ரசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.1.14

'திங்க' கிழமை 140106:: ரசத்தில் தேர்ச்சி கொள்!


தேவையான பொருட்கள்: 
  



துவரம் பருப்பு ஐம்பது கிராம்.
மிளகு 14
மிளகாய் வற்றல் 4
சீரகம் இரண்டு கிராம் (அரை தேக்கரண்டி) + ஒரு கிராம் (தாளிக்க) 
தனியா ஐந்து கிராம்.(ஒரு தேக்கரண்டி) 
மஞ்சள் பொடி ஒரு கிராம் (இரண்டு சிட்டிகை) 
ஒரு எலுமிச்சம் பழம்.
தாளிக்க / வறுக்க சிறிது நெய் / எண்ணை. 
கடுகு இரண்டு கிராம் (அரை தேக்கரண்டி) 
பொடி உப்பு : தேவைக்கேற்ப. 
கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை சிறிதளவு. 
இரண்டு சிறிய, சுத்தமான கைக்குட்டை (அளவுள்ள மெல்லிய துணி) 

       
ரெடியா? ஆரம்பிக்கலாமா? 
               
# துவரம் பருப்பை எண்ணை அல்லது நெய் விட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள்.
             
# அது ஆறிய பிறகு, அம்மா கொடுத்த இலவச மிக்சியில் 'விப்பரில்' ஐந்து வினாடிகள் ஓட்டி இரண்டொன்றாக உடைத்துக் கொள்ளுங்கள், பருப்பை. (மிக்சியை அல்ல) 
           
# உடைத்த துவரம்பருப்பை. ஒரு சுத்தமான துணியில் இட்டு, தளர்த்தியாக முடிச்சுப் போட்டு வையுங்கள்.  
               

# மிளகு, மிளகாய் வற்றல், தனியா, சீரகம் (அரைத் தேக்கரண்டி அளவு) எல்லாவற்றையும் தனித் தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும். 
            
# மேற்கண்ட மிளகு, மிளகாய்,  தனியா, சீரகம் பொருட்களோடு மஞ்சள் தூளை சேர்த்து, நன்றாகக் கலக்கி, மற்றொரு துணியில் இட்டு, தளர்த்தியாக முடிச்சுப் போட்டு வையுங்கள். 
              
# ஒரு பாத்திரத்தில், அரை லிட்டர் தண்ணீர் கொதிக்க வைக்கவும். 
           
# தண்ணீர் கொதி வந்ததும், அதில் துவரம்பருப்பு கட்டிய துணியை அப்படியே இறக்கி வைக்கவும். 
      
# ஒரு நிமிடம் கழித்து, மற்ற துணி முடிச்சையும் அந்தத் தண்ணீரில் இறக்கவும். 
    
# பருப்பு (துணி முடிச்சில் உள்ளது) வேகும் வரை வெயிட் பண்ணவும். 
            
# துவரம் பருப்பு வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, இரண்டு துணி முடிச்சுகளையும் கிடுக்கிப் பிடிப் போட்டு வெளியே எடுக்கவும். 
              
# துணிப் பொருட்கள் ஆறியவுடன், அவற்றை  (அ கொ) மிக்சியில் இட்டு,  (எச்சரிக்கை: துணியை சேர்த்து அரைக்காதீர்கள்) அடுப்புப் பாத்திர பருப்புத் தண்ணியை கொஞ்சமாக விட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். 
              
# அரைத்த கலவையை, சிறிதளவு தண்ணீரில் கரைத்து, வடிகட்டி எடுத்து, வடிகட்டிய நீரை அடுப்புப் பாத்திரத்தில் உள்ள பருப்புத் தண்ணீருடன் சேர்த்து விடவும். 
          
# பாத்திரத்தில் உள்ள ரசத்திற்கு தேவையான அளவு உப்புப் போடவும். 
          
# ரசத்திற்கு கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை போடவும். 
             
# கடுகு சீரகம் இவற்றைத் தாளித்து, ரசத்தில் போடவும். 
         
# ரசம் சூடு ஆறியதும், அதில் ஒரு எலுமிச்சம்பழத்தை நறுக்கி, சாறு பிழிந்து கொள்ளவும். 
   
சுவையான ரசம் தயார்!