பேட்டிகள், உரையாடல்கள்.
1) கே : தி. ஜாவுடன் உங்கள் தொடர்பு இளமைக் காலம் முதல் இருக்கும் போலிருக்கிறதே?
ப : ஆம்! நாங்கள் பள்ளிச் சிறுவர்களாக இருந்த நாள் முதலே நண்பர்கள். கும்பகோணம் டபீர் தெருவில் யக்ஞஸ்வாமி சாஸ்திரிகள் பெரிய வேத விற்பன்னர். அப்பய்ய தீட்சிதர் வம்சம். அவருக்குப் பக்கத்து வீட்டில் உமையாள்புரம் சுவாமிநாத பாகவதர் இருந்தார். இவர் தியாகராஜரின் நேர் சிஷ்யரான சுந்தர பாகவதரின் சீடர். மகாராஜபுரம் விஸ்வநாதையர் சுவாமிநாத பாகவதரிடம் சங்கீதம் கற்றுக் கொண்டார். சாஸ்திரிகள் முன்னிலையில் பாகவதர் 'ஓ...ரங்கசாயி' என்ற காம்போஜி கீர்த்தனையின் சரணமான ' வைகுந்த' என்ற வரிகளை பாவத்துடன் பாடிக் காட்டி அதன் தாத்பர்யத்தை விளக்கிய நிகழ்ச்சியை எங்களால் மறக்க முடியாது அப்பொழுது நானும் ஜானகிராமனும் அவர்களுக்கு விசிறிக் கொண்டிருந்தோம்.
தஞ்சை ஸ்ரீ சுவாமிநாத ஆத்ரேயா பிப்ரவரி 2012 இல் சித்தார்த்தனுக்கு அளித்த பேட்டியிலிருந்து.
2) "....சித்திரங்களில் 'லோகு.ம' என்றுதான் முதலில் கையெழுத்துப் போட்டேன். அதை 'செல்வன்.ம' அல்லது ம.செல்வன்' என்று போடச் சொன்னார் அப்பா. பொன்னியின் 'செல்வன்' அவருக்குள் ஏற்படுத்தியிருக்கக் கூடிய பாதிப்பு இது என நினைக்கிறேன்.
சாவி சார் தினமணிக் கதிரில் ஆசிரியராக இருந்தபோது 1969 தீபாவளி மலரில் " ஓவியர் மணியத்தின் செல்வன் 'மணியம் செல்வன்' வரைந்த ஓவியம் என்று குறிப்பிட்டு என் பெயரைப் பிரகடனம் செய்து விட்டார். அப்பாவின் மீது இருந்த நல்லெண்ணம் பத்திரிக்கை உலகுக்கு எனக்கு ஒரு 'கேட் பாஸ்' மாதிரி அமைந்தது நான் பெற்ற பேறு! அப்பாவின் ஓவியங்கள் சமூகம் புராணம், வரலாறு - 3 தளங்களிலும் நல்ல முன்மாதிரியாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் கடுமையான உழைப்பு மட்டுமில்லாமல், குறிப்பிட்ட ஓவியத்துக்குத் தேவையான விவரங்களை, கதையைப் படிப்பதோடு மட்டுமின்றி, அதற்கான களங்களைப் பற்றிய அறிவையும் தேடித் தொகுத்துக் கொள்வார்.
