புதன், 25 மே, 2016

தியேட்டர் நினைவுகள் 1 -



          எனது தியேட்டர் நினைவுகள் தஞ்சாவூர் ராஜேந்திரா டூரிங் டாக்கீஸ் நினைவுகளுடன் தொடங்குகிறது!  இது மாதிரித் திரையரங்குகளில் படம் பார்த்தவர்கள் அந்த இனிய நினைவுகளை மறக்க மாட்டார்கள்.  அது ஒரு தனி அனுபவம்தான்.

          இன்றைய சத்யம், தேவி, ஐநாக்ஸ், மாயாஜால் தியேட்டர்கள் தராத ஒரு சந்தோஷம் அங்கு கிடைத்தது என்பது அதை அனுபவித்தவர்களுக்குத் தெரியும்.  காலை, மதிய நேரக் காட்சிகள் பார்க்க முடியாது.  இருட்டியபிறகுதான் படம் போட / பார்க்க முடியும்.  ஒரு கூரைக் கொட்டகை.  பக்கங்கள் தாழ்வாக அமைக்கப் பட்டிருக்கும்.  பெரும்பாலும் தரை டிக்கெட்தான்.  கொஞ்சமாக பெஞ்ச் டிக்கெட், ஒரு வரிசை (மூட்டைப் பூச்சிகளுடன்) நாற்காலி டிக்கெட்!


          எங்கள் அந்தத் தியேட்டரைப் பொருத்தவரை 'முருகா என்றழைக்கவா... முத்துக்குமரா என்றழைக்கவா..' என்ற பாடல் ஒலிபரப்பாகத் தொடங்கி விட்டால் டிக்கெட் தரத் தொடங்கி விட்டார்கள் என்று அர்த்தம்.  அதுவரை வேறு பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் - ஸ்பீக்கரில் அலறிக் கொண்டிருக்கும்.


          இதைச் சொல்லும்போது சம்பந்தமில்லாமல் இன்னொரு விஷயம் நினைவுக்கு வருகிறது.  மதுரையிலிருந்து சென்னை வரும் மதுரை ராதா, யோகலக்ஷ்மி போன்ற ஆம்னி பஸ்களில் கிளம்பியவுடன் சினிமாப் பாடல்கள் போடத் தொடங்கி, படம் போட்டு முடித்து இருட்டாக்கி தூங்க வைத்த பிறகு, காலை விடிந்ததும் ஊர் நெருங்குகையில் ஸ்பீக்கர்கள் மறுபடி உயிர் பெரும்.  சூலமங்கலம் சகோதரிகள், டி எம் எஸ், சீர்காழி பக்திப் பாடல்கள் ஒலிபரப்பாகத் தொடங்கும்.  இதை ஒரு வழக்கமாக அவர்கள் வைத்துக் கொள்வதை நினைவுக்கு வந்ததால் சொன்னேன்.  அவ்வளவுதான்.  ஆனால் சினிமா பார்த்த இடங்களின் லிஸ்ட்டில்  பஸ்ஸை சேர்க்கக் கூடாது.  கொடுமை அது!


          வீட்டிலிருந்து கிளம்புமுன்னரே இந்தப் பாடல் காதில் ஒலித்து விட்டால் பரபரப்பாகி விடும்.  நாம் போகுமுன் டிக்கெட் காலியாகி விடக் கூடாதே என்று அல்ல...  அப்படி எல்லாம் காலியாகி விடாது!  முன்னாலேயே டிக்கெட் வாங்கி உள்ளே சென்றால்தான் வாகான இடத்தில் இடம் பிடித்து, மணலைக் குமித்து சௌகர்யம் செய்து கொண்டு படம் பார்க்கத் தயாராகலாம்!


          அப்படி அங்கு பார்த்தவை  சபதம், மாட்டுக்கார வேலன், இருதுருவம், ரங்கராட்டினம், முரடன் முத்து, தேவதாஸ், மூன்று தெய்வங்கள் போன்ற படங்கள்.  அதில் மாட்டுக்கார வேலன் படத்துக்கு அப்பாவிடம் காசு வாங்குவதற்குள் தாவு தீர்ந்து விட்டது.  வீட்டுக்கு விருந்தினர்கள் வந்திருக்க, நான் படம் பார்க்கக் காசு கேட்டு அனத்திக் கொண்டிருக்க, நான் 'மாட்டுக்கார வேலன்.... மாட்டுக்கார வேலன்..' என்று அனத்த அனத்த வந்திருந்த உறவினர் ஒருவர் கூடக்கூட 'ஆட்டுக்கார சுப்பன்... ஆட்டுக்கார சுப்பன்..' என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தார்.  அப்புறம் அவரே...  "அட பாலு..  இவன் நம்மைப் பேசவே விட மாட்டான்.  காசைக் கொடுத்தனுப்பு.. இரு நானே கொடுக்கிறேன்" என்று கூறி காசு எடுத்துத் தந்தார்.  அப்போது, அந்தத் தியேட்டரில் டிக்கெட்  என்ன பத்துப் பைசா இருந்திருக்குமா...  நினைவில்லை!



          இரண்டாவது ரிலீஸ், மூன்றாவது ரிலீஸ் படங்கள்தான் இங்கு டூரிங் தியேட்டரில் வெளியாகும்.  மற்றபடி மற்ற படங்கள் நல்ல தியேட்டரில் வெளியாகும்.


