செவ்வாய், 22 நவம்பர், 2011

நாக்கு நாலு முழம் ... 02

                      
மதுரையில் கோரிப்பாளையத்தில் இருக்கும் கிங் மெட்ரோ ஹோட்டலில் பரோட்டா குருமா (அப்போது நாங்கள் 'ப்ரோட்டா' என்று உச்சரிப்போம்!), ரெயில் நிலையம் அருகில் இருக்கும் கற்பகம் ஹோட்டலில் அதிகாலையில் இட்லி, சாம்பார், காபி. ஆரியபவனில் ஸ்வீட் சமாச்சாரங்கள், மாடர்ன் ரெஸ்டாரெண்டில் (மத்திய நேரத்தில் இங்கு இடம் கிடைப்பது சிரமம்... வரிசையில் காத்திருக்க வேண்டும்) சாப்பாடு,கங்குவாலாவில் வடக்கத்தி பாணி சாப்பாடு...
         
அப்போது வட நாட்டிலிருந்து மதுரையில் மருத்துவக் கல்லூரியில் படிக்க வந்த ராய் தயாள் சிங் என்ற மாணவர் தெருவில் அறிமுகமாகி அவருக்கு ரூம் ஏற்பாடு செய்வதிலிருந்து இது மாதிரி வடநாட்டுச் சாப்பாடு கிடைக்குமிடங்களைக் காட்டியதும் நினைவுக்கு வருகிறது. நீண்ட நாள் தொடர்பில் இருந்தார். அவ்வப்போது கடிதமும் எழுதிக் கொண்டிருந்தார். வெளிநாட்டில் இருந்த ஒரு டிப்ளோமேட்டின் பையன். எங்கிருக்கிறாரோ அந்த நண்பர்... இப்போது என்னை நினைவிருக்குமா... 
    
மதுரை கோரிபபாளையத்தில் மசூதி திரும்பும் ரோடில், பஸ் ஸ்டாப்பை ஒட்டி ஒரு ரோடோரக் கடை. அங்கு இட்லி சாப்பிடுவது ஒரு தனி அனுபவம். இரண்டு இட்லி (அல்லது நாலு) ஆர்டர் செய்தால் அடுப்பிலிருந்து இறக்கும் இட்லிதான் கிடைக்கும். அந்த அளவு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். ஆவி பறக்கும், பஞ்சு போன்ற இட்லி மட்டும் சுவை, ஸ்பெஷல் இல்லை. அந்த இரண்டு அல்லது நாலு இட்லிகளுக்குத் தரப் படும் பக்க மேளங்கள்...!! தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, பொதினா சட்னி, மிளகாய்ப் பொடி, சாம்பார்... இந்தச் சுவைக்கு எத்தனை பிரபலங்கள் ரசிகர்களோ... எனக்குத் தெரிந்து புலவர் கீரன் ஒரு ரசிகர்!     மதுரை ரேஸ் கோர்ஸ் குடியிருப்பின் பின்புறம் லக்ஷ்மி தியேட்டர் அருகில் ஒரு ரோடோரக் கடையில் சாப்பிட்ட பரோட்டா குருமா டாப்!
                        
மதுரையில் அது என்னவோ பெரிய ஹோட்டல்களை விட இந்த மாதிரி ரோடோரக் கடைகளில் கிடைக்கும் சுவை தனி. கல் தோசை ஒவ்வொன்றாக சூடாக வார்க்க வார்க்க, தட்டில் வாங்குவது தனிச் சுவை. இந்த மாதிரிச் சுவை சென்னை ரோடோரக் கடைகளில் கிடைப்பதில்லை. தண்ணீர் வாகா, மண்ணின் மணமா... சரியாகத் தெரியவில்லை. சில ரோடோரக் கடைகளில் பருத்தி கொட்டைப் பால் கிடைக்குமாம். அதன் மணம், குணம், நிறம், திடம் யாவையும் மனதை மயக்கும் விஷயங்கள் என்கிறார், ஒரு திருமதி. 
      
