செவ்வாய், 22 செப்டம்பர், 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை : இன்று செருப்பு; நாளை சேலை.. - ஜீவி 

இன்று செருப்பு; நாளை சேலை..
ஜீவி 


பார்க் அவென்யூ செண்ட்டை சட்டையில் ஸ்பிரே பண்ணிக் கொண்டு இன்னொரு தடவை தலையை அழுந்த வாரிக்கொண்ட பொழுது, பீரோ கண்ணடியில், ஹாலில் கிழிந்த சேலையைத் தைத்துக் கொண்டிருந்த மனைவியின் உருவம் தெரிந்தது.      உடனே ரெளத்திரமானான் தங்கப்பன்.

"ஏய்! உனக்கு சேலையத் தைக்க நேரம் காலம் தெரியாது?" என்று எரிந்து விழுந்தான்.

"ஸாரிங்க.." என்று கெளசல்யா துணுக்குற்று சேலையோடு எழுந்து கொண்டாள்.

"ஆமாம். ஸாரியைத்தான் சொல்றேன். புருஷன்காரன் ஆபீஸூக்குப் போகும் போது பழசை தைச்சு புதுசு வேணும்னு சிக்னல் கொடுக்கறையா?" என்று அவன் உறுமினான்.

"ஸாரிங்க.. நான் புடவையைச் சொல்லலே.. மன்னிச்சிக்குங்க.. " என்று சமையலறைப் பக்கம் பம்மிப் பதுங்கினாள் கெளசல்யா.

"ஏய்! எல்லாம் எனக்குத் தெரியும்டி. உன்னை மாதிரி எத்தனை பேரை நா பாத்திருப்பேன்?" எகத்தாளத்த்கோடு காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு வாசல் பக்கம் வந்து செருப்பை மாட்டிக் கொண்டான் தங்கப்பன்.

வாஸ்தவம் தான். எத்தனையோ இல்லாவிட்டாலும் நாலைந்தை நைச்சியம் பண்ணி ஆசைகாட்டி படுக்கையில் தள்ளியவன் தான் தங்கப்பன். அந்த செயலாற்றல், பொம்பிளை என்றால் தூக்கி எறிந்து பேசச் சொல்லியது.

அதுவும் கெளசல்யா என்றால் அவனுக்குத் தொக்கு. வீட்டுக்குள் நுழைந்தாலே 'தாம் தூம்' தான். அவள் முகத்தை பார்த்தாலே இவனுக்குப் பற்றி எரியும்.

கெளசல்யா பாவம்!

வெளியில் போய்விட்டு வீடு திரும்பும் புருஷனை வளைத்துப் போட்டுக் கொண்டு "என்னங்க.. என்னங்க' என்று கொஞ்சத் தெரியாது. உங்கள் வருகைக்காகத்தான் வழிமேல் விழிவைத்துக் காத்கிருக்கிறேன் என்று புளுகத் தெரியாது. பீச்சுக்குப் போவோமா, பிக்சருக்குப் போவோமா என்று கேட்கத் தெரியாது. குறைந்த பட்சம் முகம் அலம்பி, தலைவாரிப் பூச்சூடி பளபளக்க கூடத் தெரியாது.

புத்தம் புதுசாக மனைவிக்கு மாற்றுப்புடவை வாங்கித் தர வக்கில்லாதவன், மனமில்லாதவன் மாசத்தில் நூற்றுக்கணக்கில் செண்ட்டுக்காகவும், லேகியங்களுக்காகவும் செலவழிப்பான்.

இன்றைய செண்ட் ஸ்பிரே சமாச்சாரத்திற்கும் அதான் காரணம். சுகன்யா என்றொரு சுந்தரி. சொந்த ஊர் திருவனந்தபுரத்திலிருந்து இவனது சென்னை தலைமை அலுவலகத்திற்கு மாற்றலாகி வந்திருக்கிறாள். மாலை ஐந்து மணிக்கு முடியும் ஆபீஸ் நேரம், காலை ஐந்து மணிக்குத் துவங்கினாலும் அவனுக்கு சம்மதமே. அந்த அளவுக்கு சுகன்யா தரிசனத்தில் தேன்மாந்திய குரங்காகிப் போனான் தங்கப்பன்.

இந்த லட்சணத்தில் சுகன்யாவின் கழுத்தில் தடித்த தாலிச்சரடு ஸ்பஷ்டமாகவே வெளியே தெரியும். தங்கப்பனைப் பொருத்த மட்டில் தாலியெல்லாம் வேலியல்ல.

சுகன்யா இந்த ஆபீஸில் சேர்ந்த மறுநாளே யாருக்கும் இல்லாத துணிச்சலாய் 'டைனிங் ரூம்' அருகே வழிமறித்து தங்கப்பன் கேட்டான்:   "ஹலோ! ஒண்டர்புல்! பிரமாதமாயிருகே! என்ன ஸாரி இது, எங்கே வாங்கினீங்க?" முகபாவம் பூராவும் கண் வழியே புடவையின் நேர்த்தியை ரசிக்கிற மாதிரி காட்டிக் கொண்டு, அவன் உள் மனசு அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதற்கு ஏங்கியது.

"தேங்க் யூ.. சாதாரண ஆர்கண்டிதான். இது எங்க ஊர்லே எடுத்தது."

"அப்படியா? வெரிகுட்! நீங்க ஆயிரம் சொல்லுங்க.. அழகாயிருக்கறவங்க, சாதாரணப் புடவையைக் கூட கட்றபடி நேர்த்தியா கட்டினா, 'டாப்'பாத்தான் இருக்கு!" என்று வார்த்தைகளைத் தேனில் தோய்த்தெடுத்து மனசாரப் பாராட்டினான். வெகு இயல்பாகப் புடவை முந்தானை பாகத்தைக் கையிலெடுத்து நூல் நைஸ் பார்க்கிற மாதிரி விரல்களுக்கிடையே புரட்டினான். 'இதுவே அதிகம், ஜாக்கிரதை!' என்று உள்மனசு எச்சரித்தது. உடனே சடக்கென்று புடவைத் தலைப்பை விட்டு விட்டான்.

"தேங்க்யூ..தேங்க்யூ.." என்று சிரித்துக் கொண்டே சுகன்யா போய்விட்டாள்.

இந்த மாதிரியான நாலைந்து சம்பவங்கள்.. அத்தனையிலும் தனக்குத்தான் வெற்றியாக தங்கப்பன் நினைத்துக் கொண்டான். பல நேரங்களில் நினைப்பு தான் மனிதனைக் குடைசாய்த்து விடுகிறது. அதுவும், தன் செயல்களுக்கு சாதகமாக நினைக்கும் நினைப்புகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

ச்சு; இன்னும் சில நிமிடங்களில் சுகன்யா வந்து விடுவாள். இன்று சற்று முன்னாடியே ஆபீசுக்கு வந்து விட்டான் தங்கப்பன்.

'டப்டப்'பென்று அடித்துக் கொண்டு வந்த ஆட்டோ அலுவலக வாசலில் நின்றது. ஆட்டோவிலிருந்து சுகன்யா வெளிப்பட்டது ரதத்திலிருந்து இறங்கிய தேவதையாய்த் தோன்றியது அவனுக்கு.

சுகன்யாவின் தோற்றம் தான் அன்று வெள்ளிக்கிழமை என்பதையே அவனுக்கு நினைவுபடுத்தியது. (தேங்காய்) எண்ணெய் தேய்த்துக் குளித்ததினால் புஸூபுஸூத்தக் கூந்தலைக் கோடலி முடிச்சிட்டு ரிப்பன் போட்டுக் கட்டியிருந்தது அவனைக் கட்டிப்போட்டது. சிகப்பு நிற மேனிக்கு ஏற்ற கத்தரிப்பூக் கலர் புடவை, வாடாமல்லி நிற ஜாக்கெட்,  தழதழத்த சேலைக்குக் கீழே செருப்பணியாத ரோஸ் பாதங்கள்... அவள் ஹாலுக்குள் நுழையும் பொழுதே சரியான ஐடியா தங்கப்பன் மனசில் கிளிக் ஆகிவிட்டது.

சடாரென்று தன் சீட்டிலிருந்து எழுந்து தனியே அவளை எதிர் கொண்டு 'குட்மார்னிங்' என்றான்.

"மார்னிங்.." என்று அவள் ஒரு நிமிடம் தயங்கிய பொழுது ஒரு வினாடி கூட விரயம் பண்ணாமல், "உங்கள் வீடு ஆழ்வார்பேட்டை ஸ்ரீமான் ஸ்ரீநிவாசன் தெருவில் தானே இருக்கிறது?" என்று கேட்டான்.

