திங்கள், 23 பிப்ரவரி, 2015

'திங்க'க்கிழமை : தஞ்சாவூர்க் குடைமிளகாய்




வருடா வருடம் ஜனவரி மாதம் முடியும்போது நினைவுக்கு வருவது இந்த தஞ்சாவூர்க் குடைமிளகாய்!  ஜனவரி முடிவில் தொடங்கி ஃபிப்ரவரி 28 தேதிக்குள் பெரும்பாலும் குடைமிளகாய் சீசன் முடிவுக்கு வந்துவிடும்.  அப்புறம் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்.

தஞ்சையில் இருந்த காலங்களில் வீட்டு வாசலிலேயே அல்லது,  ஈவினிங் பஜார் சென்று வாங்கி விடுவோம்.  அங்கு சல்லிசாகக் கிடைக்கும்.


சென்னையில் மாம்பலத்தில்தான் பெரும்பாலும் வாங்குவது.  நாங்கள் ரெகுலராக வாங்கும் பார்ட்டி என்று அறிந்து(ம்) சில மாம்பல விற்பனையாளர்கள் எங்களிடம் கொள்ளை வியாபாரம் செய்வார்கள்.
இந்த முறை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் சென்றபோது, கோவில் இருக்கும் தெரு வாசலில் ஒரு பெரியவரும், பெரியம்மாவும் இந்தக் குடைமிளகாய் விற்றுக் கொண்டிருக்க, விலை கேட்டபோது மயக்கமே வந்து விட்டது.  படி முப்பது ரூபாய்!   மாம்பலத்தில் படி 100 ரூபாய், 120 ரூபாய் என்று வாங்கி இருக்கிறோம்.  

ஒன்று,  மாம்பலத்தில் கொள்ளை அடித்திருக்க வேண்டும். அல்லது, இந்த முறை விளைச்சல் அதிகமாய் இருந்திருக்க வேண்டும்!  ஏதோ ஒன்று,  எங்கள் காட்டில் மழை!



குடைமிளகாய் வாங்கிவந்து பெரும்பாலும் மோர் மிளகாய்தான் போடுவது வழக்கம்.  அப்பாவுக்காக மிகச்ச்சில சமயங்களில் புளி மிளகாய் போடுவது உண்டு என்றாலும்,  மோர்மிளகாய் அளவு அது சுவையாய் இருப்பதில்லை. 


முன்னுரை அதிகமாகி விட்டது!

 
குடை மிளகாய் வாங்கும்போதே அதற்குத் தகுந்தாற்போல் பால் வாங்கிக் காய்ச்சி தயிர் தோய்த்து வைத்துக் கொளல் நலம்.
இனி செய்முறை. 


குடைமிளகாயை முதலில் சுத்தமான நீரில் சுத்தம் செய்து கொள்ளவும்.  பின்னர், குடைமிளகாயின் காம்புகளை முழுவதும் நீக்காமல், கொஞ்சம் பாக்கி வைத்து வெட்டி எடுத்துவிட்டு, மிளகாயை ஒரு பாத்திரத்தில் போடவும்.  



பின்னர் ஒவ்வொரு மிளகாயாக எடுத்து ரொம்ப வெட்டி விடாமல், ஒரு சிறு கீறல் போட்டு பாத்திரத்தில் போடவும்.


 

கல்லு உப்பு வாங்கி தேவையான அளவு போடவும்.  சிலர் மிளகாயையும் உப்பையும் கொஞ்சம் கொஞ்சமாக அதாவது ஒரு ஒரு அடுக்காகப் போடுவார்கள்.  நாங்கள் அளவு பார்த்து மொத்தமாக அப்படியே போட்டு குலுக்கி விட்டு விடுவோம்.  இதற்கு மஞ்சள் தூள் போன்ற இன்னபிற சமாச்சாரங்கள் போடுவதில்லை.


உப்புப் போடப்பட்ட மிளகாயை குறைந்தபட்சம் பனிரண்டு மணி நேரம் அப்படியே விட்டு விடவும்.


பிறகு முதலிலேயே தோய்த்து வைத்துள்ள தயிரை பாத்திரத்தில் மிளகாய் மூழ்கும் அளவு அல்லது முக்கால் மிளகாய் மூழ்கும் அளவு ஊற்றவும்.  நன்றாகக் கிளறி விட்டு மூடி வைத்து விடவும்.



மறுநாள் முதலே மிளகாய் சாப்பிடத் தொடங்கலாம்.  முதல் இரண்டு நாட்களும் அவ்வப்போது ஊற, ஊற மோர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ளலாம்.  முரட்டு மிளகாயாய் இல்லாமல் பிஞ்சு மிளகாயாய், ஊறிய மிளகாயாய் எடுத்துத் தொட்டுக்கொள்ள வேண்டும்.  அது தனிச்சுவை.


இரண்டு நாட்களுக்குப் பிறகு மிளகாயை வெயிலில் காய வைக்க ஆரம்பித்து விடலாம்.  ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாய் அது காயக் காய ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை!


