சனி, 26 செப்டம்பர், 2020

பாஸிட்டிவ் செய்திகள் & பாடும் நிலாவுக்கு ஓர் அஞ்சலி.


வழிப்போக்கர்களின் தாகத்தை, விவசாயி ஒருவர், 60 ஆண்டுகளாக தீர்த்து வருகிறார். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கணவாய்மேட்டைச் சேர்ந்த விவசாயி தங்கவேலு, 72. நாமக்கல் மாவட்டம், வேலம்பாளையத்தை, பூர்வீகமாக கொண்ட இவரதுதந்தை பழனிசாமி, 65 ஆண்டுகளுக்கு முன், வெள்ளாளகுண்டம் மலைக்குன்று, கணவாய்மேட்டில் குடியேறினார். அவ்வழியாக, வாகன போக்குவரத்து இல்லை. இதனால், மலைக்குன்றை வெட்டி அமைக்கப்பட்ட கணவாய் மேட்டை கடக்க முயற்சிக்கும் வழிப்போக்கர்கள் களைப்படைந்து, இவர்களது தோட்டத்துக்கு வந்து தண்ணீர் வாங்கி குடித்து, சற்றுநேரம் மரத்தடி நிழலில் ஓய்வெடுத்து சென்றனர். இதை பார்த்த தங்கவேலு, சாலையோரமுள்ள தங்கள் நிலத்தில், மரத்தடி நிழலில், ஒரு மண் பானையில் தண்ணீர் பிடித்து வைத்து, அருகில் ஒரு குவளையை வைத்தார். இதனால், அந்த வழியாக செல்வோர், பானை நீரை குடித்து தாகம் தீர்த்துச்சென்றனர். இந்த சேவை, 60 ஆண்டாக தொடர்கிறது. தற்போது, தங்கவேலு, தண்ணீர் பானை வைத்துள்ள இடத்தை சுற்றி, வழிப்போக்கர் அமர்ந்து இளைப்பாற, ஓய்வெடுக்க வசதியாக, திண்ணையும் அமைத்துள்ளார்.இது குறித்து, தங்கவேலு கூறியதாவது:எந்த நேரத்திலும் தண்ணீர் கிடைக்க, மண்பானையில் தண்ணீர் ஊற்றி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். ஒரு நாளும் தவறாமல், பானையில் தண்ணீர் நிரப்பி வைத்து வருவதில், மனநிறைவு ஏற்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.


===

இந்திய கடற்படையில் முதன்முறையாக இரு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராணுவத்தில் முப்படைகளில் ஆண்களுக்கு நிகராக பெண் அதிகாரிகளையும் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் இந்திய விமானப் படையில் முதல் முதலாக போர் தளவாடங்களை பெண்கள் இயக்க அனுமதி தொடங்கியது. 2016 ஆம் ஆண்டில், விமான லெப்டினன்ட் பவன்னா காந்த், விமான லெப்டினன்ட் அவனி சதுர்வேதி, மற்றும் விமான லெப்டினன்ட் மோகனா சிங் ஆகியோர் இந்தியாவின் முதல் மகளிர் போர் விமானிகளானார்கள்.
இந்நிலையில் இந்திய கடற்படையில் பல பிரிவுகளில் பெண் அதிகாரிகள் பணியாற்றி வந்தாலும், இந்தியக் கடற்படை வரலாற்றில் முதல் முறையாக இந்திய போர் கப்பல்களில் சப் லெப்டினன்ட் குமுதினி தியாகி மற்றும் சப் லெப்டினன்ட் ரிதி சிங் என இரண்டு பெண் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

இது குறித்து கடற்படை செய்தி தொடர்பாளர் கூறியது, பணியமர்த்தப்பட்டுள்ள இரு பெண் அதிகாரிகளும், எம்.ஆர்.எச்.எனப்படும் கடற்படை மல்டி-ரோல் ஹெலிகாப்டர்களில் சோனார் கன்சோல்கள், உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் மறுமதிப்பீடு (ஐ.எஸ்.ஆர்) பேலோடுகள் உள்ளிட்ட ஹெலிகாப்டர்களை இயக்க, இந்த பெண் அதிகாரிகள் பயிற்சி பெறவுள்ளனர். இப் பயிற்சிக்கு பின் கடற் படையின் புதிய எம்.எச் -60 ஆர் ஹெலிகாப்டர்களை இயக்குவார்கள் என்றார்.


