திங்கள், 6 ஏப்ரல், 2015

'திங்க'க்கிழமை : எண்ணெய்ப் பழையது.


வெய்யில் காலம் வருகிறது.  வருகிறது என்ன, வந்து விட்டது.  வெய்யில் கொளுத்துகிறது, அனல் அடிக்கிறது.  வேலூர், திருச்சி மாவட்டங்களில் அதற்குள் 107 டிகிரி பதிவாகத் தொடங்கி விட்டது.  அக்னி நட்சத்திரம் எப்படி இருக்குமோ!  தேவை ஒரு (கோடை) மழை!

இப்போது பதிவு வெய்யில் பற்றியல்ல என்பதால் விஷயத்துக்கு வருகிறேன்.  'திங்கற' பதிவு ஆச்சே...

இது நிறைய பேர் வீட்டில் செய்வதுதான்.  மறந்திருக்கலாம்.  நினைவு படுத்தலாம் என்று இதைப் பதிவிடுகிறேன்!  இந்தக் காலத்தில் யார் இதை எல்லாம் செய்கிறார்கள்?!  யாராவது ஒரு வாசகராவது இந்த எண்ணெய்ப் பழையது அல்லது ஓமப் பழையது பற்றிக் கேள்விப் பட்டதில்லை என்று சொன்னால் அது இந்தப் பதிவின் வெற்றி.  (ஆமாம், பெரிய சமூகச் சீர்திருத்தப் பதிவு!!)

மறுபடியும் வெட்டிக் கதை நீளுகிறது.  விஷயத்துக்கு வருகிறேன்.
 


Image result for பழைய சாதம் images  Image result for ஓமம் images

வீட்டில் பழையது மிஞ்சும் அல்லவா?  கொஞ்சம் புளித்திருந்தால் நலம்.  இல்லாவிட்டாலும் செய்யலாம்.  உண்மையில் புளித்த பழைய சாதத்தில் பூஞ்சைக் காளான் படியுமே, அதை வீணாக்காமலும், பாதுகாப்பாகவும் சாப்பிட அந்தக் காலத்தில் அதில் சில நகாசு வேலைகள் செய்து சாப்பிட்டார்கள்.  கொஞ்சம் கடுகையும், ஓமத்தையும் நல்லெண்ணையில் தாளித்து, நீரைச் சுத்தமாகப் பிழிந்து வைத்திருக்கும் பழைய சாதத்தில் இட்டுப் பிசைவார்கள்.  இன்னும் இரண்டு கை நல்லெண்ணெய் கூட சேர்த்துப் பிசைவார்கள். உப்புப் போடவேண்டும் என்று சொல்லத் தேவையில்லை!   ஆனால் சிலபேர் உப்பே கூட சேர்க்க மாட்டார்கள். தேவையானால் கொஞ்சம் பெருங்காயமும் சேர்த்துத் தாளிக்கலாம்.  மிளகாய், கரி, கொத்.எல்லாம் போடத் தேவையில்லை. (அப்போது போட்டதில்லை.  இப்போது போட்டாலும் தப்பில்லை!  ஹிஹிஹி...)

சாதத்தைப் பிசைந்து வைத்துக் கொஞ்சம் ஊற விட்டு விட்டு அப்புறம் சாப்பிடக் கொடுப்பார்கள்.  ஓம வாசனையுடன், லேசாகப் புளித்த அந்தப் பழைய சாதம் தனிச்சுவைதான்!  தொட்டுக்கொள்ள சின்ன  வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நசுக்கிக் கொள்ளலாம்! இல்லை, பழங்குழம்பு இருந்தால் தொட்டுக் கொள்ளலாம்.  உப்பு மிளகாய் வறுத்துத் தொட்டுக் கொள்ளலாம்.
 
 

Image result for பழைய சாதம் images     Image result for பழைய சாதம் images


சில சமயம் இதில் தயிரோ, மோரோ கூடச் சேர்த்துப் பிசையலாம்.





படங்கள் :  இணையம்.

