புத்தகங்களுக்கு எப்போது முன்னுரை எழுதும் வழக்கம் ஏற்பட்டது?
முதலிலிருந்தே.....!
முதல் முன்னுரை!
தமிழ் நவீனத்தின் முதல் முன்னுரை!
தேடினால்,
தமிழின் முதல் நவீனமாம் "பிரதாப முதலியார் சரித்திரம்" புத்தகத்துக்கே
முன்னுரை இருக்கிறது. இல்லாமல் இருக்குமா என்கிறீர்களா? அதுசரி!
முன்னுரையில் அப்போதைய பாணி எப்படி இருந்தது என்று தெரிய வேண்டாமா?
தமிழின்
முதல் நாவல் வகை நூல். 1857 இல் எழுதப்பட்டு, 1879 இல் வெளியானதாம். ஏன்
அவ்வளவு இடைவெளியோ! அதுவரை செய்யுள் நடையில் எழுதப்பட்டுக் கொண்டிருந்த
புனைவிலக்கியத்துக்கு முதல் முறையாக வசன நடையில் ஒரு படைப்பு.
அதன் ஆசிரியர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய அந்த முன்னுரையை இந்த வாரம் பார்ப்போம்.
கதை
இருக்கும் நடையில் முன்னுரை இல்லை! இந்தக் காலத் தமிழை ஒட்டியே
இருக்கிறது. தமிழ் வாசகர்களின் ரசனை, சுவை மேல் ஆசிரியருக்கு இருக்கும்
நம்பிக்கையை, நாடி பிடித்துப் பார்த்திருப்பதை தனது வரிகளில்
வெளிப்படுத்துகிறார். அல்லது அதைப் படித்த வாசகர்கள் (அப்போதுதான்
தொடங்கும் வழக்கங்கள் என்பதால்) உண்மை, உண்மை என்று படித்திருக்கக் கூடும்.
"இந்திய வாசகர்களுக்கு ராஜா ராணிகள் பற்றிப் படிப்பதில் மிகுந்த ஆசையுண்டு.
கண்ணைக்கட்டி காட்டில் விட்டால் அலைந்து திரிவதில் மிகுந்த உற்சாகம்
உண்டு. பொன்னால் ஆக்கப்பட்ட அரச மாளிகையைப் பார்த்துக் கொண்டே
இருப்பதிலும், பூங்கா வனத்தருகில் உள்ள நீர் வீழ்ச்சியைப் பார்த்துக்
கொண்டு படுத்திருப்பதிலும் அவர்களுக்கு மிகுந்த பிரியம் உண்டு."
"பல்வேறு
காட்சிகளில் பல உப பாத்திரங்கள் பல்வேறு வகைகளில் தங்கள் பாகங்களில்
சிறப்புற நடித்திருக்கின்றனர். " என்று அவர் சொல்வது புதுமையாக இருக்கிறது,
நாடகம் போடுவது போல ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.
கதையை
ஒரு போதனை முறையில் எழுதியிருப்பதைச் சொல்கிறார். சமயம் சார்ந்து
எழுதியிருப்பதையும் சொல்லும் அதே நேரம் பிற சமயத்தினர் மனதை புண்படுத்தும்
வகையில் எழுதவில்லை என்றும் சொல்கிறார். தனது படைப்பில் என்னென்ன
இருக்கிறது என்று ஒரு சிறு முன்னோட்டம் மாதிரித் தருகிறார்.
கதையைப் பொறுத்தவரை சமூக நாவலாகத் தொடங்கும் கதை, பின்னர் ராஜா ராணி கதைக்குள்ளும் சென்று வருகிறது.
46 அத்தியாயங்கள் கொண்ட இந்தக் கதையை இங்கு படிக்கலாம்.
இன்னொரு விஷயம். பிரதாப முதலியார் சரித்திரம் தமிழின் முதல் நாவல் இல்லை என்று சிட்டி சிவபாதசுந்தரம் சொல்கிறாராம்.
