செவ்வாய், 29 அக்டோபர், 2024

ரீட்டா & மீட்டா 14 : அருண் எடுத்த முடிவு.

 

போலீஸ் ஜீப் ஓட்டுநர், அருண் சொன்ன விலாசத்தில் உள்ள பங்களா வாசலை அடைந்ததும், காம்பவுண்ட் உள்ளே செல்ல ஜீப்பைத் திருப்பினார். 

அப்பொழுது பங்களா உள்ளிருந்து, வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை போட்ட ஒருவர் அவசரமாக வெளியே வந்தார். அருணிடம், " சார்! உங்கள் ஜீப்பை தயவு செய்து திருப்பி அனுப்பிவிடுங்கள். நீங்கள் மட்டும் உள்ளே வாங்க. இங்கே  உள்ளேயோ வெளியிலோ போலீஸ் ஜீப் ரொம்ப நேரம் நின்றால் அது அக்கம் பக்கத்தவர் கவனத்தை இழுக்கும். பாஸ், உங்களை மட்டும் உள்ளே வரச்சொன்னார்" என்றார். 

அருண், ஓட்டுநரிடம் " சரி - நீங்கள் ஜீப்பை ஸ்டேஷனுக்கு ஓட்டிச் செல்லுங்கள். நான் அப்புறம் வருகிறேன். மார்த்தாண்டம் சாரிடம் சொல்லிடுங்க" என்றான். 

பங்களா காம்பவுண்ட் உள்ளே நுழைந்து வாசலை நோக்கி நடந்த அருணின் கவனம் அங்கே உள்ளே நிறுத்தப்பட்டிருந்த கார்களின் பக்கம் சென்றது. 

ஒரு இன்னோவா கார், ஒரு வோக்ஸ் வாகன் கார், சில மாருதி கார்கள் எல்லாம் கண்ணில் பட்டன. அவற்றுக்கு இடையே, ஒரு நீல நிற BMW கார். அந்தக் காரின் பதிவு எண் 3888. அருண் அதை கவனிக்கத் தவறவில்லை. 

வீட்டின் உள்ளே வரவேற்பறையில், அந்த அரசியல் பிரமுகர் உட்கார்ந்திருந்தார். அருணை உள்ளே அழைத்துச் சென்றவர், மிகவும் பவ்யமாக அவரிடம், " சார் - டி எஸ் பி அருண் இவர்தான். இவரிடம் நீங்க பேசுறீங்களா - இல்லை நான் .. " என்று இழுத்தார். 

அ பிரமுகர் : " நானே பேசுகிறேன். நீ இங்கே பக்கத்திலே உக்காந்துக்கோ "

அ வ : " சரி சார்"

அ பிரமுகர்: (அருணிடம்) " ஊரப்பாக்கம் பெண் தற்கொலை கேஸ் பற்றி நீங்கள்தான் விசாரணை செய்து வருகிறீர்களா? "

அருண் : " தற்கொலை இல்லை சார் - கொலை. " 

பிரமுகரும் மற்றவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். 

பிரமுகர்: " கொலையா! யார் கொலை செய்தார்கள் ?"

அருண் : " அந்தப் பெண்ணின் படுக்கை அறையில் இருந்த ஏர் கண்டிஷனரில் வைக்கப்பட்டிருந்த ஒரு விஷ ஜாடியிலிருந்து வந்த விஷ வாயுவை சுவாசித்ததால் அந்தப் பெண் இறந்துவிட்டாள். "

பி : "அந்த விஷ ஜாடியை யார் அங்கே வைத்தார்கள் என்று கண்டுபிடித்தீர்களா? " 

அருண் : " யார் வைத்தார்கள் என்பதை நிரூபிக்க சாட்சி இருக்கிறது. "

பி : " அப்படியா! அந்த விஷ ஜாடி எங்கேயிருந்து வந்தது? "

அருண் : " அது சீனாவிலிருந்து வந்த ஜாடி என்பதை அதன் மீதில் இருந்த சீன எழுத்துகளை வைத்துக் கண்டுபிடித்தேன். அந்த சீன கம்பெனியிடமிருந்து அதை யார் வாங்கினார்கள் என்று தெரிந்துகொண்டேன். " 

பி : " அது யார்? "

அருண் : " அண்ணா நகரில் இருக்கும் மார்ஸ் கார் கராஜ் விலாசத்திற்கு வந்த ஜாடி அது. மதிவாணன் என்ற பெயருக்கு அனுப்பப்பட்ட ஜாடி. "

இந்த நேரத்தில் அந்த அரசியல் பிரமுகரின் மொபைல் ஃபோனில் ஏதோ அழைப்பு வந்தது. மொபைல் போனை எடுத்துப் பார்த்த அ பி, " மினிஸ்டர் கூப்பிடுகிறார். இதோ (அருணை உள்ளே அழைத்து வந்தவரைக் காட்டி) என்னுடைய   பி ஏ விடம் கொஞ்சம் பேசிக்கொண்டிருங்கள். நான் மினிஸ்டரிடம் பேசிவிட்டு வருகிறேன்" என்று சொல்லியபடி போனை எடுத்துக்கொண்டு பக்கத்து அறைக்குச் சென்றார். 

பி ஏ : " அருண் - நீங்க வந்தவுடனேயே உங்கள் ஜீப்பை ஏன் திருப்பி அனுப்பச் சொன்னேன் தெரியுமா? "

அ : " காரணத்தைதான் அப்போ சொன்னீங்களே !" 

