வியாழன், 26 மே, 2016

வில்லனுக்கும் உண்டு நல்ல குணங்கள்



          கதைகளிலும், சினிமாக்களிலும் வில்லன்களைப் பார்க்கும் நாம், மனதுக்குள் அவர்களை முற்றிலும் தீய ஜென்மங்களாகவே நினைத்துக் கொள்கிறோம்.  படங்களை ஜெயிக்க வைக்க அப்படித்தான் உருவேற்றுகிரார்கள் படத்தை இயக்குபவர்கள்.

          சாதாரண வாழ்வில் இவர்களை விட மோசமானவர்களை நாம் சந்தித்திருப்போம்.  அவர்களெல்லாம் ஓரளவு - வேறு வழி இல்லாமல் - நமக்கு நண்பர்களாகவே கூட இருப்பார்கள் -

          ஒரு குறள் உண்டே..

குணம் நாடி குற்றமும் நாடி அவற்றில் 
மிகை நாடி மிக்கக் கொளல்.



          சினிமாக்களில் நாம் பார்க்கும் வில்லன்களை அந்தப் படத்தின் இயக்குநர்கள் முடிந்தவரைக் கொடூரமானவர்களாகவே காட்ட முயல்கிறார்கள்.  இப்போதெல்லாம் அது மிக அதிகமாகவும் ஆகி, திரையிலேயே ரத்தம் தெறிக்கும் அளவுக்கு வில்லன்களை சந்திக்க நேர்கிறது.  சிற்சில படங்களில் நேர்மையாக, அளவான வில்லத் தனத்துடனும் காட்டுகிறார்கள்.
  அதுவும் உண்டு!

           உண்மையில் திரையில் கதாநாயகனாக நடிப்பவர்கள்தான் நிஜ வாழ்வில் மோசமானவர்களாகக் கூட இருப்பார்கள்!!!

          புராண வில்லக் கதாபாத்திரங்களில் இராமாயண இராவணனும், மஹாபாரத துரியோதனனும் நாம் கேள்விப்பட்டதில் சூப்பர் வில்லன்கள்.  இதில் இராவணன் பற்றிக் கேள்விப் படும்போது அவன் சிறந்த சிவபக்தன் என்று அறிகிறோம்.  இசை அறிவு மிக்கவன் என்று அறிகிறோம்.  வீணை வாசிப்பதில் நிகரற்றவன் என்று அறிகிறோம்.  அவன் மனைவி மண்டோதரி கற்புக்கரசிகளில் ஒருத்தியாகக் கூடப் போற்றப் படுபவள்.

          அப்படிப் பட்டவனின் ஒரே பலவீனம் சீதை ஆகிப் போகிறாள்.  அவன் செய்த வேறு தீய செயல்கள் என்ன என்று தெரியவில்லை.  அவன் அடுத்தவன் மனைவியின் மீது மையல் கொள்கிறான். புராணத்தில் அப்படிப்பட்டவர்கள் - இந்திரன் உட்பட - இன்னும் சிலரும் இருந்திருக்கிறார்கள்.  அந்தக் காலத்துக்கு அது ஒத்துக் கொள்ளப்பட்ட நடைமுறையும் கூட.   ஸ்வேதகேது அந்த நடைமுறையை சற்றே மாற்றுவதாகப் படித்தேன்.  அவர் தந்தை உத்தாலகர் என்னும் ரிஷியின் மனைவி பற்றிய கதைகளும் சுவாரஸ்யம்.  ஆனால் ராவணனின் மையலை சீதை அங்கீகரிக்கவில்லையே...  அவள் அந்த நேரத்தில் புதிதாக அமையும் 'ஒரு தார' நாகரீகத்தின் பிரதிநிதி.
எனவே அவன் அது காரணமாகவே அழிக்கப்படுகிறான்.

          மஹாபாரத துரியோதனின் பெருந்தன்மையைக் காட்டும் சில கதைகளில் ஒரு சம்பவம்.

