புதன், 1 ஜூன், 2016

தியேட்டர் நினைவுகள் - 2 :: திறந்தவெளித் திரையரங்க அனுபவங்கள்




          இந்தத் தியேட்டர் நினைவுகள் அனுபவங்களில் வேறு சில அனுபவங்களுக்குச் செல்லுமுன் திறந்தவெளித் திரையரங்க அனுபவத்தைச் சொல்லி விடவேண்டும்!  சென்னையில் டிரைவ் இன் தியேட்டர்(கள்) எங்கு இருக்கின்றன என்று எனக்குத் தெரியாது.  பிரார்த்தனா என்று ஒரு தியேட்டர் இவ்வகையில் உள்ளது என்று தெரியும்.  காரில் அமர்ந்தபடியே, அல்லது நாற்காலிகள் எடுத்துக் கொண்டுபோய் அங்கே போட்டு அமர்ந்து படங்கள் பார்க்க முடியும் என்று அறிகிறேன்.




          நான் இந்த மாதிரித் தியேட்டர்களில் பார்த்ததில்லை.  ஆனால் இந்த அனுபவத்தில், வேறு இடங்களில் படம் பார்த்திருக்கிறேன். தஞ்சையிலும் சரி, மதுரையிலும் சரி.


          வீட்டு வசதிக் குடியிருப்பில் வீடு அமைந்திருந்ததால், இந்த அனுபவம் தஞ்சையிலும் மதுரையிலும் கிடைத்தது.  வீட்டு வசதிக் குடியிருப்பைப் பொறுத்தவரை சுதந்திரதினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடக்கும்.  



          சுவாரஸ்யமாகப் பொழுது போகும்.  இந்தக் குடியிருப்பில் மாதத்துக்கு ஒருநாள் - சில சமயம் இரண்டு நாட்கள் - படம் போடுவார்கள்.  இதற்காக குடியிருப்பிலிருக்கும் ரேஷன் கடையில் தினம் மாலை கவனித்துக் கொண்டிருப்போம்.  படம் போடும் நாளன்று அங்கு, கடை வாசலில் ஒரு போர்ட் எழுதி வைத்திருப்பார்கள்.  ஓரிரு முறை அந்த போர்டை நானும் எழுதி இருக்கிறேன்!  அதைப் பார்த்ததுமே அவரவர்கள் அவரவர்கள் வீடுகளிலும், பக்கத்து வீடுகளிலும், நண்பர்களுக்கும் ஒலிபரப்பி விடுவார்கள்.  குடியிருப்பே பரபரப்பாகி விடும்!  அந்த இனிய மாலைக்குத் தயாராகத் தொடங்கி விடும்.


 
          இருட்டியதும்தான் படம் போடுவார்கள்.  மாலை ஆறு மணி போலவே அந்தச் சிறு மைதானம் களை கட்டத் தொடங்கி விடும்.  முன்னால் 'தரை டிக்கெட்டில்' உட்கார நிறைய இடம் விட்டு பின்னால் நாற்காலிகள் போடப்படும்.  குடியிருப்பில் இருந்த ஒரு மிருக வைத்தியர் ப்ரொஜக்டர் வைத்திருந்தார்.  அவர் குடி வருவதற்குமுன் ப்ரொஜக்டரும், அதை இயக்க ஒரு ஆளும் வாடகைக்கு வருவார்கள். ரொம்பத் தாமதமாகும் என்பதோடு,  மாதாந்திர சந்தாவும் கொஞ்சம் கூடுதலாக வசூலித்துக் கொண்டிருந்தார்கள்.   (குடியிருப்பில் மாதா மாதம் "அஸோஸியேஷன் பணம்" என்று வந்து வசூல் செய்வார்கள்.  குடியிருப்பில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் வீடு வீடாகப் புகுந்து புறப்படுவார்கள்)  அவர் வந்தபின் அவர் தனது  ப்ரொஜக்டரை எடுத்துக் கொண்டு வந்து படம் போடுவதற்கு தயார் செய்ய ஆரம்பித்து விடுவார்.