மதுரையில் மீனாக்ஷி அம்மன் கோவில் சுற்றியுள்ள பிரதான வீதிகளில் ஒன்றில் பூச்சி ஐயங்கார் கடை என்று ஒன்று உண்டு. அங்கு ஸ்பெஷல் வெள்ளை அப்பம், சீவல் தோசை! சீவல் தோசை ரொம்பவே ஸ்பெஷல். விலை பற்றிக் கவலைப் படவில்லை, காத்திருக்கத் தயார் என்றால் எவ்வளவு வேண்டுமானாலும் உள்ளே தள்ளலாம்! சிறிய கடைதான். ஆனால் சாம்பாரில் எல்லாம் சுவை அவ்வளவு எதிர்பார்க்க முடியாது. பிடிப்பவர்களுக்குப் பிடிக்கலாம்! சீவல் தோசை என்றால் என்ன தெரியுமோ...(பின்னூட்டத்துக்கு வாய்ப்பு...!)
                     
இந்த வெள்ளை அப்பம், மெதுவடை, போண்டா எல்லாம் பெரிய ஹோட்டல்களில் சாப்பிடக் கூடாது. காசு கூட, அளவு கம்மி... சிறிய கடைகளில் காசு கம்மி, சுவை, ஆப்ஷன் அதிகம். 
                
மதுரையில் தல்லாக்குளம் தலைமைத் தபால் நிலையம் அருகில் ஒரு கடையில் சுடச் சுடக் கிடைக்கும் வடை, போண்டா வகைகளுக்கு அவர்கள் தரும் கடலை மாவு போட்டு செய்யும் ஒரு சைட் டிஷ் பிரபலம். அங்கேயே சாப்பிடுபவர்களும், பார்சல்களும் தூள் பறக்கும்! இப்பவும் இருக்கிறதா என்று தெரியவில்லை. சீக்கிரம் கிடைக்கவும், சில சமயம் பஜ்ஜி, வடை போண்டா கைக்குக் கிடைக்கவுமே சிபாரிசு தேவைப் படும்!

    
சென்னை வந்த புதிதில் அதிகம் கவர்ந்தது செட் தோசை! முக்கியக் காரணம் அதனுடன் தரப்படும் வடகறி! அப்போதும் இப்போதும் புரோட்டா அல்லது பரோட்டா எந்தக் கடையில் நன்றாகச் செய்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்யும் வழக்கம் இன்னும் இருக்கிறது!
    
ஒரு ஹோட்டலில் நன்றாகச் செய்கிறார்களா என்று பார்க்க நான் கையாளும் வழி ஸ்பெஷல் ரவா தோசை, மற்றும் ஆனியன் ரவா தோசை சாப்பிடுவது. சாம்பாரின் ருசி மிகவும் முக்கியம். சாம்பார் ருசி அமையாத ஹோட்டல்களுக்கு செல்வதில்லை. சரவண பவனில் சாம்பாரைக் குடிக்கலாம்! இந்த ரவா தோசை செய்வது ஒரு கலை! எல்லா ஹோட்டல்களிலும் இது அமைவதில்லை. முறுகலும் இருக்க வேண்டும், மென்மையும் இருக்க வேண்டும். மெலிதாக அமைய வேண்டும்!   
                   
தனியாக ரூமில் தங்கியிருந்த காலங்களில், குறைந்த செலவில் வயிறு நிரப்ப  நான் கடைப் பிடித்த வழி, ஒரு பரோட்டா, ஓர் ஆனியன் ஊத்தப்பம்! காலை ரோட்டோரக் கடைகளில் நாலு இட்லி! இரவு இரண்டு தோசை மட்டும். தொடர்ந்து வெளியிலேயே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் எப்போதுடா வீட்டுக்குப் போய் பழைய சாதத்தில் மோர் விட்டுப் பிசைந்து பழங்குழம்பு அல்லது நார்த்தங்காய் தொட்டுக் கொண்டு சாப்பிடுவோம் என்று ஆகி விடும். 
                
இப்போதும் ஹோட்டல்களில் சாப்பிட விழைவது ரவா தோசை, இன்னமும் கூட பரோட்டா, ஆனியன் ஊத்தப்பம்.  இதில் ஒரு காரணமும் இருக்கிறது. பரோட்டா என்னதான் வீட்டில் செய்தாலும் கடைகளில் சாப்பிடுவது போல வருவதில்லை. (சென்னையில் எப்போதாவது ராமசந்த்ரா ஹாஸ்பிடல் போனால், அங்குள்ள கேண்டீனில் பரோட்டா சாப்பிட்டுப் பாருங்கள்... மென்மையாகவும், தடிமனாகவும், சுவையாகவும் இருக்கும்!!) ரவா தோசை கூட வீட்டில் செய்யும்போது அந்த பதம் வருவது கடினம். ஹோட்டல்களிலேயே கூட சில ஹோட்டல்களில்தான் ரவா தோசை நன்றாகச் செய்கிறார்கள். 
                    
