தியேட்டர் நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தியேட்டர் நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

8.6.16

தியேட்டர் நினைவுகள் - 3 :: படம் பார்க்கச் சென்று விறகுக் கட்டையால் அடி வாங்கிய சம்பவம்..




     தஞ்சையில் இருந்தவரை படம் பார்க்க நண்பர்களோடு சைக்கிளில் செல்வோம்.  டிக்கெட் வாங்கும் வேலை நண்பர்களில் யாராவது ஏற்றுக் கொள்வார்கள்.  எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் அடித்துப் பிடித்து வாங்கி விடுவார்கள்.  வெளியில் வந்து வெற்றி வீரனைப் போல சலம்புவார்கள்!  
 
    
                                   Image result for thirisoolam tamil film images   Image result for thirisoolam tamil film images

     திரிசூலம் படத்துக்கு டிக்கெட் வாங்கிய நண்பனின் சட்டை கிழிந்து விட்டதைக் கூட அவன் பொருட்படுத்தவில்லை.  அவன் சைக்கிள் கடை வைத்திருந்தான்.  அவன் வைத்திருந்த ஓரிரு நல்ல சட்டைகளில் அதுவும் ஒன்று.  அப்புறம் என் சட்டைகளில் அவனுக்குப் பிடித்த இரண்டு மூன்று சட்டைகளைக் கேட்டு வாங்கிக் கொண்டான்.  நான் பரிதாபப் பட்டதன் பின்விளைவு!


Image result for portar ponnusamy tamil film images

     இப்போது நினைத்துப் பார்த்தால் சிரிப்பு வரும்.  பெய்யும் மழையில் சைக்கிளில் டபுள்ஸ், ட்ரிபிள்ஸ் என்று அடித்துக் கொண்டு சென்று படம் பார்ப்போம்.  படம் முக்கியமல்ல.  எங்கள் குழுவினர் கூடி இருப்பதுதான் முக்கியம்.  'போர்ட்டர் பொன்னுசாமி' என்கிற மகா மொக்கைப் படத்துக்கெல்லாம் நண்பர்களின் வற்புறுத்தலால் சென்றிருக்கிறேன். 


     மழையில் நனைந்ததால் சட்டையை அவிழ்த்து விட்டு வெறும் உடம்புடன் ஓரிரு நண்பர்கள் படம் பார்ப்பார்கள்.  எனக்கும் இன்னும் ஓரிரு நண்பர்களுக்கும் அது மானக்கேடான விஷயமாக இருக்கும்.  எங்களை வெறுப்பேற்றவே அவர்கள் மீண்டும் மீண்டும் அப்படிச் செய்வார்கள்.  அப்புறம் சந்திக்கும்போது அதைச் சொல்லிச் சிரிப்பார்கள்.

     குறுகிய டிக்கெட் கவுண்டரில் நுழைந்து நடப்பது எரிச்சலான வேலை.  அதுவும் கூட்டமான படங்களுக்கு.  என் நண்பன் சைக்கிள் கடை சசிக் குமார் இது மாதிரி இடங்களில் டிக்கெட் வாங்குவதில் கில்லாடி.  இந்தப் பழக்கங்களில் கூட்டமே இல்லாத படங்களின் கவுண்டர்களில் கூட கம்பிகளின் மேலேறி உயரத்திலேயே நடப்பான்!  எங்களிடமும் சரி,  திட்டும் தியேட்டர்க் காரர்களிடமும் சரி, "பழகிடுச்சு தோஸ்த்து ..  அப்புறம் என்ன த்ரில்?" என்பான்!

     மதுரை சினிப்ரியா காம்ப்ளெக்சில் காந்தி படம் ரிலீஸ் ஆனது.  இதை சுகப்ரியாவில் போட்டிருந்தார்கள் என்று நினைவு.  நம்புங்கள்.. அந்தப் படத்துக்கு டிக்கெட் கிடைப்பதே சிரமமாக  இருந்தது.  தஞ்சையில் இருந்த என் நண்பர்கள் போல மதுரையில் கிடையாது.  சாதாரணமான, அசகாய வேலைகளுக்கு அப்பாற்பட்ட இரு நண்பர்களுடன்தான் அந்தப் படத்துக்குச் சென்றேன்.  நம்முடைய செயல்களும் சேரும் குழுவைப் பொறுத்தேதானே அமைகிறது! 