===

சேலம்: நான்கு தலைமுறை குடும்பத்தினர் இணைந்து, 105 வயது மூதாட்டியின் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.சேலம் மாவட்டம்,அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்த, பெரியதம்பி மனைவி பொன்னம்மாள், வயது 105. நான்கு மகன், மூன்று மகள்களை படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுத்தனர். 20 ஆண்டுகளுக்கு முன், பெரியதம்பி இறந்து விட்டார்.


மனம் தளராத பொன்னம்மாள், தன் மகன்கள் நடத்தும் கசாப்பு கடைகளுக்கு சென்று, சிறு சிறு வேலைகளை செய்து வந்தார்.இன்றும், தன் தேவைகளை, அவரே பூர்த்தி செய்து கொள்கிறார். நான்கு தலைமுறை கண்ட பொன்னம்மாளுக்கு, தற்போது பேரன், கொள்ளு பேரன் உட்பட, 50க்கும் மேற்பட்ட பேரன், பேத்திகள் உள்ளனர்.  105வது பிறந்த நாள் கண்ட பொன்னம்மாளுக்கு, குடும்ப உறவினர்கள் ஒன்று கூடி, பெரிய அளவில், 'கேக்' வெட்டி, விருந்து வைத்து, பாட்டிக்கு வாழ்த்து கூறினர்.


===

ரபேல் போர் விமானத்தை இயக்கும் முதல் பெண் பைலட் என்ற பெருமையை விமானப்படை பைலட்டான சிவாங்கி சிங் பெற உள்ளார்

பனாரஸ் இந்து பல்கலையில் படித்து பட்டம் பெற்ற சிவாங்கி சிங், 2017 ம் ஆண்டு ஹரியானாவில் அம்பாலா விமானப்படை தளத்தில் பணியில் சேர்ந்தார்

விமானப்படையில் போர்விமானங்களை இயக்க 10 பெண் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சிவாங்கி சிங் ஏற்கனவே மிக் வகை போர் விமானத்தில் பயிற்சி பெற்று வந்த நிலையில் அவருக்கு தற்போது ரபேல் போர் விமானத்தை இயக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.


ஏற்கனவே இவர் மிக் 21 வகை விமானங்களை இயக்கிய அனுபவம் இருப்பதால் இவர் ரபேல் விமானங்களை எளிதாக கைாயாள முடியும் என்று நம்பப்படுகிறது. மிக் வகை விமானங்கள் மணிக்கு 340 கி.மீ., வேகத்தில் தரை இறங்கவும், தரையிலிருந்து மேல் செல்லவும் கூடிய விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


===

# எஸ்.பி.பி. என்னும் ஓர் இசைக் காவியம் # ரமா ஸ்ரீநிவாசன் 




(திருமதி ரமா ஸ்ரீநிவாசன் அவர்கள் இந்தக் கட்டுரையை அனுப்பி வைக்கும்போது, திரு எஸ் பி பி உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டது. இதை நான் படிக்கும்போது அவர் உடல் நிலை கவலைக்கிடம் என்று செய்தி வந்தது. சனிக்கிழமைப் பதிவில் வெளியிட கட்டுரையை தயார் செய்ய ஆரம்பிக்கும்போது எஸ் பி பி காலமானார் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. பாடும் நிலாவுக்கு இந்தக் கட்டுரையை அஞ்சலியாக சமர்ப்பிக்க, சிறு திருத்தங்களுடன் வெளியிடுகிறோம். )


