சனி, 19 அக்டோபர், 2024

ரத்ததானம் மற்றும் நான் படிச்ச கதை

குடும்ப உறுப்பினர்கள் சிலர் 100 முறைக்கும் மேல் ரத்ததானம் அளித்திருப்பது பிரமிக்க செய்கிறது.  குஜராத்தைச் சேர்ந்த ஒரு கூட்டுக் குடும்பம் இதுவரை 630 லிட்டர் ரத்ததானம் அளித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.  44 வயதாகும் பட்டேலின் குடும்பத்தில் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த 16 பேர் 50-க்கும் மேற்பட்ட முறை ரத்ததானம் அளித்துள்ளனர். குறிப்பாக டாக்டர் பட்டேல் குஜராத்தில் 100 முறைக்கும் மேல் ரத்ததானம் அளித்தவர்கள் பட்டியலில் இளம் வயதில் சேர்ந்தவராக இணைந்துள்ளார்.  இதுவரை 98 முறை ரத்ததானம் அளித்துள்ள பட்டியலின் தந்தை அசோக் பட்டேல் 72 வயது, தாயார் சகுந்தலா 71 வயது தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றனர்.  இந்தியாவில் 65 வயதுக்கு மேல் ரத்த தானம் செய்ய முடியாது.  இந்நிலையில் பட்டேலின் பெற்றோர் ஒரு வாரத்திற்கு முன் அமெரிக்கா சென்ற ரத்ததானம் அளித்து வந்துள்ளனர் என்ற தகவலும் நம்மை சிலிப்படைய செய்கிறது. இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டவர் டாக்டர் பட்டேலின் மூத்த பெரியப்பாவாண ரமேஷ்  படேல்.....

======================================================================================================================================================

வாட்ஸாப்பில் வந்த பாஸிட்டிவ் செய்தி 



=========================================================================================================================================================

அடுத்த தலைமுறை ராக்கெட் தயாரிக்கிறது 'இஸ்ரோ'



பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, சில திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பாக, சந்திராயன் - 4 திட்டம்; நிலவில் இறங்கி, அங்கு மணல் எடுத்து, மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்யும் முயற்சி.  அடுத்த கட்டமாக, வீனஸ் கோளிற்கு செயற்கைக்கோளை ஏவுவது. அது வித்தியாசமான கோளாகும். அங்கு வெப்பநிலை 420 டிகிரி செல்ஷியஸிற்கு மேல் இருக்கும்.  மத்திய அரசு வழிகாட்டுதல்படி புதிய திட்டங்களுக்காக, நிறைய முயற்சிகளை செய்கிறோம். குறிப்பாக, என்.ஜி.எல்.வி., எனும், 'நெக்ஸ்ட் ஜெனரேஷன் லாஞ்ச் வெகிகிள்' எனப்படும் ஏவு வாகனத்திற்கு, திரவ ஆக்சிஜன், மீத்தேனை பயன்படுத்தக்கூடிய, 110 டன் உந்துசக்தி தரக்கூடிய இன்ஜினை வடிவமைத்து வருகிறோம்.  இந்த ராக்கெட்டை, எல்.பி.எஸ்.சி., விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், மகேந்திரகிரி ஐ.பி.ஆர்.சி., ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையம் இணைந்து தயாரிக்க துவங்கியுள்ளோம்.  இந்த ராக்கெட்டின் முதல்நிலை திரவ ஆக்சிஜன், மீத்தேனில் இயங்கக் கூடியது. 110 டன் உந்துசக்தி திறன் கொண்ட ஒன்பது இயந்திரங்களை பயன்படுத்தி இயங்கக் கூடியது. 2வது நிலை, 120 டன் உந்துசக்தி, திரவ ஆக்சிஜன், மீத்தேனுடன் 2 இன்ஜின்களை வைத்து இயங்கும்.  3வது நிலை புதிதாக உருவாக்கப்பட்ட சி 32 கிரையோஜெனிக் இன்ஜினால், திரவ ஆக்சிஜன், திரவ ஹைட்ரஜனால் இயங்க செய்வது.  இதில் எரிபொருள் கொண்ட இரு உறுப்பு கலன்கள் உண்டு. ஒவ்வொன்றிலும் 160 டன் திட நிலை எரிபொருள் கொண்ட, சாலிடு மோட்டாரை பயன்படுத்த உள்ளோம். இந்த சக்தி வாய்ந்த ராக்கெட்டை, மீண்டும் மீண்டும் 15 முறை பயன்படுத்தும் வகையில் தயாரிக்க உள்ளோம்.  இதன்மூலம் அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களை அனுப்ப முடியும்; மனிதர்களை அனுப்ப முடியும். 2035ல் இந்தியா உருவாக்க உள்ள விண்வெளி ஆய்வு மையத்திற்கும் செல்ல முடியும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ கீழ் செயல்படும், திருவனந்தபுரம் வலியமலாவில் உள்ள, திரவ உந்துசக்தி அமைப்பு மையமான, எல்.பி.எஸ்.சி., இயக்குனர் நாராயணன், தினமலருக்கு  அளித்த சிறப்பு பேட்டி.

=============================================================================================================================================================

 நான் படிச்ச கதை (JKC )

கதை ஒன்று ; ஆசிரியர்கள் இரண்டு ; புனைவுகள் மூன்று.

பகுதி 1/2

முன்னுரை

இன்றைய பதிவு ஒரு வெட்டி ஆராய்ச்சி. புராணக்கதைகளை  ஒவ்வொரு ஆசிரியரும்  எப்படி அவருடைய விருப்பத்திற்கேற்றபடி கதையை வளைத்துக் கொண்டு சென்று, அவர் விரும்பிய முடிவில் முடிக்கிறார்கள்  என்பதைச் சுட்டிக்காட்டும் ஒரு வெட்டி ஆராய்ச்சி.  

வாசகர்களுக்கு அஹல்யா என்ற அகலிகையின் கதை தெரிந்திருக்கும். ராமாயணத்தில் வரும் ஒரு சிறு நிகழ்வின் கிளைக்கதையான அகலிகையின் கதை (ஒரு கதை) எப்படி புதுமைப்பித்தன், மற்றும் தற்கால எழுத்தாளர் வையவன் (இரண்டு ஆசிரியர்கள்) ஆகியோர் கையாண்டிருக்கிறார்கள் என்பதை இக்கட்டுரையில் விளக்க விரும்புகிறேன்.

மணிக்கொடி எழுத்தாளர் புதுமைப்பித்தனின் அகல்யை”, மற்றும் சாபவிமோசனம்என்ற இரு கதைகளும், அவரின் பின்காமியான தற்போதைய எழுத்தாளர் வையவனின் சரயுஎன்ற கதையும் (ஆக மூன்று புனைவுகள்) இங்கு ஆராயப்படுகின்றன.

முதலில்  நமக்குத் தெரிந்த அகல்யை கதை வடிவத்தை சுருக்கமாகப் பார்ப்போம். 

அகல்யை

தேவலோகத்து ஊர்வசிக்கு அழகி என்ற கர்வம் நிறைய இருந்தது. மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மா அவளுடைய கர்வத்தை அடக்க  தன் கையாலேயே செதுக்கி செதுக்கி உண்டாக்கிய பெண் தான் அகல்யை.  என்றும் 16 வயது  என்ற வரத்தையும் பெற்றவள். கௌதமரின் மனைவியானாள். 

கௌதம முனிவர் தனது மனைவி அகலிகையுடன் ஒரு நதிக்கரையில் ஒரு ஆசிரமத்தைப் பணித்து அந்த ஆசிரமத்தில் வசித்து வந்தார்.  இந்திரன் அகலிகையைக் கண்டு அவள் மீது மோகம் கொண்டான்.. அகலிகையை அடைய விரும்பிய இந்திரன் ஒரு சதி செய்தான். நள்ளிரவில்  இந்திரன் சேவலாக மாறி கூவினான். கௌதம முனிவர் விடிந்து விட்டது என்று ஆற்றுக்குக் குளிக்கச் சென்றார்.  

