==========================================================================================================================================================================================
நான் படிச்ச கதை
(JKC)
இசைக்காத இசைத்தட்டு!
கதையாசிரியர்: தங்கர்பச்சான்
இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர்,
தெருக்கூத்து கலைஞர் என்று பன்முகம் கொண்ட கலைஞர். இவருடைய அழகி, சொல்ல மறந்த கதை,
ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற திரைக்காவியங்களை மறக்க முடியாது. பண்ருட்டி சொந்த ஊர்.
முன்னுரை
வடதமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தின்
மக்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள் அடிப்படையில் கதை சொல்லப்பட்டுள்ளது. கதையில் புகுமுன்
சில விளக்கங்கள் தெரிந்து கொள்வது நல்லது.
1.
பெண் வயதுக்கு வந்து விட்டால் ஊரறிய
ஒரு கல்யாணம் போல் மொய் விருந்துடன் கொண்டாடுவார்கள்.
2.
எந்த நிகழ்ச்சியானாலும் தாய் மாமனுக்கு
முக்கியத்துவம் அதிகம்.
3.
முறைப்பெண் முறை மாப்பிள்ளை திருமணங்கள்
சாதாரணம்.
4.
கல்யாணம் மாப்பிள்ளை வீட்டார் அவர்களுடைய
வீட்டில்/மண்டபத்தில் அவர்களுடைய செலவில் நடத்துவர்.
5.
மாப்பிள்ளை அழைப்பு போல் முதல் நாள்
பெண் அழைப்பு முக்கியம்.
6.
பெண் வீட்டு சீர் கல்யாணமண்டபத்தில் காட்சிப் படுத்தப்படும்.
7.
சப்தபதி, ஹோமம் போன்ற சடங்குகள் கிடையாது.
தாலி, மற்றும் பொட்டு கட்டுதல் என்பவை உண்டு.
8.
ஒருமையில் விளிப்பது, பேசுவது, போன்ற
சில பழக்கங்கள் உண்டு. வயது வித்தியாசம் இன்றி நீ வா போ போன்ற பிரயோகங்கள் அருவருப்பாக இருக்கலாம்.
முக்கியமாக எல்லோருக்கும் பெயர் ஒன்றும்,
புனைபெயர் ஒன்றும் இருக்கும். புனைபெயராலேயே பலரும் அறியப்படுவார்கள். கதையில் கொடிபவுனு,
கண்ட்ரோல் இரண்டும் புனை பெயர்களே.
கதை சுருக்கம் என்றில்லாமல் கதையின்
சில பத்திகளை மாத்திரம் நீக்கி தந்திருக்கிறேன். கதை ஒரு இயக்குனர் தயாரிப்பாளருக்கு
கதை சொல்லும் பாணியில் அமைந்துள்ளது. பதிவின்
நீளம் அதிகம் ஆகி விட்டது. பொறுமையுடன் உட்புகுவதற்கு நன்றி.
********************
கொடிபவுனு
அம்மா வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் வாழ்க்கைப்பட்ட ஊர் பக்கத்தில்தான் இருக்கிறது
என்பதால்… நினைத்தால் போதும், குழந்தைகளை இடுப்பில் ஒன்றும் கையில் ஒன்றுமாகப் பிடித்துக்கொண்டு
ஏரிமேட்டினைக் கடந்து மலைக்குள் இறங்கி, ஓடைக்குள் நடந்து, சுடுகாட்டு வழியாக அம்மா
வீட்டுக்கு அரை மணி நேரத்தில் வந்து விடுவாள்.
அம்மா
வீட்டுக்கு கொடிபவுனு வந்து சேர்ந்தபோது இரவாகிவிட்டதால், மருத்துவரிடம் குழந்தையைக்
கொண்டுபோய்க் காண்பிக்க முடிய வில்லை. பெரிய மகளுக்கு வயிற்றுப்போக்கு. இரவு முழுக்க
உறக்கம் இல்லாமல் வயிற்றுவலியால் அவதிப்பட்டுக்கொண்டே இருந்தாள்.
விடிந்ததும்
முதல் வேலையாக கொடிபவுனு தன் மகளை ‘கன்ட்ரோல் அம்மா’விடம் அழைத்துப் போனாள். ‘அரங்கநாதன்
அம்மா’ என்றுதான் சொல்ல வேண்டும் என்றாலும், யாரும் அப்படி அழைப்பதில்லை.
கொடிபவுனின்
வரவு அவளை எழுந்து உட்காரவைத்தது. நெடுநாட்களுக்குப் பின் முதல் முறையாக வந்திருக்கும்
தம்பி மகளைப் பார்த்ததும், மனதுக்கு ஆறுதலாக இருந்தது.
கொடிபவுனு
அந்த வீட்டினுள் கால் வைத்தபோது, அவளால் தன் மாமன் கன்ட்ரோலை மறந்து நிற்க முடியவில்லை.
வீட்டினுள் சூழ்ந்திருந்த இறுக்கம் அவளின் மனதுக்குள்ளும் பரவியது. அத்தை தைலம்மை,
கொடிபவுனைத் தடவிக் கொடுத்தாள்.
குழந்தைக்கு
ஏதோ விளையாட்டின்போது குடலேற்றம் நிகழ்ந்துவிட்டது. சிறிய பித்தளைச் சருவத்தில் தண்ணீரைக்
கொண்டு வந்து வைத்துவிட்டு, குழந்தையின் இரண்டு கைகளையும் அசையாமல் பிடித்துக்கொண்டாள்
கொடிபவுனு. தண்ணீரைத் தன் வலது கை விரலால் தொட்டுத்தொட்டு குழந்தையின் அடிவயிற்றின்
குடல் பகுதியில் ஒரே சீராக மேலிருந்து கீழாக தைலம்மை தட்டிக்கொண்டே இருந்தாள். குழந்தை
வலியால் துடித்தது.
மழை
ஒரே சீராகப் பெய்துகொண்டு இருந்தது. கூரையின் ஓடுகளின் வழியே தண்ணீர் கீழே வழியாதபடிக்கு
அந்தக் காலத்துப் பழைய இசைத்தட்டுக்கள் ஓடுகளின் இடுக்கில் சொருகிவைக்கப்பட்டிருந்தன.
ஒரு காலத்தில் ஓயாமல் இசைத்த அந்த இசைத்தட்டுகளெல்லாம் இப்போது மழையிலும் வெயிலிலும்
காய்ந்துகிடப்பதை கொடிபவுனு பார்த்தாள். பல இசைத்தட்டுகள் பாதியாக உடைக்கப்பட்டு சொருகப்
பட்டிருந்தன. அதனைப் பார்க்கப் பார்க்க, கன்ட்ரோலை அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
சிறு
வயதிலேயே தந்தையை இழந்த அரங்கநாதன் என்கிற ஒரே மகனை மனம் கோணாமல் செல்லமாக வளர்த்தாள்
தைலம்மை. ஒன்றாம் வகுப்பில் பள்ளியில் சேர்க்கும்போதே இரண்டு ஜோடி மேளதாளத்தோடுதான்
பள்ளிக்குள் நுழைந்தான்.