சரவண பவனின் சாம்பார் ருசி நங்கநல்லூரின் பாலாஜி பவன் என்ற சிறிய ஹோட்டலின் சாம்பாரின் ருசி... இந்த வகை சாம்பாரில் என்ன கலக்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்து வீட்டில் முயற்சி செய்து பார்த்திருக்கிறோம். சீரகம் தாளிக்க வேண்டும் என்பார்கள் சிலர். மல்லித் தூள் சேர்க்க வேண்டும் என்பார்கள் சிலர். அப்படியெல்லாம் ட்ரை செய்தால் வேறு மாதிரி நன்றாக இருக்கிறதே தவிர, (வழக்கமாக சாப்பிடும் பாணியிலிருந்து வேறுபட்டு வித்தியாசமாக இருந்தாலே பிடித்துப் போகும்தானே...) அந்த ஹோட்டல்களில் சாப்பிடும் சுவை வராது. அட, இட்லியே மெதுவாக வருவது என்பது எப்போதாவதுதான் அந்தக் கலையே கைவர மாட்டேனென்கிறது!!  

காஃபி...! இது முக்கியமான விஷயம். தஞ்சை, கும்பகோணம் ஊர்களில் காஃபி சந்தேகமில்லாமல் நன்றாக இருக்கும், காவிரி சூழ்பொழில் சோலைகளில் காஃபி...!
           
மதுரையில் விசாலம் காஃபி இரண்டு மூன்று இடங்களில் இருக்கும். அங்கு நல்ல ஃபில்டர் காஃபி கிடைக்கும்தான். ஆனால் சர்க்கரை அளவைக் குறிப்பிட்டுக் குறைக்கச் சொன்னால்தான் சரியாகப் போடுவார்கள். அது என்னவோ நிறையப் பேர் டிகாக்ஷன் அதிகமாக விட்டு, சர்க்கரை தூக்கலாகச் போட்டுச் சாப்பிட்டால்தான் காஃபி என்று நினைக்கிறார்கள்.  சென்னை சரவணபவனில் காஃபி ஓகே. 
                  
நீங்கள் ஹோட்டல்களுக்குப் போனால் உங்கள் விருப்பத் தேர்வு என்னவாக இருக்கும்? சாப்பிடாத ஐட்டம் என்றா, வீட்டில் செய்ய முடியாத ஐட்டம் என்றா, இந்த ஹோட்டலில் இது ஸ்பெஷல் என்றா... எந்த வகையில் உங்கள் தேர்வு இருக்கும்?  
      
இன்றைய ஸ்பெஷல் என்ற அறிவிப்புகளில் டிஃபன் ஐட்டங்களுக்கு அறிவிப்பு இருக்குமே தவிர, சாப்பாட்டு வகைகளில் பெரும்பாலும் இருப்பதில்லை. ஒரே மாதிரி சாம்பார், காரக் குழம்பு, பொரியல் மெனுக்கள்! சாப்பாடு சாப்பிட செட்டிநாட்டுச் சமையல் பக்கம் விரும்பிச் செல்வதுண்டு. மற்றபடி சில புதிய வகைச் சமையல்கள் வீட்டில் முயற்சி செய்தால்தான் உண்டு. வாழைப் பூ உசிலி எத்தனை ஹோட்டல்களில் கிடைக்கிறது? ரவா உப்புமா எத்தனை ஹோட்டல்களில் கிடைக்கிறது?!  
        
வீட்டில் செய்யும் சில ரெசிப்பிகளை இங்கு பகிர நினைக்கிறேன். ஏதோ ஒன்றிரண்டு பேருக்காவது புதிதாக இருக்கலாம். அல்லது எழுதுவதில் எங்களுக்கு சந்தோஷம் கிட்டலாம்... பதிவு தேத்தலாம்... அதைப் படித்து நீங்கள் இடும் பின்னூடங்களில் புதிய ஐடியாக்கள் எங்களுக்குக் கிடைக்கலாம்! பார்ப்போம். இதை முதல் பகுதி, அறிமுகப் பகுதி  என்று யோசித்து வைப்போம்.  
               