         எந்தப் படத்தையும் ரிலீஸாகும் அன்று முதல் நாள் பார்க்கும் ஆசை எல்லாம் இருந்ததில்லை.  படம் நன்றாய் இருந்தால் அப்புறம் ஒருநாள் சென்று பார்ப்போம்.  அவ்வளவுதான்.  அப்படி ரிலீஸான அன்றே பார்த்த ஒரு படமும் இருந்தது.  அது தஞ்சாவூர் அருள் தியேட்டரில் பார்த்த அண்ணன் ஒரு கோவில் திரைப்படம்.  அக்காவும், மாமாவும் கிராமத்திலிருந்து வந்து, எனக்கும் சேர்த்து ரிசர்வ் செய்து 
அழைத்துச் சென்றதால் பார்த்த படம்.

          இப்பொது இந்தப் பழக்கம் இருக்கிறதா, இல்லையா தெரியவில்லை...  படத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்து பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடக்கும்போது இருக்கும் கடைகளில் சரியாக நாம் பார்த்தத் திரைப்படத்தின் பாடல்களை ஒலிக்க விடுவார்கள்.  அப்படி நினைவு இருக்கும் படங்கள் வசந்தமாளிகை, மன்னவன் வந்தானடி, போன்றவை.  ஐந்து சிவாஜி படங்கள் பார்த்தால் ஒரு எம் ஜி ஆர் படம் பார்ப்போம்! உடனே சினிமா பார்ப்பதுதான் முழு நேர் வேலை என்று நினைக்க வேண்டாம்.  அப்போது படங்கள் வெளியிடும் நாட்களுக்கிடையே போதிய இடைவெளி இருக்கும்!  


          என் அப்பாவின் அம்மாவுக்கு திரைப்படங்கள் பார்க்கப் பிடிக்கும்.  கிராமத்திலிருந்து வருபவர் சில படங்களை வரிசை வைத்துப்பார்த்து விடுவார்.  அதற்குத் துணையாக என்னை அழைத்துப் போவார்.  அதனால்தான் இப்படிப் படங்கள் பார்க்க முடிந்தது. இந்த வரிசையில் விஷ்ணுவர்த்தன் நடித்த டப்பிங் படம் ஒன்று 'காட்டுக்கு ஒரு தோட்டக்காரன்' என்று பெயர் - அதையும் பார்த்திருக்கிறேன்.  "புலி., சிங்கம், யானையெல்லாம் காட்டறானாண்டா..  நல்லா இருக்கும் வாடா" என்று பாட்டி அன்புடன் அழைத்துச் சென்றாள்.  பாட்டியுடன் போனால் இன்னொரு சௌகர்யம்.  ரிக்ஷாவில் சென்று வரலாம்.  இடைவேளையில் தின்பண்டங்கள் கிடைக்கும்!

         


49 கருத்துகள்:

  1. தஞ்சாவூரில் ராஜேந்திரா என்ற டூரிங் டாக்கீஸ் இருந்ததைப் பற்றி தங்கள் பதிவு மூலமாக அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  2. டிக்கெட் எங்க பத்து பைசாவுக்குக் கிடைக்கும் ஸ்ரீராம். நான் பார்க்கும்போதே 1960ஸ்.
    பென்ச் 4 அணா ஆச்சே. அதுவும் ஆடிக் கொண்டே இருக்கும்.
    நல்ல நினைவுகள். மணல் இருக்கும் தியேட்டர்கள் போனதில்லை. இன்னும்
    சந்தோஷமாக இருந்திருக்கும்.
    வருடத்துக்கு மூன்று படங்கள் பார்த்தால் அதிசயம்.
    சென்னை வந்தால் பாவமன்னிப்பு ஆரம்பித்து ப வரிசை படங்கள்,
    இருவர் உள்ளம்,கிளீயோபாட்ரா, லாரன்ஸ் ஆஃப் அரேபியா,சங்கம் என்று பலவித
    படங்கள் பார்க்கக் கிடைக்கும். மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நண்பரே நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
    நிஜமாக நான் ஆப்பரேஷன் தியேட்டருக்கு
    பலமுறை சென்றுள்ளேன்...
    சினிமா தியேட்டருக்குள் நான் சென்றதேயில்லை...

    பதிலளிநீக்கு
  4. மூத்திர நாற்றத்தை மறந்து விட்டீர்களே :)

    பதிலளிநீக்கு
  5. என்ன சுகமான வாழ்க்கை அது? எங்களுக்கு பென்ச் டிகெட்டில் படம் பார்க்க ஒரு ரூபாய் தருவார்கள் . அந்த பணத்தில். தரை டிகெட்டில் (35 பைசா) ஒன்றும், வீட்டிற்கு தெரியாமல் வேறு இரண்டுமாக படங்கள் பார்த்து விடுவோம். கடைக்குப் போகும் போது கமிஷன் அடித்த சில்லறை கூட உபயோகத்திற்கு வரும்.

    கிராமத்திற்குச் போகும் போது டிக்கெட் இன்னமும் சல்லீசு. படாவதிப் படங்களைக் கூட விட்டதில்லை.
    கலையார்வம்னா சும்மாவா?!