நன்றாகக் காய்ந்து,  நீர்ச்சத்தின்றி மொருமொருவெனக் காய்ந்ததும் எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டால் வருடம் முழுவதும் மோர்க்கூழ், அரிசி உப்புமா, ரவா உப்புமா என்று செய்யும்போது அதில் இதை வறுத்துச் சேர்க்கலாம்.  சுவைக்குச் சுவை, வாசனைக்கு வாசனை.   வீண் செய்யாமல் கூழ் / உப்புமாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.


சும்மாவே எண்ணெயில் பொரித்து மோர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.  கடையில் வாங்கும் மிளகாய் வற்றல்களில் உப்பு அதிகம் இருக்கும்.   மேலும் கடைகளில் நீள மிளகாய்தான் கிடைக்கும்.  இந்தத் தஞ்சாவூர்க் குடைமிளகாயின் சைஸும்,  வாசனையும் தனி!


அதுவும் தயிரில் ஊறவைத்து காயவைத்து எடுத்திருப்பதால் பொரிக்கும் போதெல்லாம் ஒரு நெய் வாசனை அடிக்கும் பாருங்கள்...


தூள் போங்க...


இந்த மாத இறுதி வரை மார்க்கெட்டில் இந்த மிளகாய்க் கிடைக்கும்.  இது முடிந்த உடன் இருக்கவே இருக்கு மாவடு சீசன்!

28 கருத்துகள்:

  1. தஞ்சாவூர் குடமிளகாய்
    எங்கள் ஊரு மிளகாய் அல்லவா
    காரமும் சுவையும் அருமை

    பதிலளிநீக்கு
  2. மிளகாயையும் உப்பையும் பார்த்ததும் நாக்கில் எச்சில் ஊறுகிறது...

    படி கணக்கிலா விற்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
  3. இனி தான் குட மிளகாய் வற்ற‌ல் போட வேண்டும். தஞ்சையில் சில சாலைகளில் கடந்து போகும்போதே குடமிளகாய் வாசனை ஆளைத்தூக்கும். தயிரில் ஊறப்போட்ட மிள‌காயை மறுநாளே சாப்பிட ஆரம்பிக்கலாம் என்பது புதிய செய்தி! நானும் முயற்சித்து பார்க்கிறேன். உங்கள் டிப்ஸ் பலருக்கும், பெண்கள் உள்பட உபயோகமாயிருக்கும்!

    பதிலளிநீக்கு
  4. மாம்பலத்தில் எப்பொதுமே விலை அதிகம்தான்.

    செய்முறை விளக்கம் அருமை.
    படங்களும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  5. நான் கூட நங்கநல்லூர் மிளகாய் வாங்கிப்போட்டு பதிவும் எழுதினேன்.
    நல்ல ருசியான மிளகாய். ஊறும்போதே தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். உங்கள் பதிவு மிக்க நன்றாக உள்ளது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  6. தஞ்சாவூர் போனப்போ மார்க்கெட் பக்கம் மிளகாயைப் பார்க்க முடியலையே! இங்கே இன்னமும் வர ஆரம்பிக்கலை. என்னமோ தெரியலை ரொம்ப தாமதம் ஆகிறது. :))) கிடைத்ததும் வாங்கிப் போட வேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
  7. கார்த்திக் சரவணன்,

    எப்பவுமே படிக்கணக்கில்தான் விற்கிறார்கள் .

    நன்றி சாந்தி மாரியப்பன்.

    பதிலளிநீக்கு
  8. நன்றி மனோ சாமினாதன் மேடம்.

    நன்றி ராம்வி.

    நன்றி காமாட்சி அம்மா..

    பதிலளிநீக்கு
  9. கீதா மேடம், நன்றி. மார்க்கெட் போய்ப் பார்த்தால் வந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  10. ஆஹா, "என்ன சுகம்" பட்டியலில் இன்னுமொரு ஐட்டம்.

    பதிலளிநீக்கு
  11. இட்லி உப்புமாவிற்கும் மோர் மிளகாய் தாளிப்பில் சேர்க்க ருசியாக இருக்கும்.

    நீங்கள் சொல்வது போல் பிஞ்சு மிளகாய் மோரில் ஊறியது நன்றாக இருக்கும் .

    செய்முறை விளக்கமும், படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  12. ஆங்கிலத்தில் காப்சிகம் என்று சொல்லப் படும் மிளகாயாஇது.?

    பதிலளிநீக்கு
  13. மோர் மிளகாய் ஜோர்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  14. தஞ்சாவூர் குடமிளகாய்ப் பதிவு திங்க்கக் கிழமை பெஸ்ட். என்ன அளவா அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
    எங்கள் வீட்டில் முதல் போணீ சிங்கம் தான். கிண்ணம் கிண்ணமாக
    மிளகாய் மோர்த் தொட்டுக் கொள்வார்.
    பிறகு மிளகாய். பிறகு வறுத்த மிளகாய்.
    பதிவுக்கு மிக நன்றி.
    மாவடுவும் வந்து கொண்டிருக்கிறதா.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம்
    ஐயா.

