வியாழன், 22 டிசம்பர், 2016

பிறமொழிக்கதைகள் :: ராவி நதியில் - உருது - குல்ஸார்



     இந்த வருட தினமணி தீபாவளி மலர் ஒரு விஷயத்தில் மிகவும் ரசிக்க வைத்தது.  தீபாவளிக் கதைகள் என்ற தலைப்பில் சில பொக்கிஷக் கதைகளை பிரசுரித்திருக்கிறார்கள்.  துமிலன் (நவீன தீபாவளி), 'சித்ராலயா' கோபு (தீபாவளி எப்படி), பெ நா அப்புஸ்வாமி (தீபாவளி பட்சணம்).
 
 


     அடுத்த பொக்கிஷம் பிறமொழிக் கதைகள்.  இதில் தகழி சிவசங்கரன்பிள்ளை - மலையாளம் (வெள்ளம்), சுனில் கங்கோபாத்தியாய - வங்காளம் (கதாநாயகி), திருபென் படேல் - குஜராத்தி (மகாத்மாவின் மனிதர்கள்), குல்ஸார் - உருது (ராவி நதியில்).   சிவசங்கரி அந்தந்த எழுத்தாளர்களை நேர்கண்டு அந்த உரையாடல்களுடன் தொகுத்திருக்கும் புத்தகம் "இலக்கியத்தின் மூலம் இந்திய ஒருங்கிணைப்பு"  (வானதி பதிப்பகம்).
 
 
 


     இது தவிர அசோகமித்திரன், சா. கந்தசாமி, பொன்னீலன், ஸிந்துஜா, இரா. சோமசுந்தரம், பா. முத்துக்குமரன், எஸ். சங்கரநாராயணன்,  ஜேஎஸ் ராகவன் ஆகியோரின் சிறுகதைகளும் உண்டு.
 
 
 


     தகழி எழுதியிருக்கும் 'வெள்ளம்' கதை கண்களை நிறைத்தது.  என்போன்ற நாலுகால் ஜீவன்களை நேசிக்கும் எல்லோருக்கும் அந்தக் கதை பிடிக்கும்.

     இதில் குல்ஸார் எழுதி இருக்கும் கதை படித்ததும் மனம் ஒரு கணம் ஆடி நின்றது.  குல்ஸாரை நேர்கண்டு எழுதி இருக்கும் சிவசங்கரி அவரிடம் இதை பற்றிக் குறிப்பிடும்போது "அக்கதையில் நீங்கள் எழுதி இருந்த கடைசிப் பகுதியைப் படிக்கும்போது உடம்பு உதறிப் போட்டது!" என்கிறார்.
 
 
 


     அதற்கு அவர் பதில் "என் சிறுகதைகள் ஒரு வகையில் கவிதைகள் போன்றவைதாம். மேலெழுந்தவாரியாகப் படித்தால் ஒரு சிறுகதை போலத் தோன்றும்.  ஆனால் அதற்கு கீழே ஒரு அடுக்கு உள்ளது.  அதற்குள் புகுந்து பார்க்கும்பொழுது முழுக்கதையையும் வேறொரு கோணத்திலிருந்து பார்ப்பது சாத்தியமாகும்.  பாகிஸ்தானில் பிறந்து பிரிவினையின்போது இந்தியாவுக்கு வந்த நான்தான் அந்த இரட்டைக் குழந்தைகள்.  இது ஒரு கண்ணோட்டம்.  இரட்டைக் குழந்தைகள் இரண்டு நாடுகளைக் குறிக்கின்றன என்பது இன்னொரு கோணம்.  வெறும் ஒரு நிகழ்வை மட்டும் அந்தக் கதை சொல்ல வரவில்லை.  அதையும் தாண்டி பல்வேறு நடப்புகளை உள்ளடக்கியது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இப்படி ஒவ்வொரு கதையின் கீழும் பல அடுக்குகள் உள்ளதால்தான் அவை கவிதைகள் போன்றவை என்றேன்".
 