பி ஏ : " அது உண்மையான காரணம் இல்லை. நீங்க இங்கேயிருந்து திரும்பிப் போவது எங்க கையிலதான் இருக்கு. நீங்க இங்கே வந்தது எத்தனை பேர்களுக்குத் தெரியும்?"

நிலைமை தீவிரமாவது அருணுக்குப் புரிந்தது. 

அ : " கிட்டத்தட்ட பதினேழு பேர்களுக்குத் தெரியும். யார் அவர்கள் என்று சொல்லவா?"

பி ஏ கொஞ்சம் யோசித்து, பிறகு, " சரி - நமக்குள் வாதம் வேண்டாம். அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டுதான் இறந்தாள் என்று நீங்க ஒரு ரிப்போர்ட் தயார் செய்து கொடுக்கவேண்டும். மேலும் நீங்க இந்தக் கேஸ் சம்பந்தமாக இதுவரை சேமித்த தடயங்கள் குறிப்பாக இறந்து போன பெண்ணின் ஃபோன், லாப் டாப், ஏர் கண்டிஷனரிலிருந்து எடுத்த விஷ வாயு ஜாடி, அந்த ஜாடி வாங்கப்பட்ட விலாசம் பற்றிய தகவல் - எல்லாவற்றையும், மதிவாணன் ஒரு விலை கொடுத்து வாங்கத் தயாராக உள்ளார். எல்லாவற்றிற்கும் என்ன விலை என்று சொல்லுங்க. " 

அ : " நீங்க என்ன சொல்கிறீர்கள் என்று புரிந்தது.  தற்கொலை என்று ரிப்போர்ட் தயார் செய்யவேண்டும் என்றால், அதற்கு இறந்துபோன ரீட்டாவின்  பெரியம்மா வாக்குமூலம் முக்கியம். அவங்க சொல்வதை வைத்து, தற்கொலை என்று ரிப்போர்ட் செய்து கேஸை முடித்துவிடுகிறேன். ரீட்டாவின் இறப்பு, அவளுடைய பெரியம்மாவுக்கு பெரிய இழப்பு. பெரியம்மா, ரீட்டாவின் ஆதரவில்தான் பல வருடங்களாக வாழ்ந்துகிட்டு இருக்காங்க. ரீட்டாவின் பங்களாவை கொஞ்சம் விரிவு செய்து அங்கே, ' ஆதரவற்ற பெண்கள் காப்பகம்' ஒன்றைத் தொடங்குவதாக இருக்காங்க.  அதற்கு அவங்களுடைய அக்கவுண்ட்டுக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை மதிவாணன் அனுப்பவேண்டும். அக்கவுண்ட் விவரங்கள் இதோ இந்த பேப்பரில் எழுதியுள்ளேன்" 

பி ஏ பேப்பரை வாங்கிக்கொண்டார். 

பி ஏ : " அப்புறம்? " 

அ : " நான் சேகரித்த சாட்சியங்கள், தடயங்கள் எல்லாம் என்னுடைய அலுவலகத்தில் மேலதிகாரி மார்த்தாண்டம் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றை அவரிடமிருந்து பெறவேண்டும் என்றால், அவருக்கு பதவி உயர்வு கொடுக்கப்படவேண்டும். " 

பி ஏ : " சரி. உங்களுக்கு எதுவும் வேண்டாமா ?" 

அ : " எனக்கு எதுவும் வேண்டாம். " 

பி ஏ, அருணை ஆச்சரியமாகப் பார்த்தார். 

பி ஏ : " கொஞ்ச நேரம் இருங்க. நான் போய் பாஸ் கிட்ட பேசிவிட்டு வந்து உங்களிடம் எங்கள் முடிவை சொல்கிறேன் " 

பி ஏ அடுத்த அறைக்குச் சென்றார். 

ஐந்து நிமிடங்கள் கழித்து வெளியே வந்தார். 

பி ஏ : " சரி. தொகை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் பாஸ் ஒப்புக்கொண்டுவிட்டார். நீங்க போய் நாங்க கேட்ட எல்லா பொருட்களையும் கொண்டு வந்து எங்க கிட்ட ஒப்படைத்த உடனேயே தொகை அனுப்பிவிடுவோம். உங்கள் மேலதிகாரிக்குப் பிரமோஷன் கொடுப்பது பற்றி சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பாஸ் இன்றைக்கக்கே பேசி ஏற்பாடு செய்துவிடுவார். " 

அ : " என் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?  தொகையை இப்பொழுதே அனுப்புவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? நான் உங்களை ஏமாற்றிவிட்டு எங்கும் போய்விட மாட்டேன். " 

பி ஏ மீண்டும் உள்ளே சென்று தன்னுடைய பாஸிடம் பேசிவிட்டுத் திரும்ப வந்தார். 

பி ஏ : " நாங்கள் உங்களை நம்புவதோ அல்லது நீங்கள் எங்களை நம்புவதோ பிரச்சனை இல்லை. இரண்டு பக்கங்களிலும் ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல் அல்லது ஏமாறாமல் இருக்கவேண்டும். " 

