சட்னி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சட்னி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18.8.14

நாக்கு நாலு முழம் தோசை புராணம் 3



[தோசை பதிவே நீள்வதால் சரவணபவன் சாம்பார் ரெஸிப்பி அடுத்த வாரம் வெளிவரும்!]

அடையையும் தோசைக் குடும்பத்தில் சேர்க்க வேண்டும். ஆனால் தோசை அளவு சாதுவான உணவல்ல அது. சேர்க்கப்படும் பருப்பு வகைகளால் வயிற்றைச் சங்கடம் செய்யும் திறன் இதற்கு உண்டு.  அடையைக் கூட கடனே என்று வார்க்காமல் (வார்க்காமல் என்று கூட சொல்லக் கூடாது. அடையைத் தட்ட வேண்டும்!) அரையாய், கால் பாகமாய் உடைந்த பருப்புகள் மேலே தெரிய, பச்சை மாவு போன்ற தோற்றத்திலேயே இல்லாமல், நடுவில் கருப்பாக கருக்கியும் விடாமல் பொன் நிறமாக டை தட்டுவதும் ஒரு கலை. எடுத்துத் ட்டில் போட்ட பின்னும் தங்க நிற அடையின் நடுப்பகுதிகள் சீரியல் லைட் மினுக்குவது போல எண்ணெய் மினுக்கும். மினுக்க வேண்டும்! 

அடைக்கு அவியல் காம்பினேஷன் என்று சொல்வார்கள். எனக்கு அது 'ஊ...ஹூம்'தான்! அடையை ஒன்றும் தொட்டுக் கொள்ளாமல் வெறுமனே அப்படியே சாப்பிடலாம்.  வேண்டுமானால் கொஞ்சம் வெல்லம் தொட்டுக் கொள்ளலாம். (முக நூலில் ஸ்ரீ கருடாழ்வார் சாம்பார் தொட்டுக் கொள்வது இதற்குப் பொருத்தம் என்று சொல்லியிருக்கிறார்.
நல்ல சாம்பார் அமைந்தால் அதுவும் திவ்யம்தான்!) வெங்காயம் போட்டு தட்டுவது தனிச்சுவை. தேங்காய் நிறைய போட்டு விட்டால் காரம் தெரியாமல் போகும். காரம் தெரிந்தாலோ மறுநாள் வயிறு நிறைய பேர்களைப் படுத்தி விடும். ஆனாலும் அடைக்கு தனி ரசிகர்கள் குழாமே உண்டு - என்னையும் சேர்த்து! நான் காரக் கட்சி!  

                                                                   

மூன்று அல்லது நான்கு அடைகள் சாப்பிடுவேன்.

கடைகளில் அடை சாப்பிடுவது எனக்கு சம்மதமில்லை. வீட்டில் செய்து சாப்பிடுவதே சிலாக்கியம்! அவர்களுக்கு இவ்வளவு நகாசு வேலைகள் செய்ய நேரமில்லை. வியாபாரம்! சாப்பிட்டால் சாப்பிடு, இல்லை வேறு ஏதாவது ஆர்டர் பண்ணு'


                                                                                                               


சென்ற பதிவின் முந்தைய பதிவில் வெண்ணெய் தோசை என்று ஜி எம் பி ஸார் எழுதி இருந்தார். சீனு, 'முருகன் இட்லி கடை'யை ஞாபகப் படுத்தி இருந்தார். 

                                                                     
இரண்டையும் இணைத்து ஒரு விஷயம்.  சமீபத்தில் முருகன் இட்லி கடை சென்றபோது வெண்ணெய் ஊத்தப்பம் என்று ஒன்று அவர்கள் மெனுவில் சொல்ல, ஆர்டர் செய்தேன். 5 ரூபாய் வித்தியாசம் ஆனியன் ஊத்தப்பத்துக்கும்,  வெண்ணெய் ஊத்தப்பத்துக்கும்.

ஆனியன் ஊத்தப்பத்துக்கு மேலே ஒரு சிறு உருண்டை வெண்ணெய்!