சின்னப்
பள்ளிக்கூடத்தின் எதிரிலிருந்த பெரிய பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்புக்குப் போகும்போதும்
மேளதாளம் இல்லாமல் போக மாட்டேன் என அடம்பிடித்தான். அப்போதும் அவனது ஆசையை நிறைவேற்ற
ராசமாணிக்கம் தவற வில்லை. தனது மகள் கொடிபவுனு வையும் அவனோடு மேளதாளத்துடன் பெரிய பள்ளிக்கூடத்துக்கு
அழைத்துப் போனார். ஐந்தாம் வகுப்புக்குள்ளேயே இரண்டு ஆண்டுகள் தேர்ச்சி பெறாமல் இருந்ததால்,
தன்னைவிட இரண்டு வயது குறைந்த கொடிபவுனுவின் வகுப்பிலேயே கன்ட்ரோலும் படிக்கும்படி
ஆகிவிட்டது.
கொடிபவுனு
தனக்குத்தான் சொந்தம் என்கிற உணர்வு அவனது மனதில் குடி கொண்டுவிட்டது. பள்ளியில் யாருடனும்
அவளை அவன் விளையாட அனுமதிப்பதில்லை. கொடிபவுனு அவனுக்குப் பேரழகியாகத் தெரிந்தாள்.
அரங்கநாதனுக்கும்,
கொடிபவுனுக்கும் ‘பதியின் கன்று’ எனச் சொல்லி பூவரசு கன்றினை ஆசிரியர் அறிவித்துக்
கொடுத்தபோது, இருவரும் ஒன்றாக சேர்ந்து வாங்கி னார்கள். அப்போது அவனது ஆறாம் விரல்
அவளின் கையில் உரசியதை, அவளால் தாங்கிக்கொள்ள முடிய வில்லை. இவனோடு சேர்ந்து எப்படி
ஒரு மரத்தை வளர்க்கப் போகிறோம் எனும்போதே அவளுக்குக் குமட்டி வாந்தி வந்தது. கட்டுப்படுத்திக்
கொண்டுதான் பூவரசுக் கன்றினை குழிக்குள் வைத்தாள். மண்னைக் குழிக்குள் தள்ளி மூடும்போது
அந்த ஒட்டியிருந்த ஆறாம் விரல் சுருங்கிய நகத்தோடு சூம்பி ஆடியதைப் பார்த்த கொடி பவுனு,
குழிக்குள்ளிருந்து கையை விலக்கிவிட்டு எழுந்தாள். கற்பனையில் மிதந்திருந்த கன்ட்ரோல்
அவளின் கையைப் பிடித்து இழுத்த போது மேலும் அதனைப் பொறுத்துக் கொள்ளாத கொடிபவுனு,
‘கைய எடுரா!’ எனத் திட்டியதை யாரும் கவனிக்கவில்லை என்றாலும், கன்ட்ரோல் மனதுக்குள்
நொறுங்கிப் போனான்.
எத்தனையோ
முறை ஆசை ஆசையாக வாங்கிக் கொடுத்தபோது, அதையெல்லாம் பெற்றுக்கொண்ட கொடிபவுனு, இப்போது
தான் எது கொடுத்தாலும் வாங்காததையும், தன்னை வெறுப்பதையும் அவனால் பொறுத்துக்கொள்ள
முடியவில்லை.
‘‘ஏண்டா
என்னைக் கொல்றே? ஒன்னாலதாண்டா நான் சாவப் போறேன்’’ என அனைவரின் முன்னா லேயும் திட்டினாள்.
அப்போதுகூட அவள்தான் முக்கியம் என நினைத் தானே தவிர, அந்த அவமானத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
காலமாற்றத்தில்
கொடிபவுனுவுக்குப் பிடிக்காமல் போனது போலவே, கன்ட்ரோலை அவளது அப்பா ராசமாணிக்கத்துக்கும்
பிடிக்காமல் போனது. எட்டாம் வகுப்போடு படிப்பை மூட்டை கட்டி விட்டவனை மாப்பிள்ளை
எனக் கூப்பிட அவருக்கு விருப்பமில்லை. ராசமாணிக்கம் தனக்குப் பெண்தான் முக்கியம் என
நினைத்தார். அவனிடம் தனது மகளை இனி பார்க்கக் கூடாது என எச்சரித்தார். தனக்குச் சொந்தமானவள்
தன்னை விட்டு விலகிப் போவது, அவனது பெரும் பிரச்னையாக இருந்தது. அம்மாவிடம் அது பற்றி
சொல்லிச் சொல்லி அழுதான்.
அவள்
வயதுக்கு வந்து விமரிசையாக மஞ்சள் நீர் சடங்கு விழா நடத்திய போதுகூட, தாய்மாமனான கன்ட்ரோலுக்கு அழைப்பு இல்லை. மரியாதை இல்லாத இடத்துக்கு நாம் போகக் கூடாது எனத் தைலம்மை
எவ்வளவோ சொல்லியும், அவன் கேட்க வில்லை. போட்டிக்கு அவன் ஒலிபெருக்கி ஒன்றை விலைக்கே
வாங்கி வந்து, அவனே பந்தல் கம்பத்தில் கட்டினான். எவ்வளவு சத்தம் கூட்டிவைக்க முடியுமோ
அப்படி அலறவிட்டான்.
கொடிபவுனுக்கு
பந்தலுக்கு வந்து மணையில் அமரவே பிடிக்கவில்லை. ‘‘என்னைவிட்டால் யாருமில்லை, கண்மணியே
உன் கையணைக்க, உன்னைவிட்டால் வேறொருத்தி எண்ணமில்லை நான் காதலிக்க…’ இந்த பாடலையேதான்
திரும்பத் திரும்ப ஒலிக்கச் செய்தான். அந்தப் படம் வெளியாகியிருந்த நேரம் அது. பாடலை
முழுமையாக ஒலிபரப்பி னாலும் பரவாயில்லை. அந்த இரண்டு வரிகளை மட்டுமே திரும்பத் திரும்ப,
நிறுத்தி நிறுத்தி ஒலிக்கச் செய்துகொண்டு இருந்தான். யாருக்கும் போய்க் கேட்கிற துணிவில்லை.
கேட்டால் அவன் பிடித்துக் கொள்வான். அவனைச் சமாதானப்படுத்த முடியாது என்பது தெரியும்.
இவனும் எவனாவது வந்து கேட்க வேண்டும் என்றே எதிர் பார்த்தான்.
