செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

சிறுகதை : பென்சில் - துரை செல்வராஜூ

 பென்சில்

துரை செல்வராஜூ 

*** *** *** *

பூஞ்சிட்டுகள் சிலம்புவதைப் போல அழைப்பு இசை...

"அப்பா வந்துட்டாங்கடி செல்லம்!.. "

மடியில் சாய்ந்திருந்த குழந்தையைத் தோளில் ஏற்றி கொஞ்சியபடி  கதவின் மேல் தாழினை நீக்கினாள் நித்யா..

வேலை முடிந்து புன்னகையுடன் திரும்பியிருந்தான் வசந்த்..

குழந்தையின் கன்னத்தைத் தொடுவது போல நித்யாவின் கன்னத்தில் தட்டினான்..

முகத்தில் இருக்கின்ற உற்சாகம் மனதில் இல்லை என்பது நித்யாவுக்குப் புரிந்தது..

தற்போது குடியிருக்கும் வீட்டைப் பற்றி - கடந்த ஒரு மாதமாகவே இருவருக்கும் குழப்பம்.. 

கை கால் கழுவி உடை மாற்றி வருவதற்குள் காஃபி எடுத்து வந்தாள் நித்யா..

" வத்சலா நாயர் சொன்னாங்க.. அவங்க இருக்கிற ஏர் போர்ட் ஹைவே
ஈஸ்ட் அவென்யூ ல ஒரு பிளாட் காலியா இருக்குதாம்..  பக்கத்திலயே.. அராபியன் மால்..  இண்டியன் ஹாஸ்பிடல்..  தீம் பார்க்.. பிளே ஸ்கூல்..  " 

" அந்த ஏரியா தான் தெரியுமே.. பெங்களூர் ஹரிப்ரியா குழந்தைக்கு பர்த் டே ன்னு  போயிருக்கோமே!.. 

" அந்த ஏரியா தான்.. வத்சலா நாயர் ஏழு மணிக்கு வரச் சொல்லி இருக்காங்க.. அவங்க வீட்டுக்காரர் ஸ்ரீதரன்  சௌத் இண்டியன் கல்ச்சுரல் சொசைட்டில செகரட்டரியா இருக்கார்.. ஐயப்ப பூஜா மண்டலி, ஆதரவற்றோர் இல்லம் ன்னு ஏகப்பட்ட நெட்வொர்க்..

" ம்!.. "

" அப்படியே நைட் டின்னரும் அவங்க வீட்ல ன்னு சொல்லிட்டாங்க.. நாளைக்கு சண்டே.. ஆபீஸ் லீவு.. எங்க பிளாட்ல தங்கிட்டுப் போகலாமே ன்னும் சொன்னாங்க.. உன்னோட ஐடியா என்ன?.. அந்த வில்லாவுல எல்லாமே டபுள் பெட்ரூம்.. அட்டாச்டு பாத்ரூம்ஸ்.. கிளம்பு..  போய் பார்த்துட்டு வருவோம்.. வாடகை ஒத்து வந்தால் அக்ரிமென்ட் போட்டுடலாம்.. "

" நான் அடைக்கு ரெடி பண்ணி வெச்சிருக்கேனே.. "

" அதை எடுத்துட்டு வா..  நாயர் வீட்ல கொடுத்துடலாம்.. அவங்களுக்கு அடை இடியாப்பம் பணியாரம்.. ன்னா ரொம்பவே இஷ்டம்.. "

அரபு வளைகுடாவின் பிரதான நாடு..  நாட்டின் பிரதான நகர்.. 

வசந்தன் நித்யா தம்பதியினருக்கு ஏழு வருடங்களாக  இங்கே தான் வாழ்க்கை.. 

இடையில் - சொந்த மண்ணில் தான் குழந்தை பிறக்க வேண்டும் என்று சில மாதங்கள்..

இங்கே பிரச்னை என்ன என்றால் நல்ல வட்டாரத்தில் குடியிருப்பு அமைவது அதிர்ஷ்டம்..  அதை விட அதிர்ஷ்டம் சுற்றிலும் நல்ல மனிதர்கள் சூழ்ந்திருப்பது..