நண்பர்களே, இரண்டு நாட்கள் முன்பு ‘தி ஹிந்து’ நாளிதழில் திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்களைப் பற்றி சிந்திக்க வைக்கும் கட்டுரையை நான் படிக்க நேர்ந்தது. அவரது இசையில் மயங்காதவரும் உண்டோ? அந்த மயக்கமே இந்த பகிர்விற்கு காரணம்.  
இந்திய திரை இசையுலகம் என்பது ஒரு கடலைப் போன்றது.  அதற்குள் மூழ்கி முத்தெடுப்பதென்பது ஒரு விக்கிரமாதித்தன் கதை போல்.  “Men may come and men may go.  But music goes on forever”.

இந்த பிரம்மாண்டமான இசைப் பயணத்தில் வெகு சிலரே பத்தாண்டுகளோ, இருபது ஆண்டுகளோ வெற்றி கொடி நாட்டியிருக்கின்றார்கள்.  அப்படி பட்டவர்களுல் மிக முக்கியமான பாடகர்கள் மொஹமத் ரஃபி மற்றும் லதா மங்கேஷ்கர்.  இவர்கள் இருவரும் கிட்டத் தட்ட நாற்பது வருடங்கள் புகழின் உச்சத்திலேயே வாழ்ந்தவர்கள்.  

இதில் வருந்தத் தக்கது என்னவென்றால், பல வருடங்களாக வியக்க வைக்கும் திறமையிருந்தும், எண்ணி ஒரு தென்னிந்திய பாடகர் கூட அந்த உச்சத்தை எட்டவில்லை.  ஏனெனில் அவர்களால் இந்தி பாடல்கள் பாட முடியாததுதான். ஏன் இசைக் குயில்கள் பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசிலா, எஸ்.ஜானகி ஆகியோர் கூட அந்தக் கோட்டையைத் தகர்க்க இயலாமல் தோல்வியிற்றனர்.

இந்த இசை சமுத்திரத்தில் ஒரே ஒருவர் மட்டும் தன் சுய முயற்சியாலும் கடவுள் அருளாலும் முன்னுக்கு வந்து இந்த தடைக்கல்லை தன் மைல் கல்லாய் ஆக்கினார் என்றால் அது நம் தென்னிந்தியப் பாடகர் திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம்தான். 
 
ஜேஸுதாஸும் வாணி ஜெயராமும் சில இந்திப் படங்களிலும் பாடியதால் மக்கள் சிறிது அவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள்.  ஆனால் அதுவும் சில காலங்களுக்குத்தான்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் தன் குரல் திறனால் 16 மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி எல்லா தடைகளையும் தகர்த்தெறிந்தார். அதே சமயம், அவர் இந்திப் படவுலகிலும் பெரிய பெயர் பெற்றார்.  அவர் இந்தி திரையுலகின் முன்னணி  இசையமைப்பாளர்களான நௌஷத், கல்யாண்ஜி-ஆன்ந்த்ஜி, அர்.டி.பர்மன் ஆகியோரின் பாடல்களைப் பாடியது மட்டுமல்லாமல் அவர் ராஜெஷ் கன்னா, தர்மேந்திரா, அனில் கபூர் மற்றும் சல்மான் கான் போன்ற ஹீரோக்களின் குரலாக மாறினார்.

‘ஏக் துஜே கேலியே’ படத்திற்காக டைரக்டர் கே.பாலச்சந்தர் அவரைப் பாட அழைத்த போது லஷ்மிகாந்த் பியாரிலாலுக்கு அதில் சிறிதளவும் உடன்பாடில்லை.  ஆனால், பிடிவாதமாக இருந்து, எஸ்.பி.பியின் மும்பை இசைப் பயணத்தை தொடங்கி வைத்த பெருமை கே.பாலச்சந்தரையே சாரும்.  

சினேகிதர்களே, எஸ்.பி.பியின் எந்த வசீகரம் அவரது இசைத் திறமையை மாநிலங்கள் தாண்டி வரவேற்கச் செய்தது என்பதை இப்போது பார்ப்போம்.

