கோவை சித்தாபுதுார் பாலாஜி நகரை சேர்ந்தவர் நிர்மலா, 41; இவர் நேற்று முன்தினம், தனது தாயார் சாரதாவுடன், பாலசுந்தரம் ரோட்டில் நடைபயிற்சி சென்றார். அப்போது அங்கு, 50 ஆயிரம் ரூபாய் பணக்கட்டு கீழே கிடந்ததை பார்த்தார். உடனே நிர்மலா அந்த பணத்தை எடுத்து வைத்து, யாராவது பணத்தை தேடி வருகிறார்களா என சிறிது நேரம் பார்த்தார். யாரும் வராததால், நிர்மலா அந்த பணத்தை ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூனிடம் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் அர்ஜூன், நிர்மலாவின் செயலை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் தெரிவித்தார்.
அவர், நிர்மலாவை நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.
*************************************************************************************************************************
உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியல்: தோட்ட தொழிலாளியின் மகனுக்கு இடம்
2023- 24ம் ஆண்டிற்கான, உலகின் சிறந்த விஞ்ஞானி பட்டியலில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞானி இடம் பெற்றுள்ளார். நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே அத்திக்குன்னா தேயிலை தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற, வீரமுத்து -ராமாயி தம்பதியின் மகன் அசோக்குமார்,43. அத்திக்குன்னா மற்றும் பந்தலுார் அரசு பள்ளிகளில் படிப்பை முடித்த இவர், கோவை, திருச்சி, சேலம் ஆகிய கல்லுாரிகளில் படிப்பை நிறைவு செய்தார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தொடர்ந்து, அவருக்கு இந்தோ-ஆஸ்திரேலியா பெல்லோஷிப் வழங்கப்பட்டது.
தற்போது, சென்னை சவீதா பல்கலைக்கழகத்தில், கழிவு மேலாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையத்தின் பேராசிரியராகவும்; தலைவராகவும் பணியாற்றி வருகிறார். நம் நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் விஞ்ஞானியாகவும் பணியாற்றி உள்ளார். தற்போது, திரவம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் படைப்புகளுக்கான மாற்று குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார். இவரின் ஆராய்ச்சி பணியை பாராட்டி, கடந்த இரண்டு ஆண்டுக்கு முன், அமெரிக்காவின்'ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட, உலகின் சிறந்த விஞ்ஞானி பட்டியலில் இடம்பெற்று விருது பெற்றார். தற்போது, 2023- 24ம் ஆண்டிற்கான, உலகின் சிறந்த விஞ்ஞானி பட்டியல், 2-வது முறையாக இடம்பெற்று விருது பெற்றுள்ளார். இவருக்கு பந்தலுார் மக்கள் வாழ்த்து தெரிவித்தனர். முனைவர் அசோக்குமார் கூறுகையில், இந்த விருது இரண்டாம் முறை கிடைத்தது, நீலகிரி மாவட்டத்துக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. விடா முயற்சி இருந்தால் ஏழ்மை தடையாக இருக்காது. மாணவர்கள் கல்வி ஒன்றை மட்டுமே நம்பினால் வெற்றி நிச்சயம், என்றார்.
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
ஒரே நேரத்தில் இரு கைகளாலும் எழுதும் பெண்ணுக்கு பாராட்டு
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் சாந்தா சர்மிளா.இவர், ஐந்து நிமிடங்களில், ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும், 12 திருக்குறளை எழுதி, சாதனை படைத்துள்ளார். இதை பாராட்டி 'இந்தியா புக் ஆப் ரிக்கார்ட்ஸ்' சான்றிதழ் வழங்கி உள்ளது. அதேபோல் ஒரு நிமிடத்தில், 14 கண்ணாடி பிரதிபலிப்பு தமிழ் எழுத்துக்களை, இரண்டு கைகளாலும் ஒரே நேரத்தில் எழுதி சாதனை படைத்ததற்காக, 'இன்டர்நேஷனல் புக் ஆப் ரிக்கார்ட்ஸ்' சான்றிதழ் வழங்கி உள்ளது. இவற்றை நேற்று முதல்வரிடம் காண்பித்து, வாழ்த்து பெற்றார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: கொரோனா காலத்தில், இடது கையில் எழுதப் பழகினேன். ஓராண்டில் இரண்டு கைகளிலும், ஒரே நேரத்தில் எழுதப் பழகினேன். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப் பழகி உள்ளேன். அடுத்து ஒரு கையில் தமிழிலும், மற்றொரு கையில் ஆங்கிலத்திலும் எழுத பயிற்சி பெற்று வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
=======================================================================================================