 
 


     குல்ஸார் ஹிந்தியில் எழுதி இருக்கும் பல திரைப் பாடல்கள் எவ்வளவு உயர்ந்த தரம் என்பதை என் அரைகுறை ஹிந்தி அறிவிலேயே புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது.  படித்து முடித்ததும்  இந்தக் கதை என்னையும் உலுக்கிப் போட்டது.  இதே போன்றதொரு கதையை எழுத்தாளர் சுப்ரஜா ஸ்ரீதரன் எழுதி இருக்கிறார்.  அம்மா பற்றிய அந்தக் கதை அப்போது  என்னை திடுக்கிட வைத்தது.
 
 
 


     குல்ஸாரின் அந்தக் கதையை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.



ராவி நதியில் (உருது)
 
குல்ஸார்




          தர்ஷன் சிங்குக்கு இன்னும் பைத்தியம் பிடிக்காமல் இருப்பது எப்படி என்று எனக்குப் புரியவில்லை.  அவன் அப்பா இறந்து விட்டார்.  அம்மா குருத்துவாராவின் கலவரத்தில் காணாமல் போய்விட்டாள்.  ஷாஹ்னி இரட்டைப் பிள்ளைக் குழந்தைகளைப் பிரசவித்துள்ளாள்.  அவனுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.  அவன் விஷயத்தில் விதி நன்றாக விளையாடி விட்டது.  ஒரு கையால் கொடுத்து விட்டு, மற்றொன்றால் பறித்துக் கொண்டுவிட்டது.

          சுதந்திரம் கிடைக்கப்போகிறது என்று தெரிந்தது.  ஆனால் அது லாயல்பூரை எப்போது அடையும் என்பது தெரியவில்லை.  குருத்துவாராவில் இந்துக்கள், சீக்கியர் - இரு மதத்தவருமே ரகசியமாகக் குழுமத் துவங்கிவிட்டார்கள்.  ஷாஹ்னி இரவும் பகலும் பிரசவ வலியால் முனகினாள்.  அதுதான் அவளுக்கு முதல் பிரசவம். 

          கலவரத்தைப் பாரிய புதிய தகவல்களை அவ்வப்போது தர்ஷன் சிங் சொல்வான்.

          அவனைச் சமாதானப்படுத்தும் விதமாக, "ஒண்ணும் ஆகாதுப்பா.... பயப்படாதே.  ஒரு இந்து, இல்லே சீக்கியரோட வீடாவது இதுவரைக்கும் தாக்கப்பட்டிருக்கா?" என்பார் அப்பா.

          ஆனா, குருத்துவாரவைத்த தாக்கியிருக்காங்களே, அப்பா?  ரெண்டு தரம் அதற்கு நெருப்பு கூட வச்சிருக்காங்க".

         "அப்பாவும் அங்கதான் போகணும்னு சொல்றீங்க!"

          தர்ஷன்சிங் உடனே மௌனமாகி விடுவான்.  மக்கள் என்னவோ தங்கள் வீடுகளை விட்டுவிட்டு குருத்துவாராவில்தான் அடைக்கலம் புகுந்தார்கள்.

          "எல்லாரும் ஒண்ணா சேர்ந்திருந்தா பாதுகாப்பாயிருக்கு, அப்பா.  நம்ம தெருவுல ஒரு இந்துவோ, சீக்கியரோ பாக்கி இல்லே...  நாம மட்டும் தான் தனியா இருக்கோம்"

          பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்னால், ஒரு நாள் இரவு முற்றத்தில் அப்பா விழும் சத்தம் கேட்டது.  திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார்கள்.  குருத்துவாரா இருந்த திசையிலிருந்து. 'ஜோ போலே ஸோ நிஹால்' என்ற மந்திர ஒலி கேட்டது.  மந்திர சத்தத்தில் விழித்துக்கொண்ட அப்பா, மொட்டைமாடிக்குப் போய்ப் பார்த்திருக்கிறார்.  திரும்ப இறங்கி வரும்போது, படிகளில் தடுக்கி, முற்றத்திலிருந்த கோடாரியை தலை மோதிக் கொள்ள, விழுந்து விட்டார்.

          அப்பாவின் இறுதிச்சடங்குகளை எப்படியோ செய்து முடித்தார்கள்.  தொடர்ந்து, தங்களது விலையுயர்ந்த உடைமைகளை ஒரு தலைகாணி உரையில் அடைத்துக்கொண்டு, குருத்துவாராவில் தஞ்சம் புகுந்தார்கள்.  அங்கு ஏற்கெனவே பயத்துடன் சிலர் இருப்பதை பார்த்தபோது, இவர்கள் பாதுகாப்பாக உணர்ந்தார்கள்.  அப்புறம் அவன் பயப்படவில்லை.

