திங்கள், 30 மே, 2016

'திங்க'க்கிழமை 160530 :: ஜவ்வரிசி வடகம்.

     
வெயில் காலத்தை வீணாக்க மனம் வரவில்லை. 

வெள்ளிக்கிழமை  மாலை திடீரென எழுந்தது அந்த (விபரீத) எண்ணம். 

'வாங்குவோம் - பிறகு என்ன செய்யலாம் என்று பார்ப்போம்' என்று தீர்மானித்து வாங்கி வந்திருந்த முத்துப்பல்லழகி ஜவ்வரிசி பாக்கெட்டிலிருந்து என்னைப் பார்த்துச் சிரித்ததால் வந்த எண்ணமாக இருந்திருக்கும். 
    
   

எனக்குத் தோன்றிய வகையில் ஜவ்வரிசி வடாம் தயார் செய்து பார்த்தால் என்ன என்ற எண்ணம்தான் அது. 

முக்கியமாக என் நடவடிக்கைகள் என் மனைவிக்குத் தெரியக்கூடாது. (பாஸ் என்று குறிப்பிடவில்லை என்பதை புத்திசாலி வாசகர்கள் கவனித்து, இந்தப் பதிவை எழுதியவர் யார் என்று தெரிந்துகொண்டுவிடுவார்கள்) மனைவிக்குத் தெரிந்தால், ஒவ்வொரு ஸ்டெப்பிலும் X போட்டு, எனக்கு சைபர் மார்க் போட்டுக்கொண்டே இருப்பார். 

இரண்டு கரண்டி ஜவ்வரிசியை எடுத்து, ஒரு பாத்திரத்தில் இட்டு, ஆறு  கரண்டி தண்ணீரில் அதை  மூழ்கடித்து, பாத்திரத்தை ஓசைப்படாமல் மூடிவைத்துவிட்டு வந்தேன். 

சனிக்கிழமை அதிகாலையில், அந்தப் பாத்திரத்தை அடுப்பிலேற்றி, நூறு டிகிரி சென்டிகிரேடிலேயே வைத்திருந்தேன். (இண்டக்ஷன் ஸ்டவ் வாழ்க) கொஞ்சம் கொஞ்சமாகக் கொதித்து, ஜவ்வரிசிகள் எல்லாமே கிளியர் கண்ணாடி கோலிகளாகக் காணப்படும்பொழுது, அடுப்பணைத்து, பாத்திரத்தை இறக்கிவைத்தேன். 

(மனைவி கண் விழித்துவிட்டார்கள். இன்னும் ஒருமணி நேரத்திற்கு, எல்லா சானலிலும் வருகின்ற தெய்வதரிசனங்கள் அவருக்குப் பொழுதுபோக்கு) 

ஜவ்வரிசிக்கூழ் ஆறிவிட்டது. (அல்லது கைபொறுக்கும் சூடு) 

ஒரே ஒரு பச்சைமிளகாய் எடுத்து, சிறிய துண்டுகளாக நறுக்கி, அதை மிக்சி சிறிய ஜாரில் போட்டு, ஒரு கரண்டி தண்ணீர் விட்டு, அரைத்து, அந்த மிக்சரை, ஒரு டீ வடிகட்டி மூலமாகக் கூழில் ஊற்றினேன். 

கூழை நன்றாகக் கலக்கிவிட்டேன். 

அரை மூடி எலுமிச்சம்பழத்தை டீ வடிகட்டி மூலமாக கூழில் பிழிந்து, மீண்டும் கிளறிவிட்டேன். 

தேவையான அளவு உப்புப் பொடி போட்டு, மீண்டும் கிளறல். 

அப்புறம் என்ன சேர்க்கலாம் என்று சுற்றுமுற்றும் பார்த்தபொழுது கண்ணில் பட்டது எல் ஜி பெருங்காயப்பொடி. போடு அதையும் என்று இரண்டு சிட்டிகை பெருங்காயப் பொடியையும் கூழில் போட்டேன். கலக்கிவிட்டேன். 

வடாம் மாவு தயார். 

நான் ஒரு அரைச் சோம்பேறி. வடாம் இடுவதற்கு துணி எல்லாம் தயார் செய்வது என் இயல்புக்கு ஒவ்வாத விஷயம். ரிலையன்ஸ் ஃபிரெஷ் கடையில் லூசாக (ஹி ஹி நான் ஒரு லூசுப்பய) அரிசி வாங்கிய  பை இருந்தது. அதை எடுத்து, பெரிய பரப்பளவு வரும் வகையில் கட் செய்து, வெய்யிலில் வைத்து, நான்கு பக்கங்களிலும் பேப்பர் பறக்காமல் இருக்க கல் வைத்தேன். 
   