இதுவரையில் எவ்வித பிரச்னையும் இல்லை.. 

ஆனால்,

உலகை ஆட்டிப் படைத்த கொரோனா முடிந்து நிலைமை சற்று சீரானதும்  அவரவரும் அவரவர் நாட்டுக்குத் திரும்பி விட - நூற்றுக்கணக்கான தொகுப்பு வீடுகள் வெறிச்சோடிப் போய்க் கிடந்தன.. 

அடுத்த சில மாதங்களில் நிலை மாறி மக்கள் திரும்பி வந்த  மறுபடியும் சில வேதாளங்கள் புறப்பட்டு  முருங்கை மரம் தேடி அலைந்து கொண்டு இருக்கின்றன..

இப்போது குடியிருக்கும் வில்லாவில் தான் சித்தூர் ஸ்ரீநிவாசலுவின் குடும்பமும்.. 

போன மாதம் வில்லா மேனேஜர் ஸ்ரீநிவாசலுவைக் கூப்பிட்டுச் சொல்லி இருக்கின்றான் - " மூனு வருசம் ஆச்சு.. நியூ அக்ரிமென்ட் போட வேண்டும்.. இல்லே ன்னா பிளாட்டைக் காலி செய்து விட்டுப் போக வேண்டும்!.. " என்று.. 

குடியிருப்புகளுக்குச் சொந்தக்காரன் எந்த நாட்டில் இருக்கின்றானோ தெரியாது... இவன் வில்லா மேனேஜர்.. ஏதோ ஒரு வம்சாவளி.. ஈவு இரக்கம் என்பன மருந்திற்கும் கிடையாது.. இவனுக்கு அல்லக்கையாக நம்ம ஊர்க்காரன் ஒருவன்..

நியூ அக்ரிமென்ட் என்றால் பல நூறுகள் ஏற்றப்பட்ட புதிய வாடகை.. அந்த அளவுக்கு சம்பளம் உயருமா என்றால் விடை கிடைக்காது..

பல ஆயிரங்கள் சம்பாதித்தாலும் சாமானிய குடும்பங்களுக்கு சிட்டிக்குள் வீடு கிடைப்பது என்பது நடக்காத காரியம்.. 

ஆனாலும் 

பாலை வனங்களில் அமைக்கப்படும் தொகுப்பு வீடுகளில் இருபத்து நான்கு மணி நேரமும்  தண்ணீர் மின்சாரம்.. தடைப்படாத போக்குவரத்து.. அப்படிப்பட்ட உன்னத  நிர்வாகம்..

நெடுஞ்சாலையில் விரைவு போக்குவரத்து தான்.. எதிர்பாராத விதமாக  நெரிசல் என்றால் அதிக பட்சமாக இருபது நிமிடங்கள் .. அதிரடி காவல்துறை மருத்துவ உதவி - எனில்  அடுத்த சில நிமிடங்களில்.. 

இத்தனையையும் மீறியதாக இருப்பது அலுவலகம் வேலைத் தளம் சரியான கல்விச் சாலைகள் ஆகியன சற்று தொலைவில் அமைந்து விடுவது தான்.. 

இங்கே குடும்பம் எனில் கண்டிப்பாக இலகு வாகனம் வேண்டும்..  அடைபட்டுக் கிடக்கும் வாழ்க்கையில் மாதம் ஒரு முறையாவது அங்கே இங்கே என்று சுற்றி பொழுதைப் போக்கி விட்டு வருவதற்கு அதன் துணை அத்தியாவசியமானது..

வாகனம் புதிதாக இருந்தால் தான்  பராமரிப்புப் பிரச்னைகள் இருக்காது.. ஆகவே புதிதாகத் தான் அமையும்..

தவிரவும் வெயில் புழுதிக் காற்று இவைகளுக்கு மாற்றாக குடியிருப்புப் பகுதியிலேயே வாகனத்தை நிறுத்துமிடம் அமைய வேண்டும்.. அப்படி அமைந்திருக்கும் குடியிருப்பு வளாகம் எனில்  கூடுதல் வாடகை தான்.. 

அதற்கு முன்பு ஐந்து தளங்களாக இருந்த குடியிருப்புகள் இப்போது மேலே மேலே என்று எகிறிக் கொண்டிருக்கின்றன..