"அதே!" என்று அவள் ஆச்சரியப்பட்டு திகைக்கும் பொழுது, "இன்னிக்கு ஈவினிங் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்.. ஐ'ம் கம்மிங்.." என்றான்.

"வித் பிளஷர்.. ஆழ்வார்ப்பேட்டைலே வேறு ஏதானும் ஜோலியோ?.."

"எஸ்.. வீனஸ் கலனியிலே ஒரு கதாகாலேட்சேபம். மிஸ் பண்ணக்கூடாது.. அதான்.. அப்படியே.." ஆஸ்திக சமாச்சாரங்களை குழைத்துப் பேசுவது அயோக்கியத்தனத்தைப் பாதியாகக் குறைத்துவிடும் என்பது அவன் அகராதியின் பாலபாடம்.

""ஓ... பக்தர்களை வரவேற்பது கடவுளையே வரவேற்கிற மாதிரி.." என்று அழகாகச் சிரித்தாள் சுகன்யா. "யூ ஆர் கார்டியலி வெல்கம்" என்று அவள் சொன்னது ஐஸ்கிரீமை சுவைப்பது போலிருந்தது தங்கப்பனுக்கு.

அவள் அவனைத் தாண்டிச் செல்கையில் மீண்டும் அந்தச் செருப்பணியாத ரோஸ் நிறப் பாதங்களைப் பார்த்தான். இவ்வளவு நேர்த்தியாக டிரஸ் பண்ணிக் கொள்ளும் இவள் ஏன் காலுக்கு எப்பொழுதும் செருப்பணிவதில்லை?.. நன்றாக இப்பொழுது    நினைவூட்டிப் பார்த்தான். ஊஹூம்..     ஒரு நாள் கூட சுகன்யாவை அவன் செருப்போடு பார்த்ததில்லை என்பது நிச்சயமாயிற்று.

தீர்மானம் உருப்பெற்று மாலை ஆறுக்கு ஆழ்வார்ப்பேட்டை பேட்டா ஷூ மார்ட்டில் இருந்தான் தங்கப்பன். சுகன்யாவின் மலர்ப்பாதங்களை முத்தமிட காஸ்ட்லியாகவே செருப்பு வாங்கி அட்டைப் பெட்டியில் 'பாக்' செய்வித்து கைப் பையிலிட்டுச் சுமந்தான்.

"வாங்க, ஸாரே... வாங்க..." என்று வாய் நிறையப் புன்னகையுடன் சுகன்யா வரவேற்றது முக்கால் வாசி காரியம் முடிந்த மாதிரி இருந்தது தங்கப்பனுக்கு. 

உள்ளே நுழைந்தான்.

லேசாகப் பேச்சுக் கொடுத்து பையிலிருந்து செருப்பு அட்டைப் பெட்டியை எடுக்கலாமென்று தங்கப்பன் எண்ணியிருந்தான். அந்தத் தாமரைப்பூ பாதம் பிடித்து செருப்பை மாட்டி விடுவது அவன் உத்தேசம். அதுவே ஆரம்பம்.

"எத்தனை மணிக்கு காலட்சேபம், ஸாரே?" என்று   சோபா பக்கம் நகர்ந்தாள்  சுகன்யா.  

'அழகு மயில் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ' என்று  மனம்  மயங்கியது.    அவள் கேட்டது மூளை செல்களில் பதியவில்லை.   அவள் உதடுகள் அசைந்ததிலிருந்து ஏதோ கேட்டிருக்கிறாள் என்ற ஸ்மரணை வந்து,   "என்ன கேட்டீங்க, சுகன்யா?'  என்றான்.

இப்பொழுது தான் அவள் பெயரை அவள் எதிரே அவ்வளவு நெருக்கத்தில் முதன் முதலாக உச்சரிக்கிறான்.   அவள் அதை எப்படி எதிர் கொண்டிருப்பாள்  என்று  தெரிந்து கொள்ளும் ஆவலில் அவள் முகம் பார்த்து படிக்க முயன்றான்.   தீர்மானமாக ஒன்றும்  தெரிந்து  கொள்ள முடியாத பதட்டத்தில்  மனசு மட்டும் பரபரத்தது.

"வீனஸ் கொலனிலே எத்தனை மணிக்கு ப்ரோக்கிராம்?"  என்று சாதாரணமாக அவள் கேட்டது  அவனுக்கு சப்பென்று இருந்தது.    

இருந்தாலும்  சமாளித்துக் கொண்டு, "ஏழு, ஏழைரைக்கு ஆரம்பம்," என்றவன், "உங்க ஹஸ்பெண்ட் வீட்டில் இல்லையா?"   என்று மனசின்  ஆவலை வெளிக்காட்டிக் கொள்ளாமல்  ஏதோ தகவல் ஒன்றை விசாரிக்கிற மாதிரி    தங்கப்பன்  பெரிய மனித தோரணையில் பவ்யமாகக் கேட்டான்.

"ஓ" என்று அழகாக உதடுகளைக் குவித்தவள், "இருக்காரே! மாடியில்..." என்று மாடிப்பக்கம் கை காட்டினாள். "வாங்க, மேலே போய்ப் பார்க்கலாம்" என்று உள் பக்கமிருந்த மாடிப்படியில் அவன் பின்னால் வருவதற்கு வழிகாட்டுகிற மாதிரி ஏறினாள். தங்கப்பன் கைப்பையை ஊஞ்சலிலேயே வைத்து விட்டு அவளைத் தொடர்ந்தான்.

மாடி ஹால் நீண்டு காற்றோட்டமாக இருந்தது. ஹால் கோடியில் ஜன்னல் பக்கமிருந்த, ஸ்டாண்ட் பூட்டிய கேன்வாஸ் துணியில் யாரோ ஓவியம் வரைந்து கொண்டிருந்தார்கள். பக்கத்தில் நெருங்க, நெருங்க அவருக்கு ஒற்றைக் கால் இல்லை, கட்டை ஊன்றி நின்று ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறார் என்று தங்கப்பனுக்குத் தெரிந்தது.

மனித அரவம் கேட்டு, சிந்தனை கலைந்து திரும்பியவன் போல அந்த மனிதன் இவர்கள் பக்கம் திரும்பினான்.

"மீட் மை ஹஸ்பெண்ட் மோகன்!" என்று தன் கணவனை தங்கப்பனுக்கு அறிமுகப்படுத்தியவள், "இவர் தங்கப்பன்!   ஆபிஸ்  நண்பர்..  புதுசாக இந்தக் கிளைக்கு மாற்றலாகி வந்தவளுக்கு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருந்தது. இவர் தான் மிகவும் உதவிகரமாக இருந்தார். சகோதரர் போல உரிமையுடன் பழகுவார்," என்று சுகன்யா கணவனிடம் சொன்ன போது,   அன் ஈஸியாக இருந்தது தங்கப்பனுக்கு.

"ஹலோ.. உட்காருங்க..." என்று அங்கு கிடந்த சோபா பக்கம் கை நீட்டி விட்டு, ஊன்று கோல் சப்திக்க தாண்டி வந்த மோகன், உயரமான ஒரு சேரில் கட்டைகளை அருகில் பற்றியபடி சாய்ந்து உட்கார்ந்தான். இப்பொழுது தான் தங்கப்பனால் அவனது ஒரு பக்கக் காலை நன்கு பார்க்க முடிந்தது.   அது தொடைக்குக் கீழே நறுக்கப்பட்டு ஒன்றுமில்லாமல் சூம்பிக் கிடந்தது. ஆனால் மோகன் அதைப் பற்றிக் கவலைப்பட்டதாகவோ, அசெளகரியப்பட்டதாகவோ தெரியவில்லை.   அவன் மடைதிறந்த உற்சாகம்  கொப்பளித்தது.  