அ : "அப்போ நான் ஒரு வழி சொல்கிறேன். முதலில் பாதி தொகையை நீங்க நான் குறிப்பிட்டுள்ள அக்கவுண்டுக்கு அனுப்புங்க. நான் போய் தடயங்களை எடுத்துக்கொண்டு வந்து இங்கே கொடுப்பதைவிட - உங்களுக்கு மிகவும் நம்பகமான ஆள் ஒருவரை என்னுடன் அனுப்புங்க. நான் தடயங்களை என்னுடைய அலுவலகத்திலிருந்து எடுத்து வந்து, அவரிடம் ஒப்படைக்கின்றேன். அவர் எல்லாவற்றையும் சரி பார்த்து, உங்களுக்கு ஃபோன் செய்து சொல்லட்டும். தகவல் கிடைத்ததும், நீங்க மீதி தொகையை அந்த அக்கவுண்ட்டுக்கு அனுப்பிடுங்க. மார்த்தாண்டம் சாரின் பதவி உயர்வுக்கு அமைச்சரிடம் சிபாரிசு செய்துவிடுங்கள். உடனடியாக ரீட்டா தற்கொலை செய்துகொண்டதாக ரிப்போர்ட் தயார் செய்து, மார்த்தாண்டம் சார் அறிக்கை வெளியிடுவார். நான் இங்கே வந்தது, பேசியது, நீங்கள் பேசியது எல்லாவற்றையும் நானும் மறந்துவிடுகிறேன்; நீங்களும் மறந்துவிடலாம் " 

பி ஏ அவருடைய பாஸிடம் பேசிய பிறகு இந்த யோசனைக்கு ஒப்புக்கொண்டார். 

அருணும் அந்த உதவியாளரும் வெளியே வந்தபோது ஒரு இன்னோவா, வோக்ஸ் வாகன், மற்றும் முதலில் பார்த்த அந்த நீல நிற BMW கார் மட்டுமே அங்கு இருந்தன. மற்ற கார்களைக் காணோம். முதலில் நின்றுகொண்டிருந்த அந்த  BMW கார் அருகே இருவரும் சென்றனர். 

அ : " கார் சாவியைக் கொடுங்க. நீங்க அனுப்புகின்ற நம்பகமான ஆள் யாரு? அவரை பின்னாலே உடக்காரச் சொல்லுங்க. அவருக்கு டிரைவிங் தெரியுமா, திரும்ப இந்தக் காரை நான் கொடுத்து அனுப்புகின்ற பொருள்களோடு பத்திரமாகக் கொண்டுவந்து உங்களிடம் கொடுத்துவிடுவாரா ? " 

பி ஏ : " சார் - இந்தக் கார் பாஸின் பையனுடையது. இந்தக் காரை அவரைத் தவிர வேறு யாரும் எப்பொழுதும் ஓட்டுவதில்லை. எங்களுக்கு அவரைவிட நம்பகமான ஆள் யாரும் கிடையாது. அவரே உங்களை உங்கள் அலுவலகத்தில் கொண்டு போய் சேர்த்து, நீங்கள் கொடுக்கின்ற பொருட்களை பத்திரமாகக் கொண்டுவந்து எங்களிடம் ஒப்படைத்துவிடுவார். " 

உள்ளேயிருந்து வந்த இளைஞனிடம் பி ஏ " அபி இவர்தான் அருண். போலீஸ் அதிகாரி. இவரைக் கொண்டுபோய் விட்டுவிட்டு இவர் கொடுக்கின்ற பொருட்களை வாங்கி, எல்லாம் லிஸ்ட்படி இருக்கிறதா என்று சரிபார்த்து, உடனே ஃபோன் செய். " 

அருண் நீட்டிய கையைப் பற்றி லேசாகக் குலுக்கிவிட்டு டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்தான் அபி. 

பக்கத்து சீட்டில் உட்காருவதற்காக முன் பக்கத்து கதவைத் திறந்த  அருணிடம், அபி, " இந்த சீட்டில் என்னுடைய ப்ரீஃப் கேஸ் வைத்துள்ளேன். நீங்கள் பின் சீட்டில் உட்கார்ந்து வரலாம். " 

கார் செல்லும்போது, மௌனமான சூழ்நிலையை மாற்ற அருண், அபியிடம் " உங்க முழுப்பெயரும் 'அபி'யா ? " என்று கேட்டான். 

அபி : " இல்லை - முழுப்பெயர் அபிமன்யு. கார் ஓட்டும்போது என்னுடைய முழு கவனமும் ஓட்டுவதில்தான் இருக்கும். அதனால் நான் கார் ஓட்டும்போது என்னிடம் எதுவும் பேசாதீர்கள்.  " 

அருண், ' அபி தன்னைப் பற்றி அதிக விவரங்கள் சொல்ல விரும்பவில்லை'  என்பதைத் தெரிந்துகொண்டான். அருண் மௌனமாக தன்னுடைய மொபைல் ஃபோன் செய்திகளைப் பார்த்தான். 

நடுவே திடீரென்று காரின் புளுடூத் ஸ்பீக்கரிலிருந்து ஒரு அழைப்பு. " அபீ - எங்கே இருக்கே? பிரச்சனை தீர்ந்ததா?" 

அபி : " மதி - டிரைவிங் பண்ணிக்கிட்டு இருக்கேன். அப்புறமா கால் பண்ணுகிறேன் " என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான். 

அருணின் மொபைல் போனுக்கு சில வாட்ஸ் ஆப் செய்திகள் வந்திருந்தன. 

அருண் அலுவலகத்தின் சிஸ்டம்ஸ் டிபார்ட்மெண்ட் அதிகாரி " சார் - நீங்க கேட்டுக்கொண்டபடி ரீட்டாவின் லாப்டாப்பில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தகவல்கள், மொபைல் போனில் இருந்த தகவல்கள் எல்லாவற்றையும் ஒரு 512 GB - மைக்ரோ எஸ் டி கார்டில் காபி செய்துவிட்டேன் "

அருண் பதில் செய்தி அனுப்பினான். " நன்றி. ரீட்டாவின் லாப்டாப், மொபைல் ஃபோன், ஏர் கண்டிஷனரிலிருந்து நாம் கைப்பற்றிய CV 235 காலி ஜாடி, மதிவாணன் பெயர் + விலாசம் காணப்படும் சீனக் கம்பெனி கடிதம், (மற்ற பெயர்கள் & விலாசங்கள்  வேண்டாம்) எல்லாவற்றையும் தயாராக எடுத்து வைக்கவும். "

அடுத்த செய்தி, ரீட்டாவின் பெரியம்மா மாதுரி அனுப்பியிருந்தது. 