எவ்வளவு
நேரந்தான் அவனாலும் தொடர்ந்து இந்த வேலையைச் செய்ய முடியும்? சோர்ந்துபோனான். சடங்கு
களெல்லாம் முடிந்து கொடிபவுனு உள்ளே சென்றிருந்தபோது, சிறுநீர் கழிக்கச் சிறிது நேரம்
நிறுத்திவிட்டுப் போனான். அவன் திரும்பி வந்து அதே பாடலை ஒலிபரப்பலாம் என முற்பட்டபோது,
அந்த இசைத்தட்டு அங்கில்லை. தேடித் தேடிப் பார்த்து அலுத்துப் போனான். கோபத்தை யாரிடம்
காண் பிப்பது எனத் தெரியவில்லை. அவ்வளவு நேரம் வீராப் போடு இருந்தவன், வழி யிலிருந்தவர்களை
எல்லாம் தள்ளிக்கொண்டு நேராக வீட்டுக்குள் நுழைந்து கொடிபவுனு இருக்கும் அறையைத் தேடினான்.
இறுதியாக,
சாமி அறைக்குள் நுழைந்தான் அவன். அறையில் கொடிபவுனுவும் அவளின் தங்கை முத்துலட்சுமியும்
மட்டுமே அமர்ந் திருந்தார்கள். அவனைப் பார்த்ததும் அவள் எழுந்திருக்கவில்லை. இவ்வளவு
நேரம் அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருந்த பெண்களெல்லாம் அடுத்து நடக்கப் போவதைப்
பார்ப் பதற்காக ஆர்வத் தோடு முற்றத்தில் காத்திருந்தார்கள். கன்ட்ரோல் உச்சக் கட்ட
கோபத்தில் இருந்தான். அவளை அடிக்கிற மாதிரி முன்னோக்கி ஓடுவதும் பின் கமலை மாடு மாதிரி
பின்னோக்கி வருவதும், மீண்டும் கோபத்தோடு முன்னோக்கி ஓடி அவளை அடிக்கிற மாதிரியும்
கத்தினான்… ‘‘நீனும் ஒங்கப்பன் ஆத்தாளும் என்ன தாண்டி நெனைச் சிருக்கீங்க? என்னைக்
கூப்பிடாம பண்ணிட லான்னு பாத்தீங்களா? எப்பிடிப்பட்ட பாட்டுப் போட்டுக் காட்னேன் பாத்தியா?
அதான் நானு. ரிக்கார்டத் தூக்கி ஒங்கப்பன் ஒளிச்சு வச்சுக்கினான்னா நான் உட்டுட்டுப்
பூடுவனா? இன்னும் ஒரு பாட்டு எடுத்து வச்சிருக்கேன். இங்க பாரு, என்ன நீ புரிஞ்சுக்கினே
இல்ல?’’
அனைத்தையும்
பின் வாசலில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்த ராசமாணிக்கத் தால் அதற்கு மேலும் பொறுமையாக
இருக்க முடியவில்லை. கொடிபவுனுவின் அம்மா ஓடி வந்து மறித்தாலும், அவர் விடுவதாக இல்லை.
நேருக்கு நேராக ராசமாணிக் கத்தைப் பார்த்ததும் அவனது கோபம் கெஞ்சலாக மாறியது. ‘‘ஏன்
மாமா எங்கள காரியத்துக்குக் கூப்புடல? ஒனக்குமா என்னப் புடிக்கல? ஒனக்காகத்தான் நான்
இப்ப சும்மா உட்டுட்டுப் போறேன்’’
அதன்பின்,
கன்ட்ரோல் ஒரு வழியாக சமாதானம் ஆனான். பதினோராம் வகுப்பு முடிவதற்காக கன்ட்ரோல் காத்திருந்தான்.
கொடி பவுனுதான் அந்த ஆண்டு பள்ளிக் கூடத்தில் முதல் மதிப்பெண் பெற்றிருந்தாள். கொடிபவுனுவுக்கு
வேறு மாப்பிள்ளை பார்க்கிற செய்தி கன்ட்ரோலுக்குத் தெரிந்தது. மேற்கொண்டு யாரிடமும்
கெஞ்ச விருப்பமில்லை. அவனின் அம்மா, ‘‘உன்னைப் பிடிக்காத பெண் தேவையில்லை. அவளைவிட
அழகான பெண்ணைப் பார்த்து உடனே திருமணம் செய்துவைக்கிறேன்’’ என எவ்வளவோ சொன்னாள். ஆனால்,
தான் விரும்பிய கொடிபவுனுதான் மனைவியாக வர வேண்டும் என அவன் முடிவு செய்துவிட்டான்.
அவனாகவே
அச்சகத்துக்குச் சென்றான். அவனுக்குத் தெரிந்ததைச் சொன்னான். திருமணப் பத்திரிகை யோடு
வீட்டுக்கு வந்தான். மகனின் பிடிவாதத்தைக் கண்டு தைலம்மை வாயடைத்துப் போனாள். பத்திரிகையில்
அவனது பெயரையும், அவளது பெயரையும் பார்க்கப் பார்க்க கன்ட்ரோலுக்கு அளவற்ற மகிழ்ச்சியாகவும்,
பெருமையாகவும் இருந்தது. அவளோடு வாழ்வதாகக் கனவில் மிதந்தான்.
விவரமறிந்த
ராசமாணிக்கம் பதறிப் போனார். எதிர்த்துப் பேசினால் அவன் என்ன செய்வான் என்பது அவருக்குத்
தெரியும். அவனை என்னவெல்லாம் சொல்லி சமாதானப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் சொல்லி
அவனது கையைப் பிடித்துக் கெஞ்சினார். சொந்தக்காரர் களை எல்லாம் கூட்டிப் பேசியபோது,
ஜாதகம் சரியாக இருந்தால் உடனே அதே தேதியில் திருமணம் நடத்திக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.
வேறு வழி தெரியாமல் கன்ட்ரோலும் அதை ஏற்றுக்கொண்டான்.
கொடிபவுனு
வெளியிலேயே வர வில்லை. பத்திரிகையைப் பார்த்துப் பார்த்து அழுதாள். அவனை நினைக்கிறபோதெல்லாம்
அவளுக்கு அவனுடைய ஆறாவது விரல் தவிரவும், அவள் மனதைவிட்டு நீங்காத இன்னொரு நிகழ்ச்சிதான்
கண்முன் வந்து நின்று, அவன் மீது வெறுப்பை ஏற்படுத்தியது.
ஜாதகம்
பார்த்து முடிவு தெரியும் வரை ஒரு சொட்டுத் தண்ணீர்கூட தொண்டைக்குள் இறங்காது என கன்ட்ரோல்
சொல்லிவிட்டான். ஊரார் முன்னிலையில் அவன் வீட்டு வாசலிலேயே ஜாதகக்காரனை வரவழைத்துப்
பார்த்தார்கள். கொடிபவுனுக்குத் தாலி கட்டினால் அவன் உயிர் இருக்காது என்று ஜாதகக்காரன்
அடித்துச் சொன்னான். கன்ட்ரோலின் அம்மா, தன் தம்பி யிடம் கெஞ்சி, உடனே இன்னொரு ஜாதகக்காரனை
அழைத்து வரச் சொன்னாள். கன்ட்ரோல் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தனக்குச் சாதகமாக அவன்
சொல்ல மாட்டான் என அவனே புறப்பட்டு வடலூர் போய், வேறு ஜாதகக்காரனை அழைத்து வந்தான்.
அவனும் முன்பு சொன்னவன் போலவேதான் சொன்னான்.