                                                                
    
அப்புறம் பாசிப் பருப்பை மட்டும் அரைத்துச் செய்யப்படும் பெசெரெட்டு. வீட்டில் சமயங்களில் அடை வார்க்கும்போது சரியாக வரவில்லை என்றால் 'இன்னொரு பெசெரெட் தோசை போடு' என்று கிண்டல் செய்து வாங்கிக் கட்டக் கொண்டதுண்டு!

                                                                 
   
மதுரை கோரிப்பாளையத்தில் ஒரு பாட்டி கல்தோசை வார்த்துத் தருவார். பல வருடங்களுக்கு முன்பான கதை இது! ரோடோரமாக தரைக்கடை.  பக்கத்தில் ஒரு ஸ்டூலில் அமர்ந்து,  கையில் தட்டைப் பிடித்தபடி சாப்பிடலாம். இட்லி சுடச்சுட இட்லிப் பானையிலிருந்து  எடுத்து தட்டில் கொட்டும் வேகத்திலேயே மக்கள் தட்டுகளோடு அலை மோதுவார்கள். உடனுக்குடன் காலியாகி விடும்.

  

கல் தோசை என்று தோசைக்கல்லில் சற்றே குண்டாக, ஆனால் ஊத்தப்பம் போல இல்லாமல் சிறிய வட்டங்களாக தோசை வார்த்துப் போடுவார். தொட்டுக்கொள்ள மிளகாய்ப்பொடி, தக்காளிச் சட்னி, வெங்காயச் சட்னி, தேங்காய்ச் சட்னி, சாம்பார், புதினா அல்லது கொத்துமல்லிச் சட்னி.. மெயின் டிஷை விட சைட் டிஷ் அதிகம் இருக்கும்! அது ஒரு (பொற்)காலம்!

தோசைக்கு மிளகாய்ப் பொடி சிலாக்கியம் என்பதை விட சௌகர்யம்! எதுவும் கைக்குக் கிடைக்காதபோது உடனே கிடைக்கும் ரெடிமேட் சைட் டிஷ்! ஆனால் இதற்கு நல்லெண்ணெய் அமைய வேண்டும். முன்னால் எல்லாம் செக்கு எண்ணெய் என்று வாங்கிக் கொண்டிருந்தோம். தனிச்சுவை, வாசனை உடையது. (செக்கு எண்ணெய் தயாரிப்பு பற்றி நிறைய துணைக்கதைகள் உண்டு. அதைக் கேட்டால் இதைச் சாப்பிடத் தோன்றாது!)

இதயம், இமயம், இந்திரா என்றெல்லாம் நிறைய நல்லெண்ணெய் வகைகள் கிடைக்கின்றன. ஆனாலும் வாசனையாக எண்ணெய் அமைந்தால்தான் மி.பொ. சுவைக்கும்.



                     
கீழே படத்தில் இருப்பது நாரத கான சபா காண்டீன் தோசை! கச்சேரி கேட்பதோடு, கலை நயமிக்க இந்த தோசையையும் டிசம்பர் சீசனில் கண்டு, (கச்சேரி)கேட்டு, உண்டு மகிழலாம்!  இப்போது நிறைய ஹோட்டல்களில் இந்த வடிவத்தில் தோசை 'செர்வ்' செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.



தோசை வார்க்கும்போது மாவை கல்லில் ஊற்றி நிரவும்போது எங்கும் மாவு மொத்தையாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக நடுவில்!  சில சமயம் மாவை நடுவில் ஊற்றி நிரவாமல், ரவா தோசைக்கு ஊற்றுவதுபோல வெளி வட்டத்திலிருந்து ஊற்றி நிரவுவதும் உண்டு! மாவு ஓரிடத்தில் சேர்ந்து மொத்தையாகக் கூடாது... அஷ்டே!   

இதை எழுதும்போதே அடுத்த தோசைக் குடும்பத்து உறுப்பினர் நினைவுக்கு வந்து விட்டார்!   