          சுபத்திரையை துரியோதனனுக்குப் பேசி முடிக்கிறார்  அவள் தந்தை பலராமர் - கிருஷ்ணனின் அண்ணன்.  துரியோதனன் அவர் சீடன்.

           சுபத்திரையோ அர்ஜுனனை மனதில் வரித்து, கிருஷ்ணனின் துணையுடன் அவனை ரகசியத் திருமணம் புரிந்து விடுகிறாள்.

          இதைக் கேள்விப்படும் பலராமன் துரியோதனனை நேரில் கண்டு, நிலை கூறி, குறுகி மன்னிப்புக் கேட்கிறான்.

                                                                   
          பீஷ்மர், துரோணர் உள்ளிட்டவர்கள் அவை கூட்டி, அழைத்துவரப்பட்ட துரியோதனனிடம் இது தவறு என்றும், அவன் விரும்பினால் படை திரட்டி அர்ஜுனனை வென்று சுபத்திரையைக் கைகொள்ளலாம் என்றும் சொல்கின்றனர்.  அது க்ஷத்ரிய தர்மம்தான் என்றும் கூறுகிறார்கள்.

          துரியோதனன் மனமுடைந்து போனாலும் ஒரு கேள்வி கேட்கிறான்.  அர்ஜுனன் சுபத்திரையை வலுவில்  கடத்திச் சென்றானா?  எப்படி நிகழ்ந்தது இது?

           பார்த்த சாட்சிகள், சுபத்திரைதான் தேரை ஓட்டிச் சென்றதாகவும், அர்ஜுனன் அதில் அமர்ந்து சென்றதாகவும் சொல்கின்றனர்.

          எனில், போரிடுவதிலோ, வலுவில்  அவளைக் கவர்ந்து வருவதிலோ பயனில்லை என்று கூறுகிறான் துரியோதனன்.  சுபத்திரையின் மனம் வேறு இடத்தில் லயித்திருக்க, அதை வலுவில் தன்பக்கம் திருப்ப முடியாது என்று சொல்லி மற்றவர்களின் கருத்தை மறுக்கிறான் துரியோதனன்.  அந்தச் சம்பவத்தை அத்தோடு மறந்தும் விடுகிறான்.

          அர்ச்சுனன் சுபத்திரையை மணந்ததும், அவள் "துரி" க்காக நிச்சயிக்கப் பட்டதும் தெரியும்.  ஆனால் இப்படிப்பட்ட ஒரு உரையாடல் நடந்ததற்கு எங்காவது ஏற்கெனவே சொல்லப் பட்டிருக்கிறதா?
 
          அதனால் இப்படி ஒரு காட்சி நடந்ததா என்று அறியவும் ஆவல்.  கீதாக்கா சொல்லக் கூடும்!
நன்றி படங்கள் இணையத்திலிருந்து....



38 கருத்துகள்:

  1. துரியோதனனை அவங்க அப்பா அம்மா கூட இப்படி செல்லமா கூப்பிட்டிருப்பாங்களான்னு தெரியாது, செம்ம.

    பதிலளிநீக்கு
  2. ஆஹா அருமை,,, இது அவர் தாத்தாவிற்கு புரியாமல் போனதே,,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பேராசிரியை மகேஸ்வரி பாலச்சந்திரன்.

      நீக்கு
  3. கற்பனைக் கதாபாத்திரங்களை மெச்சுவதோ இகழ்வதோ எனக்கு உடன்பாடு இல்லை. ஆர் எஸ் மனோஹர் இலங்கேஸ்வரன் என்று ராவணனுக்கு கதாநாயக அந்தஸ்தே கொடுத்திருக்கிறார் முற்றிலும் நல்லவரோ தீயவரோ இருக்க மாட்டார்கள் என்பதே என் கருத்து. கதாசிரியர்கள் எதைத் தூக்கி நிறுத்துகிறார்களோ அதுவாகவே நாம் நினைக்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜி எம் பி ஸார்... உங்கள் கடைசி வரியை ஆமோதிக்கிறேன். அதைத்தான் பதிவின் ஆரம்பத்தில் சொல்ல முயன்றிருக்கிறேன்.