வித்துவான் சேஷையங்கார் என்பவர் எழுதிய "ஆதியூர் அவதானி சரிதம்" என்கிற நூல்தான் முதல் நாவலாம். அதை பற்றி இங்கு படிக்கலாம்! இந்தப் புத்தகம்
1875 இல் இந்தக் கதை வெளியானதால்.
ஆனாலும் நம்முடைய ( !!! ) பிரதாப
முதலியார் சரித்திரம் 1857 முதலே எழுதப் பட்டு வந்தது அன்றோ? அப்போது
[நம்மைப் பொறுத்தவரை] அதுதான் முதல்!!
இனி முன்னுரை : (முழுதாகப் படிப்பீர்கள் அல்லவா!)
==============================================================
பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் ச. வேதநாயகம் பிள்ளை
ஆசிரியர் முன்னுரை :
தமிழில்
உரைநடை நூல்கள் இல்லையென்பது ஒப்புக்கொள்ளப் படுகிறது. இந்தக்
குறைபாட்டைப் பற்றி எல்லோரும் வருந்துகின்றனர். இக்குறையை நீக்கும்
நோக்கத்துடன் தான் இந்தக் கற்பனை நூலை எழுத முன்வந்தேன். மேலும் நீதி
நூல், பெண்மதி மாலை, சமரசக் கீர்த்தனம் முதலிய ஏற்கெனவே வெளிவந்துள்ளன.
எனது நூல்களில் குறிப்பிடப் பட்டிருக்கும் அறநெறிக கொள்கைகளுக்கு
உதாரணங்களைக் காட்டவும் இந்த நவீனத்தை எழுதினேன்.
இந்தக்
கதைக்கு நிலைக்களம் தென் இந்தியா. கதா நாயகன் இப் பக்கத்தகவர்; நன்கு
கல்வி பயின்றவர்; மகா புத்திசாலி; நகைச்சுவையுடனும் அருகி சுடர் வீசும்
வகையிலும் பேச வல்லவர். அவர் தனது பிறப்பு, வளர்ப்பு, பெற்றோர், கல்வி
பயின்றது, திருமணம் செய்து கொண்டது போன்ற தனது வாழ்க்கையில் முக்கியமான
சம்பவங்களை விவரிக்கிறார். கதையில் இடையிடையே ஹாஸ்ய சம்பவங்களும் தமாஷான
பேச்சுக்களும் பின்னப்பட்டிருக்கின்றன. அறத்துறை சம்பந்த கருத்துக்களும்
இடம் பெற்றிருக்கின்றன.
இந்த நவீனத்தில்
முக்கியமான பங்கு கொள்பவர்கள் கதா நாயகனின் அன்னை 'சுந்தர அண்ணி'யும்
அவருடைய மனைவி 'ஞானாம்பாளும்' . இவ்விருவரும் உயர்குடியில் செல்வந்தர்
குடும்பத்தில் பிறந்தவர்கள். எல்லாவிதமான நற்பண்புகளும் உடையவர்கள்; பெண்
குலத்திற்கு அணிகலனான எல்லா லட்சணங்களும் பொருந்தியவர்கள்.
வாழ்க்கையில்
பல நெருக்கடியான சந்தர்ப்பங்களில் அவர்களுடைய உயர் குணங்கள்
பிரகாசிக்கின்றன. தங்களுக்கு நேரக்கூடிய கஷ்டங்களையும் பொருட்படுத்தாமல்,
அவர்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நீதியையும், மனித தர்மத்தையும் காக்க
முன்வருகின்றனர். தன்னால் கட்டுப்படுத்த முடியாத பல சந்தர்ப்பங்களில்,
எதிர்பாராத சேர்க்கையினால் 'ஞானாம்பாள்' ஆண்வேடம் பூண்டு மகோன்னத சக்தி
பெற்று, புத்தி சாதுர்யத்துடனும் திறமையுடனும் ஆட்சி புரிகிறாள். இந்திய
வாசகர்களுக்கு ராஜா ராணிகள் பற்றிப் படிப்பதில் மிகுந்த ஆசையுண்டு.