அச்சமயம்  கௌதம முனிவர் போல் உருவம் மாறி இந்திரன் ஆசிரமத்தில் நுழைந்து அகலிகையை கூடினான். அதே சமயம்  கௌதம முனிவர் ஆசிரமத்திற்குத் திரும்பி வந்து விட்டார். இந்திரனின் செயலைக் கண்டு கோபம் அடைந்தார். அகலிகையைக் கல்லாகும்படி சபித்தார். இந்திரன் உடல் முழுதும் பெண்குறியாவது என்றும் சபித்தார். ப்ரம்மா கேட்டுக்கொண்டபடி சாபத்தைக் கொஞ்சம் திருத்தி ஆயிரம் கண்கள் ஆகட்டும் என்று திருத்தம் செய்தார். (ப்ரஹ்மா கௌதமரின் மாமனார்).  

ஸ்ரீ ராமன் விஸ்வாமித்திரருடன்  கானகத்தில் செல்லும்போது அவருடைய கால் பாதம் பட்டு அகல்யை சுய உருவைப் பெற்றாள். சாப விமோசனம் அடைந்தாள்.

இந்திரன் சாப விமோசனம் பற்றிய கதை பல பல வடிவங்களில் உள்ளன. ஒன்று கீழே. 

[விமோசனம் பெற வேண்டுமென்றால் மணலால் லிங்கம் செய்து அதனை அபிஷேகம் செய்து வழிபடுமாறு சிவபெருமான் இந்திரனிடம் கூறினார். மணலால் செய்த லிங்கத்தில் அபிஷேகம் செய்ய முடியாமல் பல காலம் வேதனை அனுபவித்து வந்தான்  இந்திரன்.

பின்னர் நீண்ட நாளாகச் சாபத்தின் காரணமாகக் கானக வாழ்வில் சிக்கிய இந்திரனுக்குச் சிவபெருமான் சாப விமோசனம் கொடுத்தார்.

கைச்சினேஸ்வரர் கோயில் இந்திரன் சாப விமோசனம் பெற்ற தலம்!

திருவாரூர் மாவட்டத்தில் கச்சினம் என்ற பகுதியில் அமைந்துள்ளது கைச்சினேஸ்வரர் திருக்கோயில்.]

இனி ஒவ்வொரு கதையின் சுருக்கத்தையும், அவை எவ்வாறு மாறுபட்ட வடிவங்களை, முடிவுகளைப் பெறுகின்றன என்பதையும் காண்போம்.

இந்தக் கதையில் அகல்யைப் பற்றியும் அவள் இந்திரனிடம் கற்பிழந்ததையும் சொல்லும் புதுமைப்பித்தன், கதையின் முடிவில் முனிவர் அகல்யை மீது பரிதாபப்படுவதாகக் காட்டுகிறார். கதை சுருக்கமாக அவருடைய வாக்குகளில்.

வேதகாலம்

சிந்து நதி தீரத்திலே… (கவனிக்கவும். இது அடுத்து வரும் சாப விமோசனம் கதையில் சரயு நதி தீரத்திலே என்று ஆகிவிடும்)

அங்கே கௌதமருடைய வாசஸ்தலம்… சற்று காட்டின் உள்ளே தள்ளி. சிந்துவின் கரைக்கும் குடிசைக்கும் கூப்பிடு தூரம்…..சமூகத்தைவிட்டு விலகித் தமது பத்தினியுடன் இங்கு வசித்து வருகிறார்.

வர் மனைவி – அவள் தான் அகல்யை….அவள் கற்புள்ளவளாக இருந்ததில் ஆச்சரியமில்லை. அவர் அவளுடைய இலட்சியம். அதனால், அவள் கற்புடன் இருந்ததில் என்ன அதிசயம்.

ஒரு நாள் சாயங்காலம். அகல்யை குடிசைக்குள்ளிருந்து குடத்தை இடுப்பில் ஏந்தியவண்ணம் வெளிமுற்றத்திற்கு வருகிறாள்.

அவள் வெகு வேகமாக நதியை அடைகிறாள். உடைகளைத் துவைப்பது, குடத்தைத் தேய்ப்பது – எல்லாம் வெகு துரிதமாக நடக்கின்றன.

உடைகளையெல்லாம் களைந்து பாறையின் மீது வைத்துவிட்டு நீரில் குதிக்கிறாள். அந்தக் குளிர்ந்த நீரில் நீந்தி விளையாடுவதில் என்ன இன்பமோ! ஆழமான சிந்துவில் முக்குளிப்பதும், மறுபடியும் பாறையில் ஏறிக் குதித்து நீந்துவதுமாக அதிலேயே லயித்துப் போய் விட்டாள்.

அப்பொழுது எங்கிருந்தோ இந்திரன் எதிர்க் கரையில் வந்தான். அகல்யையின் கட்டழகு அவனைக் கல்லாகச் சமைத்தது; வைத்த கண் மாறாமல் பார்க்கும்படி செய்தது.

அகல்யா ஒரு பாறையின் பக்கத்தில் மறைந்து உடைகளைச் சீக்கிரம் அணிந்துகொண்டு, குடத்தில் தண்ணீருடன் வெகு வேகமாகக் கரையேறிச் சென்றுவிடுகிறாள்.

இந்திரன் மனத்தில் அவளை அடையவேண்டும், அடையவேண்டும் என்ற ஒரே எண்ணந்தான். அவள் யார், தான் செய்யப் புகுந்தது என்ன என்று எண்ண மனத்தில் இடமில்லை.

இந்திரன் ஒரே தடவையில் தனது எண்ணம் ஈடேறச் சமயம் எதிர்ப்பார்த்திருந்தான்.

இந்திரன், தனது பைசாச உணர்ச்சியைப் பூர்த்தி செய்துகொள்ள எப்பொழுது சமயம் கிடைக்கும் என்று சுற்றி வருகிறான்.

விடியற்காலம் என்று கௌதமரை நினைக்கும்படி செய்து அவரை அப்புறப்படுத்தி விட்டால் ஆசை பூர்த்தியாகும்.

நடு நிசி, சந்திரனற்ற வானம், வெள்ளி மட்டும் கொஞ்சம் பிரகாசமாக, விடியற்காலம் என்று நினைக்கும்படி மங்கிய வெளிச்சத்தைத் தருகிறது. இந்திரன் கோழி மாதிரிக் கூவுகிறான்…..கோழியின் குரல் கேட்டதும் காலைக் கடனைக் கழிக்க எழுந்து சிந்துக் கரைக்குச் செல்லுகிறார். அன்று நெடுநேரமாகத் தூங்காததினால் அகல்யைக்கு அயர்ந்த தூக்கம்.

ஒரு மிருகத்தின் வேட்கை அன்று பூர்த்தியாயிற்று.

பாதிக் கனவு – உலகத்திலிருந்த அகல்யை விழிக்கவில்லை. கணவர் என்று நினைத்துத் தழுவுகிறாள். ஓரளவு இயற்கையின் வெற்றி….ஐயோ, அந்தச் சண்டாளன்! எல்லாம் சுழலுகிறது. ஒன்றும் அர்த்தமாகவில்லை. சொந்த வீட்டிற்குள் இவன் எப்படி…?

பக்கத்திலிருந்த தடியால் அவன் மண்டையில் அடித்து உதறித் தள்ளிவிட்டு, ஒரு புறம் கிடந்து புரண்டு துடிக்கிறாள்.

இந்திரனுக்குச் சுய அறிவு வருகிறது. தன் பைத்தியக்காரத்தனம், தன் மிருகத்தனமான கொடுமை!…அவன் உள்ளமே வெடித்துவிடும் போல் இருக்கிறது!

நதிக்குச் சென்ற கௌதமர் இன்னும் விடியாததைக் கண்டு, ஏதோ சூது நடந்திருக்கிறதென்று விரைந்து வருகிறார்.

உள்ளே சரேலென்று நுழைந்ததும், அகல்யை கிடக்கும் கோலத்தில், காரியம் மிஞ்சிவிட்டது என்று அறிந்தார். உடனே தம் மனைவியை வாரி எடுக்கிறார். தீயில் பட்ட புழுப்போல் அவள் உடல் துடித்துப் பதறுகிறது.

குற்றத்தின் பாரமே உருவாக இந்திரன் நிற்கிறான். “அப்பா இந்திரா! உலகத்துப் பெண்களைச் சற்று சகோதரிகளாக நினைக்கக் கூடாதா?”