இதோ சில கருத்துக்கள்.

முதலாக அவரது குரல் கிட்ட தட்ட மொஹமத் ரஃபியைப் போலவே இருப்பது.
2008ல் கணேஷ் அனந்தராமன் அவர்கள் எஸ்.பி.பியின் கருத்துக்களுக்கு குரல் கொடுத்து கூறியதாவது : “மொஹமத் ரஃபி தன் குரல் திறமையால் ஒரு சாதாரண நடிகனை ஒரு ஸூப்பர் ஸ்டார் ஆக்கினார். இதை உள் வாங்கி, திரு எஸ்.பி.பி அவர்களும் அந்தத் திறனை கையாண்டும், மொழியையும் அதன் ஊடுருவல்களையும் உணர்ச்சிகளையும் நேர்த்தியாக பயன் படுத்தி திரையில் விரியும் ஹீரோவாகவே மாறினார்.

என் வாழ்வில் எஸ்.பி.பியை எனக்கு முதல் முதல் அறிமுகப் படுத்திய தேனானப் பாடல் “ஆயிரம் நிலவே வா” என்பது. என்ன ஒரு சுகம், சந்தோசம், மனக் கிளர்ச்சி மற்றும் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி அந்தப் பாடலைக் கேட்கும்போது.  அதே போல் அவர் பாடிய “அவள் ஒரு நவரச நாடகம்” என்னும் பாடலைக் கேட்டால் இன்றும் நான் வேலை யாவற்றையும் விட்டு விட்டு அமர்ந்து சுகமாக ரசித்துக் கேட்டுவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பேன்.  அப்படி ஒரு காந்த சக்தி அவரது குரலுக்கு இறைவன் வழங்கியிருக்கின்றார் என்றால் அது மிகையாகாது. 

இதில் என்ன ஆச்சரியம் என்றால் எஸ்.பி.பி. அவர்களுக்கு இசையில் முறையான பயிற்சி கிடையாது.  ஆனால் 1980ல் தன் சுய முயற்சியால் ‘சங்கராபரணம்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தில் கர்நாடக இசையைப் பாடி உலகையே திரும்பிப் பார்க்க வைத்ததோடல்லாமல் தன் முதல் தேசிய விருதிற்கும் வழி வகுத்தார். ஒரு நல்ல இசைப்  பிரியருக்கு அவர் ஒரு தேர்ந்த கர்நாடக இசைப் பாடகர் இல்லை என்பது நன்றாகத் தெரியும்.  ஆயினும் எஸ்.பி.பி. அவர்கள் அந்த கர்நாடக இசையின் சாரத்தைப் பிழிந்து  தேனாக திருப்பி தன் பிரியர்களுக்கு அளித்தபோது அவர்களால் அதை ரசித்து அருந்தாமல் இருக்க முடியவில்லை என்பதே உண்மை. அப்படத்தில் அவர் பாடிய “சங்கராபரணமு” என்னும் பாடல் கர்நாடக இசையைப் பற்றி அதிகமாகத் தெரியாத என்னையே சுண்டி இழுத்தது என்றால் சராசரி மக்களையும் இழுக்கும் அவரது திறமை இதை வீட நல்ல எடுத்துக்காட்டு இருக்காது என்றே நினைக்கின்றேன். 

அதே போல், எஸ்.பி.பி. தேனிசையைப் பாடும்போது பேசும் உடல் அசைவுகளும், உணர்ச்சிகளும், பாராட்டுக்களும் பார்ப்பவரை தன் சூழலை மறக்கச் செய்யும் வலிமை கொண்டவை.

ஒவ்வொரு முறை ஒரு பாடலைப் பாடும்போதும் புதிதாய் பிறந்து புதிதாய் பாடுகிறாரோ என்று ஐயுறும் வண்ணம் பாடும் திறன் கொண்டவர். இசை என்பது ஒரு குறிப்பிட்ட நுட்பமோ அல்லது ஒரு குறிப்பிட்ட நடையோ இல்லை.  அது வெறும் அழகோ அலங்காரமோ அல்ல. அது ஒரு பெரும் கடலின் சாராம்சமாகும்.  