ஆப்பம்!


ஆப்பத்துக்கு என்று தனியாக கடையே வந்து விட்டது!  நளாஸ்! இன்னும் போய்ப் பார்க்கவில்லை. ஆப்பத்துக்கு தேங்காய்ப்பால், குருமா இரண்டும் தந்தாலும் என் சாய்ஸ் தேங்காய்ப்பால்தான்.  இதற்கான குருமா காரப்பொடி போடாமல் பச்சை மிளகாய்க் காரத்தை வைத்துச் செய்திருப்பார்கள்.  அவியலில் மசாலா போட்டது போல இருப்பதால் எனக்கு அது இரண்டாம் பட்சம்! 

    
   
இப்போது ஆப்பத்திலும் பொடி தூவித் தருகிறார்களாம்! அக்காவின் மாப்பிளை சொன்னார்.  அவருக்கு ஆப்பம் - குருமா காம்பினேஷன்தான் பிடிக்குமாம். ஹோட்டல் வர்ஷாவில் இந்தக் குருமா நன்றாயிருக்கும் என்றார்.

              

ஆப்பத்துக்கு என்றே இருக்கும் தனிக் கடாயில் ஒரு கரண்டி மாவை இட்டு கடாயை கையில் எடுத்து ஒரு சுற்று சுற்ற வேண்டும்!  நடுவில் தீம் என்றும் ஓரம் எல்லாம் மெலிதாகவும் ஆப்பம் ரெடி! ஆனால் எனக்கென்னவோ ஆப்பத்தில் பெரிதாக சிலாகிக்க ஒன்றுமில்லை.

ஒருவழியாய் தோசைப் பதிவை மனசேயில்லாமல் இங்கு,  இந்த அளவில் பூர்த்தி செய்கிறேன்.

தோசைக் குடும்பத்தில் எல்லோரையும் இழுத்திருந்தாலும் தோசைதான் கதாநாயகன்.  தோசையிலும் என் முதல் சாய்ஸ் ரவா தோசை, அதிலும் குறிப்பாக ஆனியன் ரவாதான்!  

பதிவு நன்றாகவே நீண்டு விட்டது. அதனாலேயே பெசெரெட் உள்ளிட்ட சில இடங்களில் சுருக்கமாகவே எழுதி இருக்கிறேன்!

இந்தப் பதிவுக்கு அமோக ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி, பொறுமையாய்க் கூட வந்ததற்கும்...
 

11.8.14

திங்க கிழமை நாக்கு நாலு முழம் : தோசை புராணம் பகுதி 2

                
ஆனியன் ரவா தோசையில் கூட மொறுமொறு பகுதி உண்டு. அதுவும் இதே போல தனியாகச் சுவைக்க வேண்டிய பகுதிதான்! ஆனால் அதில் வெங்காயத்தை எப்படிப் போடுகிறார்கள் என்பதும் கவனிக்க வேண்டும். கடனே என்று 'கட்' செய்து போட்டிருந்தால் அந்த ஹோட்டலுக்கு அடுத்தமுறை போகாதீர்கள்!  நிறையபேர் வெங்காயத்தைக் 'கட்' செய்யும்போது அதன் காம்பு, வால் பகுதியை தனியாகக் 'கட்' செய்து ஒதுக்காமல் அதையும் சேர்த்துப் போட்டால் அது வாயில் சிக்கும்போது வெறுப்பாக இருக்கும்! ரவா தோசைகளில் ஆங்காங்கே முந்திரி பருப்பும் கிடைக்கும்.  அது போனஸ்!!!
  