      நீக்கு
  4. முதல்லே சுபத்திரை பலராமருக்கும், கிருஷ்ணருக்கும் தங்கையாவாள். பலராமரின் மகள் அல்ல! ஆக அதிலேயே தப்பு தம்பி! பலராமர்--ரேவதி மகள் வத்ஸலா கல்யாணம் தான் அபிமன்யூவுடன் நடப்பது மாயா பஜார் சினிமாவாக வந்து சக்கைப் போடு போட்டதே! மாயா பஜார் பத்திப்பதிவு கூட எழுதி இருக்கேனே! வேணா மீள் பதிவாப் போடறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அக்கா.... ஆமாம், தங்கைதான். நான்தான் எங்கேயோ கவனமாகத் தவறாக எழுதி விட்டேன். தவறியதைத் திருத்தப் போவதில்லை. யானே கள்வன்!!!

      நீக்கு
  5. http://bagavathgeethai.blogspot.in/2009/02/20.html
    இந்தச் சுட்டியில் அர்ஜுனந்-சுபத்திரை திருமணம் குறித்துப் படிக்கலாம். அடுத்து ராவணன்!

    பதிலளிநீக்கு
  6. இப்போச் சிலநாட்கள் முன்னாடி தான் ராவனன் பற்றி என்னோட வலைப்பக்கத்திலே எழுதினேன். மறந்துட்டீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ராவணனுக்கு லங்காபுரி கிடைச்சதே அதை அவன் குபேரன் கிட்டே இருந்து பிடுங்கினதாலே தான். குபேரன் மேலே பொறாமை கொண்டு லங்காபுரியைப் பிடுங்குகிறான். அதோடு இல்லாமல் தேவர்கள், ரிஷிகள், மனிதர்கள் என அனைவருக்கும் கொடுமைகளையே செய்தான். மறுபடி நான் எழுதி இருக்கும் ராமாயணம் தொடரைத் தேடிப் பிடிச்சுப் படிங்க! பனிஷ்மென்ட் உங்களுக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ! ராவனன்.... எழுதுங்க இம்போசிஷன் கீதாக்கா!!!!! நீங்கள் சொல்லியிருக்கும் விவரங்கள் எல்லாம் நானும் படித்ததுதான். எழுதும்போது மறந்து விட்டது. ஹி.... ஹி.... ஹி....

      நீக்கு
  7. மகாபாரதத்தில் துரியோதனன் மிகவும் மோசமானவனாகச் சித்தரிக்கப்படவில்லை. மகாபாரதம் நடந்த ஒன்றுதான் என்பதற்கு பாத்திரங்களின் இயல்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அங்கு வில்லன், கதா'நாயகன் என்று ஒருவரும் கிடையாது. பொதுவாக, கதானாயகன் என்றால் அவனது குற்றம் சொல்லப்படாது. இங்கு எல்லாப் பாத்திரங்களின் இயல்பும் (க்ருஷ்ணன் உள்பட. அவர் பொறுமை எல்லை மீறி, அவரும் தவறு செய்வதை மகாபாரதம் சொல்கிறது. ஒரு உதாரணம், பீஷ்மரைக் கொல்ல அவர் தேர்ச்சக்கரத்தை எடுத்துக்கொண்டு முன்னேறுவது). மகாபாரதத்தில், துரியோதனன், நண்பர்களிடம் நல்ல நட்பைப் பேணுகிறான், துச்சாதனனின் குணம் அவனுக்கு இல்லை (பெண்களை மதிப்பவனாகக் காண்பிக்கப்படுகிறான்). அவன், தனக்கு உரியது என்று நினைத்ததை அடையப் பார்த்தான். தாயாதிகளிடம் (பங்காளிகளிடம்) பொறாமையைக் காண்பித்தான். யுத்தத்தில், தூங்கிக் கொண்டிருப்பவர்களைக் கொல்பவனாக அஸ்வத்தாமன் என்கிற பிராமணன் காட்டப்படுகிறான். மிகவும் உயர்வாகச் சொல்லப்பட்ட தருமனே, பொய்யுரைக்கும் பாவத்தைச் செய்கிறான்.