    பதிலளிநீக்கு
  6. டூரிங் கொட்டாயிலே படம் பார்த்தது எல்லாம் கல்யாணம் ஆகி வந்தப்புறமாத் தான். அம்பத்தூரிலே நாங்க குடியிருந்த வீட்டுக்கு எதிர்ப்புறமாக இருந்த மைதானத்தில் ஒரு டூரிங் தியேட்டர் இருந்தது. அதைப் பார்த்து அப்போ ஆச்சரியமா இருக்கும். ஏனெனில் என் அப்பாவோட கிராமம் ஆன மேல்மங்கலத்திலும் சரி, எங்க சித்தி இருந்த சின்னமனூரிலும் சரி நல்ல அழகான தியேட்டர்கள் இருந்தன. மேல்மங்கலம் தியேட்டரில் கே.பாலச்சந்தரின் "நாணல்" படமும், சின்னமனூர் தியேட்டரில் பல, பல, பபப்பபல ஜிவாஜி படங்களும் பார்த்திருக்கேன். அதில் நல்ல நினைவு இருக்கும்படிம் நெஞ்சிருக்கும் வரை படம்! சிவந்த மண் கூட அங்கே தான் பார்த்தேனோ? :) நினைவில் இல்லை!

    பதிலளிநீக்கு
  7. டிக்கெட் விலை எல்லாம் நினைவில் இல்லை. அநேகமாய்த் தரை டிக்கெட் ஒரு ரூபாய் இருக்குமோ என்னமோ! நாங்க அந்தச் சேர் டிக்கெட்டுக்குத் தான் போவோம். இரவுக் காட்சி. மாலைக்காட்சி ஆறரை மணிக்குத் தொடங்கி எட்டரைக்கெல்லாம் முடிஞ்சுடும். அந்தக் காட்சியில் பல காட்சிகளை "வெட்டி விட்டு"க் காட்டறதாச் சொல்வாங்க. ஆனால் எங்களால் மாலைக்காட்சிக்கெல்லாம் போக முடியாது. ஆகவே வீட்டு வேலைகளை எல்லாம் முடிச்சுட்டு மெதுவா இரவுக் காட்சிக்குப் போவோம். இரவுக் காட்சிக்கு ஒரு படம் போனஸ்! அது அநேகமா ஹிந்தியா இருக்கும். பல சமயங்கள் இரு படங்களையும் பார்த்துட்டு மறு நாள் ஆஃபீஸுக்குப் போகறச்சே கண்கள் சிவந்து எரிச்சலோடு போக வேண்டி இருக்கும். சில சமயங்களில் ஒரு படத்தோடு திரும்பிடுவோம். அப்போத் தான் ஒரே ஒரு தியேட்டர் அம்பத்தூரில் வந்திருந்தது. நாங்க தியேட்டரில் சினிமாப் பார்க்க அயனாவரம் சயானி தியேட்டருக்குப் போவோம். ஆங்கிலப் படங்கள் எல்லாம் எப்போவோ தான். அதுக்கு தேவி தியேட்டர் போவோம். அல்லது அப்போ இருந்த சஃபையர் தியேட்டருக்குப் போவோம். அதெல்லாம் ஞாயிற்றுக் கிழமைகளில் தான். ரொம்ப ரொம்ப அபூர்வமாகப் போவோம்.மெக்கெனாஸ் கோல்ட், ஹட்டாரி எல்லாம் அப்படிப் பார்த்த படங்கள் தான்.

    பதிலளிநீக்கு
  8. இந்தியாவில் ஐநாக்ஸோ, ஐமாக்ஸோ பார்த்ததில்லை. யு.எஸ்ஸில் போயிருக்கோம்.

    பதிலளிநீக்கு
  9. //அதில் நல்ல நினைவு இருக்கும்படிம் //

    "அதில் நல்ல நினைவு இருக்கும்படிப் பார்த்த படம்" என்று படிக்கவும். எப்படியோ டெலீட் ஆகி இருக்கு! :(

    பதிலளிநீக்கு
  10. பெரும்பாலான டூரிங்க் டாக்கீசுகளில், "வினாயகனே வெல் வினையை வேரறுக்க வல்லான்" என்ற பாடலுடந்தான் துவங்கிப் பார்த்திருக்கிறேன். இதை எழுதிய நீங்கள், முறுக்கு, கடலை, சோடா (கலர்) விற்பனையைப் பற்றி எழுத மறந்துவிட்டீர்களே.... நான் 7-8 வயதில் பரமக்குடி ரவி தியேட்டரில், ராஜ ராஜ சோழன் பார்த்தது நினைவுக்கு வருகிறது. மேற்கூரையில் போட்டிருக்கும் பெரிய விளக்கைப் பார்த்து, அங்கேயிருந்துதான் எல்லோரும் வந்து திரையில் நடிக்கிறார்கள் என்று எண்ணியிருக்கிறேன். (1971-72). மணல் குவிப்பது மறைந்து, காங்க்ரீட்டில், பெஞ்ச் போட ஆரம்பித்தார்கள் பிற்காலத்தில் (மற்ற தியேட்டர்களில்). அதில் நினைவுக்கு வருவது பாளையங்கோட்டை அசோக் தியேட்டர். (கீதா மேடம் சொன்னதுபோல் போனஸ் படம்லாம் போட்ட நினைவு இல்லை). இப்போ பெரிய தியேட்டர்களில் பார்த்தாலும், அப்போது பார்த்த experience and excitement கிடைப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  11. நான் சினிமா பார்த்த அனுபவங்களை அரக்கோணம் நாட்கள் என்னும்பதிவில் பகிர்ந்திருக்கிறேன் ஒரு அனுபவம் இங்கே அரக்கோணத்தில் டெண்ட் கொட்டாய் எங்கள் வீட்டருகில் 1946-47 என்று நினைக்கிறேன் ஸ்ரீவள்ளி படம் என்றும் நினைவு என் தம்பி டெண்ட் கொட்டாய்க் காவல்காரர்களுக்கு டிமிக்கி கொடுத்ட்கு உள்ளே போனது தெரியாமல் நாங்கள் தேட என் சின்ன அண்ணா தன் ஷர்ட்டைப் பணையம் வைத்து உள்ளேபோய் என் தம்பியை அழைத்து வ்வந்தது நினைவில் பசுமையாய் வல்லி சிம்ஹன் 1960-ல் எல்லாம் ரூபாய் அணா புழக்கத்தை விட்டு மூன்று வருடங்களுக்கும் மேல் ஆகியிருக்கும்

    பதிலளிநீக்கு
  12. 1964-ல் என் மனைவியுடன் முதலில் பார்த்தபடம் படகோட்டி. என் தம்பியும் அட்டையாய்க் கூட வந்திருந்தான்.....!