“கண்ணே அகல்யா, அந்தச் சமயத்தில் உனது உடலுமா உணர்ச்சியற்ற கல்லாய்ச் சமைந்துவிட்டது?” என்று அவள் தலையைத் தடவிக் கொடுக்கிறார்.

அவர் மனத்தில் ஒரு சாந்தி.

ஒரு புதிய உண்மை:

‘உணர்ச்சி தேவனையும் மிருகமாக்கிவிடுகிறது. மனத் தூய்மையில்தான் கற்பு. சந்தர்ப்பத்தால் உடல் களங்கமானால் அபலை என்ன செய்ய முடியும்?’

மௌனம்.

“இந்திரா! போய் வா!” என்றார் கௌதமர். அப்பொழுதும் அவர் மனத்தின் சாந்தி தெளிவாகத் தெரிந்தது.

அகல்யை?

அவள் உள்ளத்தில் நிகழ்ந்த ஊழியின் இறுதிக் கூத்து கணவனின் சாந்திக்குப் பகைப்புலமாக நின்றது.

ஆசிரியரின்  கதையில் உள்ள மாற்றங்கள்.

//பக்கத்திலிருந்த தடியால் அவன் மண்டையில் அடித்து உதறித் தள்ளிவிட்டு, ஒரு புறம் கிடந்து புரண்டு துடிக்கிறாள்.

இந்திரனுக்குச் சுய அறிவு வருகிறது. தன் பைத்தியக்காரத்தனம், தன் மிருகத்தனமான கொடுமை!…அவன் உள்ளமே வெடித்துவிடும் போல் இருக்கிறது!//

//அவர் (கௌதமர்) மனத்தில் ஒரு சாந்தி….. மௌனம்…..“இந்திரா! போய் வா!” என்றார் கௌதமர்//

சாபத்தை பற்றியோ அகலிகையின் அவலத்தை பற்றியோ  ஒரு செய்தியும் இல்லை. மாறாக மன்னிப்பு.

என்ன இது விசித்திரமாக இருக்கிறது என்று நினைத்தீர்களானால் அடுத்த கதை ‘சாபவிமோசனத்தில்’ நாம் அறிந்த கதையாக, கற்சிலையாக இருந்த அகலிகை ஸ்ரீ ராமனின் கால் பட்டு சுய உருவைப் பெறுகிறாள்.

*****************************************************************************************

 2.     சாப விமோசனம்-புதுமைப்பித்தன் (கதைச்சுருக்கம்)

இந்தக்கதையின் துவக்கத்திலேயே புதுமைப்பித்தன் ஒரு எச்சரிக்கையை முன் வைக்கிறார்.

(ராமாயண பரிசயமுள்ளவர்களுக்கு இந்தக் கதை பிடிபடாமல் (பிடிக்காமல் கூட) இருக்கலாம். அதை நான் பொருட்படுத்தவில்லை.)

சாலையிலே ஒரு கற்சிலை. தளர்ந்து நொடிந்து போன தசைக் கூட்டத்திலும், வீரியத்தைத் துள்ள வைக்கும் மோகன வடிவம்; அது சிற்பியின் அபூர்வக் கனவு அன்று. சாபத்தின் விளைவு. அவள்தான் அகலிகை.

சற்றுத் தூரத்திலே ஒரு கறையான் புற்று. நிஷ்டையில் ஆழ்ந்து தன் நினைவகற்றித் தன் சோகத்தை மறந்து தவம் கிடக்கிறான் கோதமன்.

ஒரு நாள்

இரண்டு குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாடி வருகின்றன. அவர்கள் வேறு யாருமல்ல; அவதார சிசுக்களான ராம லக்ஷ்மணர்களே. முன்னால் ஓடி வருகிறான் லக்ஷ்மணன் ; துரத்தி வருபவன் ராமன். புழுதிப் படலம் சிலையின் மீது படிகிறது…….

எப்போதோ ஒரு நாள் நின்று கல்லான இதயம் சிலையுள் துடிக்கிறது. போன இடத்தில் நின்று இறுகிப்போன ரத்தம் ஓட ஆரம்பிக்கிறது. கல்லில் ஜீவ உஷ்ணம் பரவி உயிருள்ள தசைக் கோளமாகிறது. பிரக்ஞை வருகிறது.

கண்களை மூடித் திறக்கிறாள் அகலிகை. பிரக்ஞை தெளிகிறது. சாப விமோசனம்! சாப விமோசனம்!


அதோ நிற்கும் புற்று இருக்கிறதே ; அதில், வலை முட்டையில் மோனத்தவங் கிடக்கும் பட்டுப் பூச்சிபோலத் தன்னை மறந்து நிஷ்டையில் ஆழ்ந்து இருக்கிறான். அதோ அவனே எழுந்துவிட்டானே! நிஷ்டையில் துறந்த கண்கள் சாணை தீட்டிய கத்திபோல் சுருள்கின்றன. உடலிலே, காயகற்பம் செய்ததுபோல் வலு பின்னிப் பாய்கிறது. மிடுக்காக, பெண்ணின் கேவலத்திலிருந்து விடுவித்துக் கொள்ள முடியாதவனைப் போலத் தயங்கி வருகிறான்….கோதமன்.

“என்ன வேண்டும்?” என்றான் கோதமன். அறிவுத் திறம் எல்லாம் அந்த உணர்ச்சிச் சுழிப்பிலே அகன்று பொருளற்ற வார்த்தையை உந்தித் தள்ளியது. “பசிக்கிறது” என்றாள் அகலிகை, குழந்தைபோல. அருகிலிருந்த பழனத்தில் சென்று கனிவர்க்கங்களைச் சேகரித்து வந்தான் கோதமன். அன்று, முதல் மணவினை நிகழ்ந்த புதிதில் அவனுடைய செயல்களில் துவண்ட ஆசையும் பரிவும் விரல்களின் இயக்கத்தில் தேகத்தில் காட்டின. அகலிகை பசி தீர்ந்தாள். அவர்கள் மனசில் பூர்ணமான கனிவு இருந்தது. ஆனால் இருவரும் இருவிதமான மனக்கோட்டைகளுக்குள் இருந்து தவித்தார்கள்.

கோதமனுக்குத் தான் ஏற்றவளா என்பதே அகலிகையின் கவலை. அகலிகைக்குத் தான் ஏற்றவனா என்பதே கோதமனின் கவலை.

சாலையோரத்தில் பூத்திருந்த மலர்கள் அவர்களைப் பார்த்துச் சிரித்தன.

அகலிகையின் விருப்பப்படி, ஆசைப்படி அயோத்தி வெளி மதில்களுக்குச் சற்று ஒதுங்கி, மனுஷ பரம்பரையின் நெடிபடாத தூரத்தில், சரயூ நதிக்கரையிலே ஒரு குடிசை கட்டிக்கொண்டு தர்ம விசாரம் செய்து கொண்டிருந்தான் கோதமன்….அகலிகை அவனை உள்ளத்தினால் அளக்க முடியாத ஓர் அன்பால் தழைக்க வைத்தாள்.

கோதமனுடைய சித்தாந்தமே இப்பொழுது புது வித விசாரணையில் திரும்பியது. தர்மத்தின் வேலிகள் யாவும் மனமறிந்து செய்பவர்களுக்கே…..அவனுடைய மனசில் அகலிகை மாசு அற்றவளாகவே உலாவினாள்; தனக்கே அருகதை இல்லை ; சாபத் தீயை எழுப்பிய கோபமே தன்னை மாசு படுத்திவிட்டது என்று கருதினான்.

அகலிகையின் மன பாரத்தை நீக்க வந்த மாடப்புறா சீதை. அவளது பேச்சும் சிரிப்பும், தன் மீதுள்ள கறையைத் தேய்த்துக் கழுவுவன போல் இருந்தன அகலிகைக்கு. அகலிகைக்கு வெளியே நடமாடி நாலு இடம் போவதற்குப் பிடிப்பற்று இருந்தது. சீதையின் நெருக்கமே அவளது மனச்சுமையை நீக்கிச் சற்றுத் தெம்பை அளித்தது.

கருக்கலில் கோதமர் ஜபதபங்களை முடித்துக்கொண்டு கரையேறிக் குடிசைக்குள் நுழைந்தார். அவர் பாதங்களைக் கழுவதற்காகச் செம்பில் ஜலத்தை ஏந்தி நின்ற அகலிகையின் உதடு அசைந்தது.

