செவ்வாய், 19 ஏப்ரல், 2016

கேட்டுவாங்கிப் போடும் கதை : கர்ப்பத்வனி



இந்த வார "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் மணிக்கொடி கால எழுத்தாளர் கர்ணன் அவர்களின் படைப்பு.
 
 
திரு கர்ணன் பல புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார்.

இவரைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் பழம்பெரும் எழுத்தாளர்.  ஆனால் வறுமையில் வாடுபவர்.  தொழிலால் தையற்கலைஞர்.  எழுத்துகளையும் தைப்பவர் என்றே சொல்லலாமா?  அப்பாவின் நண்பர்.  சமீபத்திய அப்பாவின் புத்தகமான 'இவனும் அவனும்' புத்தகத்தை முயற்சிகள் எடுத்து வெளியிட்டவர்.  இவரும் இன்னொரு புகழ் பெற்ற எழுத்தாளர் உஷாதீபனும் அவ்வப்போது வந்து அப்பாவைப் பார்த்துச் செல்வார்கள்.
 

ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு - அப்பாவுக்கு இப்போது அளவு நினைவு இல்லாமல் இருப்பது மோசமில்லாமல் இருந்தபோது - கர்ணன் ஸார் கதையை எங்கள் ப்ளாக்கில் வெளியிடக் கேட்டுக் கொண்டார்.  அவரிடமும்  அவர் எழுதிய கதை ஒன்றை எனக்கு அனுப்பச் சொன்னார்.  அது இப்போதுதான் நிறைவேறுகிறது.

அவரின் இந்தக் கதை,  பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தினமணிக் கதிர் பத்திரிகையில் வெளியானது.  இந்தக் கதையைப் படித்து விட்டு நெகிழ்ந்துபோய் முதலில் வாழ்த்துச் சொன்னவர் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் என்கிறார் கர்ணன், தனது மடலில்.  மேலும் சோ சத்தியசீலன், எழுத்தாளர் திரு சந்தானத்தேவன் (திரு கி ஆ பெ விசுவநாதன் அவர்களின் உறவினர்), திண்டுக்கல் எழுத்தாளர் திரு கமலவேலன் ஆகியோரும் பாராட்டியதை நினைவு கூர்கிறார்.
 
 
"நிலையாமை - மரணம் இவற்றில் ஏனோ மனம் இளம் வயதிலேயே படிந்து, சித்தர்கள், பட்டினத்தார், பத்திரகிரியார் மற்றும் பல மனதைத் தொடும் பழைய, புதிய  படிக்கையில் மனம் ஏகாந்தமாக எங்கெங்கோ சென்று விடும்.  மனம் நிலைப் படுவதற்கு அடிக்கடி மயானத்தில் சென்று தவஸ் இருப்பது இளமைக் காலத்திலிருந்து இதுவரைத் தொடர்கிறது" என்கிறார்.


கர்ணன் அவர்களைப் பற்றி ஜெயமோகன் சொல்லி இருப்பது.  அவரைப்பற்றிய விக்கி விவரங்கள் இங்கே.  தினமணியில் அவரைப் பற்றி இங்கே.



இவரது எழுத்துகளைப் பற்றிச் சொல்லும் பி எஸ் ராமையா  "நம் கையைப் பிடித்து நிறுத்தி,  "சின்ன விஷயம்தான் எவ்வளவு துன்பங்களுக்கு வித்தாகி விடுகிறது தெரிகிறதா?"  என்று கேட்கும் பாணியில் கதை எழுதும் வித்தை கர்ணனுக்கு கை கூடி வந்திருக்கிறது.  இம்மாதிரி சிறு வித்துக்களை வைத்து ஒரு பெரிய செடியை வளர்த்துக் காட்டும் எழுத்துத் திறமையைப் பாராட்டாமலிருக்க முடியாது"  என்கிறார்.
 
 
இனி அவர் படைப்பு....
 
====================================================================
 
 
 
கர்ப்பத்வனி 


கர்ணன்


இடுப்புச் சேலையை தளர்த்தி வயிற்றுக்கும் கீழே இறக்கி விடவும், கல்லுமுட்டிமாதிரி அடிவயி
று தனியே நிற்கிறது.  கால்களை நீட்டி திணறிக் கொண்டிருந்தாள் பூமயிலு.  வெளியிலிருந்து வந்த சாத்தையா, "என்ன செய்யுது?" எனக் கெஞ்சும் குரலில் மனைவியின் அருகில் உட்கார்ந்து தோளைப் பற்றினான்.
 
"என்னவோ போல வருது.  பயமாயிருக்கு"...  அவன் மீதே சாய்ந்து விட்டாள்.  அவள் படும் அவஸ்தை இதயத்துக்குக் கேட்டது.  "எதுக்குப் பயப்படுறே?  நான் இருக்கேனே..." -  உள்ளுக்குள் பயந்தவன்,  வெளிக்குத் தைரியம் சொன்னான்.  "கொஞ்ச நேரம் படுத்தேன்னா, நல்லாயிருக்கும்" என்றவாறு எழுந்து தலையணை போட்டு படுக்க வைத்தான்.  "இரு, வர்றேன்" - சொல்லிக் கொண்டே வெளியில் போன கையுடன் மருத்துவச்சி பாப்பம்மாளை கூட்டி வந்தான்.
 
"எப்படிம்மா இருக்கே?" - கேட்டுக்கொண்டே உட்கார்ந்தவள் பூமயிளைச் சோதித்தாள்.
 
போன வாரம் பார்க்கும்போது அடிவயிறு சுருங்கி திக்கித் திணறி கொண்டிருந்த சுவாசம் இப்போது தாராளமாக வருகிறது.  கருப்பை கீழ்நோக்கி இறங்கியிருக்கிறது.  படிப் படியாக கருப்பைக் கீழிறங்கி வந்தால் பிரசவம் நெருங்கி விட்டது.  எத்தனையோ பேறு காலங்கள் பார்த்துத் தெளிந்தவளாயிற்றே!
 