" சார் - என்னுடைய அக்கவுண்ட்டுக்கு ஐம்பது லட்ச ரூபாய் கிரெடிட் ஆகியிருக்கிறது. " 

அருண் பதில் செய்தி அனுப்பினான். " நல்லது அம்மா - மேலும் ஒரு ஐம்பது லட்ச ரூபாய் உங்கள் அக்கவுண்ட்டுக்கு வரும். விரைவில் நீங்கள் - ' ரீமா ஆதரவற்ற பெண்கள் காப்பகம்' ஆரம்பிக்கலாம். வாழ்த்துகள். " 

அருணின் அலுவலகம் அருகே காரை நிறுத்தினான் அபி. அருண் எழுந்திருக்கும் முன்பு காரின் இருக்கைக்கும் சாயும் பகுதிக்கும் இடையில் தன்னுடைய பாண்ட் பையிலிருந்து எதையோ எடுத்து வைத்துவிட்டு எழுந்தான். 

அ: " அபி சார் - நான் உள்ளே போய் உங்க அப்பா சொன்ன எல்லாவற்றையும் எடுத்து வந்து கொடுக்கின்றேன். என்னுடைய மேலதிகாரியைப் பார்த்துப் பேசி அவரிடம் விவரமாக சொல்லி, தடயங்களை எடுத்துவரவேண்டும். அந்த சமயம் நீங்க என் கூட இருந்தால், அது உங்களுக்குப் பிரச்சனை ஆகிவிடும். நீங்க காரிலேயே இருங்க. நான் உள்ளே போய் பத்தே நிமிடங்களில் எல்லாவற்றையும் கொண்டு வந்து கொடுக்கின்றேன். நீங்க பொருள்களை சரிபார்த்து, உடனடியாக உங்க அப்பாவுக்கு ஃபோன் செய்யுங்க " 

அபி 'சரி' என்றான். 

**** 

உள்ளே சென்ற அருண், மார்த்தாண்டமிடம் , " சார் நீங்க சொன்னபடியே சுமுகமாக பிரச்சனையைத் தீர்க்கப் போகிறேன். நான் சேகரித்த தடயங்களை ஒருவரிடம் ஒப்படைக்கப் போகின்றேன். உங்களுக்கு பிரமோஷன் நிச்சயம் வந்துவிடும். " 

மா : " சரி அருண். என்ன செய்யவேண்டுமோ அதை செய்து முடி. எனக்கு ஆட்சேபணை இல்லை. " 

அருண் சிஸ்டம்ஸ் பகுதி அதிகாரியிடமிருந்து, தான் சொல்லியிருந்தவைகளை வாங்கி எல்லாவற்றையும் ஒரு பெட்டியில் போட்டு, அபியின் காரை நோக்கி நடந்தான். காபி செய்யப்பட்ட மைக்ரோ எஸ் டி கார்டை தன்னுடைய மேஜை டிராயரில் வைத்துப் பூட்டினான். 

அபி யாரிடமோ ஃபோன் பேசிக்கொண்டிருந்தான். அருண் வருவதைப் பார்த்ததும், பேச்சை முடித்தான். 

அ: " அபி சார். காரின் பின் கதவை unlock செய்யுங்க. உள்ளே வந்து இவைகளைக் கொடுக்கிறேன். " 

உள்ளே பின் சீட்டில் உட்கார்ந்த அருண், தான் கொண்டு வந்த பெட்டியை முன் சீட்டில் இருந்த அபியிடம் கொடுத்து, "பெட்டியைத் திறந்து எல்லாம் சரியாக இருக்கின்றதா என்று பாருங்க" 

அபி அவ்வாறே செய்தான். அபி சரிபார்த்துக்கொண்டிருந்த சமயம், அருண் தான் பின் சீட்டில் விட்டுச் சென்ற பொருளை (அது ஒரு சிறிய ரெகார்டிங் டிவைஸ்)  திரும்ப எடுத்து பையில் போட்டுக்கொண்டான். தன்னுடைய பாண்ட் பையிலிருந்து வேறு ஒரு பொருளை டிரைவர் சீட்டுக்குப் பின்னே இருந்த பவுச் பகுதியில் போட்டான். 

அபி : " எல்லாம் சரியாக இருக்கிறது. "

அ : " அப்பாவுக்கு ஃபோன் செய்து சொல்லுங்க" 

அபி ஃபோன் செய்து " எல்லாம் சரியா இருக்கு. மீதி பணத்தை அனுப்பிடலாம் " என்றான். 

அருண் நன்றி சொல்லி காரிலிருந்து இறங்கி, அலுவலகத்திற்கு திரும்பிச் சென்றான். 

மாதுரியிடமிருந்து மீண்டும் ஒரு வாட்ஸ் ஆப் செய்தி. " நன்றி சார். மேலும் ஐம்பது லட்ச ரூபாய் கிரெடிட் ஆகியிருக்கிறது. " 

அருண், " ரீ மா ஆதரவற்ற பெண்கள் காப்பகத்திற்கு வாழ்த்துகள் " என்று செய்தி அனுப்பினான். 