“எனக்கு இங்கு இருப்புக் கொள்ளவில்லை. மிதிலைக்குப் போய்விடுவோமே.”

“சரி, புறப்படு; சதானந்தனையும் பார்த்து வெகு நாட்களாயின” என்று வெளியே இறங்கினார் கோதமர். இருவரும் மிதிலைநோக்கி நடந்தார்கள். இருவர் மனசிலும் பளு குடியேறி அமர்ந்திருந்தது. கோதமர் சற்று நின்றார். பின் தொடர்ந்து நடந்துவந்த அகலிகையினுடைய கையை எட்டிப் பிடித்துக்கொண்டார் ; நடந்தார்; “பயப்படாதே” என்றார்.

இருவரும் மிதிலை நோக்கி நடந்தார்கள்.

பொழுது புலர்ந்துவிட்டது. கங்கைக் கரைமேல் இருவரும் சென்று கொண்டிருக்கிறார்கள். யாரோ ஆற்றுக்குள் நின்று கணீரென்ற குரலில் காயத்திரியைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஜபம் முடியுமட்டும் தம்பதிகள் கரையில் எட்டிக் காத்து நின்றார்கள். “சதானந்தா!” என்று கூப்பிட்டார் கோதமர். “அம்மா… அம்மா…” என்று உள்ளத்தின் மலர்ச்சியைக் கொட்டிக் காலில் விழுந்து நமஸ்கரித்தார் சதானந்தர்.

சதானந்தன் இருவரையும் தன் குடிசைக்கு அழைத்துச் சென்றான். சிரம பரிகாரம் செய்து கொள்ளுவதற்கு வசதி செய்து வைத்துவிட்டு, ஜனகனது தத்துவ விசார மண்டபத்துக்குப் புறப்படலானான்….கோதமரும் உடன் வருவதாகப் புறப்பட்டார்.

ஜனகன் கண்களில் இவர்கள் உடனே தென்பட்டார்கள். அவன் ஓடோடியும் வந்து முனிவருக்கு அர்க்கியம் முதலிய உபசாரங்கள் செய்வித்து அழைத்துச் சென்று அவரைத் தன் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டான். ஜனகனுடைய முகத்தில் சோகத்தின் சோபை இருந்தது.

என்னத்தைப் பேசுவது என்று கோதமர் சற்றுத் தயங்கினார்.

“வசிட்டன் தான் கட்டிய ராஜ்யத்தில் உணர்ச்சிக்கு மதகு அமைக்கவில்லை” என்றான் ஜனகன், மெதுவாகத் தாடியை நெருடிக்கொண்டு, ஜனகனின் வாக்கு, வர்மத்தைத் தொட்டுவிட்டது.

“உணர்ச்சியின் சுழிப்பிலேதானே உண்மை பிறக்கும்” என்றார் கோதமர்.

“துன்பமும் பிறக்கும், உணர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாது போனால், ராஜ்யத்தைக் கட்ட ஆசைப்படும் போது அதற்கும் இடம் போட்டு வைக்க வேண்டும் ; இல்லாவிட்டால் ராஜ்யம் இருக்காது” என்றான் ஜனகன்.

“தங்களதோ?” என்று சந்தேகத்தை எழுப்பினார் கோதமர்.

“நான் ஆளவில்லை ; ஆட்சியைப் புரிந்துகொள்ள முயலுகிறேன்” என்றான் ஜனகன். இருவரும் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். “தங்களது தர்ம விசாரணை எந்த மாதிரியிலோ?” என்று விநயமாகக் கேட்டான் ஜனகன்.

“இன்னும் ஆரம்பிக்கவே இல்லை; இனிமேல்தான் புரிந்து கொள்ள முயலவேண்டும்; புதிர்கள் பல புலம்களையெல்லாம் கண்ணியிட்டுக் கட்டுகின்றன” என்று சொல்லிக்கொண்டே எழுந்தார் கோதமர்.

அகலிகைக்கு நீராடுவதில் அபார மோகம். இங்கே கங்கைக் கரையருகே நிம்மதி இருக்கும் என்று தனியாக உதய காலத்திலேயே குடமெடுத்துச் சென்றுவிடுவாள். இரண்டொரு நாட்கள் தனியாக, நிம்மதியாகத் தனது மனசின் கொழுந்துகளைத் தன்னிச்சையோடு படரும்படி விட்டு, அதனால் சுமை நீங்கியதாக ஒரு திருப்தியுடன் குளித்து முழுகி விளையாடிவிட்டு நீர்மொண்டு வருவாள்.

இது நீடிக்கவில்லை. குளித்துவிட்டுத் திரும்பிக் குனிந்த நோக்குடன், மனசை இழையவிட்டுக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள். எதிரே மெட்டிச் சப்தம் கேட்டது. ரிஷி பத்தினிகள் யாரோ ; அவர்களும் நீராடத்தான் வந்துகொண்டிருந்தார்கள். அவளைக் கண்டதும் பறைச்சியைக் கண்டதுபோல ஓடி விலகி, அவளை விறைத்துப் பார்த்துவிட்டுச் சென்றார்கள். “அவள்தான் அகலிகை” என்பது தூரத்தில் கேட்டது. கோதமனுக்கு அன்று அடிவயிற்றில் பற்றிக்கொண்டு பிறந்த சாபத்தீயைவிட அதிகமாகச் சுட்டன அவ்வார்த்தைகள்.

அவள் மனசு ஒரேயடியாகச் சுடுகாடு மாதிரி வெந்து தகித்தது. சிந்தனை திரிந்தது. “தெய்வமே: சாப விமோசனம் கண்டாலும் பாப விமோசனம் கிடையாதா?” என்று தேம்பினாள்.

“நாமும் தீர்த்தயாத்திரை செய்தால் என்ன?” என்று அகலிகை மெதுவாகக் கேட்டாள்.

“புறப்படுவோமா?” என்று கைகளை உதறிக்கொண்டு எழுந்தார் கோதமர்.

“இப்பொழுதேயா?” என்றான் சதானந்தன்.

“எப்பொழுதானால் என்ன?” என்று கூறிக்கொண்டே, மூலையிலிருந்த தண்டு கமண்டலங்களை எடுத்துக்கொண்டு வாசலை நோக்கினார் கோதமர். அகலிகை பின் தொடர்ந்தாள். சதானந்தன் மனம் தகித்தது.

பொழுது சாய்ந்து, ரேகை மங்கிவிட்டது. இருவர் சரயூ நதிக்கரையோரமாக அயோத்தியை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள்.

பதினான்கு வருஷங்கள் ஓடிக் காலவெள்ளத்தில் ஐக்கியமாகிவிட்டன.

“இன்னும் சில தினங்களில் ராமன் திரும்பி விடுவான் ; இனி மேலாவது வாழ்வின் உதயகாலம் பிறக்கும்” என்ற ஆசைதான் அவர்களை இழுத்து வந்தது.

ஒரு நாள் அதிகாலையில் அகலிகை நீராடச் சென்றிருந்தாள். அவளுக்கு முன், யாரோ ஒருத்தி விதவை குளித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தாள்; யார் என்று அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை ; ஆனால் எதிரே வந்தவள் அடையாளம் கண்டு கொண்டுவிட்டாள். ஓடோடியும் வந்து அகலிகையின் காலில் சர்வாங்கமும் தரையில் பட விழுந்து நமஸ்கரித்தாள். தேவி கைகேயி : தன்னந்தனியாக, பரிசனங்களும் பரிவாரமும் இல்லாமல், துறவியாகிவிட்டாளே! குடத்தை இறக்கி வைத்துவிட்டு அவளை இரு கைகளாலும் தூக்கி நிறுத்தினாள். அவளுக்குக் கைகேயின் செயல் புரியவில்லை.

“தர்ம ஆவேசத்திலே பரதன் தன்னுடைய மனசில் எனக்கு இடம் கொடுக்க மறந்துவிட்டான்” என்றாள் கைகேயி.

“பரதனுடைய தர்ம வைராக்கியத்துக்கு யார் காரணம்?” என்றாள் அகலிகை. அவளுடைய உதட்டின் கோணத்தில் அநுதாபம் கனிந்த புன்சிரிப்பு நெளிந்து மறைந்தது.