  

தோசையின் பெரியப்பா பிள்ளை ஊத்தப்பம் இருக்கிறது பாருங்கள்,  அதிலும் இப்படித்தான். ஆனியன் ஊத்தப்பம், (இதிலும் முன்பு போல வெங்காயத்தைப் பொடியாக அரிந்து தூவிக் கொடுக்கும் ஹோட்டல்கள் அரிதிலும் அரிது!) பிளெய்ன் ஊத்தப்பம்..  சில ஹோட்டல்களில் ஊத்தப்பம் ஊற்றத் தெரியாமல் நடுவில் மாவாகக் கொண்டு வந்து வைப்பவர்களும் உண்டு. கருகவும் கருகாமல், நடுவில் அரை மாவாகவும் இல்லாமல் சரியான பதத்தில் கொண்டு வரும் ஹோட்டல்களே ஹோட்டல்கள்!

ஆனால் இப்போதெல்லாம் ஆனியன் ஊத்தப்பம் என்று கேட்டால் ஊத்தப்பத்தின் மீது சில வெங்காயத் துண்டங்கள் போட்டு, ஆனால் அதன்மீது எதற்கு 
மிளகாய்ப்பொடி தூவித் தருகிறார்கள் என்று தெரியவில்லை. நான் கேட்டேனா? இப்போல்லாம் ஆர்டர் தரும்போது 'ஆனியன் ஊத்தப்பம்... மேலே பொடி தூவாமல்' என்று சேர்த்தே சொல்கிறேன்!  இப்போது பொடி தோசை போல பொடி ஊத்தப்பமும் போடுகிறார்கள் கடைகளில்.  ஆமாம், ஒரு சந்தேகம் ரொம்ப நாட்களா.... அது ஊத்தப்பமா, ஊத்தாப்பமா? 
         

இந்த இடத்தில் இந்த விஷயத்தையும் சொல்லித்தான் ஆகணும். அதாவது என்னன்னா ஊத்தப்பம் சைஸ் முன்னால் எல்லாம் எப்படி இருக்கும்? இப்போ அதன் அளவையும் குறைத்து வளையல் போல ஆக்கி விட்டார்கள். என்ன அநியாயம்ங்க...
             


திருமணத்துக்குமுன் தனியாக இருந்தபோது உடுப்பி ஹோட்டலில் அவ்வப்போது சாப்பிடுவேன். அந்நேரங்களில் ஒரு பரோட்டாவும், ஒரு ஆனியன் ஊத்தப்பமும்தான் சாப்பிடுவேன். வயிறும் நிறைந்து விடும்.  குறைந்த காசிலும் முடித்து விடலாம்!    

                                                                                                                      

அவ்வப்போது செட் தோசையும் சாப்பிடுவது உண்டு. அதென்ன செட் தோசை? ஊத்தப்பமும் இல்லாமல், தோசையும் இல்லாமல் ஒரு சைசில், இரண்டு தோசைகள் தருவார்கள். இதற்குத் தொட்டுக்கொள்ளத் தரப்படுவது வடகறி! இந்த சைட் டிஷ் எனக்கு அப்போதுதான் முதல்முறை அறிமுகம். மசாலா வாசனையுடன் இருக்கும். அது வாய்க்குப் பிடிக்கும், சாப்பிடலாம் என்று தோன்றும்போது அதையும் சாப்பிட்டிருக்கிறேன்.





சமீப காலங்களில் ஹோட்டல்களில் செட் தோசை தருகிறார்களா என்று சோதித்துப் பார்த்ததில்லை.
              

அப்புறம் இட்லியும் சாப்பிட்டு, தோசையும் ஆர்டர் செய்து சேர்த்து சாப்பிடக் கூடாது. இரண்டுக்குமே சைட் டிஷ் சாம்பார் சட்னிதான் பாருங்கள். அதனால் சொல்கிறேன்! அதே போல சப்பாத்தியும் பரோட்டாவும். முன்பெல்லாம் இரண்டுக்கும் வெவ்வேறு வகைக் குருமாக்கள் இருந்தன. இப்போ எல்லாம் ஒரே வகைக் குருமாதான்! எத்தனை ஹோட்டல்களில் இப்போதெல்லாம் சப்பாத்திக்கு வெங்காய ரைத்தா வைக்கிறார்கள்? விடுங்க... இது தோசைப் பதிவு.. இதில் சப்பாத்தி பற்றி வேண்டாம்...
                                                             

                                                            


                                                       

ஆனால் எனக்கென்னமோ இந்த மசாலா தோசை பிடிப்பதே இல்லை. நிறைய பேருக்கு அதுதான் இஷ்டம். சாதத்துக்குத் தொட்டுக்கொள்ளும் வெங்காய உருளைக்கிழங்குப் பொரியலை தோசைக்கு நடுவே வைத்துச் சாப்பிடுவது எனக்குப் பிடிப்பதில்லை!!
                 
