தியேட்டர் நினைவுகள் 4 :: அக்னி நட்சத்திரம் - "இன்று போய் நேற்று வா..."
அதே சினிப்ரியா காம்ப்ளெக்ஸ்.
அக்னி நட்சத்திரம் படம் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டிருந்தது. ஏற்கெனவே
நான் சொல்லியிருப்பது போல ஒரே ஒரு படத்தைத் தவிர வேறு எந்தப் படத்தையும்
முதல் நாளே சென்று
பார்த்ததில்லை. அந்த ஒரு படம் கூட, ஒரு ஆர்வத்தில் என் அக்காவும், என்
மாமாவும் ரிசர்வ் செய்து அழைத்துக் கொண்டு போனதால் பார்த்தது..
எங்கள் நண்பர் சுகுமார் பற்றி முன்னரே கதைத்திருக்கிறேன். இந்த 'அக்னி
நட்சத்திரம்' படம் பற்றி ஊரெல்லாம் ஒரே பேச்சாயிருந்ததா.. மணிரத்னம்
என்றால் ஒரு கிரேஸ் இருந்தது. இவர் தன் உதவியாளர் பாலனை விட்டு வார
இறுதிக்கு டிக்கெட் ரிசர்வ் செய்யச் சொல்லி விட்டார். நான், சுகுமார்,
இன்னொரு நண்பன். இந்த இன்னொரு நண்பன் அதிகமாக படம் பார்க்காதவன். அதற்கு
அவன் மதமும் காரணம். சாதாரணமாகவே எதையும் ஒரு எள்ளலாகவே பேசுபவன்.
பின்னாளில் இவனால் சில கசப்பான அனுபவங்கள் உண்டாயின. அது வேறு கதை.
மாலை ஆறு மணிக்குப் படம். ஃபர்ஸ்ட் ஷோ என்று அழைப்பார்கள். ஆறரை மணிக்கு
மெயின் பிக்சர் தொடங்குவார்கள். அதுவரை விளம்பரங்கள், செய்திப் படம்
என்று ஓடும். சுகுமார் டீவி மெக்கானிக்காகக் கோலோச்சிக் கொண்டிருந்த காலம். அங்கிங்கு என அலைச்சல் அதிகம். அவருக்கு
எதையும் கடைசி நிமிடத்தில் செய்தே வழக்கம். ஆனாலும் நல்லவேளை அன்று
ஆறேகால் மணிக்குத் தியேட்டரை அடைந்து விட்டோம். டிக்கெட் கிழிப்பவர்
அலட்சியமாக சூயிங் கம் மென்றுகொண்டே கிழித்து - டிக்கெட்டைத்தான் - உள்ளே
அனுப்பினார். இடம் கண்டுபிடித்து அமர்ந்தோம். கூட்டம் சேர்ந்து
கொண்டிருந்தது. ஒவ்வொரு வரிசையும் முற்றுகை இடப்பட்டுக் கொண்டிருந்தது.
டார்ச் லைட்டுடன் தியேட்டர்ட்காரர் ஒருவர், உடன் ஒரு துணையுடன் உள்ளே வந்தார். படம் தொடங்கி இருந்தது. சுகப்ரியாவின் இதமான குளிரில் படத்தில் மூழ்கத் தொடங்கியிருந்த எங்களை எழுப்பினார் அவர்.
"கொஞ்சம் வெளியில் வாங்க"
"ஏன்?" என்றார் சுகுமார். அவர்தானே எங்கள் சீனியர்!
"வாங்க..." என்றவாறு எங்களை வெளியே இழுத்த - அழைத்த - அவர்கள் வெளியே
வந்ததும் டிக்கெட்டில் டார்ச் அடித்து எங்களைப் படிக்கச் சொன்னார்.
நாங்கள் முறைத்தவாறு "என்ன?" என்று கேட்டோம்.
"தேதியைப் பார்த்தீங்களா? இது நேற்றைய தேதிக்கான டிக்கெட்... இன்றைக்கு
வந்தால் எப்படி? உங்கள் ஸீட்டில் இன்று உட்காரவேண்டியவர்கள் வந்து சொன்ன
பிறகுதான் எங்களுக்கே தெரிந்தது.. போங்க..." என்று துரத்தி விட்டார்.
அசட்டுத்தனமாக உணர்ந்தோம்.
சுகுமார் இதை அவமானமாக நினைத்தார் அவர்
உதவியாளர் பாலன் வார இறுதி நாள் என்பதால் டிக்கெட் கிடைக்காததால் முந்தைய
தினத்துக்குச் செய்திருந்திருக்கிறார். (பின்னர் கேட்டபோது "நான்
உங்களிடம் அன்னிக்கே சொன்னேனே ஸார்" என்றார். இவர்தான் அதை கவனத்தில்
வைக்கவில்லை!). வேறு டிக்கெட் அங்கேயே வாங்கலாம் என்றால் படம் ஹவுஸ் ஃ
புல். அதையும் கேட்டுப்பார்த்தார். அத்தனை பேர்கள் முன்னிலையில்
வெளியேற்றப்பட்ட கடுப்பு அவருக்கு. 'காசு கொடுத்து விடுகிறோம்.. தனியாக
நாலு மடக்கு நாற்காலியாவது போடுங்கள்' என்றார். ஊ...ஹூம்!
தியேட்டர்க்காரர்கள் நான்கைந்து பேர்கள் வெளியில் நின்றிருந்த
எங்களையே பார்த்துக் கொண்டிருந்ததை பொறுக்காத சுகுமார் அடுத்த விபரீத
முடிவை எடுத்தார். சினிப்ரியா, மினிப்ரியா, சுகப்ரியா மூன்று
தியேட்டர்களில் சினிப்ரியாதான் மூத்த தியேட்டர், பெரிய தியேட்டர். அங்கு
என்ன படம் ஓடுகிறது என்று பார்த்தால் 'குரு சிஷ்யன்' ஓடிக் கொண்டிருந்தது.