பாப்பம்மாள் சிரித்தாள்.  "ஒத்தையா இருக்கிற நீ இன்னம் ரெண்டு நாள்ல ரெட்டையாயிடுவே!  பயப்படறத்துக்கு ஒண்ணுமில்லை!  பொம்பளையாப் பொறந்த அன்னிக்கு, வயித்திலெ இதையும் எழுதி ஒட்டியிருக்கே!  பயந்தா ஆகுமா?  பேரன்தான் பொறப்பான்.  எனக்கு என்ன குடுப்பே?"  சாத்தையாவைப் பார்த்து சந்தோஷ மிகுதியில் கேட்டாள்.
 
"அதுதான் பேரனைக் குடுக்கறோமே!"
 
"சேனை நான்தாம்பா வப்பேன்"
 
"அதுதானே எங்க ஆசையும்.  பய ஒங்களப் போல நீண்ட ஆயுசாகவும் கைராசியாகவும் கலகலன்னும் இருப்பான்!"
 
"நீங்க கொஞ்சம் வெளில போங்க.." - புருஷனை ஜாடை காட்டினாள் பூமயிலு.  அவன் போனதும் ரகசியக் குரலில் சொன்னாள்: "ஒன்னுக்கு அடிக்கடி போகுது.  போன்னடியிலும் வயித்திலேயும் எரிச்சலா இருக்கு.  கீழே வெள்ளையா நீர்க்கழிவு வருது. நேரம் ஆக ஆக ரொம்ப இப்படிப் போகுது.  அத்தோட லேசா சிகப்பு நிறத்திலே வந்தது. இப்போ சிகப்பாவே வருது."
 
பாப்பம்மாளின் முகத்தில் அனுபவக் கணக்கு ஓடியது.  "அப்படீன்னா அஞ்சாறு மணி நேரத்திலே பிரசவமாயிரும்.  இதுக்குத்தானா அவனை வெளியே போகச் சொன்னே?"
 
"அவரை வச்சுகிட்டு எல்லாத்தையும் சொல்றதுக்கு வெக்கமா இருக்கு...!"
 
"வெக்கப்படுற நேரத்திலே சிரிச்சுட்டு, இப்ப வெக்கமா இருக்குன்னா?"  பாப்பம்மாவின் சரியான நிமிண்டி!
 
சுடுகாட்டிலுள்ள சுடலை மாடசாமி கோயில் திருவிழா மூன்று நாட்களாக கொண்டாடப்படுகிறது.  இன்று கடைசித் திருநாள்.  நான்கு பக்கமும் ரேடியோக் குழாய்கள் பாட்டுகளை அள்ளிக் கொட்டுகின்றன. சந்தனமும் குங்குமமும் விபூதியும் பூமாலைகளும் கலந்து ஒரு சுகந்த வாசம் பக்திப் பரவசத்துடன் மணக்கிறது.  சாத்தையாவும் பூமயிலும் மகன் சுந்தரத்தைக் கூட்டி வந்து -  "தொழில்நல்லா நடக்கணும்" - மகன் நன்றாகப் படித்து வேறு வேலைக்குப் போக வேண்டும்!"  என்று பொங்கல் வைத்து சாமி கும்பிட்டார்கள்.
பயல் அவ்வளவாகக் கறுப்பில்லை.  ஒல்லியாக வளர்த்தியாக இருக்கான்.  எட்டு வருடங்கள் ஏங்கிக் கிடந்தது பிறந்தவன்.  பாப்பம்மாள் சொன்னது போலவே மணிப்பயல்தான்.  இவன் பிறக்கவில்லை என்றால் இந்த வாழ்க்கைக்கே அர்த்தமிருக்காது.  தியாகி வைத்தியநாதைய்யர் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படிக்கிறான்.  வாத்தியாரும் நன்றாகப் படிப்பதாகச் சொல்கிறார்.
 
மகன் முதுகில் புத்தகச் சுமையுடன் போவதை இருவரும் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போனார்கள்.  இவன் எவ்வளவு படிக்கிறானோ, அவ்வளவு படிக்கட்டும்!
 
மகனைப் பற்றி முழுமையாக நினைப்பதற்குள் வேலை வந்து விட்டது.  அமரர் ஊர்தியிலிருந்து இறக்கி வைக்கப்பட்ட சடலத்திலிருந்து மாலைகளை எடுத்து தகரக் கொட்டகை காலில் இருந்த ஆணியில் தொங்க விட்டான்.  ஒரு நொடியில் எங்கிருந்தோ ஓடி வந்த இரண்டு மூன்று ஆடுகள் சாமந்திப்பூ, பச்சை அரளிப்பூ, இன்னும் என்னென்னவோ பூக்களெல்லாம் இருந்த மாலைகளை, முன்னங்கால்களைத் தூக்கி மரச்சட்டத்தில் வைத்துக் கொண்டு இழுத்து மேய்ந்து அசைபோட்டன.
 
உயிரைக் கடைத்தேற்றுகிறவன் கடவுளாக இருக்கலாம்.  இந்தக் கட்டையைக் கரை சேர்ப்பவன் இந்தக் கருணையாளன்தானே!  பிரேதக் கட்டுகளை அவிழ்த்துக் கொண்டிருந்தவன் வாய், 'ச்சே... ச்சே..' என்று ஆடுகளை விரட்டியது.  பாடையில் கிடந்தவரின்மேல் போர்த்தியிருந்த மல்துணியை எடுத்து விட்டு அவனும் இன்னொருவரும் பிடித்துத் தூக்கிச் சிதையில் வைத்தனர்.  இடதுகைப் பக்கம் பெண்கள் நின்றார்கள்.  ஒரு பெண் கருப்பாக இல்லை.  நல்ல நிறம்.  சுடலைச் சிந்தனையை மறக்கச் செய்யும் அழகு.  எல்லா சமூகத்திலும் பெண்கள் சுடுகாட்டுக்கு வருவதில்லை.  சௌராஷ்டிர சமூகத்தில் மட்டும் பெண்களும் வருகிறார்கள்.
 