    இப்போதைய உலகிலும், முழுவதும் நல்லவன் என்று யாரும் கிடையாது. முழுவதும் கெட்டவன் என்று யாரும் கிடையாது. இது அரசியல் பேசுகின்ற தளமல்ல. கருணானிதி அவர்களுக்கும் நல்ல குணங்கள் உண்டு. ஜெயலலிதா அவர்களுக்கும் கெட்ட குணங்கள் உண்டு. இது மனிதர் எல்லோரிடமும் பார்க்கலாம் ('நாம் ஆசாரியர்கள், முனிவர்கள், பெரியவர்கள் என்று நினைத்து வணங்குகிற எல்லோரிடமும்). இதற்கு விதிவிலக்கு கடவுளாகத்தான் இருக்க முடியும்.

    ஸ்ரீராம், தாரையை சுக்ரீவன், வாலி மரணத்துக்குப் பின் மணந்ததை எழுத மறந்துவிட்டார். சீதையைக் காவல் காப்பதற்காக அவளைச் சூழ்ந்திருந்த ராவணனின் இன்னொரு மனைவியான (அல்லது விபீஷணனின் மனைவியா?ஐயோ பேர் மறந்துவிட்டேனே.. மண்டோதரி பட்ட மகிஷி) ..... சீதைக்கு ஆறுதலாக இருந்தாள். அரக்கர் குலத்திலும் விபீஷணன் இருந்தார், கும்பகர்ணன் இருந்தார். இருவரும் செய்ததை 'நியாயமாக்க இயலும். எது 50% தாண்டுகிறதோ, அதை வைத்து நல்லவர், கெட்டவர் என்று பிரிக்கிறோம். இந்த %ம், நம்முடைய அனுமானத்தில், with reference to us, தீர்மானிக்கிறோம். அதனால்தான், கருணானிதி சிலருக்கு வானத்திலிருந்து வந்த தேவ புருஷனாகவும், சிலருக்கு (என்னைப் பொறுத்தவரை பலருக்கு) தீயசக்தியாகவும் தெரிகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லைத் தமிழன்...

      அட்டகாசமா அலசி இருக்கீங்க... அதிலும் கடைசி வரிகளை மனம் விட்டு வெளிப்படையாகவே சொல்லி இருக்கீங்க...

      நீக்கு
  8. சீதைக்கு அசோகவனத்தில் காவல் இருந்த ராக்ஷசி திரிஜடை விபீஷணனின் மகள் ஆவாள். ராவணன் மனைவி யாரும் இருக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரிசடைன்னு நானே சொல்ல வந்தேன்... நீங்களே சொல்லிட்டீங்க கீதாக்கா...

      நீக்கு
  9. பதிவும் அதை தொடர்ந்த விவாதங்களும் சிறப்பாக இருந்தன. அர்ஜுனன் - சுபத்திரா காதலும் கிருஷ்ணர் உதவியால் அவர்கள் மணந்து கொண்டது போல நானும் எதிலோ வாசித்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிலோ என்ன, மகாபாரதத்தில்தான் வாசித்திருப்பீர்கள் சுரேஷ்! நன்றி வருகைக்கு.