    விளக்கமும் மிளகாய் படமும் நன்று பகிர்வுக்கு நன்றி த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  16. மோர் மிளகாய் பதிவுப் பார்த்தவுடன் குடமிளகாய் போடத் தோன்றுகிறது. மாம்பலம் போய் வாங்கிவிட வேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
  17. தூள்.. என படங்களோடு ஆசையைப் கிளப்புகிற செய்முறை:)! நன்றி.

    பதிலளிநீக்கு
  18. ஜோரான மோர் மிளகாய்! வெயிலும் வந்துவிட்டது....கூடவே தயிர் சாதமும் ஆஹா.....ஸ்ஸ்ஸ்ஸ்...

    தங்களது மற்ற இடுகைகளுக்கு வருகின்றோம்.....ஒரு வாராத்திற்கு மேல் ஆகிவிட்டது...வந்து....அதனால் எல்லா தளங்களும் ஒரு விசிட் அடித்துவிட்டு ஆஜர் சொல்லிவிட்டு வருகின்றோம் மீண்டும்.....

    பதிலளிநீக்கு
  19. அஹா இதை வறுத்துத்தான் சாப்பிட்டிருக்கிறோம். பச்சையா சாப்பிட்டதில்லையே..

    ட்ரை பண்ணிடலாம். ஆனால் இது இங்கே ஹைதையில் விற்கிறதா தெரில. கிடைத்தாலும் 4 மாடி ஏறிப்போய் காய வைக்க முடியாது. ஒரே தூசி. ஹ்ம்ம்

    காரைக்குடி வந்த பின்னாடி அடுத்த வருடம் பார்த்துக்கலாம். மோர்மிளகாய், மிதுக்க வத்தல், வெள்ளைப்பூண்டு ஊறுகாய் , தேன்குழல் வற்றல்,கறிவடகம், எல்லாம் . இப்போ அம்மா தந்த பழசும் தீர்ந்துடுச்சு.. :)

    பதிலளிநீக்கு
  20. நான் ரொம்பவும் லேட்,இருந்தாலும் குடை மிளகாய் ஸ்ஸ்ஸ் ..மிடியலே :)

    பதிலளிநீக்கு
  21. என்ன போங்க, நம்ம ஊரில் இந்த மிளகாய் கிடைச்சுட்டுத் தான் இருந்திருக்கு. ஆனால் ரங்க்ஸுக்கு இதான்னு தெரியலை. முந்தாநாள் எங்க நாத்தனார் வந்தப்போ அவங்க கிட்டே கேட்டுச் சந்தேகத்தைத் தெளிவு செய்து கொண்டு இன்னிக்கு வாங்கிட்டு வந்திருக்கார். இத்தனை நாளா(வருஷமா) இது இருந்திருக்கு, மனுஷன் சொல்லவே இல்லை. ஒரு கால்கிலோ வாங்கிட்டு வந்து காட்டி இருக்க மாட்டாரோ! :)))) ஒரு வழியா வாங்கிட்டேன்.

    பதிலளிநீக்கு
  22. மிளகாய் டேஸ்ட் பார்க்கத் தொடங்கியாச்சா? என்னை நினைத்துக் கொள்ளவும்!

    :))))))))))

    பதிலளிநீக்கு
  23. ஆவ்வ்வ்வ் ஆராட்சி அம்புஜம் தேடி லிங் அனுப்பினார்ர்.. அதன் வாலைப் பிடித்து இங்கு வந்தேன்.. பார்க்கவே சூப்பராக இருக்கு, இது ஸ்ரீராம் வீட்டுக் குறிப்போ. செய்யும் ஆசை வந்து விட்டது.. மிளகாய் கிடைக்கோணுமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிடைக்காது என்று ஒன்று இருக்கிறதா என்ன?!!

      நீக்கு
    2. “எது நமக்குக் கிடைக்கும் என இருக்கிறதோ.. அது கிடைக்காமல் போகாது:), எது நமக்குக் கிடைக்காது என இருக்கிறதோ அது நமக்குக் கிடைக்கவே கிடைக்காது:)--- பகவத்கீதை:)) ஹா ஹா ஹா ஞாயிறிலும் மீக்கு தத்துவமா வருதே:).

      இப்போதான் புரியுது, இந்த மிளகாய், செத்தல் மிளகாயாக சைனீஸ் மிளகாய் எனும் பெயரில் நாம் வாங்குவோம்[சைனீஸ் கடைகளில் கிடைக்குது].. உறைப்பிருக்காது என்பதால் தாளிப்புக்குப் பாவிப்பேன்ன்.. என்னிடமும் இருக்கே, ஆனா பச்சையாக கண்டதில்லை..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!