புதன், 28 டிசம்பர், 2016

செண்டுவெளிக் களியாட்டம்



IV  விரிவாக 15 வரிகளுக்கு மிகுந்து விடையளி :                                                                                                                15
 
 
 
செண்டுவெளிக் களியாட்டம் என்றால் என்ன? செண்டு என்பதை விளக்குக.

 
 
விடை  : 

     பழந்தமிழ் மக்களின் வீர விளையாட்டுகளில் செண்டு வெளிக் களியாட்டம் மிகச் சிறந்ததென்பதைக் காப்பியங்கள் எடுத்துக் காட்டுகின்றன.  அந்தக் களியாட்டம் வீரனை நிர்ணயித்தது.  அக்காலத் தமிழ் மன்னர்களுடைய அரண்மனை ஒவ்வொன்றுக்குள்ளும் செண்டுவெளியென்ற பெரும் பயிற்சி அரங்கமொன்று இருந்து வந்தது.  ஆயிரக்கணக்கான மக்கள் வட்டமாகச் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க அந்த வெளியில் வசதியிருந்ததன்றி, மன்னரும் மற்றப் பெருங்குடி மக்களும் அமருவதற்குப் பெரும் மேடைகளும் அமைக்கப்பட்டிருந்தன.  செண்டு வெளியில் சமதரை சாதாரண நாட்களில்கூடப் பழுதுபார்க்கப்பட்டு வந்ததால், புரவிகள் வெகு வேகமாகச் செல்வதற்கும் அவற்றில் கால்கள் இடறாமலும் வழுக்காமலும் இருப்பதற்கும், எப்பொழுதும் வெகு சீராக வைக்கப் பட்டிருந்தது.  அந்தத் தரையின் அழகை ஒட்டியும், குதிரைகளைப் பழக்குவதற்குக் கூட அது உபயோகப்படுத்தப்பட்ட காரணத்தாலும் அதை வையாளி வீதியென்றும் மக்கள் அழைத்து வந்தார்கள்.  அரண்மனையின் அந்தச் சிறப்பு வெளிமுற்றத்தில் சாதாரண நாட்களிலும் வீரர்கள் குதிரையேற்றப் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.  செண்டாயுதப் பயிற்சியும் அங்கு தினந்தோறும் நடக்கும்.  ஆனால் மக்களுக்கு முரசு அறிவித்து நடத்தப்படும் செண்டுவெளிக் களியாட்டம் பெரும் பிரமை அளிக்கவல்லது.  கவிஞன்
நாவுக்கு வலு அளிப்பது, நாட்டுக்குக் கவிதை அளிப்பது வரலாற்று வித்தாக விளங்கியது.
 
 
 


     செண்டுவெளியாட்டம் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே மன்னர் ஆணையாளர் முரசு மூலம் செண்டு வெளி நடக்கும் தேதியை மக்களுக்கு அறிவிப்பார்கள்.  மூன்று நாட்களுக்கு முன்பிருந்து மீண்டும் செண்டு வெளித் தரையும், மன்னரும், மற்றோரும் அமரும் உயர் மேடைகளும் மிக மும்முரமாகச் செப்பனிடப்படும்.  மன்னனை வெளியிலிருந்து காக்க அழகிய பெரும் துணி கொம்புகள்மீது விரிக்கப்படும்.  உண்மையில் இதுகூட அவசியமில்லை.  ஏனென்றால் அந்தக் களியாட்டத்தில் ஏற்படும் வெறி, மாலை நேர வெய்யிலையோ வெப்பத்தையோ வானப் பொழிவையோகூட அலட்சியம் செய்யும்.  அன்று மக்களுக்கோ மன்னனுக்கோ அரண்மனைப் பெண்களுக்கோ மது சிறிதும் தேவையில்லை. போதையேற்ற செண்டுவெளி வீர நாடகமே போதும்.  அந்த வீரவிளையாட்டை "மண்டிலர் குதிரை நாடு வட்டம் போர் கூத்துமாகும்.  செண்டு செண்டாயுதம் பந்தெறி வீதி" ("நாநார்த்த தீபிகை" --- "ஒரு சொல் பல பொருள்" -- திருநெல்வேலிக்கவிராயர் முத்துசாமிப் பிள்ளை எழுதியது  -- பக்கம் 173 - சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு) எனப்பாடி இதைப் போர்க் கூத்து எனச் சிறப்பிப்பாரும் உண்டு.