      நீக்கு
  10. உண்மையான கருத்து உண்மையில் பல ‘’கசா’’நாயகர்கள் வில்லன்களாக வாழ்ந்ததை நாம் பார்த்து விட்டோம்
    இராவணனைப்பற்றி எனக்கு கருத்து சொல்லத் தெரியவில்லை காரணம் அவர் நமக்கு பழக்கமில்லை மற்றவர்களின் கருத்தை அறிய ஆவலுடன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கில்லர்ஜி... கீதா அக்காவும் நெல்லைத் தமிழனும் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார்கள் பாருங்கள்..

      நீக்கு
  11. @நெல்லைதமிழன். நல்ல அலசல். குறிப்பாக % கணக்கு.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜேகே ஸார். நெல்லைத்தமிழன் நன்றாகவே அலசியிருக்கிறார்.

      நீக்கு
  12. நெல்லைத் தமிழனின் பதில் அருமையான அலசல்

    பதிலளிநீக்கு
  13. இது வரை அறிந்திராத
    புதிய விஷயம்
    பின்னூட்டங்க்கள் சுவாரஸ்யம்
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  14. அருமை . வில்லன்களை பார்த்து பரிதாபப் பட வைப்பதை கம்பனும் திறம்பட செய்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  15. கீதா மேடம்.. என் ஞாபகசக்தியின் தவறுதான். பழைய படப் பாடலா அல்லது கீர்த்தனமா என்று நினைவில் இல்லை. அது, சீதை பாடுவதாக வரும். "ஐயையோ நானும் ஓர் பெண்ணாய்ப் பிறந்தததை, யாருடனே சொல்லி, ஆறுதல் அடைவேன் அம்மா.. திரிசடையே". அவர் விபீஷணனின் மகள் என்பது எனக்குத் தெரியாது. நன்றி.

    பதிலளிநீக்கு
  16. அன்றைய நிலையில் போருக்கு அழைக்க வேண்டும் என்றால். பசுக்கைளையோ..அல்லது அந்நாட்டு பெண்களையே கவர்ந்து செல்வதுதான் வழக்கம்.. அதை்தான் இராவணன் செய்தார் சிதையின் மீது மையல் கொண்டு அல்ல..

    திரையில் கதாநாயகனாக நடிப்பவர்கள்தான் நிஜ வாழ்வில் மோசமானவர்களாக இருந்திருக்கிறார்கள்!!!

    பதிலளிநீக்கு
  17. அன்றைய நிலையில் போருக்கு அழைக்க வேண்டும் என்றால். பசுக்கைளையோ..அல்லது அந்நாட்டு பெண்களையே கவர்ந்து செல்வதுதான் வழக்கம்.. அதை்தான் இராவணன் செய்தார் சிதையின் மீது மையல் கொண்டு அல்ல..

    திரையில் கதாநாயகனாக நடிப்பவர்கள்தான் நிஜ வாழ்வில் மோசமானவர்களாக இருந்திருக்கிறார்கள்!!!

    பதிலளிநீக்கு
  18. திரையில் பார்த்த நம்பியார்தான், நிஜத்தில் ஐயப்ப பக்தர்களின் குருவாக இருந்தார் என்பதை பலரும் இன்றுவரை நம்பவில்லை :)

    பதிலளிநீக்கு
  19. பொதுவாக கதாநாயகன், வில்லன் என்பதையெல்லாம் எப்படித் தீர்மானிக்கிறோம் என்றே தெரியவில்லை.

    இப்படி கற்பனை செய்து பாருங்கள்:

    ஒரு திரைப்படத்தில் கதாநாயகன் ரெளடி. பெண்பித்தன், எளியவர்களை ஏய்த்துப் பிழைப்பவன், பல திருட்டுகளைத் திறம்பட நடத்தியவன் இத்யாதி குணநலங்களை உடையவன் என்று வைத்துக் கொள்ளுங்கல்.