    பதிலளிநீக்கு
  13. தியேட்டரில் என்ன டி.வி.யில் படம் பார்த்தே பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

    சினிமா தியேட்டர் நினைவு என்றால் மதுரை தங்கம் தியேட்டர் புத்தம் புதுசாக கட்டி முடிக்கப் பட்டு அதன் முதல் நாள் முதல் காட்சியில் 'பராசக்தி' படம் பார்த்ததும் கலைஞரின் வசனங்களும் நினைவை விட்டு அழியவே அழியாது.

    பதிலளிநீக்கு
  14. தங்களது பதிவு அருமையான பழைய நினைவுகளை மீட்டி விட்டது நண்பரே மணல் குவித்து உட்கார்ந்து படம் பார்த்த அனுபவம் எனக்கும் உண்டு இதில் நமக்கு முன்னே மணல் மேட்டில் அமர்ந்திருப்பவன் உயரமாக இருந்து படம் மறைத்தால் நைசாக அவனது பின்புறமாக கால் விரல்களால் மணலை சுரண்டி அவனை கீழே இறக்குவது பிறகு அவனுடன் சண்டை போடுவது போன்ற நினைவுகளும் வந்தது.

    கூடவே டூரிங் டாக்கீஸின் முத்திரை பதித்த சிசர்ஸ் சிகரெட் அட்டையில் டிக்கெட் கொடுத்து அதை மறுபுறம் வாங்கி மீண்டும் கௌண்டரில் ரவுண்டில் விடுவதும் ஞாபகம் வந்தது.

    பாம்பன் ஆயிஷா டூரிங் டாக்கீஸில் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம் என்ற கடைசி ரெக்கார்டு போட்டால் படம் போடப் போகின்றார்கள் என்று திடுத்திடுவென ஓடும் நினைவுகளும் ஞாபகம் வந்தது.

    தங்கச்சிமடம் புனிததெரசா டூரிங் டாக்கீஸில் படம் பார்த்த ஞாபகம் வந்தது.

    இராமேஸ்வரம் ராமநாதசுவாமி தியேட்டரில் படம் பார்த்த ஞாபகம் வந்தது.

    ஏர்வாடி டூரிங் டாக்கீஸில் கந்தர் அலங்காரம் படம் பார்த்த ஞாபகம் வந்தது.

    சிக்கல் செந்தில் முருகன் டூரிங் டாக்கீஸில் சம்பூர்ண ராமாயணம் டிக்கெட் கிடைக்காமல் நானும், நண்பனும் முரட்டு கல்லைத்தூக்கி கீற்றில் கட்டி வைத்த காம்பவுண்ட் சுவற்றில் போட்டு சரித்து விட்டு உள்ளே ஓட, எங்களோடு பின்னால் 50 நபர்கள் ஓடி வந்து கூட்டத்தில் கலந்து கொண்டு மணல் மேட்டில் புகுந்ததும் நினைவில் வந்தது.

    கீழக்கரை அஸ்கர் திரையரங்கில் ஆயிரம் ஜென்மங்கள் படம் பார்த்தபோது திரையில் பேயைக்கண்டு ஒரு கண்ணை மூடிக்கொண்டு படம் பார்த்த நினைவுகளும் ஞாபகம் வந்தது.

    இராமநாதபுரம் சண்முகாவில் அப்பா நல்லதொரு குடும்பம் சினிமாவுக்கு அழைத்துப் போனதும் ஞாபகம் வந்தது.

    தேவகோட்டை லட்சுமி தியேட்டரில் விபரமறிந்து 35 பைசா டிக்கெட் எடுத்ததாக நினைவும் வந்தது.

    தீ படம் பார்த்த பிறகு, அடுத்த சில மாதங்களில் நெருப்பு படம் பார்க்க காசு கேட்டேன் இரண்டும் ஒன்றுதான் என்று அப்பா தராததும் ஞாபகம் வந்தது.

    அண்ணன் ஒரு கோயில், இரு துருவங்கள், இதயக்கனி, படங்களும் ஞாபகம் வந்தது.

    பழைய நினைவுகளுடன் கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  15. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

    பதிலளிநீக்கு
  16. ஆமாம் வல்லிம்மா... டிக்கெட் விலை 35 பைசா என்று நினைவு. மணலைக் குமித்து சாய்ந்து படம் பார்க்கும் அனுபவம் அந்தச் சின்ன வயதுக்கு ஜாலியான நினைவுகள்!

    பதிலளிநீக்கு
  17. நன்றி அஜய். அதென்ன நீங்கள் சினிமாவே பாத்ததில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சினிமா பார்த்து இருக்கிறேன்....
      ஆனால் தியேட்டருக்கு சென்று பார்த்ததில்லை...

