திங்கள், 27 அக்டோபர், 2014

'திங்க'க் கிழமை : பாதாம் - முந்திரி கேக்



                                          

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நடைப் பயிற்சியில் அதிகாலை வீட்டுக்கு வரும் மாமாவை ஒரு வாரமாய் ஆளையே காணோம்.

மழை மட்டும் காரணமல்ல என்று பின்னர் தெரிந்தது. "வந்தா தீபாவளி பட்சணம் கொடுத்துடுவியே"

விடுவோமா என்ன?  எவ்வளவு நாள் கழித்து வந்தாலும் அவருக்காக எடுத்து வைத்திருந்த மாலாடு, ரவா லாடு, மற்றும் பாதாம் - முந்திரி கேக் அவரிடம் வழங்கப்பட்டது. 


  

நாடா (ரிப்பன்), தேன்குழல் போன்றவை தீர்ந்து விட்டதால் தரவில்லை! ("நல்லவேளை" என்றார்)

தெரியாமல் ஒன்றிரண்டு பேர்கள் இந்த ஸ்வீட் பெயர் என்ன, எப்படிச் செய்தீர்கள் என்று (ஏதாவது பேச வேண்டுமே) கேட்கப் போக, என் பாஸ் சொன்ன குறிப்பு கீழே தந்துள்ளேன்.


பாதாம் இறுக்கமாக ( ! ) ஒரு பெரிய கைப்பிடி எடுத்து ஒரு பாத்திரத்தில் கொதிக்கவைத்து இறக்கிய தண்ணீரில் ஊற வைக்கவும். முந்திரி ஒரு தளர்வான ( ! ) கைப்பிடி எடுத்து அரைலிட்டர் பச்சைப்பாலில் (கலரைச் சொல்லவில்லை. காய்ச்சாத பால் என்று அர்த்தம்) ஊற வைக்கவும்.  இரண்டும் இரண்டு மணிநேரம் ஊறியதும் முதலில் பாதாமை எடுத்து அதன் சிவப்புத் தோலை நீக்கி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.  தண்ணீரைக் கொட்டி விடவும். முந்திரியையும் பாலைவிட்டுத் தனியாக எடுத்துக் கொள்ளவும். பாலைக் கொட்ட வேண்டாம்!
                                                     

தனித்தனியாக இரண்டையும் மிக்ஸியிலிட்டு இட்லி மாவுப் பதத்துக்கு அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் ஒன்றாகக் கொட்டி கலக்குமுன் இரண்டையும் ஒன்று சேர்த்து அளவு பார்த்துக் கொள்ளவும்.

ஏனென்றால் அந்த அளவை வைத்துத்தான், அதற்கு இரண்டேகால் பங்கு சர்க்கரையும், முக்கால் பங்கு நெய்யும் எடுத்துக் கொள்ளவேண்டும். 

            


எல்லாவற்றையும் (அரைத்த விழுது, பால், சர்க்கரை, நெய்) ஒன்றாக ஒரு பாத்திரத்தில் கொட்டி, சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.

                                              


வாணலியை அடுப்பில் வைத்து (அடுப்பைப் பற்ற வைக்கவும் என்றெல்லாம் சொல்ல வேண்டுமா என்ன?) ஒரு ஸ்பூன் நெய் விட்டு இந்தக் கலவையை அதிலிட்டுப் புரட்டவும்.

கையில் ஒட்டாத பதம் வந்ததும் (ஒரு சிறு உருண்டை எடுத்து சிறிய தட்டில் 'சொத்' தென்று எறிந்தால் அது அப்படியே ஒட்டாமல், பரவாமல்  நிற்க வேண்டுமாம்) தாம்பாளத்தில் இட்டு வில்லைகள் போட்டு விடவும்.



                                               

அவ்வளவுதாங்க... முடிஞ்சுது சமாச்சாரம்.

                                       


வீட்டுக்கு யார் முதலில் வருகிறார்களோ, அவர்களுக்கு முதலில் கொடுத்துப் பார்த்து அவர்கள் முக பாவங்களைப் பார்த்து நீங்களும் சாப்பிடலாமா, அல்லது விருந்தினர்களுக்கு மட்டுமா என்று முடிவு செய்து கொள்ளுங்கள்!

