திங்கள், 2 மார்ச், 2015

'திங்க'க்கிழமை : முருங்கைக் கீரை



                                                                                 
                                                            Image result for drumstick images
மார்க்கெட்டில் முருங்கைக்காய் ஒன்று பத்து ரூபாய்.  நம்ம வீட்டுத் தோட்டத்துல இருக்கற மரமா,  காய்க்கற வழியாகவும் தெரியல! என்ன செய்யலாம்?


காய்தானே இல்லை?  இலையைப் பறித்துவிட வேண்டியதுதான்!  முருங்கை இலையில் வைட்டமின் A, இரும்புச்சத்து எல்லாம் இருக்கு என்று யாரோ சொன்னாங்களே..


எது இருந்தா என்ன,  இல்லாட்டா என்ன.. முருங்கை இலையைப் போட்டுச் செய்யும் எதுவும் எனக்குப் பிடிக்கும்!  விடலாமோ?  பறித்து விட்டோம்.


கடையில் கீரை கிடைத்தால் வாங்கி வா என்றால் பாஸின் பதில் எப்போதுமே "கிடைக்கலீங்க" தான் என்பதற்கு ஒரு காரணம் உண்டு!  "யார் ஆய்வது?"



முதலில் இப்படி இருக்கும் மு. கீரையை இப்படி பிரித்துக் கொள்ளவேண்டும்.



அப்புறம் இப்படி...


அப்புறம் நான் இன்னமும் கூட தனித்தனி இலையாகப் பிரித்துக் கொள்வேன்.

முருங்கை இலையில் சமையல் வகை என்னென்னவோ பண்ணலாம்.  நான் இப்போ என்ன பண்ணினேன் என்பதைப் பற்றி மட்டும் சொல்கிறேன்.  நாளை செய்து தருகிறேன் என்று சொன்ன பாஸை எதிர்த்து நின்றேன்.  "எனக்கு இப்பவே வேணும்..... எனக்கென்ன செய்து கொள்ளத் தெரியாதா?"


"என்ன செய்யப் போறீங்க"


"என்னவோ ஒன்று... பாரு!"


வெறும் துவட்டலோ, தேங்காய்த் துருவல் போட்ட துவட்டலோ செய்துக் கொள்ளலாம் என்றுதான் நினைத்தேன்.  அப்புறம் யோசித்து, இரண்டு வெங்காயம், ஒரு தக்காளி நறுக்கிக் கொண்டு, அதை வதக்குமுன் இரண்டு பல் பூண்டை நசுக்கிப் போட்டேன்.  பிறகு ஆய்ந்த இலைகளை (நீரில் நன்றாக சுத்தம் செய்து கொண்டுதான்) வாணலியிலிட்டு, தேவையான உப்புப் போட்டு, கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடி வைத்தேன்.



கொஞ்ச நேரத்திலேயே அது வெந்து விட, காரப்பொடி போடலாமா, சாம்பார்ப்பொடி போடலாமா என்று யோசித்து, சாம்பார்ப்பொடியே போடலாம் என்று முடிவெடுத்து, போட்டு, திருப்பி விட்டு இறக்கி மூடினேன்.


தேங்காய்த் துருவல் அப்படியேவோ,  இல்லை லேசாக அரைத்து விட்டோ சேர்க்கலாமா என்று நினைத்து, பின்னர் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டேன்.   செய்திருக்கலாம்.



சாதாரணமாக பாஸிடம் நான் சொல்வது என்னவென்றால் எந்தக் கீரை செய்யும்போதும்  "சாப்பாட்டுக்கு முன்னரே என் பங்கு ( !!! ) கீரையை 'கப்'பில் போட்டுக் கொடுத்துடு" என்று சொல்வது வழக்கம்.  சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிட்டால் அதன் சுவை கெட்டு விடும் என்று தோன்றும் எனக்கு!


எனவே இதையும் அப்படிக் கொஞ்சம் சாப்பிட்டேன்.  (வெங்காயம், அதிலும் பூண்டு போட்டால் என் பாஸ் அதன் கிட்டேயே வரமாட்டார்!) அப்புறம் பாக்கி இருந்ததை சாப்பாட்டுடன் சேர்த்துத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டு விட்டேன்.


இன்னும் நிறைய முருங்கைக் கீரை பாக்கி இருந்தது.  அதை மறுநாள் பாஸ் பொரிச்ச குழம்பாக வைக்க, முதல்நாள் நான் செய்திருந்ததை விட, இது சுவையாக இருக்க, எல்லோருமே உன்னைப்பிடி, என்னைப்பிடி என்று சாப்பிட்டு விட்டோம்!