      நீக்கு
  18. நன்றி பகவான்ஜி. நீங்கள் ஒரு ஜாய் கில்லர்!

    பதிலளிநீக்கு
  19. நன்றி மோகன் ஜி!



    //"கலையார்வம்னா சும்மாவா?//



    ஹா... ஹா... ஹா... அதுதானே!

    கமிஷன் அடிக்கும் வைபவம் பற்றி தனிப்பதிவு ஒன்று எழுத வேண்டும்!

    பதிலளிநீக்கு
  20. நன்றி கீதா மேடம்.. பின்னூட்டத் தாக்குதல். நாணல் நல்லதொரு படம்.



    தொடர்ந்து இரண்டு படங்களா...! அது வைகுண்ட ஏகாதசிக்கும் சிவராத்திரிக்கும்தான் அப்படிப் போட்டுப் பார்த்திருக்கிறேன். பார்த்திருக்கிறேன் என்றால், தியேட்டர் சென்று அல்ல! போஸ்டர்!!

    பதிலளிநீக்கு
  21. நன்றி நண்பர் நெல்லைத்தமிழன். நீங்கள் சொல்லியிருப்பது போல திரையில் வரும் உருவங்கள் பற்றி நானும் யோசித்திருக்கிறேன். "ஜோடா...கலரு..." பற்றிச் சொல்லவும் வேண்டுமோ! அது தனிக்கதைதான்! நம் சீட்டுக்கருகிலேயே நின்று கலர் பாட்டிலை "புஸ்" என்று திறந்து கொடுப்பார்கள்!

    பதிலளிநீக்கு
  22. நன்றி ஜி எம் பி ஸார்.. உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  23. நன்றி ஜீவி ஸார். தங்கம் தியேட்டர் கட்டிய புதிதில் அங்கு படம் பார்த்தீர்களா! அட! டூரிங் டாக்கீஸ் பற்றி எழுதும்போது ஆசியாவின் மாபெரும் தங்கம் தியேட்டரில் படம் பார்த்த அனுபவம் பற்றி நீங்கள் சொல்லி இருப்பது சிறப்பு!

    பதிலளிநீக்கு
  24. வாங்க கில்லர்ஜி... உங்கள் நினைவுகள் பொங்கி வழியக் காரணமாகி விட்டேன்! இதுதான் நீங்கள் இரண்டாவதாக இட்டிருக்கும் பெரிய பின்னூட்டம் என்று நினைக்கிறேன்! நன்றி ஜி.

    பதிலளிநீக்கு
  25. நன்றி நண்பர் வலிப்போக்கன்.

    பதிலளிநீக்கு
  26. அனைவருக்குமான ஒரு அறிவிப்பு! தலைப்பில் 1 என்று எண்ணைப் பார்த்திருப்பீர்கள். ஆம்.. இது தொடரும்!

    பதிலளிநீக்கு
  27. அட! தேனீயில் டூரிங்க் டாக்கீசில் படம் பார்த்ததை இன்றும் மறக்கவுக்ம் முடியாது பதிவொன்றில் சிறிதளவே குறிப்பிட்டுள்ளேன். இதைப் பார்த்ததும் நானும் எழுதலாமே என்று தோன்றுகின்றது. எழுதுகின்றேன், பாலக்காடு வந்ததும். ப்ழைய நினைவுகலை மீட்டெடுத்த பதிவு அருமை..

    கீதா: வள்ளியூரில் இருந்த போது தரை டிக்கெட், மணல் பரப்பு என்று சினிமா பார்த்தது உண்டு. நான் ஆணையிட்டால் என்று பாட்டு போட்டுவிட்டால் டிக்கெட் ஆரம்பம் என்று தெரிந்து விடும். வீட்டின் பின்புறமே தியேட்டர். அதையும் விட நாகர்கோவில் வந்ததும் ஊரில் கோயில் திருவிழாவின் போது இரவு 11 மணியளவிலோ இல்லை அதற்கும் மேலோ, திறந்த வெளியில் படம் போடுவார்கள் அதை எங்கள் ஊரே குவிந்து மணலில் உட்கார்ந்து, வாலிபப் பையன்கள் எல்லோரும் குளத்தின் மதில்களில் உட்கார்ந்து சீட்டி ஒலி எழுப்ப, நாங்கள் கீச்சுக் கீச்சுத் தாம்பாளம் விளையாடிக் கொண்டே படம் பார்க்க அந்தப் படம் பார்க்க முதல் நாளிலிருந்தே எங்கள் எல்லோருக்கும் தலைவியான இந்திராகாந்திப் பாட்டியை மசிய வைக்க நாங்கள் எடுக்கும் அஸ்திரங்கள், எங்கள் 9 கசின்களுக்குள் வார்த்தைப் பரிமாறல்கள், யார் பெர்மிஷன் வாங்குவது என்று நிறைய லஞ்சங்கள் என்று அந்த நாட்கள் அழகோ அழகு தனிதான்...இன்றும் நாங்கள் பேசி ரசிப்பதுண்டு. பெரிய கூட்டுக் குடும்பம் அந்த வாழ்க்கையே அலாதிதான்...இன்று அர்த்தமற்ற, இண்டிபெண்டென்ட்சி என்ற பொருளில் தீவுகளாகிப் போன குடும்பங்கள்...எல்லாமே நினைவுக்கு வருகின்றது ஸ்ரீராம். நல்லதொரு பதிவு...இதைப் பார்த்ததும் நானும் ஒரு பதிவு எழுதிடலாமோ என்று தோன்றுகின்றது...