“குழந்தை வைத்த நெருப்பு ஊரைச் சுட்டு விட்டால் குழந்தையைக் கொன்று விடுவதா?” என்றாள் கைகேயி. குழந்தைக்கும் நெருப்புக்கும் இடையில் வேலி போடுவது அவசியந்தான் என்று எண்ணினாள் அகலிகை. “ஆனால் எரிந்தது எரிந்தது தானே?” என்று கேட்டாள்.

“எரிந்த இடத்தைச் சுத்தப்படுத்தாமல் சாம்பலை அப்படியே குவித்து வைத்துக்கொண்டு சுற்றி உட்கார்ந்திருந்தால் மட்டும் போதுமா?” என்றாள் கைகேயி. “சாம்பலை அகற்றுகிறவன் இரண்டொரு நாட்களில் வந்து விடுவானே” என்றாள் அகலிகை. ”ஆமாம்” என்றாள் கைகேயி. அவள் குரலில் பரம நிம்மதி தொனித்தது. ராமனை எதிர்பார்த்திருப்பது பரதனல்ல ; கைகேயி.

பரதன் பிராயோபவேசம் செய்யப் போகிறானாம். அக்கினி குண்டம் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறான்” என்றாள் கைகேயி.

“வசிட்டரைக் கொண்டாவது அவனைத் தடை செய்யக்கூடாதா?” என்றாள் அகலிகை.

”பரதன் தர்மத்துக்குத்தான் கட்டுப்படுவான்; வசிட்டருக்குக் கட்டுப்படமாட்டான்” என்றாள் கைகேயி. “மனிதருக்குக் கட்டுப்படாத தர்மம், மனித வம்சத்துக்குச் சத்துரு” என்று கொதித்தாள் அகலிகை.

தன்னுடைய கணவர் பேச்சுக்குப் பரதன் ஒருவேளை கட்டுப்படக்கூடாதோ என்ற நைப்பாசை. மறுபடியும் அயோத்தியில் துன்பச் சக்கரம் சுழல ஆரம்பித்துவிடக் கூடாதே என்ற பீதி.

கோதமன் இணங்கினான். ஆனால் பேச்சில் பலன் கூடவில்லை. பரதனை உண்டு பலிகொள்ள அக்கினி தேவன் விரும்பவில்லை. அனுமன் வந்தான் ; நெருப்பு அவிந்தது.

சீதையும் ராமனும் தன்னைப் பார்க்க வருவார்கள் என்று அகலிகை உள்ளம் பூரித்தாள். வரவேற்பு ஆரவாரம் ஒடுங்கியதும் அவர்கள் இருவரும் பரிவாரம் இன்றி வந்தார்கள். ராவணன் தூக்கிச் சென்றது, துன்பம், மீட்பு எல்லாவற்றையும் துன்பக்கறை படியாமல் சொன்னாள் சீதை. ராமனுடன சேர்ந்து விட்ட பிறகு துன்பத்துக்கு அவளிடம் இடம் ஏது?

சீதை அக்கினிப் பிரவேசத்தைச் சொன்னாள். அகலிகை துடித்துவிட்டாள். “அவர் கேட்டாரா? நீ ஏன் செய்தாய்?” என்று கேட்டாள். “அவர் கேட்டார் ; நான் செய்தேன்” என்றாள் சீதை, அமைதியாக. “அவன் கேட்டானா?” என்று கத்தினாள் அகலிகை; அவள் மனசில் கண்ணகி வெறி தாண்டவமாடியது. அகலிகைக்கு ஒரு நீதி, அவனுக்கு ஒரு நீதியா? ஏமாற்றா? கோதமன் சாபம் குடலோடு பிறந்த நியாயமா? இருவரும் வெகுநேரம் மௌனமாக இருந்தனர். “உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா?” என்று கூறி, மெதுவாகச் சிரித்தாள் சீதை. “உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா?” என்றாள் அகலிகை. வார்த்தை வறண்டது.

“நிரூபித்துவிட்டால் மட்டும் அது உண்மையாகிவிடப் போகிறதா ; உள்ளத்தைத் தொடவில்லையானால்? நிற்கட்டும் ; உலகம் எது?” என்றாள் அகலிகை.

கோதமன் நின்றபடியே யோசனையில் ஆழ்ந்தான். நிலை காணாது தவிக்கும் திரிசங்கு மண்டலம் அவன் கண்ணில் பட்டது. புதிய யோசனை ஒன்று மனக்குகையில் மின்வெட்டிப் பாய்ந்து மடிந்தது. மனச்சுமையை நீக்கிப் பழைய பந்தத்தை வருவிக்க, குழந்தை ஒன்றை வரித்தால் என்ன? அதன் பசலை விரல்கள் அவள் மனசின் சுமையை இறக்கி விடாவா? உள்ளே நுழைந்தான். அகலிகைக்கு பிரக்ஞை மருண்ட நிலை. மறுபடியும் இந்திர நாடகம், மறக்க வேண்டிய இந்திர நாடகம், மனத்திரையில் நடந்து கொண்டிருந்தது. கோதமன் அவளைத் தழுவினான். கோதமன் உருவில் வந்த இந்திர வேடமாகப்பட்டது அவளுக்கு. அவள் நெஞ்சு கல்லாய் இறுகியது. என்ன நிம்மதி! கோதமன் கைக்குள் சிக்கிக் கிடந்தது ஒரு கற்சிலை. அகலிகை மீண்டும் கல்லானாள். மனச் சுமை மடிந்தது.

------------------------------xxxxxxxxxxxxx---------------------------------xxxxxxxxxxx-----------------------------------

கைலயங்கிரியை நாடி ஒற்றை மனித உருவம் பனிப்பாலை வனத்தின் வழியாக விரைந்துக் கொண்டிருந்தது. அதன் குதி காலில் விரக்தி வைரம் பாய்ந்து கிடந்தது.  அவன் தான் கோதமன்….அவன் துறவியானான்.

--------------------------------xxxxxxxxxxxxx--------------------------------xxxxxxxxxxxx-----------------------------------

பின்னுரை.

என்ன இது. கதை எங்கெங்கோ போகிறது என்று வியக்கிறீர்களா? சாப விமோசனமும் கௌதமர் அகலிகையை திரும்ப ஏற்றுக்கொண்டதும் தான் நாம் அறிந்திருந்த கதை. சதானந்தன், ஜனகன், சீதை, கைகேயி போன்ற்வர்களின் பங்கு புதிதாக தோன்றுகிறது. கதை முழுதும் ஒரே தத்துவ விசாரம். புரிந்து கொள்ளத்தான் முடியவில்லை. அவார்டு கதையோ?

இதுவரை நான் தந்தது கதைச்சுருக்கம்  மட்டுமே. கதையின் சுட்டிகள் பின்னர் தருகிறேன்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

சாப விமோசனத்தைப் பற்றிய வரையில் எனக்கு ஒரே ஒரு குறைதான் உண்டு. அதில் வசிஷ்டனையும் கூனியையும் கூட்டிக்கொண்டு வர மறந்து போனதுதான் அது, மற்றப்படி யார் எப்படிக் கருதினாலும் ராமாயணக் கதையின் அமைதி முற்றும் பொருந்தித்தான் இருக்கிறது.

விமரிசகர்களுக்கு ஒரு வார்த்தை. வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்து விட்டவைகளும். அவை உங்கள் அளவு கோல்களுக்குள் அடைபடாதிருந்தால் நானும் பொறுப்பாளியல்ல; நான் பிறப்பித்து விளையாட விட்டுள்ள ஜீவராசிகளும் பொறுப்பாளிகளல்ல; உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக் கொள்ளுகிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன்.

23-12-43

புதுமைப்பித்தன்

கதையின் சுட்டிகள்

=========>சிறுகதைகள்.காம்<========

=========>அழியாச்சுடர்கள்<==========

இனி அடுத்த  பகுதியில் வையவன் எழுதிய கதை “சரயு” யைப்  பார்ப்போம். 

(தொடரும்)  

43 கருத்துகள்:

  1. சாபத்துக்கு பயந்து இன்னும் யாரும் வரவில்லையோ?   அட..  பாஸிட்டிவையாவது  பார்க்கலாமே..

    பின்காமி என்றால் என்ன?

