என்று பத்துப் பதினைந்து தொழிலாளத் தோழர்கள் உண்டு. அவர்களில் சிலர் எல்லோரிடமும் மொத்தமாக பயணக் கட்டணம் வசூல் செய்து, கண்டக்டரிடம் கொடுத்து, மொத்தமாக ஐம்பது அறுபது டிக்கெட்டுகள் வாங்கி, காசு கொடுத்த ஒவ்வொருவரிடமும் டிக்கெட் கொடுப்பார்கள். பயணத்தை நடுவில் நிறுத்தி பயணச் சீட்டு கொடுக்கின்ற நேரத்தை மிச்சப்படுத்தி, சீக்கிரமாக சென்று காண்டீனில் காலைச் சிற்றுண்டி சாப்பிடவேண்டும் என்பதற்காக இந்த ஐடியா.
அப்போ எல்லாம் நண்பர் விஸ்வநாதம் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டுதான் பல தடவைகள் அந்தப் பேருந்தில் பயணித்திருக்கின்றேன். முதல் தடவை அவருடன் பயணித்தபொழுது, அவர் என்னிடம், "போகாதே, எறக்கேறு அவ்வளவுதான் " என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் தொழிலாளர் ஒருவரைச் சுட்டிக்காட்டி, (ஆங்கிலத்தில்) 'அவர் அப்படித்தான் கூறுவார் - நீ வேணா பாரு' என்றார்.
நான் இவர் சுட்டிக் காட்டியவரைப் பார்த்துக்கொண்டே வந்தேன். வண்டி ஐ ஓ பி ஸ்டாப்பிங் வந்ததும் நின்றது. வண்டி எண் ஐம்பத்தாறு சி என்று பார்த்த கூட்டம் ஆவலோடு முண்டியடித்து ஓடி வந்தது. அப்போ அந்தத் தொழிலாளத் தோழர், "அப்பா இது ஸ்பெஷல் பஸ். திருவொற்றியூர் போகாது" என்றார். பிறகு சுருக்கமாக, சத்தமாக, 'போகாது, போகாது' என்று மட்டும் கூறி வந்தார்.
விஸ்வநாதம், "யு ஸீ - ஐ டோல்ட் யு!" என்றார். ஓஹோ இதைத்தான் இவர் 'போகாதே' என்று புரிந்து கொண்டுவிட்டார் போலிருக்கு' என்று தெரிந்துகொண்டேன்.
பிறகு சில நிறுத்தங்களில் அசோக் லேலண்டு ஆட்கள் இந்த பஸ்ஸில் ஏற வரும்பொழுது, படிக்கட்டுகளில் நின்று கொண்டிருப்பவர்களிடம் 'இறங்கி ஏறு, இறங்கி ஏறு' என்று வேண்டுகோள் விடுப்பார்கள். படிக்கட்டுப் பயணிகள் இறங்கி நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள் உள்ளே அடைந்துகொண்டவுடன், படிக்கட்டுப் பயணிகள் மீண்டும் தொத்திக்கொள்ள, பஸ் தன் பயணத்தை மீண்டும் தொடரும். இதுதான் அவர் சொன்ன எறக்கேறு என்று தெரிந்துகொண்டேன்.
அவர் அவருடைய ரூம் மேட் பற்றி ஒரு சுவையான சம்பவம் சொன்னார்.
அது என்ன என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.
வார்த்தைகளை ரொம்பவே சுருக்கி விட்டார்...!
பதிலளிநீக்கும்ம்ம்ம்ம்ம், விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்று நினைத்தேன். :)))))
பதிலளிநீக்கு:-)
பதிலளிநீக்குஎறக்கேறு அர்த்தம் அருமை.
பதிலளிநீக்குஆவலுடன் அவர் வார்த்தைகளுக்காய் காத்திருப்பு..
பதிலளிநீக்குதமிழ் தெரியாத என் அலுவலகத் தோழர்களிடமும் இது போல் நிறைய சுவாரசியமான விஷயங்கள் உண்டு :-)))))))))
பதிலளிநீக்குசுவையான சம்பவங்கள்.....
பதிலளிநீக்குஅடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.