வளைகுடா நாடுகளில் வேலை என்றால் நம்மூரில் உறவுக்காரர்களால் சொல்லப்படுவது -  ' அவனுக்கென்ன.. காசு பெட்ரோல் கேணியில் கிடைக்கின்றது!.. '  - என்பதே..

வேலை எதுவானாலும் பொதுவாக வெயிலில் வெந்து பனியில் நைந்து 
முப்பதாம் நாள் சம்பளத்தை எதிர்பார்த்துக் கிடக்கும் வாழ்வில் ஒன்றுக்கு நான்கான செலவுகள் போக சேமிப்பு என்பது மிக மிக அரிது.. 

' உன்ன மாதிரி உதவி செய்ற ஆளும் உண்டா?.. '  - என்ற தித்திப்புப் பேச்சுடன் பணம் கேட்டு நச்சரிக்கின்ற சொந்தங்கள்..

' உங்கள எல்லாம் பார்க்காம இருக்க முடியலை.. ' - என்று வெறும் கையுடன் இங்கு வந்து,

இங்கிருந்து திரும்புகின்ற போது  - இங்கேயே பெட்டி வாங்கி அதில் அதுவும் இதுவுமாக  நிறைத்தபடி , கழுத்திலும் கைகளிலும் மினுக்கிக் கொண்டு - ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும்,

" அவனுக்கென்ன நல்லாத்தான் இருக்கான்.. வீடென்ன.. வாசலென்ன.. காரென்ன.. சீரென்ன!.. ஆனாலும் சம்பளம் எவ்வளவு ன்னு கடைசி வரையிலும் சொல்லாம மறச்சிட்டானே!.. ' - என்று புழுங்கித் தவிப்பதுமான உறவுகள்..

நடுத்தரமான சம்பளத்தில் இருக்கும் குடும்பக்காரன் வளைகுடா நாடுகளில் தினம் தினம் எதிர்கொள்கின்ற கஷ்டங்கள் அவனுக்குத் தான் தெரியும்..  சாதாரண வைத்தியச் செலவும் ஓட்டலுக்குப் போய் இட்லி சாப்பிட்டு விட்டு வருகின்ற மாதிரி சில ஆயிரங்கள்..

இதே பிரச்சினை தான் வசந்திற்கும்...

சித்தூர் ஸ்ரீநிவாசலு வீட்டைக் காலி செய்து கொடுக்கும் முன்  வீட்டுக்குள் பெயிண்ட் அடித்துக் கொடுத்தாக வேண்டும்... சுவர் முழுதும் அவனது குழந்தைகளின் கை வண்ணங்கள்.. கிறுக்கல்கள்..

அத்தனையும்  அன்பின் ஓவியங்கள்..

பெயிண்ட் அடித்து ஒழுங்கு செய்து விட்டு வீடு மாற்றுவதாயின் அந்த ஊர் மதிப்புக்கு  பல ஆயிரங்கள்.. 

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு வாழும் வாழ்க்கையில் குழந்தைகளை அதட்டுவதும் கண்டிப்பதும் இயலாத ஒன்று.. 

வாழும் வாழ்க்கையில் வாரம் ஒருமுறை பூங்கா அது இது என்று சுற்றி விட்டு வந்தாலும் குழந்தைகளுக்குக் கிடைக்கின்ற சுவர்கள் அவர்களது ராஜ்ஜியம் தானே..

வசந்தின் குழந்தையும் அப்படியே.. அவளது மகிழ்ச்சிக்காக வண்ண வண்ண பென்சில்களை வாங்கிக் குவித்திருந்தான்.. அத்தனையும் வீட்டுச் சுவரில் தேய்ந்து போயின -  கோடுகளாக தாறுமாறான வட்டங்களாக.. 

அவை கிறுக்கல்கள் தான் என்றாலும் குழந்தைக்கு அவை மேகங்கள்
மலைகள் ஆறுகள் பூக்கள் பட்டாம்பூச்சிகள்..

' செல்லம்.. இது என்னடா,!../ சூரியனா!.. ' என்று கேட்டு விட்டால் போதும் -  குழந்தையின் முகம் தாமரையாகி விடும்.. 