     இந்தப் போர்க் கூத்தில் கையாளப்படும் செண்டு என்ற ஆயுதம் கிட்டத்தட்ட வேல் போன்றது.  வேல் போன்ற கூரிய முனையுடன் மட்டுமின்றி அந்த முனைக்குச் சற்றுக் கீழே பிடியைச் சுற்றிச் சின்னஞ்சிறு சூலங்கள் பலவும் வார்ப்படம் செய்யப்பட்டிருந்தபடியால் முனையின் அடிப்பாகம் செண்டு போல் பார்ப்பதற்கு அழகாகவும், வேகமாகப் பாய்ந்தால் சதையைப் பிய்த்துக் கொண்டு ஆழ உள்ளே சென்று தேகத்தில் நிலைத்துப் பறிக்க முடியாத முறையில் உயிரைக் குடித்துவிடும் தன்மை வாய்ந்ததாகவும் இருந்தது.  சிலசமயம் ஈட்டி முனைக்குக் கீழேயிருந்து சிறு சூலங்களில் சின்னஞ்சிறு துணிகள் சுற்றப்பட்டு எண்ணெயூற்றி நெருப்பும் வைக்கப் படுமாதலால், செண்டால் தாக்கப்படுபவர் தீப்புண் சுட்டு அப்புண்ணுக்குப் பலியாவதும் உண்டு.  நீண்ட மப்பிடியுடன், தலையில் கூரிய இரும்பு வேலும் அதையொட்டி சிறு இரும்பு சூலங்கள் பலவும் செண்டு போல் வார்க்கப் பட்டிருந்ததால் பார்வைக்கு மிக அழகாக இருந்த செண்டாயுதம் உண்மையில் உயிரை எளிதில் குடிக்கக்கூடிய பயங்கர ஆயுதமாக இருந்தது.  இத்தகைய ஆயுதத்துக்குத் தெய்வத்தன்மையும் கற்பிக்கப்பட்டிருந்தது.  இதை ஐயனாரின் ஆயுதமாகச் சிறப்பித்து வந்தார்கள் பைந்தமிழர்கள்.  இதன் காரணமாக ஐயனாருக்கு 'செண்டாயுதன்' என்ற திருநாமமும் வழங்கலாயிற்று.


சாண்டில்யனின் "ராஜமுத்திரை" வரலாற்றுக்கு கதையிலிருந்து வளர்த்துக்கொண்ட பொது அறிவு.
 
 
 




படங்கள் இணையத்திலிருந்து.... நன்றி


35 கருத்துகள்:

  1. செண்டு வெளிக் களியாட்டம்... ஆமாம் எவ்வளவு அழகாச் சொல்லியிருக்கிறார்...
    அறியாத ஒரு விவரம் அறியத் தந்திருக்கிறார்... நீங்களும் அதை இங்கு அழகாக எழுதியிருக்கிறீர்கள்...
    ராஜ முத்திரை முடிந்ததா?

    நான் இரண்டாம் பாகத்தில் பாதிவரை வந்திருக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  2. // அன்று மக்களுக்கோ மன்னனுக்கோ அரண்மனைப் பெண்களுக்கோ மது சிறிதும் தேவையில்லை. போதையேற்ற செண்டுவெளி வீர நாடகமே போதும். //

    என்னே சிறப்பு...!

    பதிலளிநீக்கு
  3. இந்த கால கிரிக்கெட்டுக்கு உள்ள ஆதரவு போல் ,அந்த காலத்தில் செண்டுவெளிக் களியாட்டத்திற்கு இருந்து இருக்கும் போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
  4. சுவாரஸ்யமான தகவல்களை அருமையாக அறியத் தந்திருக்கிறீர்கள். மதிப்பெண்கள் 15/15 !

    பதிலளிநீக்கு
  5. ஒரு பயங்கரமான விளையாட்டு (விளையாட்டா?) போல் இருக்கிறதே ஸ்பெயின் நாட்டு மடேடர் ஆம் போலவா அங்கு எருது என்றால் இங்கு வீரரா . ?

    பதிலளிநீக்கு
  6. செண்டுவெளி களியாட்டம் முழுமையாக அறிந்து கொண்டோம்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    சரித்திர கால வீர விளையாட்டுகள் பற்றி அறிய தந்தமைக்கு நன்றி. பதிவை படிக்கும் போது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.அருமையான பதிவு.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. புகழ்பெற்ற நாவல். நாங்கள் அப்போது சாண்டில்யனின் கதைகளை ரசித்துரசித்து வாசித்ததுண்டு. இந்தச் செண்டு வெளிக்களியாட்டம் பற்றி மீண்டும் நினைவுகூர்ந்தோம்... உங்கள் பதிவிலிருந்து மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  9. ஸ்வாரஸ்யமான தகவல்கள்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. http://tinyurl.com/3ck5c6t இந்தச் சுட்டியில் பார்க்கவும். :)

    பதிலளிநீக்கு
  11. அருமை....

    மேலும் இது போன்ற பல தகவல்களை பகிருங்கள்

    பதிலளிநீக்கு
  12. வாங்க பரிவை குமார்.. விவரங்களை அழகாக மட்டுமல்ல, ஆதாரத்துடனும் சொல்வார்!

    பதிலளிநீக்கு
  13. வாங்கி பகவான்ஜி. அப்படித்தான் தோன்றுகிறது. வேறு பொழுதுபோக்குகள் ஏது?