ஜவ்வரிசி வடாம் கூழை, ஒரு சிறிய ஸ்பூனால் எடுத்து, டக் டக் டக் என்று பேப்பரில் இட்டேன். இரண்டு நிமிட நேரத்தில் அறுபது டாட் வடாம் இட்டாச்சு. 

காக்கா வராமல் இருப்பதற்கு, வடாமிட்ட பேப்பரின் மேலே, துணி உலர்த்தும் ஸ்டாண்ட்  வைத்தேன். மாலையில் வெயில் போனதும், பேப்பரோடு எடுத்து உள்ளே வைத்தேன். 
  


ஞாயிற்றுக்கிழமை காலையில், பேப்பரிலிருந்து ஒவ்வொரு வடாமாக எடுத்து, (சுலபமாக எடுக்கமுடிந்தது) ஒரு தட்டில், ஈரம் இருக்கும் பக்கம் மேலே இருக்கும் வகையில் போட்டேன். அறுபது டாட் வடாமுக்கு இரண்டு தட்டுகள் போதும். 
   


(படத்தில் காணப்படுவது, மறுநாள், பேப்பரிலிருந்து எடுக்கப்பட்டு, தட்டில் வைக்கப்பட்ட வடாம்கள், துணி ஸ்டாண்டுக்குக் கீழே)  

ஞாயிறு மாலையே வடாம்கள் தயார். 

இன்று காலை பெரிய சஸ்பென்ஸ் என்று நினைத்து, மனைவியிடம் போய், "கடந்த இரண்டு நாட்களில் நான் என்ன செய்தேன் தெரியுமா?" என்று கேட்டேன். "எல்லாம் தெரியும். ஜவ்வரிசி வடாம் என்று நினைத்துக்கொண்டு ஏதோ செய்திருக்கிறீர்கள். இதையெல்லாம் எண்ணெயில் பொரித்து, நான் எண்ணெயை வேஸ்ட் செய்வதாக இல்லை." 

எண்ணெய் ஜாடியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. 

யாராவது இந்த வடாம்களை பொரித்துக் கொடுக்கிறீர்களா? 

எண்ணெயில்லாமல்  பொரிக்கலாம் என்று பார்த்தால், என்காக்கை அலை சூளை (ஹி ஹி மைக்ரோ வேவ் ஓவன்!) பழுதாகிப் பல நாட்கள் ஆகிவிட்டன.

எப்பொழுதாவது சந்தர்ப்பம் கிடைத்தால், பொரித்து, புசித்துப் பார்த்துச் சொல்கிறேன். 
               

16 கருத்துகள்:

  1. ஹிஹிஹி, காணோமேனு பார்த்தேன் கௌதமன் சார். நல்லா வேணும், வேணுங்கட்டிக்கு வேணும். ஜவ்வரிசி வடாம் பொரிச்சுச் சாப்பிடமுடியலையா? ஹாஹாஹா, ஹிஹிஹிஹி!

    பதிலளிநீக்கு
  2. அது சரி, ஶ்ரீராமுக்கு என்ன ஆச்சு? மனைவினு சொல்லாட்டிக் கூட நீங்க தான்னு கண்டு பிடிச்சிருப்பேன். ஹிஹிஹிஹி!

    பதிலளிநீக்கு
  3. நல்லா போட்டீங்க ஜ.வடாம்! அதுக்கு ஒரு பிளாஸ்டிக் effect உண்டில்லையா? உங்க
    'என் காக்கை அலைசூளை' effectலேருந்து நான் விடுபட நாலைஞ்சு நாளாகும் போலிருக்கே!