    பதிலளிநீக்கு
  28. இந்த அனுபவம் கிடைக்லையே,,, ஆனால் கேள்விப்பட்டுள்ளேன். அருமை அருமை,, நீங்கள் படம் பார்த்த தஞ்சை அருள் தியேட்டர் இப்போ இல்லை,,, மூடிவிட்டார்கள்,,,

    பதிலளிநீக்கு
  29. எனக்கு ஜி.எம்.பி ஐயா எழுதியிருப்பதைப் பார்த்துச் சிரிப்பு வந்தது. சிலவற்றை, பலப் பல வருடங்களானாலும் மறக்க இயலாது.

    பதிலளிநீக்கு
  30. பழனியப்பா டூரிங் டாக்கிஸில் மோட்டார் சுந்தரம் பிள்ளை பார்த்த நினைவு இருக்கிறது.அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
  31. அட... நான் படம் பார்க்கும் வயதில் இது போன்ற டூரிங் டாக்கீஸ் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன. ஆனால் அவற்றில் எனக்கு படம் பார்க்கும் வாய்ப்பு இருந்ததில்லை.

    1996-1999 வரை பள்ளியில் படிக்கும்போதே சினிமா தியேட்டரில் பகுதி நேரமாக பணியாற்றியதால் டிக்கட் கொடுப்பது, கிழிப்பது, சைக்கிள் ஸ்டாண்டை கவனித்துக்கொள்வது, ஐஸ்கிரீம், பாப்கார்ன் விற்பது (பெண்கள் பகுதியில் விற்க செல்வதற்கு அதிக ஆர்வம் இருக்கும்) என்று பார்க்காத வேலை இல்லை.

    இப்போது Qube, UFO, PCX என்று Digital Projection வந்த பிறகு தியேட்டர் உரிமையாளரோ அல்லது அவரது 5 வயது மகன் மகளோ கூட படம் திரையிட்டுவிட முடியும்.

    ஆனால் நான் என்னுடைய 15 வயதில் தியேட்டர் பிலிம் புரொஜக்டரில் படம் திரையிட்டது மறக்கமுடியாத அனுபவம். வெள்ளை ஸ்கிரீனுக்கு முன்னால் தொங்கிக்கொண்டிருக்கும் வெல்வெட் ஸ்கிரீனை தனி மியூசிக்குடன் மேலேற்றும்போது படம் பார்க்க வந்தவர்கள் விசில் அடிப்பதை பார்ப்பது தனி சந்தோஷம். விளம்பர ரீல், நியூஸ் ரீல் எல்லாம் முடிந்ததும் அடுத்த புரொஜக்டரை பட் என்று ஆன் செய்யும்போது சினிமாஸ்கோப்பில் படத்தின் சென்சார் சர்ட்டிபிகேட் விரியும்போது அதுவரை ஏதாவது பேசிக்கொண்டிருந்த பார்வையாளர்கள் கூட சைலண்ட் ஆகி விடுவார்கள். சைடு ஸ்பீக்கர் ஆம்ப்ளிபயரை ஆனில் வைத்து டைட்டில் போடும்போது, சூப்பர் ஹிட்டான பாடல், கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி ஆகிய சமயத்தில் முதல் ஷோவின் போதே எக்ஸ்ட்ரா சவுண்ட் மூலம் ஆடியன்சின் காதுகளை கிழிப்பதுதான் அப்போது சாதாரண திரையரங்குகளின் DTS, Dolpy சவுண்ட் எல்லாம். ஆக ஆப்ரேட்டரின் மன நிலையை பொறுத்துதான் படம் ரசிகர்களின் பார்வைக்கு பரிமாறப்படும்.

    அதற்காக எல்லா படங்களிலும் சவுண்ட் பாக்சை அலற விடும் தியேட்டர்களும் உண்டு. ஆனால் நான் அவ்வாறு செய்ய மாட்டேன். உதாரணத்திற்கு பொற்காலம் என்ற முரளி, மீனா, வடிவேல் நடித்த படத்தின் போது கருவேலங்காட்டுக்குள்ள என்ற பாடலின் போது இரண்டு ஷாட்டுக்களில் குருவி கத்தும் சத்தம் கேட்கும், ஒரு முறை கருவேல மரம் சாயும் இரைச்சல் கேட்கும். படம் ஓடிய 2 மணி நேரம் 50 நிமிடங்களில் இந்த மூன்று இடங்கள் தவிர மற்ற நேரங்களில் சைடு ஸ்பீக்கர்களை நான் வைத்ததே இல்லை.

    அதே நேரம் Evil Dead, Police Story, The Rock, Broken Arrow, Independence Day உள்ளிட்ட பல ஆங்கில திரைப்படங்களையும் திரையிட்டிருக்கிறேன். அவற்றில் முக்கியமான சவுண்ட் எபெக்ட் கொடுக்கும் வேலைகளையும் ஆப்ரேட்டர் என்ற முறையில் செய்து ஆடியன்சை நடுங்க வைத்திருக்கிறேன்.

    இப்போது ஆப்ரேட்டர்களின் கிரியேட்டிவிட்டியும் Digital projection, sound உள்ளிட்ட காரணங்களால் காணாமல் போயிருக்கும். அவ்வளவு ஏன் ஆப்ரேட்டர்களே நிறைய பேர் இருக்க வாய்ப்பு இல்லை.