கிடத்தியிருப்பவர் வாட்டசாட்டமான உருவம்.  சிவந்த நிறம்.  நெஞ்சில் வெற்றிலை வைத்து சூடம் ஏற்றவும், எல்லோரும் சுற்றி வந்து கும்பிட்டதும் மூடிக் கொள்ளி வைத்தார் ஒருவர்.  வந்தவர்கள் கரைந்தார்கள்.  நாளைக் காலை வரை இதற்குப் பொறுப்பு சாத்தையாதான்.
 
பிணத்தின் கால் பகுதியிலிருந்து 'மளமள' வென்று எரிந்து கொண்டு வரும் நெருப்பு,  இடுப்பு அருகில் வந்ததும் அணைந்து விடும்.  மனிதனின் பின்பாகம் வயிறு என்று கொழுப்பு நிறைந்திருக்கும்.   தீ எரிய எரிய அது உருகி 'சொய்' என்று ஊற்றி நெருப்பை அணைத்து விடும்.  சாத்தையா நீளமான விறகுக் குச்சியால் இந்தப் பகுதியை குடைந்து விட்டு மீண்டும் தீ மூட்டி விடுவான்.
 
இந்த இடம்தான் மிகவும் கஷ்டப் படுத்தும்.  பழகிப் போய்விட்ட அவனுக்கு சில நேரங்களில் எரிச்சல் பற்றிக் கொண்டு எரிக்கும்.  "என்ன எரிஞ்சு தொலைய மாட்டேங்குது..." என்று இரவு முழுக்க பக்கத்தில் இருந்து எரிய வைப்பான்.
 
இரவில் பேய்ப் பிசாசுகள் வரும் என்பதெல்லாம் முன்பு.   இருட்டில் பதுங்கி இருந்த அவைகளெல்லாம் மின்சார ஒளியில் "வேறு ஊருக்கு' ப் போய் விட்டன.  பிணம் எரிவதற்கு சற்றுத் தள்ளி நிறைய வீடுகள் வந்து விட்டன.  அங்குதான் வீடு போட்டு சாத்தையாவும் இருக்கிறான்.  இது அவனுக்கு பரம்பரைத் தொழில்.  படிக்கவும் இல்லை - வேறு வேலையும் தெரியாது.


 
காலைக் கடன் கழிப்பதற்கு இடுகாட்டுப் பக்கம் போனான் சாத்தையா.  வாயில் பீடி புகைந்து கொண்டிருக்கிறது.  தோளில் கிடக்கும் துண்டு தலைப்பாகையாகி இருக்கிறது.  இன்னும் சற்றுத் தள்ளிப் போனால் முள்வேலி - தடுப்புச் சுவர்.  அந்தப் பக்கம் கிருஸ்துவக் கல்லறை.
 
அந்தப் பனைமர நிழலில் உட்கார்ந்தவனுக்கு அவஸ்தை கழிந்தவுடன், என்னென்னமோ நினைவுகள்.
 
அதோ.... எதிரில் சின்னக் கோயில் மாதிரி கட்டியிருக்கிறார்களே -...   அது அந்தக் காலத்து பெரிய நாடகக் கம்பெனி முதலாளி சமாதி.   உள்ளே அவரின் போட்டோ மாட்டியிருக்கிறார்கள்.  கோபுரத்தில் அவரின் சிலை வைக்கப் பட்டிருக்கிறது.
 
கால் மேல் கால் போட்டு கம்பீரமாக - முறுக்கு மீசையுடன், கிராப்தலை - கோட்டுப் போட்டு - கழுத்தைச் சுற்றி அங்கவஸ்திரம்.  கோட்டின் மார்பில் அவர் வாங்கிய மெடல்கள் தொங்குகின்றன.  கனத்த மீசைக்குக் கீழே கம்பீரமான சிரிப்பு.  ஆணழகனாக இருந்திருக்கிறார்.  இவரது நாடகக் கம்பெனியில் இருந்து ஆளாகிப் போனவர்கள்தான் பின்னால் சினிமா உலகை ஆட்டிப் படைத்த நடிகை நடிகர்களானார்கள்.  பின்னால் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து முதல்வரானவர், ஒருமுறை இவர் வீட்டுக்கு வந்து நன்றிக் கடனாக வேண்டிய உதவிகள் செய்து விட்டுப் போனார்.
 
சாத்தையா கூர்ந்து பார்த்தான்.  இப்போது சிலையில் காரை உதிர்ந்து கால்பகுதி உடைந்து - வண்ணங்கள் எல்லாம் வெளுத்து உருவம் சரியாகத் தெரியாத அளவிற்கு சிதைந்து போயிருக்கிறது.  ஹ்ம்....!  இருப்பவர்களைப் பற்றி நினைக்க நேரமில்லாத காலத்தில், போனவர்களைப் பற்றி எங்கே நினைக்கப் போகிறார்கள்?
 
சற்று தள்ளி கிழக்கு பார்த்த பளிங்கு மாளிகை.  அதில்தான் சதிராட்டக்காரி அம்புஜம் அடங்கியிருக்கிறாள்.  வெளிநாடுகளில் ஏக செல்வாக்கு.  அவளின் இளமைக் காலத்தில் சொர்ணதாரை கொட்டியது.  அந்நாளைய செல்வந்தர்களை தன் வசீகரங்களால் வளைத்துப் போட்ட காம வலை.  அம்புஜத்தின் மோக உடலில் சதா மன்மத மழை பெய்து கொண்டே இருக்கும்.  இவளின் தீரா நினைவில் ஒரு பணக்காரன் கட்டிய ஆசை மாளிகை இது!  அவர் போனபின் தேடுவாரற்றுப் போன இதில் சீட்டாட்டம், குடிபோதையில் நினைவிழந்து கிடப்பவர்களில் பாதி சாவுத் தூக்கம் - க்ஷணப்பித்தம் தீர்க்க வருபவர்களுக்கு மறைவிடம்.
 