திரு.எஸ்.பி.பி அவர்களின் இசையில் நம் உள் மனதின் உணர்ச்சிகளைப் பற்றியும் நம் உயிரான இசையைப் பற்றியும் ஒரு தீரா ஆர்வர் இருப்பதைக் காணலாம்.
எஸ்.பி.பி என்பவரிடம் நீங்கள் ரஃபியின் வளத்தையும், கிஷோர் குமாரின் உணர்ச்சிகளையும், முகேஷின் சோகத்தையும், மன்னா டேயின் ஆழத்தையும், பி.பி.ஸ்ரீனிவாசின் காதலையும், எஸ்.ஜானகியின் வெளிப்பாட்டையும் ஒன்று சேர்ந்துக் காணலாம்.

அவர் அன்றைய எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் பாடியவர்.  இன்றைய ரெஹ்மானுக்கும் இசைத்தவர்.  

திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இசை ஐம்பது ஆண்டுகளைக் கடந்து இன்றும் இளமையுடன் நம் மனதை வருடிக் கொண்டிருக்கின்றது. அவரது இசை திரையிசையின் மொத்த சாராம்சத்தையும் வடிகட்டி நமக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.  

திரு.எஸ்.பி.பி என்பவர் இசையுலகில் ஒரு சகாப்தம்.  அவர் கொரோனாவிலிருந்து மீண்ட போதும், நுரையீரல் தொற்று காரணமாக அமரரானது அதிர்ச்சியை அளிக்கிறது.  

அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் நம் ஆழ்ந்த துக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். 

கட்டுரையாளர் : திருமதி ரமா ஸ்ரீநிவாசன். 
===


31 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
    நலமே விளைக.

    பதிலளிநீக்கு
  2. அற்புதமான அஞ்சலி. பாலு சாருக்கு.
    என்றும் அவர் நினைவில்.

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    மனிதர்கள் தாகத்தை தீர்த்து வைக்கும் பணி நீண்ட ஆண்டுகள் கணக்காக தொடர்ந்து செய்து வரும் முதல் செய்தி சிறப்பானது. தந்தை மகன் இருவருக்கும் பாராட்டுக்கள்.

    பாடும் நிலா பற்றிய கட்டுரை சிறப்பானது. அவர் பாடிய பாடல்களின் வழியாக நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்/கொண்டிருப்பார்
    என்றும் அவர் நினைவுகள் நம் மனதில். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. எல்லா மொழிகளிலும் நடக்கும் தொலைக்காட்சிநிகழ்ச்சி பாடகர்கள் தேர்வில் அவர்களை உற்சாகப்படுத்தும் முதல் நபராக இருந்ததைத் ரசித்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  6. இசையாய் தமிழாய் என்றும்
    என்றென்றும் திரு.பாலு அவர்கள்
    நம்முடன் கலந்திருப்பார்..

    ஓம் சாந்தி:..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். ஒவ்வொருவர் இல்லத்திலும், அந்த இல்லத்தில் ஒவ்வொருவர் இதயத்திலும் இருக்கிறார்.

      நீக்கு
  7. ஒரு நல்ல இசைக்கலைஞன் என்பதைத்தாண்டி நல்ல மனிதர் என்பதை நான் அபுதாபியில் இசைக்கச்சேரியில் கண்டவன் நான்.

    அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தன்னை அறிமுகப் படுத்திய பெரியவர்களைப் பற்றியோ, ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்தவர்கள் பற்றியோ பேசும்போது ஒரு கணம் நெஞ்சில் கைவைத்து கண்களை மூடி மரியாதை செலுத்தி பேச்சைத் தொடர்வார்.

      நீக்கு
  8. அருமையான செய்திகள். நாளிதழ்களில் படித்தேன். வழக்கம்போல பகிர்ந்தமைக்கு நன்றி.
    என்றும் வாழ்வார் நம்முடன் தன் இனிய பாடல்கள் வழியாக.