          "இங்கு நாம் மட்டும் தனியாய்ல்லே, அதோட கடவுளும் நம்ப கூடவே இருக்கார்" என்றான் தர்ஷன்சிங்.

          இளைஞர்கள் குழு ஒன்று இரவு பகலாக வேலை செய்தது.  மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து மாவு, பருப்பு, நேயையெல்லாம் தங்களுடனே கொண்டுவந்திருந்தார்கள்.  அங்கிருந்த சமயலறையில் இரவும் பகலும் அடுப்பு எரிந்தது.  ஆனால் அங்கேயே எவ்வளவு நாள் வசிப்பது?  எல்லோர் மனதையும் இதே கேவிதான் வாட்டியெடுத்தது.  அரசாங்கம் சீக்கிரமே உதவி செய்யும் என்று நம்பினார்கள்.

          "எந்த அரசாங்கம்?" என்று யாரோ கேட்டார்கள்.  "இங்கிலீஷ்காரங்க நம்ம நாட்டைவிட்டுப் போயிட்டாங்க".

          "பாகிஸ்தான்னு தனி நாடு உருவாயிடுச்சு.  ஆனா அரசாங்கம் இன்னும் அமையலையே.:"

          "எங்க பார்த்தாலும் ராணுவக்காரங்கதான் உதவி பண்றங்களாம்., நாடு விட்டு நாடு போறவங்க எல்லைக்குப் போய்ச்சேர."

          "நாடு விட்டு நாடு போறவங்களா?  யாரது?"

          "அகதிங்க..."

          "இப்படியொரு வார்த்தைய இதுவரைக்கும் நான் கேட்டதேயில்லே."

            சில குடும்பங்களால் இந்த அழுத்தத்தைத் தாங்க முடியவில்லை.

            "நாங்க ஸ்டேஷனுக்குப் போகப் போறோம்.  ரயிலெல்லாம் மறுபடி ஓடுதாம்.  இங்கயே எத்தனை நாள்தான் இருக்கறது?"

          "நாமதான் தைரியமா இருக்கணும்.  கடவுளா நம்மை தோள்ல சுமப்பார்?"

          "நானக் நாம் ஜஹாஸ் ஹை,  ஜோ சத்தே ஸோ உத்தரே பார்!"  (குரு நானக்கிற்கு ஆயிரம் பெயர்கள் உண்டு.  அவரை நம்புபவர் அக்கரையை அடைவார்) என்று அவர்களுள் ஒருவர் உரக்கக் குரல் கொடுத்தார்.

          ஒருசிலர் அந்த இடத்தக்கைவிட்டு அகன்றதால், அங்கே ஒரு சூனியம் உருவாயிற்று.  வேறு சிலர் அங்கே நுழைந்து வெளியுலகத்திலிருந்து செய்தி கொண்டு வரும்போதெல்லாம் அந்த சூனியம் நிரம்பியது.

          "ஸ்டேஷன்ல பெரிய ஜனக்கூட்டம் முகாம் போட்டிருக்கு."

          "சில பேர் பசியில சாகரங்க.  சில பேர் ஒரேயடியாக திங்கறாங்க.  தொத்து நோய் வேற பரவுதாம்."

          "அஞ்சு நாளைக்கு முன்னால இந்த வழியா ஒரு ரயில் போச்சு...   எள்ளு விழ இடமில்லே...  அதுல கூரை மேல்கூட மனுஷங்க உட்கார்ந்திருந்தாங்க."

          அன்று சங்கராந்தி.  காலையிலிருந்து இரவு நெடுநேரம் வரை குருத்துவாராவில் பிரார்த்தனைகள் நடந்தன.  அந்த சுபதினத்தில்தான் அவள் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்தாள்.  ஒன்று ரொம்ப பலவீனமாக இருந்தது.  அந்தக் குழந்தை உயிர் பிழைப்பதே கடினம் என்று தோன்றியது.  ஆனால் அதைப் பிழைக்க வைக்க ஷாஹ்னி போராடினாள்.