மேலதிகாரி மார்த்தாண்டமிடம் தனக்கு லீவு சொல்லிவிட்டு ஹைதராபாத் புறப்பட்டான். 

= = = = = = = =

ஹைதராபாத் ஆனந்தின் அலுவலகத்திற்கு சென்று, ஆனத்திடம் நடந்த எல்லாவற்றையும் சுருக்கமாக சொன்னான். " ஆனந்த் - இனிமேல் நீங்க ஃப்ரீ bird. நிம்மதியா, சந்தோஷமா இருங்க. இந்தாங்க நீங்க ஆர்டர் செய்து வாங்கிய CV235 காலி ஜாடி. இனி யார் கேட்டாலும், நீங்க வாங்கிய ஜாடியை சோதனைக்கு உபயோகித்ததற்கு சாட்சியாகக் காட்டலாம். " என்று சொன்னான். 

ஆ : " மிக்க நன்றி அருண். பெரிய உதவி செய்துள்ளீர்கள்.  மறக்கவே மாட்டேன். ஒரு சந்தேகம் கேட்கலாமா?" 

அ: " கேளுங்க" 

ஆ : " அவர்களிடம் நீங்க ஏன் உங்களுக்காக எதுவும் கேட்டு வாங்கிக்கொள்ளவில்லை?"

அ : " கொலை செய்யும் நோக்கத்தோடு நானும் CV235 விஷ ஜாடி வாங்கியதால், நானே எனக்கு அளித்துக்கொண்ட தண்டனை அது. "

ஆ : " நானும்தானே அப்படி கொலை செய்யும் நோக்கத்தோடு CV235 ஜாடி வாங்கினேன் ! " 

அ : " அதற்கு தண்டனையாக - நீங்க ரீட்டாவுக்கு அனுப்பிய பத்து லட்ச ரூபாய் - ரீ மா ஆதரவற்றப் பெண்கள் காப்பகத்திற்கு நன்கொடையாக எடுத்துக்கொள்ளப்பட்டது ! மேலும் ரீ மா ஆ பெ கா விற்கு இனிமேல் நீங்க இலவசமாக பிசினஸ் கன்ஸல்டன்ஸி ஆலோசனைகள் சொல்லவேண்டும். நான் அந்த காப்பகத்திற்கு காவல்துறையிலிருந்து ஏதாவது உதவிகள் தேவை என்றால் அதை செய்துகொடுப்பேன்." 

ஆ : " இன்னும் ஒரே ஒரு சந்தேகம் " 

அ : " அதையும் கேளுங்க " 

ஆ : " நான் வாங்கிய CV235 ஜாடியை என்னிடம் கொடுத்துட்டீங்க - மதிவாணன் வாங்கிய CV235 ஜாடியை அபியிடம் திருப்பிக் கொடுத்துட்டீங்க. நீங்க வாங்கிய அந்த மூன்றாவது ஜாடி எங்கே?" 

அ : " அதை,  கை தவறி  அபியின் கார் டிரைவர் சீட்டுக்குப் பின்னே உள்ள பவுச்ல போட்டுட்டேன். கார் சர்வீசிங் செய்யும்போது அதிலே தண்ணீர் விழ வாய்ப்பு இருக்கு." 

= = = = = = = = = = = = = = =

பின் குறிப்பு : கதையில் வந்த பெயர்கள் (CV235 உட்பட ) சம்பவங்கள், கார், எல்லாமே  நூறு சதவிகிதம் கற்பனையே. 

= = = = = = = = = = = =

இந்தக் கதை சம்பந்தமாக மின்நிலா பத்திரிக்கையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அதிகபட்சம் சரியான பதில்கள் எழுதிய கே சக்ரபாணி, பதிமூன்றாம் பகுதி பின்னூட்டத்தில் அருணுக்கு ஆலோசனை சொன்ன கோமதி அரசு, கமலா ஹரிஹரன் ஆகியோருக்கு பரிசு உண்டு. 

பரிசுத் தொகையை எந்த மொபைல் எண் அல்லது அக்கவுண்ட்டுக்கு அனுப்பவேண்டும் என்பதை 9902281582 (குரல் அழைப்புகள் வேண்டாம்) என்கிற - கௌதமன் எண்ணிற்கு SMS அல்லது வாட்ஸ் ஆப் மூலமோ அல்லது engalblog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பவும். 

நன்றி. 

= = = = = = = = = = = = = = = =

பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். 

= = = = = = = = = = = =

கதை சம்பந்தமாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கருத்துரைப் பகுதியில் பதிவு செய்யுங்கள். உடனுக்குடன் பதில் கொடுக்கப்படும். நன்றி. 

= = = = = = = = = =

57 கருத்துகள்:

  1. கதை கதையாகத்தான் இருக்கிறது. திடீர் திருப்பங்களுக்காக எப்படி எப்படியோ கதையை கொண்டு சென்று முடித்து வைத்தீர்கள்.
    கதை எனக்கு பிடிக்கவில்லை. இப்படி சொல்வதற்கு மன்னிக்கவும்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் திறந்த கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. கதை எனக்கு பிடிக்கவில்லை// ஏன் பிடிக்கவில்லை என்பதை சொன்னீர்கள் என்றால் தெரிந்து கொள்வேன்.

      நீக்கு
    3. திடீர் திருப்பங்களுக்காக எதையும் எழுதவில்லை. ஒரு கோணத்தில் கதையை ஆரம்பித்து, வாசகர்களை நடத்திச் சென்று, அதை வேறு ஒரு கோணத்தில் முடித்திருக்கிறேன்.