     அன்று அதிசயமாக டிக்கெட் கவுண்டருக்குள் நுழையுமளவு ஃப்ரீயாக இருந்தது.  நுழைந்து விட்டோம்.  கொஞ்ச நேரத்திலேயே பின்னால் கூட்டம் சேர்த்து நெருக்க ஆரம்பித்து விட்டது. 


     வியர்வை, கசகசப்பு, எரிச்சல். 


     பின்னால் நகர்ந்து வெளியேயும் போக முடியவில்லை.  ஒரு ஒழுங்கான வரிசையாக இல்லாமல், அந்தக் குறுகிய இடத்தில் நம்முடன் நெருக்கி அடித்துக் கொண்டு ஆட்கள்.   நிமிர்ந்து மட்டும் பார்க்கக் கூடாது!!!  கைலியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு நம் தலைக்குமேல் ஆட்கள் மெல்ல நகர்ந்து கொண்டிருப்பார்கள்.  இவர்கள் படம் பார்க்க வந்தார்களா, டிக்கெட்டை வாங்கி ப்ளாக்கில் விற்க வந்தார்களா என்று அனுமானிக்க முடியாது.  ஆங்கிலப் படங்களில் கூட இது மாதிரி ந(ண்)பர்கள் நம் அருகில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.  'எதை' எதிர்பார்த்து வருகிறார்களோ!

     இந்நிலையில் டிக்கெட்டே வேண்டாம், வெளியே போனால் போதும் என்று மூச்சு முட்ட ஆரம்பித்து விட,  கவுண்டர் அருகே வந்தும் கூட,  கவுண்டருக்குள் கை விட முடியாமல் அருகிலிருந்தும், மேலிருந்தும், கீழிருந்தும் கைகள் கவுண்டருக்குள் நெருக்க,  வந்தார்கள் தியேட்டர்க் கார அடிப்பொடிகள்!  கையில் உருண்டையாக சவுக்காலான கட்டைகள்.  


                                         Image result for gandhi film images


                                                                                            



     சும்மா மிரட்டுவார்கள், ஃப்ரீயானால் டிக்கெட் வாங்கி விடலாம் என்று நினைத்திருந்தேன்.  என்னைப் பார்த்தால் கௌரவமாக இருக்கும், அடிக்க மாட்டார்கள் என்றும் நம்பினேன்!!!!   ஒழுங்காய் வரிசையில் நின்று வந்த நான் வெளியில் தள்ளப்பட்டு விழ, ஏற்கெனவே ஓரத்தில் எல்லாம் அடிப்பது போல பாவ்லாவில் ஆரம்பித்து, ரசிகர்களின் எதிர்க்குரலால் நிஜமாகவே அடிக்க ஆரம்பித்திருந்தார்கள் அந்த 'தடி'யர்கள்.  என்னுடைய இடது காலில் அடி விழுந்தது.  வலி தாங்க முடியவில்லை. சுதாரிப்பதற்குள் இன்னொன்று.  தனியாக ஓடி வந்து நின்று விட்டோம்.


     காத்திருந்து, படம் ஆரம்பித்தபின், கூட்டம் குறைந்த நிலையில் நண்பர்களுடன் தியேட்டர் மேலாளர் அறைக்குச் சென்று புகார் செய்தும் பயனில்லை. அறைக்கு அருகிலேயே நெருங்க விடவில்லை.  தூரத்திலிருந்தே கத்த வேண்டி இருந்தது.  அவமானமாக இருந்தது.  








                                 Image result for gandhi film images


     ஒரு அஹிம்சாவாதியின் வரலாறைப் பார்க்கப்போனால் இவ்வளவு ஹிம்சையா என்று இன்றுவரை அந்தப் படத்தைப் பார்க்கவில்லை!  தொலைக்காட்சியில் போடும்போது கூடப் பார்க்கத் தோன்றவில்லை.  எங்காவது பென் கிங்க்ஸ்லியின் படத்தைப் பார்த்தால் கூட இன்றும் என் இடது கணுக்காலில் வலிக்கும்!!!