ஓவியம் பற்றித் தனக்கு ஒன்றும் தெரியாது என்றாலும், கேன்வாஸில் வரையப்பட்டிருந்த அவனது ஓவியத்தைப் பார்த்து மிகவும் சந்தோஷப்படுவதாகச் சொன்ன தங்கப்பனுக்கு, இவன் வரையும் ஓவியப் பாணிகளைப் பற்றி 'டீடெய்ல்லா'கச் சொன்னான் மோகன். உலக ஓவிய பாணிகளும், அவை பற்றிய சித்தாந்தங்களும் அவன் பேச்சில் ஆற்றோட்டமாக பொங்கி வந்தது. பூபன் கக்கர், ரமேஷ்வர் ப்ரூடா, ஸதீஷ் குஜரால், ஓரொஸ்கோ என்று நிறைய பேர்கள் அவன் பேசும்போது குறுக்கே குறுக்கே வந்தார்கள். அத்தனையும் ஓவியர்களின் பெயர்கள் என்று ஒருவாறு யூகித்தான் தங்கப்பன். மோகன் சொன்னதில் தங்கப்பனுக்கு ஆதிமூலம் என்கிற பெயரை மட்டும் எங்கோ கேட்ட மாதிரி இருந்தது. நீலம், கருஞ்சிவப்பு, கரும் பழுப்பு என்பவை சாதாரணமாக நாம் வழக்கில் எண்ணிக் கொண்டிருக்கும் வெறும் நிறங்கள் மட்டுமல்ல; கான்வாஸ் ஓவியங்களில் அவை கொள்ளும் தீட்டல்களின் பங்கு பற்றி மோகன் சொல்லிக் கொண்டு வரும் பொழுது அம்மாடி, எம்மாம் பெரிய சப்ஜெக்ட் இது என்கிற திகைப்பு தான் தங்கப்பனுக்கு ஏற்பட்டது. கட்டக் கடைசியாக அவனுக்கு இருக்கும் வித்வத்தில் தான் தம்மாத்துண்டு தூசி என்று தங்கப்பன் கூனிக் குறுகிப் போனாள்.   அவன் அறிவின் தீட்சண்யம்  தானெல்லாம் இவனுக்கு எதிரே  சரிக்கு சமமாக  ஆசனத்தில் அமர்ந்து பேசக்கூட அருகதையற்ற  ஞானசூன்யம் என்ற நிதரசன உண்மையை  நேரடியாக உணர்ந்த திகிலில் தங்கப்பன் உறைந்து  போனான்.

நேரம் ஓடிப்போனதே தெரியவில்லை. மணி ஏழரை. "சாரே, காலட்சேபத்திற்குப் போக வேண்டாம்?" என்று சுகன்யா ஞாபகப்படுத்தவே எழுந்து கொண்டான் தங்கப்பன். "அடிக்கடி வந்து போங்கள்.. உண்மையிலேயே நீங்கள் ஒரு சுவாரஸ்யமான நபர்.." என்று விடை கொடுத்தான் மோகன்.

"போன வருஷம், பத்மனாப சுவாமி கோயிலுக்குப் பக்கத்தில் ஸ்கூட்டர் ஆக்ஸிடெண்ட்... காலைத் துண்டிக்காவிட்டால், பிழைப்பது கஷ்டம் என்றதும் ஒற்றைக் காலை எடுத்து விட்டோம். அவர் அப்படி இருக்கையில் எனக்கெப்படி சாரே, செருப்பு அணிய மனசு வரும்? அன்னிக்கு விட்டது" என்று மாடி ஹாலைக் கடக்கையில் சுகன்யா சொன்னது பளாரென்று யாரோ கன்னத்தில் அறைந்த மாதிரி தங்கப்பனுக்கு இருந்தது. 'புருஷன் செருப்பு போட முடியாது போய்விட்டபடியால் தானும் செருப்பு போடாமலிருப்பது...'   அவள் சொன்னது அவனை வதைத்தது..    'பெண்டாட்டி கிழிசல் புடவையைத் தைத்து அணியும் போது, செண்ட் போட்டு கோயில் காளை போல் ஊர் மேயறயாடா, பாவி!' என்று உள் நெஞ்சு ஓலமிட்டது.

போன மாதம் ஒரு நாள் நெருங்கிய நண்பன்  சந்திரனுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது இதே மாதிரியான ஒன்றைத் தானே அவனும் சொன்னான் என்று தங்கப்பனுக்குப் பொறி தட்டியது.   "இதெல்லாம்  தப்பு,  ரைட்டு  என்பதையெல்லாம் தாண்டின ஒன்று தங்கப்பன்.... ஒவ்வொருத்தருக்கும் இந்த மாதிரி ஈடுபாடுகள் ஒவ்வொண்ணிலே இருக்கத்  தான் செய்யறது....  உன்னை  மாதிரியான ஆட்களுக்கு  இந்த சமாச்சாரத்தில் சராசரிக்கு அதிகமான மன ஈடுபாடு..   ஈடுபாட்டுக்குத் தீனி போட்டா முடிவே இல்லாமல் இன்னும் இன்னும் என்று கேட்டுக்  கொண்டே இருக்கும்.  தன்னது,  இன்னொருத்தனது என்ற வித்தியாசமே தெரியாமல்  யாருதா இருந்தா என்ன,  தீனி கிடைச்சா சரிதான் என்ற  திருப்திக்காக மனசு ஏங்கிக் கொண்டே இருக்கும்.   இது ஒருவித மன வியாதி..  வியாதிக்குத் தீர்வு  ஷாக் ட்ரீட்மெண்ட் தான்..   சூடு கண்ட பூனை பால் பக்கமே வராதில்லையா,  அந்த மாதிரி.  சொந்த அனுபவம் ஒண்ணு ஏற்பட்டா  எல்லாமே  படிப்படியாக்  கொறைஞ்சிடும்.. " என்று அவன் சொன்னது  பைத்தியக்காரன் உளறலைப் போல தனக்கிருந்ததை  நினைத்துப் பார்த்துக் கொண்டான் தங்கப்பன்.  சந்திரன் எவ்வளவு தீர்க்கமாக  இந்த விஷயத்தைக் கையாண்டிருக்கிறான் என்று இப்பொழுது தோன்றி  மனசு  இலகுவாயிற்று.

மாடிப்படியிறங்கும் போது தங்கப்பன் புது மனிதன். நெருக்கமாகக் கூடப் படியிறங்கி வந்த சுகன்யா,  புது மனுஷியாய்த்  தோற்றமளித்தாள். இந்த ஆதர்ச தம்பதிகளின் அறிமுகம் கிடைக்கத் தான் புண்ணியம் பண்ணியிருக்க வேண்டுமென தங்கப்பன் நினைத்துக் கொண்டான்.



வீட்டுக்கு வந்து கதவைத் தட்டிய பொழுது கெளசல்யா ஓடி வந்து கதவு திறந்தாள். உள்ளே நுழைந்து, வலது கை திருப்பி கதவு சாத்தியவன் இடைக்கழி இருட்டிலேயே அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

"என்னங்க, இது?...." என்று  புது அனுபவமாய்  மூச்சு திணறியவளை குண்டு கட்டாகத் தூக்கி வந்து, சோபாவில் கிடத்தி, அட்டைப் பெட்டி திறந்து, பரபரவென்று காகிதப் பார்ஸலைப் பிரித்து, புத்தம் புது வண்ணச் செருப்புகளை அவள் கால்களில் ஆசையோடு அணிவித்தான்.

அந்த செருப்புகள் அவள் கால்களுக்கு வெகுவாகப் பொருந்தி இருந்தன.  "எப்படிங்க,  என் காலுக்கு அளவெடுத்த மாதிரி இவ்வளவு கரெக்டா  வாங்கி வந்திருக்கீங்க?" என்று அவள்  வியந்த பொழுது  கூனிக் குறுகிப் போனான்.   'இன்னொருத்தி கால்களை பார்த்து பார்த்து  மயங்கி அவளுக்காக வாங்கின செருப்புடி இது..' என்று  சுட்ட உண்மை  தீச்சுடலைப் போல தகிப்பாய் இருந்தது அவனுக்கு.

"நா என்ன வேலைக்கா போறேன்? எனக்கு எதுக்குங்க புது செருப்பு?.. இதுக்குப் பதில் சேலை வாங்கியாந்து இருக்கலாமில்லே?" என்றவளுக்கு "இன்று செருப்பு; நாளை சேலை.." என்று ஆசையோடு முகம்  பற்றி  அவள் கூந்தலில்  முகம் புதைத்தான் தங்கப்பன்.    சீகைக்காய் வாசத்தோடான  கமகமப்பு  அவனை சொர்க்கத்தில் அமிழ்த்தியது.

75 கருத்துகள்:

  1. காலை வணக்கம்.

    இந்தக் கதையை செருப்பு அணியாத்தன் காரணம் சொன்னவரை ஒரு கதையாக பத்திரிகையில் முன்பு படித்த நினைவு இருக்கிறது. (ஒரு பக்க கதையோ என்ற நினைவு). சுகன்யா காலில் செருப்பில்லை என்றதுமே கதை நினைவுக்கு வந்துவிட்டது.