          அன்றிரவு யாரோ அறிவித்தார்கள்.  "அகதிகளுக்காக ஸ்பெஷல் ரயில் வந்திருக்கலாம்.  போகலாம், வாங்க."

          ஒரு பெரிய கூட்டம் குருத்துவாராவிலிருந்து கிளம்பியது.  தர்ஷன் சிங்கும் அதில் சேர்ந்து கொண்டான்.  ஷாஹ்னி மிகவும் பலவீனமாக இருந்தாலும், தன் மகன்களுக்காகக் கிளம்ப ஒப்புக்கொண்டாள்.  ஆனால் தர்ஷன் சிங்கின் அம்மா மறுத்து விட்டாள்.

          "நான் அப்புறமா வரேம்ப்பா... அடுத்த கூட்டத்தோட வரேன்.  உன் பெண்டாட்டியையும் பிள்ளைகளையும் கவனி".

          தர்ஷன் சிங் அவளோடு விவாதிக்க, கோவில் குருக்களும் சொல்லிப் பார்த்தார்.  ஆனால், "நீங்க கிளம்புங்க சர்தார்ஜி.  ஒவ்வொருத்தரா நாங்களும் எல்லைக்கு வந்துடுவோம்.  அம்மாவ எங்களோட அழைச்சிட்டு வரோம்" என்று சமாதானப்படுத்தினார்கள் தொண்டர்கள்.

            மற்றவர்களுடன் தர்ஷன் சிங்கும் கிளம்பினான்.  தன் குடும்பத்து சொத்தே அதுதான் என்பது போல, குழந்தைகளை ஒரு கூடையில் வைத்து தன் தலைமீது தூக்கிக் கொண்டாள்.

            ஸ்டேஷனில் காத்திருந்த ரயிலில் துளிக்கூட இடமில்லை.  பெட்டிகளின் கூரைகளில் புற்களைப்போல மக்கள் முளைத்திருந்தார்கள்.

            சின்னஞ்சிறு சிசுக்களை, சோர்ந்து போயிருந்த அவர்களின் அம்மாவையும் பார்த்தவர்கள், பரிதாபப்பட்டு கூரையில் கொஞ்சம் இடம் ஒதுக்கிக் கொடுத்தார்கள்.

            பத்து மணிநேரம் கழித்து நகராத துவங்கியது ரயில்.  அந்திவானம் சிவந்து, சூடாக இருந்தது.  ஷாஹ்னியின் மார்பகங்கள் தொடர்ந்து உறிஞ்சப்பட்டு, வறண்டே போய்விட்டன.  ஒவ்வொரு குழந்தையாய் மாறி மாறி பால் கொடுத்தாள்.  அழுக்குத் துணிச் சுருளில் இருந்த இரண்டும், குப்பைத் தொட்டியிலிருந்து எடுக்கப்பட்டவை போலக் காட்சியளித்தன.

            ரயில் தொடர்ந்து ஓடி இரவுக்குள் நுழைந்தது.  சில மணிநேரம் கழித்து, ஒரு குழந்தை தன் கைகால்களை உதைத்தும் அழுதவாறும் இருக்க, மற்றொன்று அசைவற்றிருந்ததை தர்ஷன் சிங் கவனித்தான்.  துணிச்சுருளுக்குள் கையை விட்டுத் தொட்டுப் பார்த்தபோது, குழந்தையின் உடல் சில்லிட்டிருப்பதையும், அது இறந்துபோய் சற்றுநேரம் ஆகியிருக்கவேண்டும் என்பதையும் உணர்ந்தான்.

          தர்ஷன் சிங் உரக்க விசும்பத் துவங்கினான்.  சுற்றியிருந்தோருக்கு விஷயம் புரிந்தது.  இறந்த குழந்தையை ஷாஹ்னியிடமிருந்து அகற்றப் பார்த்தார்கள்.  ஆனால் அவளோ   அமர்ந்து, கூடையைத் தன் மார்போடு இறுக்கிக் கொண்டிருந்தாள்.

            "தம்பி இல்லாம இவனும் பால் குடிக்க மாட்டான்."

            எல்லோரும் வற்புறுத்தியும் அவள்  கூடையை விலக்க மறுத்துவிட்டாள்.