வறுமை காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால், தலித் இளைஞருக்கு ஐ.ஐ.டி., சீட் மறுக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் தலையிட்டு மாணவனின் வாழ்வில் வெளிச்சம் பாய்ச்சியுள்ளது.... அதுல் தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. 'நாள்தோறும் 450 ரூபாய் கூலி வாங்கும் தந்தையால், நான்கு நாட்களில் 17,500 ரூபாய் கட்டுவது என்பது இயலாத காரியம். 'ஆகையால், சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் நீதிமன்ற அதிகாரத்தின்படி, பட்டியல் இன மாணவருக்கு சீட் வழங்க தன்பாத் ஐ.ஐ.டி.,க்கு உத்தரவிடப்படுகிறது. 'தற்போதுள்ள மாணவர் எண்ணிக்கைக்கு தொந்தரவு அளிக்காத வகையில், சூப்பர்நியூமரரி இருக்கைபடி, மாணவருக்கு இடம் ஒதுக்கலாம்' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, ஐ.ஐ.டி.,யில் சேரும் அதுல் குமாரின் முழு கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மாணவரின் குடும்பத்தினருடனும், தன்பாத் ஐ.ஐ.டி., நிர்வாகத்துடனும், மாநில சமூக நலத்துறை அமைச்சர் ஆசிம் அருண் பேசினார். இதையடுத்து, அதுல் குமார் ஐ.ஐ.டி.,யில் சேருவதற்கான கட்டணம் மட்டுமின்றி, நான்கு ஆண்டுகள் படிப்பை முடிக்கும் வரை, 'ஸ்காலர்ஷிப்' அடிப்படையில் முழு கட்டணத்தை செலுத்த உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
=============================================================================================
நான் படிச்ச பீர்பால் கதைகள் (JKC)
கதையாசிரியர்: எஸ்.பர்வின் பானு, பீர்பால்
இயற்பெயர் மகேஷ் தாஸ். வாழ்ந்த காலம் 1528-1586. பிறப்பால் பிராமண குலத்தவர். பீர்பால் என்பது பட்டப் பெயர். மாற்றி யோசிப்பதில் வல்லவர் என்று அர்த்தம். அக்பருடைய அவையில் இருந்த நவரத்தினங்கள் என்று அழைக்கப்பட்ட வல்லுனர்களின் முதன்மை மந்திரியாகத் திகழ்ந்தவர். முறையான போர்ப்பயிற்சி இல்லாதபோதும் அக்பருடைய ஆணையை ஏற்று ஒரு படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கி ஆப்கானிஸ்தானில் அரசருக்கு எதிரான கலகத்தை அடக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது கொல்லப்பட்டார்.
பீர்பலும் அக்பரும். படம் உதவி இணையம்
அக்பருடைய சேவனத்திற்கு வருமுன் ராஜபுதன ராஜா ராம் சந்திராவிடம் பிரம்ம கவியாக இருந்தார்.
அக்பர் உண்டாக்கிய தீன் இலாஹி மதத்திற்கு மாறிய ஒரே ஹிந்து பீர்பால் மட்டுமே. பதேபூர் சிக்ரி கோட்டைக்குள் அக்பருடைய மாளிகைக்கு அடுத்து ஒரு இரண்டடுக்கு மாளிகையில் வசித்தார் என்பதன் மூலம் அரசருக்கு இவர் மேல் இருந்த நம்பிக்கையையும் மதிப்பையும் காட்டுகிறது.
பீர்பால் மாளிகை. படம் உதவி இணையம்.
முன்னுரை
சுட்டிக்கதைகள், அல்லது சிறுவர் கதைகள் என்பது ஒரு தனி ரகம். அதற்காக அம்மாதிரி முத்திரை குத்தப்பட்ட கதைகளை பெரியவர்களுக்குப் பிடிக்காது என்பதில்லை. சிறிய கதைகள், புனைவு சிறிது தூக்கலாக இருக்கும், மிச்ச கதைகளிலும் நீதி ஒன்று இருக்கும். இப்படியும் நடக்குமா என்றிருக்கும்.
பிற மொழியில் இருந்து தமிழில் எடுத்தெழுதப்பட்ட பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள், மரியாதை ராமன் கதைகள், பரமார்த்த குரு கதைகள், பஞ்சதந்திர கதைகள், அராபிய இரவுகளில் இருந்து, சிந்துபாத் கதைகள், அலாவுதீனும் அற்புத விளக்கும், அலிபாபாவும் 40 திருடர்களும் போன்ற கதைகள் அன்றைய சிறுவர்களிடையே பிரபலமானவை. விக்ரமாதித்தன் வேதாளம் கதைகளையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
இவை அல்லாமல் வேறு கதைகள் இல்லையா என்றால் உண்டு, ஆனால் “ஒரு ஊர்லே ஒரு ராஜா” என்று துவங்க பாட்டிகள் இல்லை. இருந்தாலும் கூட்டுக் குடும்பத்தில் அவர்கள் வசிப்பது இல்லை.
சிறுவர் கதைகளின் அறிமுகம் எனக்குப் பள்ளியில் 6ஆம் வகுப்பில் தான் அறிமுகம் ஆனது. தீவிர இந்தி எதிர்ப்பு இருந்த காலம். ஹிந்தி வகுப்புகள் உண்டு. ஹிந்தி வாத்தியார் வகுப்புகளுக்கு வருவார். மாணவர்களிடம் பாடம் வேண்டுமா, கதை வேண்டுமா என்று கேட்பார். சில சமயம் பாடம் நடத்தப்படும். மிச்ச வகுப்புகளிலும் கதை சொல்லல் தான். மேலே கூறிய கதைகளில் ஏதாவது ஒன்றை 45 நிமிட வகுப்பில் சொல்லி கடமையை முடிப்பார்.
(நான் 6, 7 வகுப்புகள் படித்தது திருச்சி ஆர்யன் செகண்டரி ஸ்கூல் (1958-60). சுஜாதா, ஹிந்தி ஆசிரியர்கள் பட்ட பாட்டை ஸ்ரீரங்கத்து தேவதைகள் தொகுப்பில் அருமையாக விவரித்திருப்பார்.)