இதுதான் சந்தோஷம்.. இதற்காகத்தான் வாழ்க்கை..

ஆக, 

பெருந்தொகை செலவழித்து வீட்டுக்குப் பெயிண்ட் செய்து கொடுத்து விட்டு -  பொருள்களை ஏற்றி இறக்கி - இங்கே ஏர் போர்ட் ஹைவே 
ஈஸ்ட் அவென்யூவில்  - வசந்த் நித்யா தம்பதியினர் குடியேறிய மறுநாள்.. 

' எல்லாவற்றையும் ஒழுங்கு செய்தாகி விட்டது.. மூன்று வருசத்துக்கு கவலை இல்லை.. இரண்டாயிரம் ரியாலுக்கு மேல் செலவு!.. ஆனாலும் நிம்மதி.. இனிமேல் குழந்தை சுவர்களில் கிறுக்கி வைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.. '

- என, உறுதி எடுத்துக் கொண்ட நித்யா - கையில் காஃபியுடன் சோபாவில் அமர்ந்த போது குழந்தை ஓடி வந்து மடியில் ஏறி, முத்தமிட்டாள்..

" ம்மா.. பென்சில்.. " - என்றபடி தாயின் கண்களைப் பார்த்தாள்.. 

குழந்தையின் கண்களுக்குள் ஏதேதோ காவியங்கள் ஜொலிப்பதைக் கண்ட நித்யா - ஒன்றுக்கு  இரண்டாக பென்சில் எடுத்துக் கொடுப்பதற்காக எழுந்தாள் ..

***

73 கருத்துகள்:

  1. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்..

    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு நல்வரவு..

    பதிலளிநீக்கு
  4. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் கண் கவரும் படத்துடன் எழிலூட்டிய சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  5. மீண்டும் குழந்தையாகி விட்டார் சித்திரச் செல்வர்..

    எனது பேத்திகளின் கை வண்ணம் கண்டேன்..

    அழகு..அழகு..

    பதிலளிநீக்கு
  6. நம் பொருளாதாரக் கணக்குகள் குழந்தைகள் அறியாதவை. அந்த அழகுக்கும் மகிழ்ச்சிக்கும் விலை கொடுத்துத் தான் ஆக வேண்டும். சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. /// அந்த அழகுக்கும் மகிழ்ச்சிக்கும் விலை கொடுத்துத் தான் ஆக வேண்டும். சிறப்பு///

      உன்மை தான்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு
    2. நல்ல கருத்து எஸ் குமார்.

      நீக்கு
    3. வாங்க, குமார். வியாழனும் சனிக்கிழமையும் கூட 'நம்ம' சப்ஜெக்ட் தான். தவறாம வந்திடுங்க..

      நீக்கு
  7. டாடி எனக்கு ஒரு டவுட்டு :: முளைத்து 'இரண்டு இலை' விடாத பையனிடம், ... செல்லம்.. இது என்னடா,!../ 'சூரியனா!.. ' என்று கேட்டு விட்டால் போதும் - குழந்தையின் முகம் 'தாமரை' யாகி விடும்..
    இதில் குறியீடுகள் ஏதும் உள்ளனவா!

    பதிலளிநீக்கு
  8. குழந்தைகளின் சுவரோவியங்களை எந்தவித விலைக்கும் மதிப்பிற்கும் உட்படுத்தமுடியாது. சிறு வயதில் குழந்தைகள் சுவற்றில் வரைய வேண்டும். துரை அண்ணா கதை நன்று....இதைச் சொல்லியது ரோம்பாப் பிடித்தது...மின்சாரம் இல்லை. மொபைலில்.கஷ்டமாக இருக்கு. மீண்டும் வருகிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  9. /// குழந்தைகளின் சுவரோவியங்களை எந்த வித விலைக்கும் மதிப்பிற்கும் உட்படுத்த முடியாது.. ///

    ஆகா!..

    தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

    நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீடு கட்டிய பெரிசுகளுக்குப் புரிவதில்லை
      சுவர்களுக்குச் சொந்தக்காரர்கள் யாரென்று..