    இங்கு இன்னும் கொஞ்சம் டீடெயிலாக கதை செல்கிறது.

    நல்ல கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, நெல்லை. ஒரு பக்கக் கதை அல்ல. குமுதத்தில் 4 பக்கங்களுக்கு அதிசயமாகப் பிரசுரமான கதை. அந்த 3-12-98 இதழிலேயே பெரிய கதை இது தான். ப்ரியா கல்யாணராமன் துணை ஆசிரியர். எஸ்.ஏ.பி காலத்திற்கு பிற்கால கதை. ரா.கி.ரா., ஜ.ரா.சு, புனிதன் மூவருமே குமுதத் தொடர்பிலில்லாத காலமும் கூட.

      கதைக்கான ஓவியத்தை பற்றி ஏன் எதுவும் சொல்லவில்லை?.. வரைந்தவர் பெயர் தெரியவில்லை. கலர் ஓவியம் ஆகியதால் எல்லாம் வண்ணத்தில் ஐக்கியமாகி விட்டது. எனக்கு அரஸ் ஓவியம் மாதிரித் தெரிகிறது.

      ஒரு செருப்பு ஓவியத்திற்குள் பிரிண்ட் பண்ணுக்கிற லாவகம் எல்லாம் குமுதத்திற்கே சொந்தமானது. கிட்ட யாரும் நெருங்க முடியாது. :))

      என் தளத்தில் பிரசுரமான கதை தான் இது. அதனால் ஏற்கனவே படித்திருந்தது நினைவுக்கு வந்திருக்கலாம்.

      அடுத்து, கெளதமன் சாருக்கு:

      எந்த மாதிரியான கதைகள் வாசித்தது நீண்ட நாட்கள் நினைவில் இருக்கும் என்று எங்கள் பிளாக் வாசகர்களிடம் கேள்வி கேட்டு நீங்கள் பதிலைப் பெறலாம்
      என்பதற்கு நெல்லையின் இந்தப் பின்னூட்டம் உங்களுக்கு உதவியாக இருக்கலாம்.

      நீக்கு
  2. கதையின் ஊடாக ஜீவி சார் சொல்லும் கருத்துகள் என்னைப் பொருத்த வரையில் (அனுபவங்கள்) உண்மைதான். நல்லா அப்சர்வ் பண்ணினால்தான் இப்படி எழுத முடியும்.

    ிமேஜ் மெயின்டெய்ன் செய்வதற்காக தன் நல்ல பக்கங்களையே காண்பிப்பவர்களை பெரும்பாலானவர் நம்பிவிடுவார்கள். ஒரு பெண் என்னுடம் 89ல் சொன்னது நினைவுக்கு வருகிறது. அவன் ஒரு ஹிப்போக்ரேட். இவ்வளவு நல்லவனாக, குறை இல்லாதவனாக ஒருவன் குணம் இருக்காது என்றாள். அவனைப் பற்றி பல பெண்கள் என்னிடம் நல்ல வார்த்தைகள் சொல்லியிருந்தபோதும்.

    இன்னொன்று.. அந்த அந்த வயதில் வரும் சராசரியான குணங்களோடு ஒருவன் இருக்கணும். அப்படி இல்லை என்றாலே அவனிடம் தவறு இருக்கிறது என அர்த்தமாகும். கதா காலட்சேபம், கலையில் ஆர்வம், கோவில் தரிசனம் என்று ஒருவன் ஒரு பெண்ணிடம் சொன்னாலே அலர்ட் ஆகிவிடவேண்டியதுதான். நுண்ணுணர்வை கதை நல்லா கொண்டுவந்திருக்கு.

    ஆனால் கொஞ்சம் ஜவ்வு என்பது என் அபிப்ராயம். பத்திரிகையில் கொஞ்சம் எடிட் பண்ணியருப்பாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பத்திரிகையில் கொஞ்சம் எடிட் பண்ணியருப்பாங்க.//

      பத்திரிகைகாரர்களுக்குத் தெரியும். எதற்காக எழுத்தாளர் எதை எழுதியிருக்கிறார் என்று. எழுதியதில் ஒரு வார்த்தை எடுத்தாலும் இந்தக் கதை அதற்கான எபெஃக்டைக் கொடுக்காது என்று அவர்கள் உணர்ந்ததால் எடிட்டுக்கான தேவையே இல்லாமல் பிரசுரமான கதை. உங்கள் தகவலுக்காக இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

      நீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். எல்லோருக்கும் ஆரோக்கியமான உடல்நிலை, மனநிலை அமையவும் அதற்கு எல்லாம் வல்ல ஈசன் அருள் புரியவும் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல கதை, நல்ல படிப்பினை. ஆனால் முன்னர் படித்த நினைவெல்லாம் இல்லை. என்றாலும் சுகன்யா செருப்பணிவதில்லை என்றதும் கதையின் போக்கை ஊகிக்க முடிந்தது. அப்படியே கதை நகர்ந்தும் விட்டது. எல்லா ஆண்களுக்குமே இந்த ஒரு பலவீனம் இருக்கத் தான் செய்கிறது. பலர் இதிலிருந்து வென்று விடுபட்டாலும் சிலர் அதைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர். இதில் வயது வித்தியாசமும் இல்லை. எந்த வயதானாலும் ஆண்கள் பிறர் மனைவியை எந்த விதத்திலாவது கவர்ந்து விடவே நினைக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னது இது... காலையிலேயே ஆண்களை இராவணனாகச் சித்தரிக்கும் போக்கு...

      நீக்கு
    2. உங்களுக்குத் தெரியலை அல்லது புரியலை! :(

      நீக்கு
    3. //எந்த வயதானாலும் ஆண்கள் பிறர் மனைவியை எந்த விதத்திலாவது கவர்ந்து விடவே நினைக்கின்றனர்...//

      ஹஹ்ஹஹா.. நீங்கள் சொல்வது சரியே. நார்த் போல் -- சவுத் போல் போல ஒருவகை காந்த ஈர்ப்பு இது. பக்கத்தில் மனைவி இல்லாத நேரங்களில் பிற பெண்களுடன் ஆண்கள் பழகும் விதமே வேடிக்கையாக இருக்கும். கால மாற்றத்தில் இப்பொழுது ஆண் - பெண் நெருக்கங்கள் பல விதங்களில் கூடியிருக்கின்றன. ஆயிரம் இருந்தாலும் பெண்களுக்கு இயல்பாகவே உள்ள ஜாக்கிரதை உணர்வுக்கு எந்த பங்கமும் ஏற்பட்டு விடவில்லை தான். :))

      நீக்கு
    4. திடுதிப்பென்று இராவணன் உங்கள் நினைவுக்கு எப்படி வந்தார், நெல்லை?

      இந்தக் கதையின் தலைப்பைக் கூட 'இன்று போய் நாளை வா' என்று இராமபிரான் இராவணனை நோக்கிச் சொன்னதின் சாயலில் தான் அமைத்திருந்தேன். இங்கு இராவணன் நினைவு கூரப்பட்டது ஆச்சரியமாக இருக்கிறது.

      நீக்கு
  5. மனைவியின் தேவைகளைக் கவனிக்காத கணவனும் புதுசு அல்ல. அப்படியான கணவன்மார்கள் இன்னமும் இருக்கிறார்கள். இன்னும் சிலர் வெளிப்படையாகவே, "எனக்குனு வந்து வாய்ச்சிருக்கே!" என்று பலர் முன்னிலையில் மனைவியை அவமானம் செய்வதும் வழக்கம். ஜீவி சார் ஆணின் இந்த பலவீனத்தை நன்றாகப் புரிந்து கொண்டு எழுதி இருக்கிறார். தங்கப்பன் மாதிரி எல்லோருடைய மனமும் திருந்தினால் நன்றாகவே இருக்கும். ஆனால் அது கனவு தான். இம்மாதிரிக் கதைகளில் தான் மனித மனம் திருந்துவதாக நினைத்துத் திருப்திப் பட்டுக்கணும். நல்லதொரு கதை! மிக அழகாகத் தேவையற்ற வர்ணனைகள், உரையாடல்களைத் தவிர்த்துக் கதைக்குத் தேவையானதை மட்டுமே சொல்லி இருப்பது இன்னும் நேர்த்தி! மொத்தத்தில் இது நம்ம பக்கத்து வீட்டு நிகழ்வைப் பார்ப்பது போல் உள்ளது. எல்லோரும் இப்படித் திருந்தினால் என்னும் ஆசையும் ஏற்படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எனக்குனு வந்து வாய்ச்சிருக்கே/ ஒருவேளை உண்மையைச் சொல்லிப் பாராட்டினால், மனைவி தன் தலைக்குமேல் உட்கார்ந்துகொண்டு இதே ஸ்டேட்மென்டை தன்னைப் பார்த்துச் சொல்லிடுவாளோ என்ற உள் உணர்வு காரணமாக இருக்குமோ?

