தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு ஐம்பது கிராம்.
மிளகு 14
மிளகாய் வற்றல் 4
சீரகம் இரண்டு கிராம் (அரை தேக்கரண்டி) + ஒரு கிராம் (தாளிக்க)
தனியா ஐந்து கிராம்.(ஒரு தேக்கரண்டி)
மஞ்சள் பொடி ஒரு கிராம் (இரண்டு சிட்டிகை)
ஒரு எலுமிச்சம் பழம்.
தாளிக்க / வறுக்க சிறிது நெய் / எண்ணை.
கடுகு இரண்டு கிராம் (அரை தேக்கரண்டி)
பொடி உப்பு : தேவைக்கேற்ப.
கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை சிறிதளவு.
இரண்டு சிறிய, சுத்தமான கைக்குட்டை (அளவுள்ள மெல்லிய துணி)
ரெடியா? ஆரம்பிக்கலாமா?
# துவரம் பருப்பை எண்ணை அல்லது நெய் விட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள்.
# அது ஆறிய பிறகு, அம்மா கொடுத்த இலவச மிக்சியில் 'விப்பரில்' ஐந்து வினாடிகள் ஓட்டி இரண்டொன்றாக உடைத்துக் கொள்ளுங்கள், பருப்பை. (மிக்சியை அல்ல)
# உடைத்த துவரம்பருப்பை. ஒரு சுத்தமான துணியில் இட்டு, தளர்த்தியாக முடிச்சுப் போட்டு வையுங்கள்.
# மிளகு, மிளகாய் வற்றல், தனியா, சீரகம் (அரைத் தேக்கரண்டி அளவு) எல்லாவற்றையும் தனித் தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
# மேற்கண்ட மிளகு, மிளகாய், தனியா, சீரகம் பொருட்களோடு மஞ்சள் தூளை சேர்த்து, நன்றாகக் கலக்கி, மற்றொரு துணியில் இட்டு, தளர்த்தியாக முடிச்சுப் போட்டு வையுங்கள்.
# ஒரு பாத்திரத்தில், அரை லிட்டர் தண்ணீர் கொதிக்க வைக்கவும்.
# தண்ணீர் கொதி வந்ததும், அதில் துவரம்பருப்பு கட்டிய துணியை அப்படியே இறக்கி வைக்கவும்.
# ஒரு நிமிடம் கழித்து, மற்ற துணி முடிச்சையும் அந்தத் தண்ணீரில் இறக்கவும்.
# பருப்பு (துணி முடிச்சில் உள்ளது) வேகும் வரை வெயிட் பண்ணவும்.
# துவரம் பருப்பு வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, இரண்டு துணி முடிச்சுகளையும் கிடுக்கிப் பிடிப் போட்டு வெளியே எடுக்கவும்.
# துணிப் பொருட்கள் ஆறியவுடன், அவற்றை (அ கொ) மிக்சியில் இட்டு, (எச்சரிக்கை: துணியை சேர்த்து அரைக்காதீர்கள்) அடுப்புப் பாத்திர பருப்புத் தண்ணியை கொஞ்சமாக விட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.
# அரைத்த கலவையை, சிறிதளவு தண்ணீரில் கரைத்து, வடிகட்டி எடுத்து, வடிகட்டிய நீரை அடுப்புப் பாத்திரத்தில் உள்ள பருப்புத் தண்ணீருடன் சேர்த்து விடவும்.
# பாத்திரத்தில் உள்ள ரசத்திற்கு தேவையான அளவு உப்புப் போடவும்.
# ரசத்திற்கு கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை போடவும்.
# கடுகு சீரகம் இவற்றைத் தாளித்து, ரசத்தில் போடவும்.
# ரசம் சூடு ஆறியதும், அதில் ஒரு எலுமிச்சம்பழத்தை நறுக்கி, சாறு பிழிந்து கொள்ளவும்.
சுவையான ரசம் தயார்!