          
          உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த நான் என் குழுவினருடன் முதல் கொஞ்ச நாட்கள் தரையில் அமர்ந்து படம் பார்த்தேன்.  நிலவொளியில், இரவில் திறந்தவெளியில் படம் பார்ப்பது தனி அனுபவம்.  ரீல் மாற்றும் நேரங்களில் சலசலவெனப் பேசிக் கொண்டிருப்போம்.  கொஞ்ச நாட்களுக்குப் பின்னர் வேறு சில காரணங்களுக்காக நாற்காலிக்குச் சென்று விட்டேன்!  குடியிருப்பில் சுமார் 300 வீடுகளுக்கு மேல் இருக்கும் என்று நினைவு.  பெரும்பாலான வீடுகளிலிருந்து ஓரிருவராவது வந்திருப்பார்கள்.  இரவு நேரத்தில் அங்கு ஒரு குழுமமாக அமர்ந்து படம் பார்த்த அனுபவங்கள் மறக்க முடியாதவை.  படம் போடுமிடத்துக்கு அருகிலேயே என் வீடு அமைந்திருந்தது.


 
          மதுரையிலும் இதே அனுபவம் உண்டு.  அங்கு கூடுதலாக, ரிசர்வ் லைன் குடியிருப்பிலும் அடிக்கடி படம் போடுவார்கள்.  சைக்கிளில் சுற்றிக் கொண்டிருக்கும் நான்தான், அந்த அறிவிப்பைப் பார்த்து விட்டு வந்து எங்கள் தெருவுக்கே சொல்வது வழக்கம்.  ரிசர்வ் லைன் குடியிருப்பு மைதானம் நீண்ட மைதானம்.  மணல் இருக்கும்.  நடுவில் பெரிய திரை கட்டி படம் போடுவார்கள்.  ஆரம்பிக்கவே இரவு 9 ஆகி விடும்.  முடிய நடு இரவு ஆகும்.  குடியிருப்பில் உள்ள ஆண்களும், பெண்களும் குழுக் குழுவாகக் கிளம்பிச் சென்று படம் பார்த்துத் திரும்புவார்கள்.    இளம்பெண்களும் வருவார்கள்.  குழுவாகச் செல்வதால் பயம் இல்லை.  மேலும் தெருவாசிகள் குடும்பத்தோடு வருவதால் அந்த வீட்டு ஆண்களின் துணையும் இருக்கும்.





          ரிசர்வ் லைன் மைதானத்தில் சிலர் கையடக்கமான டிரான்சிஸ்டரைக் கொண்டு வருவது வழக்கம்.  ரீல் மாற்றும்போதோ, மின்சாரம் தடைப்பட்ட நிமிடங்களிலோ அமைதியான அந்த இடத்தில் இரவு 11 மணிக்கு மேல் மதுரை வானொலியின் 'இரவின் மடியில்' நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும் பாடல்களைக் கேட்பது தனிச் சுகம்.



          நள்ளிரவு பனிரண்டு,  அல்லது ஒரு மணி வாக்கில் திருவிழா போல எங்கள் குடியிருப்புக் கூட்டம் குழுக்குழுவாக வீடு திரும்பும் காட்சி ஒரு சுவாரஸ்யமான காட்சி. மதுரை வந்தபின் நான் இந்த மாதிரிப் படங்களுக்கு சைக்கிளில் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.  இங்கும்,
அங்கும் ஏகப்பட்ட படங்கள் பார்த்திருக்கிறேன். அப்போது சமீப காலத்தில் ரிலீஸான படங்கள் முதல், பழைய படங்கள் வரை!  மதுரையில் ஒருமுறை நடு இரவில் உத்தமபுத்திரன் பார்த்து விட்டுத் திரும்புகையில் ஒரு ரௌடிக் கூட்டத்தால் நான் வழிமறிக்கப்பட்டு மிரட்டப் பட்டது தனிக்கதை!