இப் பதிவில் மூன்று கதைகள் இடம் பெறுகின்றன. மூன்று கதைகளும் பீர்பால் கதைகள்தான். ஆனால் முதல் கதை துப்பறியும் சாம்பு கதை போன்றது. இரண்டாவது கதை மரியாதை ராமன் கதை போன்றது. மூன்றாவது கதை தெனாலி ராமன் கதை போன்றது. இப்படி ஒவ்வொரு கதையின் அடிப்படையில் வேறு கதைகளையும் காண முடியும்.
1. அட்டிகை எங்கே..?
அக்பருடைய ஆட்சிக்காலத்தில் தலைநகரில் பெயர் பெற்ற நகை வியாபாரி ஒருவர் இருந்தார். அவரிடம் வைர அட்டிகை செய்து தருமாறு அக்பரின் பட்டத்து ராணி கேட்டார். ராணியின் வேண்டுகோளுக்கிணங்கி, அந்த நகை வியாபாரி திறமை வாய்ந்த நகைத் தொழிலாளிகளை வைத்து அட்டிகை செய்ய ஏற்பாடு செய்தார். வேலை சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. அட்டிகைக்கு மெருகு வைக்க வேண்டிய வேலை மட்டும் பாக்கியிருந்தது.
அந்தச் சமயத்தில் திடீரென வைர அட்டிகை காணாமற் போய்விட்டது. விஷயமறிந்த வியாபாரிக்கு பெருத்த அதிர்ச்சியாக இருந்தது. இன்னும் ஓரிரு நாள்களில் தந்து விடுவதாக ராணியிடம் கூறியிருக்கிறோம். அரசர் கேட்டால் என்ன பதில் கூறுவது? வைர அட்டிகையை எப்படி கண்டுபிடிப்பது? ராணிக்குத் தருவதற்கு என்ன வழி? என்ற கேள்விகள் அந்த நகை வியாபாரியை பெருத்த கவலைக்குள்ளாக்கியது.
வியாபாரி தன்னிடம் வேலை பார்க்கும் நகைத் தொழிலாளிகள் அனைவரையும் அழைத்து, அட்டிகை பற்றி விசாரித்தார். பலன் ஏதுமில்லை. வேறு வழியின்றி பீர்பாலிடம் சென்று வழக்கை ஒப்படைத்தார்.
பீர்பால் அவருக்கு ஆறுதல் கூறி, சம்பவம் குறித்த முழு விவரத்தையும் கேட்டறிந்தார். மேலும், வியாபாரியிடம் வேலை பார்த்த ஆறு பேரையும் அழைத்து வருமாறு கூறினார். மறுநாள் அந்த வியாபாரி அந்த ஆறு பொற்கொல்லர்களையும் பீர்பாலிடம் அழைத்து வந்தார்.
பீர்பால் அவர்களிடம், “உங்கள் அறுவரில் யாரோ ஒருவர்தான் நகையைத் திருடியிருக்க வேண்டும். எனவே நான் மந்திரித்துக் கொடுக்கும் இந்த ஆறு பிரம்புகளையும், ஆளுக்கு ஒன்றாகத் தரப் போகிறேன். இதனை உங்கள் தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டு தூங்க வேண்டும். காலையில் விழிக்கும்போது வைர அட்டிகையை திருடியவனுடைய பிரம்பு மட்டும் ஒரு அங்குலம் வளர்ந்திருக்கும்” என்று கூறி ஒரே அளவான ஆறு பிரம்புகளை ஆளுக்கொன்றாக கொடுத்து, அவர்களை தனித்தனி அறைகளில் வைத்துப் பூட்டிவிட்டார்.
தனித்தனியே பூட்டப்பட்ட அறைகளில் ஒருவன் மட்டும் தூங்காமல் யோசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு, தான்தான் திருடன் என்று பீர்பால் கண்டுபிடித்து விடுவாரோ என்று பயமாக இருந்தது. பீர்பால் மிகவும் புத்திசாலி. அவருக்குத் தெரியாத விஷயமே இல்லை. என்ன செய்வது? எப்படியாவது இதிலிருந்து தப்பித்தான் ஆகவேண்டும் என்று தூங்காமல் சிந்தித்தவன், கடைசியில் தான்தான் திருடன் என்று பிரம்பு காட்டிக் கொடுத்துவிடும் என்று பயந்து, தன்னிடமிருந்த பிரம்பை ஓர் அங்குலம் வெட்டிவிட்டான். இனி தன்னுடைய பிரம்பும், மற்றவர்கள் பிரம்பு போன்று சமநீளத்துடன் இருக்கும் என்று நிம்மதியுடன் உறங்கப் போனான்.
விடிந்ததும் ஆறு பேருடைய பிரம்புகளும் சோதனை இடப்பட்டன. குற்றவாளியின் பிரம்பு மட்டும் ஓர் அங்குலம் குறைவாகக் காணப்பட்டது. திருடன் தம்முடைய தவறை உணர்ந்து, பீர்பாலின் மதிநுட்பத்திற்கு முன் அடிபணிந்தான்.
வைர அட்டிகை நகை வியாபாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில் அந்த அட்டிகை ராணியிடம் ஒப்படைக்கப்பட்டது. மறுபடியும் ஒருமுறை பீர்பாலின் மதிநுட்பம் உலகத்தார் முன்பு நிரூபிக்கப்பட்டது.