    பதிலளிநீக்கு
  2. தனக்கு சாபவிமோசனம் கொடுத்த ராமன் சீதையை சோதிக்கலாமா?  - அகலிகை.

    லாம்.  அதுவும் விதி.  இதுவும் விதி.  ராமன் மனமுவந்து தானாய் சாபவிமோசனம் தரவில்லை.  விதிப்படி, ஏற்கெனவே பிரம்மனால் வகுக்கப்பட்ட விதிப்படி நடந்தது அது.  இது மானிட தர்மம், பலவீனங்களை சொல்லும் மனோதர்மன் அல்லது மனோபலவீனம்!

    பதிலளிநீக்கு
  3. ஆமாம், கௌதம முனிவருக்கு அகலிகை எப்படி கிடைத்தாள்"  

    சரி, ப்ரம்மா இப்படி ஒரு அழகியைப் படைக்கிறார்.  இதை எல்லாம் ஆவணமாக்கி நித்யப்படி வேலை ரிப்போர்ட் இறைவன் சபைக்கு, இந்திரனுக்கு கொடுக்க வேண்டாமோ...   அவன் எப்படி அறியாதிருக்கிறான் இதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுடைய சந்தேகத்திற்கு (இந்திரன் ஏன் அகலிகையை மணக்க முடியவில்லை) என்பதற்கும் விடை இருக்கிறது. பதிவு நீளம் கருதி அதையெல்லாம் தள்ளிவிட்டேன்.

      நீக்கு
    2. புராணங்களின்படி உலகை முதலில் சுற்றி வருபவருக்குத் தன் மகளை மணமுடித்துத் தருவதாகப் பிரம்மா கூறியதாகவும், அதன்படி கௌதமர் ஒரு பசுவை வலம் வந்து அகலிகையை

      நீக்கு
    3. எல்லாத்துக்கும் சுருக்கு வழி கண்டு பிடிச்சு வச்சிருக்காங்கப்பா...   இப்படி டபாய்க்கிறதுல பிள்ளையாரா, இவரா?  யார் முதல்?

      நீக்கு
    4. இந்திரன் ஏன் அகலிகையை மணக்க முடியவில்லை என்று நான் கேட்கவில்லை.  அவனுக்கு அகலிகை படைக்கப்பட்டது பற்றி டெய்லி ரிப்போர்ட் சென்றிருக்க வேண்டுமே என்று கேட்டேன்!  

      நீக்கு
  4. சாபவிமோசனம் - புதிய பாதை.
    ---------------------------------------------------------------

    "அம்மா அகலிகை..  ராமன் கால் பட்டு நீ மறுபடி பெண்ணாவாய்.  இறைவன் அருளால் அதுவரை நடந்தது உனக்கு,   இந்திரனுக்கும் மறந்து போகும்.  அவனும் முற்றிலும் சாபவிமோசனம் பெற்று தன் பாவத்திலிருந்து விடுதலை பெறுவான்"

    'கால்தான் படவேண்டுமா?  பார்வை பட்டால் போதாதா..  விமோசனத்தை திருத்தி அமென்ட்மென்ட் போடக்கூடாதா?' -  அகலிகை மனதில் பத்தினிக் குழப்பம்.

    அகலிகை கல்லாகிக் காத்திருந்தாள்.  ராமன் கால்பட்டு பெண்ணானாள்.  

    கௌதமனும் புதிதாய்ப் பிறந்தான்.  இந்திரனும் அனைத்தும் மறந்தான்.

    சில நாட்கள் கழித்து அகலிகை குளித்துக் கொண்டிருந்தாள்.  இவளுக்கு இதே வேலை..  பொது இடத்தில ஆடைகுறைத்து குளியல் என்ன வேண்டியிருக்கிறது? 

    அந்தப் பக்கமாக வந்தான் இந்திரன்.  அவனுக்கும் ஆளும் வேலையை விட்டு இபப்டி ஊர் சுற்றும் வேலையே பிரதானம்!

    பார்த்தான் அகலிகையை.

    "ஆ...   யார் இந்தப் பேரழகி...  இவளை அடைய வேண்டுமே..."

    அன்றிரவு மறுபடி நள்ளிரவில் சேவல் கூவியது.....

    ஆள்பவர்களின் அகந்தை அழிவதே இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூப்பர் ஸ்ரீராம்......இது ஒரு தொடர்கதை!

      கிட்டத்தட்ட நானும் இப்படி யோசித்ததுண்டு!!

      சில புராணக் கதைகளைக் கொஞ்சம் கேள்விகளுடன் நான் யோசித்ததை எழுத நினைத்ததுண்டு. அதில் சில கதைகளில் வந்திருக்கின்றன,

      புராணக் கதைகளை அப்படியே எடுத்துக் கொண்டால் பல கேள்விகள் எழும் ஸ்ரீராம்.

      என் சிற்றறிவிற்கு எட்டியபடி அகலிகைக்குச்சாபம் என்பது அவள் அப்படியே கல்லாவதில்லை அவள் மனம் இறுகிப் பாறை போன்று எந்தவித உணர்ச்சிகளும் இல்லாமல் வாழ்வது. ராமர் அவ்வழி வரப்ப அகலிகை வணங்கிட, ராமர் (அது சரி அகலிகை ராமரை விடப் பெரியள் இல்லையோ?! ராமர் மானுடராகத்தானே இந்த அவதாரத்தில்!) அவளை ஆசிர்வாதம் செய்ய.... (கிட்டத்தட்ட கவுன்சலிங்க் போலன்னு வைச்சுக்கோங்களேன்...பாரும்மா அகலிகை நடந்தது நடந்தாச்சு உன் குற்றம் இதுல எதுவும் இல்லை. நீ ஏமாற்றப்பட்டிருக்க. எனவே இந்தக் குற்ற உணர்ச்சி தேவையற்றது. இதிலிருந்து மீண்டு பழையபடி வர வேண்டும் என்பது போல!!!) அவள் மீண்டும் உணர்ச்சிகளைப் பெறுகிறாள்!

      பாலியல் தொந்தரவுக்குள்ளாகும் பெண்களில் ஒரு சிலர் பிரமை பிடித்தது போன்று உணர்வுகள் அற்று ஆகும் நிலை ஏற்படுவதுண்டு. அப்படி யோசித்தது!!!

      கீதா

      நீக்கு
    2. இந்திரனுக்கு வேற வேலையே இல்லை ஸ்ரீராம். நான் இப்படிச் சொன்னா யாராச்சும் வந்து என்னை தடி எடுத்து அடிக்க வந்திடுவாங்க நான் கருத்து கொடுத்துவிட்டு ஓடுகிறேன்.

      கீதா

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      தங்களின் ஊக்குவிப்பிற்கு நன்றிகள் பல. தங்கள் கருத்து சரியானதே.. எனக்குள்ளும் இந்த மாதிரி சந்தேகங்கள் வரும். ஆனால், கற்பனேயோ, உண்மையோ புராணங்கள், தெய்வீக சம்பந்தபட்ட விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளாவிட்டால், நாம் வாழும் வாழ்க்கையில் இயற்கையாகவே பல சங்கடங்கள் வர நேருமென அன்பாக அச்சுறுத்தி வளர்க்கப்பட்டுள்ளோமே..!! என்ன செய்வது? அப்படிப்பட்ட மனதுடன் வளர்ந்த நமக்கு அதையும் மீறவும் இயலவில்லை. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. உண்மைதான் கமலாக்கா, சிறு வயதில் போடப்பட்ட ஸ்க்ரிப்ட் அது.

      நாம் யோசிக்கத் தொடங்கும் போது அதிலிருந்து வெளியில் வந்துவிடலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. அனுபவக் கருத்து!

      கீதா

      நீக்கு
    5. // வள் மனம் இறுகிப் பாறை போன்று எந்தவித உணர்ச்சிகளும் இல்லாமல் வாழ்வது. ...

      அவளை ஆசிர்வாதம் செய்ய.... (கிட்டத்தட்ட கவுன்சலிங்க் போலன்னு வைச்சுக்கோங்களேன்...பாரும்மா அகலிகை நடந்தது நடந்தாச்சு உன் குற்றம் இதுல எதுவும் இல்லை. நீ ஏமாற்றப்பட்டிருக்க. எனவே இந்தக் குற்ற உணர்ச்சி தேவையற்றது. இதிலிருந்து மீண்டு பழையபடி வர வேண்டும் என்பது போல!!!) //
      .