குறிப்பாக 1964 ஆம் ஆண்டில் வெளியான கல்கி தீபாவளி மலரில் 'ஷேக்ஸ்பியர் செல்வங்கள்' என்று நான்கு பக்க வண்ணமடலை வரைந்து தந்தார். புகழ் பெற்ற நாடக இலக்கியங்களான ஹாம்லெட்,ஒத்தெல்லோ, மிட் சம்மர் நைட்ஸ் ட்ரீம், ஐந்தாம் ஹென்றி இவற்றின் காட்சிகளை வெகு நுட்பமாக வரைந்தார் கன்னிமாரா நூலகத்தில் போய் உட்கார்ந்துக் கொண்டு, அந்தக் கால மன்னர்களின் உடை, ஒப்பனை, மரபுகள் போன்ற அடிப்படையான விஷயங்களை பார்த்துக் கொண்டு அதன்பிறகே ஓவியமாக்கியிருக்கிறார். அப்பாவின் ஓவியங்களில் உள்ள தனிச்சிறப்பு - ஒரு சிறு பகுதியையும் பயன்படாமல் விடமாட்டார் என்பது. பண்பாடுகளை ஒட்டிய இந்த ஓவியத்திலும் அதை நன்கு உணர முடியும்.....
ஓவியர் மணியம் செல்வன் தன தந்தை பற்றிய பேட்டியில்...
3) கே : நாங்கள் அல்லது இன்னொருவர். உங்களின் இலக்கியத்தனமான படைப்புகளைத் தொகுத்துத் தர விரும்புகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்போது உங்கள் எழுத்துகளில் எவற்றை எல்லாம் கொடுப்பீர்கள்? ஒரு பட்டியல் தாருங்களேன்.
ப : பட்டியலில் சிறுகதைகள் இருக்கும். சில கட்டுரைகள் இருக்கும். தனிமை கொண்டு (தனிப் புத்தகம்), ஜன்னல் (கசடதபற), காணிக்கை (கல்கி), செல்வம் (கலைமகள்), முரண் (சுதேசமித்திரன்), நகரம் (தினமணிக்கதிர்), எதிர் வீடு (கணையாழி), அகப்பட்டுக் கொள்ளாதவரை திருடவில்லை (குமுதம்), வீடு (தினமணிக்கதிர்), ஒரே ஒரு மாலை (ஆனந்த விகடன்), அம்மோனியம் பாஸ்பேட் (தினமணிக்கதிர்) பார்வை (தினமணிக்கதிர்) இவைகளை என் முதல் கதைத் தொகுப்பாகவும், Assorted Prose என்று உரைநடைப் பகுதிகள் எனப் பல நூல்களிலிருந்தும் எடுத்து மற்றொரு புத்தகமாகவும் வெளியிடலாம். இலக்கியதரம் என்கிற பாகுபாட்டை விட Representative of my writing என்கிற பாகுபாட்டில்தான் வெளியிடுவேன்.
கே : அசோகமித்திரனின் எந்தக் கதைகளை ரொம்ப ரசிக்கிறீர்கள்?
ப : உதாரணமாக 'வழி' ஒரு கதை. இன்னொன்று புலிக்கலைஞன் எலி விமோசனம், நிறைய கதைகள்...
1978 இல் 'படிகளுக்கு' சுஜாதாவின் பேட்டி.
4) கே : எதுவரை படித்திருக்கிறீர்கள்?
ப: எஸ் எஸ் எல் சி வரைதான் படித்தேன். பிற்பாடு இசைத் துறையில் நாட்டமிருந்ததால் முதலில் எங்கள் சொந்த ஊருக்கு அருகிலுள்ள திருப்புணித்துராவிலும், பின்னர் திருவனந்தபுரம் சங்கீதக் கல்லூரியிலும் பாட்டு கற்றுக் கொண்டேன். சங்கீதம்தான் என் முழுநேரத் தொழில்.
கே : சாதாரணமாகக் கிறிஸ்த்தவர்களுக்கு கர்நாடக இசையில் அதிக ஈடுபாடு இருக்காது என்று சொல்லுவார்கள். உங்களுக்கு மட்டும் எப்படி இதில் ஈடுபாடு வந்தது?
