மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மகனின் திருமணத்துக்கு வந்த மொய் பணத்தை உண்டியல் வைத்து வசூல் செய்து, அப்பணத்தை மாற்றுத்திறனாளிகள், முதியோர் காப்பகத்துக்கு வழங்கிய ஓய்வுபெற்ற நூலகருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
மயிலாடுதுறை திருவிழந்தூர் தென்னமரச்சாலையில் வசிப்பவர் ஓய்வுபெற்ற நூலகர் ஜெயக்குமார். இவரது மகன் சம்பத்குமாருக்கும், காந்திமதி என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் 9-ஆம் தேதி மயிலாடுதுறையில் திருமணம் நடைபெற்றது. திருமண அழைப்பிதழிலேயே, அன்பளிப்பைத் தவிர்த்து, அதனை ஏழை, எளிய மக்களுக்கு நலஉதவிகள் செய்திட ஜெயக்குமார் வலியுறுத்தியிருந்தார். இருப்பினும் அன்பின் காரணமாக மொய் அளித்தவர்களை மறுக்க முடியாததால், திருமண மண்டபத்திலேயே உண்டியல் ஒன்றை வைத்து, மொய் பணத்தை அந்த உண்டியலில் செலுத்த கேட்டுக்கொண்டார். அந்த வகையில் வசூலான ரூ.83,000 ரொக்கப்பணத்துடன், மேலும் சிறிது தொகையை சேர்த்து ரூ.1 லட்சத்தை மயிலாடுதுறையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் காப்பகம், முதியோர் காப்பகம் மற்றும் வயதான ஏழை மக்கள் ஆகியோருக்கு அவர் இன்று பிரித்து வழங்கினார். மகனின் திருமணத்துக்கு பெண் வீட்டாரிடமும் வரதட்சணை பெற்றுக்கொள்ளாத நூலகர் ஜெயக்குமார் குடும்பத்தினர், மொய் பணமாக வந்த தொகையினையும் சமூக சேவை அமைப்புகளுக்கு வழங்கிய செயல் அனைவரின் பாராட்டுதல்களை பெற்றுள்ளது.கண்ணிமைக்கும் நேரத்தில் சுறுசுறுப்பாக, தன் கை விரல் ஜாலத்தால், பயணியர் கேட்கும் இடங்களுக்கு டிக்கெட் எடுத்து தருகிறார்.பயணியரிடம் இன்முகத்தோடு பேசும் இவர், சில வினாடிகளில் டிக்கெட் வழங்குவது, 'மேஜிக்' செய்வது போல் உள்ளது. 10 வினாடிகளில் இரண்டு பேருக்கு டிக்கெட் வழங்குகிறார். இந்த வேகத்தால், பெரிய வரிசையாக இருந்தாலும், அடுத்த சில நிமிடங்களில் காணாமல் போய் விடுகிறது.இவரின் சுறுசுறுப்பான பணியை, பயணி ஒருவர் வீடியோ எடுத்து, தன்னுடைய 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில் சமீபத்தில் பதிவிட்டார். இதைப் பார்த்த பலர், அன்பழகனுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அத்துடன், அவருடனான தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூர் ஒன்று. இதன் தலைநகரம் இம்பால். மணிப்பூரின் வடக்கில் நாகாலாந்தும், தெற்கில் மிஸோராமும், மேற்கில் அஸ்ஸாமும் உள்ளன. கிழக்கில் இருப்பது மயன்மர் (பர்மா).
8621 சதுர மைல்கள் பரப்புள்ள மணிப்பூரின் ஜனத்தொகை 30 லட்சம் தான். பா ஜ க ஆளும் இம்மாநிலத்தின் முதல்வராக என் பிரேன் சிங் என்பவர் இருக்கிறார். ஆப்கானிஸ்தானின் சீதோஷ்ண நிலை கொண்ட மணிப்பூரில், கொஞ்ச காலம் முன்பு வரை, விவசாயிகள், வியாபாரிகளின் பிடிகளில் சிக்கி, கஞ்சா, அபினி (பாப்பி) போன்ற போதைப் பொருள்களைப் பயிரிட்டு வந்தனர்..! கஞ்சாவும், அபினும் மயன்மருக்கும், நேபாளத்துக்கும் கடத்தப் பட்டு வந்தன. இதனைப் பயிரிட விவசாயிகள் , வியாபாரிகளிடம் முன்பணம் வாங்கி விடுவார்கள். இந்த விவசாயத்தில் ஓரளவு லாபம் இருந்தாலும், அவ்வப்போது, அரசின் போதைப்பொருள் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனையிட்டு, விளைந்துள்ள கஞ்சாவையும், பாப்பியையும் கொளுத்தி விட்டுப் போய் விடுவார்கள்.
அப்போது வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய கஞ்சாவும், அபினியும் இருக்காது; வாங்கிய முன்பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்; நீதிமன்றங்களுக்கும் அலைய வேண்டும்..!
எனவே எப்போதுமே மணிப்பூர் விவசாயிகள் வீடுகளில் வறுமை தான்..!
இதனால், பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; வீட்டை விட்டு ஓடிப் போய் உள்ளனர்; குடிகாரர்களாக மாறி உள்ளனர்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன், மணிப்பூரின் தலை நகரான இம்பாலில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லெய்னகாங்க் (Leinakhong ) கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலம் வைத்துக் கொண்டு வறுமையில் வாடிய விவசாயக் குடும்பத்தில் இருந்தவர் தான் 34 வயது இளைஞர், “ ராகேஷ் கெய்ஷாம் ( Ragesh Keisham ).