கன்ட்ரோலிடம்
பழைய நடவடிக் கைகள் இல்லை. வீட்டிலேயே முடங்கிக்கிடந்தான்.
அன்று
இரவு, ராசமாணிக்கம் மனைவியுடன் திருமணத் தாம்பூலத் தோடு வந்தார். அக்காவிடம் தாம்பூலத்
தட்டை கொடுத்துவிட்டு அவரால் அழத்தான் முடிந்தது. அவர்களை கடைசி வரை கன்ட்ரோல் பார்க்கவே
இல்லை. தலை குனிந்தபடியே தரையைப் பார்த்துக்கொண்டு இருந்தான். ராசமாணிக்கத்தால் கன்ட்
ரோலுக்கு சமாதானம் சொல்ல முடியவில்லை. இன்னும் மூன்று நான்கு ஆண்டுகள் காத்திருந்தால்
தனது இளைய மகளைத் தருகிறேன் என்று சொன்னார்.
பெண்
அழைப்புக்கு மாப்பிள்ளை வீட்டிலிருந்து கார் வந்துவிட்டது. பெண்ணை அனுப்பிவைக்க தைலம்மை
யையும் வந்து கூப்பிட்டார்கள். ஒவ்வொரு நிகழ்வும் கன்ட்ரோலை நிலை தடுமாறச் செய்தது.
கிடுகிடுவென பரணையில் ஏறியவன், சாக்குப்பையில் கட்டி வைத்திருந்த முந்திரி மரத்துக்குத்
தெளிக்கவைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்தான். குடித்துவிட்டுத்தான் இறங்கினான்.
கோயிலில்
போய்ப் படுத்துக்கொண்டான். அதற்குள் கை, கால் இழுக்க ஆரம்பித்துவிட்டது. கொடிபவுனு…
கொடிபவுனு என சத்தம் போட்டுக் கத்தினான். இறுதிவரைக்கும் வரவே மாட்டேன் என அடம்பிடித்தவனைத்
தூக்கிக் கொண்டு நடுவீரப்பட்டு மருத்துவ மனைக்கு ஓடினார்கள்.
செய்தி
கேள்விப்பட்ட கொடிபவுனு, தன் மீது உயிரை வைத்திருக்கும் மாமனை நினைத்து அழுதாள். திருமணத்துக்கு
மாப்பிள்ளை வீட்டுக்குப் போகும் வழிதான் என்பதால், மருத்துவமனைக்குச் சென்று மாமனைப்
பார்க்க ஆசைப்பட்டாள். உறவினர்கள் பார்க்க அனுமதிக்கவில்லை. அந்த இடம் வந்தபோது சத்தம்
போட்டுக் கத்தி, காரை நிறுத்தச் சொன்னாள். யார் தடுத்தும் கேட்காமல் மருத்துவ மனைக்குள்
மணக் கோலத்துடன் ஓடினாள் கொடிபவுனு. கன்ட்ரோலைக் காப்பாற்றும் முயற்சியில் நிர்வாணமாகக்
கிடத்தப்பட்டிருந்தான். அவனைப் பார்த்ததும், கொடிபவுனுக்கு மேலும் அழுகைதான் வந்தது.
அப்போதுகூட, ‘‘நான் சாவறண்டா, நான் சாவறண்டா’’ எனக் கத்திக்கொண்டு இருந்த மயக்க நிலையிலேயே
கொடி பவுனுவைப் பார்த்தான். இதையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாத தைலம்மையும், ராச மாணிக்கமும்,
அங்கிருந்து கொடிபவுனுவை மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்துப் போனார்கள்.
வயல்வேலை
செய்யப் பிடிக்காமல் திருமணம், மற்ற காரியங்களுக்குச் சென்று ஒலி, ஒளி அமைப்பதையே தொழிலாகக்
கொண்டுவிட்டான் கன்ட்ரோல்.
நான்கு
ஆண்டுகளாக வளர்த்திருந்த தாடியும் மீசையும், அவனைப் பார்க்கிற குழந்தைகள் பயந்து மிரண்டு
அழும்படி செய்தன. கொடுக்கன் பாளையத்து மாரியம்மன் கோயிலுக்கு மார்கழி மாதம் முழுக்க,
பாட்டு ஒலிபரப்புவதற்காக கன்ட்ரோலிடம் பணம் பேசி பாக்குக் கொடுத்து இருந்தார்கள். மாலை
நாலரை மணிக்கு, இரவு சாப்பாட்டுக் காக அம்மா சுட்டுக்கொடுக்கும் கேழ்வரகு தோசையை எடுத்துக்கொண்டு
போவான்; மாலை ஐந்தரை மணியிலிருந்து இரவு எட்டு மணி வரைக்கும் பக்திப் பாடல்களை ஒலிபரப்பிவிட்டு,
கோயிலிலேயே படுத்துக்கிடந்து, மீண்டும் காலை நாலரை மணிக்கு எழுந்து எட்டு மணி வரைக்கும்
பாடலை ஒலிபரப்புவான். பின், சைக்கிளில் வீட்டுக்கு வந்து பகல் முழுக்கத் தூங்குவான்.
அந்த ஊரில்தான் கொடிபவுனு வாழ்க்கைப் பட்டிருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரியும்.
முப்பது நாட்களும் காலையும் மாலையும் ஒலிபரப்பும் அனைத்துப் பாடல்களையும் கொடிபவுனு
கேட்டுக்கொண்டுதான் இருந்தாள். கோயிலில் படுத்துக்கிடப் பவனை வீட்டில் படுத்துக்கொள்ளச்
சொல்லலாம். சொன்னால் கேட்க மாட்டான் என்பதால், அவளும் அழைக்கவில்லை.
அன்று
வெள்ளிக்கிழமை என்பதால் குழந்தைகளோடு கோயிலுக்கு வந்திருந்தாள். அடையாளம் தெரியாதபடி
உருமாறியிருந்த கன்ட் ரோலைப் பார்க்கப் பார்க்க கொடிபவுனுக்கு வேதனையாக இருந்தது. சுவரையே
பார்த்தபடி தலையில் முக்காடோடு கை கட்டி உட்கார்ந் திருந்தான். எப்படி யாவது அவனிடம்
பேசிவிட வேண்டும் என நினைத்தவளால் பேச முடியவில்லை. மஞ்சள் நீர் சடங்கில் கன்ட்ரோல்
தொலைத்துவிட்டுத் தேடிய இசைத்தட்டு இப்போது கொடிபவுனு கையில் இருந்தது. யாரும் பார்க்காதபடி
அவனின் பக்கமாக விசிப் பலகையில் வைத்துவிட்டு வந்துவிட்டாள்.
இவ்வளவு
காலம் தன்னைத் தொந்தரவு செய்துகொண்டு இருந்த இசைத்தட்டு தன்னிடம் இல்லாமல் போனது கொடிபவுனுக்கு
அதை விடவும் தொந்தரவாக இருந்தது.