      நீக்கு
  2. பரிசு பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை எவ்வளவு போய்ச் சேரும் என்று வாசகர்களுக்குத் தெரியப் படுத்தலையே?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் சொல்வார்கள் என்று எதிர்பார்ப்போம்!

      நீக்கு
  3. அருண் அந்த அரசியல் பிரமுகர் வீட்டில் நுழைந்ததும் வரும் இரண்டாவது வரி:
    அ வை: "சரி சார்"
    மேலே குறிப்பிட்டதில்
    அ வை -- என்றால் என்ன?
    அல்லது அது யாரைக் குறிக்கிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழைத்து வந்தவர். அ வ என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்!

      நீக்கு
  4. ஒரு கதையை எழுதினால் தர்ம நியாயம் வேண்டாமா?
    சொல்லப் போனால் கதை -- கற்பனை எல்லாம் மனசாட்சியை விற்காமல் நியாயத்திற்கு சப்போர்ட் பண்ணத் தானே?
    இப்படி முடித்து விட்டு கூலாக இருக்கிறீர்களே!
    எப்படி இதெல்லாம் சாத்தியமாகிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :)))) இதில் எங்கே தர்மம் + நியாயம் காணாமல் போயிருக்கு? நடைமுறையில் நடப்பதைதானே எழுதியிருக்கிறேன்!

      நீக்கு
  5. காலைவணக்கங்கள்

    கதையை முடித்து விட்டீர்கள்.
    நன்றி.
    இனிமேல். ஏதேனும் கதை போடுவதென்றால் நல்ல
    கருத்துள்ள சுவையான
    கதையைத்தான் போடுவீர்கள்
    என்ற நம்பிக்கையுடன்

    கே. சக்ரபாணி
    சென்னை 28

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சக்ரபாணி சார்.... சக்ரபாணி கோவிலுக்கு எதிர் வீடு உங்களுடையதா ?உங்கள் பெயர் சொல்லி விசாரித்தால் சொல்வார்களா?

      நீக்கு

      நீக்கு
  6. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. யதார்த்தமான கதை...

    இன்னும் பல கதைகளை எழுத் வேண்டும்..

    சிறப்பு...

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. கதையை நன்றாக முடித்து வைத்தீர்கள்.
    அருண் ரீட்டாவின் பெரியம்மாவுக்கு பணம் கிடைக்கும் படி செய்து பிராயசித்தம் தேடி கொண்டார்.

    பெரியம்மா பெண்கள் காப்பகம் நடத்தி மன ஆறுதலை அடைய வேண்டியதுதான்.

    //அ : " அதை, கை தவறி அபியின் கார் டிரைவர் சீட்டுக்குப் பின்னே உள்ள பவுச்ல போட்டுட்டேன். கார் சர்வீசிங் செய்யும்போது அதிலே தண்ணீர் விழ வாய்ப்பு இருக்கு." //

    கை தவறியா சட்டப்படி குற்றவாளியை தண்டிக்க முடியவில்லை, இப்படியாவது நடக்கட்டும்.

    கதை சில வருடங்களுக்கு முன் நாடக நடிகை இறப்பு ஒன்று எப்படி இறந்தார் என்று தெரியாமலே முடிந்து விட்டதே! அதை நினைவூட்டியது. அதிலும் அரசியல் பிரமுகர் இடம்பெற்றதாய் செய்தி.

    //அருணுக்கு ஆலோசனை சொன்ன கோமதி அரசு, கமலா ஹரிஹரன் ஆகியோருக்கு பரிசு உண்டு.//

    நீங்கள் சொன்னதே போதும் . நன்றி.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி. பரிசு வேண்டாம் என்று சொல்லாதீர்கள்.

      நீக்கு
  11. தேர்ந்த எழுத்தாளர் என்பதை நிரூபித்து விட்டீர்கள் Kudos! 👏💐
    வழக்கமான எ.பி. கதை பாணியிலிருந்து மாறி வித்தியாசமான கதையைத் தந்ததற்கு பாராட்டுகள்! அடுத்த பாக்கெட் நாவல் எப்போது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாடி ! ஒரு ஆறுதலான கருத்து! நன்றி. உங்கள் ஆசீர்வாதம் இருந்தால் மேலும் சில கதை முயற்சிகள் செய்வேன். செவ்வாய் slot கிடைக்கவில்லை என்றால், புதன் கிழமைகளில்!

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    கதையை இறுதியில் சுவாரஸ்யமாக முடிப்பேன் என்று நீங்கள் சொன்னது போல் மிகவும் அருமையாக முடித்துள்ளீர்கள். ஒரு சஸ்பென்ஸ் திரைப்படம் பார்த்தது போன்ற திருப்தி எழுகிறது. இது போன்ற கதைகளை இனியும் தொடர்ந்து எழுதுங்கள்.

    அருணிடம் ஆனந்த் கேட்ட சந்தேகம் போல், எனக்கும் ஒரு சந்தேகம். அருணை ஏற்றிக் கொண்டு கார் சென்று கொண்டிருக்கையில் அந்த அபி "மதி நான் இப்போது காரை டிரைவ் செய்து கொண்டிருக்கிறேன் பிறகு பேசலாம்" என்றானே..! அது அருணின் சந்தேகத்தை மேலும் தூண்டி ஏற்படுத்தாமல் இருக்கவா ? தான் வேறு, மதி வேறு என சுட்டிக் காட்டவா? இதுவும் அந்த அ. பியின் ஏற்படா? இல்லை அந்த பி. ஏவின் ஆலோசனையா?