      நீக்கு
    2. அதானே! அப்படிச் சொல்லுங்க ஏகாந்தன் அண்ணா....

      கீதா

      நீக்கு
    3. /// வீடு கட்டிய பெரிசுகளுக்குப் புரிவதில்லை
      சுவர்களுக்குச் சொந்தக்காரர்கள் யாரென்று.. ///

      ஏகாந்தன் அவர்களது கருத்து அழகு

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  10. கதை பிறகுதான் படிக்கணும். யாத்திரையில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ, நெல்லை! பூரி யாத்திரையா! Enjoy Madi!

      கீதா

      நீக்கு
    2. ஓடிஸாவில் ஒரு மிக்சர் namkeen (வீடுகளில் செய்து விற்கிறாங்க.) வீட்டுக் கடைகளில் கிடைக்கும். அவங்க ஒவ்வொன்றும் தனித்தனியாக செஞ்சு வைச்சுக் கலந்து கொடுப்பாங்க. நமக்கு என்ன கலவை வேண்டுமோ அதைக் கலந்து வாங்கிக்கலாம். அந்த மிக்ஸர் ரொம்பச் சுவையாக இருக்கு. காரம் அவ்வளவாக இல்லை.

      கீதா

      நீக்கு
    3. நெல்லை அவர்களுக்கு நன்றி..

      பயணம் இனிதே அமையட்டும்..

      நீக்கு
  11. குழந்தைகளின் கற்பனையும், உளவியலும் வெளிப்படுவது இந்தச் சுவரோவியங்களில்தான். ஒரு குழந்தை எப்படி வளர்க்கப்படுகிறது என்பதை இந்தச் சுவரோவியங்கள் சொல்லும். இது மிக முக்கியம்.

    குழந்தைகளின் இயல்பு இது. இதைப் பற்றி என் சில்லு சில்லாய் பகுதியில் எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் அங்கு வாசிப்பவர்கள் மிகவும் குறைவு என்பதால் இங்கு ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிச்செல்கிறேன்.

    ஒரு குழந்தை இப்படிச் சுவற்றில் வரைந்தால், பேப்பரைக் கிழித்தால் கோபித்துக் கொள்ளாதீர்கள். ஆனால் என்ன பேப்பர் என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்!!!!!! அவர்கள் கிழிக்கவென்றே சில பேப்பர்களை ஒதுக்கி வைத்துவிடலாம்.

    வாடகை வீட்டில் இருக்கிறோம், வீட்டின் சொந்தக்காரர் சுவற்றில் எதுவும் இருக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு வைத்திருப்பார்கள். பரவாயில்லை அது அவர்களின் வீடு அவர்களின் மன நிலைப்பாடு. அதைப் பின்பற்றி அதே சமயம் குழந்தைகளின் கற்பனையையும், மன வெளிப்பாட்டையும் உதவுவதற்கு சுவற்றில் அவர்கள் வரைய தோதாக ஒட்டும் ஷீட்டுகள் கிடைக்கின்றன அதை ஒட்டி வைத்துவிட்டால் போச்சு! அதில் கிரேயான், கலர் பென்சில், ஏன் நீரோவியங்கள் கூட வரையலாம். அக்குழந்தை பிற்காலத்தில் சிறந்த ஒவியராகக் கூட வரலாம் அவர்களின் கற்பனைக்குத் த்டை போடக் கூடாது. அதே சமயம் காலச் சூழலுக்கு ஏற்ப அவர்களை எப்படி வழிநடத்தலாம் என்றும் யோசித்துச் செய்யலாம்.

    பேரக் குழந்தைகளை எதிர்பார்ப்பவர்களோ, குழந்தைகளை எதிர்பார்ப்பவர்களோ அலல்து சிறு குழந்தைகள் உள்ளவர்களுக்கோ பயன்படும் என்று இதை இங்கு சொல்லியிருக்கிறேன்,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொந்த வீட்டில் உள்ளவர்கள் கூட ஒரு வேளை perfectionist ஆக இருந்தால் இப்படியான வரையக் கூடிய பேப்பர்கள் அல்லது தாள்களை சுவற்றில் ஒட்டிவிடலாம்.