ஒருநாள் சக்கரவர்த்தி அக்பர் தர்பாரில் கூடியிருந்தவர்களை நோக்கி, “நமது நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைகள் ஒழுங்காக நடை பெறுகின்றனவா?” என்று கேட்டார். “மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன, பிரபு! நமது நீதிபதி ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் நியாயமாக நீதி வழங்குகிறார்!” என்று ஒரு அதிகாரி நீதிபதியைப் புகழ்ந்தார்.
பிறகு தர்பாரில் இருந்த அனைவரும் அதை ஆமோதிக்க, நீதிபதிக்கு உச்சி குளிர்ந்து விட்டது. ஆனால் பீர்பல் மட்டும் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்ததை கவனித்த அக்பர், “பீர்பல்! நீ மட்டும் ஏன் மௌனமாக இருக்கிறாய்? மற்றவர்கள் கூறியது முற்றிலும் தவறு என்று நினைக்கிறாயா?” என்று கேட்டார்.
“முற்றிலும் தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் நமது வழக்கு விசாரணைகளும், நீதி வழங்குதலும் திருப்திகரமாக உள்ளது என்று நான் சொல்ல மாட்டேன்” என்றார் பீர்பல்.
அக்பர் அவரை மேலும் விளக்கம் கேட்க நினைக்கையில், வாயிற்காவலன் உள்ளே நுழைந்து, “பிரபு! ஒரு கிழவரும், இளைஞரும் நியாயம் கேட்டு வந்திருக்கிறார்கள்” என்றான். “அவர்களை வரச்சொல்!” என்றார் அக்பர்.
உடனே, தர்பாரில் ஒரு கிழவரும், ஓர் இளைஞனும் உள்ளே நுழைந்து சக்கரவர்த்தியை வணங்கினர். “என்ன விஷயம்? உங்களில் யாருக்கு என்ன குறை?” என்று கேட்டார் அக்பர்.
“பிரபு! என் பெயர் அப்துல் ரஹ்மான்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கிழவர் தொடர்ந்து, “நான் ஒரு சட்ட நிபுணன்! மாணவர்களுக்குச் சட்டத்தின் நுணுக்கங்களையும், வழக்கு விசாரணைகளைப் பற்றியும் கற்பிக்கிறேன்.
இதோ நிற்கிறானே பிரமோத் பிஹாரி! இவன் என் மாணவனாக இருந்தவன்! இவன் மீது நான் குற்றம் சாட்ட வந்துள்ளேன்” என்றார். அந்த இளைஞன் செய்த குற்றம் குறித்து அக்பர் கேட்டார். “பிரபு! இவன் என்னிடம் மாணவனாக சேர விரும்பிய போது, நான் மாதம் மூன்று பொற்காசு வீதம் குரு தட்சிணை தர வேண்டுமென்றும், ஓராண்டு காலம் சட்டம் படிக்க வேண்டும் என்றும் கூறினேன்.
ஆனால், இவன், தான் பரம ஏழை என்றும், தட்சிணை கொடுக்க இயலாது என்றும் கூறினான். படிப்பு முடிந்ததும் வழக்கறிஞனாகி முதல் வழக்கில் வெற்றி பெற்றவுடன், முப்பத்தாறு பொற்காசுகள் சேர்த்து தருவதாகவும் வாக்களித்தான். அதை நம்பி இவனுக்கு ஓராண்டு காலம் கற்பித்தேன்.
இவன் மிகவும் கெட்டிக்கார மாணவன் என்பதால் ஓராண்டிலேயே மிகச் சிறப்பாகச் சட்ட நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு விட்டான். நானும் இவன் வழக்கறிஞனாகி, முதல் வழக்கிலேயே வெற்றி பெறுவான் என்றும், தட்சிணையை மொத்தமாகக் கொடுப்பான் என்றும் நம்பினேன்” என்று சொல்லி நிறுத்தினார் கிழவர். “இப்போது பணம் தராமல் ஏமாற்றுகிறானா?” என்று அக்பர் கேட்டார்.
“இல்லை பிரபு! இவன் திடீரென வழக்கறிஞனாகப் பணி புரியும் யோசனையை கை விட்டு விட்டான். அந்தத் தொழிலில் ஈடுபடப் போவதில்லையாம்!” என்றார். உடனே அக்பர் அந்த இளைஞனை நோக்கி, “எதற்காக உன்னுடைய உத்தேசத்தை நீ மாற்றிக் கொண்டாய்?” என்று கேட்டார்.
“பிரபு! நான் சட்டம் பயின்று முடித்ததும் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடுவதாகத்தான் இருந்தேன். ஆனால் என் சித்தப்பா திடீரென இறந்து போனார். அவர் தன்னுடைய உயிலில் அவருடைய அனைத்து சொத்துகளுக்கும் என்னை வாரிசாக்கி விட்டார். இப்போது நான் லட்சாதிபதி. அதனால் எந்த வேலையும் செய்யத் தேவையில்லை,” என்றான்.
“அப்படியானால் இவருடைய தட்சிணை என்ன ஆவது?” என்று கேட்டார் அக்பர். “நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன். எனக்கு என்று வழக்கறிஞனாக ஆக வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போதுதான் தட்சிணையும் தர முடியும்” என்றான்.