    கதை நகர்வு நன்றாக உள்ளது. ரீட்டாவின் பெரியம்மாவுக்கு அருண் உதவி செய்ததும் தன் மேலதிரிகாரிக்கு பிரமோஷன் வாங்கித் தந்ததும் நல்ல செயல். தனக்குத்தானே ஒரு தண்டனை கொடுத்துக் கொண்டதும், குற்றவாளியும் ரீட்டா அடைந்த முடிவை அடைய அதே தண்டனையை சந்தேகத்திற்கு இடமின்றி தந்ததும் நல்ல முடிவு. அந்த கால ஜேம்ஸ் பாண்ட் கதைகளை பார்த்த திருப்தி வந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான, பாராட்டுகளுடன் கூடிய கருத்துரைக்கு நன்றி. (மதிவாணன் - அபியின் பினாமி. மலேசியாவில் இருக்கிறார். சில நிழலான வேலைகளுக்கு மதிவாணன் பெயர் + அக்கவுண்டை பயன்படுத்திககொள்கிறார்கள் அரசியல் பிரமுகரும் அவர் மகனும். பி ஏ இவர்களின் அடியாள் போன்றவர். )

      நீக்கு
    2. சரி. சரி புரிந்து கொண்டேன். நல்ல ஊகத்துடன் சுவாரஸ்யமாக கதையை எழுதியுள்ளீர்கள். விளக்கம் தந்தமைக்கு நன்றி சகோதரரே. தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.

      நீக்கு
    3. கமலாக்கா ஹாஹாஹா உங்க டவுட்....அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா அதான் பினாமி!!! மதிவாணன்....யதார்த்தத்தில் அதுதானே நடக்கிறது!!!

      கௌ அண்ணா இந்தக் கதைய சினிமாவா எடுத்தா என்னை அஸிஸ்டன்ட் டைரக்டராவாச்சும் போட்டா நல்லாருக்கும்!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    4. டைரக்டர் பொறுப்பே உங்களுக்குத்தான்!

      நீக்கு
    5. ஆமாம்.. இந்த கதையை ஒரு சினிமா படமாக்கலாம். டைரக்டர் சகோதரி கீதா ரெங்கன் என்றால், அதில் எனக்கென்ன வேடம். அந்த பெரியம்மாவா? ஹா ஹா ஹா.

      நீக்கு
  13. கௌ அண்ணா கதையின் இப்பகுதி முடிவு ஹைலைட்!!!! இப்பகுதி நல்லா முடிச்சிருக்கீங்க. கிட்டத்தட்ட சினிமாட்டிக் என்றாலும், - எது சினிமாட்டிக் என்றால் கடைசியில் அருண் காரில் அந்த ஜாடியை விடுவது , பேரம் பேசுவது - பேரம் பேசுவது கூட ஓகே....நல்லாவே இருக்கு.

    நான் நிஜமாகவே நினைத்தேன் அருண் ஏதோ ஒரு வகையில் கண்டிப்பாக அந்த அபி யை போட்டுத் தள்ளப் போகிறான் என்று ஆனால் இப்படி யூகிக்கவில்லை.
    அவனால் நேர்மையை நிலைநாட்ட முடியலை,,,அதானே யாதார்த்தம்!!!!!! ஹிஹிஹிஹி...
    யதார்த்தத்திலும் இப்படியான நல்ல காரியத்துக்கு பேரம் பேசுவது நடந்தா நல்லாருக்கும். தன் பாக்கெட்டுக்குத்தானே பேரம் பேசுவாங்க!!!!

    கோமதிக்கா, கமலாக்காவுக்கு வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ! பாராட்டுகளுக்கு நன்றி. வாழ்க வளமுடன்!

      நீக்கு
    2. /கோமதிக்கா, கமலாக்காவுக்கு வாழ்த்துகள்!/

      உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    /இந்தக் கதை சம்பந்தமாக மின்நிலா பத்திரிக்கையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அதிகபட்சம் சரியான பதில்கள் எழுதிய கே சக்ரபாணி, பதிமூன்றாம் பகுதி பின்னூட்டத்தில் அருணுக்கு ஆலோசனை சொன்ன கோமதி அரசு, கமலா ஹரிஹரன் ஆகியோருக்கு பரிசு உண்டு. /

    நன்றி. நன்றி. நீங்கள் தரும் பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவளாக வந்திருப்பதை கண்டு மிகப் பெருமையடைகிறேன். உங்களது வார்த்தைகளையே ஒரு சகோதரர் தன் சகோதரிக்கு தரும் தீபாவளி பரிசாக ஏற்றுக்கொள்கிறேன். நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. கௌ அண்ணா நிஜமாகவே கதை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. செவ்வாய் பகுதிக்கு வித்தியாசமான கதை. உங்கள் கற்பனையும் நல்லாவே இருக்கு. நல்லா யோசிச்சிருக்கீங்க அதுவும் அருண் வந்த பிறகு....இன்வெஸ்டிகேஷன் பகுதி....லூப் ஹோல்ஸ் ரொம்ப விசிபிளா இல்லாம இருக்கணுமே!!!! அது நல்லா செய்திருக்கீங்க கௌ அண்ணா.

    உரையாடல்களை மட்டும் கொஞ்சம் பேச்சுத் தமிழ்ல எழுதுங்களேன் நல்லாருக்கும்.