      கீதா

      நீக்கு
    2. ஆகா...

      இப்படித் தான் இருக்க வேண்டும்.. குழந்தைகளுடன் நாமும் குழந்தையாகி விட வேண்டும்..

      அப்போது தான் அவர்களது உலகம் புரியும்..

      அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
    3. இப்படித் தான் இருக்க வேண்டும்.. குழந்தைகளுடன் நாமும் குழந்தையாகி விட வேண்டும்..//

      கௌ அண்ணாவைப் பாருங்க குழந்தையாகிவிட்டார்!!!!

      கௌ அண்ணா ஓவியம் நல்லாருக்கு குறிப்பா கதையின் முக்கிய அம்சத்தின் வெளிப்பாடு.

      கீதா

      நீக்கு
    4. ஒட்டும் தாள்களைப் பற்றி சொல்லி
      இருப்பது சிறப்பு..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி சகோ..

      நீக்கு
  12. குழந்தைகளின் சுவரோவியங்கள் - விலை மதிப்பில்லாதது தான். கதை மிகவும் நன்று. அமீரக வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்களையும் சொன்னது நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி வெங்கட்..

      நீக்கு
  13. பானுக்காவின் பேத்தி சுவரெல்லாம் அழகாக வரைந்து வைத்திருக்கிறாள். நான் சென்றிருந்த போது அக்கா சொல்லி அதைக் காட்டினார். அப்போதும் அவள் அடுத்து வரைவதற்குத் தயாகிக் கொண்டிருந்தாள்!!! நான் ரசித்துவிட்டு வந்தேன்!.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. //சொந்த மண்ணில் தான் குழந்தை பிறக்க வேண்டும்//

    சூப்பர் இப்படி நினைப்பவர்களில் அடியேனும்.....

    நிறைவான கதை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஜி..

      நீக்கு
  15. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  16. //அவை கிறுக்கல்கள் தான் என்றாலும் குழந்தைக்கு அவை மேகங்கள்
    மலைகள் ஆறுகள் பூக்கள் பட்டாம்பூச்சிகள்..

    ' செல்லம்.. இது என்னடா,!../ சூரியனா!.. ' என்று கேட்டு விட்டால் போதும் - குழந்தையின் முகம் தாமரையாகி விடும்.. //

    உண்மை. குழந்தைகளின் மகிழ்ச்சி மலர்ந்து தான் போகும் பூவாய்.

    //குழந்தையின் கண்களுக்குள் ஏதேதோ காவியங்கள் ஜொலிப்பதைக் கண்ட நித்யா - ஒன்றுக்கு இரண்டாக பென்சில் எடுத்துக் கொடுப்பதற்காக எழுந்தாள் ..//

    அது சரிதான் குழந்தையின் மகிழ்ச்சிதான் அம்மாவுக்கு வேண்டும்.

    சார் பொருத்தமாக படம் வரைந்து இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ///குழந்தையின் மகிழ்ச்சி தான் அம்மாவுக்கு வேண்டும்.///

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி..

      நீக்கு
  17. சுவரில் என்று வந்திருக்க வேண்டும், என் கருத்தில் சுவற்றில்னு சொல்லிவிட்டேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
  18. துரை அண்ணா, கதையில் அந்த ஊர்களின் கட்டுப்பாடுகளைப் பற்றிச் சொல்லியிருக்கீங்க இப்ப இங்கும் இப்படித்தான்......அதுவும் எல்லாமே பெரிய பெரிய வளாகங்களாகத்தானே கட்டுகிறார்கள்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் குடியிருக்கும் வாடகை வீட்டிலும் இப்படித் தான் இருக்கின்றது..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  19. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே.