    பதிலளிநீக்கு
  14. வாங்க ராமலக்ஷ்மி. மதிப்பெண்ணுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  15. வாங்க ஜி எம் பி ஸார். வீர விளையாட்டாம்!

    பதிலளிநீக்கு
  16. வாங்க அசோகன் குப்புசாமி. நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வாங்க கீதாக்கா. சுட்டிக்கு நன்றி. படித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வாங்க மகேந்திரன். அவ்வப்போது தொடர்ந்து இது போன்ற தகவல்கள் தர முயற்சிக்கிறேன். முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  19. இந்த மாதிரியான வீர சாகசம் ஒன்றை செங்கிஸ்க்கான் திரைப்படத்தில் நீங்கள் பார்த்திருக்கலாம்.

    ஸ்பெயின், ரோம் போன்ற நாடுகளில் 'வீர' விளையாட்டு என்ற பெயரில் வசதிபடைத்தவரின் கேளிக்கைகளாக இந்த மாதிரியான விளையாட்டுகள் அரங்கேறியிருக்கின்றன். போர்க்கைதிகளும், அகதிகளும், சிறை தண்டனை பெற்றவர்களும் மோதிக்கொள்ள மது கோப்பையுடன் ஆரவாரமிட்டு ரசித்துக் களித்திருக்கிறார்கள். எளியவர்களின் ரத்தம் சிந்தல் பிரபுகளுக்கும், சீமாட்டிகளுக்கும் கள்வெறி ஏற்படுத்தியிருக்கிறது.

    பிறநாட்டின் மீது படையெடுப்பு, சொத்தைக் கவருதல், அடிமையாக்கிக் கொள்ளல் இதெல்லாம் தான் மன்னர்களின் இலட்சியமாகவும் இருந்திருக்கிறது. அதற்கு அத்தியாவசியமான அடிப்படையாக போரும், இந்த மாதிரியான 'வீர' விளையாட்டுப் பயிற்சிகளும், அதற்கான ஊக்குவிப்புகளும் இருந்திருக்கின்றன.



    பதிலளிநீக்கு
  20. இந்த மாதிரியான வீர சாகசம் ஒன்றை செங்கிஸ்க்கான் திரைப்படத்தில் நீங்கள் பார்த்திருக்கலாம்.

    ஸ்பெயின், ரோம் போன்ற நாடுகளில் 'வீர' விளையாட்டு என்ற பெயரில் வசதிபடைத்தவரின் கேளிக்கைகளாக இந்த மாதிரியான விளையாட்டுகள் அரங்கேறியிருக்கின்றன். போர்க்கைதிகளும், அகதிகளும், சிறை தண்டனை பெற்றவர்களும் மோதிக்கொள்ள மது கோப்பையுடன் ஆரவாரமிட்டு ரசித்துக் களித்திருக்கிறார்கள். எளியவர்களின் ரத்தம் சிந்தல் பிரபுகளுக்கும், சீமாட்டிகளுக்கும் கள்வெறி ஏற்படுத்தியிருக்கிறது.

    பிறநாட்டின் மீது படையெடுப்பு, சொத்தைக் கவருதல், அடிமையாக்கிக் கொள்ளல் இதெல்லாம் தான் மன்னர்களின் இலட்சியமாகவும் இருந்திருக்கிறது. அதற்கு அத்தியாவசியமான அடிப்படையாக போரும், இந்த மாதிரியான 'வீர' விளையாட்டுப் பயிற்சிகளும், அதற்கான ஊக்குவிப்புகளும் இருந்திருக்கின்றன.



    பதிலளிநீக்கு
  21. அருமை . புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  22. இது ஸ்ரீராம் எழுதியது என்று தோன்றவேயில்லை. நான் கேஜிஜி சார் எழுதியது என்று நினைத்திருந்தேன். பழைய காலத்தில் போர் வீரர்களையும், தேவைப்பட்டால் வீரக் குடிமக்களையும் தயார் நிலையில் வைத்திருக்கத் தேவை இருந்ததால் இத்தகைய வீர விளையாட்டுக்கள் இருந்தன.

    By the by, சாண்டில்யன் அவர்தம் நாவல்களில் இந்த மாதிரி சில முக்கியமான விஷயங்களை (ஆதாரமாக) அடிக்குறிப்புகளாகத் தருவார். ஒரு நாவலில், திருவரங்கம் அரங்க'நாதர் இரண்டு கண்களிலும் நீலக்கலருடன் கூடிய வைரப் பட்டைகள் இருந்ததாகவும், ஒன்று ரஷ்யாவுக்குக் கடத்தப்பட்டு அங்கு இருப்பதாகவும் எழுதியிருப்பார்.

    இப்போதுதான் படிக்கிறீர்களா அல்லது எத்தனாவது முறை படிக்கிறீர்கள்? (ராஜ முத்திரை).

    பதிலளிநீக்கு
  23. வாங்க நெல்லைத்தமிழன்... இரண்டாவது முறை படித்தேன். முதல்முறை படித்து நீண்ட நாட்களாகி விட்டது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!