    எவ்வளவு பிரமாதமாக சமைத்தாலும் பரிமாறுவதில் சொதப்பினால் மொத்த விருந்தும் கோவிந்தாதான். அதே போல் படம் சூப்பராக இருந்து சுமாரான தியேட்டராக இருந்தாலும் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்ரேட்டர்களின் கைவண்ணத்தால் மக்களை படங்கள் மகிழ்விக்க தவறியதில்லை. அப்போது வேறு வழியும் இல்லை. ஆனால் இப்போது Digital, DVD, Home theatre ஆகியவை விருந்தில் பஃபே சிஸ்டம் போல் வந்து விட்டன. படமும் மக்களை அவ்வளவாக மகிழ்விப்பதில்லை. படம் பார்க்கும் சூழ் நிலை, டிக்கட் விலை, பார்க்கிங் கட்டணம், படம் பார்க்க வரும் இளைய சமுதாயத்தின் அநாகரிகமான ஆகியவை தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவத்தை ஒரு இயந்திரத்தனமாக மாற்றியிருப்பதை மறுக்க முடியாது.

    நான் பள்ளியில் படித்த காலத்தில் தியேட்டர் பணியாற்றியதால் தட்டுத்தடுமாறி பிரைவேட்டாக +2, அரசுக்கல்லூரியில் டிகிரி, இப்போது சொந்தமாக கணிணியில் டைப்பிங் தொழில் என்று எதிர் நீச்சல் அடித்துக்கொண்டிருக்கிறேன். ஆப்ரேட்டர் வேலையை நம்பி குடும்பம் நடத்தி வந்தவர்கள் இந்த கால மாற்றங்களால் என்னென்ன தொழிலில் எப்படி கரை சேர்ந்தார்களோ?

    பதிலளிநீக்கு
  32. உங்களின் தியேட்டர் நினைவுகள் என்னை பழைய நினைவுகளுக்கு அழைத்துச் சென்று விட்டன.

    பதிலளிநீக்கு
  33. அந்தக்காலத்தில் தியேட்டர்களில், டூரிங் டாக்கிஸ்களில் சினிமா பார்க்கும் அனுபவமே அனுபவம் . இப்போது hitech தியேட்டர்கள், ப்ரமாத sound effects எல்லாம் இருக்கின்றனதான். இருந்தும், அந்தக்காலத்தில் இருந்த ஏதோ ஒன்று இப்போது இல்லை போலிருக்கிறதே, என்ன அது!

    பதிலளிநீக்கு
  34. என் நிறைவேறாத ஆசைகளில் டூரிங் டாக்கீஸில் சென்று படம் பார்க்க வேண்டும் என்பது ஒன்று . பதிமூன்று வருஷங்களுக்கு முன் நாங்கள் ராமாபுரத்திர்க்கு குடி வந்த பொழுது எங்கள் தெருவில் பாலாஜி தியேட்டர் என்று ஒரு டூரிங் டாக்கிஸ் இருந்தது. அதுதான் லேன்ட் மார்க். அந்த வழியாக செல்லும் பொழுது ரோடில் நின்று கொண்டு ஏதோ ஒரு இடுக்கு வழியாக தெரியும் படத்தை சிலர் பார்ப்பதை பார்த்திருக்கிறேன். விஜய் நடித்த ஏதோ ஒரு படம்தான் கடைசியாக ஓட்டினார்கள். இப்பொழுது அதை இடித்து விட்டார்கள். சென்னை மாநகரில் உள்ள ஓரே டூரிங் கொட்டாய் என்னும் சிறப்பை இழந்து விட்டோம்.

    என் சிறு வயதில் திருச்சி உறையூரில் பத்மா மணி என்னும் தியட்டருக்கு எதிரேதான் நாங்கள் இருந்தோம். பின்னாளில் அது ருக்மணி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெரும்பாலான படங்களை அங்குதான் பார்த்திருக்கிறேன். திருச்சியின் பெரிய தியேட்டர் அது. சிறந்த தியேட்டர் என்னும் விருது அதற்க்கு வழங்கப் பட்ட பொழுது எங்களுக்கு ஒரே சந்தோஷம்.

    அங்கு லோ கிளாஸ் 29 பைசா, அதற்க்கு அடுத்தது 65 பைசா , அதற்க்கு அடுத்தது 1.01. எங்கள் அப்பா ஒரு ருபாய் கொடுப்பார். நாங்களோ அதில் மூன்று படம் பார்க்கலாமே என்று 29 பைசாவிற்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு சென்று தலைவலியை வாங்கிக் கொண்டு வருவோம்.

    அம்மாவிடம் சினிமாவிற்கு பர்மிஷன் வாங்குவது எப்போதுமே என் சகோதரிதான். முடிந்திருந்த டெஸ்டில் நல்ல மார்க் வாங்கி இருந்தால் கொஞ்சம் தைரியமாக கேட்கலாம். மார்க் குறைந்தால் வாயை திறக்க மாட்டோம். என் சகோதரி பண்டிகைகளின் பொழுது எங்களுக்கு கிடைக்கும் பைசாக்களை சேர்த்து வைத்துக் கொண்டிருப்பாள். அம்மா காசு இல்லை என்று அனுமதி மறுத்தால், "அம்மா எங்க கிட்ட இருக்குமா" என்றால் சில சமயம் அம்மா அனுமதிப்பாள். பத்மாமணி தியேட்டரில் வரிசையில் நிற்பதற்காக சாயந்திரம் போர்ன்விடா குடிக்காமல் வந்து விடுவோம். எங்களுடைய மூன்றாவது அக்கா தியேட்டருக்கே போர்ன்விட்டாவை கொண்டு வந்து கொடுப்பாள். அங்கு உள்ளே போய் முதலில் உட்கார்ந்ததும் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய விநாயகனே, வினை தீர்பவனே பாடலைத்தான் போடுவார்கள். பத்மாமணியில் புது படம் ரிலீசாகது. டவுனில் உள்ள தியேட்டர்களில் ஓடி விட்டு பிறகுதான் இங்கு வரும். என்றாலும் சிவாஜி, எம்.ஜி.ஆர். படங்களுக்கு பேண்ட், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் போன்றவை இரவில் ஊர்வலமாக வந்து எம்.ஜி.ஆர்./சிவாஜி படத்திற்கு மாலை அணிவிப்பார்கள். குடி இருந்த கோவில் படத்திற்கு மிகப் பெரிய ஊர்வலம் அதிர் வேட்டு என்று அமர்களப் பட்டது.