32 கருத்துகள்:

  1. வெயில் காலத்தில் இதை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாகும்னு முடிச்சு போட்டு முடித்து இருக்க வேண்டியதுதானே :)

    பதிலளிநீக்கு
  2. பழையதே ஆனாலும் புத்தம் புதிய படங்கள் கண்களுக்குக் குளிர்ச்சியாக !

    அதுவும் அந்த பச்சை இலைகளில் பச்சை மிளகாய் + உரித்த சின்ன வெங்காயம் முதலியன ஆஹா ! அருமை.

    பார்த்தாலே பசி தீரும் பழங்கால விஷயங்கள்.

    திருச்சியில் இப்போதே வெயில் வாட்டி எடுக்க ஆரம்பிச்சுடுச்சு.

    இருப்பினும் பதிவினில் கொஞ்சம் குளிர்ச்சியே, மகிழ்ச்சியே.

    பதிலளிநீக்கு
  3. சொல்லாவிட்டாலும் அதுதானே அர்த்தம் பகவான்ஜி!

    கோடைக்காலத்துக்கு ஏற்ற உணவு வைகோ ஸார்... உடனடி வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. ஆமா பச்சை வெங்காயம் பச்சை மிளகாய் எல்லாம் தருவார்களா என்ன தயிர் அல்லது மோர் ஊற்றிப் பிசைந்து தாளித்து பொரியல் அல்லது குழம்போடு கொடுப்பார்கள். :)

    எண்ணெய் இவ்ளோ வேணுமா.. ஓமம் போட்டதேயில்லை. இப்போவெல்லாம் பழசே மிஞ்சுவதில்லை. ஒரு கப் சாதம் வைச்சு 4 பேர் சாப்பிடுறோமே. :)

    பதிலளிநீக்கு
  5. இப்போ எல்லாம் சிக்கனமா சாதம் வைக்கப் பழகிட்டாங்கதான். ஆனா சில சமயம் இந்தச் சுவையை மறுபடி அனுபவிக்கவாவது பழையது வைக்க வேண்டும் தேனம்மை லக்ஷ்மணன்! வெயில் காலத்தில் பழைய சாதத்திலிருந்து வடித்த தண்ணீரைக் குடிப்பதும் ஒரு சுவை, சுகம்!

    பதிலளிநீக்கு

  6. ஆஹா புகைப்படத்தை கண்டாலே வாய் ஊறுது.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே!

    கோடைக்கேற்ற நல்ல சத்துள்ள உணவுதான். (சத்துக்கள் இப்போது பழைய மாதிரி எதிலும் இல்லை என்பது வேறு விஷயம்.) இரவில் சாதமே இப்போதெல்லாம் யாருமே தவிர்க்கிறார்கள்.ஆனாலும் என் மாதிரி பழைய சாத பிரியர்களுக்கு தேவையான பதிவு. படங்களுடன் தங்கள் பதிவை பார்த்ததும், கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியாக இருந்தது. இது வரை ஓமம் சேர்த்து சாப்பிட்டதில்லை. ஆனால் பழைய சாதம் தயிர் கலந்து முதல் நாள் சுண்ட வைத்த குழம்போ, அல்லது ஊறுகாயோ தொட்டுக்கொண்டு சாப்பிட வாய்க்கு ருசி. ஓமம் சேர்ப்பது ஜீரணத்திற்கு வழி வகுக்கவா? பகிர்ந்தமைக்கு நன்றி.


    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. ஆஆஹா அருமை ..செய்ய ஆசைதான் ஆனா எங்க ஊரில் சாதம் புளிக்க மாட்டேங்குதே !

    பதிலளிநீக்கு
  9. ஆஹா.... நல்ல சுவையாக இருக்கும் போல இருக்கே!

    ஆனால் சாதம் மீந்து போகும் அளவிற்கு வைப்பதே இல்லையே..... இதற்காகவாவது மீதம் வைத்துப் பார்க்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  10. உண்டு மகிழ்ந்திருக்கிறேன் நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  11. ஓமப் பழசு.. கேள்விப்பட்டதில்லை.