கொடிபவுனுவின்
மகளை தைலம்மை திண்ணையிலிருந்து மூன்று முறை குதிக்கச் சொன்னாள். இன்னும் மழை நிற்கவில்லை.
தண்ணீரில் ஓடுகளுக் கிடையில் சிறைபட்டுக் கிடந்த இசைக்காத இசைத் தட்டுக்களையே கொடி
பவுனு பார்த்துக்கொண்டு இருந்தாள். தான் வாழ்ந்திருக்க வேண்டிய வீடு. அவளால் தைலம்மையிடமிருந்து
பிரிய முடியவில்லை.
தன்னிடமிருந்து
களவுபோன இசைத்தட்டு திரும்பக் கிடைத்ததும், அது கிடைத்த இடமும் கன்ட் ரோலுக்குள் அப்போது
பல கேள்வி களை எழுப்பின. பின், அவனுக்கு விடையும் கிடைத்தது. அப்போது அவனுக்கு எல்லையற்ற
மகிழ்ச்சியை அடையும்படியான மனநிலையைக் கொடுத்தது. தனக்கு வாழத் தகுதி இருப்பதாக நினைத்துக்கொண்டான்.
மறுநாள் காலையே சவரம் செய்து மாப்பிள்ளை போல் ஆனான். அதற்கான காரணம் யாருக்கும் புரியவில்லை.
தைலம்மை மகனின் மாற்றத்தைப் பார்த்து பூரித்துப் போனாள். அவள் அவனைச் சாப்பிட அழைத்தும்கூட
வரவில்லை. அறையை மூடிக்கொண்டு அதே பாடலையே திரும்பத் திரும்ப இசைக்கச் செய்து கேட்டான்.
ஒரு
கட்டத்தில் மகிழ்ச்சி, துக்கம், எல்லாமும் பொய் என்பதாக அவன் உணர்ந்தான். மகிழ்ச்சி
அவனிடமிருந்து மறைந்து போனது. வாழ நினைத்த அறையிலேயே தூக்கில் தொங்கியவனை வெளியில்
கொண்டு வந்து போட்டார்கள். அவன் மகிழ்ச்சியாக இருந்ததற்கும், இறந்ததற்குமான காரணம்
யாருக்கும் புரியவில்லை. அவனின் அறையில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துப் பிழையுடன் இருந்த
அந்தக் கடிதத்தில், தனது சொத்துக்களை முழுக்க கொடிபவுனுவின் குழந்தை களுக்கு எழுதி
வைத்துவிடும்படியும், அந்த இசைத்தட்டை கொடிபவுனுவிடம் கொடுத்துவிடும்படியும் எழுதியிருந்தான்.
கொடிபவுனு அவனுடைய நினைவு வரும்போதெல்லாம், இசைக்காத அந்த இசைத்தட்டை எடுத்துப் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். அதனை இசைத்துப் பார்க்கக்கூடிய தைரியம் அவளிடம் இல்லை!
– ஏப்ரல்
2006
**********>கதையின் சுட்டி<**********
பாஸிட்டிவ் செய்திகளில் கேரளத்தைச் சேர்ந்த ரஞ்சித்தின் செய்தி வாவ் போட வைத்தது.
பதிலளிநீக்கு//தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு அதை எதிர்த்து ஒரு முறை போராடத் தூண்டினார்//
கீதா
இது ரொம்ப நல்ல விஷயம். இப்படித்தான் பலர் தங்கள் குறிக்கோள்களை அடைய பயணித்து அடைந்தவர்கள். ரஞ்சித்திற்கு வாழ்த்துகள் பாராட்டுகள். அவரது குடும்பப் பின்னணி மனதை நெகிழ்த்திவிட்டது.
23ல் சிவில் நீதிபதி செய்தியும் அருமையான செய்தி. பழங்குடிப்பெண் ஸ்ரீபதியை மனதார வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குசெய்தி விரிவாக்கத்தை வாசித்த போது அதில் ஒரு வரி அது இடித்தது..கல்வியிலும் எதற்கு அரசியல் பேசி விளம்பரம் தேட வேண்டும் என்பதுதான்...அதை விட்டுவிடுவோம். இது தன்னம்பிக்கை நேர்மறைச் செய்தி.
இதுதான் கேரளத்துச் செய்திக்கும் தமிழ்நாட்டுச் செய்திக்கும் உள்ள வித்தியாசம்.
கீதா
மார்ஷல் ஏசு வடிவானுக்கும் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குகீதா
சினிமாக்கதை போல தோற்றமளிப்பவை எல்லாம் எழுதிச் சொல்பவை போல அல்லாமல் சொல்லிச் செல்பவை போலத் தான்
பதிலளிநீக்குஇருக்கும் போல. இதனால் தான் எழுத்தாளனை கதைசொல்லி என்று பிற்காலத்தில் அழைத்தார்களோ என்னவோ!
அட! கதை சொல்லி என்பதற்கான விளக்கம் சூப்பர் ஜீவி அண்ணா. இதை வாசித்ததும் எனக்குத் தோன்றியது.....கதை எழுதுபவர்களின் மனதில் தாங்கள் எழுதும் கதை காட்சிகளாக விரியும் தானே இல்லையா. அப்படி உட்புகுந்து எழுதும் போதுதான் கதைகளின் கதாபாத்திரங்களின் உள்ளுணர்வுகள் வெளிப்படும் என்று தோன்றும்.
நீக்குநல்ல விளக்கம் ஜீ வி அண்ணா
கீதா
சினிமா இயக்குனர் கதை எழுதுவது என்பது வேறு, எழுத்தாளர் சினிமாவுக்காக கதை எழுதுவது வேறு என்ற வித்தியாசத்தை ஜீவி சார் சுட்டிக்காட்டியதை பாராட்டுகிறேன். அந்த வகையில் தங்கர் பச்சான் ஜெயகாந்தன், சுஜாதா போன்றோரையும் மிஞ்சிவிட்டார் என்று தோன்றுகிறது. ஆனாலும் சினிமாத்துறை வேறு, இலக்கிய எழுத்து துறை வேறு என்பது தெள்ளத்தெளிவு.
நீக்குநிச்சயமாகச்சொல்லலாம் ஜெ கெ அண்ணா, தங்கர் பச்சான் மிஞ்சிவிட்டார் என்று. அவரது பிற கதைகளை வாசித்துப் பார்க்க வேண்டும். ஒரு வேளை, சிறுகதை.காமில் கதைகளை அவங்களே பொறுக்கி எடுத்து ஸ்கான் செய்து தட்டச்சுகிறார்கள் அப்படி ஏதேனும் இடையில் விடுபட்டிருக்குமோ என்றும் தோன்றுகிறது அண்ணா.
நீக்குகீதா
நல்ல எழுத்தாளர்கள் என்றுமே கதைசொல்லிகள் அல்ல. எழுத்தாளர் என்போர் எழுத்தை தம் இஷ்ட்டத்திற்கு வசப்படுத்தி ஆள்பவர்கள். இவர்கள் எழுத்தை ஆள்வதால் தான் காரணப்பெயராக
நீக்குஎழுத்தாளர்கள் என்று அழைக்கப்பட்டனர். எழுத்து தான் இவர்கள் அஸ்திரமே.