    அதன் பிறகு ஸ்ரீ ரங்கம் வந்த பிறகு ரெங்கராஜவில் நிறைய படம் பார்த்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  35. நன்றி துளசிஜி, கீதா. பதிவு எழுதிடலாம், எழுதிடலாம் என்று சொல்கிறீர்கள்... எப்போ?

    பதிலளிநீக்கு
  36. நன்றி பேராசிரியை மகேஸ்வரி பாலச்சந்திரன். அருள் தியேட்டர் மட்டுமில்லை, எல் ஐ ஸி காலனி அருகே இருந்த குமரன் தியேட்டர் கூட மூடி விட்டார்கள். அங்குதான் குர்பானி, இன்னும் சில ஆங்கிலப் படங்கள் பார்த்தேன். நான் சொல்லும் ராஹெந்திரா மருத்துவக்கல்லூரிச் சாலையில் மசூதிக்கு அருகே இருந்த ரோட் வழியாகச் சென்றால் வரும்.

    பதிலளிநீக்கு
  37. மீள் வருகைக்கு நன்றி நண்பர் நெல்லைத்தமிழன்.

    பதிலளிநீக்கு
  38. நன்றி திருவாரூர் சரவணன். மிக சுவாரஸ்யமான பின்னூட்டம். நீங்கள் சொல்லியிருக்கும் விவரங்கள் புதிது + சுவாரஸ்யம்.

    //வெள்ளை ஸ்கிரீனுக்கு முன்னால் தொங்கிக்கொண்டிருக்கும் வெல்வெட் ஸ்கிரீனை தனி மியூசிக்குடன் மேலேற்றும்போது படம் பார்க்க வந்தவர்கள் விசில் அடிப்பதை பார்ப்பது//

    உண்மைதான். அருள் தியேட்டரின் அந்தப் பின்னணி இசையும், அந்த ரெட் வெல்வெட் மடிந்த திரையும் இன்னமும் என் நினைவில் இருக்கிறது.

    //ஆப்ரேட்டரின் மன நிலையை பொறுத்துதான் படம் ரசிகர்களின் பார்வைக்கு பரிமாறப்படும்.//

    இது மிகவும் புதிய தகவல்.

    முதல் வருகைக்கும், முத்தான பின்னூட்டத்துக்கும் நன்றி சரவணன். தொடர்ந்து வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  39. நன்றி நண்பர் திரு தமிழ் இளங்கோ.

    பதிலளிநீக்கு
  40. நன்றி நண்பர் ஏகாந்தன். அனுபவங்கள் பிரத்தியேகமானவை. அவரவர் சொந்த அனுபவங்கள்தான் அவரவர் பொக்கிஷம். அதுதான் நம்மை 'அப்போது இருந்த ஏதோ ஒன்று இப்போது இல்லை' போல எண்ண வைப்பது.

    பதிலளிநீக்கு
  41. நீண்ட, அழகிய பின்னூட்டத்துக்கும், முதல் வருகைக்கும் நன்றி சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன். இப்போது நீங்கள் ராமாபுரத்தில் இல்லை என்று நினைக்கிறேன். ராமாபுரத்தில் பாலாஜி தியேட்டர் எங்கிருந்தது என்று நினைவில்லை. நான் அங்கு தமிழ் நகரில் 91, 92 களில் இருந்தேன்.

    பதிலளிநீக்கு
  42. நான் இப்போதும் ராமாபுரத்தில்தான் வசிக்கிறேன். 91,92 என்றால் ராமாபுரம் அப்போது தோப்பும் துரவுமாக இருந்திருக்கும். நீங்கள் குறிப்பிடும் தமிழ் நகர் இப்போதைய செந்தமிழ் நகரா? பாலாஜி டூரிங் தியேட்டர் களசத்தம்மன் கோவில் தெருவில் இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அப்போதைய ராமாபுரம் இந்த அளவு இல்லை. சிவந்தி ஸ்கூல் தாண்டி தமிழ் நகர். அங்குள்ள சர்ச்சை அப்போதுதான் கட்டினார்கள். ஹெச் 28 இல் இருந்தோம்! ஆனாலும் பாலாஜி தியேட்டர் பற்றி தெரியவில்லை!

      நீக்கு
  43. எனக்கு நினைவு தெரிந்த முதல் தியேட்டர் என்றால் ஸ்ரீரங்கம் தேவி டாக்கீஸ் தான்! பிறகு ரங்கராஜா டாக்கீஸ்! எனது அனுபவங்களை ஏற்கனவே எழுதிவிட்டேன். மற்றவர்களின் அனுபவங்கள் படிக்க ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!