பிரமோத் பிஹாரி கூறுவது சரியே என்று நினைத்தார் அக்பர். உடனே அவர் நீதிபதியை நோக்கித் தீர்ப்பு வழங்கக் கூறினார்.
நீதிபதி அவர்கள் இருவரையும் நோக்கி, “இரு தரப்பினரின் வாதத்தையும் கூர்ந்து கவனித்தேன். என்னைப் பொறுத்தவரை இந்த வழக்கில் பிரமோத் பிஹாரியின் பக்கமே நியாயம் இருக்கிறது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன் என்று இந்த தர்பாரில் அவன் உறுதி அளித்துள்ளான்.
அவன் சொல்லை ஏற்றுக் கொண்டு, அவனுக்கு என்று வழக்கறிஞராக வேண்டும் என்று தோன்றுகிறதோ, அன்று அந்தத் தொழிலில் ஈடுபட்டு குருவின் தட்சிணையைத் திருப்பித் தரலாம். அதுவரை குரு காத்திருக்க வேண்டும். இதுவே என் தீர்ப்பு!” என்றார். அக்பர் உட்பட தர்பாரில் அனைவரும் இந்தத் தீர்ப்பைப் பாராட்டினர். இதை எதிர்பார்க்காத கிழவர் ஏமாற்றத்தினாலும், வருத்தத்தினாலும் உடல் குறுகிப் போனார்.
ஆனால் பீர்பல் மட்டும் தீர்ப்பைப் பாராட்டாமல் மிகவும் மௌனமாக இருந்ததை கவனித்த அக்பர், இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு பீர்பலிடம் கூறினார். அதைக்கேட்டதுமே கிழவரின் முகம் மலர்ந்தது. மிகவும் புத்திசாலியான பீர்பல் சரியான தீர்ப்பு வழங்குவார் என்று அவர் உறுதியாக நம்பினார்.
பீர்பல் இளைஞனை நோக்கி, “நீ கொடுத்த வாக்கில் உறுதியாக இருக்கிறாய் அல்லவா?” என்றார். “அதில் என்ன சந்தேகம்? கண்டிப்பாக அப்போது அதில் கிடைக்கும் வருமானத்திலிருந்து என் குருநாதருக்கு சேர வேண்டிய தட்சிணையைக் கட்டாயம் தந்து விடுவேன்” என்றான் இளைஞன்.
பிறகு கிழவரை நோக்கி, “பிஹாரியின் நிபந்தனையை நீங்கள் ஆரம்பத்திலேயே ஒப்புக் கொண்டீர்கள் அல்லவா?” என்று கேட்டார் பீர்பல் “ஆம் ஐயா!” என்றார் கிழவர்.
“அப்படியானால் சட்டப்படி இளைஞனின் தரப்பில்தான் நியாயம் உள்ளது. அவன் வழக்கில் வெற்றி பெற்று தட்சிணை தரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதுதான்” என்றார் பீர்பல். பீர்பலையும், அக்பரையும் வணங்கிவிட்டு அவர் தள்ளாடித் தள்ளாடி வெளியேற, இளைஞன் பிஹாரி வெற்றிப் பெருமிதத்துடன் வெளியேறினான்.
திடீரென பீர்பல் பிஹாரியை அழைத்து, “பிஹாரி! இதுதான் சக்கரவர்த்தியின் நீதிமன்றத்தில் உன்னுடைய முதல் வழக்கு! உன்னுடைய வழக்கை விசாரிக்க வேறு வழக்கறிஞரை நியமிக்காமல் நீயே உன் தரப்பு நியாயத்தை வெகு அழகாக எடுத்துக் கூறினாய்” என்றார் பீர்பல். பிஹாரி மகிழ்ச்சியுடன், “நன்றி ஐயா!” என்றான்.
பீர்பல் தொடர்ந்து, “அதாவது உன்னுடைய முதல் வழக்கில் நீயே வழக்கறிஞராக இருந்து வாதாடி அதில் வெற்றி பெற்று விட்டாய். இல்லையா?” என்று பீர்பல் கேட்டார். “ஆம் ஐயா!” என்றான் பிஹாரி மகிழ்ச்சியுடன்.
“அப்படியானால் நீ வழக்கறிஞராக இருந்து வெற்றி பெற்ற முதல் வழக்கு இது! நீ வாக்களித்தபடியே, குருதட்சிணையை உன் குருவிற்கு இப்போதே இங்கேயே கொடுத்து விடு!” என்றார்.
ஒருகணம் திகைத்துப் போன அனைவரும், மறுகணமே கைதட்டி ஆர்ப்பரித்தனர். கிழவர் பீர்பலுக்கு மனமார நன்றிகூற, அக்பர் பீர்பலை மிகுந்த மகிழ்ச்சியுடன் தழுவிக் கொண்டார்.
*******************************************************************************************
1. வெயிலும், நிழலும்
அன்று சக்கரவர்த்தி அக்பர் ஏதோ காரணத்தால் காலையிலிருந்தே எரிச்சலுடன் இருந்தார். அவருடைய கோபத்தைத் தணிக்க விரும்பிய பீர்பல், “பிரபு! நீங்கள் இவ்வாறு இருப்பது சிறிதும் நன்றாகயில்லை. சிறிது சாந்தமாக இருக்கக்கூடாதா?” என்று பணிவாகக் கூறினார்.