38 கருத்துகள்:

  1. எண்பதுகளில் ...தீந்தமிழ் தியாகராஜர் கல்லூரியில் ,திரையைக் கட்டி படம் போடுவார்கள் ,மறுகரையில் இருந்து நண்பர்களுடன் வைகை ஆற்றைக் கடந்து சென்று படம் பார்த்து ரசித்தது நினைவில் வருகிறது,அன்று ,ஓடி விளையாடு தாத்தாவில் வந்த ஸ்ரீபிரியா இன்னும் நினைவில் நிற்கிறார் :)

    பதிலளிநீக்கு
  2. ரௌடிக் கூட்டம் என்ன மிரட்டியது என்று அறிய ஆவல்! எனக்கும் திறந்தவெளித் திரையரங்குகளில் பழக்கம் உண்டு. அது குறித்ஹ்டுப் பின்னர்! :)

    பதிலளிநீக்கு
  3. நீங்கல்லாம் சினிமாப் பார்த்துட்டுக் குழுவாக வந்தீங்கன்னா நாங்கல்லாம் மதனகோபால சாமி கோயிலிலோ கூடலழகர் கோயிலிலோ, இம்மையில் நன்மை தருவார் கோயிலிலோ நடக்கும் உபந்நியாசங்களைக் கேட்டுவிட்டுக் குழுவாக இரவு பத்தரை வாக்கில் வீட்டுக்குத் திரும்புவோம். சில சமயங்களில் சேதுபதிப் பள்ளியிலும் நடைபெறும். இரவு நேர மதுரையின் அழகு தனியாக இருக்கும். அந்த இரவில் மெல்லிய குளிர்காற்று வீசப் பேசிக் கொண்டே மதுரையின் வீதிகளில் நடப்பது தனி சுகம்.

    பதிலளிநீக்கு
  4. இதுமாதிரி தியேட்டர்களில் படம் பார்ப்பது என்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கும். அதனை நான் அனுபவித்துள்ளேன். அந்நாட்களை நினைவுபடுத்தின இப்பதிவு.

    பதிலளிநீக்கு
  5. //வழிமறிக்கப்பட்டு மிரட்டப் பட்டது //

    அவ்ளோதானா.... வெறும் மிரட்டல் மட்டும்தானா....... :-) :-)

    பதிலளிநீக்கு
  6. திறந்த வெளியில் சினிமா பார்த்த அனுபவம் இல்லை! பொது டிவியில் சினிமா பார்த்த அனுபவம் உண்டு! சுவாரஸ்யமான தகவல்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  7. திருச்சியில் பி எச் இ எல் குடியிருப்பு வளாகத்தில் ஆஃபிசர்ஸ் க்லப்பில் ஒவ்வொரு சனிக்கிழமை மாலையில் திறந்த வெளியில் படம் திரை யிடுவார்கள் அநேக மாக நான் திருச்சியில் பார்த்த படங்கள் எல்லாமே இங்குதான்

    பதிலளிநீக்கு
  8. ஆஹா.. அழகான நினைவலைகளைக் கிளப்பிவிட்டீர்கள்.. நானும் இதுபோல் சிறுவயதில் திறந்தவெளியில் திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன். பாவமன்னிப்பு, அவ்வையார், ரத்தக்கண்ணீர், பாசமலர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாவற்றையும் விட விநாயகர் சதுர்த்தி அன்று எங்கள் தெருவின் பிள்ளையார் கோவில் சுவரில் காட்டப்பட்ட கார்ட்டூன் படங்கள்தான் இன்றும் மனத்தில் பசுமையான நினைவுடன்.. அந்தக்காலத்தின் அனுபவங்களும் சுவாரசியங்களும் தனிதான்.

    பதிலளிநீக்கு
  9. எனக்கும் திருவிழாக்காலங்களில் தெருவில் படம் பார்த்த அனுபவம் உண்டு இந்த தலைமுறையினருக்கு இது இனிமேல் கிடைக்காது

    ரௌடிக் கூட்டத்தால் வழி மறிக்கப்பட்டு மிரட்டப் பட்ட கதை வரட்டும்.

    பதிலளிநீக்கு
  10. நானும் இது போல் திறந்தவெளியில் சினிமா படங்கள் பார்த்து இருக்கிறேன். சிறு வயதில் .

    தஞ்சை, திருச்சி, சிவகாசி, திருவெண்காடு, கோவை, மாயவரம் ஊர்களில் பார்த்து இருக்கிறேன்.

    கோவையில் இமானுவெல் சர்ஜில் டாக்குமென்டரி படங்கள் பார்த்து இருக்கிறேன்.

    ரெளடி கூட்டத்தால் வழி மறிக்கப்பட்டு மிரட்ட பட்ட அனுபவம் என்ன?