அதன்மீது அலட்சியமாக ஒரு கல்லை விட்டெறிந்து விட்டுப் போனான் சாத்தையா.
 
வரும் வழியில் தெற்கு நோக்கி போன வாரம் முளைத்த புதுச்சமாதி.  காதவழி பெயரில்லாதவன் கழுதை என்பார்கள்.  இதனுள் அடங்கியிருப்பவர் ஊரே (ரைத்) தெரிந்த தலைவர்.  தன் குற்றங்களை தானே மன்னித்துக் கொள்ளும் - மறைத்துக் கொள்ளும் உயர் பதவியில் இருந்தவர்.  எல்லாவற்றுக்கும் தானே காரணம் என்ற இந்த அறிவாளிக்கு முட்டாள் சீடனின் இறுதி அஞ்சலி இது.  உயிருடன் இருந்தபோது, ஜேஜே என்றிருந்த கூட்டம் தனிமையில் விட்டுப்போய் விட்டது.  சமாதியிலிருந்த கட்சிக்கொடி கீழே விழுந்து கிடக்கிறது.  உயிருடன் இருக்கும்போதுதான் கொடி பறக்கும்!
 
மன்னராகப் பார்த்த சாத்தையா இன்று மண்மூடிப் போகப் பார்த்தான்.
 
கொஞ்சதூரம் போனதும் ஒரு கிணறு இருந்தது.  புழக்கத்திற்கு இல்லாமல் தூர்ந்து போகவே, புதை குழியில் சரியாக ஜீரணிக்காத மனித எலும்புகளை இதில் தூக்கிப் போட்டு நிரப்பி, கிணறு இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.  அதற்குப் பக்கத்தில்தான் சிலோன் டெலிகிராஃப் இன்ஸ்பெக்டர் எம். ரெத்தின சபாபதியா பிள்ளை சமாதி இருக்கிறது.  இரண்டு பக்கமும் நந்தி நடுவில் சிவலிங்கம் - அவர் பிறந்த = இறந்த வருடக் கணக்கு இருக்கிறது.  எழுபத்தி ஆறு வயது வரை வாழ்ந்து முடிந்த இவருக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட்ட இளம் மனைவியும் ஒரு மகனும் இருந்தார்கள்.

ஒவ்வொரு வருடமும் அவர் நினைவு தினத்தன்று, அந்த அம்மாள் வந்து கூட்டிப் பெருக்கி - சமாதியைக் கழுவிக் கோலமிட்டு மாலையிட்டு விளக்கேற்றி, அவர் விரும்பிச் சாப்பிடும் பண்டங்களை  வைத்துப் படைத்து காக்கைக்கு வைத்து விட்டுப் போகும்போது, சாத்தையாவிற்கு கையில் பணம் கொடுத்தது; சமாதியைக் காட்டி, "பார்த்துக்கோ" என்று உயிருள்ளவரை பார்த்து சொல்வது போல சொல்லும்போது, மாலை மாலையாக கண்ணீர் விட்டுத் தேம்பி அழுது விட்டுப் போவான்.
 
இந்த இரண்டு வருடங்களாக அந்த அம்மாள் வருவதில்லை.  சமாதி பாழடைந்து கிடக்கிறது.  அந்த அம்மாளுக்கு என்னமும்... அப்படீன்னா இங்கேதானே  வரணும்?

 
வன் நினைவைத் தட்டி விடுவதுபோல ஆட்கள் வந்தார்கள்.  ஓட்டமும் நடையுமாகச் சென்றவன் குழி வெட்டி வைத்திருந்த இடத்தில் நின்றான்.
 
வண்டியிலிருந்து உடல் இறக்கி வைக்கப்பட்டது.  உடம்பும் நிறமும் பசுமை வயல்.  இருபது வயது கூட இருக்காது.  சுற்றியிருக்கும் சிவப்புப் பட்டுச் சேலையில் தங்கமாய்த் தகிக்கிறது.  காதல் தோல்வியாம்.
 
சில நொடிகளில் சடங்கு முடிந்து விட்டது.
 
புதைகுழிக்குள் நின்று கைநிறைய சடலத்தை வாங்கினான் சாத்தையா.  இந்த மாதிரிப் பிள்ளையை உயிருடன் இருக்கும்போது, தொட்டுத் தூக்க முடியுமா?  இப்பொழுது என் கையில் ஒப்படைத்து விட்டார்களே...!  வசதியானவர்கள், எதிர்பார்த்ததை விட நிறையவே கொடுத்தார்கள்.  இதன்மீது கட்டடம் கட்ட வேண்டுமாம்.  ஒருவாரம் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 
பிறந்ததிலிருந்து முடிந்தது வரை - விபத்துகளில் கூறு போட்டது.. தீக்குளித்து பாதி வேலையைக் குறைத்துக் கொண்டது...  தண்ணீரில் கிடந்து சதைமூட்டையாய் ஊதிப் போனது என்று வந்து கொண்டே இருக்கும். 
 
மரணத்தில் கால் பதித்துக் கொண்டுதான் அடுத்த நிமிடத்தை வாழ வேண்டியிருக்கிறது. விதி வசப்பட்டே இருக்கும் இந்த வாழ்க்கை யாருக்குச் சொந்தம்?  மரணத்திற்கா?  மனிதர்களுக்கா?  முடிவற்ற சிந்தனை நீண்டு கொண்டே போகிறது.  உயிர் வாழ்க்கையை உண்டு வாழும் இந்த மரணத்தின் பசி அடங்கவேயில்லை.
 
தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து முகம் உடம்பெங்கும் அழுத்தித் துடைத்தான்.  பசியும் வேர்வையும் இவற்றைத் தரும் உழைப்பும் இல்லைன்னா உடம்பு ஆரோக்கியமா இருக்குமா?  அவன் ஒருபோதும் சோம்பி இருந்ததில்லை. - சாவைப் போல்.

 
வீட்டுக்குப் போகும்போது இரவு வெகுநேரமாகி விட்டது.  இருள் படர்ந்து கிடக்கும் தெருவில், அடைத்திருக்கும் கருப்பையா வீட்டு சன்னலின் இடுக்கிலிருந்து பாய்ந்து வந்து நீளமாகக் கிடக்கும் வெளிச்சத் துணுக்கு பாம்பாகத் தெரிகிறது.  சட்டெனப் பார்ப்பவர்கள் பயந்து விடுவார்கள்.
 
சாப்பிட உட்கார்ந்தவன் பூமயிலு சோறு போடுவதற்குள் வாசனை பிடித்தான்.  அடுப்பில் கறி வெந்து கொண்டிருக்கிறது.  சுடலையிலும் கறிதான் வெந்து கொண்டிருக்கிறது.  அதை நினைத்தால் இதைச் சாப்பிட முடியுமா?
 
"மயிலு - வாசம் தூக்கியடிக்குதே!"
 
"கறி வறுத்து சுள்ளுன்னு ரசம் வைக்கிதுதானே உங்களுக்குப் பிடிக்கும்?"
 
சாப்பிட்டு ஏப்பம் விட்டவன், துண்டில் கை துடைத்துக் கொண்டு சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தான்.  இந்த நேரம் பூச்சிக்காளைத் தேவர் மருமகன் விருமாண்டி வந்தான்.  "என்னங்க?"  மரியாதையாக எழுந்து நின்றான்.  அவனைப் பார்த்ததும்,
 
"மாமா போய்யிட்டாரு... ஒப்பு வைக்கிற ஆளுக்கும் ஊருக்கும் சொல்லணும்"

அடடா... ஐயா எப்படிப்பட்டவரு!  யாருக்கும் அடங்காத காளையாக தெருவிலே வந்தாருன்னா, எதுர வர்ற யானையும் பின்னாலே போகுமே!  அறுப்பு காலத்திலேயே எலிக்கு அஞ்சு பொண்டாட்டிங்கிற மாதிரி தேவர் கால் வச்ச இடம் எல்லாம் வப்பாட்டி!
 
"நல்லாத்தானே இருந்தாரு.  என்ன செஞ்சுச்சு?"
 
"வயசாச்சுல்ல..."
 
வயதானா எல்லோரும் போய்த்தான் தீரணுமா?
 
"ஊருல நடக்கிற துஷ்டிக்கெல்லாம் ஐயா தவறாமே இங்கே வரைக்கும் வந்துருவாக.  நாளைக்கு அவரை வழியனுப்ப ஊரே வரும்"  சாத்தையா தலையைச் சொறிந்தான்.  விருமாண்டி பாக்கெட்டிலிருந்து செலவுக்குப் பணம் எடுத்துக் கொடுத்தான்.

 
சாத்தையா ஊர்சொல்லி விட்டுப் போனபோது, தேவர் வீட்டில் பந்தல் போட்டு வாசலில் சேர்கள் வரிசையாகப் போட்டு ஆட்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்.  சண்முகவேலு கோஷ்டியின் பறைமேளம் வெளுத்து வாங்குகிறது.  தவில் அடிக்கிறானே மலைச்சாமி, போதை உச்சிக்கேறிட்டா மேளத்தை பொத்து வச்சுருவான்.  தோண்டிக் கள்ளை தொடர்ந்து குடிச்சா, பாண்டியன் மகனும் பரதேசியாயிருவான்.  குற்றம் செய்தவன் சுகமாக இருக்க, சம்பந்தமில்லாதவன் தண்டனை அனுபவிப்பது போல, துக்கம் நிகழ்ந்த வீட்டுக்காரர்கள் அழாமல், உள்ளே பிரேதத்தை கட்டிக் கொண்டு முத்துராக்கு ஒப்பு வைக்கிறா(ன்)ள்.

"கள்ளிக்குக் கீழே கடுகுச் சம்பா
                       நாத்து விட்டேன்;
கள்ளி வளருதியோ கடுகுச்
               சம்பா கருகுதையோ!
மூங்கிக்குக் கீழே முத்துச்சம்பா
                        நாத்து விட்டேன்;
மூங்கி வளருதியோ முத்துச்
                    சம்பா வாடுதையோ!

 
சம்பந்தமில்லாத எழவு தன்மீது விழுந்த துக்கத்தை எண்ணி பெருங்குரல் பாய்ச்சி ஒப்பு வைத்தா(ள்)ன் முத்துராக்கு. ஒப்பாரிக்கும் ஆண் குரலுக்கும் சரிப்பட்டு வருமா?  சம்பந்தமில்லாத அவனையும், பொருத்தமில்லாத குரலையும் யாரும் பொருட்படுத்தவில்லை. அவனும் யாரையும் கண்டு கொள்ளவில்லை.  அந்தத் தெரு குறுகலானது.  எதிர் எதிரே உள்ள வீடுகள் முட்டிக் கொவதுபோல் நிற்கும்.  எனவே இழவு வீட்டை விட்டு அடுத்த வீட்டிற்கு முன்னால் நின்று பறைமேளம் கொட்டினார்கள்.  இதைக்கண்ட எதிர் வீட்டுக்காரனுக்கு மரண பயம் நெஞ்சை முட்டி என்னவோ செய்ய ஆரம்பித்து விட்டது.
 
பயத்தால் சாவு போய் விடுமா?
 