    கதை அருமை. ஒரு வாடகை வீட்டிலிருந்து , அதுவும் வெளிநாட்டில் வாடகை வீட்டிலிருந்து கிளம்பி அடுத்த வீட்டுக்கு செல்லும் சிரமங்களை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

    எங்கள் அப்போதைய சென்னை வாழ்வில், எங்கள் குழந்தைகளுக்கு மெல்ல நடப்பது எப்படியென வேறு வழியில்லாமல் வலுக்கட்டாயமாக நாங்கள் கற்று கொடுத்தோம். ஏனெனில், நாங்கள் இருந்தது முதல் மாடி. கீழே எங்களது மாடிக்கு மேலேயே இருக்கும் வீட்டு உரிமையாளர் கீழே பலசரக்கு கடை, வைத்திருந்தார்கள். குழந்தைகள் எப்போதாவது கொஞ்சம் அவர்களின் உற்சாக மிகுதியில் அதிரடியாக நடந்தாலும் கீழிருந்து புகார்கள் வந்து விடும். கதையைப் படித்ததும் அந்த நினைவுகள் வந்து விட்டன.

    குழந்தைகளின் ஓவியங்கள் என்றுமே பொக்கிஷங்கள். நாங்கள் இப்போதும் எங்கள் சின்னக்குழந்தைகளின் (பேத்தி) பேப்பரில் வரையும் ஓவியங்களை சேகரித்து வைக்கிறோம்.

    கதையிலும் குழந்தையின் ஓவியத்திற்கு முக்கியத்துவம் தந்ததை ரசித்தேன். வேறு வீடு மாறியதும், குழந்தையின் விருப்பத்திற்கேற்ப சுவரோவியம் வரைய பென்சல்கள் எடுத்துத் தந்த அந்த தாய்மையை போற்றுகிறேன். கதை நன்றாக உள்ளது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    கதைக்கேற்றபடி ஒரு குழந்தை வரைந்த மாதிரியே அழகாக ஓவியம் வரைந்த சகோதரர் கௌதமன் அவர்களுக்கும் பாராட்டுக்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தையின் எழுத்துன்னு காட்ட ஓவியத்தில் வேணும்னே தப்பும் தவறுமா இங்கிலீஷ் எழுதியிருக்கார், பாருங்கோ.. இந்தக் கற்பனையெல்லாம் கற்றோ, தெரிந்தோ வருவதில்லை.. தன்னாலே வருவது..
      அது என்ன தன்னாலே வருவது?
      உங்கள் யோசனைக்கு..

      நீக்கு
    2. கௌதம் ஜி நமக்குக் கிடைத்த பொக்கிஷம்..

      வாழ்க அவரது திறமை..

      நீக்கு
    3. வணக்கம் சகோதரரே

      /இந்தக் கற்பனையெல்லாம் கற்றோ, தெரிந்தோ வருவதில்லை.. தன்னாலே வருவது..
      அது என்ன தன்னாலே வருவது?/

      உண்மை. அதுதான் இயற்கையாக இறைவன் தந்த கொடை. எல்லோரும் இதை பெறுவதில்லை. சிலருக்கு சிலவற்றில் கிடைக்கும் வரப்பிரசாதம். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. பாராட்டுகளுக்கு நன்றி. (இந்தப் பாராட்டுகளுக்கு நான் தகுதி உடையவனா என்ற சந்தேகமும் உள்ளூர இருக்கிறது. )

      நீக்கு
  20. போன மாதம் நண்பர் வீட்டு கிரஹபிரவேசம் ஒன்றிற்குப் போயிருந்தேன்.

    நாங்கள் பேசிக் கொண்டிருந்த பொழுது நண்பரின் குழந்தை -- 6 அல்லது 7 வயதிருக்கும் --
    இந்தக் கதையில் வருகிற மாதிரி -- மார்க் இங்க் எழுதுகோலால் சுவரில் கிறுக்கிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த நண்பர் ஆவேசம் வந்த மாதிரி எழுந்து சென்று, "உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன், சுவரில் கிறுக்கக்கூடாதுன்னு.." என்று முதுகில் ஒரு அறை வைத்து பேனாவைப் பிடுங்கி அதற்கிடையே பையன் "அம்மா.." என்று கத்திக் கொண்டு உள்ளே ஓட.. சட்டென்று என்னைப் பார்த்த நண்பர் சற்று கோபம் தணியாதவராய், 'ஜீவி.. நாலு வயசிலிருந்து இதே ரோதனை.. இது வரைக்கும் வாடகை வீட்டில் இருந்து பழகிட்டோமா? எவன் வீடோ தானேன்னு இருந்திட்டோம்.. குழந்தை தானேன்னு கண்டிக்க மனசில்லே.. இப்போ சொந்த வீட்டிற்கு வந்திட்டோம்.. இப்பவும் அப்படி இருக்க முடியுமா.. சுவரெல்லாம் நாசமாயிடும்லே.. அதான்.." என்றார், பாருங்கள்..