    பதிலளிநீக்கு
  11. வாங்க பகவான் ஜி...தியாகராஜர் கல்லூரியில் திரைப்படமா? அட! நான் தஞ்சையில் தூய அந்தோணியார் பள்ளியில் படித்தேன். அங்கு தெய்வமகன், எங்க மாமா மற்றும் சில லாரல் ஹார்டி படங்கள் என்று சில படங்கள் எங்கள் பள்ளியிலேயே திரையிட்டிருக்கிறார்கள். ப்ரொஜக்டருக்குப் பக்கத்திலேயே அமர்ந்திருக்கும் உடற்பயிற்சி ஆசிரியர் காதல் காட்சிகளில் திரைக்குமுன் கை வைத்து மறைத்துக் கொள்வார்!

    பதிலளிநீக்கு
  12. வாங்க கீதா மேடம்.. ரௌடிக் கூட்டம் மிரட்டியதன் பின்னணியில் ஒரு சம்பவம் உண்டு. முடிந்தால் பின்னர் எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  13. கீதா மேடம்.. உபந்நியாசம் கேட்டு விட்டு பத்தரை, பதினொன்றுக்குள் வந்து விடுவீர்களாக இருக்கும். நாங்கள் படம் முடிந்து வர இரவு 12 அல்லது ஒரு மணி ஆகும்! மேலும் பெண்களும், சற்றே வயதில் கூடியவர்களும்தான் குழுவாக நடந்து செல்வார்கள். நான் சைக்கிளில் பறந்து விடுவேன்! பெரும்பாலும் கடைசியாகத்தான் மைதானத்தை விட்டுக் கிளம்புவேன்.

    :)))

    பதிலளிநீக்கு
  14. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா... ஆனால் இது தியேட்டரில் சேர்த்தி இல்லை!

    பதிலளிநீக்கு
  15. வாங்க ஹுஸைனம்மா... என்ன ஒரு ஆர்வம்! அதற்கு மேலும் எதிர்பார்க்கிறீர்களோ!!!

    :)))

    பதிலளிநீக்கு
  16. நன்றி 'தளிர்' சுரேஷ். பொது டிவி! அது தனிக்கதை. அப்புறம் ஒரு பதிவு தேத்துவோம்!

    பதிலளிநீக்கு
  17. நன்றி ஜி எம் பி ஸார். ஆக, எல்லோருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கிறது!

    பதிலளிநீக்கு
  18. நன்றி சகோதரி கீதமஞ்சரி.. கார்ட்டூன் படங்கள் என்றால் டாம் அண்ட் ஜெர்ரியா? வேறு ஏதாவதா?

    பதிலளிநீக்கு
  19. நன்றி கில்லர்ஜி.. முடிந்தால் பின்னர் எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  20. நன்றி கோமதி அரசு மேடம். ரௌடி அனுபவம் பற்றிய வரி எல்லோரிடமும் ஒரு ஆர்வத்தைக் கிளப்பி விட்டிருக்கிறது போலவே.. அதை இந்தத் தியேட்டர் நினைவுகள் பதிவோடு சேர்த்து எழுதுவதா, தனியாக எழுதுவதா என்று பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  21. சொக்கலால் பீடி கம்பெனிகாரங்க...நாங்க குடியிருப்பை ஒட்டியுள்ள களத்துமேட்டில் படம் போட்டதாக நினைவு.. ஆனால் நான் படம் பார்த்ததில்லை

    பதிலளிநீக்கு
  22. சொக்கலால் பீடி கம்பெனிகாரங்க...நாங்க குடியிருப்பை ஒட்டியுள்ள களத்துமேட்டில் படம் போட்டதாக நினைவு.. ஆனால் நான் படம் பார்த்ததில்லை