          ரயில் பல முறைகள் நின்று நின்று கிளம்பியது. 

          இப்போது எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்று இருட்டில் துழாவிப் பார்த்துப் புரிந்துகொண்டார்கள்.

          "கைராபாத்தைத் தாண்டிட்டோம்."

          " நிச்சயமா இது குஜ்ரன்வல்லாதான்."

          "இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு.  லாகூர் தாண்டியதும் இந்துஸ்தான் வந்துடும்."

          சற்றே நம்பிக்கை பிறந்ததும், சிலர் உரக்கக் கூச்சலிட்டார்கள்.

          "ஹர் ஹர் மகாதேவ்!"

          "ஜோ போலோ ஸோ நிஹால்!".

          ரயில் பாலத்தை அடைந்ததும், கூட்டத்தில் பரவசம் ஏற்பட்டது.

          "ராவி நதியை அடைஞ்சிட்டோம்."

          "இதுதான் ராவி.  நாம இப்போ லாகூர்ல இருக்கோம்."

          அந்தக் குழப்பத்தில், தர்ஷன் சிங்கின் காதில் யாரோ கிசுகிசுத்தார்கள்.  "சர்தார்ஜி,  இறந்த குழந்தையை ராவி நதியில வீசிடுங்க.  அவனுக்குப் புண்ணியம் கிடைக்கும். அவனைத் தூக்கிட்டு அந்தப்பக்கம் போவானேன்?"

          தர்ஷன் சிங் வெகு ஜாக்கிரதையாக மனைவியிடமிருந்து கூடையைப் பிடித்து இழுத்தான்.  அதிலிருந்து துணிச்சுருளை அவசரமாக உருவி, கடவுளின் பெயரைச் சொல்லியவாறு அதைத் தூக்கி ராவி நதியில் வீசினான்.

          இருட்டில், ஒரு சின்னக்குழந்தையின் அழுகையொலி அவன் காதில் விழுந்தது.  தர்ஷன் சிங் பீதியுடன் மனைவி இருந்த பக்கமாகப் பார்த்தான். இறந்துபோன குழந்தையை அவள் தன் மார்போடு அணைத்திருந்தாள்.  அப்போது புயலென எழுந்தன உரத்த குரல்கள் - "வாகா, வாகா."

          "இந்துஸ்தான் ஜிந்தாபாத்!"
 
 
 
 
 
 


சிவசங்கரியின் "இலக்கியத்தின் மூலம் இந்திய ஒருங்கிணைப்பு"  (வானதி பதிப்பகம்) கதையை தினமணி தீபாவளி மலர் புத்தகத்தில் வெளியிட்டிருப்பதிலிருந்து.




38 கருத்துகள்:

  1. ஹிந்தியிலே படித்து மனம் பதைத்துப் போனது. இப்போதும் அதே உணர்வு! :(

    பதிலளிநீக்கு
  2. # 331 --> Greetings for equalling 2010. With few more days to go, I am sure you break 2010 record.

    பதிலளிநீக்கு
  3. பிரிவினையின்போதிருந்த துயரங்களைப் படித்திருக்கிறேன். எல்லையில் மட்டுமல்லாது, ஹைதிராபாத்திலும் இத்தகைய சூழல் நிகழ்ந்திருக்கும். நல்லவேளை, அத்தகைய சூழ்னிலை நமக்கு அமையவில்லை. கதை ரொம்ப நல்லாருக்கு என்பது சுமாரான பின்னூட்டமாகிவிடும்.


    "தர்ஷன் சிங் வெகு ஜாக்கிரதையாக மனைவியிடமிருந்து கூடையைப் பிடித்து இழுத்தான். அதிலிருந்து துணிச்சுருளை அவசரமாக உருவி, கடவுளின் பெயரைச் சொல்லியவாறு அதைத் தூக்கி ராவி நதியில் வீசினான்." - படிக்கும்போதே கதக் என்று இருந்தது. அதிலும் அவர்களிடம் பாக்கி இருந்தது 'இறந்த குழந்தை' என்று நினைக்கும்போது..... இறைவன் ஒவ்வொரு உயிருக்கும் தனித் தனிப் பாதையை அமைத்திருக்கிறான்...

