திங்கள், 16 பிப்ரவரி, 2015

'திங்க'க்கிழமை : பிஞ்சு பாகற்காய் சாலட்





கேரட் போட்டோ, வெள்ளரி மற்றும் இன்னபிற காய்கறிகள் போட்டோ சாலட் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். எத்தனை பேர் என்னைப்போல இந்த பிஞ்சு பாகல் சாலட் சாப்பிட்டு ரசித்திருப்பீர்கள் என்று தெரியவில்லை!
சின்ன வயதிலிருந்தே எனக்கு இது சாப்பிடப் பிடிக்கும்.  கிட்டத்தட்ட அப்போது சாப்பிட்டதுதான்.  நீண்ட நாட்களாகி விட்டது.




தோட்டத்தில் உலாத்திக் கொண்டிருந்தபோது பாகற்செடி( கொடி) கண்ணில் பட்டது.  சில பூக்களும் கண்ணில்படவே, மெல்ல கொடியை விலக்கித் தேடியபோது இடுக்கில் ஒளிந்து கொண்டிருந்த இரண்டு மூன்று பாகற்பிஞ்சுகள் கிடைத்தன.


'இருக்கட்டும், பெரிதானால் பறித்து பிட்லை பண்ணலாம்'  என்று என் பாஸ் தடுத்தபோதும் அவசரமாகப் பறித்து விட்டேன்!
கடைகளில் பிஞ்சாக பாகற்காயைப் பார்ப்பதே அரிதாகி விட்ட காலத்தில் கண்முன்னால் நிரூபணமாக, புதிதாக அப்போதுதான் பறிக்கப்படும் காயின் பசுமை மனதை மகிழ்விக்க, 'எலுமிச்சம் பழம் இருக்கா?"  என்று கேட்டேன் எழுந்த திடீர் இச்சையுடன்!



"அரை மூடி இருக்கு ஏன்?" என்ற பாஸைப் புறம்தள்ளி உள்ளே வந்தேன்.  அந்தப் பாகற்காயை நீரில் அலசிக் கழுவினேன்.


கத்தியை எடுத்துக் கொண்டு பாகற்பிஞ்சை சிறு சிறு துண்டுகளாய் ஸ்லைஸ் செய்தேன். ஒரு பச்சை மிளகாயையும் அரிந்து போட்டேன்.  இதுவும் எங்கள் தோட்டத்தில் விளைந்த புதிய பிஞ்சு மிளகாயே என்பது சந்தோஷமான கூடுதல் தகவல்!


லேஸாக உப்பு தூவி, கொஞ்சம் பெருங்காயத் தூளையும் தூவி, கறிவேப்பிலைக் கொத்துமல்லியைப் பொடியாக அரிந்து அதில் சேர்த்தேன்.  எலுமிச்சம் பழ மூடியை அதில் தேவையான அளவு மட்டும் பிழிந்தேன்.



குலுக்கி விட்டு, கொஞ்சநேரம் ஒரமாக மூடி வைத்து விட்டு ஆசையுடன் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்!!!


ரொம்ப ஊறும் வரையெல்லாம் பொறுமையின்றி கொஞ்ச நேரத்திலேயே எடுத்து வாயில் போட்டுக் கொண்டேன்.  வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு ஒவ்வொரு துண்டுதான் தந்தேன்.  (அதையே வாங்க மாட்டேன் என்கிறார்கள்... என்ன செய்ய!)
இலேசான கசப்புடன் புளிப்பும், உப்பும், காரமும் கலந்த சாலட்....    ஸ்ஸ்ஸ்......

 
                                                                       

நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் விரும்பிய சாலட் ஒன்றைச் சாப்பிட்ட திருப்தி.  அடேடே. எங்கே ஓடுகிறீர்கள்?  உங்கள் தோட்டத்துக்குத்தானே?

ஆல் தி பெஸ்ட்!


17 கருத்துகள்:

  1. அருமை! நல்லா ரசிச்சு எழுதி இருக்கீங்க! பாகற்காய் ஜூஸாகச் சாப்பிட்டிருக்கேன். இது போல வாழைத்தண்டிலே தான் சாலட் பண்ணி இருக்கேன். பிஞ்சுப் பாகற்காய் கிடைச்சால் பண்ணிப் பார்த்துடலாம். ::))))

    பதிலளிநீக்கு
  2. பாகற்செடி எனக்குப் பிடிக்கும்... வீட்டில் தொடக் கூட மாட்டார்கள்...

    பதிலளிநீக்கு
  3. தேவை ஏற்படும் நாளில் பாவக்காய் ஜூஸும் குடிக்க வேண்டி வரலாம் :)

    பதிலளிநீக்கு
  4. தேவை ஏற்படும் நாளில் பாவக்காய் ஜூஸும் குடிக்க வேண்டி வரலாம் :)

    பதிலளிநீக்கு
  5. அஹா..நன்றாக ரசித்து, ருசித்து சாப்பிட்டு எழுதியிருக்கீங்க. எனக்கு கூட பாகற்காய் ரொம்ப பிடிக்கும் செய்து பார்க்கிறேன்.
    படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  6. எனக்கும் ரோஷ்ணிக்கும் பாகற்காய் பிடிக்கும் என்றாலும் பச்சையாக சாலட் சாப்பிட்டதில்லை.