சாத்தையா வந்து கொண்டிருக்கையில் ஆழமில்லாமல் நேற்றுப் புதைத்த அனாதைப் பிணத்தின் புதைகுழியை நாய் நோண்டிக் கொண்டிருந்தது.  "ச்சீ.." காலில் இடறிய கல்லை எடுத்து எறிந்தான்.  நாய் கத்திக்  கொண்டு ஓடியது.  இதுக்குப் பக்கத்திலேதான் பயலுக்குப் பிரசவம் பார்த்து சேனை வைத்து பெயரும் சூட்டிய பாப்பம்மாளும் முடிவாக இங்கே வந்து படுத்துக் கொண்டாள்.  "பய நல்லா வருவான்.  கவர்மென்ட் வேலை பார்ப்பான்"
 
கண்பட்டு விட்டதோ என்று திருஷ்டி சுற்றிக் கன்னத்துப் பொட்டில் நெரித்துக் கொண்ட பாப்பம்மாளுக்கு முகத்தில் மண் போட்டவன் சாத்தையாதான்!

"மாயப் பிரபஞ்சத்தில்
ஆனந்தம் வேறில்லை!"

- கோயில் ரேடியோவில் பாடும் பழைய பாடல் இங்கே கேட்கிறது.

 
ணிவகுப்பு மாதிரி இருபது முப்பது கார்கள் வந்து நின்றன.  ஊரில் பெரிய கோடீஸ்வரர்.  பரம்பரைப் பெருமைகள், பட்டம் பதவி, தான தர்மங்கள், ஊரில் ஏக செல்வாக்கு.   ஒரு வேன் நிறைய மாலைகள் சிதைகள் தீ மூட்டியதும் இரங்கல் கூட்டம்.  பலரும் பேசினார்கள்.  அவர் இருந்தபோதும்...  இறந்த பிறகும் அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது!
 
கூட்டம் கலைந்ததும், ஒருவன் சைக்கிளின் பின்னால் ஓலைப்பாயில் சுற்றிக் கொண்டு வந்த ஆளை கீழே போட்டான்.  அனாதைப் பிணம்.  பிளாட்பாரத்தில் செத்துக் கிடந்தவனை பெரிய ஆஸ்பத்திரி பிரேதக் கிடங்கில் மூன்று நாட்கள் போட்டு வைத்திருந்து - யாரும் வராமல் போகவே 'தூக்கி விட்டு' விட்டார்கள்.
 
பிரேதங்களுக்கு மத்தியில் வாழும் சாத்தையாவிற்கே நாற்றம் பொறுக்கவில்லை.  இதையும் மீறி ஒரு எண்ணம் எட்டிப் பார்த்தது.  இவருக்கு என்ன வயதிருக்கும்?  அறுபதாகும்.  இத்தனை வருடங்கள் வாழ்ந்தவருக்கு ஒருவர் கூடவா சொந்தமில்லை?  எங்கே பிறந்து, எங்கே வாழ்ந்து, இங்கே முடிந்திருக்கிறார்?
 
எந்தச் சடங்குமில்லாமல் அவர் 'கதை' யை முடித்து விட்டான் சாத்தையா.  அடுத்து கையோடு இன்னொரு வேலை வந்து விட்டது.  நாலைந்து பேர் சூழ, பெற்றவன் மஞ்சள் துணியில் சுற்றி குழந்தையை தூக்கி வந்தான்.  ஆண்பிள்ளை.  மண் போடும்போது தகப்பன் முகத்தில் அறைந்து கொண்டு கதறினான்.  அருகிலிருந்த மரத்தில் தலையை மோதினான்.
 
பக்கத்திலிருந்தவன் அவனை இழுத்துப் பிடித்துக் கொண்டு, "பெரிய சம்பாத்தியக்கார மகன் போயிட்டான்னு, இப்படிக் கத்துறே?  என்னவோ பெத்து வளர்த்து இப்படிக் குடுக்கணும்னு ஒரு கடன்.  கடனைத் தீர்த்துட்டே!" என்று சமாதானம் சொன்னார்.
 
"அப்படீன்னா, பயனுள்ளவர்கள் போனால்தான் துக்கப்பட வேண்டுமா?  முடிவான பிரிவை எண்ணி அழுவதற்குக் கூட விலை இருக்கிறதா?  கை நிறைய கொண்டு வந்த பொருள் தொலைந்து போனதுபோல் பரிதவித்தான் பெற்றவன்.
 
பூமயிலு வந்து சாப்பிடக் கூப்பிட்டாள்.  மனைவி பின்னாலேயே போய், கைகால் அலம்பி விட்டு சாப்பிட உட்கார்ந்தவன், "சூடா பழையது இருக்காக்கும்" மனைவியிடம் சரசமாடினான் சாத்தையா.
 
"இல்லை, குளுந்த இட்லி இருக்கு!"
 
"நீ மட்டும் எப்பவும் சூடா இருக்கியே!"
 
மடியில் இழுத்துப் போட்டு மனைவியின் வாயில் இட்லியைத் திணித்தான்.  இந்நேரம் பதறியடித்துக் கொண்டு ஓடிவந்த மலையாண்டி "அண்ணே.,நம்ம சுந்தரத்தை தண்ணி லாரி அடிச்சிருச்சி..."
 
இருவரும் அவன் பின்னாலேயே ஓடினார்கள்.
 
இரும்புக்கு முன்னாலே இருதயம் உள்ள மனித உயிர் எம்மாத்திரம்?  எல்லாம் முடிந்து விட்டது.  சதைக் கூளத்தை வழித்து எடுத்தார்கள்.  சுந்தரம் பயலையும் அங்கேதான் கொண்டு வந்தார்கள்.  எல்லோரும் இங்கு வந்து கதறியழுவார்கள்.  ஆனால் இன்று  பூமியே இதயம் பிளந்து அழுதது.  அதற்கும் பூமயிலின் பிலாக்கணம் வேண்டியிருக்கிறது!