சாதா தோசை வீட்டிலேயே செய்யலாம். ரவா தோசையும் வீட்டிலேயே செய்யலாம்தான். ஆனால் அதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்!  மாவு கரைப்பதில் இருக்கிறது டெக்னிக். ரவா, மைதா, அரிசிமாவு காம்பினேஷன் அளவுகளில் இருக்கிறது கரைக்கும் வித்தை. இந்த இடத்தி(லும்)ல் கீதா மேடம் கிட்டேயிருந்து ஏகப்பட்ட டிப்ஸ் எதிர்பார்க்கிறேன்! ஆனால் அந்த சாம்பார்.....  அந்த சாம்பாரின் ருசி வீட்டில் தயார் செய்யும்போது கொண்டு வருவது கஷ்டம்தான். பரங்கிக் கீற்று போடவேண்டும் என்பார்கள். சீரகம் தாளிக்க வேண்டும் என்பார்கள். (இந்த இடத்திலும்தான்) ஆனால் அந்தச் சுவை வருவதில்லை. 

சரவணபவன் சாம்பார் செய்முறை என்று ரெஸிப்பி ஒன்று எடுத்துச் சேமித்து வைத்திருக்கிறேன். அதை அடுத்த வாரம் தனியாகப் பதிய உங்கள் அனுமதி வேண்டுகிறேன்!
       
     
மேலும் பெரும்பாலான வீடுகளில் செய்யும்போது சாம்பார், சட்னி(கள்) என்று வக்கணையாகச் செய்வதில்லை. பெரும்பாலும் பழங்குழம்பும், மி.பொடியும்தான்! பழங்குழம்பு என்றால் அன்றைய சாதத்துக்குச் செய்திருக்கும் சாம்பார் அல்லது குழம்பு வகை! தோசைக்கென்று தனியாக சாம்பார் செய்ய பெரும்பாலும் யாரும் மெனக்கெடுவது இல்லை.
                   
எங்கள் வீட்டு ஸ்பெஷல் வெந்தய தோசை.  இந்த அளவு வெந்தயம் போட்டு செய்தால் வேறு எங்கும் தோசை கல்லிலிருந்தே எடுபடவில்லை என்கிறார்கள் என் உறவுகள். எங்கள் வீட்டில் முதலிரண்டு தோசைகள் சுருண்டு 'மொத்தை'யானாலும் அடுத்தடுத்த தோசைகள் பொன் நிறமாக அற்புதமாக வரும்.  (கீழே இதற்குக் கிடைத்திருக்கும் படம் பொருத்தமான படம் இல்லை! வீட்டில் செய்யும்போது படம் எடுத்துப் போட்டிருந்தால்தான் உண்டு.) இதைச் சாப்பிடும்போது எனக்கு அந்தச் 'சீவல் தோசை'யின் நினைவு வரும். மற்ற தோசைகளுடன் ஒப்பிடும்போது வெந்தய தோசை மூன்று சாப்பிட்டால்தான் ஒரு சாதா தோசை சப்பிட்டதற்குச் சமம்! இதற்குத் தொட்டுக்கொள்ள ஒன்றுமே தேவை இல்லை. இலேசான கசப்புடன் நல்ல சுவையான தோசை.  

                                                                   

எங்கள் வீட்டில் இதற்கு வைத்திருக்கும் பெயர் 'சில்க் தோசை'! (சிலுக்கு இல்லீங்க!)  
         
