திரிசூலம் படத்துக்கு டிக்கெட் வாங்கிய நண்பனின் சட்டை கிழிந்து விட்டதைக் கூட அவன் பொருட்படுத்தவில்லை. அவன் சைக்கிள் கடை வைத்திருந்தான். அவன் வைத்திருந்த ஓரிரு நல்ல சட்டைகளில் அதுவும் ஒன்று. அப்புறம் என் சட்டைகளில் அவனுக்குப் பிடித்த இரண்டு மூன்று சட்டைகளைக் கேட்டு வாங்கிக் கொண்டான். நான் பரிதாபப் பட்டதன் பின்விளைவு!
மழையில் நனைந்ததால் சட்டையை அவிழ்த்து விட்டு வெறும் உடம்புடன் ஓரிரு நண்பர்கள் படம் பார்ப்பார்கள். எனக்கும் இன்னும் ஓரிரு நண்பர்களுக்கும் அது மானக்கேடான விஷயமாக இருக்கும். எங்களை வெறுப்பேற்றவே அவர்கள் மீண்டும் மீண்டும் அப்படிச் செய்வார்கள். அப்புறம் சந்திக்கும்போது அதைச் சொல்லிச் சிரிப்பார்கள்.
அன்று அதிசயமாக டிக்கெட் கவுண்டருக்குள் நுழையுமளவு ஃப்ரீயாக இருந்தது. நுழைந்து விட்டோம். கொஞ்ச நேரத்திலேயே பின்னால் கூட்டம் சேர்த்து நெருக்க ஆரம்பித்து விட்டது.
வியர்வை, கசகசப்பு, எரிச்சல்.
பின்னால் நகர்ந்து வெளியேயும் போக முடியவில்லை. ஒரு ஒழுங்கான வரிசையாக இல்லாமல், அந்தக் குறுகிய இடத்தில் நம்முடன் நெருக்கி அடித்துக் கொண்டு ஆட்கள். நிமிர்ந்து மட்டும் பார்க்கக் கூடாது!!! கைலியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு நம் தலைக்குமேல் ஆட்கள் மெல்ல நகர்ந்து கொண்டிருப்பார்கள். இவர்கள் படம் பார்க்க வந்தார்களா, டிக்கெட்டை வாங்கி ப்ளாக்கில் விற்க வந்தார்களா என்று அனுமானிக்க முடியாது. ஆங்கிலப் படங்களில் கூட இது மாதிரி ந(ண்)பர்கள் நம் அருகில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். 'எதை' எதிர்பார்த்து வருகிறார்களோ!
சும்மா மிரட்டுவார்கள், ஃப்ரீயானால் டிக்கெட் வாங்கி விடலாம் என்று நினைத்திருந்தேன். என்னைப் பார்த்தால் கௌரவமாக இருக்கும், அடிக்க மாட்டார்கள் என்றும் நம்பினேன்!!!! ஒழுங்காய் வரிசையில் நின்று வந்த நான் வெளியில் தள்ளப்பட்டு விழ, ஏற்கெனவே ஓரத்தில் எல்லாம் அடிப்பது போல பாவ்லாவில் ஆரம்பித்து, ரசிகர்களின் எதிர்க்குரலால் நிஜமாகவே அடிக்க ஆரம்பித்திருந்தார்கள் அந்த 'தடி'யர்கள். என்னுடைய இடது காலில் அடி விழுந்தது. வலி தாங்க முடியவில்லை. சுதாரிப்பதற்குள் இன்னொன்று. தனியாக ஓடி வந்து நின்று விட்டோம்.
காத்திருந்து, படம் ஆரம்பித்தபின், கூட்டம் குறைந்த நிலையில் நண்பர்களுடன் தியேட்டர் மேலாளர் அறைக்குச் சென்று புகார் செய்தும் பயனில்லை. அறைக்கு அருகிலேயே நெருங்க விடவில்லை. தூரத்திலிருந்தே கத்த வேண்டி இருந்தது. அவமானமாக இருந்தது.
ஒரு அஹிம்சாவாதியின் வரலாறைப் பார்க்கப்போனால் இவ்வளவு ஹிம்சையா என்று இன்றுவரை அந்தப் படத்தைப் பார்க்கவில்லை! தொலைக்காட்சியில் போடும்போது கூடப் பார்க்கத் தோன்றவில்லை. எங்காவது பென் கிங்க்ஸ்லியின் படத்தைப் பார்த்தால் கூட இன்றும் என் இடது கணுக்காலில் வலிக்கும்!!!