    பதிலளிநீக்கு
  23. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  24. திறந்த வெளியில் படம் பார்ப்பது என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. இடையில் பவர் கட் ஆனாலோ, ரீல் மாத்த வேண்டி வந்தாலோ, பசங்கள் எல்லோரும் விசில் அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.திரை வெளிச்சமும் இல்லாமல் இருட்டாகிவிடும் நேரம் சில காதலர்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டு சில்மிஷங்கள் செய்வதுண்டு. தின் பண்டங்கள் பறிமாறப்படும். வீட்டிற்குச் சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு வருவதும் நடக்கும். சிலர் பாய் தலையணை, சாய்வு நாற்காலி முதற்கொண்டு எடுத்து வந்து படம் பார்ப்பார்கள். படம் முடிய அதிகாலை ஆகிவிட்டால், பக்கத்து ஊர்க்காரர்கள், எங்கள் ஊர்க்காரர்களும் ஒரு சிலர் அப்படியே குளத்தில் குளித்துவிட்டுச் செல்வதுண்டு. பெரும்பாலும் கறுப்பு வெள்ளை படங்கள், சில சமயம் கலர் படங்கள்..லேட்டஸ்ட் படங்கள் எல்லாம் பார்த்தது இல்லை.

    சென்னையில் திறந்தவெளி அரங்கு பிரார்த்தனா சென்றதுண்டு. ரமணா படம் அங்குதான் பார்த்தேன். சாப்பாடும் எடுத்துக் கொண்டுதான் சென்றோம். ஆனால் ஊரில் பார்த்த அந்த சுவாரஸ்யம், மகிழ்வு இல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
  25. நான் ராசிங்கபுரத்தில் இருந்த போது எங்கள் ஊரிலும் முத்தாலம்மன் கோயில் அருகில் வருடத்திற்கு ஒரு முறை சில விளம்பரக் கம்பெனிகள் வந்து அவர்களது பொருட்களின் விளம்பரங்களைப் போடும் போது திரைப்படமும் போடுவது உண்டு. அது போன்று விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஆவணப் படங்களும் போடுவதுண்டு அப்படிப் போடும் போது திரைப்படங்கள் போடுவதுண்டு. ஆ என்று வாயைப் பிளந்த படி, மிகவும் வியப்புடன் பார்த்திருக்கின்றேன். உங்கள் பதிவு பற்றி கீதா விவரித்து, என் அனுபவத்தைக் கேட்ட போது நான் இதைச் சொன்னதும் கீதா இதையே ஒரு பதிவாகப் போடலாமே என்று சொன்னதால் முழுவதும் இங்கு சொல்லவில்லை. பதிகின்றேன் ஸ்ரீராம். ஒரு பதிவு தேறிவிட்டது! ஹ்ஹஹ நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  26. ஸ்ரீராம் உங்களுக்கே ரௌடிகளின் தாக்குதலா....படம் பார்த்த நினைவில் ஹீரோயிஸம் காட்டினீர்களா...அறிய ஆவல்...

    பதிலளிநீக்கு
  27. நன்றி வலிப்போக்கன்.

    நன்றி வலிப்போக்கன். :)))

    பதிலளிநீக்கு
  28. நன்றி கீதா... ஆமாம், நாங்களும் தலையணை சகிதம் சென்றதுண்டு. ரீல் மாற்றும்போது நீங்கள் சொன்ன சில்மிஷங்கள் உண்டுதான்! ஆனால் இடதுபுறம் பெண்கள் வரிசையும், வலது புறம் ஆண்கள் வரிசையும் இருக்கும். நான்காவது படத்தில் அஸ்பெஸ்டாஸ் கட்டிடம் ஒன்று தெரிகிறதா? அதன் சுவரில்தான் படம் போடுவார்கள்! நான் நாற்காலிக்கு மாறியதில் கூட ஒரு காரணம் உண்டு. ஆனால் சொ..........ல்..........ல.........மா..........ட்........டே........னே...!

    பதிலளிநீக்கு
  29. நன்றி துளசிஜி... பதிவு தேறி விட்டதா? ராயல்டி அனுப்பிடுங்க... ஆமாம், சொல்லிட்டேன்!

    பதிலளிநீக்கு
  30. //ஸ்ரீராம் உங்களுக்கே ரௌடிகளின் தாக்குதலா....படம் பார்த்த நினைவில் ஹீரோயிஸம் காட்டினீர்களா...அறிய ஆவல்..//

    இந்த ஆவல் துளசிஜிக்கா? கீதாவுக்கா? அறிய எனக்கு ஆவல்!