46 கருத்துகள்:

  1. மிகவும் அற்புதமான எழுத்துக்கள். சாத்தையா, பூமயிலு போன்ற எல்லோருடைய சேவையும் சமுதாயத்திற்குத் தேவையாகத்தான் உள்ளது.

    எழுத்தாளர் கர்ணன் அவர்களுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. எழுத்துக்கள் காட்சிகளைக் கண் முன்னே கொண்டு வந்து காட்டுகிறது நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  3. கர்ணன் அவர்களின் எளிய நடையும்
    இயல்பான கதை ஓட்டமும்
    இன்றைய கதாசிரியர்களுக்கு
    முன் மாதிரி.
    இல்லை.
    முதற்பாடம்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  4. என்ன அருமையான நடை! கர்ணன் கதைக் கொடையாளி! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  5. பிணங்களை எரித்து /புதைத்து வாழும் மனிதனின் இயல்பான எண்ண ஓட்டங்கள் தேர்ந்தநடையில்

    பதிலளிநீக்கு
  6. மனம் நிலைப் படுவதற்கு அடிக்கடி மயானத்தில் சென்று தவஸ் இருப்பது இளமைக் காலத்திலிருந்து இதுவரைத் தொடர்கிறது" என்கிறார்.//

    கர்ணன் அவர்கள் பார்த்த பிறப்பு, இறப்பு வைத்து கதை எழுதி விட்டார்.
    பூமயிலின் சந்தோஷம், அப்புறம் பூமயிலின் சோகம் இரண்டையும் படிக்கும் போது மணம் கனத்து போகிறது.

    பதிலளிநீக்கு
  7. "அதுதானே எங்க ஆசையும். பய ஒங்களப் போல நீண்ட ஆயுசாகவும் கைராசியாகவும் கலகலன்னும் இருப்பான்!"//

    ஆசை கைகூட வில்லையே!
    சுந்தரத்தின் பிறப்பில் ஆரம்பித்த கதை அவன் இறப்பில் முடிந்து விட்டதே! பூமயிலின் ஆசை கனவுகள் கலைந்து விட்டதே !

    பதிலளிநீக்கு
  8. முடிவு மனதை கலங்க வைத்து விட்டது எல்லோரும் ஒரு நாள் இங்கே....
    சௌராஷ்டிர சமூகத்தில் மட்டும் பெண்களும் வருகிறார்கள்.
    இந்த புதிய விடயம் அறிந்து கொண்டேன் நண்பரே நன்றி

    பதிலளிநீக்கு
  9. நல்ல கதை. அதற்கான அறிமுகம் அருமை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. எங்கள் வீட்டில் சமீபத்தில் நேர்ந்த இழப்பின் தாக்கமே இன்னும் என்னைவிட்டுப் போகவில்லை.
    மறுபடியும் அந்த நினைவுகளை இந்தக் கதை கொண்டுவந்துவிட்டது. நான் படித்திருக்கக் கூடாத கதை இது.

    பதிலளிநீக்கு
  11. யதார்த்தம் கசக்கிறது. ஆரம்பமும் முடிவும் சுந்தரம். சிவம் சத்தியம்.

    பதிலளிநீக்கு
  12. #எல்லா சமூகத்திலும் பெண்கள் சுடுகாட்டுக்கு வருவதில்லை. சௌராஷ்டிர சமூகத்தில் மட்டும் பெண்களும் வருகிறார்கள்.# இதை நேரில் நான் பார்த்து இருந்தும் ,மனதில் தைக்கவில்லை .ஆனால் ,திரு .கர்ணன் அவர்கள் கூரிய கண்ணில் இது கூட பட்டிருக்கிறது சாத்தையா உருவத்தில் அவர் வாழ்ந்து காட்டியிருக்கிறார் !

    பதிலளிநீக்கு
  13. அருமையான பதிவு
    தொடருங்கள்

    http://tebooks.friendhood.net/

    பதிலளிநீக்கு
  14. என்ன ஒரு எழுத்து நடை.பல வரிகள் இந்த உலக வாழ்க்கையின் உண்மையை எதிரொலிக்கின்றது!! முடிவு யூகிக்க முடிந்திருந்தாலும் கதை மனதைக் கட்டிப் போட்டு இறுதியில் வேதனைப்பட வைத்துவிட்டது. கதையைன் தலைப்பு அருமை! பல அர்த்தங்கள் பேசும் தலைப்பு.

    இது வரை அறிந்திராத புகழ்வாய்ந்த எழுத்தாளர் கர்ணன் அவர்களை இங்கு அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  15. கண் கலங்க வைத்த கதை! உண்மையில் கர்ணன் என்னும் எழுத்தாளர் இன்னமும் இருக்கிறார் என்பதே இப்போது தான் அறிவேன். மணிக்கொடி கால எழுத்தாளர்களில் ஒருவர் என்ற வரை தெரியும். அதிகம் படித்தது இல்லை.

    பதிலளிநீக்கு
  16. ஆனந்த விகடனில் தான் கர்ணன் அவர்களின் சிறுகதைகள் நிறைய வாசித்திருக்கிறேன். எந்தப் பத்திரிகையின் மதுரை சிறப்பிதழிலோ இவர் பற்றி புகைப்படம் போட்டு எழுதியிருந்தார்கள்.

    எழுத எழுத வரிகள் தாமே தம்மை சமைத்துக் கொள்ளும் போலிருக்கு. கட்டுப்படுத்த முடியாத அப்படி ஒரு சுழல் வேகம் எழுத்தில். எடிட்டிங் இல்லை என்பதினால் தான் யதார்த்ததின் வீச்சு தூக்கலாகத் தெரிகிறது. 'இந்த வார்த்தை வேண்டாம், அந்த வரி வேண்டாம், யார் என்ன நினைத்துக் கொள்வார்களோ' என்ற மீள் யோசிப்பில் நாம் கைவைத்தால் அங்கு முதல் பலியாவது யதார்த்தம் தான் என்பது கண்கூடு.

