திங்கள், 20 அக்டோபர், 2014

திங்கக் கிழமை தின்ற அனுபவம்.141020:: உண்பது நாழி, கேட்பது ?

                 
முதன்முதலில் மியூசிக் அகடெமி காண்டீனில் டிபன் சாப்பிட்டது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதில் என்று ஞாபகம். அப்பா, சித்தப்பா இவர்களுடன் அங்கு சென்றேன். வெளியே பந்தல் கச்சேரி கேட்டுவிட்டு, உள்ளே சிறிய பந்தலில் ஆளுக்கொரு பொங்கல், காபி சாப்பிட்டோம். பாவம் சித்தப்பா பர்சில் இருந்த எல்லா சில்லறையையும் கொட்டி, எண்ணிக் கொடுத்துவிட்டு, நாங்கள் மூவரும் நுங்கம்பாக்கத்திற்கு நடந்தே வரவேண்டிய நிலைமை. ஆனால் பொங்கலும் காபியும், சுவையாக, சூடாக இருந்தன. வெளியே ஹோட்டல்களில் இட்லி ஒன்று பத்து பைசாவாகவும், வடை ஒன்று பதினைந்து பைசாவாகவும் இருந்த நாட்களில் அங்கே ஒரு வடை ஐம்பது பைசாவாக இருந்தது! 
                   
    

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தொன்றாம் வருடம் டிசம்பரில் வேலையில் சேர்ந்த பிறகு, அநேகமாக ஒவ்வொரு வருடமும் சங்கீத சீசனில், மியூசிக் அகடெமி காண்டீனில் குறைந்தபட்சம் ஒரு காபியாவது (அதிகபட்சம் ஒரு மினி மீல்ஸ்தான்!) சாப்பிடாமல் விடுவதில்லை. காபியின் விலை இரண்டு ரூபாய் இருந்த காலத்திலிருந்து, இருபது ரூபாய் காலம் வரை பார்த்தாயிற்று! இன்னும் எங்கே போகுமோ தெரியவில்லை. 
                  
மினி மீல்ஸ், பதினைந்து ரூபாய் காலத்திலிருந்து சென்ற வருட விலையான அறுபத்தைந்து ரூபாய் வரை பார்த்தாயிற்று. சென்ற வருடம் சாப்பிட்ட மினி மீல்ஸ் நினைவில் ரொம்பவும் தங்கிப் போய்விட்டது. ஸ்ரீரஞ்சனி கச்சேரி கேட்டு, முடிந்தபின் எழுந்து நின்று நீண்ட கைதட்டல் செய்து, வெளியே வந்து, காண்டீன் மீல்ஸ் டோக்கன் வாங்க பெரிய கியூ. அதில் நின்று மூன்று டோக்கன் வாங்க ஐநூறு ரூபாய் கொடுத்தால், மீதி முன்னூறு ரூபாயும், ஒரு சாக்கலேட்டும் கிடைத்தன. 
                    
  

அதற்குப் பிறகு, ஒவ்வொரு டேபிளிலும் சுற்றி உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒவ்வொருவரின் பின்னாலும் மூன்று மூன்று பேர்கள், வெயிட்டிங் லிஸ்ட்.  அண்ணன், நான், திருமதி ஆகியோர் சேர்ந்தாற்போல் ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிட முடியாத நிலை. எல்லோர் கையிலும் ஆளுக்கு ஒரு டோக்கன் எடுத்துக்கொண்டு வெவ்வேறு இடங்களில் வெயிட்டிங் லிஸ்ட் ஆக நின்றோம். 
              
ஒருவழியாக இடம் பிடித்து, உட்கார்ந்து பார்த்தால், நான் இருந்த மேஜைக்கு சர்வர் வரவில்லை. நெட்டுக்கு உட்கார்ந்தா சர்வர் டவுன் ஆவது வழக்கம் - சாப்பாட்டுக்கு உட்கார்ந்தா கூடவா சர்வர் அப்ஸ்காண்டு ஆகணும்!  எழுந்து போய் சாப்பாடு தட்டிலேற்றும் பகுதியில் பார்த்தால் அங்கே கியூ கூட இல்லாமல் ஒரே குழப்பக்கூட்டம். பெரிய குரலில் சண்டை போட்டவர்கள் கையில் இருந்த டோக்கன்களை வாங்கிக்கொண்டு, ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு நிமிடங்கள் செலவழித்து ஒவ்வொரு தட்டு வந்தது. சாப்பாடு இருந்தால் தட்டு இல்லை; தட்டு இருந்தால் சாம்பார் சாதம் காலி, என்று இந்திய சர்க்காரின் பற்றாக்குறை பட்ஜெட்டாக சமாளித்துக் கொண்டிருந்தார்கள். 
             