    பதிலளிநீக்கு
  4. பிரிவினைக்கால துயரத்தை ,தர்ஷன்சிங் மூலம் 'தர்ஷன் 'செய்ய முடிந்தது !

    பதிலளிநீக்கு
  5. / இருட்டில், ஒரு சின்னக்குழந்தையின் அழுகையொலி/ என்ன ஒரு கொடுமை :(.

    வெள்ளம் கதையையும் படிக்க ஆவலாக உள்ளது.

    நல்லதொரு பகிர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
  6. இப்படி எல்லாம் எழுதுவதால்தான் அவர்கள் புகழ் பெறுகிறார்கள்

    பதிலளிநீக்கு
  7. காட்சிகள் கண் முன் விரிய... மனம் விக்கித்துவிட்டது.

    பகிர்விற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  8. கண் கலங்கி.. மனம் பதைக்கிறது...

    பதிலளிநீக்கு
  9. //இருட்டில், ஒரு சின்னக்குழந்தையின் அழுகையொலி அவன் காதில் விழுந்தது. தர்ஷன் சிங் பீதியுடன் மனைவி இருந்த பக்கமாகப் பார்த்தான். இறந்துபோன குழந்தையை அவள் தன் மார்போடு அணைத்திருந்தாள். //

    ஐயோ! என்ன கொடுமை என்று மனம் பதறி போனது.

    // "அக்கதையில் நீங்கள் எழுதி இருந்த கடைசிப் பகுதியைப் படிக்கும்போது உடம்பு உதறிப் போட்டது!" என்கிறார்.//
    சிவசங்கரி சொன்னது உண்மைதான். உடம்பும், மனமும் பதறி தான் போகிறது.

    பகிர்வுக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  10. சிறப்பான கதை முடிவை யூகிக்க முடிந்தாலும் மனம் பதைக்கத்தான் செய்தது.

    பதிலளிநீக்கு
  11. சிறப்பான கதை முடிவை யூகிக்க முடிந்தாலும் மனம் பதைக்கத்தான் செய்தது.

    பதிலளிநீக்கு
  12. கையிலிருந்த குழந்தையைப் பார்க்கையில் அவளும் குதித்திருப்பாள். வாகா எல்லை காவா எல்லையாக ஆகிவிட்டதே. வயிற்றுப் பூச்சிகளெல்லாம் செத்து மடிந்து விட்டது. உங்க தேசப்பிரிவினை எங்க நேசப்பிரிவினையாகிவிட்டதே. கொடூரம்.

    பதிலளிநீக்கு
  13. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்

    பதிலளிநீக்கு
  14. ஹிந்தியிலா, உருதுவிழா கீதாக்கா? மூலம் உருது. ஹிந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டு அங்கே படித்தீர்களா?

    பதிலளிநீக்கு
  15. நன்றி நெல்லைத்தமிழன். உண்மையில் தூக்கிப்போட வைத்த கதை. சுப்ரஜா ஸ்ரீதரன் அதுமாதிரி ஒரு கதையை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தபோது இதே தாக்கம் இதை படித்தபோதும் எழுந்தது.

    பதிலளிநீக்கு
  16. நன்றி ராமலக்ஷ்மி. நீங்களும், ரஞ்சனி மேடமும், ஜீவி ஸாரும் இதைப் படிக்கவேண்டும், என்ன கருத்து சொல்வீர்கள் என்று காத்திருந்தேன். நீங்கள் படித்து விட்டீர்கள். அவர்களை இன்னும் ஆளைக்காணோம்! இங்கு ஒன்று சொல்லவேண்டும். "கேட்டு வாங்கிப் போடும் கதை"ற்கு கிடைக்கும் வரவேற்பு இதுமாதிரிப் பதிவுகளுக்கு கிடைப்பதில்லை என்பது வருத்தப்பட வைக்கும் உண்மை. முடிந்தால் தகழியின் கதையைப் பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. வேறு வேலைகளில் மூழ்கிப் போயிருந்தேன். படித்து விட்டு எழுதுகிறேன்.

    தினமணி தீபாவளி மலர் பிறமொழிக் கதைகள் போலவே தி இந்து (தமிழ்) தீபாவளி மலரிலும் முயன்றிருக்கிறார்கள். ஆனால் சோபிக்கவில்லை.

























    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!