      சூப்பர் கீதா... ராமன் ஒரு மனவியல் நிபுணர்.

      நீக்கு
    6. புன்சிரிப்பு!!!!
      உண்மைதானே ஸ்ரீராம். அவனை நம்பி நாம் செய்யும் பிரார்த்தனைகளே அலல்து ஜபித்தலே மனதைச் சுத்தப்படுத்தி தெளிவாக்குவதுதானே!

      கமலாக்காவுக்கு இங்கு ஒரு கருத்து போட்டிருந்தேனே! காணலையே

      கீதா

      நீக்கு
    7. கமலாக்கா, அப்படி நமக்குப் போடுவதும் மனதில் ஆழப் பதிவதும் தான் ஸ்க்ரிப்ட் என்று சொல்லப்படுவதுண்டு. அதை நாம் பயத்துடன் ஏற்றிக் கொண்டால் அதிலிருந்து வெளிவருவது சிரமம்.

      கேள்வி கேட்டலும், சிந்திப்பதும் வந்து பயமும் நீங்கிவிட்டால் அதிலிருந்து நாம் வெளி வந்துவிட முடியும். அது மிகப் பெரிய சவால்தான். அறிவியலானாலும் சரி, மதங்கள், புராண தத்துவார்த்தங்களானாலும் சரி கேள்வி கேட்க கேட்கத்தான் தேடலில் விடையும் புரிதலும் கிடைக்கும்.

      கீதா

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். காலை என சொல்லலாமா என்ற குழப்பங்கள். (அகல்யை கதை மாதிரி. :)) ) எனவே முற்பகல் வணக்கங்கள்.

    அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா..  காலை வணக்கம் தாராளமாகச் சொல்லலாம்..  காலை வணக்கமும், நன்றியும்.  யாருமே இன்னும் காணோமேன்னு பார்த்தேன்..  வந்த நீங்களும் காணாமல் போயிட்டீங்க...! 

      ஜீவி ஸாரையும் காணோம்..

      நீக்கு
  6. குடும்பமே இரத்ததானம் பிரமிக்க வைக்கிறது

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்று இதுவரை யாரையும் காணாததால், (மனம் பொறுக்க மாட்டாமல் பொங்கி) தாங்கள் தந்த கருத்துக்கள் நிறைய யோசிக்க வைக்கிறது.

    /சில நாட்கள் கழித்து அகலிகை குளித்துக் கொண்டிருந்தாள். இவளுக்கு இதே வேலை.. பொது இடத்தில ஆடைகுறைத்து குளியல் என்ன வேண்டியிருக்கிறது? /

    ஹா ஹா ஹா. சிரித்து விட்டேன். இங்கு இன்று பவர் கட். அதனால், குளியல், தெளியல் என வேலைகளை பம்பரமாக முடிக்கவும் என வீட்டில் ஒரே விரட்டல். நானும் காலையிலேயே நல்ல புகழ் பெற்ற எழுத்தாளரின் கதைகளை படித்து விட்டேன். கருத்து சொல்ல யோசனையாக உள்ளது. (மாறுபட்டு விட்டால் என்ன செய்வதென்ற மனக்குழப்பங்கள்.) நன்றி. வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவலையே படாதீர்கள்...  தயங்காதீர்கள்..  அதுதான் வேண்டும்.  மாறுபட்ட கருத்துக்கள்தான் வேண்டும்...

      நீக்கு
    2. கமலாக்கா தயங்கவே வேண்டாம். மாறுபட்ட கருத்துகள் வேண்டும். அப்போதுதான் சிந்தனைகள் பிறக்கும் யோசிக்கும் திறன் வலுவடையும்.

      சும்மா ஒரே குட்டைல இருந்தால் மனமும் மூளையும் நாறிப் போகும்!! கமான் கமலாக்கா உங்கள் கற்பனை, எண்ணங்கள் கருத்துகள் சிறகடிக்கட்டும்!

      கீதா

      நீக்கு
  8. குடும்பமே ரத்த தானம் வாவ் போட வைத்தது.

    அதற்கு வித்திட்ட //இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டவர் டாக்டர் பட்டேலின் மூத்த பெரியப்பாவாண ரமேஷ் படேல்.....//

    சூப்பரான மனிதர்!!!

    //இந்நிலையில் பட்டேலின் பெற்றோர் ஒரு வாரத்திற்கு முன் அமெரிக்கா சென்ற ரத்ததானம் அளித்து வந்துள்ளனர் என்ற தகவலும் நம்மை சிலிப்படைய செய்கிறது.//

    வியக்க வைக்கிறது! அமெரிக்கா சென்றா?!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. இஸ்ரோவி முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துவோம்!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. குடும்பமே இரத்த தானம் செய்யும் மனப்பான்மையுடன் இருப்பது போற்றத்தக்கது.

    /இந்நிலையில் பட்டேலின் பெற்றோர் ஒரு வாரத்திற்கு முன் அமெரிக்கா சென்ற ரத்ததானம் அளித்து வந்துள்ளனர் என்ற தகவலும் நம்மை சிலிப்படைய செய்கிறது.//

    அதுவும் இப்படியெல்லாம் இரத்த தானம் தருவதற்கு வெளிநாடு செல்லும் அளவிற்கு....! உண்மையிலேயே அவர்கள் பாராட்டத்தக்கவர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. இரத்த தானம் செய்யும் குடும்பம் வியக்க வைக்கிறார்கள் . பாராட்டுக்கள்.

    ஏதோ எமக்கும் ஒரு அற்ப மகிழ்ச்சி இரு தடவை இரத்ததானம் செய்யக் கிடைத்தது என.
    கதை புதுமைப்பித்தனின் பார்வையில் வித்தியாசம்.

    பதிலளிநீக்கு
  12. இராமாயண காவியங்களும் பல கோணங்களில் சிந்திக்க வைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  13. இங்கு ஆசிரியர் அவர் கோணத்தில் சிந்தித்திருக்கிறார். இப்படிப் புராணக்க்கதைகளுக்குப் பல வெர்ஷன்ஸ் கொண்டு வரலாம்.

    ஜெ மோ கூட மகாபாரதத்தை அவர் நோக்கில் எழுதியிருக்கிறாரே!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. சர்ச்சைக்குரிய முரண்பட்ட கதைகளை எ பி வாசகர்கள் விரும்பவில்லை, ஒதுக்கி விடுகிறார்கள் என்பது புரிகிறது. மூத்த எழுத்தாளர் ஜீவி சார் போலும் வாயை திறக்கவில்லை. இது போன்ற கதைகள் தான் நவீன சிறுகதைகள் என்று வகையில் தோன்றிய ஆரம்ப முயற்சிகள். . புதுமைப் பித்தன் கதைகள் பலவும் உளவியல் சம்பந்தமுள்ளவையாக இருக்கும். உ-ம் காஞ்சனை.
    அடுத்தவாரம் வையவனின் "சீதை ராவணனை மன்னித்தாள்" என்ற கதையை காணலாம்.

    ஆராய்ச்சி வெட்டி என்பது உறுதியாகிறது.

    கருத்து கூறியவர்களுக்கு நன்றி. கருத்து கூறாவிட்டாலும் வந்தவர்கள் பலர் என்று தோன்றுகிறது.

    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை ஜெ கே அண்ணா எனக்குப் பிடித்திருந்தது. இப்படியான வெவ்வேறு சிந்தனைகளை கற்பனைகள் உள்ள கதைகள் பிடிக்கும். சிந்திக்க வைக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

      இது போன்ற கதைகள் தான் நவீன சிறுகதைகள் என்று வகையில் தோன்றிய ஆரம்ப முயற்சிகள்.//

      ஆமாம் .

      //புதுமைப் பித்தன் கதைகள் பலவும் உளவியல் சம்பந்தமுள்ளவையாக இருக்கும். உ-ம் காஞ்சனை.//
      ஆமாம்

      அடுத்த வாரக் கதையும் வித்தியாசமான ஒன்று. "சீதை ராவணனை மன்னித்தாள்"

      கீதா

      நீக்கு
    2. மகாபாரதத்தில் உள்ள பாத்திரங்களின் மனோபாவத்தை அலசும் இதுபோன்ற வித்தியாச முயற்சிகள் எனக்கும் பிடிக்கும்.  இனி நான் உறங்கட்டும் போன்ற கதைகளை பற்றி நானே விமர்சனமும் எழுதி இருக்கிறேன்.