நான் பசி மயக்கத்தில் இருந்ததால், சத்தம் போடாமல் கையில் இருந்த டோக்கனை உயர்த்திப் பிடித்து உணவு வழங்கு துறை அலுவலரிடம் காட்டியபடி, கண்களால் அப்பீல் செய்துகொண்டிருந்தேன். இதற்குள் அடுத்த கச்சேரியான சந்தீப் நாராயணன் கச்சேரி ஆரம்பமாகிவிட்டது. எங்கேயோ கிடைத்த இடத்தில் அடித்துப் பிடித்து உட்கார்ந்து, சாப்பிட்டு முடித்த திருமதி, என்னைத் தேடி அங்கே வந்து, எனக்காக குரல் கொடுக்கத் துவங்கினார்! 
                 
    

ஒருவழியாக  எனக்கும் உணவுத்தட்டு வந்தது. அதைப் பெற்றுக்கொண்டு ஓடிப்போய் கிடைத்த இடத்தில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தேன். ஐந்து சிப்ஸ், ஒரு ஸ்வீட், ஒரு கப் சாம்பார் சாதம், ஒரு கப் தயிர் சாதம், ஒரு துண்டு ஊறுகாய். அவ்வளவுதான்! அதற்குத்தான் இவ்வளவு அல்லாடல், ஆர்ப்பாட்டம்! 
           
சாப்பிட்டு முடித்து, அகடெமி ஹாலுக்கு திரும்பி வரும்பொழுது,  கொஞ்சம் சுலபமாக இடம் கிடைத்தது. சந்தீப் நாராயணன் மிகவும் நன்றாகப் பாடினார். இரசித்துக் கேட்டுவிட்டு, கச்சேரி முடிந்தவுடன், கை தட்டி எழுந்து வெளியே செல்ல இருக்கைகளின் இடுக்கு வழியாக பக்கவாட்டிலேயே நகர்ந்து நகர்ந்து வரும்பொழுது, எங்கள் வரிசையின் அடுத்த, பின் வரிசையில் ஒரு வி ஐ பி அமர்ந்திருந்தார் என்று தெரிந்தது. கனிமொழி! 
            

13 கருத்துகள்:

  1. காபி விலை 20? எந்தக் காலம்? சரவணபவனில் 35 ரூபாய் என்று கேள்வி!

    சென்னையில் கச்சேரி சீசனில், குரங்கு போல் தாவித் தாவி, யார் எங்கு என்று பார்த்து, கூடியய்வரை மதியம் கச்சேரிகள்தான்...ஃப்ரீ கச்சேரிகள், அதுவும் இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன்....(அப்படி டி.எம். கிருஷ்ணாவின் கச்சேரிகளுக்கு முன்பு 12 - 13 வருடங்களுக்கு முன்தாவித் தாவிக் கேட்டு, மைலாப்பூர் சபாவில் தான் அவரது கச்சேரி மதியம் ஸ்லாட் ஃப்ரீ இறுதி..22 வயதுதான் அவருக்கு..அடுத்த வருடமே ம்யூசிக் அகடமியில் 7.30 மணி ஸ்லாட்.....ப்ரமோஷன்....அப்படி வளர்த்த?!!! ஹஹஹஹ...டிஎம்கே இன்று எங்கேயோ!!!)

    ம்யூசிக் அகடமியில் என்றுமே விலை கூடுதல் என்று கேள்வி! அப்படித்தானோ?!!! சபா அப்படிப்பட்டதாலோ?!
    ஞாநாம்பிகா மட்டும் ஒரே ஒரு தடவை சாப்பிட்ட அனுபவம்...நாரதகான சபா என்று நினைவு...சரியாகத் தெரியவில்லை......இன்னும் ஒரு மாதம் தான் ஆரம்பித்து விடும்....களை...
    -கீதா

    பதிலளிநீக்கு
  2. எத்தனை காத்திருப்பு..
    சுவையான பதிவு.