ப : நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான். ஆனால் என் தகப்பனாருக்கு கர்னாடக சங்கீதத்தில் அதிக விருப்பம் உண்டு. அவரே ரொம்ப நன்றாகப் பாடுவார். என்னை ஒரு சிறந்த பாடகனாக்க வேண்டுமென்று எண்ணி முதலில் எங்கள் கிராமத்தில் குஞ்சன் வேலு என்ற மாஸ்டரிடம் சிட்சை சொல்லி வைத்தார். எர்ணாகுளத்தில் சிவராமன் நாயர் என்பவரிடம் சில நாட்கள் கற்றுக் கொண்டேன். சுவாதித் திருநாள் சங்கீத அகாடமியில் செம்மங்குடியிடம் ஒரு வருடம் பயின்றேன். சென்ற ஐந்தாறு வருடங்களாக செம்பை வைத்தியநாத பாகவதரிடம் கற்றுக் கொண்டேன்.
1975 இல் கே ஜே யேசுதாஸ் பேட்டியிலிருந்து.
5) கே : ஆக, எழுத்தை நீங்கள் ஒரு தொழிலாகவோ, வியாபாரமாகவோ நினைக்கவில்லை என்று சொல்லி வருகிறீர்கள்?
ப : எக்ஸாட்லி. ஒரு சங்கீதம் ஒரு ஓவியம் இது சம்பந்தப் பட்டவர்களெல்லாம் உலகத்தில் இருக்கிற சில பொருட்களை எடுத்துக் கொள்கிறார்களே தவிர, உலகத்துக்கு அதன் மூலம் ஏதாவது திருப்பித் தருகிறார்களோ? ஆனால் உலகத்தின் லட்சியம் எதுவோ, மனித வாழ்க்கைக்கும் அதன் ஆத்மாவுக்கும் எது தேவையோ, அதை அவர்கள் உற்பத்திப் பண்ணித் தருகிறார்கள். ஒரு சமயம் பிக்காஸோவை 'உங்கள் படத்துக்கு என்ன விலை?' என்று ஒருவர் கேட்டு விட்டார். பிக்காஸோ ஒரு ஒன்று போட்டு கை போகிறவரை சைபராகவே போட்டுக் காண்பித்தார். இதைப் பார்த்துப் பிரமித்த அந்த ஆள், 'இது உங்கள் பேராசைக்கு அடையாளம்' என்றார். பிக்காஸோ நிதானமாக, 'எனக்குப் பேராசையே கிடையாது. படம் எழுத ஆரம்பித்த காலத்தில் ஏதாவது என் படத்துக்கு விலை தருவார்களா என்று நினைத்துவிட்டு, ஒரு காலத்தில் தெருவில் படங்கள் போட்டு நான் கஷ்டப்பட்டிருக்கிறேன். இப்போது அதை நினைத்துக் கொண்டு ஒன்று போட்டு அதன் பக்கத்தில் கை ஓய்கிற வரைக்கும் சைபராகப் போடுகிறேன்" என்று சொன்னாராம்.
1978 இல் ஜெயகாந்தன் பேட்டியிலிருந்து.
சுஜாதா, ஜேசுதாஸ் ஜெயகாந்தன் பேட்டி சுவாரசியம்
பதிலளிநீக்குசுவாரஸ்யமான பேட்டிகள். ம.செ-யின் தந்தை வரைந்த ஓவியங்களைப் பார்க்கும் ஆசை வருகிறது.
பதிலளிநீக்குகேள்வி பதில்கள் அருமை...
பதிலளிநீக்குநன்றி...
சுவாரசியமாக இருந்தது. ம.செ. அவர்கள் தந்தையை பற்றி சொன்னது பிரமிக்க வைத்தது.
பதிலளிநீக்குதி.ஜாவின் சிநேகிதர் பேட்டி பிரமாதம். எங்கிருந்துதான் எடுக்கிறீர்களோ இந்த ஸ்னிப்பெட் களை.ம்.செ யின் தந்தை வரைந்த படங்கள் எங்கேயாவது கிடைக்குமா.
பதிலளிநீக்குஎல்லாக் கேள்வி பதில்களுமே அருமை.
பேட்டிகள் அருமை. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்கு"தி.ஜானகிராமன் ப்ளாட்டிங் பேப்பர்.