    /பழைய சாதத்திலிருந்து வடித்த தண்ணீரை/ நீத்தண்ணி என்போம். தேவாமிர்தம் என்றால் மிகையல்ல. சின்ன வெங்காயத்துடன் அந்த சாதத்தையும் சாப்பிடுவோம், அந்நாளில். செய்யும் ஆவலைக் கிளப்பி விட்டது பதிவு. நன்றி :).

    பதிலளிநீக்கு
  12. ஆஹா! அமிர்தம் தான்...:)

    சின்ன வெங்காயம் வைத்துக் கொண்டு இப்போவும் மோர் சாதம் சாப்பிடுவேன்... ஆனால் நிஜமாகவே இந்த எண்ணெயும், ஓமம் சேர்ப்பதும் எனக்கு புதிய விஷயம்...:)

    பதிலளிநீக்கு

  13. பழையது எப்பவும் உண்டு என் பிறந்தகத்தில். ஒரு பெரிய பாத்திரத்தில் மிஞ்சின சதம் போட்டு தண்ணீர் கொட்டி வைத்திருப்பார் அம்மா. காலை ஏழு மணி அளவில் முதலில் அந்த நீரை ஆளுக்கொரு டம்ப்ளரில் நல்லெண்ணெய் இரண்டு SPOON விட்டுக் குடிக்கச் சொல்லுவார். இன்னும் ஒரு மணி நேரம் கழித்து ஆ டிக் களைத்துவந்தால் பழைய சாதமும் உப்பும் கலந்து கொஞ்சம் தயிர் விட்டு விட்டு மாவடுவோடு ஆளுக்கு ஏற்ற அளவில் இலையில் இடுவார்கள் .மாவடு இல்லாத காலம் நார்த்தங்காய் உப்பு போட்டது இருக்கும். அம்மா கை பட்ட அமுது.

    பதிலளிநீக்கு
  14. பழையதே சாப்பிட நன்றாகத்தான் இருக்கும். இப்படி? அமிர்தம்தான்...

    பதிலளிநீக்கு
  15. பழையது என்றாலே இப்போ உள்ள பசங்களுக்கு என்ன தெரியும்? சாதம் சாப்பிடுவதே குறைவு. எப்போப் பார்த்தாலும் புதுப் புது வகையான சாப்பாடு. காலம்தான் எத்தனை விரைவாக மாறுகிறது.

    பதிலளிநீக்கு
  16. சிறியய்வயதில் சாப்பிட்ட்துண்டு த சேம்......ஆனால் இப்போதெல்லாம் இல்லை...சாதம் என்றாலே காத தூரம் ஓடும் காலம் ஆயிற்றே!..


    கீதா

    பதிலளிநீக்கு
  17. கோடைக்கால அமிர்தம் இல்லையா இது? இப்போதெல்லாம் சர்க்கரை அளவு அதிகமாகுமே என்ற பயத்தில் பழைய சாதத்துக்கு ஆசைப்படுவதேயில்லை! இருந்தாலும் இத்தனை சத்தான உணவு வேறெதில் கிடைக்கிறது?

    பதிலளிநீக்கு
  18. நான் இப்படி ஒரு பழையதைக் கேள்விப்பட்டதில்லை.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம்
    ஐயா
    நிச்சயம் செய்து பார்க்கிறோம் ஐயா. பகிர்வுக்கு நன்றி த.ம1


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்--

    பதிலளிநீக்கு

  20. பழையது தெரியும். ஆனால் பழையதை நல்லெண்ணை கலந்து ஓமம் சேர்த்து ,,,கேள்விப்பட்டதே இல்லை.

    பதிலளிநீக்கு
  21. நவீன அவசரயுக வாழ்கையில் நாம் மறந்து விட்ட பல நல்ல விஷயங்களில் இந்த பழைய சாதமும் ஒன்றாகிவிட்டது.
    கொடைக்கு இதமான குளிர்ச்சி தரும் பதிவும் படங்களும் அருமை

    பதிலளிநீக்கு
  22. பழைய சாதம் நீர்ப்பழையது பற்றி அறிந்திருந்தாலும், ஓமம் போட்டுச் சாப்பிடும் இந்த முறை பற்றி நிறைய பேர் தெரியவில்லை என்று சொல்லி இருப்பதால் இந்தப் பதிவு வெற்றி பெற்று விட்டது! வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

    ஆனால்... இன்னும் கீதா மேடத்தைக் காணோமே...