கண்ணைக்கட்டி காட்டில் விட்டால் அலைந்து திரிவதில் மிகுந்த உற்சாகம் உண்டு.
பொன்னால் ஆக்கப்பட்ட அரச மாளிகையைப் பார்த்துக் கொண்டே இருப்பதிலும்,
பூங்கா வனத்தருகில் உள்ள நீர் வீழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு
படுத்திருப்பதிலும் அவர்களுக்கு மிகுந்த பிரியம் உண்டு. இம்மாதிரி
மனப்பாங்குள்ள வாசகர்களின் சுவையைத் திருப்தி செய்வதற்காக ஞானாம்பாளை
மனிதர் அடையக் கூடிய மகோன்னத பதவிக்கு உயர்த்தி யிருக்கிறேன்.
கதாநாயகனின்
தந்தையும், மாமனாரும் உயர் குடும்பத்தில் பிறந்தவர்கள்; ஆனால் கல்விப்
பேறு பெறாத நாட்டு மக்கள்; வக்கிர போக்குடையவர்கள்; விசித்திர குணம்
படைத்தவர்கள். ஆனாலும் சுந்தர அண்ணியும், ஞானாம்பாளும் கையாளும் பண்பு
மிக்க தந்திரங்களால் அவர்களிடம் மயங்கி கிடந்த நற்பண்புகள் பிரகாசித்து,
அவர்களும் புகழத்தக்க செயல் புரிகின்றனர். பல்வேறு காட்சிகளில் பல உப
பாத்திரங்கள் பல்வேறு வகைகளில் தங்கள் பாகங்களில் சிறப்புற
நடித்திருக்கின்றனர். அவர்களுடைய செயல்களில் பெற்றோரிடம் பாசம், சகோதர
வாஞ்சை, கணவன் மனைவி அன்பு, கற்பு, எல்லோருக்கும் நலம் புரிதல், நாணயம்,
நன்றி முதலிய நற்பண்புகளை உதாரணங்களைக் காண்கிறோம். சமயம் போதிப்பதும்,
அனுபவம் உணர்த்துவதுமான நற்குணமின்றி இந்த வாழ்க்கையில் கூட இன்ப வாழ்வு
வாழ முடியாது என்னும் மூதுரைக்கும் கதையில் உதாரணங்கள் காணப்படுகின்றன.
தேசியப்
பண்பு, இல்வாழ்க்கை, தென்னிந்திய மக்களின் பழக்க வழக்கங்கள் சித்தரிக்கப்
பட்டிருக்கின்றன. இடையிடையே நகைச்சுவை மிக்க சம்பவங்களும், சுவை மிக்க
அஃதைகளும் இடம் பெற்றிருக்கின்றன. உலகத்தோரிடம் பொதுவாகக் காணப்படும்
பலஹீனங்களும், குறைபாடுகளும் ஆங்காங்கே கேலி செய்யப்பட்டிருக்கின்றன,. நான்
கடவுள் பக்தி புகட்டியிருக்கிறேன். குடும்பத்திற்கும், சமூகத்திற்கும்
யாவரும் செய்ய வேண்டிய கடமைகளையும் வற்புறுத்தியிருக்கிறேன். நல்வழியின்
இயல்பான சிறப்பையும், தீய வழியில் உள்ள கொடூரங்களையும் நான் விவரிக்க
முயற்சித்திருக்கும் முறையில் வாசகர்கள் நல்லதை விரும்பித் தீயதை வெறுக்க
முன்வருவார்கள். பல்வேறு பாத்திரங்களையும், சம்பவங்களையும் விவரிப்பதில்
நான் இயற்கையை ஒட்டியே எழுதியிருக்கிறேன். அற்புதங்களையோ உணர்ச்சி
வசப்பட்டோ எழுத்துவதைத் தவிர்த்திருக்கிறேன். எந்த மதத்தினர் சமய
பற்றையும் புண்படுத்தாமல் ஜாக்கிரதையாகவே எழுதியிருக்கிறேன்.