    நீங்க நல்லா ரசிச்சு எழுதியிருக்கீங்க. இன்று எங்கள் வீட்டில் பாகற்காய் கறி தான். சாலட்டை ஒருநாள் செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. பாவக்காய் கசப்பென்ன....நீங்க எழுதி இருக்கிறதை பார்த்தாலே உடனே செய்து சாப்பிடனும்னு தோனுது....ஆனா...அந்த கொடுப்பினை இப்போ இல்லை. இங்கே பல வகையறாக்கள் கிடைக்காது. இந்தியா வரும் போது தான் பார்க்கனும். அது முன்னே யாராவது கொண்டு வந்து தந்தால் பார்க்கலாம்.

    உங்க மேடம் தானே அந்த பாஸ்...? ஹஹஹா....!!!

    பதிலளிநீக்கு
  8. இந்த மாதிரி பிஞ்சு பாகற்காய்கள் சந்தைக்கு வருவது அரிது. இதை வைத்து பிட்லா செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  9. ஆஹா.. கீதா மேடம்.. தன்யனானேன்! இன்று எனது நாள்! நீங்கள் சுவைக்காத/செய்யாத ஒரு ஐட்டம் கூட இருக்கிறதா? நான் அதைச் சொல்லி விட்டேனா? ஆஹா...

    நன்றி டிடி... நிறைய பேருக்கு அந்தக் கசப்பு பிடிப்பதில்லை!

    நன்றி பகவான்ஜி. ஜூஸ் குடிப்பதற்கு இது தேவலாம். இதை மருந்தைப் போல உபயோகிக்காமல் சுவைக்காகவே சாப்பிடுகிறேன். அது சரி, பழிக்குப்பழியா? நீங்களும் ரெண்டுதரம் கமெண்ட் போட்டிருக்கிறீர்கள்!

    நன்றி ராம்வி

    நன்றி ஆதி வெங்கட். பாகற்காய் போட்டு சகலமும் செய்வோம் இங்கு. சின்ன வெங்காயம் சேர்த்து ரோஸ்ட், தனிப் பாகல் ரோஸ்ட், வதக்கல், பிட்லை, சாம்பார்.....

    சீக்கிரமே உங்களுக்கு பாகற்காய் கிடைக்கட்டும் உமையாள் காயத்ரி! கசப்பு ருசியும் ரசிக்கத் தெரியணுமே... சிலர் அந்தக் கசப்புப் போவதற்காக வேண்டி அதைப் புளித் தண்ணீரில் ஊற வைத்துச் சமைப்பார்களே... உங்களுக்குத் தெரியாததா?

    நன்றி ராமலக்ஷ்மி.

    நன்றி ஜி எம் பி ஸார். பிட்லைக்கு ஸ்பெஷல் பாகற்காய்தான். கத்தரிக்காய் போட்டுக் கூட செய்வார்கள் என்றாலும் முதலிடம் இதற்குத்தான்!

    பதிலளிநீக்கு
  10. நீங்கள் மிகுந்த ரசனையுடன் எழுதியிருந்த விதம் பாகற்காய் சாலட் செய்ய வேன்டும் என்ற ஆசையை விதைத்து விட்டது. பிஞ்சு பாகற்காய் கிடைக்கிறதா என்று தேடிப்பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
  11. என்ன ரசனை, என்ன ரசனை!
    எங்கள் பார்த்தசாரதி கூட கொஞ்சம் பின்னால் போய்விட்டார்!
    எங்கள் ஊரில் இந்த ரக பாகற்காய் கிடைக்காது. பெரிது பெரிதாய் கசப்பே இல்லாமல் ஒரு ரகம் தான் கிடைக்கும்.
    'திங்க' ரொம்ப ஜோர்!

    பதிலளிநீக்கு
  12. பாகற்காய் சாலட்... வாவ்...
    புதுமையா இருக்கேண்ணா...

    பதிலளிநீக்கு
  13. வீட்டில் காய்த்த பிஞ்சு பாகல் சாலட் அருமை.

    எனக்கும் பிஞ்சு பாகல் பிடிக்கும், ஆனல் சாலட் சாப்பிட்டது இல்லை.
    செய்துப் பார்த்துவிடுகிறேன்.
    மிகவும், ரசித்து ருசித்து எழுதி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  14. ரசித்து
    ருசித்து
    எழுதியிருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  15. பாகற்காய் சலாட்.... நல்லா இருக்கும் போல இருக்கு! ஆனா பிஞ்சு பாவக்காய்க்கு நான் எங்கே போக!

    பதிலளிநீக்கு
  16. வருடங்களுக்கு முன்பு, திருவனந்தபுரத்தில் இருந்த போது பிஞ்சு பாகற்காய் சாலட் சாப்பிட்டுருக்கேன்...பாகற்காய் எது செய்தாலும் பிடிக்கும். இப்போது இங்கு சென்னையில், சந்தையில் பிஞ்சு கிடைப்பதில்லை எப்போதாவது கிடைக்கும் அப்போது செய்வதுண்டு...எல்லாம் இந்த சக்கரை வியாதி நல்லதுன்னு சொல்லி ஆரம்பித்ததுதான்....

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!