32 கருத்துகள்:

  1. முருங்கைக்கீரைப் பருப்பு உசிலி, முருங்கைக்கீரை அடையும் செய்து சாப்பிடுங்க. பொரிச்ச குழம்பு நல்லாவே இருக்கும். நீங்க செய்த முறையிலும் செய்வார்கள். சாதாரணமா அடைக்கு அரைச்சும் அதிலே முருங்கைக்கீரையைச் சேர்க்கலாம். வெறும் அரிசி அடையிலேயும் முருங்கைக்கீரையைச் சேர்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் கீதா மேடம்! அவ்வளவும் நாங்களும் செய்வோம். பதிவில் சொல்லியிருக்கறபடி,

    //முருங்கை இலையில் சமையல் வகை என்னென்னவோ பண்ணலாம். நான் இப்போ என்ன பண்ணினேன் என்பதைப் பற்றி மட்டும் சொல்கிறேன்//

    அதனால் இது மட்டும்!

    :)))))))))))

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா

    எனக்கு மிகவும்பிடித்தது உணவு பற்றிய அசத்தல் நன்று...த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. சின்னதாக ஒரு கசப்பு சுவை - ரொம்பவே பிடிக்கும்...

    பதிலளிநீக்கு
  5. எனக்கு முருங்கை பிடிக்காது. இருந்தாலும் பதிவு நன்றாக இருக்கு படித்து ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. முருங்கைக் கீரையை ஆய்வது முதற்கொண்டு பட விளக்கம் அருமை. செய்ததும் நன்றாக இருக்கும். ஒரு பழமொழி உண்டு. வெந்து கெட்டது முருங்கை.வேகாமல் கெட்டது அகத்தி என்று.

    பதிலளிநீக்கு
  7. புதிய முயற்சியில் செய்தது பார்க்கவும் அருமையாய் இருக்கிறதே:). விளக்கமும் படங்களும் பகிர்வும் நன்று.

    பதிலளிநீக்கு

  8. எனக்கு முருங்கை இலை பிடிக்காது. உடம்புக்கு நல்லது என்று என் மனைவி சமைக்கும் போது ஆடு தின்பவற்றை தழையை எனக்குத் தருகிறாய் என்று கிண்டலுடன் கோபித்துக் கொள்வேன்

    பதிலளிநீக்கு
  9. என் அம்மா செய்யும் முருங்கைகீரை துவரன் எனக்கு மிகவும் (துவரம் பருப்பு தேங்காய், சின்னவெங்காயம் எல்லாம் போட்டு சூப்பராக இருக்கும்.)பிடிக்கும். உங்கள் பாஸ் போலதான் கீரை ஆய சோம்பல். இங்கு எல்லோர் வீட்டுமுன்பும் உண்டு கேட்டால் கொடுப்பார்கள் ஆனால் கேட்க மாட்டேன்.
    பொரிச்ச குழம்பு, அடை, கூட்டம்சாதத்திற்கு எல்லாம் முருங்கை கீரை சுவை கூட்டும்.
    நீங்கள் செய்த ரெசிபி அருமை.

    பதிலளிநீக்கு
  10. சாப்பிட்டதில்லை.
    முருங்கை ஏன் காய்க்கவில்லை. இன்னொரு நண்பர் வீட்டிலும் இதே குறை. "பத்து வருசத்துக்கு முன்னாலெல்லாம் அப்படியே காய்ச்சுத் தொங்கும்" என்றபடி இப்போதைய மர நிலையைப் புலம்புவார். முருங்கை மரம் ஏதாவது காலவரம்புக்குட்பட்டதா? இல்லை இதுவும் சிட்டுக்குருவியா?

    பதிலளிநீக்கு
  11. எனக்கு மிகவும் பிடித்தது முருங்கீரை!

    பதிலளிநீக்கு
  12. இதுவரை முருங்கைக் கீரை சாப்பிட்டதில்லை. முருங்கக்கீரை அடை கேள்விப்பட்டிருக்கிறேன்.
    @கோமதி அது என்ன கூட்டம்சாதம்? எழுதினீர்களானால்
    ஸ்ரீராம் அதையும் செய்து பார்ப்பார்! அடுத்த 'திங்க' கிழமையில் எங்களுக்கும் ரெசிபி கிடைக்கும்!!

    பதிலளிநீக்கு
  13. //முருங்கை ஏன் காய்க்கவில்லை. //

    முருங்கை பூத்துக் காய்ப்பதற்கு அடிமரத்தில் கொஞ்சம் போல் செதுக்கி எடுத்துவிட்டுப் பெருங்காயத்தைக் கரைத்து ஊற்ற வேண்டும். காலையிலேயே எழுதணும்னு நினைச்சு மறந்தே போச்சு.