“எப்போது சாந்தமாக இருக்க வேண்டும், எப்போது கோபமாக இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். நீர் சொல்ல வேண்டியது இல்லை!” என்று அக்பர் பீர்பல் மீது எரிந்து விழுந்தார். “அதற்குச் சொல்லவில்லை பிரபு! சிடுசிடுவென்று இருந்தால் இயற்கையில் அழகான உங்கள் முகம் விகாரமாக மாறிவிடுகிறது!
அதனால்…” பீர்பலை இடைமறித்த அக்பர் “என்ன தைரியம் இருந்தால் என்னை சிடுமூஞ்சி என்றும் விகாரமானவன் என்றும் குறிப்பிடுவாய்? இனி, உன் முகத்தில் விழிக்க நான் விரும்பவில்லை! எங்காவது கண்காணாத இடத்திற்கு ஒழிந்து போ!” என்றார். இதைக் கேட்டு மனமுடைந்த பீர்பல் உடனே அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டார்.
அடுத்த நாள் அக்பர் தர்பாருக்கு வந்ததும் சபையில் பீர்பல் மட்டும் காணப்படாததை கவனித்த அக்பர் அவரைப்பற்றி விசாரித்தார். தர்பாரில் ஒருவர் எழுந்து நின்று, “பிரபு! நேற்று நீங்கள் அவர்மீது கோபமுற்று இந்த நகரத்தை விட்டுக் கண்காணாத இடத்திற்குச் சென்று விடுமாறு கட்டளையிட்டீர்களாம்!
அதனால் பீர்பல் தலைநகரை விட்டுச் சென்று விட்டார்!” என்றார். “அடடா! பீர்பல் உண்மையாகவே சென்று விட்டாரா?” என்று அக்பர் வருந்தினார். தான் அவ்வளவு கடுமையாகப் பேசியிருக்கக்கூடாது என்று உணர்ந்த அக்பர் தன் தவறுக்காக வருந்தினார்.
பீர்பலை மீண்டும் சந்திக்க வேண்டுமென்று அவர் மனம் அடித்துக் கொண்டது. ஆனால் பீர்பல் எங்கு சென்று விட்டார் என்று யாருக்கும் தெரியவில்லை. அன்று முழுவதும் பீர்பல் எங்கு சென்றிருக்கக்கூடும் என்பது பற்றியும், அவரை எவ்வாறு மீண்டும் திரும்பி வரவழைப்பது என்றும் தீவிர சிந்தனையில் ஆழ்ந்த அக்பருக்கு, இறுதியாக ஒரு யோசனை தோன்றியது.
உடனே அவர் மந்திரியை அழைத்து “மந்திரியாரே! கொளுத்தும் நடுப்பகல் வெயிலில் குடையின்றி ஒருவன் பிரதான சாலையில் நடந்து வரவேண்டும். அப்படி வருபவனுக்கு நூறு பொற்காசுகள் தரப்படும் என்று ராஜ்யமெங்கும் தண்டோராப் போடுங்கள்!” என்றார்.
“பிரபு! இப்போது கடுங்கோடை காலம்! குடையில்லாமல் அரை மணிநேரம் நடந்தாலும் நடப்பவன் சுருண்டு விழுந்து விடுவான். அப்படி இருக்க யார் தங்கள் உயிரை நூறு பொற்காசுக்காக விட முன்வருவார்கள்?” என்றார். “நான் சொல்வது போல் தண்டோராப் போட்டு அறிவியுங்கள்! போதும்!” என்றார் அக்பர். உடனே மந்திரியும் அக்பரின் விருப்பப்படி ராஜ்யமெங்கும் தண்டோராப் போட்டு அறிவித்தார்.
அக்பரின் அறிக்கையைக் கேட்ட பொதுமக்கள் ஆச்சரியமமுற்றனர். “சக்கரவர்த்திக்கு என்ன இப்படி ஒரு வினோதமான ஆசை? இந்த சவாலை யார்தான் ஏற்பார்கள்?” என்று தங்களுக்குள் கூடிக்கூடிப் பேசிக் கொண்டார்கள். தலைநகருக்கு அருகேயிருந்த ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்த ஒரு பரம ஏழை இந்த செய்தியைக் கேட்டு பரபரப்படைந்தான்.
வாழ்க்கையில் பொற்காசுகளையே பார்த்திராத அவன் ஒரே சமயத்தில் நூறு பொற்காசுகள் கிடைக்கும் என்ற அறிக்கை அவன் ஆசையைத் தூண்டியது. அந்தத் தொகை மட்டும் கிடைத்தால், அவனுடைய ஏழைமை பரிபூரணமாக விலகிவிடும்.
அதைப்பற்றி அவன் தன் மனைவியிடம் விவாதித்த போது, அவள், “நமக்குப் பக்கத்து வீட்டில் சில நாள்களுக்கு முன் குடிவந்து இருக்கும் வீரேந்திரனைக் கேட்டுப் பாருங்களேன்! அவன் அதிபுத்திசாலியாகக் காணப்படுகிறான். அவன் நிச்சயம் இதற்கு ஏதாவது ஒருவழி கூறுவான்” என்றாள்.