சில
நாவலாசிரியர்கள் மனித இயல்பை உள்ளது உள்ளபடியே வருணித்திருக்கிறார்கள்.
இவர்கள் மனிதர்களில் கடையவர்களை வருணிப்பதால் அனுபவமற்ற இளைஞர்கள் இந்த
உதாரணங்களைப் பின்பற்றுகின்றனர். இந்தக் கதை எழுதுவதில் இந்த முறையை நான்
பின்பற்றவில்லை. முக்கியமான பாத்திரங்களை நான் பூரண சற்குணம்
படைத்தவர்களாகவே சித்தரித்திருக்கிறேன். பிரபல அற நோக்குள்ள ஆங்கில
ஆசிரியர் டாக்டர் ஜான்சனையே இவ்விஷயத்தில் நான் பின்பற்றியுள்ளேன். அவர்
'ராம்ப்ளர்' என்னும் நூலின் நான்காவது பகுதியில் கூறுகிறார்.
"வரலாற்று
அடிப்படைக்கு கதைகள் தவிரப் பிறவற்றில் நற்குணத்துக்குச் சிறப்பான
உதாரணமாக விளங்கும் பகுதிரங்களை ஏன் சிருஷ்டிக்கலாகாது என்பது எனக்கு
விளங்கவில்லை. நற்குணமட்டுமென்றால் தெய்வீகத் தன்மை வாய்ந்ததென்றோ,
நடக்கக் கூடாத சம்பவமென்றோ அர்த்தமில்லை. ஏனெனில் நாம் உணரமுடியாததைப்
பின்பற்ற மாட்டோம். ஆனால் மனிதர்கள் முயற்சித்து அடையக்கூடிய உயர்தர -
தூய்மை மிக்க - நற்பண்பு புரட்சிகரமான சந்தர்ப்பங்களில் சில விபத்துகளைச்
சமாளிப்பதிலோ அல்லது அனுபவிப்பதிலோ நாம் காட்டக் கூடிய சிறப்புகளை நாம்
அடையலாம். அல்லது நாமே செய்து காட்டலாம் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
தீமையையும் காட்ட வேண்டியதுதான்; ஆனால் காட்டப்படும் தீமை அருவருக்கத்
தக்கதாக இருக்க வேண்டும். தீமை தோன்றும் இடங்களிலெல்லாம் அதைக் கையாளும்
முறையிலிருந்து அதனிடம் வெறுப்புக் கொள்ள வேண்டும். அதன் அற்புதத்தனமான
தந்திரங்கள் மூலம் அதனிடம் நமக்கு நிந்தையான எண்ணம் உதயமாக வேண்டும்.
ஏனெனில் தீமையை ஆதரிப்பது போல் காட்டினால் அதை யாரும் கண்டு அஞ்ச
மாட்டார்கள்."
தமிழில் இம்மாதிரி உரைநடை
நவீனம் பொதுமக்களுக்கு இதுவரை அளிக்கப் படவில்லை. ஆகையால் இந்த நூல்
வாசகர்களுக்கு ரசமாகவும், போதனை நிறைந்ததாகவும் இருக்கலாம் எனப் பெருமை
கொள்கிறேன். இம்மாதிரிப் புதிய முயற்சிகளில் ஏதாவது குற்றங்குறைகள்
இருப்பின் பொறுத்தருளுமாறு பொது மக்களை வேண்டிக் கொள்கிறேன்.
ச. வேதநாயகம் பிள்ளை.
=================================================================