தமிழின் சிறப்பான சொல் எழுத்தாளர் என்பது. அதனால் தான் இதற்கு நேரடியான அர்த்தம் தருகிற தனித்தன்மை வாய்ந்த ஆங்கில வார்த்தை இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை.
Writer என்ற ஆங்கில வார்த்தை கொண்டு தி.ஜானகிராமனை அடையாளப்படுத்தினால் அது அசிங்கம். All who are able to write are not எழுத்தாளர்கள்.
ஜெயகாந்தன், அகிலன், சிவசங்கரி, ரா.கி.ரங்கராஜன், தேவன், வாசந்தி, ராஜம் கிருஷ்ணன் போன்று கதாபாத்திரங்களைப் படைத்து அவர்கள் குரலாக தம் சிந்தனையைப் பகிரத் தெரியாதவர்கள் கண்டுபிடித்த வார்த்தை தான் கதைசொல்லி என்னும் பிற்கால சொல்.
கதைசொல்லிகளுக்கு வளவளவென்று பக்கம் பக்கமாக புலம்பத் தெரியுமே தவிர கதாபாத்திரங்கள்
வாயிலாக எதையும் சொல்லத் தெரியாது. அதனால் தான் கதாபாத்திரங்களுக்கு பதில் இவர்களே பேசுகிறார்கள்.
மேலே காணும் ஜெஸி ஸார் பின்னூட்டம் நான் சொன்னதை வேறுவிதமாக அர்த்தப்படுத்த வாய்ப்பு இருப்பதால் இந்த விளக்கம்.
நீக்குஜெயமோகன், சாரு போன்றோரை வேண்டுமானால் கதைசொல்லிகளுக்கு உதாரணமாகக் கொள்ளலாம். சொல்லப்போனால்
நீக்குஎழுத்துத் துறையில் இவர்களின் இருப்பை
நியாயப்படுத்த வந்த இவர்கள் கால சொல் தான் கதைசொல்லி என்பதே.
பழம்பெரும் எழுத்தாளர்களைப் பற்றிய ஜெயமோகனின் கண்டுபிடிப்பு கட்டுரைகளைப் படித்தால் அவரது உள்ளக்கிடக்கை தெளிவாகப் புரியும்.
நீக்குதானும் தன்னைப் போன்றவர்களும் எழுதும் வகையை நிலைநிறுத்திக் கொள்ள ஆர்வி, எல்லார்வி என்று ஆரம்பித்து ஒவ்வொருவராக கழித்துக்கட்டிக் கொண்டே வருவார்.
பத்திரிகைகளில்
எழுதிய அத்தனை பேரும் சுத்த சுயம்பிரகாசமான எழுத்தாளர்கள் அல்ல. இவர்கள் அத்தனை பேரும் பத்திரிகைகளின் தேவைக்காக அச்சில் தாம் எழுதியதைக் கொண்டு வந்தவர்கள் என்பார்.
பத்திரிகைகளில் வெளிவந்த
தொடர்கதைகள் எல்லாமே நாவல்கள் அல்ல என்பது அவரது இன்னொரு வாதம்.
ஜெயமோகனின் நாவல் சித்தாந்தம் மேற்கத்திய வழி வந்தது.
என்னைக் கேட்டால் சிலப்பதிகாரம் தான்
உரைநடையிட்ட பாட்டுடை செய்யுள்
வடிவிலான தமிழின் முதல் நாவல் என்பேன்.
ஜீவி அண்ணா, உங்கள் விளக்கங்கள் அருமை. ஆமாம், கதாபாத்திரங்களின் வழி அந்தப் பாத்திரங்களின் உணர்வுகளைப் பேசுவது//
நீக்குஎழுத்துகள் பற்றி நல்ல கருத்துகள் ஜீவி அண்ணா. நல்ல வாசிப்பனுபவம் இருந்தால் பல விஷயங்களைக் கற்கவும் முடியும் பேசவும் முடியும், ரசித்து உணர்ந்து உள்வாங்கி.
சில கதைகள் நம் மனதில் நிற்பதும் அதுதான் காரணம்.
கீதா
தங்கர்பச்சான் கதை என்றதும் ஒரு எதிர்பார்ப்புடன் வாசித்தேன். தலைப்பில் கவர்ச்சி இருக்கிறது அழகான தலைப்பு. அழகின் பின் கொஞ்சம் சோகம் இருக்கணுமே.....கொஞ்சம் சோகமான கதை என்பதை சொல்கிறது தலைப்பு.
பதிலளிநீக்குகதை அவ்வளவாக ஈர்க்கவில்லை. திரைப்படத்துக்கான கதை போல இருக்கு. cliché . கிராமத்துக் கதை என்பதால் ஒரு வேளை அவர் இதையே திரைப்படமாக எடுத்திருந்தால் மெருகூட்டி மிக அழகாக எடுத்திருப்பாராக இருக்கலாம். சில கதைகள் வாசிப்பை விட visuals ல் நன்றாக வரும். சில கதைகள் visuals க்கு எடுபடாது.
ஒருகதை திரைப்படம் ஆகும் போது அதன் திரைக்கதையை அதன் அமைப்பை ஷாட்ஸ் வைப்பதைப் பொருத்து, வசனங்கள் பொருத்து க்ளிக் ஆகும். நன்றாக வரும். இதுவும் அவர் கையில் visual ஆக நன்றாக வந்திருக்கலாம் ஒரு வேளை என்று தோன்றியது. ஆனால் கதையாக அவ்வளவு ஈர்க்கவில்லை.
// .இறுதியாக ஊரை விட்டுப் போகும் போது கோயிலில் சாமி கும்பிட்டு விட்டுத்தானே கொடிபவுனு போவாள் என்பதற்காக, கோயிலில் போய்ப் படுத்துக்கொண்டான். அதற்குள் கை, கால் இழுக்க ஆரம்பித்துவிட்டது. கொடிபவுனு… கொடிபவுனு என சத்தம் போட்டுக் கத்தினான். இறுதிவரைக்கும் வரவே மாட்டேன் என அடம்பிடித்தவனைத் தூக்கிக் கொண்டு நடுவீரப்பட்டு மருத்துவ மனைக்கு ஓடினார்கள்.
செய்தி கேள்விப்பட்ட கொடிபவுனு, தன் மீது உயிரை வைத்திருக்கும் மாமனை நினைத்து அழுதாள். திருமணத்துக்கு மாப்பிள்ளை வீட்டுக்குப் போகும் வழிதான் என்பதால், மருத்துவமனைக்குச் சென்று மாமனைப் பார்க்க ஆசைப்பட்டாள். உறவினர்கள் பார்க்க அனுமதிக்கவில்லை. அந்த இடம் வந்தபோது சத்தம் போட்டுக் கத்தி, காரை நிறுத்தச் சொன்னாள். யார் தடுத்தும் கேட்காமல் மருத்துவ மனைக்குள் மணக் கோலத்துடன் ஓடினாள் கொடிபவுனு. கன்ட்ரோலைக் காப்பாற்றும் முயற்சியில் நிர்வாணமாகக் கிடத்தப்பட்டிருந்தான். அவனைப் பார்த்ததும், கொடிபவுனுக்கு மேலும் அழுகைதான் வந்தது. //
சினிமா ஷாட்! அதுவரை அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை..இப்போது அவனை நினைத்து அழுகிறாள். அதுவும் வேறு ஒருவனுடன் கல்யாணம் ஆகும் நிலையில்......சினிமாட்டிக்.