    //இன்னொரு நண்பர் வீட்டிலும் இதே குறை. "பத்து வருசத்துக்கு முன்னாலெல்லாம் அப்படியே காய்ச்சுத் தொங்கும்" என்றபடி இப்போதைய மர நிலையைப் புலம்புவார்.

    முருங்கை பத்து வருஷத்துக்குப் பின்னரும் காய்ப்பது என்பது அரிது. அந்த மரத்திலேயே கிளை ஒன்றை ஒடித்து நட வேண்டியது தான். கடந்த பத்து வருஷங்களில் கம்பளிப் பூச்சி அரித்திருக்கலாம். முருங்கை மரத்துக்கும் கம்பளிப் பூச்சிக்கும் நெருங்கிய நட்பு. பலரும் அதனாலேயே முருங்கை மரம் வளர்க்க மாட்டார்கள். வைத்தாலும் கொல்லைக் கடைசியில் வைப்பார்கள். வாசலில் வேப்பமரமும், கொல்லையில் கடைசியில் முருங்கையும் வைத்திருப்பார்கள். :))))

    பதிலளிநீக்கு
  14. இதே போல் எலுமிச்சை, நாரத்தை, சாத்துக்குடி பூத்துக் காய்க்கவில்லை எனில் பௌர்ணமி அன்று அரிசிப் புட்டு செய்து மாலை சந்திரன் வந்தப்புறமா நிவேதனம் செய்யணும். :))) ஒரு சிலர் கன்னிப் பெண்களை விட்டுப் பௌர்ணமியும் கிரஹணமும் சேர்ந்திருக்கும் அன்று அடி மரத்தைக் கொஞ்சம் போல் வெட்டி விட்டுச் செருப்பால் அடிக்கச் செய்வார்கள். அப்போதும் புட்டு நிவேதனம் செய்யலாம். ஆனால் கிரஹணம் முடிந்ததும் செய்யணும். :)))) இது எல்லாம் நம்பிக்கை இருப்பவர்களுக்கு மட்டுமே! :)))))

    பதிலளிநீக்கு
  15. முருங்கைக்கீரையின் சுவை அலாதியானது.சூப்பர்.

    பதிலளிநீக்கு
  16. நன்றி ரூபன்.

    நன்றி DD.

    நன்றி RAMVI

    நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன். (முதல் வருகை? மீண்டும் மீண்டும் வருக!)

    நன்றி ராமலக்ஷ்மி.

    நன்றி 'தளிர்' சுரேஷ்.

    நன்றி ஜி எம் பி ஸார். சில பேருக்கு முருங்கை இலை ஒத்துக் கொள்ளாது. வயிற்று வலி, வயிற்றுப்போக்கு என்று படுத்தும்.

    நன்றி கோமதி அரசு மேடம். சி.வெ., து.ப இல்லாமல் பா.ப., தே போட்டு
    மறுநாள் பொரிச்ச குழம்பு செய்தார் பாஸ். அதன் சுவை.... ஸ்ஸ்ஸ்ஸ்...!!!

    நன்றி துரை.

    நன்றி புலவர் ஐயா.

    நன்றி ரஞ்சனி மேடம். அடுத்த வாரத்துக்கு வேறொரு டிஷ் ரிசர்வ்ட்! போன வாரம் 'அதை'ச் செய்தபோது பு.ப எடுக்கவில்லை. எனவே மறுபடி செய்து, பு.ப எடுத்துப் போடுவதா, அல்லது பு.ப இல்லாமல் இணையப் படங்களோடு பதிவிடுவதா என்று பார்க்க வேண்டும்!

    கீதா மேடம்.. மரம் காய்க்க நீங்கள் சொல்லி இருக்கும் முதல் ஐடியா சூப்பர்.

    நன்றி அனிதா ஷிவா. (முதல் வருகை? வருக... அடிக்கடி வருக!!)

    பதிலளிநீக்கு
  17. கீரை சமையல் அற்புதம். இந்தத்தடவை ஸ்ரீராம் சமையல் செய்து சாப்பிடணும்.
    அடடா என்ன பக்குவம். சூப்பர். பின்னூட்டங்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. //..செருப்பால் அடிக்கச் செய்வார்கள்..//

    ஐடியா குடுத்தவங்களையா?

    பதிலளிநீக்கு
  19. பயங்கரமா இருக்குதே முருங்கைக்காய் சமாசாரம்?!

    பதிலளிநீக்கு
  20. அப்பாதுரை, விவிசி. அதிலும் தொலைக்காட்சியில் சீரியஸான காட்சி. அப்போப் பார்த்து நான் சிரிப்போ சிரிப்பு. ஜிவாஜி உருகி உருகி நடிக்கிறச்சே சிரிக்கிற பீலிங்கெல்லாம் (எ.பி. இல்லை) வந்துட்டது. :)))))))

    பதிலளிநீக்கு
  21. முருங்கைக் கீரை வைத்து செய்யும் ரெசிபி வகைகள் கிடைத்தது . திங்கக் கிழமைப் பதிவு முருங்கைக் கீரையால் மேலும் சுவையாகியது.
    பாராட்டுக்கள்.../..

