திங்கள், 10 மார்ச், 2014

திங்க கிழமை 140310 :: மாங்காய் ஸ்வீட் பச்சடி


மாங்காய் சீசன் வரப்போகின்றது.
   
முற்றிய, பெரிய மாங்காய் ஒன்றை, தோல் சீவி எடுத்துகொண்டு, பொடிப் பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளுங்கள். 
   
சீவிய மாங்காய் துண்டுகள் எந்த அளவு இருக்கின்றதோ அதைப்போல ஒன்றரை மடங்கு சுத்தமான தண்ணீர் எடுத்துக்கொண்டு, அரை டீஸ்பூன் உப்புப் போட்டு, எல்லாவற்றையும் வாணலியில் இட்டு, வேக வைக்கவும். 
          
பாதி கட்டை விரல் சைஸுக்கு இஞ்சி வெட்டி எடுத்துக் கொண்டு, (எச்சரிக்கை: இஞ்சியை வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். கட்டைவிரலை அல்ல!) தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக (சீரகச் சம்பா அரிசி அளவுக்கு) வெட்டி மாங்காய் கலவையில் இடவும். (என்ன சத்தம் அங்கே? - குலவை இடவும் என்று படித்துவிட்டீர்களா!!) 
           
குங்குமப்பூ ஐந்தோ ஆறோ, மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை, இவற்றையும் போட்டு, மாங்காய் கலவையை நன்கு வேக விடவும். 
        
மாங்காய் நன்கு வெந்ததும், மத்து அல்லது கரண்டியால் நன்றாக மசித்துவிட்டு, நூறு கிராம் வெல்லம் எடுத்துக்கொண்டு, அதை நன்றாகப் பொடித்து மாங்காய்க் கலவையுடன் போட்டுக் கிளறி, வேக விடவும். 
            
பச்சடி நல்ல பக்குவத்திற்கு வந்தவுடன், ஒரு கரண்டியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் எடுத்துக்கொண்டு, அடுப்பில் வைத்து, அதில் கால் டீஸ்பூன் கடுகு போட்டு  கடுகு வெடித்தவுடன் கால் டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, கால் டீஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு மிளகாய் வற்றல் இவற்றை சேர்த்து தாளித்து, பச்சடியில் இட்டுக் கிளறவும். 
               
இரண்டு ஏலக்காய்களை தோல் நீக்கி, ஏல அரிசிகளை பொடி செய்து போடவும்.
               
மாங்காய் பச்சடியை, அடிபிடியாமல் கவனமாக அடிக்கடிக் கிளறிவிட்டு, கெட்டியானதும் இறக்கிவிடவும். 
               
மாங்காய் வெல்லப் பச்சடி ரெடி. 
                  
       

13 கருத்துகள்:

  1. அருமை..

    மாங்காய் வெல்லப்பச்சடி எல்லா உணவுகளுக்கும் பொருந்தும்.

    சப்பாத்தி , தோசை ,தயிர் சாத்ம்
    என குலவை இட்டு சாப்பிடலாம்..!

    பதிலளிநீக்கு
  2. இஞ்சி போடறது இன்னிக்குத் தான் தெரியும்.

    மத்தபடி குங்குமப் பூ மட்டும் ஒரு கிலோ வாங்கி அனுப்பிடுங்க. எல்லா ஸ்வீட் பண்ணறச்சேயும், முக்கியமா அக்கார அடிசில்,கல்கண்டு பாத் பண்ணறச்சே உபயோகப்படும். குங்குமப் பூ ஐந்தாறா?? ஆஹா!!!!!!!!!!!!!!

    அது சரி, அதைப் பாலில் அல்லவோ ஊற வைக்கணும்?

    பதிலளிநீக்கு
  3. எதுவுமே வேண்டாம் அப்படியே சாப்பிடலாம்.சூப்பர் பச்சடியை காட்டி காலையிலேயே சாப்பிடத்தூண்டிட்டீங்க...

    பதிலளிநீக்கு
  4. இஞ்சி, ஏலக்காய் சேர்ப்பது புதிய தகவல்

    பதிலளிநீக்கு
  5. படிக்கும் போதே வாயூறுதே...

    பதிலளிநீக்கு
  6. மாங்காய் வேண்டும் என்பவர்கள் எங்கள் வீட்டுக்கு வரலாம். காய்க்க ஆரம்பித்துவிட்டது. பச்சடியைப் பார்த்தே வயிறு நிரம்பிவிட்டது.

    பதிலளிநீக்கு
  7. #திங்க கிழமை 140310 :: மாங்காய் ஸ்வீட் பச்சடி#
    இதை திங்க கிழமையும் நாளும் ஏது?

    பதிலளிநீக்கு
  8. ரொம்பவும் புளிப்பில்லாத பெங்களூரா மாங்காய் நன்றாக இருக்கும். இஞ்சி, குங்குமப்பூ சேர்ப்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன்.
    எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த ஒரு பச்சடி.

    பதிலளிநீக்கு
  9. ஐ...

    எனக்கு ரொம்பப் பிடிக்கும் அண்ணா....

    பதிலளிநீக்கு
  10. மாங்காய் பச்சடிவித்தியாசமாய் இருக்கே! இஞ்சி, குங்குமபூ என்று செய்து பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. ஸ்ஸ்ஸ் இத அப்படியே கொடுத்தீங்கன்னா நானே சாப்பிட்டு முடித்து விடுவேன்.,

    http://samaiyalattakaasam.blogspot.ae/2014/04/sweet-macaroni.html

    ஜலீலா கமால்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!