21 கருத்துகள்:

  1. பாதாம் கேக்குக்கு பாதாமை முதல் நாளே குளிர்ந்த நீரில் ஊற வைச்சுக்கலாம். தப்பில்லை. நான் அப்படித் தான் பண்ணிண்டு வரேன். இந்த வருஷம் தான் பாதாம் கேக் பண்ணலை. போன வருஷம் தீபாவளி இல்லாததால் பண்ணலை. :)

    பதிலளிநீக்கு
  2. பாலும் சேர்க்காமல், முந்திரியும் சேர்க்காமல் பண்ணலாம். நல்லாவே வரும். சர்க்கரைப் பாகு முத்தலாக வைச்சுக்கணும். திரண்டு வரும்போது கீழே இறக்கித் தட்டில் கொட்டினால் ஓடும். ஆனாலும் கவலையே படாமல் வைத்திருக்கவும். ஆற ஆற கெட்டிப்பட்டுவிடும். ஒரு முறை (அதாவது முதல் முதல் பாதாம் கேக் பண்ணும்போது) இது தெரியாமல் கொஞ்ச நேரத்தில் வில்லைகளாக தளர்வாக இருந்தபோதே எடுத்து வைச்சேன். எல்லாம் ஒட்டிக் கொண்டு விட்டது. :))) பின்னர் மறுநாள் பார்த்தால் மைசூர்ப்பாகு பொரபொரவென இருக்குமே அது போல் ஆகி இருந்தது. நல்லவேளையாக வில்லையாக எடுக்க வந்தது! :))))

    பதிலளிநீக்கு
  3. கடைசியில் இருக்கிறதைப் பார்த்தால் பால் கேக் மாதிரி இருக்கு! இப்படி வழு வழுனு கேக் வில்லைகள் போட வரலை எனக்கு! கொஞ்சம் கரடு, முரடாகவே வரும், என்னைப் போலவே! :))))))

    பதிலளிநீக்கு
  4. அது சரி உங்க வீட்டுக்கு வந்தா இனிப்புக் கொடுத்து சோதனை பார்ப்பீங்கனு சொல்லுங்க! யோசிக்கிறோம்! :))))

    பதிலளிநீக்கு
  5. //தனித்தனியாக இரண்டையும் மிக்ஸியிலிட்டு இட்லி மாவுப் பதத்துக்கு அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் ஒன்றாகக் கொட்டி//

    முதல்லயே ஒண்ணாச் சேத்து அரைச்சுகிட்டா என்னவாம்?

    பதிலளிநீக்கு
  6. நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்.

    நன்றி கீதா மேடம். உங்கள் டிப்ஸ் யாவும் இந்தப் பதிவுகளுக்கு பலம். ஒன்றாம் தேதிக்கு அப்புறம் சீக்கிரம் இணையம் வர ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்!

    அப்புறம் படம் எல்லாம் இணையத்திலேருந்து. நான் எடுத்தவை அல்ல. ஆனால் ஒன்று! இங்கும் பால் கேக் போல இருக்கும் படம் போலத்தான் இருந்தன.

    எங்க வீட்டுக்கு வந்தா இனிப்பு மட்டுமில்லை, ஒவ்வொன்னையும் கொடுத்து சோதனை பார்ப்போம்! :))))

    ஹுசைனம்மா... நீங்க கேட்ட கேள்விதான் நானும் கேட்டேன். அது மட்டும் இல்லாமல், 'அரைத்த இரண்டையும் ஒன்றாக வைத்துக் கொண்டு, சர்க்கரையை அடுப்பில் வைத்துக் கரைத்துக் கொண்டு பால், அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறி, நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டால் என்ன' என்று கேட்டேன். அதெல்லாம் கேட்கக் கூடாதாம். அவங்களுக்குச் சொல்லிக் கொடுத்தவங்க இப்படித்தான் சொல்லிக் கொடுத்தாங்களாம்! :)))))

    பதிலளிநீக்கு
  7. பொதுவாக பாதாம், முந்திரிக்குப் பால் தேவையில்லைனு சொல்வாங்க. நான் அதிகம் முந்திரி சேர்த்துப் பண்ணினதில்லை. பாதாம் மட்டும் தான்! அல்வா பதம் என்றால் கொஞ்சம் முன்னால் எடுத்துடுவேன். அதுவே கல்யாணச் சமையல்காரர்கள் கையில் ஒட்டும் பதத்துக்குத் தான் எடுக்கிறாங்க. என்ன, அழகாய் அதுக்குனு ஒரு வெண்ணெய்ப் பேப்பரில் போட்டு மடிச்சு வைச்சுடறாங்க. :))) அதான் வித்தியாசம். சர்க்கரைப் பாகு வைத்துக் கொண்டு அரைத்த விழுதைப் பாலில் கலந்துகொண்டு போட்டும் கிளறலாம். முடிவு என்னமோ ஒண்ணு தான்.

    பதிலளிநீக்கு
  8. என்ன வேர்ட் வெரிஃபிகேஷன் எல்லாம் அமர்க்களமா இருக்கு??????? நீங்களுமா????