    இப்படித் தான் இவர் எழுதுவார் என்றில்லை. எப்படியும் எழுதப் பழக்கப்பட்டவர். சொல்லப்போனால் அவர் நினைத்து பேனா பிடித்ததெல்லாம் கதைகளாகியிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். அந்தளவுக்கு ரொம்பவும் இயல்பாக எழுத்து இவருக்கு கைவந்த கலையாகியிருக்கிறது.

    வாசித்து வரும் பொழுதே சில சினிமா தத்துவப்பாடல்கள் நினைவில் நீந்தின. 'தங்கப்பதுமை' பலருக்கு நினைவிருக்காது. 'ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே, அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே' பட்டுக் கோட்டையாரோ, அரு.ராமனாதனோ எழுதிய அருமையான பாடல் இடையிட்ட வசன காவியம் அதில் ஒன்று.

    பதிலளிநீக்கு
  17. "நந்தவனத்தில் ஒரு ஆண்டி” கதை நினைவுக்கு வந்தது. அதன் தாக்கமோ என்னவோ, கதை ஆரம்பித்த சில பத்திகளிலேயே, முடிவை ஊகிக்க முடிந்தாலும், அப்படி இருந்துவிடக்கூடாது என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ம்ம்.... அடுத்தவர்களுக்கு எளிதில் ஆறுதல் சொல்லிவிட முடியும். தனக்கென வரும்போதுதான்....

    பதிலளிநீக்கு
  18. நன்றி வை. கோபாலகிருஷ்ணன் ஸார்.

    பதிலளிநீக்கு
  19. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  20. நன்றி ஜி எம் பாலசுப்ரமணியம் ஸார்.

    பதிலளிநீக்கு
  21. நன்றி ஜி எம் பாலசுப்ரமணியம் ஸார்.

    பதிலளிநீக்கு
  22. நன்றி சகோதரி உமையாள் காயத்ரி.

    பதிலளிநீக்கு
  23. எனக்கும் அது புதிய தகவல்தான் நண்பர் கில்லர்ஜி. நன்றி.

    பதிலளிநீக்கு
  24. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

    பதிலளிநீக்கு
  25. நீங்கள் எழுதி இருப்பதைப் படிக்கக் கஷ்டமாக இருக்கிறது ரஞ்சனி நாராயணன் மேடம். நன்றி வருகைக்கு.

    பதிலளிநீக்கு
  26. நன்றி நண்பர் ஜீவலிங்கம் யார்ல்பாவாணன் காசிராஜலிங்கம்.

    பதிலளிநீக்கு
  27. நன்றி கீதா சாம்பசிவம் மேடம்.

    பதிலளிநீக்கு
  28. நன்றி ஜீவி ஸார். உங்கள் பின்னூட்டத்தைக் காணோமே இன்னும் என்று பார்த்தேன். அவர் படைப்புகளை நீங்கள் ஏற்கெனவே படித்திருக்கிறீர்கள் என்பது சந்தோஷம் தருகிறது.

    பதிலளிநீக்கு
  29. நன்றி ஹுசைனம்மா... நீண்ட நாட்களுக்குப் பின் 'எங்கள்' பக்கம் வருகை. மகிழ்ச்சியும், நன்றியும்.

    பதிலளிநீக்கு
  30. ஸ்ரீராம் சார், ரீடரில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கேன். பின்னூட்டம்தான் அப்பப்ப மட்டும்!! :-)

    பதிலளிநீக்கு
  31. அப்படியா? நன்றி ஹுசைனம்மா... ஆனாலும் நீங்கள் படித்திருக்கிறீர்கள் என்று தெரியவாவது ஒரு பின்னூட்டம் இட்டால் ஒரு சந்தோஷம்தான்! அவ்வப்போது பின்னூட்டம் இடுங்கள்.. இன்ஷா அல்லாஹ்.

    பதிலளிநீக்கு
  32. எழுத்தாளர் கர்ணன் அவர்களைப்பற்றி சிலமாதங்கள் முன்பு ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் தளங்களில் வாசித்திருந்தேன். மணிக்கொடி எழுத்தாளர் என்கிறார்களே, கிடைத்தால் அவர் கதையைப்படிக்கவேண்டும் என நினைத்திருந்தேன். இன்று உங்கள் தளத்தில் நேர்ந்தது அந்த வாய்ப்பு. கீழ்மட்ட மனிதனின் சோக வாழ்க்கையை சரளமான எழுத்தாக்கி இருக்கிறார் கர்ணன். வாழ்த்துக்கள். `எங்கள் ப்ளாக்`குக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  33. கதை பதிவிட்ட அன்றே படித்து விட்டேன் .மனதுதான் பாரம்மகிடுச்சி :(

    எல்லாரும் இறுதியில் ஒரே இடத்தில்தானே :( கடைநிலை மனிதர்களின் வாழ்வை மன உணர்வுகளை அருமையாக சித்தரித்துள்ளார் கதாசிரியர்

    பதிலளிநீக்கு
  34. எழுத்தாளர் கர்ணன் பற்றி அண்மையில் தான் கேள்விப்பட்டிருந்தேன். அவர் கதைகளில் ஒன்றை வாசிக்கக் கொடுத்தமைக்கு நன்றி. இயல்பான நடையில் மனதைக் கனக்க வைக்கும் கதை!

    பதிலளிநீக்கு
  35. கதையின் போக்கில் முடிவு இப்படித்தான் வருமோ... என்று நினைத்துப் படித்து வேதனையைச் சுமந்தபோது எழுத்து நடையில் கண் முன் காட்டும் காட்சிப்படுத்துதலில் லயித்துப் போனேன்....
    மிகச் சிறப்பான எழுத்து... ஐயாவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!