      நானும் திரௌபதி பார்வையில் கதை ஒன்று எழுதி இருந்தேன்.

      நேற்று கூட மகாபாரதம் அல்லாமல் புதனின் மனைவி சில கேள்விகள் கேட்பதற்கு வந்த பதிவொன்று படித்து ரசித்தேன்.  இதுபோன்றதா வித்தியாசமான முயற்சிகள் வரவேற்கத்தக்கது, ரசிக்கத்தக்கது. 

      ஜெமோ மகாபாரதத்தையே அதிகாரபூர்வமாக ஆதியிலிருந்து ஆங்காங்கே இஷ்டத்துக்கு மாற்றி எழுதி இருக்கிறார்.  அதை ஒத்துக்கொள்ள முடியாது.

      நீக்கு
    3. மிக மிகச் சமீபத்தில் சிலிகான் ஷெல்ஃப் ஆர்வி கூட சொல்வனத்தில் கர்ணனின் மரணத்தை வைத்து துரி, தர்மர், பீமன், கண்ணனை வைத்து புனைவுக்கதை ஒன்று எழுதி இருந்தார்.

      நீக்கு
    4. // அடுத்த வாரக் கதையும் வித்தியாசமான ஒன்று. "சீதை ராவணனை மன்னித்தாள்" //

      எபியில் 'சீதை ராமனை மன்னித்தாள்' என்றொரு தொடர் சிறுகதை வந்ததே..  நினைவிருக்கோ....

      நீக்கு
    5. எபி செவ்வாயில் சகுந்தலையின் சாபம் என்றொரு கதை வந்ததே நினைவிருக்கோ?..

      நீக்கு
  15. மகாபாரத இதிகாசத்தில் வரும் சிறு பாத்திரமான மாதவி என்ற பெண்ணை வைத்து எம்.வி.வி. (எம்.வி. வெங்கட்ராம்) எழுதிய நித்தியகன்னி என்ற கதையை நான் இதே பகுதியில் பகிர்ந்து கொள்ள வில்லையா என்ன?..

    பதிலளிநீக்கு
  16. நான் இப்பொழுது அமெரிக்காவில் இருக்கிறேன். இந்தியாவில் பகல் என்றால் எங்களுக்கு இரவு. வியாழன், வெள்ளி போன்ற தினங்களில் நாம் ரசிப்பதை பின்னூட்டமாகப் போட்டு விட்டுப் படுக்கப் போய்விடலாம். இந்த மாதிரி கதைகளில் முன் இரவுகளில் வாசித்து மாட்டிக் கொள்ளக் கூடாது. தொடர்ச்சியான வாத--பிரதிவாதங்களுக்கு உள்ளாகும் இம்மாதிரி கதைகளைப் பற்றி அரைகுறையாக ஏதோ எழுதி விட்டுப் போக என் மனம் இடம் கொடுக்கவில்லை. ஆகவே என்னை 'கமிட்'பண்ணிக் கொள்ளாமல் இருந்தேன், ஜெஸி ஸார்.

    பதிலளிநீக்கு
  17. கெளதமர் என்ற முனிவரின் பெயரை கோதமர் என்று இஷ்டத்திற்கு வளைத்து எழுதுவது கூட எனக்கு உடன்பாடில்லை. ஒரு ரிஷி பத்தினியின் கதைக்குப் போய் விட்டீர்களே!..

    பதிலளிநீக்கு
  18. அகலிகை என்ற பெயருக்கு களங்கமற்றவள் என்று பொருள்.
    மகாபாரத அகலிகை பிரம்ம தேவனின் மாசற்ற மகளாவார்.
    திருமாலின் மோகினி அவதாரத்தில் அசுரர்களை மயக்க அழகான உருவம் கொண்டதால் தேவர்கள் அமுதம் பெற்றனர்.
    அழகென்பது காம உணர்விற்கு கால்கோள் விழா நடத்தியதால் அந்த அழகை தவத்திற்கு துணையாக்க பிரம்மா விரும்பி அகலிகையைப் படைத்தார்.
    உலகை யார் சுற்றி வலம் வருவாரோ அவருக்கு தன் மகளை மணம் முடிக்க பிரம்மா விரும்பினார்.
    கொளதம ரிஷியார் ஒரு பசுவை வலம் வந்து அகலிகையை மணம் முடித்தார் என்பது புராண வழக்கு.
    அப்படிப்பட்ட பெண் தெய்வம் அவள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஹாபாரத அகலிகை -- இராமாயண அகலிகை
      என்று மாற்றிக் கொள்ளவும்.

      நீக்கு
  19. இது ஒரு புராண இதிகாசக் கதை சம்பந்தப்பட்ட நிகழ்வு. ஒரு காலத்து வழக்கமாக இருந்த விஷயங்களை இன்னொரு காலத்து நியாயங்களோடு ஒப்புமை படுத்தி 'ஆஹா.. நீதி வழங்கி விட்டேன் பார்!' என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்வது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. அதுவும் 1906-1948 காலகட்டத்தில் வாழ்ந்தவர் புதுமைப்பித்தன்.

    காலம் என்பது மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்கொப்ப மனித நாகரிகமும் அதற்கான வளர்ச்சியும் மாறிக் கொண்டே இருக்கின்றன.
    இத்தனை மாற்றங்களுக்கிடையேயும் மனித மனம் சம்பந்தப்பட்ட மாறாத விஷயங்களை கதைகளுக்கு கருவாகக் கொண்டு எழுதுவதே காலமும் அதன் வளர்ச்சி சம்பந்தப்பட்ட விசேஷங்களாகவும் அமைகின்றன.

    பதிலளிநீக்கு
  20. செய்திகள் அருமை, இரத்ததானம் செய்வது நல்ல கொடை.
    வறுமையிலும் செம்மை பிறர் பொருள் ஆசைபடாமல் உரியவரிடம் சேர்த்தவர் வாழ்க!

    பதிலளிநீக்கு
  21. கதை கெளதமர் தன் மனைவியை புரிந்து கொள்ளாமல் சாபம் கொடுத்து விட்டார்.
    கெளதமர் ஞானி, சிறிது நேரம் ஞானதிருஷ்டியில் நடந்தது என்ன என்று அறிந்து அதன் பின் தண்டனை கொடுத்து இருக்கலாம். அதைவிட்டு கோபத்தில் நிதானம் இழந்து விட்டார்.
    சாபம் கொடுக்கவில்லையென்றாலும் இப்படி பட்ட தவறு நேர்ந்து விட்டால் பெண் மனம் இறுகி கல்லாகத்தான் ஆகி விடும்.

    சாப விமோசனம் கிடைத்தாலும் ஊர் நல்லதாக பேசாது கெட்டு போனதைதான் பேசும்.

    //உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா?” என்றாள் அகலிகை. வார்த்தை வறண்டது.//

    ராமரும் ஊருக்கு முன் சீதையை தீக்குளிக்க செய்தார்
    சீதை, அகல்யா உரையாடல் நன்றாக இருக்கிறது.

    கெளதமரும் , ராமரும் ஊருக்கு பயந்தனர். அவர்கள் அவள் தப்பு இல்லை என்று ஏற்றுக் கொண்டு இருந்தால் யாரும் எதுவும் பேச மாட்டார்கள்.

    கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் "கொண்டவன் துணை இருந்தால் கூரை ஏறி பாய்வாளாம்"என்று .

    கொண்டவன் அவள் மேல் எந்த களங்கமும் இல்லை என்று மனதார நம்பி ஏற்றுக் கொண்டு இருந்தால் மலராக இருப்பார்கள். இல்லையென்றால் கல்தான் எப்போதும்.

    புதுமை பித்தன் கதையை இப்படி எல்லாம் யோசித்து இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  22. பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் நன்று. ரத்ததானம் செய்யும் குடும்பத்தினர் பிரமிக்க வைக்கிறார்கள்.

    //பட்டியலின் தந்தை// - பட்டேலின் தந்தை.

    கதை - சுட்டி வழி சென்று படிக்க வேண்டும் - குறித்து வைத்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!