    கண்டிப்பாக சமீபத்திய இளம் இயக்குநர்களுக்கு நல்ல பட வாய்ப்பைத் தரும் ஒரு கதைக்கரு (க்ளிஷேன்னு கருத்து வந்தாலும் எடுக்கும் விதத்தில் எடுத்தால் நல்லாருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து...முடிவு நல்லா பொருந்திப் போகும். சில படங்களில் ஹீரோ அப்படித்தானே செய்வார் பேசி முடிப்பது போல முடித்து கடைசில தன் மனசாட்சியை கொண்டுவந்துவிடுவாரே!!). ஆனா பாருங்க இப்ப முடிவு தெரிஞ்சுருச்சே!! யாராச்சும் டைரக்டர் இத வாசிச்சு கேட்டாங்கனா கதைய எடுத்திருங்க இங்கருந்து!!!!!!!!!!! ஹாஹாஹாஹா

    பார்ட் 2 வுக்கு வித்திடும் முடிவு. ஏன்னு கேட்கறீங்களா?!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // உரையாடல்களை மட்டும் கொஞ்சம் பேச்சுத் தமிழ்ல எழுதுங்களேன் நல்லாருக்கும்.// இந்தப் பகுதியில் அதை முயற்சி செய்துள்ளேன். எதிர்கால முயற்சிகளுக்கு இந்த யோசனையை கவனத்தில் வைக்கின்றேன். நன்றி.

      நீக்கு
    2. ஆமாம் கௌ அண்ணா நீங்க முயற்சி செய்தது தெரிகிறது. இந்த மாதிரி கதைகள் பேச்சு நடையில் இருந்தா களை கட்டும்! இடையிடையே ஆங்கில வார்த்தைகளும் கலந்து!!! trendy ஆக!!!!

      நாமளும் சின்னபசங்கதானே கௌ அண்ணா!!! என்ன சொல்றீங்க!

      கீதா

      நீக்கு
  16. அந்த அப்பா அரசியல்வியாதி சும்மாருக்குமா? தன் மகனைப் போட்டவன் யாரா இருக்கும்னு தேடி ஆப்பு வைக்கமாட்டான்? அருண் மேல ஒரு கண் கண்டிப்பா இருக்கும்...அருண் அங்கு சொல்கிறானே யாரெல்லாம் அந்த சீனா விஷ ஜாடியை வாங்கினாங்கன்னு தெரிந்து கொண்டதாக!!

    //அருண் : " அது சீனாவிலிருந்து வந்த ஜாடி என்பதை அதன் மீதில் இருந்த சீன எழுத்துகளை வைத்துக் கண்டுபிடித்தேன். அந்த சீன கம்பெனியிடமிருந்து அதை யார் வாங்கினார்கள் என்று தெரிந்துகொண்டேன். " //

    அது போல அந்த அரசியல்வியாதி அப்பாவும் அந்த லிஸ்ட் பார்த்து ....ஸோ பார்ட் 2 அந்த அரசியல் வியாதிக்கும் அருணுக்குமான யுத்தமாக இருக்குமோ!!??

    கீதா

    பதிலளிநீக்கு
  17. ஸ்ரீ ராம் சார் அவர்களுக்கு
    இனிய காலை வணக்கங்கள்.

    தாங்கள் தற்போது கும்பகோணத்தில் இருக்கிறீர்களா.

    என் வீடு சக்ரபாணி கோயில் அருகில் இல்லை. நான் சென்னையில் தான் இருக்கிறேன். அவ்வப்போது
    பெங்களூருவில் என் மகள்
    வீட்டிற்கு வருவேன்.
    கும்பகோணத்தில் என். இரு
    இளைய சகோதரர்கள் ரெட்டி
    ராயர்குளம் கிழக்கு மற்றும்
    தென்கரையில் குடியிருக்கிறார்கள். நான்
    வருடம் ஒருமுறை கும்பகோணம் செல்வேன்.

    நன்றிகள்

    கே. சக்ரபாணி
    சென்னை 28

    பதிலளிநீக்கு
  18. கௌ அண்ணா, படத்துல அந்த அபி, ஃபேமஸ் இளம் மந்திரி போல இருக்குதே!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ. மீட்டா செய்த மாயம் ! எனக்கு ஒன்றும் தெரியாது..

      நீக்கு
  19. வித்தியாசமானகதை .பாத்திரங்களுக்கு ஏற்ற முடிவாக முடித்துவிட்டீர்கள்.

    பரிசு பெற்ற கோமதிஅரசு,கமலா ஹரிஹரன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்...

    இது நியதி..

    இன்றைய சூழலில் மசாலா பிரியாணியைத் தின்று விட்டு எங்காவது மயங்கிக் கிடந்தால் -

    திருமறைக்காட்டில் விளக்கினை எலி தூண்டி விட்ட மாதிரி தூண்டி விட்டால் போதும்...

    அதுக்கு அப்புறம் ஊழானது கூழைக் காய்ச்சி குற்றவாளி தலையில் ஊற்றி விடும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இன்றைய சூழலில் ஊழ் வினையானது - மசாலா பிரியாணியைத் தின்று விட்டு.. //

      நீக்கு
  21. பொற்கிழி பரிசு பெற்ற கோமதி அரசு, கமலா ஹரிஹரன் ஆகியோர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /பொற்கிழி பரிசு பெற்ற கோமதி அரசு, கமலா ஹரிஹரன் ஆகியோர்களுக்கு வாழ்த்துகள்./

      உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      ஆ.... பொற்கிழியா? அவசரப்பட்டு பரிசு வேண்டாமென கூறி விட்டேனோ? ஹா ஹா ஹா. நன்றி

      நீக்கு
  22. கதை முடிந்தது... கத்திரிக்காய் காய்த்தது! :)

    இவரைப் போலவே அந்த அரசியல்வாதியும் இவரைத் தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டியிருப்பார்கள் - அது தானே இப்போது நடக்கிறது!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!