      நீக்கு
    2. மிக அழகான கதை. கதை நடுவே சுகன்யா காலில் செருப்பு இன்றி வருவது பற்றி படித்ததும் ஓரளவு ஊகிக்க முடிந்தது. ஆயினும், தங்கப்பனை வில்லன் ரேஞ்சுக்கு ஆரம்பத்தில் அறிமுகப் படுத்தியது கொஞ்சம் ஓவர்.

      நீக்கு
    3. கீதாம்மா, கதை பற்றிய உங்கள் ஒட்டு மொத்த பார்வை நிறையவே ஆழமாக இருக்கிறது. தீர்க்கமாகக் கணித்திருக்கிறீர்கள்.

      இந்தக் கதையை பின்ன எனக்கு இரண்டு சக்திகள் துணையாக இருந்தன.

      1. சுகன்யாவின் செருப்பணியாத பாதங்கள் என்ற கற்பனைக்கு மகாபாரதத்தின்
      காந்தாரி உதவியாக இருந்தார்.
      2. சிக்மண்ட் பிராய்ட். அவரது அரிய ஆராய்ச்சிகள்.

      // ஊன்று கோல் சப்திக்க தாண்டி வந்த மோகன், உயரமான ஒரு சேரில் கட்டைகளை அருகில் பற்றியபடி சாய்ந்து உட்கார்ந்தான். இப்பொழுது தான் தங்கப்பனால் அவனது ஒரு பக்கக் காலை நன்கு பார்க்க முடிந்தது. அது தொடைக்குக் கீழே நறுக்கப்பட்டு ஒன்றுமில்லாமல் சூம்பிக் கிடந்தது. //

      ஜஸ்ட் இந்தக் காட்சியை கற்பனைப் பண்ணிப் பாருங்கள். இது தங்கப்பனுக்கு எதிர்பாராத அதிர்ச்சி. ஷாக் ட்ரீட்மெண்ட் என்றே சொல்லலாம்.. ப்ராய்ட் இந்த மாதிரி திடுக்குறுதல்கள் ஏற்படுகிற சூழல்கள் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார். அந்த சமயத்தில் ஏற்படும் மனநிலை அதிர்ச்சி
      ஒரு பக்கம் வினை செய்கிறது.

      பதினாலு வயசு பையன். மொபைலில் 'அந்த மாதிரி' காட்சியை தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனின் அந்த மெய்மறந்த நிலையில் அவன் தாய் அவன் பின்னால் வந்து பையன் என்ன செய்கிறான் என்று பார்த்து விடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். சட்டென்று தாயின் அருகாமையை உணரும் பையன் அந்த ஷணத்தில் திடுக்கிடும் நிலை தான் தங்கப்பனுக்கு அப்போது.

      போதாக்குறைக்கு மோகனின் ஓவிய ஞானம். தன் இலட்சணத்திற்கும் இந்தக் குடும்ப சூழலுக்கும் இருக்கும் ஏற்ற தாழ்வை, அந்த அறிதலை அவனுள் நெருப்பாய் கொட்டுகிறது.

      -- இவைகளே நெஞ்சில் சூட்டுக்கோலால் இழுத்த மாதிரி தங்கப்பனுள் வினையாற்றுகிறது.

      நீக்கு
    4. @ பரமசிவம்

      அவன் மனைவியை தான் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு ஜந்து மாதிரி எண்ணம் கொண்டிருந்தான்.
      பொதுவாக மனைவிமார்கள் 'இந்த' விஷயத்தில் எந்த சமரசத்தையும் நினைத்துப் பார்க்கவே அருவறுப்பு அடைபவர்கள். தன் புருஷனுக்கு தன் அழகு, தன் ஆளுமையைத் தாண்டி இன்னொருத்தர் இருப்பதை சகித்துக் கொள்வதில் எந்த சமரசத்திற்கும் உட்படாதவர்கள். அந்த உணர்வு கூட கெளசல்யாவுக்கு கிடையாது. அந்த அளவுக்கு அப்பாவி. புருஷனை அண்டியிருப்பது தான் அவளுக்குத் தெரிந்த ஒன்று. அது தான் தங்கப்பனுக்கு வசதியாயிற்று.
      பெண் மக்களின் மேல் அனுதாபமும் மரியாதையும் கொண்டிராதவர்கள்,
      வில்லன் ரேஞ்சுக்கும் கீழானவர்கள் தான். நம்து வழிவழிவந்த இதிகாசப் புராணங்களும் இதைத் தான் படம் பிடித்துக் காட்டுகின்றன.

      தங்கள் வருகைக்கு நன்றி சார்.

      நீக்கு
  6. புதன் கேள்வி: யாரிடம் ஒரு மனிதன் தன் உண்மையான ஸ்வரூபத்தைக் காண்பிக்கிறான், காண்பிக்க இயலும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதில் அளிக்க முயற்சிக்கிறோம். ( ஜீவி சார் மன்னிக்கவும்)

      நீக்கு
  7. இன்னும் ஒரு மணி நேரம் முன்னதாக எழுந்து கொள்ள முடியாத சூழல்.. இப்போது இங்கு 3:45..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பருவ காலம் மாறுகின்ற வேளையில் தளத்தில்/ அறைக்குள் இன்னும் Ac இயங்கிக் கொண்டிருக்கிற்து..

      ஒருவன் நிறுத்தினால் இன்னொருவன் போட்டு விடுகிறான்...

      மூன்று நாட்களாக காய்ச்சல் வேறு...

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், நெல்லைத்தமிழன்.
    எல்லோரும் சுகமாக இருக்க நிறை பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. ஜீவி சார் கதையைப் படித்ததும் நல்ல வேளை இது போல ஆண்களை நான் சந்திக்கவில்லை என்ற நிறைவு வந்தது.

    செருப்பால் அடித்தாற்போல் அந்தப் பெண் சுகன்யாவின் நற்குணம்.
    இந்தக் கதையை முன்பே படித்திருக்கிறேனோ
    என்ற நினைவு வந்தது,.

    மனைவிக்கு கிழிந்த புடவை. அந்த ஆளுக்கு
    செண்ட்?

    என்ன ஒரு கோரம் இது போல மானிடம்.:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் தளத்தில் இந்தக் கதையை பிரசுரித்திருக்கிறேன். அதனால் வாசித்திருக்கலாம்.

      மேலே தங்கப்பனின் அந்த நேரத்து நிலையைச் சொல்லியிருக்கிறேன். தங்கப்பனின் அதிர்ச்சிக்கு அது தான் காரணம். அந்த அதிர்ச்சி ஒரு வித குற்ற உணர்வுடன் அவனுள் வினையாற்றுகிறது.

      ஒரு சிறுகதைக்கு இந்த அளவு போதும்.

      நீக்கு
    2. //என்ன ஒரு கோரம் இது போல மானிடம்.:(//

      அலுவலகம் முடிந்ததும் ஹோட்டலுக்குப் போய் நன்றாக வெட்டி விட்டு வீட்டிற்குப் போகிறவர்களை பார்த்திருக்கிறேன், வல்லிம்மா. வீட்டில் அரை வயிறு சாப்பாட்டிற்கு அல்லாடும் அவர்கள் குழந்தைகள் நினைவு வந்து வருத்தும். சுயநலமே முக்கியமாக இருக்கும் மனிதர்கள் நிறைந்த காலம் இது.
      இன்னும் நிறைய அதிர்ச்சிகளைச் சொல்லலாம். தெரியாமல் இருப்பதே இளகிய மனம் கொண்டோருக்கு நல்லது.

      நீக்கு
  12. அன்றைய காந்தார தேசத்துப் பெண்ணரசி மாதிரியான மங்கையர்கள் இன்றும் இருக்கின்றார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு துரை,
      இனிய காலை வணக்கம்.