அவ்வாறே அவன் தன்னுடையப் பக்கத்து வீட்டுக்காரனான வீரேந்திரனை யோசனை கேட்டவுடன் அவன் உடனே, “அது ஒன்றும் கஷ்டம் இல்லையே! நீ ஒரு நாற்காலியை அல்லது சோபாவைத் தலைக்கு மேல் சுமந்து போ! உன் மேல் வெயில்படாது!” என்று வீரேந்திரன் கூறினான்.
“ஆகா! என்ன அருமையான யோசனை? இது ஏன் யாருக்குமே தோன்றவில்லை!” என்று மகிழ்ச்சியுடன் கூவிய அந்த ஏழை, “நான் நீ கூறியவாறு நாளைக்கே தலைநகர் ஆக்ராவிற்குச் செல்லப் போகிறேன்” என்றான். அவ்வாறே மறுநாள் கிளம்பிய அவன் தலைக்குமேல் ஒரு சிறிய சோபாவைத் தூக்கிக் கொண்டு கால்நடையாகவே அக்பரின் தர்பாரை அடைந்தான்.
“பிரபு! குடை இல்லாமலே கொளுத்தும் வெயிலில் என் கிராமத்தில் இருந்து இங்கு கால்நடையாக வந்துதிருக்கிறேன்!” என்று பரபரப்புடன் அறிவித்தான். “சபாஷ்! யாருக்குமே தோன்றாத இந்த யோசனை உனக்கு மட்டும் எப்படித் தோன்றியது?” என்று அக்பர் ஆவலுடன் கேட்டார்.
“பிரபு! உண்மையில் எனக்கு இந்த யோசனையை சொல்லிக் கொடுத்தது என் பக்கத்து வீட்டுக்கார வீரேந்திரன்!” என்றான் ஏழை! அது பீர்பல் தான் என்றும் யூகித்துக் கொண்ட அக்பர் தன் திட்டம் பலித்ததையெண்ணி மிக மகிழ்ச்சியுற்றார். நான் அறிவித்தபடியே உனக்கு நூறு பொற்காசுகள் தருகிறேன். அந்தப் பணத்தை உன் கிராமத்திற்குப் பத்திரமாக எடுத்துச் செல்ல உன்னுடன் இரு காவலர்களையும் அனுப்புகிறேன்.
நீ உன் வீட்டை அடைந்ததும், அந்த புத்திசாலி வீரேந்திரனை காவலர்களிடம் ஒப்படைத்து விடு!” என்றார். அவ்வாறே மிக்க மகிழ்ச்சியுடன் அந்த ஏழை இருவீரர்களின் துணையுடன் தன் வீட்டை அடைந்தான். அவன் அடையாளம் காட்டிய வீரேந்திரனைக் காவலர்கள் தங்களுடன் அழைத்துக் கொண்டு ஆக்ரா திரும்பினர்.
தர்பாரில் நுழைந்த வீரேந்திரன் தன் முகத்தை ஒரு பையினால் மூடிக் கொண்டு வந்தான். “வீரேந்திரா! உன் முகத்தை ஏன் மூடிக் கொண்டிருக்கிறாய்? பையை அகற்று!” என்றார் அக்பர். “பிரபு! நான் வீரேந்திரன் இல்லை! நான்தான் பீர்பல்! உங்கள் முகத்தில் இனி நான் விழிக்கக் கூடாது என்ற உங்கள் கட்டளைப்படியே நான் எனது முகத்தை மூடிக்கொண்டு வந்து உள்ளேன்!” என்றான்.
“பீர்பல்! உன் முகத்தை நான் இப்போதே பார்க்க விரும்புகிறேன்! இதுவும் என் கட்டளையே!” என்று கூறிய அக்பர் தானே முன்சென்று பையை அகற்றி விட்டு, பீர்பலை மிகுந்தப் பிரியத்துடன் கட்டித் தழுவிக் கொண்டார்.
காலை வணக்கம்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குசிறப்பு செய்திகள் அனைத்தும் நன்று. 50000 பணம் உரியவரிடம் சேர்க்கப்பட்டதா என்பது குறித்து இதில் இல்லை. உரிய நபரிடம் சேர்ந்திருந்தால் நல்லது!
பீர்பால் என்று தமிழில் சொன்னாலும் ஹிந்தியில் பீர்பல் என்றே சொல்வார்கள். பதிவிலும் இரண்டுமே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பீர்பல் கதைகள் பிடித்தவை தான் - தென்னிந்தியாவின் தெனாலிராமன் கதைகள் போல!
தெனாலிராமன் கதைகளை மீள் வாசிப்பில் வாசிக்க திடீர் ஆர்வம் ஏற்பட்டிருக்கு. அதனால் நாளை வருகிறேன்.
பதிலளிநீக்குஉலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியல்: தோட்ட தொழிலாளியின் மகனுக்கு இடம்//
பதிலளிநீக்குஇச்செய்தியும் அதுல் குமார் பற்றிய செய்தியும்
மனதைக் கவர்ந்த செய்திகள்.
மற்ற இரண்டு பெண்களுக்கும் வாழ்த்துகள்.
கீதா
பீர்பல் கதைகள் எல்லாமே மிகவும் சுவாரசியமாக, வித்தியாசமான சிந்தனையுடன் இருக்கும். அப்படி இந்தக் கதைகளும் மிகவும் ரசித்து வாசித்தேன்.