    பதிலளிநீக்கு
  3. பெரிய உணவகங்களில் இப்படி காத்திருப்பது எனக்கு அலுப்பைத் தரும்! உடனே திரும்பிவிடுவேன்! பெரும்பாலும் கூட்டம் இருந்தால் மீல்ஸ் டோக்கன் வாங்க மாட்டேன்!

    பதிலளிநீக்கு
  4. மினி மீல்ஸைக்காட்டிலும் அதிக சுவை உங்களின் நினைவலைகளும் அவற்றைப்பகிர்ந்த உங்கள் எழுத்தும்!!

    பதிலளிநீக்கு
  5. மினி மீல்ஸ் எல்லாம் இப்ப கொள்ளைதான். வயிறும் நிரம்புவதில்லை.அநியாயாம். ஹ்ம்ம்

    பதிலளிநீக்கு
  6. நான் தில்லியில் இருப்பதால் அதிகம் இழப்பது இத்தகைய நிகழ்வுகளை தான் - குறிப்பாக இங்கே கிடைக்கும் உணவு! :))))

    பதிலளிநீக்கு
  7. சிந்துபைரவி படத்தின் சுலக்சனா போன்ற சங்கீத ஞானசூனியம் நான் ! ஆனால் டிசம்பர் சீசனில் ஆனந்த விகடனில் வரும் ஆலாபனை கட்டுரைகளை மட்டும் விடாமல் படித்துவிடுவேன்... காரணம் அதன் இறுதியில் அந்தந்த சபாக்களின் டிபன் பட்டியலும் தரமும் குறிப்பிடுவார்களே... அதற்காக !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  8. சிந்துபைரவி படத்தின் சுலக்சனா போன்ற சங்கீத ஞானசூனியம் நான் ! ஆனால் டிசம்பர் சீசனில் ஆனந்த விகடனில் வரும் ஆலாபனை கட்டுரைகளை மட்டும் விடாமல் படித்துவிடுவேன்... காரணம் அதன் இறுதியில் அந்தந்த சபாக்களின் டிபன் பட்டியலும் தரமும் குறிப்பிடுவார்களே... அதற்காக !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  9. //நெட்டுக்கு உட்கார்ந்தா சர்வர் டவுன் ஆவது வழக்கம் - சாப்பாட்டுக்கு உட்கார்ந்தா கூடவா சர்வர் அப்ஸ்காண்டு ஆகணும்!//

    அது எப்படித் தெரிஞ்சது இங்கே அடிக்கடி சர்வர் டவுன் ஆவது? ஆச்சரியம் தான் போங்க! :)))

    நானெல்லாம் இப்படிக் கூட்டத்தில் அடிச்சுப் பிடிச்சுண்டு போய்ச் சாப்பிடவே மாட்டேன். வீட்டுக்குத் திரும்பி ரசம் சாதம் சுட்ட அப்பளத்தோடு சாப்பிடும் சுகத்தை இழக்காமல் அதையே அனுபவிப்பேன். :)

    பதிலளிநீக்கு
  10. என்ன இது "திங்க"லை போலிருக்கே இந்த வாரம்னு நினைச்சேன். நான் தான் தாமதம். :))))

    பதிலளிநீக்கு
  11. இந்தப் பதிவின் சிறந்த பின்னூட்டமாக ஆசிரியர் குழு தேர்ந்தெடுத்திருப்பது, Thulasidharan V Thillaiakathu அவர்களின் பின்னூட்டத்தை. அவருக்கு எங்கள் ப்ளாக் நூறு பாயிண்டுகள் அளித்துள்ளது. மற்ற பின்னூட்டங்கள் அளித்த ஒவ்வொருவருக்கும் இருபது பாயிண்டுகள். எல்லாத்தையும் பாங்குல போட்டு வெச்சிக்குங்க. எதிர்காலத்தில் உதவும்.

    பதிலளிநீக்கு
  12. காபி விலை இருபது ரூபாய்தான் - சமீபத்தில் கும்பகோணம் டிகிரி காபிக் கடையில், ஸ்ரீபெரும்புதூருக்கும் வேலூருக்கும் இடையில் ரோடோரக் கடையில் குடித்தேன். மிகவும் ஸ்ட்ராங் பில்டர் காபி. சுவையாக, சூடாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  13. நல்ல இசையை கேட்க இது போன்ற சங்கடங்களை அனுபவிக்க வேண்டும் போல இருக்கே!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!