அதற்கு டிக்கெட் வாங்கிவரச் சொல்லிப் பணத்தைக் கொடுத்தார். நாங்கள்
வேண்டாம், வேண்டாம் என்று மறுக்க, தியேட்டர்க்காரப் பையன் ஒருவனே சென்று
அங்கு டிக்கெட் வாங்கி வந்து கொடுத்தான்.
இப்போது மற்ற பல படங்களோடு ஒப்பிடுகையில் குரு சிஷ்யனின் காமெடியை
கொஞ்சமாவது ரசிக்க முடிகிறது. ஆனால், தவறு எங்களுடையதாயினும்,
அவமதிக்கப்பட்டது போன்ற எங்கள் அன்றைய மன நிலையில் 'குரு சிஷ்யன்' அன்று
எங்களுக்கு ரசிக்கவில்லை. கடுப்புதான் வந்தது. போதாக்குறைக்கு அந்த என்
இன்னொரு நண்பன் கிண்டலான விமர்சனங்களை எடுத்து வீட்டுக் கடுப்பேற்றிக்
கொண்டிருந்தான்.
பாதியிலேயே - இடைவேளை விடும் முன்னரே எழுந்து வந்து விட்டோம்.
ஆகா
பதிலளிநீக்குவித்தியாசமான அனுபவம்தான் நண்பரே
தம +1
கண்டு பிடித்தேன் கண்டு பிடித்தேன் காதல் நோயை கண்டு பிடித்தேன் ...பாடல் வரையாவது படம் பார்த்தீர்களா :)
பதிலளிநீக்கும்ம்ம்ம் இப்படி ரிசர்வ் செய்து கொண்டெல்லாம் போனதில்லை. பொதுவாக சினிமாவே எங்களுக்கு இலவச பாஸ் கிடைக்கும்போது தான் பார்ப்போம். அப்போது படம் வெளி வந்து நூறு நாட்களுக்குக் குறையாமல் ஆகி இருக்கும். பல சமயங்களில் மறுநாள் புதுப்படம் போடறாங்கனு அப்பா முதல்நாள் அந்தப் பழைய படத்துக்குப் பாஸை வாங்கிட்டு வருவார். காசு கொடுத்து சினிமா பார்த்தது அதுவும் முன்கூட்டியே ரிசர்வ் எல்லாம் செய்து பார்த்தது என்றால் அது "மை டியர் குட்டிச் சாத்தான்" படத்துக்கு மட்டும் தான்! :)
பதிலளிநீக்குஇந்த மாதிரி கன்ஃப்யூஷன் எல்லாம் சில விமானப் பயணச் சீட்டில்தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் அப்போது உங்கள் மனநிலை யூகிக்க முடிகிறது
பதிலளிநீக்குகொடுமையான அனுபவம்தான்!
பதிலளிநீக்குஹாஹாஹா அனுபவம் புதுமைதான் நண்பரே..
பதிலளிநீக்குஇதுவரை அக்னி நட்சத்திரம் படம் பார்க்கவில்லையா?
பதிலளிநீக்குஅடடா....அக்னி நட்சத்திரம் சுட்டு விட்டதே....ஆமாம் செம கடுப்பாகத்தான் இருக்கும்....
பதிலளிநீக்குதியேட்டரை பார்த்து இருக்கிறேன்.. படம் பார்த்தது இல்லை..
பதிலளிநீக்குதியேட்டரை பார்த்து இருக்கிறேன்.. படம் பார்த்தது இல்லை..
பதிலளிநீக்குஅடப் பாவமே, அப்புறமாவது அக்னி நட்சத்திரம் பார்த்தீர்களா.
பதிலளிநீக்குரொம்ப்க் கஷ்டமாக இருந்திருக்கும்.
ஹஹஹஹஹ் செம அனுபவம்தான் போங்க... டிக்கெட் எல்லாம் ரிசர்வ் செய்து போனதில்லை. இப்போதும் பாலக்காட்டில் அப்படித்தான்...ஊரிலும் அப்படித்தான்..
பதிலளிநீக்குகீதா: ஊரில் இருந்தவரை குடும்பத்தோடு எப்போதேனும் போவதுதான்...அதுவும் கூட்டுக் குடும்பம் என்ப்தால் சென்டர் வரை விஷயம் சென்று பெர்மிஷன் கொடுக்கப்பட்டால்...கல்யாணம் ஆன பிறகு நோ மூவிஸ். வீட்டில் யாரும் பார்க்கும் வழக்கம் இல்லாததால். மகன் பிறந்ததும் அவனும் நானும் மட்டும் ஆங்கிலப்படங்கள் பார்த்ததுண்டு. சமீபகாலமாகத்தான் ஒரு சில படங்கள் விரல் எண்ணிக்கையில் நானும் மகனும் பார்த்தது. இங்கு சென்னையில். பெரும்பாலும் வீட்டில் கணினியில் இல்லை டிவியில்....அதுவும் மீன மேஷம் பார்த்துதான்...
செம அனுபவம் தான் போங்க!
பதிலளிநீக்குநெய்வேலியின் அமராவதி தியேட்டரில் எங்களுக்கும் இப்படி ஒரு அனுபவம் கிடைத்திருக்கிறது. மேட்னி ஷோவுக்கு பதில் மாலை ஷோவுக்குப் போய் வீடு திரும்பினோம்.... அது பற்றி எழுதி இருக்கிறேன்.
http://venkatnagaraj.blogspot.com/2014/04/blog-post.html