பதிலளிநீக்குஅவன் ஒருவரையோ, ஒன்றையோ ஒத்தி எடுக்கும் போது, ஒன்றையும் விடுவதில்லை.. நிறை, குறை, கோணலை,மாணலை எல்லாவற்றை யும் ஒத்தி எடுத்து விடுவான்.
பிளாட்டிங் பேப்பரை ஒத்தும் போது, ஒத்தின இடம் உருக்குலையாமல் இருக்கும். ஆனால் பிளாட்டிங் பேப்பரில் பிசுரு தட்டியிருக்கும். இந்த ஜானகிராம பிளாட்டிங் பேப்பரில் பிசுரு
தட்டவில்லை.
அமிருதமும், யமுனா பாயும், தேக்கு மர மார்புடைய சரக்கு மாஸ்டரும், காமேஸ்வரனும், கோணல் வாய் ஜவுளிக்கடைக்காரரும், சீட்டிப் பாவாடை கட்டிக்கொண்டு கல்கத்தாவு க்கு ஒத்தாசைக்குப் போகும் எட்டு வயது பெண்ணும், வேத பாடசாலை யும், பற்றி எரிந்து போன பழத்தோட்டமும், அவனும் நானும் கண்கூடாகப் பார்த்தவை. அதனால் தான் சொல்கிறேன். அந்த சித்திரங்களில் பிசிறு இல்லை என்று."
தி.ஜானகிராமனின் நினைவு நாள்: நவம்பர் 18. அவர் அமரரானது 18-11-1983. 'யாத்ரா' இதழ் தி.ஜா.வின் நினைவாக ஒரு நினைவு மலர் வெளியிட்டது. அந்த நினைவு மலரில் ஸ்வாமிநாத ஆத்ரேயனின் கட்டுரையின் சில வரிகள் இவை.
'யாத்ரா' இதழ்களின் தொகுப்பை இரு புத்தகங்களாக சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அருமையான தொகுப்பு. பல அரிய தகவல்கள்.
சந்தியா பதிப்பகத்தின் தொலைபேசி எண்: 044-24896979/65855704
E.Mail: sandhyanatarajan@yahoo.com
பல அரிய தகவல்கள் பேராசைக்கு அளித்த விளக்கம் சிறப்பு.
பதிலளிநீக்குமீள் நினைவுகளை எங்களுக்கும் தருகிறீர்கள்.மிகவும் சுவாரஸ்யம்.நன்றி !
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குநன்றி லக்ஷ்மிம்மா.
நன்றி ராமலக்ஷ்மி. பொன்னியின் செல்வன் கதைக்கு அவர் ஓவியங்கள்தானே!
நன்றி DD.
நன்றி மீனாக்ஷி.
நன்றி வல்லிம்மா.
நன்றி கோவை2தில்லி.
நன்றி ஜீவி சார்.
நன்றி ஹேமா.
தொடராக பத்திரிகையில் பார்க்கும் வாய்ப்பு இருக்கவில்லை. தொகுப்புதான் உள்ளது. ம.செ ஓவியங்கள் பிடிக்கும். எனவே ஒரு ஆர்வம்.
பதிலளிநீக்குசுவாமிநாத ஆத்ரேயாவின் இந்தக் குறிப்பிட்ட தகவல்களை நானும் படிச்சேன்.
பதிலளிநீக்குமணியத்தின் ஓவியங்களிலேயே நான் மிகவும் ரசிப்பது அமரதாரா நாவலுக்காக அவர் இந்துமதியை வரைந்திருக்கும் அழகுதான். முதன்முதல் கன்றுக்குட்டியை இழுத்துப் பிடித்துக் கொண்டு ஓட்டமாய் ஓடி வரும் இந்துமதியையும், அவள் முகத்தில் தெரியும் வெகுளித்தன்மையையும் அப்பட்டமாய்க் காட்டி இருப்பார்.