1.6.16

தியேட்டர் நினைவுகள் - 2 :: திறந்தவெளித் திரையரங்க அனுபவங்கள்




          இந்தத் தியேட்டர் நினைவுகள் அனுபவங்களில் வேறு சில அனுபவங்களுக்குச் செல்லுமுன் திறந்தவெளித் திரையரங்க அனுபவத்தைச் சொல்லி விடவேண்டும்!  சென்னையில் டிரைவ் இன் தியேட்டர்(கள்) எங்கு இருக்கின்றன என்று எனக்குத் தெரியாது.  பிரார்த்தனா என்று ஒரு தியேட்டர் இவ்வகையில் உள்ளது என்று தெரியும்.  காரில் அமர்ந்தபடியே, அல்லது நாற்காலிகள் எடுத்துக் கொண்டுபோய் அங்கே போட்டு அமர்ந்து படங்கள் பார்க்க முடியும் என்று அறிகிறேன்.




          நான் இந்த மாதிரித் தியேட்டர்களில் பார்த்ததில்லை.  ஆனால் இந்த அனுபவத்தில், வேறு இடங்களில் படம் பார்த்திருக்கிறேன். தஞ்சையிலும் சரி, மதுரையிலும் சரி.


          வீட்டு வசதிக் குடியிருப்பில் வீடு அமைந்திருந்ததால், இந்த அனுபவம் தஞ்சையிலும் மதுரையிலும் கிடைத்தது.  வீட்டு வசதிக் குடியிருப்பைப் பொறுத்தவரை சுதந்திரதினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடக்கும்.  



          சுவாரஸ்யமாகப் பொழுது போகும்.  இந்தக் குடியிருப்பில் மாதத்துக்கு ஒருநாள் - சில சமயம் இரண்டு நாட்கள் - படம் போடுவார்கள்.  இதற்காக குடியிருப்பிலிருக்கும் ரேஷன் கடையில் தினம் மாலை கவனித்துக் கொண்டிருப்போம்.  படம் போடும் நாளன்று அங்கு, கடை வாசலில் ஒரு போர்ட் எழுதி வைத்திருப்பார்கள்.  ஓரிரு முறை அந்த போர்டை நானும் எழுதி இருக்கிறேன்!  அதைப் பார்த்ததுமே அவரவர்கள் அவரவர்கள் வீடுகளிலும், பக்கத்து வீடுகளிலும், நண்பர்களுக்கும் ஒலிபரப்பி விடுவார்கள்.  குடியிருப்பே பரபரப்பாகி விடும்!  அந்த இனிய மாலைக்குத் தயாராகத் தொடங்கி விடும்.


 
          இருட்டியதும்தான் படம் போடுவார்கள்.  மாலை ஆறு மணி போலவே அந்தச் சிறு மைதானம் களை கட்டத் தொடங்கி விடும்.  முன்னால் 'தரை டிக்கெட்டில்' உட்கார நிறைய இடம் விட்டு பின்னால் நாற்காலிகள் போடப்படும்.  குடியிருப்பில் இருந்த ஒரு மிருக வைத்தியர் ப்ரொஜக்டர் வைத்திருந்தார்.  அவர் குடி வருவதற்குமுன் ப்ரொஜக்டரும், அதை இயக்க ஒரு ஆளும் வாடகைக்கு வருவார்கள். ரொம்பத் தாமதமாகும் என்பதோடு,  மாதாந்திர சந்தாவும் கொஞ்சம் கூடுதலாக வசூலித்துக் கொண்டிருந்தார்கள்.   (குடியிருப்பில் மாதா மாதம் "அஸோஸியேஷன் பணம்" என்று வந்து வசூல் செய்வார்கள்.  குடியிருப்பில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் வீடு வீடாகப் புகுந்து புறப்படுவார்கள்)  அவர் வந்தபின் அவர் தனது  ப்ரொஜக்டரை எடுத்துக் கொண்டு வந்து படம் போடுவதற்கு தயார் செய்ய ஆரம்பித்து விடுவார்.