      இன்னும் இருக்கிறார்கள் என்று நினைக்கவே
      சிரமமாக இருக்கிறது. கணவன் மேல் இருக்கும் அன்பினால் மனைவி
      அனுசரணையாக இருக்கலாம்.
      கட்டாயத்தின் பேரில் அவள் அடிபணிவது
      பெண்மைக்கே இழுக்கு.'
      ஆனாள்.
      அவள் நிலை என்னவோ!!

      கெட்டவன் திருந்தினால் வாழ்க்கை நிறையாகும்.
      இல்லாவிடில் கஷ்டம் தான்.

      நீக்கு
    2. //அன்றைய காந்தார தேசத்துப் பெண்ணரசி மாதிரியான.. //

      கரெக்ட், அவரை வைத்துத் தான் இவர் உருவானார். இதை முதலில் சொன்னவர் நீங்கள் தான். பின்னால் ஜிஎம்பீ ஐயாவும் இதையே சொல்லியிருக்கிறார்கள்.

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    4. @ வல்லிம்மா

      //கட்டாயத்தின் பேரில் அவள் அடிபணிவது
      பெண்மைக்கே இழுக்கு.'
      ஆனாள்.
      அவள் நிலை என்னவோ!!/

      யாரும் கட்டாயப்படுத்தியனின் அடிப்படையில் இல்லை இது. கிட்டத்தட்ட சுயஹத்தி மாதிரி. திருதராஷ்ட்டிரனின் பட்ட மகிஷி காட்டிய வழி.

      நீக்கு
    5. நான் குறிப்பிட்டது, அவன் மனைவி கௌசல்யாவைப் பற்றி ஜீவி சார்.

      நீக்கு
    6. ஓ, கெளசல்யாவைப் பற்றியா?. பாவம். அவள் ஒரு பரிதாபப்பட்ட ஜென்மம்.

      ஏன் இப்படி என்று இந்தக் காலத்தில் வாழும் அந்தக் காலத்துப் பெண்களையேக் கூடக் கேட்டால், 'அவ்வளவு சமத்து பத்தாது' என்பார்கள். இதெல்லாம் பெண்களின் சமத்து என்ற தலைப்பில் கொண்டு வந்திருக்கிறார்கள், பாருங்கள்.
      நொந்து கொள்ளத்தான் வேண்டும்.

      உங்கள் ஆப்ஸர்வேஷனுக்கு நன்றி, வல்லிம்மா.


      நீக்கு
  13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    கதை அருமை. உலகில் இந்த மாதிரி பெண்கள் (மனைவி) இருக்கும் வரை இதேப் போன்ற ஆண்களும் (கணவன்) இருப்பார்கள். எத்தனையோ பெண்களின் வாழ்வை சீரழித்தவனாகிய தங்கப்பனின் மனம் மோகனின் கலையார்வத்தையும், அவனுக்காக தன் ஆசைகளை, தேவைகளை தியாகம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் சுகன்யாவையும் தெளிவாக கண்டுணர்ந்த பின் மனம் திருந்தி மாறியது நன்றாக உள்ளது. கெட்ட மனத்தை அந்த நேரம் வரும் திருத்துவது விதியின் பக்குவமான செயல். அப்பாவியான கௌசல்யாவின் அத்தனை நாள் பொறுமைக்கு தெய்வம் தந்த பரிசு.

    கதை ஆரம்பம் முதற்கொண்டு இறுதி வரை இயல்பாக நல்ல நடையுடன் இருந்தது. இந்த மாதிரி மன வக்கரங்களுடன் இருக்கும் மனிதர்களுக்கு இந்தக்கதை ஒரு பாடம். அருமையான கதையை தந்த ஜீவி சகோதரருக்கு மனமார்ந்த நன்றிகள்.
    பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கெட்ட மனத்தை அந்த நேரம் வரும் திருத்துவது விதியின் பக்குவமான செயல். அப்பாவியான கௌசல்யாவின் அத்தனை நாள் பொறுமைக்கு தெய்வம் தந்த பரிசு.//

      ஒருவிதத்தில் பார்க்கப் போனால் நீங்கள் சொல்கிற மாதிரி 'இந்த நேரத்தில் தான் இது நடக்க வேண்டும்' என்று தீர்மானித்தவாறு பல செயல்கள் நடைபெறுவதைப் பார்த்தால் வியப்பாகத் தான் இருக்கிறது.

      நிறைவாக வாசித்து நிறைவாகவே கருத்திட்டதற்கு நன்றி, சகோ.

      நீக்கு
  15. நறுக்,சுருக்கென்று ஒரு கதை. கதையின் போக்கை யூகிக்க முடிகிறது. ஆனால் கணவன் விபத்தில் ஒரு காலை இழந்த ஓவியனாக இருப்பான் என்று எப்படி யூகித்தேன் என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆனால் கணவன் விபத்தில் ஒரு காலை இழந்த ஓவியனாக இருப்பான் என்று எப்படி யூகித்தேன் என்று தெரியவில்லை...//

      ஆமாம், எப்படி அதை யூகித்தீர்கள், பா.வெ?..

      ஏற்கனவே இந்தக் கதையை வாசித்திருப்பீர்கள். அந்த நினைவு அரைகுறையாக மனசில் தேங்கியிருந்து, அதே சாயலுடன் இப்பொழுது இதைப் படித்தத்தும், நினைவின் தொடர்ச்சி தன்னைத் தான் பூர்த்தி செய்து கொண்டதுஇ போலும். ஓவியனாக இருப்பான் என்று தீர்மானிக்கிற அளவுக்கு
      வேறு எந்தக் காரணமும் சாத்தியப்படாது. நன்றி.

      நீக்கு
  16. மனைவிக்கு நல்ல புடவை இருக்காது, ஆனால் தொப்புள் வரை தொங்கும் புலி நகம் வைத்த மைனர் செயின் போட்டுக் கொண்டு திரியும் மைனர்களை பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி நிறைய பேர். தனித்தனி யூனிட்டுகளாய் வாழ்வதை லவலேசமும் விட்டுக் கொடுக்காத ஜன்மங்கள் இப்போவெல்லாம் நிறைய காணக் கிடைக்கின்றன.

      மனைவிக்கு மறைத்து புருஷன். புருஷனுக்குத் தெரியாமல் மனைவி. குழந்தைகளுக்குத் தெரியாமல் இந்த இரண்டு பேருமே.

      -- இந்த அடுக்காத வாழ்க்கை முறை எங்கே கொண்டு போய் விடப்போகிறதோ, தெரியவில்லை!.. கலிகாலம் முற்றிப் போய் விட்டது. எது நடந்தாலும் கவலை கொள்ளாத மாக்கள்! வாழ்க்கை என்னவோ எப்படியிருந்தாலும் போய்க் கொண்டு தான் இருக்கிறது!..

      நீக்கு
  17. சுகன்யா ஏனோ காந்தாரியை ஞாபகப் படுத்தினாள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த 'ஏனோ' எதற்கு ஜிஎம்பீ ஐயா?.. அதான் தெளிவாகத் தெரிகிறதே!

      ஒரே மாதிரியான நடவடிக்கை தான் இருவருக்கும். இல்லையா?

      நீக்கு
  18. நல்லதொரு படிப்பினை கொடுத்தது கதை வாழ்த்துகள் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, தேவகோட்டையாரே! தங்கள் வாசிப்புக்கு நன்றி.

      நீக்கு
  19. இந்த மாதிரி மிருகத்திற்கும் கூட மனசாட்சி இருப்பது வியப்பு தான்... ஏனென்றால் மண்ணாசை, பொன்னாசை பெண்ணாசை இருக்கிறவர்கள், அரசனாக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும், அதனாலேயே வாழ்வு முடியும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டி.டி. சரியாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள்.

      இந்த மூன்றும் மூன்று சகதிகள். மாட்டிக்கொண்டோர் மீள்வதில்லை! நானிலத் தீர்ப்பும் இதுவேயாம்!..

      நீக்கு
  20. கதை நன்றாக இருக்கிறது. தங்கப்பனின் நண்பன் சந்திரன் சொன்னது போல் தங்கப்பன் திருந்த ஒரு சந்தர்ப்பம் கிடைத்து விட்டது சுகன்யாவால்.கெளசல்யா வாழ்வில் இனி வசந்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்திரனை மறக்காமல் நினைவில் கொண்டதற்கு நன்றி, கோமதிம்மா.

      கதாசிரியர் வெளிப்படத் தெரியாமல் சந்திரனாக தோற்றம் கொள்கிறார், இல்லையா?.