    பதிலளிநீக்கு
  9. போகும் பாதை தூரமே... வாழும் காலம் கொஞ்சமே...
    ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா...
    இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...
    இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...
    கேளாய் பூமனமே...

    பதிலளிநீக்கு
  10. தவியாய்த் தவிக்க விட்டு விட்டார்.

    பதிலளிநீக்கு
  11. மிகுந்த சோகம். அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள். அவரின் குடும்பத்தினர்களுக்கு அனுதாபங்கள்.

    என்றும் இசைக் குயிலாக ....

    பதிலளிநீக்கு
  12. பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் நன்று.

    பாடும் நிலா பாலு அவர்களுக்கு நல்லதொரு அஞ்சலி. அவரது ஆன்மா நற்கதியடைய எனது பிரார்த்தனைகளும்.

    பதிலளிநீக்கு
  13. இன்றய பாசிட்டிவ் செய்திகளை பின்னுக்குத் தள்ளி விட்டது எஸ்.பி.பி.யின் மரணச் செய்தி. அந்த சிரித்த முகமும், இளமை மாறாக் குரலும் என்றும் மறக்காது. தோன்றிர் புகழொடு தோன்றுக.. என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க புகழோடு தோன்றி, இறுதி வரை அந்தப் புகழ் மங்காமல் வாழ்ந்தவர். True legend!

    பதிலளிநீக்கு
  14. //ஒரு நாளும் தவறாமல், பானையில் தண்ணீர் நிரப்பி வைத்து வருவதில், மனநிறைவு ஏற்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.//

    திரு. தங்கவேலு அவர்களின் சேவை அருமை.
    வாழ்த்துக்கள்.

    //இந்திய கடற்படையில் முதன்முறையாக இரு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.//

    இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    125 அம்மாவுக்கு வாழ்த்துக்கள்! வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  15. குடும்பத்தில் ஒருத்தரின் பிரிவு போலவே இருக்கிறது.
    அவர் பாடல்களில் என்றும் வாழ்வார்.
    தொலைக்காட்சிகளில் எல்லா மொழி குழந்தைகளுக்கும் அவரின் மறைவு பெரிய இழப்பு.பாடும் குழந்தைகளை மனதார பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்தி பாட வைப்பார். அந்த சிரிப்பு இறைவனிடம் குழந்தைகள் நலம் வேண்டி பிரார்த்தனை செய்து ஆசீர்வாதம் செய்வார்.

    நல்ல மனிதருக்கு திறமைகளை சொல்லி அஞ்சலி செய்து இருக்கிறார் ரமா.

    பதிலளிநீக்கு
  16. தொலைக்காட்சிகளில் பாடும் எல்லா மொழி குழந்தைகளுக்கும்

    பதிலளிநீக்கு
  17. மக்களின் தாகம் தீர்த்த/தீர்த்து வைக்கும் தந்தையும் மகனும் பாராட்டுக்குரியவர்கள். மற்றச் செய்திகள் தினசரிகள்,முகநூல் மூலம் அறிந்தவையே! பாட்டிக்குப் பிறந்த நாள் கொண்டாடிய குடும்பத்தினருக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  18. தீர்க்கமுடியாத, நிரப்ப முடியாத இடைவெளி விழுந்து விட்டது. எஸ்பிபி காலமானார் என்னும் செய்தியே நம்பும்படி இல்லை. ஆனால் இதான் நிஜம். அவர் குரல்களின் மூலம், பாடல்களின் மூலம் என்றென்றும் வாழ்ந்து கொண்டு இருப்பார்.

    பதிலளிநீக்கு
  19. சிவாங்கி சிங் பெண்குலத்துக்கே பெருமை.
    மக்களின் தாகம் தீர்க்கும் தந்தை மகனுக்கு அன்பு நன்றிகள்.
    எல்லோரும் நலமாக இருப்போம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!