(பரோட்டா பற்றி சிறிதளவே எழுதியிருந்தாலும் இந்த நேரத்தில் அதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வுப் பதிவைப் படிக்க நேர்ந்தது. முதலில் நண்பர் சூர்யஜீவா பதிவில். அப்புறம் அவர் சுட்டியிருந்த கழுகு பதிவில். (அதையும் இங்கு பகிர்கிறோம்)
  
நாக்கு இன்னும் நீளும்! 
          

21 கருத்துகள்:

  1. புரோட்டா அவ்வளவு நல்லதில்ல சார்! ஆராய்ச்சியை குறையுங்கள்.அனுபவங்கள் சுவையாக செல்கிறது.

    பதிலளிநீக்கு
  2. மலைக்க வைக்கிறது உங்களது சாப்பாட்டு அனுபவங்கள்.

    பதிலளிநீக்கு
  3. பச்சை கலர் இட்லி
    சிவப்புக் கலர் சட்னின்னு பாட வைக்குது பதிவு.நாக்குக்காகக் காத்திருக்கிறது நாக்கு !

    பதிலளிநீக்கு
  4. அருமையான அறிமுகங்கள்
    நானும் கோபி ஐயங்கார் கடை ரசிகன்
    அங்கு கிடைக்கும் வெறும் பச்சை மிளகாய்
    சட்னிக்கும் பஜ்ஜி சொஜ்ஜிக்குமே
    மாலையில் ஒரு ரசனைமிக்க கூட்டம் எப்போதும்
    காத்திருக்கும்
    தங்கள் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..

    பதிலளிநீக்கு
  5. நாவில் நீர் ஊறவைக்கும் பகிர்வு. அதுவும் இப்படிப் படங்களுடன்:)!

    சின்ன வயதில் நெல்லை ரயில்வே ஸ்டேஷன் நேர் எதிர் சாலையில் ஒரு கடையிலிருந்து [பெயர் தங்கைக்கு நினைவிருக்கலாம்:)] பரோட்டா குருமா வரவழைத்து சாப்பிடுவோம். மறக்காத சுவை.

    // ரவா உப்புமா எத்தனை ஹோட்டல்களில் கிடைக்கிறது?! //

    கர்நாடகாவில் கேசர் பாத்(கேசரி), ரவா பாத்(உப்புமா) ரெண்டும் பல ஹோட்டல்களில் ஸ்டாண்டர்ட் மெனு.

    பதிலளிநீக்கு
  6. சரியான சாப்பாட்டு ராம்னோ? நல்ல ரசனையுடன் ஒவ்வொரு ஐட்டத்தையும் விளக்கமா சொல்லி இருக்கீங்களே?(டேக் இட் ஈசி)

    பதிலளிநீக்கு
  7. நாலுமுழமோ அஞ்சு முழமோ இப்படிப் படங்கள் போட்டால் இரண்டு வாய்கள் இருந்தால் கூட போறாது.:)
    ஆனால் மைதா பண்டங்களிடம் ஜாக்கிரதையா இருக்கணும். வயிற்றில் ஈஷிக் கொண்டுவிட்டால் வம்பு. மதுரையில் இவ்வளவு கடைகளை மிஸ் பண்ணி இருக்கிறேனே:(
    த்ஸ்ச்ச்ச்ச்ச்.மனசால சாப்பிடுகிறேன்;))0

    பதிலளிநீக்கு
  8. தோழர்,
    அறிவு என்பது விலை மதிக்க முடியாதது ஆகையால் அதை இலவசமாக கொடுக்க வேண்டும் என்ற கொள்கை உடையவன் நான்...
    நானும் பல பேரின் அறிவை நுகர்ந்து, அதை சிறிதாக்கி பதிவாக பிறர் பார்வைக்கு வைக்கிறேன்.. என்னிடம் வரும் அனைத்தும் இந்த உலகத்தில் இருக்கும் பிறரிடம் எடுக்கப் பட்டவையே... ஆகையால் என்னிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.... நீங்கள் தாராளமாக என் வலை பூவில் வரும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்... என் வலை பூவில் வரும் கருத்துக்கள் எனக்கு மட்டுமே சொந்தமானது அல்ல என்பது என் எண்ணம்... ஆகையால் மன்னிப்பும் அவசியமற்றதாகிறது... உங்கள் பதிவு அருமை... தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  9. நாலு முழத்துல எவ்ளோ முழம் இன்னும் பாக்கி இருக்கு ?