    பதிலளிநீக்கு
  23. பழையது பிசையும்போதே நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைவது உண்டு. நாங்களும் பழையதுக்கு மட்டுமில்லாமல் பொதுவாகவே பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் தொட்டுக் கொண்டு மோர் சாதம் என்ன? குழம்பு சாதமே சாப்பிட்டது உண்டு! :) ஓமம் போட்டுப் பள்ளிக்கே எடுத்துப் போயிருக்கேன். மாவடுவோடு தான்! :))))

    பதிலளிநீக்கு
  24. பழையது குறித்த என் பழைய நினைவுகள் இங்கே!http://sivamgss.blogspot.in/2008/09/blog-post_4319.html

    பதிலளிநீக்கு
  25. //ஆனால்... இன்னும் கீதா மேடத்தைக் காணோமே...//

    "திங்க"க்கிழமை நான் பார்த்தப்போ வரை பதிவு ஏதும் இல்லை. அப்புறமாப் போட்டிருக்கீங்க. நேத்தும் இன்னியும் ஊரிலே இல்லை. இப்போத் தான் வந்தோம். :)

    பதிலளிநீக்கு
  26. நீங்கதான் கீதா மேடம் தெரிந்த மாதிரி சொல்லி இருக்கீங்க!

    பதிலளிநீக்கு
  27. ஹலோ நண்பரே! நானும் சாப்பிட்டிருக்கேன்றதத்தான் த சேம் அப்படினு எழுதியிருந்தேன்....நாங்க ரெண்டு கீதாக்களும் சாப்பிட்டுருக்கோம்.....ஸோ வெற்றி வெற்றி.....யாருக்கு???!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  28. இந்த ஊர் பச்சரிசிக்கு பழையது அவ்வளவா சரிப்படாது. ஆனாலும் ஆசைக்காக அவ்வப்போது தண்ணீர் ஊற்றி வைத்து சாப்பிடுவதுண்டு. கொதி கூடிப்போனால் இட்லிப்புழுங்கலரிசி சாதம் வடித்து வடிகஞ்சி ஊற்றி வைத்தும் பழையது சாப்பிட்டதுண்டு. ஆனால் ஓமம் மிகப்புதிய விஷயம்.

    பதிவு சக்ஸஸ் :-)

    இன்னொரு டிப்பு: நெல்லை ஸ்டைலில் சமைக்கப்பட்ட பருப்புச்சோறு எனப்படும் உளுந்தஞ்சோற்றில் தண்ணீர் விட்டு வைத்து அந்தப்பழையதை உள்ளி, பூண்டு தீயலுடன் சாப்பிட வேண்டும். அள்ளிட்டுப்போகும் :-)

    பதிலளிநீக்கு
  29. .அச்சச்சோ... அதை விட்டுட்டேனா... ஆனாப் பாருங்க! "கீதா மேடம் நீங்கதான் ஏற்கெனவே சாப்பிட்ட மாதிரி சொல்லி இருக்கீங்க" என்ற வரி உங்களுக்கும் பொருந்தும்தானே? நீங்களும் கீதாதானே? எப்படி, சமாளிச்சுட்டேனா?

    நன்றி அமைதிச்சாரல். பதிவு பயங்கர வெற்றி! ஹா...ஹா..ஹா..

    பதிலளிநீக்கு
  30. கீதா மேடம் நீங்கள் கொடுத்துள்ள சுட்டியைக் க்ளிக் செய்தால் "அந்தப் பதிவு இங்கு காணோமே.... ஸாரிப்பா" என்கிறது!

    பதிலளிநீக்கு
  31. இங்கே இருந்தே காப்பி, பேஸ்ட் பண்ணி பேஸ்ட் அன்ட் கோ கொடுத்தேன். நல்லாவே வருதே! என்னனு புரியலை. மறுபடி கொடுக்கிறேன், பாருங்க. வரலைனா தனி மெயிலில் அனுப்பறேன்.
    http://sivamgss.blogspot.in/2008/09/blog-post_4319.html

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!