    நானோ திகைத்துப் போய் நின்றேன். அவர் வீடு.. அவர் வீட்டுச் சுவர்.. அவர் குழந்தை.. நாம் என்ன சொல்றத்துக்கு இருக்கு, சொல்லுங்கோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ ! நண்பரின் இந்த மனநிலை மிகவும் கண்டனத்துக்கு உரியது. 'மற்றவர் வீடு என்றால் சரி, தன் வீடு என்றால் சரியல்ல' என்ற மனோபாவம் ஏற்கத்தக்கது அல்ல.

      நீக்கு
    2. நண்பரின் மன நிலை நல்லதாகப் படவில்லை. ஆ இந்தக் கருத்தை போட வந்தப்ப கௌ அண்ணாவும் அதே கருத்தைக் கொடுத்திருப்பதைப் பார்த்து அதை அப்படியே டிட்டோ செய்கிறேன்.

      அந்த நண்பரின் இந்த மனநிலை மற்றும் குழந்தையை கண்டித்தது. இரண்டுமே சரியான பக்குவம் இல்லை.

      கீதா

      நீக்கு
  21. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து வாழும் வளைகுடா நாடுகளில் குழந்தைகளைக் கண்டிப்பது என்பது இயலாத காரியம் ஆம் பிள்ளைச் செல்வங்க சுதந்திரமாய் வாழ ஆகும் செலவு என்பது செலவே அல்ல. புதிய வீட்டில் பென்சில் கேட்டதும் உடனே கொடுத்த அம்மா! அருமையாய் முடித்திருக்கிறீர்கள் கதையை, துரை செல்வராஜு ஸார்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  22. @ கமலா ஹரிஹரன்

    /// குழந்தைகளின் ஓவியங்கள் என்றுமே பொக்கிஷங்கள். நாங்கள் இப்போதும் எங்கள் சின்னக்குழந்தைகளின் (பேத்தி) பேப்பரில் வரையும் ஓவியங்களை சேகரித்து வைக்கிறோம்... ///

    எனது பேத்திகளும் இதே கதை தான்...

    அவர்களை மனதில் வைத்து எழுதப்பட்ட கதை இது..

    தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
    நன்றி..

    பதிலளிநீக்கு
  23. ஜீவி அண்ணா தாங்கள் குறிப்பிட்டிருக்கும் அரக்கனை நினைத்தாலே அதிர்ச்சியாக இருக்கின்றது..

    பாவம் அந்தக் குழந்தை..

    பதிலளிநீக்கு
  24. @ துளசிதரன்


    /// பிள்ளைச் செல்வங்க சுதந்திரமாய் வாழ ஆகும் செலவு என்பது செலவே அல்ல. புதிய வீட்டில் பென்சில் கேட்டதும் உடனே கொடுத்த அம்மா!.. ///

    மகிழ்ச்சி ஒன்றே நமது லட்சியம்..

    தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

    நன்றி துளசிதரன்..

    பதிலளிநீக்கு
  25. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  26. குழந்தை எப்போதும் குழந்தை மாதிரி தானே இருக்கும்! கையில் வண்ண பென்சில் கிடைத்தால் கதவாவது சுவராவது ! ஆனால் அந்தக் கிறுக்கல் கூட கலைநயத்தை வெளிக்காட்டுவ தாகப் புரிந்து கொண்டால் அதுவே குழந்தைகளுக்கு எல்லையற்ற குதூகலத்தை தந்து விடும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, ஸார். நெடு நாட்கள் கழித்துப் பார்த்ததில் சந்தோஷம்.

      நீக்கு
  27. குழந்தை எப்போதும் குழந்தை மாதிரி தானே இருக்கும்! கையில் வண்ண பென்சில் கிடைத்தால் கதவாவது.. சுவராவது!..

    அன்பின்
    வருகையும்
    கருத்துரையும்
    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!