//அங்கிருந்து கொடிபவுனுவை மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்துப் போனார்கள். //
இதன் பின் கதையில் ஏதேனும் வரிகள் இருந்திருந்தால் நல்லாருக்கும். டக்கென்று அடுத்ததாக அவள் தாய்வீட்டுக்குக் குழந்தையுடன் வந்ததாகச் சொல்லிவிடுகிறார். இப்படி சீன் மாற்றுவது திரைப்படத்தில் வருவது போல!!! திரைப்படத்தில் அதைச் சொல்லும் விதத்தில் புரிந்துவிடும். ஆனால் கதையில் இப்படி சீன் மாற்றும் போது சில உத்திகள் இருக்கு.
//கொடிபவுனு தாய் வீட்டுக்கு வந்திருந்தாலும், அவள் கன்ட்ரோல் வீட்டுக்கு வரவில்லை. இதுதான் கொடிபவுனுவின் குழந்தை என அம்மா சொன்னபோதுகூட அவனுக்குத் தொட்டுத் தூக்கப் பிடிக்கவில்லை.
//இவ்வளவு காலம் தன்னைத் தொந்தரவு செய்துகொண்டு இருந்த இசைத்தட்டு தன்னிடம் இல்லாமல் போனது கொடிபவுனுக்கு அதை விடவும் தொந்தரவாக இருந்தது.//
அடுத்தது ஃப்ளாஷ்பேக்கிலிருந்து தற்போது நடப்பதற்கு சீன் மாறுகிறது. இது விஷுவலுக்குச் சரியாகவரும். புரிந்துவிடும். கதையில் நாம் புரிந்து கொள்ள முடியும் என்றாலும் அங்கு ஒரு வரி அந்த ட்ரான்ஸிஷனுக்கு சேர்த்திருக்கலாம்.
இப்படிச் சில இடங்களில் சீன் கன்டினியுட்டி விஷுவலில் கொண்டுவந்துவிடலாம்....ஆனால் எழுத்தில் கதை வரும் போது அந்த கன்டினியுட்டி வார்த்தைகளில் வந்திருக்கலாம்.
//கொடிபவுனுவின் மகளை தைலம்மை திண்ணையிலிருந்து மூன்று முறை குதிக்கச் சொன்னாள். இன்னும் மழை நிற்கவில்லை. தண்ணீரில் ஓடுகளுக் கிடையில் சிறைபட்டுக்//
அண்ணா, நீங்கள் சொல்லியிருப்பது போல் அப்படியே சினிமா கதை போல தான் இருக்கிறது. முடிவு ஆர்ட் படத்தில் வருவது போல விஷுவலைஸ் செய்து பார்த்தேன்...எனக்கு முழுக் கதையும் விஷுவல்ஸாக சீன் எப்படி வைக்கலாம் என்பது போன்று தோன்றியது.
கொடிபவுனின் மண வாழ்க்கை பற்றி எந்த ஒரு வரியும் இல்லை. ஒரு வேளை திரைப்படம் எடுத்தால் அதில் காட்டிக் கொள்ளலாம் என்றிருந்திருப்பாரோ?
2005ல் கதை வந்திருக்கு ..அப்போதைய காலகட்டத்திற்கு ஓகேயாக இருந்திருக்கலாம்...
கீதா
அருமை, தி.கீதா.
நீக்குவாசித்து உணர்வதை மிக நேர்ர்தியாக எழுத்தில் எடுத்துரைக்கும் திறமை உங்களுக்கு இருக்கிறது. மனத்தில் பட்ட இத்தனை விஷயத்தை எப்படி இவ்வளவு வேகமாக தட்டச்சு செய்து சொல்லியிருக்கிறீர்கள் என்பதே எனக்கு வியப்பு! பிரமாதம், சகோ.
உண்மையாக இவ்வளவு நீண்ட விமரிசனத்தை எதிர்பார்க்கவில்லை. நன்றி. கதையின் முக்கிய பகுதிகள் மாத்திரம் பதிவில் இடம் பெற்றதால் சில மசாலா சீன்கள் விடுபட்டது. முழுக்கதையும் வாசிப்போர்க்கு அது தெரிய வரும்.
நீக்குநன்றி.
Jayakumar
மிக்க நன்றி ஜீ வி அண்ணா.
நீக்குஅது சில சமயம் வாய்க்கும். நிதானமாக நான் செய்தால் அது வாய்க்கிறதோ என்று தோன்றும். ஆனால், என் திறமைகள் என்று மத்தவங்க சொல்றது எதையும் என்னால் தக்க வைத்துக் கொள்ள முடிவதில்லை. அதை முன்னோட்டு எடுத்துச் செல்லவும் முடிவதில்லை. நுனிப்புல்லாகவே இருக்கின்றன.
மனம் பல விஷயங்களுக்குத் தாவிக் கொண்டே இருக்கிறதால் இருக்கலாம்.
அண்ணா நான் கணினியில் தட்டுகிறேன்.
மொபைலில் கருத்துகள் போடுவதில்லை. voice typing மொபலில் இருந்தாலும் கூட எனக்குத் தட்டச்சு செய்வதுதான் முடிகிறது.
கீதா
ஜெ கே அண்ணா, நான் முழுக்கதையையும் வாசித்தேன். மசாலாக்களும் புரிந்தது.
நீக்குகீதா
நுனிப் புல் மேய்தல் - காரணம், அதற்கான நேரம், ஒன்றில் முழுவீச்சில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு இல்லாத்தால்தான். பெரும்பாலும் பலருக்கு அப்படி வாய்ப்பு அமைவதில்லை.
நீக்குதிரைக் கதை போலவே எழுதியிருக்கிறார். வெறுத்த கொடிபவுனின் மனதை மீண்டும் தாய் மாமனிடம் ஈர்த்தது எது? அவள் சொந்த வாழ்க்கையின் வெறுமையா? பல கேள்விகளுக்கு விடை படத்தில் இருந்திருக்குமோ? நகைச்சுவையும் கலந்து 80களில் வந்திருந்தால் ரசித்திருக்குமோ?
