பிஞ்சு பாகற்காய் சாலட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிஞ்சு பாகற்காய் சாலட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16.2.15

'திங்க'க்கிழமை : பிஞ்சு பாகற்காய் சாலட்





கேரட் போட்டோ, வெள்ளரி மற்றும் இன்னபிற காய்கறிகள் போட்டோ சாலட் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். எத்தனை பேர் என்னைப்போல இந்த பிஞ்சு பாகல் சாலட் சாப்பிட்டு ரசித்திருப்பீர்கள் என்று தெரியவில்லை!
சின்ன வயதிலிருந்தே எனக்கு இது சாப்பிடப் பிடிக்கும்.  கிட்டத்தட்ட அப்போது சாப்பிட்டதுதான்.  நீண்ட நாட்களாகி விட்டது.




தோட்டத்தில் உலாத்திக் கொண்டிருந்தபோது பாகற்செடி( கொடி) கண்ணில் பட்டது.  சில பூக்களும் கண்ணில்படவே, மெல்ல கொடியை விலக்கித் தேடியபோது இடுக்கில் ஒளிந்து கொண்டிருந்த இரண்டு மூன்று பாகற்பிஞ்சுகள் கிடைத்தன.


'இருக்கட்டும், பெரிதானால் பறித்து பிட்லை பண்ணலாம்'  என்று என் பாஸ் தடுத்தபோதும் அவசரமாகப் பறித்து விட்டேன்!
கடைகளில் பிஞ்சாக பாகற்காயைப் பார்ப்பதே அரிதாகி விட்ட காலத்தில் கண்முன்னால் நிரூபணமாக, புதிதாக அப்போதுதான் பறிக்கப்படும் காயின் பசுமை மனதை மகிழ்விக்க, 'எலுமிச்சம் பழம் இருக்கா?"  என்று கேட்டேன் எழுந்த திடீர் இச்சையுடன்!



"அரை மூடி இருக்கு ஏன்?" என்ற பாஸைப் புறம்தள்ளி உள்ளே வந்தேன்.  அந்தப் பாகற்காயை நீரில் அலசிக் கழுவினேன்.


கத்தியை எடுத்துக் கொண்டு பாகற்பிஞ்சை சிறு சிறு துண்டுகளாய் ஸ்லைஸ் செய்தேன். ஒரு பச்சை மிளகாயையும் அரிந்து போட்டேன்.  இதுவும் எங்கள் தோட்டத்தில் விளைந்த புதிய பிஞ்சு மிளகாயே என்பது சந்தோஷமான கூடுதல் தகவல்!


லேஸாக உப்பு தூவி, கொஞ்சம் பெருங்காயத் தூளையும் தூவி, கறிவேப்பிலைக் கொத்துமல்லியைப் பொடியாக அரிந்து அதில் சேர்த்தேன்.  எலுமிச்சம் பழ மூடியை அதில் தேவையான அளவு மட்டும் பிழிந்தேன்.



குலுக்கி விட்டு, கொஞ்சநேரம் ஒரமாக மூடி வைத்து விட்டு ஆசையுடன் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்!!!


ரொம்ப ஊறும் வரையெல்லாம் பொறுமையின்றி கொஞ்ச நேரத்திலேயே எடுத்து வாயில் போட்டுக் கொண்டேன்.  வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு ஒவ்வொரு துண்டுதான் தந்தேன்.  (அதையே வாங்க மாட்டேன் என்கிறார்கள்... என்ன செய்ய!)
இலேசான கசப்புடன் புளிப்பும், உப்பும், காரமும் கலந்த சாலட்....    ஸ்ஸ்ஸ்......

 
                                                                       

நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் விரும்பிய சாலட் ஒன்றைச் சாப்பிட்ட திருப்தி.  அடேடே. எங்கே ஓடுகிறீர்கள்?  உங்கள் தோட்டத்துக்குத்தானே?

ஆல் தி பெஸ்ட்!