    
இதில் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு வேறு படித்தேன். வெந்தயம் சாப்பிட்டால் ஆண்மையுணர்வு அதிகரிக்குமாம்!  ஆத்தீ...!

அடுத்து கோதுமை மாவு தோசை. கோதுமை மாவு கரைத்து உப்பு மட்டும் போட்டு கடுகு, பச்சை மிளகாய் தாளித்து பெருங்காயம் தூவி தோசை வார்க்கலாம். இதிலேயே காரப்பொடி சேர்த்து கார தோசை வார்க்கலாம். வெல்ம் கரைத்துச் சேர்த்து இனிப்பு தோசையும் வார்க்கலாம்.  ஒவ்வொன்றும் தனித்தனிச் சுவை என்றாலும் இந்த தோசைகள் இரண்டாம்பட்சம்தான்! இதில் மைதா, அரிசி மாவு கலந்தால் மெலிதாக வருமோ என்னவோ, எங்கள் வீட்டில் வெறும் கோதுமை மாவு மட்டுமே வைத்துச் செய்வதால் தடித் தோசையாகவே வரும்!! சிரிக்காதீர்கள், நான் கார தோசைக்கு சர்க்கரை தொட்டுக் கொள்வேன்!

10/8 'தமிழ் இந்து' தினசரியில் கொத்துமல்லி தோசை என்று ஒன்று பார்த்தேன். இதே கோதுமை மைதா காம்பினேஷனில் கூட இரண்டு தக்காளி, இரண்டு பெரிய வெங்காயம் ஒரு கட்டுக் கொத்துமல்லி அரைத்துச் சேர்த்து தோசையாக வார்க்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். வெங்காயம் பொடியாக நறுக்கிச் சேர்த்திருக்கிறோமே தவிர, இப்படி அரைத்துச் சேர்த்ததில்லை. செய்து பார்க்க வேண்டும்!


என் அம்மா ஒரே ஒருமுறை முடக்கத்தான் தோசை செய்து கொடுத்தார்கள். வேண்டாம் வேண்டாம் என்று சொல்லச் சொல்லக் கொடுத்தார்கள். அப்புறம் கேட்டு வாங்கி இன்னும் சாப்பிட்ட நினைவு இருக்கிறது! ஆனால் அடுத்த இரண்டாம் முறை அதைச் சாப்பிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மருத்துவகுணம் கொண்ட முடக்கத்தான் கீரையை தோசை மாவில் சேர்த்து அரைத்து விட்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன். 

                                                                     
                
கூகிளில் கிடைத்த இந்தப் படத்தில் தோசை குண்டாக இருக்கிறது! ஆனால் எங்கள் வீட்டில் மெலிதாக இருக்கும்!

அப்புறம் வீட்டில் தோசை வார்க்கும்போது நாங்கள் செய்யும் வகைகள். எல்லோர் வீட்டிலும் செய்து பார்ப்பதுதான்! தேங்காய்த் துருவல் போட்டு இறக்குமுன் சர்க்கரை தூவி, மடித்து எடுத்துப் பரிமாறுவோம். பொடி தோசை. தோசைக்குத் தொட்டுக்கொள்ளும் மிளகாய்ப் பொடியை தோசை வார்த்தவுடன் அதன்மேல் தூவி நல்லெண்ணெய் மேலே விசிறி, மடித்து எடுப்போம். கேரட், குடைமிளகாய், வெங்காயம், கரி.கொத்துமல்லி பொடியாய்  அரிந்து தோசையில் போட்டு நிரவி, கொஞ்ச நேரம் கழித்துத் திருப்பிப் போட்டு எடுப்போம். சில சமயம் திருப்பிப் போடாமல் தட்டு வைத்து மூடி அப்படியேவும் எடுத்து விடுவோம். வெங்காயம் சாப்பிடாத பெரியவர்களுக்காக குடைமிளகாய்த் துருவல், கேரட் துருவல், உருளைக் கிழங்கு, பச்சை மிளகாய் தூவி இறக்குவோம்.  
       