      நீக்கு
  21. உங்கள் தோழியின் மறைவு செய்தி பற்றி முகநூலிலும் வாசித்தேன். ரோஷ்ணியின் ஓவியம் அற்புதம். வாழைக்காய் கோஃப்தா கண்டிப்பாக முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. நிறைவான பதிவு   

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! பானுமதி, ஜீவி சார் முழிக்கப் போறார் என்னடா இதுனு! மாத்திப் போட்டிருக்கீங்க கருத்தை!

      நீக்கு
    2. ஆதி வெங்கட் பதிவுக்கா அல்லது வெங்கட் சார் பதிவுக்கா அல்லது அப்பாவி தங்கமணி பதிவுக்கா !! ஙே!!

      நீக்கு
    3. மேற்படி என் பின்னூட்டத்தை நீக்கலாம் என்று நினைத்தேன். அப்படி செய்தால் கீதா அக்கா மற்றும் கே.ஜி.ஜி.அவர்களின் பின்னூட்டம் பொருந்தாமல் தனியாக நிற்கும். எனவே திருஷ்டி பரிகாரமாக இருந்து விட்டு போகட்டும். எல்லா பதிவுகளுக்கும் ஒரே நாளில் பின்னூட்டம் இடுவதால் வரும் குழப்பம். 

      நீக்கு
    4. //ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! //

      ரானேந்திர குமார் என்றால் எனக்கு வேப்பங்காய், கீதாம்மா.

      //ஆதி வெங்கட் பதிவுக்கா அல்லது வெங்கட் சார் பதிவுக்கா..//

      இங்கேயும் இன்னொரு வெங்கட் தான், கெளதமன் சார்!

      பா.வெ! கூடிய வரைக்கும் நம் பதிவர்களின் பெயர்கள் கதைகளில் வந்து விடாமல் நான் பார்த்துக் கொள்வேன். தப்பித் தவறி சென்ற கதையொன்றில்
      ரேவதி என்ற பெயர் வந்து விட்டது. இது பற்றி யாரும் கேட்டு விடக்கூடாதே என்று நான் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்க, வல்லிம்மா கிட்டேயே, அந்த ரேவதியைப் பற்றி நீங்கள் கேட்டீர்கள், பாருங்கள்!

      அன்றைக்குத் தான் வாழும் மனிதர்களுக்கும் என் கதாப்பாத்திரங்களும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கொஞ்சம் அதிர்ந்து உங்களுக்குப் பதில் சொன்னேன். அதற்காக மன்னிக்க வேண்டுகிறேன். இப்பொழுது அது நினைவுக்கு வந்தது.

      நீக்கு
    5. ஜீவீ சார் இதற்கெல்லாம் கவலைப் படலாமா.
      உலகில் உள்ள பெயர்களில் அதுவும் ஒன்று.

      நீக்கு
    6. ஹாஹா... என் பதிவில் வந்திருக்க வேண்டியது இங்கே வந்து விட்டது! இதிலும் ஒரு நன்மை தான்! :)

      நீக்கு
  22. அலைந்து திரிந்தவன், மனிதனாகத் திருந்த உதவிய அந்த சந்திப்பு சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாருக்கும் இப்படியான வாழ்க்கையை செப்பனிட்டுக் கொள்ளவதற்கான அனுபவங்கள் கிடைத்துக் கொண்டு தான் இருக்கின்றன. கிடைத்தற்கரிய மானுடப் பிறவியில் அவை நம்மை திருத்திக் கொள்வதற்காக என்று பலருக்குத் தெரிவதில்லை. அவ்வ்வளவு தான்.

      நீக்கு
  23. நண்பன் சந்திரனின் வார்த்தைகளை உணர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது நல்லதே. தங்கப்பன் திருந்த முடிந்ததே!

    நல்லதொரு கதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, வெங்கட்.தங்கள் வாசிப்புக்கு நன்றி.

      எனக்கு தான் இப்பொழுதெல்லாம் முன்பு போல் பிற தளங்களுக்கு வந்து வாசிப்பதற்கு முடிவதில்லை. பொறுத்துக் கொள்ளுங்கள். முடிகிற பொழுதெல்லாம் வருகிறேன். நன்றி.

      நீக்கு
  24. மற்ற பெண்களைப் போகப்பொருளாகவும் வீட்டிலிருக்கும் பெண்களை அடிமைகளாகவும் நினைக்கும் ஆண்களுக்கு சாட்டையடி கொடுத்த கதை... நல்லதொரு கருவும் எழுத்தும்.

    செருப்பணியாத மனைவி என்னும் போதே கணவனுக்கு காலில் ஏதோ பிரச்சினை என்பது தெரிந்து விடுகிறது என்றாலும் அவளின் கணவனின் ஓவிய ஞானம் சிறப்பு.

    ஆமா காலையில் அலுவலகம் போகும் சமயத்தில் பழைய சேலை தைக்க நேரம் கிடைக்குமா..? பெரும்பாலும் கிழிசல் தைத்தல் எல்லாம் ஓய்வான நேரத்தில்தானே நடக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள் குமார். நானும் இதைக் கவனித்தேன். அப்புறமா ஒருவேளை கணவனின் கவனத்தைக் கவர்வதற்காக இப்படிச் செய்கிறாளோ என நினைத்துக் கொண்டேன். கதையிலும் தங்கப்பன் அப்படிச் சொல்வதாக கதாசிரியர் சொல்கிறாரே! சரினு மனதைச் சமாதானம் செய்து கொண்டேன். :)))))

      நீக்கு
    2. வணக்கம் அக்கா..
      நானும் அதை யோசித்தேன்... இருந்தாலுமல் வேலை நாளில் காலையில் கவனம் ஈர்க்க என்று கூட பண்ணமாட்டார்கள் என்றே தோன்றியது. விடுமுறை தினம் என்றால் ஓகே.... அது மட்டுமே இடறியது என்றாலும் கதை எப்பவும் போல் நல்லாயிருந்தது. அது ஒரு குறையாகத் தெரியவாய்ப்பில்லைதானே

      நீக்கு
    3. @ பரிவை

      //செருப்பணியாத மனைவி என்னும் போதே கணவனுக்கு காலில் ஏதோ பிரச்சினை என்பது தெரிந்து விடுகிறது....//

      அது எப்படித் தெரிந்தது, பரிவை?.. செருப்பணியாத அவளுக்கு ஏதாவது பிரச்னை என்று கொள்ளலாமே தவிர அவள் கணவனுக்கு என்று யோசனை போக என்ன வாய்ப்பு இருக்கிறது, பரிவை?.. மனைவி அமிர்ந்தாஞ்சனம் தடவிக் கொண்டால், கணவனுக்குத் தலைவலியோ என்று முடிவுக்கு வருவீர்களா, என்ன?.. மஹாபாரதத்து காந்தாரி மேற்கொண்ட தியாகத்தை அவ்வளவு சுலபமாக எண்ணி விடாதீர்கள். இதெற்கெல்லாம் 'புல்லானாலும் புருஷன்; கல்லானாலும் கணவன்' என்ற மரியாதை வேண்டும். அதையெல்லாம் இந்தக் காலத்தில் எதிர்பார்ப்பதில் மட்டுமில்லை அப்படியான எந்த தியாகத்திலும் அர்த்தமும் இல்லை தெளிவாக நினைக்கிற காலம் இது. அதற்காகத் தான் இதை அடிக்கோடிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது.

      நீக்கு
    4. அநேகமாக எல்லோருமே கணித்திருக்கிறார்கள். ஏனெனில் அவள் செருப்பு அணியாமல் வருவதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்பதை நான், பானுமதி, பரிவை குமார் போல் மற்றவர்களும் கணித்திருக்கிறார்கள். இது தான் என நான் உடனேயே புரிந்து கொண்டு விட்டேன். ஆனால் நடக்க முடியாமல் படுத்த படுக்கையாகக் கணவன் இருக்கப் போகிறான் என எதிர்பார்த்தேன். அது இல்லாமல் கொஞ்சம் மாறி உள்ளது. இப்படி எத்தனை கதைகள் படித்துவிட்டோம். இதைக் கணிப்பது அவ்வளவு ஒண்ணும் கஷ்டம் இல்லை. மஹாபாரதத்து காந்தாரி அளவுக்கு எல்லாம் நான் நினைக்கலை! இப்படியும் பெண்கள் உண்டு என்பதை இப்படிப் பல கதைகள் மூலம் தெரிந்து கொண்டிருக்கிறேன்.