    பதிலளிநீக்கு
  31. ஸ்ரீராம் //இந்த ஆவல் துளசிஜிக்கா? கீதாவுக்கா? அறிய எனக்கு ஆவல்!//

    ஹஹாஹ்ஹ இருவருக்குமே என்பதால் தான் பேரே போடலை தனியாக....துளசி என்றோ கீதா என்றோ..ஹிஹிஹி (தட்டியது கீதா...)

    பதிலளிநீக்கு
  32. //நன்றி துளசிஜி... பதிவு தேறி விட்டதா? ராயல்டி அனுப்பிடுங்க... ஆமாம், சொல்லிட்டேன்!//

    கொடுத்துட்டா போச்சு! என்னனு சொல்லிடுங்க!! பதிவும் லேட்டாகும் ராயல்டியும் லேட்டாகும்..ஹிஹிஹி


    (கீதா: நேற்று இரவு வழக்கம் போல், துளசி சொன்ன இந்தக் கமென்ட் கொடுக்க முனைந்த போது நெட் போயிருச்சு. இதோ இப்ப காலைல வருது....ஒரு வேளை ராத்திரியானா நெட்டிற்கும் தூங்கணும் போல!!! பரவால்ல "இயர்லி டு பெட் இயர்லி டு ரைஸ்" மனுஷன் பின்பற்றுகின்றானோ இல்லையோ பிஎஸ் என் எல் நெட் நன்றாகவே பின்பற்றுகின்றது!!!)

    பதிலளிநீக்கு
  33. நன்றி துளசிஜி, கீதா! ரௌடிகளின் தாக்குதல் கதை சற்றே நீண்டது. சுருக்கி எழுத முயற்சிக்கிறேன்! :)))

    நெட் பிராப்ளம் இங்கும் உண்டு, எங்கும் உண்டு!

    பதிலளிநீக்கு
  34. சென்னையில் டிரைவ் இன் தியேட்டர்(கள்) எங்கு இருக்கின்றன என்று எனக்குத் தெரியாது. பிரார்த்தனா என்று ஒரு தியேட்டர் இவ்வகையில் உள்ளது என்று தெரியும். காரில் அமர்ந்தபடியே, அல்லது நாற்காலிகள் எடுத்துக் கொண்டுபோய் அங்கே போட்டு அமர்ந்து படங்கள் பார்க்க முடியும் என்று அறிகிறேன்.

    கடவுளே இந்த பிரார்த்தனாவில் நாங்கள் படம் பார்த்த கொடுமையை மறக்க முடியாது. "காரில் அமர்ந்து கொண்டு பார்க்கலாம், நாம் சேர் எடுத்துக் கொண்டு போய் போட்டுக் கொண்டு உட்காரலாம், அல்லது ஜமக்காளம் எடுத்துக் கொண்டு போய் விரித்துக் கொண்டு படுத்துக் கொண்டு கூட பார்க்கலாம்". என்றெல்லாம் பில்ட் அப் கொடுத்து என் சகோதரி மகன் பிரார்த்தனாவில் சூபர் ஸ்டார் நடித்த 'எந்திரன்' படத்திற்கு டிக்கெட் புக் பண்ணியிருந்தான். அதில் ஒன்றும் தவறு இல்லை. புக் பண்ணியிருந்த நாள்தான் தவறு. படம் வெளியாகி இரெண்டாம் நாள் சனிக்கிழமை!!

    உள்ளே நுழைய முடியாமல் கும்பல், தள்ளு முள்ளு. எப்படியோ உள்ளே நுழைந்து எங்கள் வண்டியை பார்க் பண்ணினால், ஒரு கரை வேட்டி வந்து அது அவர்கள் இடம் என்று எங்களை விரட்டியது. கிடைத்த மற்ற பார்கிங் எல்லாம் டவேராக்களாலும், இன்னோவாக்களாலும் சூழப் பட்டிருந்ததால் வண்டியில் அமர்ந்தபடி படத்தை சரியாக பார்க்க முடியாது என்பதால் கீழே இறங்கி முதல் வரிசையில் தரையில் அமர்ந்து படம் பார்த்தோம். " இவ்ளோ செலவழித்து கடைசியில் நம் தலை எழுத்து இவ்ளோதானா"? என்றார் என் அக்காவின் மாப்பிள்ளை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன்... பிரார்த்தனா அனுபவம் கொடுமையா இருந்திருக்கும் போலவே....!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!