    பதிலளிநீக்கு
  4. பொரிச்சு சாப்பிட்ட பின்னர் தான் தெரியும்,,,,
    பிளாஸ்டிக் பேப்பர் சூடு கெடுதல் தானே,,,

    பகிர்வுக்கு நன்றி,

    பதிலளிநீக்கு
  5. //என்காக்கை அலை சூளை//

    அது அவ்வளவு சுலபமா வீணாகாது. இம்மாதிரி ஏதோ தானாப் பண்ணிட்டுச் சுட்டோ, பொரிச்சோ பார்த்திருக்கார் போல! அதான் உயிரை விட்டிருக்கு! :))))

    பதிலளிநீக்கு
  6. அழகாய் வட்டமாய் இல்லை, ஆனால் என்ன வெள்ளையாக இருக்கே!
    அப்புறம் ஏன் அவர்கள் எணணெய் தரமாட்டேன் என்கிறார்கள்?
    அவர்களுக்கு தெரியாமல் இவ்வளவு செய்து விட்டீர்கள் பொரித்து சாப்பிட முடியாதா? பொரித்து சாப்பிட்டு விட்டு சொல்லி இருக்கலாம் எப்படி இருந்தது என்று.(நன்றாகத்தான் இருக்கும்)

    பதிலளிநீக்கு
  7. கேஜிஜி சார் எங்காக்கை அலை சூளை ஹஹஹஹ் மிக மிக ரசித்தோம்...ஹப்பா பெர்ஃபெக்ட் மணித்துளிகள் வேற அதை இடுவதற்கு ஹஹ...

    சரி வடாம் நன்றாக வந்திருப்பது போல்தான் இருக்கு. மனைவிக்குத் தெரியாமல் (அப்படினு நினைச்சு) செய்த நீங்கள் அவருக்குத் தெரியாமல் (அப்படினு நினைச்சு...) அவர் எண்ணையை வெளியில் எடுக்காமலா இருப்பார்? பார்த்துக் கொண்டு பொரித்துவிட வேண்டியதுதான். இல்லை என்றால் இங்கு பார்சல் அனுப்புங்கள் பொரித்து அனுப்புகின்றேன்...ஹிஹிஹி (பாதிதான் வரும்....)

    கீதா

    பதிலளிநீக்கு
  8. பொரித்து சாப்பிட்டு விட்டு சொல்லுங்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  9. பழக பழகத்தான் எல்லாம் கைகூடும்...

    பதிலளிநீக்கு
  10. பழக பழகத்தான் எல்லாம் கைகூடும்...

    பதிலளிநீக்கு
  11. பாஸ் ஒத்துழைப்பு இல்லாமல் செய்துவிட்டீர்கள். அதனால் என்ன பச்சையாகச் சாப்பிட்டால் போகிறது. கௌதமன் ஜி .லாபரட்டரி சோதனையாகச் செய்திருக்கிறீர்கள் .அப்படியே கல்லூரி வாடை அடிக்கிறது. நல்ல முயற்சி. திருவினையாகி எண்ணெயில் பொரிக்க ஆசிகள்.

    பதிலளிநீக்கு
  12. அரை லிட்டர் எண்ணை வாங்கி வந்து பொரித்து விடுங்கள்.... அவர்கள் தராவிட்டால் எண்ணையா கிடைக்காது நமக்கு! ஒரு கை பார்த்துடுவோம்.... :)

    மைக்ரோவேவ் அவன் - தமிழ் ”படுத்தி”யது செம!.... :)

    பதிலளிநீக்கு
  13. மைக்ரோவேவ் அவனுக்கு தமிழாக்கம் ரசித்தேன். இவ்வளவு கஷ்டப்பட்டு வடாம் செய்தும் ஒரே நொடியில் ஆர்.டி.ஓ பெயில் பண்ணுவது போல பண்ணிட்டாங்களே ஹவுஸ் பாஸ்?!

    பதிலளிநீக்கு
  14. பாஸ் ஒத்துழைப்பு இல்லாமல் செய்துவிடலாம் முடியாது. நீங்க செய்வது பாஸுக்கு தெரிந்தும் சின்னபுள்ளை ஏதோ செய்கிறது என்று கண்டுக்காமல்விட்டுவிட்டார்கள் என்பதுதான் உண்மை பாஸ் இல்லாமல் இந்த அகிலத்தில் ஒன்றும் அசையாது...

    பதிலளிநீக்கு
  15. அது சரி, ஜவ்வரிசியைப் பார்த்தால் பாயசம் செய்யலாம் என்று தோன்றலாம், உங்களுக்கு எப்படி ஜவ்வரிசி வடாம் செய்யலாம் என்று தோன்றியது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன்... என்ன, இப்படி கேட்டுட்டீங்க... ரொம்ப ஃபேமஸ்ங்க அது! நாளை பாருங்கள் இன்னொரு ஐட்டம்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!