    அதே திரைப்படத்தில் வில்லன் அந்த கதாநாயக ரெளடியை வேட்டையாடவே பிறந்தவனாய் செயல்படுகிறான். கதாநாயகனின் அத்தனை அட்டூழியங்களுக்கும் திரைப்படத்தின் வில்லன் முடிவு கட்டுகிறான்.

    நியாயப்படி இந்தப் படத்தின் கதாநாயகன் யார், வில்லன் யார்? உங்கள் கதாநாயகன் ஓட்டு யாருக்கு?..

    ஆர்.எஸ். மனோகர் நடித்த 'கைதி காண்ணாயிரம் படத்திற்கு யார் கதாநாயகன?

    'ஏழை படும் பாடு' என்று ஒரு திரைப்படம். ஜாவர் சீதாராமன் அந்தப் படத்தில் கடமை உணர்வு கொண்ட இன்ஸ்பெக்டராய் ஜாவர் என்ற பெயரில் தோன்றி திறம்பட நடித்தார். அதனால் தான் அவர் ஜாவர் சீதாராமன் என்று அழைக்கப்படலானார். நியாயமாகப் பார்த்தால் அவர் தான் அந்தப் படத்தின் நாயகன் என்று சொல்ல வேண்டும்.

    விக்டர் ஹியூகோ பிரபல பிரென்ஞ் எழுத்தாளர். ஏழைப்பங்காள எழுத்தாளர். அவரது 'லே மிஸரபிள்' என்ற நாவலைத் தான் சுத்தானாந்த பாரதியார் 'ஏழை படும் பாடு' என்ற பெயரில் மொழிபெயர்த்தார். ஜீன் வால் ஜீன் என்ற ஏழை தான் ஹியூகோ கதையின் நாயகன். திரைப்படத்தில் நாகையா அந்தப் பாத்திரத்தில் நடித்திருந்தார் என்று நினைவு.

    பதிலளிநீக்கு
  20. நல்லதொரு பதிவு ஸ்ரீராம் இன்னும் கொஞ்சம் கூட ஆழமாகப் போயிருக்கலாமோ..

    ராவணனைப் பற்றி, அவனைப் போற்றி ராவண காவியம் என்று புலவர் குழந்தை என்பவர் எழுதியது இருக்கின்றதே. புராணங்களில் என்னவோ ஹீரோக்கள் எல்லோருமே மிகவும் நல்லவர்கள் போன்றும், வில்லன்கள் எல்லோருமே கெட்டவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் எல்லா ஹீரோக்களும் நல்லவர்களும் இல்லை எல்லா வில்லன்களும் கெட்டவர்களும் இல்லை. மணிரத்தினம் கூட படம் எடுத்திருக்கின்றாரே ஹிஹிஹி.... தலைப்பு அருமை.

    அட! துரி நல்லாருக்கே ...!!

    பதிலளிநீக்கு
  21. நெல்லைத் தமிழன் கருத்து நல்லாருக்கு. சேம் சேம்...

    பதிலளிநீக்கு
  22. துரியோதனன் பாண்டவர்களிடம் கொண்ட பொறாமையால் அவர்களுக்கு பல தீங்குகளை இழைத்தாலும்,ஒரு நல்ல அரசனாகத்தான் ஆட்சி புரிந்திருக்கிறான். அவன் ஒரு கணவானாக இருந்ததால்தான் தன் மனைவியும் நண்பனும் சொக்கட்டான் ஆட அனுமதித்திருக்கிறான். நீங்கள் குறிப்பிட்டிருப்பதை எதில் படித்தீர்கள்? அல்லது யார் சொல்ல கேட்டீர்கள்? சில சமயங்களில் பௌரானீகர்கள் சில குண்டை போடுகிறார்கள். கருனாகராசாரியார் ஒரு முறை பீஷ்மர் பிரும்மசாரி இல்லை திருமணமானவர் அதற்கு மஹா பாரதத்தில் ஆதாரம் உண்டு என்றார்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!