மாவிலேயே நறுக்கிய வெங்காயத்தையோ, காய்களையோ போட்டு தோசை வார்ப்பது ஒருமுறை. எனக்கு அதைவிட, தோசையை வார்த்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இதர காய்களைத் தூவி வார்ப்பதே பிடிக்கும்.   
       
நான் தோசைக்கு ரசம் தொட்டுக் கொண்டு கூட சாப்பிடுவேன். அது ஒரு ருசி. சமயங்களில் தயிர் தொட்டுக் கொண்டும்! எங்கள் வீட்டில் என்னைத் தவிர வேறு யாருக்கும் அந்தப் பழக்கம் கிடையாது! என் அப்பா கடைசி தோசைக்கு 'ஜிட்டு' என்று கேட்டு, நெய்யும் சர்க்கரையும் தொட்டுக் கொண்டு சாப்பிடுவார். எனக்கென்னவோ இது சப்பாத்திக்குத்தான் சரி வரும் என்று எனக்குத் தோன்றும். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ருசி!
     
ஒரு கரண்டி மாவு எடுத்து தோசைக்கல்லில் சிறு சிறு வட்டங்களாக வார்த்து, மினி இட்லி கணக்காக, மினி தோசைகள் வார்ப்போம். ஒரு வாய்க்கு ஒரு தோசை! அது ஒரு சுவாரஸ்யம். அது போலவே பல வடிவங்களில் - முக்கோணமாக, சதுரமாக, செவ்வகமாக - சிறிய அளவிலும், பெரிய அளவிலும் வார்ப்பது குழந்தைகளை(யும்)க் கவரும்.
      
   
தோசையை வார்த்து விட்டு, கரண்டியை வைத்து மேலாக உள்ள மாவை வழித்து எடுத்து நெய் ஊற்றி மொறு மொறுவென 'சீவல் தோசை' போடுவோம். பேப்பர் ரோஸ்ட் என்றும் சொல்லலாம். மெல்லிய இழையாக இருக்கும் தோசையை அப்படியே சிறு சுருட்டலாகச் சுருட்டி எடுத்துத் தட்டில் போட்டால் ஒரே வாய். தோசை காலி. 
               

செம சுவை தெரியுமா அது!  

                                                       

வீட்டில் அவ்வப்போது செய்தாலும் கடையில் சாப்பிட்டது என்று பார்த்தால் இதைக் கடைசியாக நான் மீனாக்ஷி அம்மன் கோவில் பக்கத்தில் மதுரை கோபு ஐயங்கார் கடையில் சாப்பிட்டதுதான். நெய் வாசனையுடன் இரண்டு வாயில் தோசை காலியாகி விடும். அப்பவே அது 35 ரூபாய்!

                                                                  

தோசைக்குத் தொட்டுக்கொள்ள நிறையப் பேர்களுக்குப் பிடிக்காத / பிடித்த ஒரு சைட் டிஷும் உண்டு.  பூண்டுப்பொடி.  பூண்டை உரித்து, பட்டை மிளகாய்ச் சேர்த்து, தேவையானால் துளி புளி சேர்த்து, உப்புப் போட்டு பச்சையாகவே அரைத்து வைத்துக் கொள்வது.  இது மோர் சாதத்துக்கு ரொம்ப ஆப்ட் என்றாலும் அவ்வப்போது தோசைக்கும் தொட்டுக் கொள்வது உண்டு. மிளகாய்ப் பொடி போல இதற்கும் நல்லெண்ணெய் சேர்த்துக் குழைத்துக் கொள்வோம்! ஆனால் நிறைய பேர்களுக்கு இதன் வாசனையும், சுவையும் 'உவ்வே'..!

'தோசை - பகுதி இரண்டு'ம் சற்றே நீண்டு விட்டதால், தவிர்க்க முடியாமல் இதன் தொடர்ச்சி அடுத்த 'திங்க'க் கிழமை வெளிவரும்!