    பதிலளிநீக்கு
  22. அட! சமையலிலும் எக்ஸ்பெர்டா நீங்க!!! சூப்பர்!

    பதிலளிநீக்கு
  23. யும்மி! உங்கள் ரிசிப்பி நாங்கள் செய்வதுண்டு என்றாலும் உங்கள் செய்முறையும், புகைப்படமும் நாவில் எச்சல் ஊறவைத்துவிட்டது. அப்படியே வந்து உங்கள் வீட்டில் உள்ளதை உங்களுக்கு வைக்காமல் எடுத்து சாப்டுடலாமானு தோன்றியது.....ம்ம்ம்ம் ரொம்பப் பிடிக்கும் எப்படிச் செய்தாலும்.....

    பதிலளிநீக்கு
  24. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் ,யாரந்த பாஸ் :)

    பதிலளிநீக்கு
  25. முருங்கைக் கீரை போட்டு, தேங்காய்ச் சோறு செய்வோம். சூப்பரா இருக்கும். தேங்காய் + கரம் மசாலா + குருமா மசாலா அரைச்சு சேர்த்து, அதோடு தேங்காய்ப் பாலும் சேர்த்து செய்தால், பிரியாணி தோற்கும். சூப்பரா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  26. முருங்கைக் கீரை..... எப்போதோ இந்தியாவில் சாப்பிட்டது.....
    பதிவைப்பார்த்ததும் ஆசையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  27. எனக்கும் முருங்கக்கீரையை யாராவது செய்து கொடுத்தால் ரொம்பாப் பிடிக்கும்.
    இனிமே உங்க வலைப்பக்கமே வரக்கூடாது போல இருக்கே. பின்ன என்னங்க, சமைக்கவே தெரியாத எனக்கு சமைக்க காத்துக்கொடுத்துடுவீங்க போல இருக்கே. இந்த ஆட்டத்துக்கு நான் வரலைப்பா..

    பதிலளிநீக்கு
  28. ரஞ்சனி, கூட்டாம்சோறு என்பது சாம்பார் சாதம் போலத்தான்.முருங்கைகாய், முருங்கக்கீரை, வாழைக்காய், கத்திரிக்காய், கொத்தவரங்காய், மாங்காய், உருளைகிழங்கு, சேனைக்கிழங்கு, காரட், எல்லாம் போடலாம். மிளகாய்வற்றல் வெள்ளைபூண்டு சில பல், தேங்காய், சீரகம் அரைத்து போட வேண்டும். அரிசி , துவரம் பருப்புடன் எல்லா காய்கறிகளையும் போட்டு வேக வைத்துக் கொண்டு, கொஞ்சம் புளியை கரைத்து ஊற்றி, (மாங்காய் போடுவதால் புளி கொஞ்சம் போதும்)
    அரைத்த விழுதையும் போட்டு எல்லாம் வெந்தவுடன் இறக்கி சின்னவெங்காயம் கருவேப்பிலை தாளித்து போட வேண்டும். வெங்காயவடகம் தனியாக வறுத்து சாப்பிடும் வடகம்( உளுந்து அரைத்து அதனுடன் பூண்டு, சின்னவெங்காயம், சீரகம், கடுகு கருவேப்பில்லைப்போட்டு கிள்ளிவைத்து காய வைத்த வடகம்) வறுத்து சாதத்தில் போட்டால் கம கம கூட்டாம் சோறு ரெடி.

    திருநெல்வேலிப் பக்கம் விருந்தினர் வருகையின் போதும், ஏதாவது ஊர் சுற்றிப்பார்க்க போகும் போது செய்து கொண்டு போவார்கள். புளிப்பு, காரம், நிறைந்த சுவையான சாதம்.



    பதிலளிநீக்கு
  29. அரைக்கீரையும் போடலாம், கூட்டாஞ்சோறுக்கு.

    பதிலளிநீக்கு
  30. வாவ்! நன்றி கோமதி! நீங்கள் எழுதியிருப்பதை படித்துக் கொண்டே மனதில் இந்தக் கூட்டாஞ்சோறு செய்தேன். கூடவே வடகம்!
    வடகம் இந்த கூட்டாஞ்சோறில் நன்றாக ஊறி மிகவும் ருசியாக இருக்கும் இல்லை?
    பூண்டு நான் சமையலில் பயன்படுத்துவது இல்லை. ஆனால் மற்ற காய்கறிகள் சேர்த்து (கட்டாயம் வடகம் உண்டு!) செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!