உருளைக்கிழங்கு எக்ளேர்ஸ்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உருளைக்கிழங்கு எக்ளேர்ஸ்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4.1.16

திங்கக்கிழமை 160104 :: உருளைக்கிழங்கு எக்ளேர்ஸ்!




இந்த வாரம் கொஞ்சம் -  கொஞ்சம்தான் - ஸ்பஷல்!  சற்றே வித்தியாசமான முயற்சி!


ரொம்ப நாட்களாய் இருந்த ஐடியா.  நான் யோசித்தது ஒரு மாதிரி.   வழக்கம் போல அமைந்தது ஒரு மாதிரி.


பாஸ் கிட்ட உருளைக்கிழங்கை வேகவைக்கச் சொல்லும்போது முழுசாவே இருக்கட்டும் என்று சொல்ல மறந்து விட்டேன்.   எப்போதும்  பாஸ் பாதிப் பாதியாக வெட்டி குக்கரில் வைத்து விட்டார்!




தோலுரித்து எடுத்துக் கொண்டேன்.


முன்னதாக, பத்து சின்ன வெங்காயம், ஒரு தக்காளி, மூன்று பல் பூண்டு கொஞ்சூண்டு கொத்துமல்லி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, ஒரு சிட்டிகை கரம் மசாலாப்பொடி, காரப்பொடி மூன்று ஸ்பூன்  போட்டுக்கொண்டு அதில் நெல்லிக்காய் அளவு ஊறவைத்த புளியை அரை டம்ளருக்கும்  குறைவான தண்ணீரில் கரைத்து எடுத்துக் கொண்டு அதில் ஊற்றி, மிக்ஸியில் தனியாக அரைத்து வைத்துக் கொண்டேன்.  கலவை சற்று கெட்டியாக இருக்கவேண்டும்!  (ஒரு முறை சுற்றியபின் இன்னும் கொஞ்சம் வெங்காயம், பூண்டு சேர்த்துச் சுற்றினேன்.  அதுதான் படத்தில் மிக்ஸிக் கலவையில் தெரிவது.)



இந்தக் கலவையை வெறும் வாயில் டேஸ்ட் பார்த்த மகன்கள் அதையே ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது!!!  (ஹிஹிஹி...)




தோலுரித்த உருளைக்கிழங்கை காரப்பொடி, பெருங்காயத் தூளால் லேசாகப் புரட்டிக் கொள்ளவும்.  (நான் இந்த ஸ்டெப்பைப் பின்னர்தான் செய்தேன்.  முன்னரே செய்திருக்கலாம் என்று செய்யும்போது யோசனை வந்தது!  வெளியே காரம் தேவைப்படாதவர்களுக்கு இது வேண்டாம்!)




தோலுரித்த உருளைக்கிழங்குகளை மிகக் கவனமாக கத்தியால் வெட்டி வெளியே எடுத்துக் கொண்டேன்.  (இங்குதான் வேறு மாதிரி யோசித்து வைத்திருந்தேன்.  நடைமுறைப்படுத்த முடியவில்லை!)   வெளியே எடுத்த பகுதி இருக்கிறதல்லவா.... அதில் உள்ள கீழ்ப் பகுதியை ஜாக்கிரதையாகக் குறைத்து விட்டேன் - வெட்டி ரமாக வைத்து விட்டேன்.  இப்போது மூடி போன்ற குறைக்கப்பட்ட பகுதி மட்டும் மிச்சம்.


அந்த இடத்தில் அரைத்து வைத்திருக்கும் கலவையை இட்டு, (கொஞ்சமாக வைக்க வேண்டும்.  இல்லாவிட்டால் வழிந்து வெளியே ஓடும்!) மூடி போன்ற குறைக்கப்பட்ட பகுதியை வைத்து மூட வேண்டும்.



அப்படியே அலுங்காமல் எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டியதுதான்.



குறைக்கப்பட்ட பகுதிகளை அம்மிணிக் கொழுக்கட்டை போல அதே கலவையில் புரட்டி பொரித்து எடுக்கலாம். இல்லை தனியாகப் பொரித்து சாப்பிடலாம்!  கொஞ்சம்தான் இருக்கும்.  அந்தக் கலவையில் மிச்சம் மீதி இருந்தால் அதை பொரித்த உருளைக்கிழங்கைச் சாப்பிடும்போது தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.




உள்ளே ஸ்டஃப் செய்யும் முறையில் / பொருளில்  அவரவர்கள் யோசனைகளுக்கேற்ப மாறுதல் செய்து கொள்ளலாம்.   கார்ன்ஃப்ளார் மாவு வைத்துப் புரட்டிக் கொள்ளலாம்.  மைதா மாவு பேஸ்ட் போலச் செய்து பிளந்தால் ஒட்டலாம்!


பதிவை விட படங்கள் ஜாஸ்தி இல்லை?!!!