    பதிலளிநீக்கு
  9. இந்த பதிலை எழுதறதுக்குள்ளே மின்சாரம் நாலு தரம் போயிட்டுப் போயிட்டு வந்திருக்கு. ஒவ்வொரு முறையும் போனால் இன்வெர்டரில் கூட விளக்குகளோ, மின்விசிறிகளோ சுத்துவதில்லை. சுத்தமாய்ப் போயிடுது! :(

    ஆனால் பாருங்க, இணையம் படு வேகம்! :))))

    பதிலளிநீக்கு
  10. பாதாம் பால் கலக்கப் பவுடர் பண்ணத் தான் கொதிக்கிற வெந்நீரில் பாதாமைப் போட்டு ஊற வைச்சு உரிக்கணும். கேக் பண்ணக் குளிர்நீரே போதுமானது. முதல்நாளே ஊற வைத்தால் நல்லா அரைக்க வரும்.விழுதும் கணிசமா இருக்கும். ஊற வைச்ச பாதாமைச் சுண்டலாப் பண்ணியும் சாப்பிடலாம்.கூடவே கொஞ்சம் போல் ப.வெ., காரட், கொத்துமல்லி, சாட் மசாலா தூவிக் கொண்டு சாப்பிட்டால் நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  11. கடைசியிலே வெச்சிங்க பாரு ஒரு பஞ்ச்! அதுக்காகவே இந்த பதிவை இன்னும் ஒரு முறை படிக்கலாம்! சூப்பர்!

    பதிலளிநீக்கு
  12. பார்க்கும் போதே சாப்பிடத் தூண்டுகிறதே. விருந்தினர்களுக்கு மிச்சம் வைப்பீர்களா, என்ன:)?

    பதிலளிநீக்கு
  13. ஸ்வீட் பண்ணுவதைக் கூட ஸ்வீட்டா சொல்லியிருக்கீங்க பாருங்க நகைச்சுவை ததும்ப....அத அத ரொம்பவே ரசிச்சோம்....

    பட்ஷணம் செய்யும் போது முதலில் வீட்டிற்கு வருபவர்கள் கினி பிக் அப்படின்றீங்க......ஹாஹஹஹ....பரவாயில்லை...பின்னாடி தீர்ந்து போச்சுனா...தேங்குழலும், நாடாவும் தீர்ந்தா மாதிரி.....

    பதிலளிநீக்கு
  14. வேண்டுகிற அளவுக்கு அல்வா எடுத்துக் கொண்டேன்.தேவையான அளவு அறிவுரைகளும் இனிக்கின்றன.மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  15. பாதாம் கேக்கிற்கு நானும் முந்திரி போட மாட்டேன். போன முறை செய்த போது தோலை உரிக்கவில்லை.( பாதாமின் தோலைத் தான் சொல்கிறேன்) அதே சுவை ஆனால் கலர் மட்டும் சற்றே மங்கலாக இருந்தது. பாதாம் தோலில் இருக்கும் சத்து வீணாகக் கூடாது என்று தான்.
    உங்கள் பாதாம் கேக் எடுத்துக் கொண்டேன். நன்றி ஸ்ரீராம் சார்.

    பதிலளிநீக்கு
  16. Send 2 kilo grams of this cake immediately to mohan for his Naka suthi published by appa durai

    Subbu thatha

    பதிலளிநீக்கு
  17. நானே கேக்கணும்னு இருந்தேன்.. எனக்காக சூரி சார். எனக்கு அனுப்பிடுங்க. நான் மோகன்ஜி கிட்டே பத்திரமாவோ பாத்திரமாவோ சேர்த்துடறேன்.

    பதிலளிநீக்கு
  18. நாவூறும் சுவை
    நல்ல பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  19. //தனித்தனியாக இரண்டையும் மிக்ஸியிலிட்டு இட்லி மாவுப் பதத்துக்கு அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் ஒன்றாகக் கொட்டி//

    முதல்லயே ஒண்ணாச் சேத்து அரைச்சுகிட்டா என்னவாம்?//

    ஹுஸைனம்மா , பாதாம் கொஞ்சம் கெட்டியாக இருக்கும் ஊறினாலும். முந்திரி சீக்கிரம் அரைப்பட்டு விடும், பாதாம் கொஞ்சம் நேரம் ஆகும் அரைபட. அதனால் தனி தனியாக அரைத்தால் அரைபடாத சிறு சிறு துண்டுகள் இல்லாமல் இருக்கும். அதனால் தான்.

    நானும் அடிக்கடி செய்வேன் . என் மாமியார் மிக நன்றாக செய்வார்கள்.
    வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமானது.

    மிக நன்றாக வந்து இருக்கிறது பாதாம் முந்திரி ஸ்வீட். எடுத்துக் கொண்டேன் தாமதமாக வந்தாலும் எனக்கும் கொஞ்சம் தட்டில் இருந்தது நன்றி.

    பதிலளிநீக்கு
  20. தில்லிக்கு அரை கிலோ பார்சல் ப்ளீஸ்! :))))

    ஆனா தீபாவளி சமயத்தில் பல வித Milk ஸ்வீட்ஸ் சாப்பிட்டு, அதுவும் எருமைப் பாலில் செய்த Milk ஸ்வீட்ஸ் சாப்பிட்டு ஒருவித மந்தமா தான் இருக்கேன்! :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!