      நீக்கு
    5. @ பரிவை
      //ஆமா காலையில் அலுவலகம் போகும் சமயத்தில் பழைய சேலை தைக்க நேரம் கிடைக்குமா..? பெரும்பாலும் கிழிசல் தைத்தல் எல்லாம் ஓய்வான நேரத்தில்தானே நடக்கும்.//

      தைத்துப் போட்டுக் கொண்டு தான் மானத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு காலையாவது, மாலையாவது?.. இப்பொழுது தைத்து நனைத்து உலர்த்தினால் தான் அடுத்த நாளுக்கு உடுத்த ஒன்று என்ற நிலை.

      பொல்லாத புருஷன் ஆபிஸுக்குப் போறானாம். ஊர் மேய அல்லவா அவன் செண்டடித்துக் கொண்டு கிளம்புகிறான். அது கூடத் தெரியாத அப்பாவி அவள். நகர்ப்புறத்து நெரிசலில் மாட்டிக் கொண்ட கிராமத்துப் பெண்.

      அவள் தோற்றம் எப்படியிருந்தது? படித்தீர்கள் அல்லவா?...

      வெளியில் போய்விட்டு வீடு திரும்பும் புருஷனை வளைத்துப் போட்டுக் கொண்டு "என்னங்க.. என்னங்க' என்று கொஞ்சத் தெரியாது. உங்கள் வருகைக்காகத்தான் வழிமேல் விழிவைத்துக் காத்கிருக்கிறேன் என்று புளுகத் தெரியாது. பீச்சுக்குப் போவோமா, பிக்சருக்குப் போவோமா என்று கேட்கத் தெரியாது. குறைந்த பட்சம் முகம் அலம்பி, தலைவாரிப் பூச்சூடி பளபளக்க கூடத் தெரியாது...

      அப்படிப்பட்ட பெண்.. இந்த மாதிரி பெண்களுக்கு மானம் காக்க துணி என்ற பெயரில் எதையாவது போர்த்திக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான். இந்தப் பெண்ணைப் போய் நேரம் காலம் தெரியாதா என்று கேட்கலாமா?..

      புது செருப்பைப் பார்த்து அவள் என்ன கேட்டாள், படித்தீர்கள், அல்லவா?

      '"நா என்ன வேலைக்கா போறேன்? எனக்கு எதுக்குங்க புது செருப்பு?.. இதுக்குப் பதில் சேலை வாங்கியாந்து இருக்கலாமில்லே?" ---

      வெளியில் சொன்னால் வெட்கக்கேடு. ஒரு மாற்றுச் சேலை என்பது அந்த அளவுக்கு அவளுக்கு அடிப்படை தேவை.

      இவளைப் பார்த்து நேரம் காலம் பார்த்து தைக்கக் கூடாதா என்று கேட்டு விட்டீர்களே! அதுவும் ஊசி, நூலெல்லாம் புழக்கத்தில் இல்லாத இந்தக் காலத்தில்?

      நீங்களும் ஒரு படைப்பாளி என்பதால் தான் என் உணர்வும் மேலோங்கியது.

      நன்றி, பரிவை.

      நீக்கு
    6. @ கீதாம்மா

      //அநேகமாக எல்லோருமே கணித்திருக்கிறார்கள்.//

      அந்த எல்லோரும் எப்பொழுதுதாவது இந்தக் கதையைப் படித்திருப்பார்கள் என்பது தான் என் கணிப்பு. இந்தக் கதை 'இன்று செருப்பு; நாளை சேலை;
      நாளை சேலை, இன்று செருப்பு' என்று வெவ்வேறு தலைப்புகளில் என் தளத்திலேயே பிரசுரமாகியிருக்கிறது. அமேசான் கிண்டலில் கிடைக்கும் என் சிறுகதைத் தொகுப்பு ஒன்றிலும் இந்தக் கதை இருக்கிறது. ஒரு சிறுகதையை வாசித்தது நினைவில் மசமசவென்று படிந்திருந்தது, அதற்கான நேரம் வரும் போது அதே நினைவுகளை மீட்டெடுக்க வாய்ப்பு உண்டு என்பதற்காகச் சொல்ல வந்தேன்.

      இந்த கே.வா.போ.கதை பகுதியில் கூட எனது எந்தந்த கதைகள் பிரசுரமாகியிருக்கின்றன என்று எனக்குத் தெரியாது. முன்பு இதே பகுதியில் வெளிவந்த எந்தக் கதையாவது மறுபடியும் அனுப்பி வைத்து விடப் போகிறேனே' என்ற உள்ளுணர்வும் எனக்குண்டு.

      அதனால் தான் ஸ்ரீராமிடம், 'இந்தப் பகுதியில் வெளியிட்ட என் கதைகளின் பட்டியல் ஒன்று தாருங்களேன்' என்று கேட்டிருக்கிறேன். உங்கள் தகவலுக்காக.

      நீக்கு
  25. இந்தக் கதை குமுதத்தில் வெளிவந்த நாளன்று நடந்த ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். கிரீம்ஸ் ரோடில் இருந்த தொலைபேசி அலுவலகத்தில் அப்பொழுது பணியாற்றி கொண்டிருந்தேன்.

    கோதண்டம் என்று ஒரு தோழர். நான்காம் பிரிவு ஊழியர்.. ரோடில் இருந்த டீக்கடையில் தொங்கிக் கொண்டிருந்த அந்த வார குமுதக் குட்டி போஸ்டரில் என் பெயர் பார்த்து விட்டு குமுதப் பிரதி ஒன்று வாங்கி கதையைப் படித்து விட்டுத் தான் உல்ளே வந்தார்.

    நேரே என்னிடம் வந்து, என் கையைப் பற்றிக் கொண்டு பேச முடியாமல் தவித்தார்.
    அவர் கையில் குமுதத்தைப் பார்த்து விட்டு "என்ன கோதண்டம்?" என்றேன். நான் தொழிற்சங்க பணிகளோடு தொடர்பு கொண்டிருந்ததால் அலுவலக மேலாளர்களிலிருந்து அடிப்படை ஊழியர் வரை தங்கள் பதவி வித்தியாசம் துறந்து
    நெருக்கமாகப் பழகுவார்கள்.

    குமுதத்தைப் பிரித்து பிரசுரமான இந்தக் கதையைக் கோதண்டம் காட்டியதும் தான் இந்தக் கதை பிரசுரம் பற்றிய விஷயமே எனக்குத் தெரிய வந்தது.

    'கட்டக் கடைசியாக அவனுக்கு இருக்கும் வித்வத்தில் தான் தம்மாத்துண்டு தூசி என்று தங்கப்பன் கூனிக் குறுகிப் போனாள். அவன் அறிவின் தீட்சண்யம் தானெல்லாம் இவனுக்கு எதிரே சரிக்கு சமமாக ஆசனத்தில் அமர்ந்து பேசக்கூட அருகதையற்ற ஞானசூன்யம் என்ற நிதரசன உண்மையை நேரடியாக உணர்ந்த திகிலில் தங்கப்பன் உறைந்து போனான்'.. என்ற வரிகள் கோதண்டத்திற்கு மிகவும் பிடித்துப் போய்
    "அத்தனையும் நூற்றுக்கு நூறு உண்மை ஜீவி சார். இதெல்லாம் எப்படி சார் நீங்க
    எழுதறீங்க?.. எப்படி உங்களுக்கு இதெல்லாம் தெரியறது?'' என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார்.

    குமுதத்தில் இந்தக் கதை வந்த பகுதியை ஆபிஸ் ஜெராஸ்க் மிஷினில் கிட்டத்தட்ட 20 பதிவுகள் எடுத்து (ஜெராக்ஸ் விஷயங்களின் பொறுப்பில் கோதண்டம் இருந்தார்) மேல் அதிகாரிகளிலிருந்து ஆரம்பித்து எல்லோருக்கும் கொடுத்து, "நம்ம ஜீவி சார் கதை இது..' மகிழ்ந்து போனார்.

    இன்றைக்கு நினைத்துப் பார்த்தாலும் அன்றைக்குக் கோதண்டம் மனசார உணர்ந்த இந்த வரிகள் தான் இந்தக் கதையின் ஜீவனாகத் தெரிகிறது.
    கனவுக் கன்னிகளில் ஆரம்பித்து நனவுக் கன்னிகள் வரை இந்த வித்தியாசம் தான்
    எப்போதும் மேலோங்கித் தெரிகிறது.

    இந்தக் கதையை வாசித்து அன்புடன் பின்னூட்டமிட்ட ப்ரிய நண்பர்கள் அனிவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!