          
          உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த நான் என் குழுவினருடன் முதல் கொஞ்ச நாட்கள் தரையில் அமர்ந்து படம் பார்த்தேன்.  நிலவொளியில், இரவில் திறந்தவெளியில் படம் பார்ப்பது தனி அனுபவம்.  ரீல் மாற்றும் நேரங்களில் சலசலவெனப் பேசிக் கொண்டிருப்போம்.  கொஞ்ச நாட்களுக்குப் பின்னர் வேறு சில காரணங்களுக்காக நாற்காலிக்குச் சென்று விட்டேன்!  குடியிருப்பில் சுமார் 300 வீடுகளுக்கு மேல் இருக்கும் என்று நினைவு.  பெரும்பாலான வீடுகளிலிருந்து ஓரிருவராவது வந்திருப்பார்கள்.  இரவு நேரத்தில் அங்கு ஒரு குழுமமாக அமர்ந்து படம் பார்த்த அனுபவங்கள் மறக்க முடியாதவை.  படம் போடுமிடத்துக்கு அருகிலேயே என் வீடு அமைந்திருந்தது.


 
          மதுரையிலும் இதே அனுபவம் உண்டு.  அங்கு கூடுதலாக, ரிசர்வ் லைன் குடியிருப்பிலும் அடிக்கடி படம் போடுவார்கள்.  சைக்கிளில் சுற்றிக் கொண்டிருக்கும் நான்தான், அந்த அறிவிப்பைப் பார்த்து விட்டு வந்து எங்கள் தெருவுக்கே சொல்வது வழக்கம்.  ரிசர்வ் லைன் குடியிருப்பு மைதானம் நீண்ட மைதானம்.  மணல் இருக்கும்.  நடுவில் பெரிய திரை கட்டி படம் போடுவார்கள்.  ஆரம்பிக்கவே இரவு 9 ஆகி விடும்.  முடிய நடு இரவு ஆகும்.  குடியிருப்பில் உள்ள ஆண்களும், பெண்களும் குழுக் குழுவாகக் கிளம்பிச் சென்று படம் பார்த்துத் திரும்புவார்கள்.    இளம்பெண்களும் வருவார்கள்.  குழுவாகச் செல்வதால் பயம் இல்லை.  மேலும் தெருவாசிகள் குடும்பத்தோடு வருவதால் அந்த வீட்டு ஆண்களின் துணையும் இருக்கும்.





          ரிசர்வ் லைன் மைதானத்தில் சிலர் கையடக்கமான டிரான்சிஸ்டரைக் கொண்டு வருவது வழக்கம்.  ரீல் மாற்றும்போதோ, மின்சாரம் தடைப்பட்ட நிமிடங்களிலோ அமைதியான அந்த இடத்தில் இரவு 11 மணிக்கு மேல் மதுரை வானொலியின் 'இரவின் மடியில்' நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும் பாடல்களைக் கேட்பது தனிச் சுகம்.



          நள்ளிரவு பனிரண்டு,  அல்லது ஒரு மணி வாக்கில் திருவிழா போல எங்கள் குடியிருப்புக் கூட்டம் குழுக்குழுவாக வீடு திரும்பும் காட்சி ஒரு சுவாரஸ்யமான காட்சி. மதுரை வந்தபின் நான் இந்த மாதிரிப் படங்களுக்கு சைக்கிளில் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.  இங்கும்,
அங்கும் ஏகப்பட்ட படங்கள் பார்த்திருக்கிறேன். அப்போது சமீப காலத்தில் ரிலீஸான படங்கள் முதல், பழைய படங்கள் வரை!  மதுரையில் ஒருமுறை நடு இரவில் உத்தமபுத்திரன் பார்த்து விட்டுத் திரும்புகையில் ஒரு ரௌடிக் கூட்டத்தால் நான் வழிமறிக்கப்பட்டு மிரட்டப் பட்டது தனிக்கதை!