பதிலளிநீக்குஇரண்டு நாட்களாக .... காட்டுக்கு அனுப்பிவிட்டான் கடன் காரப் பயலொருத்தன்.. கண்ணு கலங்குது பார்த்து அவ நெஞ்சு கொதித்திடும்... என்ற பாடல் மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. எதனால் அந்தப் பாடல் நினைவுக்கு வந்தது எனத் தெரியவில்லை. இந்தக் கதைக்குப் பொருத்தமான பாடலோ
முறைப் பையனை மாமன் என்று சொல்லும் வழக்கம் சில சமூகங்களில் உண்டு. அத்தை மகன் முறைப்பையன் மாமன் என்று சொல்வாங்கதான் ஆனால் தாய்மாமன் என்றால் அரங்கநாதன், கொடிபவுனின் அம்மாவின் சகோதரனாக இருக்க வேண்டும் இல்லையா, நெல்லை?
நீக்குநிஜமாகவே சமூகங்களில் சொல்லப்படும் சில உறவுகள் புரிவதில்லை அதனால் கேக்கறேன்.
கீதா
இதனால்தான. கணவனை, மாமா என்று அழைக்கும் வழக்கம் வந்தது. அத்தான் என்ற பெயரும் அதனால்தான்.
நீக்குபாசிட்டிவ் செய்திகள் மூன்றுமே நன்று. கேரளத்துச் செய்தியை வாசித்திருக்கிறேன். அதை இங்கு ஜெயகுமார் சார் பகிர்ந்திருப்பது நன்று,
பதிலளிநீக்குதுளசிதரன்
இசைத்தட்டு காலத்தையும், அப்போது வாந்த வெள்ளந்தி மனிதர்களின் கதை. முன்னர் முள் போல் முரட்டுத்தனம் அசட்டுத்தனம் வெளியே இருந்தாலும் மனம் பச்சையான மனசு. நானும் மிகவும் சிறிய கிராமத்தில் தேனி அருகில் ராசிங்கபுரத்தில் (அப்போது சின்ன கிராமம் இப்போது வளர்ந்துவிட்டது) பிறந்து வளர்ந்ததால் கதையின் போக்கைப் புரிந்து கொள்ள முடிந்தது.
பதிலளிநீக்குகன்ட்ரோல், கொடிபவுன் வித்தியாசமான பெயர்கள். காரணங்கள் சொல்லப்படவில்லையே. கதாசிரியருக்குத்தான் வெளிச்சம். கொடிபவுனின் உள்ளே இனிய மனம். அப்படியான மனம் படைத்தவர்களை இப்படித்தான் கிராமத்தில் என்பதை தங்கர்பச்சான் அழகாகச் சொல்லியிருக்கிறார். திரைப்படமாக வந்ததா? தெரியவில்லை.
.காலம் கடந்து சென்று சில நிகழ்வுகளை கண்டுவந்த உணர்வு.
மிக்க நன்றி ஜெயகுமார் சார் கதையைப் பகிர்ந்ததற்கு
துளசிதரன்
நன்றி துளசி சார்.
நீக்குகடலூர் மாவட்டத்தில் சில புனை பெயர்களின் அர்த்தம் புரியாமலே உபயோகிப்போம். உதாரணமாக அப்பியம், சபக்டிஜின், மப்பாண்டி, விசிறி, புடலங்காய் இவர்கள் என்னுடைய ஹை ஸ்கூல் ஆசிரியர்கள். ஒரு நண்பனின் பெயர் கடவுள். அவர் வீட்டிற்கு சென்று கடவுள் இருக்கிறானா என்றெல்லாம் கேட்டதுண்டு.
Jayakumar
நீதிபதி ஸ்ரீபதியை வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குவாழ்க்கையின் வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்கர்பச்சான் படங்கள் பார்த்திருக்கிறேன். இக் கதையும் படத்துக்காக எழுதப்பட்ட நீண்ட கதையாகத்தான் தோன்றுகிறது.
கொடிபவுனின் மனம் மாறி இசைத்தட்டை மீண்டும் அவனிடம் வழங்குவது இறுதியில் அவனது மரணம் என சோக காவியம்.
மூன்று வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துகள், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குகொடிபவுனுக்கு முதலில் பிடிக்காமல் போனது.
பதிலளிநீக்கு//செய்தி கேள்விப்பட்ட கொடிபவுனு, தன் மீது உயிரை வைத்திருக்கும் மாமனை நினைத்து அழுதாள்.//
அது இரக்கத்தால் இருக்குமோ!
//தான் வாழ்ந்திருக்க வேண்டிய வீடு//
கொடிபவுனின் மனதில் இந்த எண்ணம் இப்படி ஏன் வந்தது என்று தெரியவில்லை.
பெண்ணின் மனதில் உள்ளதை புரிந்து கொள்ள முடிவது இல்லை என்று சிலர் சொல்வது சரிதான் போலும்.
//மகிழ்ச்சியை அடையும்படியான மனநிலையைக் கொடுத்தது. தனக்கு வாழத் தகுதி இருப்பதாக நினைத்துக்கொண்டான். //
கொடிபவுனின் மனதில் தனக்கு இடம் இருக்கு என்ற மகிழ்ச்சியோ ?
அது சரியில்லை என்று தன் முடிவை தேடி கொண்டான் போலும்.
கொடிபவுனுக்கு கண்ட்ரோலை பிடிக்காமல் போனதற்கு ஆசிரியர் 3 காரணங்கள் கூறுகிறார். அவற்றை மறைத்தது என்னுடைய தவறே.
பதிலளிநீக்குமுதல் காரணம் கண்ட்ரோலின் ஆறாவது விரல். அது அவள் கையை உரசியபோது ஏற்பட்ட அருவெறுப்பு இது பள்ளியில் படிக்கும் போது நடந்தது.
இரண்டாம் காரணம் கொடிபவுன் வயலில் வேலை செய்யும் தந்தைக்கு சோறு கொண்டுபோகும்போது கண்ட்ரோல் மலம் கழிக்கும் காட்சியைக் கண்டது. இதுவும் படிக்கும் காலத்தில் தான் ஏற்பட்டது.
மூன்றாவது காரணம் படிப்பில் ஈடுபாடு இல்லாமல் 11ஆம் வகுப்பில் கண்ட்ரோல் தோற்றது.
இதை எல்லாவற்றிலும் மேலாக ஒரு பாட்டை அதுவும் இரண்டுவரிகளை ஓயாமல் அலறவிட்டது.
வருகை புரிந்தோருக்கும் வந்து கருத்துக்கள் கூறியோருக்கும் மனமார்ந்த நன்றி. வழக்கத்திற்கு மாறாக பலரும் கதையை ஒட்டிய விமரிசனங்களை விவரமாக எழுதியது ஊக்கம் தருகிறது.
நன்றி.
Jayakumar
நீங்கள் மறைத்ததில் எந்தத் தவறும் இல்லை ஜெ கே அண்ணா. அப்படி எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்றில்லை. மீதியை வெள்ளித்திரையில் காண்க என்றுதானே சினிமா விமர்சனம் வரும் அப்படி, கதையின் சுட்டிக்குச் சென்று வாசித்தால் முழுக்கதையையும் வாசித்தால் புரிந்துவிடுமே. காரணங்கள்,
நீக்குகீதா
இந்த வாரத்தின் செய்திகள் அனைத்தும் நன்று. கதை இனிமேல் தான் படிக்க வேண்டும்.
பதிலளிநீக்கு