    பதிலளிநீக்கு
  10. எவ்வளவு ஹொட்டல்?

    மதுரையில் எஸ்.எஸ். காலனி குரு மாமா மெஸ்ஸில் சாப்பிட்டிருக்கீங்களா? இப்ப அதெல்லாம் இருக்கான்னே தெரியவில்லை.

    சுவை நன்றாக இருக்கு. அதனால் நாக்கு நீளம் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  11. ம்ம்ம் சப்புகொட்ட வைக்கிறது... படங்களும் தகவலும்..

    பதிலளிநீக்கு
  12. வல்லிசிம்ஹன் கமேந்ட்.. அதே! அதே!
    இதைப் படித்ததும் loyaltyயை மதுரைக்கு மாற்றிக்கொண்டு விடலாம் போலிருக்குறதே?!

    ரவா உப்புமா பற்றி சுந்தர்ஜி ஒரு பதிவு எழுதியிருந்ததாக ஞாபகம். RVSஆ?

    பதிலளிநீக்கு
  13. photo பிரமாதம். 1000 என்று கண்ணை இடிக்கும் billboard என்னவாக இருக்கும்?

    பதிலளிநீக்கு
  14. ஹா... பசிக்க ஆரம்பிச்சிடுச்சு! பருத்திப் பால் எங்கே கிடைக்கிறதோ என்னவோ, புண்ணாக்கு சட்னி சென்னையில் பல ஹோட்டல்களில் உண்டு!

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  15. உணவு பதார்த்தங்களுக்கு மதுரை மதுரைதான்... நல்ல விருந்திற்கு நண்பருக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  16. அய்யா ....ரீகல் டாக்கீசுக்கு எதிரே அல்வா வாங்கும்போது கொஞ்சம் மிக்சரும் சேர்த்து தருவாங்களே அதை மறந்து விட்டீர்களா....அது கிடக்கட்டும்.தினமணி டாக்கீசுக்கு பக்கத்தில் ரோட்டோரம் புளியோதரை பொங்கல் சாப்பிட்டதில்லையா .,

    பதிலளிநீக்கு
  17. எங்கள் எங்கள் நாக்கையும் நாலு முழமாக்கிட்டுத் தான் விடுவீங்க போல!! :-)) காத்திருக்கிறோம் 03,04,....!!

    பதிலளிநீக்கு
  18. நாக்கு நல்லா நீளட்டும்ங்க. சுவாரசியமா இருக்கு. இதுவரை மதுரை போனதே இல்லை. மதுரை வழியாக இரண்டு முறை சென்றதுண்டு அவ்வளவுதான். சீவல் தோசையும், விசாலம் காபியும் இப்பவே சாப்பிடணும் போல இருக்கே! சரி, சீவல் தோசைனா என்னதுன்னு சொல்லிடுங்க. நீங்க எழுதி இருக்கற விதமே சாப்பிடனும்ங்கற ஆசையை தூண்டி விடறது. அடுத்தமுறை நிச்சயம் மதுரை ஒரு விசிட் பண்ணியே தீரணும். முக்கியமா மீனாக்ஷி அம்மன் கோவிலை பாக்கவும், அதை விட முக்கியமா நீங்க எழுதி இருக்கற இடத்துல சாப்பிடவும்தான்.

    பதிலளிநீக்கு
  19. பூச்சி ஐயங்கார் கடை//

    ம்ஹும், கோபு ஐயங்காரைத்தான் பூச்சி ஐயங்கார்னு சொல்றீங்களோ? அங்கே தான்(மேலச் சித்திரை, வடக்குச் சித்திரை கூடும் கார்னரில்) நீங்க சொல்றது கிடைக்கும். அதுசரி உங்களே யாருக்கு அம்மூரு??? :)))))

    பதிலளிநீக்கு
  20. எங்க நாக்கெல்லாம் நீளம் அளக்கவே முடியாதாக்கும்! :))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!