பதிலளிநீக்குகீதா
தென்னிந்திய தெனாலிராமன் கதைகளும் இப்படிப்பட்டவையே சூப்பரா இருக்கும் அண்ணா முன்னுரையில் சொல்லியிருப்பது போல
பதிலளிநீக்குகீதா
முதல் வழக்கு வெற்றியில் முடிவு பீர்பலின் தீர்ப்பை கதை முடியும் முன்னரேயே ஊகிக்க முடிந்தது,
பதிலளிநீக்குகீதா
விஞ்ஞானியான இளைஜருக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபணத்தை ஒப்படைத்த நேர்மையான பெண், இரு கைகளாலும் எழுதும் சாதனைப் பெண் பாராட்டுகள்.
ஏழையாகவே ஊக்கக் கல்வி பணம் தீர்ப்பு நல்ல உதவி.
பீபால் கதைகள் படித்திருக்கிறேன். இப் பொழுதும் படித்தேன். பகிர்வுக்கு நன்று.
எரிச்சலாக வருகிறது. ஒருவரின் கதை என்று இத்தனை நாளும் நினைத்திருந்ததை இன்னொருவரின் கதை என்றால்?.
பதிலளிநீக்குஉதாரணம் கடைசிக் கதை. இது தெனாலிராமன் கதை என்றே நமக்கு அறிமுகம்
'இன்னிக்கு பீர்பால் கதைய்யா' இது என்றால்?
உதாரணம் கடைசிக் கதை. என் முகத்தில் இனி விழிக்காதே என்ற அரசருக்கு பானையைத் தலையில் கவித்துக் கொண்டு வந்த தெனாலிராமன் கதை நினைவுக்கு வருகிறது.
மொத்த பீர்பால் கதைகளில் இப்படி எத்தனையோ?
என்னுடைய அறிவு தெனாலிராமன் காலம் அக்பருடைய காலத்திற்கு பின் கிருஷ்ண தேவராயர் காலம். ஆக அறியாமல் இருவரும் ஒரே உத்தியைக் கடைபிடித்திருக்கலாம் அல்லவா?
நீக்குதெனாலிராமன் கதையில் அரசர் தெனாலிராமனை கண்டுபிடிக்க முயற்சி செய்யவில்லையே. இந்த கதையில் அக்பர் பீர்பலைக் காண முயற்சி செய்து அவரை பிடிப்பதும் ஒரு சம்பவம் கூடுதலாகி உள்ளதே!
நீக்குஅது சரி, 1..2..3.. என்று கதைகளுக்கு வரிசையாக எண்ணிடுவதை விடுவதை விடுத்து, ஏன் இப்படி எல்லாக் கதைகளுக்கும். 1.. எண்ணையே கொடுத்திருக்கிறீர்கள்?
பதிலளிநீக்குஇந்த ஐயத்திற்கு எடிட் செய்தவரைத் தான் கேட்கவேண்டும். எடிட் செய்தவர் மிக்க என்பதை மிச்ச என்றும் மாற்றி விட்டார். அதே போல் 1, 2, 3 என்பதை எல்லாம் 1 என்று மாற்றிவிட்டார். என்னுடைய ஒரிஜினல் லிங்க்
நீக்குhttps://docs.google.com/document/d/1IOzI3u3SfejKWIEX_QAYWimo2uXsynVtaL0P6KUqSLM/edit?usp=sharing
Jayakumar
'மிக்க' என்பதை இரண்டு இடங்களில் நான்நான் மாற்றினேன். இரண்டு இடங்களிலும் 'மிக்க' என்றால் சரியான அர்த்தம் வரவில்லை. 'மிச்ச' என்றால் ஓரளவு அர்த்தம் வருகிறது. எனவே தான் மாற்றினேன். ஆனால் எண்கள் எதுவும் ஒன்று இரண்டு மூன்று என்பதெல்லாம் நான் எதுவும் மாற்றவில்லை. கீதாவும் மாற்றவில்லை என்று சொல்கிறார்.
நீக்குஸ்ரீராம் நானும் நம்பர் மாற்றவில்லை... நானும் பார்த்தேன் 1,2,3 என்று வரணும் எப்படி நம்பர் மாறியிருக்கிறதே என்று...நான் அதிகம் எடிட் கூட செய்யவில்லை காப்பி பேஸ்ட் போட்டு ப்ளாகரில் அப்படியே ஹெச்டிஎம் எல் அனுப்பினேன்,..
நீக்குஆனால் ஸ்பேசிங்க் பிரச்சனை இருந்தது, அதை அட்ஜஸ்ட் செய்ய வேண்டி இருந்தது.
கீதா
ஓ!....
பதிலளிநீக்குஇன்று வியாபாரம் குறைவு. எல்லோரும் கொலு பார்க்கப் போய்விட்டார்கள். வந்தவர்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குமுடிந்த வரை நானும் உங்கள் தோளோடு தோள் கை போட்டுக் கொண்டு இந்தப் பயணத்தில் கூட வரலாம் என்று பார்க்கிறேன். உடன் நலனும் மனமும் ஒத்துழைக்க வேண்டும். பார்க்கலாம், ஸார்.
பதிலளிநீக்குபோற்றுதலுக்கு உரியவர்கள் போற்றுவோம்
பதிலளிநீக்குசிறப்பு செய்திகள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குஎஸ்.பர்வின் பானு அவர்களின் பீர்பால் கதைகள் அருமை.
நன்றி.