இவர் அது வரை, எங்கெங்கோ அலைந்து, என்னென்னவோ தொழில்கள் செய்து தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். இறுதியில், தன் நிலத்தில் விவசாயம் செய்வது என்னும் முடிவில், கிராமத்துக்கு வந்து விட்டார். அப்போது அவருக்கு, நறுமண விஞ்ஞானியான (Aromatic Scientist ) டாக்டர் எம் அஹமத் என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது. அவர், பிரேசில் நாட்டில், மருந்தாகப் பயன்படும் “ஜுரப் புல் (Fever Grass )” என்னும் பெயரைக் கொண்ட “லெமன்கிராஸ் ( Lemongrass) “ விவசாயத்தைப் பற்றி ராகேஷிடம் எடுத்துச் சொல்லி இருக்கிறார். சுமார் 1 ½ ஆண்டுகள், “லெமன்கிராஸ்” பயிரிடுவதைப் பற்றியும், அதனை டீ இலையுடன் சேர்ந்து, மணம் மிக்க, உடல் நலனைப் பாதுகாக்கும், கலவை ஒன்றைத் தயார் செய்யவும், ராகேஷ் கற்றுக் கொண்டார். இதற்காக அவர் இம்பாலுக்கு அடிக்கடி சென்று, அங்குள்ள நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் படித்தார். முதலில் கொஞ்சமாக லெமன்கிராஸையும், தேயிலையையும் பயிரிட்டு, தன் பெற்றோர்களுக்குக் கொடுத்து, அவர்களது அபிப்பிராயத்தைப் பெற்றார். தன் கலவையில் தேக நலனைப் பாதிக்கும் விஷப்பொருள் ஏதும் இல்லை என, டில்லியில் உள்ள “எஃப் ஐ சி சி ஐ ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்திடம் (FICCI Research & Analysis Centre, Delhi ) அத்தாட்சி பெற்றார். இந்தோனேஷியாவில் இருந்து 10000 லெமன்கிராஸ் பயிரை வாங்கி வந்து, தன் நிலத்தில் நட்டார்.
காலம் சென்றது..!
ராகேஷ் நிலத்தில் இருந்து பயிரான லெமன் கிராஸ் பயிரையும், தேயிலையையும் கலந்து, நறுமண டீயைத் தயார் செய்து, முதலில் 200 பாக்கெட்டுகளில், 21-11-2011 ல், விற்பனையை இம்பாலில் தொடங்கினார்.இவரது கலவையை அழகான பொட்டலங்களில் விற்க, அவர் மனைவி தன் நகைகளை விற்றுப் பணம் கொடுத்தார்! ஐந்தே நிமிஷங்களில் 200 பொட்டலங்களும் விற்றுத் தீர்ந்தன.
பிறகு என்ன..?
கஞ்சா, அபினி பயிர் செய்து கொண்டிருந்த அக்கம் பக்கத்து நிலக்காரர்கள், இவரிடம் தங்கள் நிலங்களைக் குத்தகைக்கு விடத் தொடங்கினார்கள். அவர்களது உழைப்பையும் ராகேஷ் பயன் படுத்திக் கொண்டார்..! “ஸூயிஜெனரஸ் அக்ரானமி ப்ரைவேட் லிமிட்டெட் (Suigeneris Agronomy Private Limited ) ” என்னும் நிறுவனத்தை அமைத்து, அதில் நில சொந்தக்காரர்களை இணைத்து, இப்போது 350 ஏக்கர்களில், லெமன்கிராஸ்-தேயிலை பயிரிடுகிறார். இவரது இப்போதைய ஆண்டு வருமானம் 8 கோடி ரூபாய்..! ராகேஷ் இப்போது மணிப்பூரின் விவசாயிகளுக்கு லெமன் கிராஸ் டீ செய்வது பற்றி பயிற்சி கொடுத்து வருகிறார். அவருக்கு, அம்மாநில அரசு துணை நிற்கிறது. வங்கிகள் கியூ வரிசையில் வந்து நின்று, ‘எத்தனை ரூபாய் கடன் வேண்டும்..?” எனக் கேட்கிறார்கள்..! ராகேஷ் மணிப்பூரின் மாணிக்கம் அல்லர்! மனித குல மாணிக்கம்! போதைப் பொருள் உற்பத்தியை அடியோடு நிறுத்தி, விவசாயிகளின் தற்கொலை வறுமையை ஓழித்து, குடிப் பழக்கதில் இருந்து மக்களைக் காப்பாற்றி, மணிப்பூர் மாநில விவசாயிகளின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டு வந்துள்ள ராகேஷ்.
[நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் சார்]
===================================================================================================================
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ அனைவரின் மனதையும் உருகச் செய்துள்ளது.
3 சக்கர வாகனம் ஒன்றில் இரும்பு பொருட்களை ஏற்றிக் கொண்டு, கூலி தொழிலாளி ஒருவர் சாலையில் வெறும் காலுடன் நடந்து சென்றுள்ளார். இதனை கண்ட அங்கிருந்த காவலர் ஒருவர் அவருக்கு புதிய செருப்பு ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். அதனை ஏற்றுக் கொண்ட அந்த தொழிலாளி காவலருக்கு நன்றி தெரிவித்துவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார்.
காவலரின் இந்த மனிதாபிமான செயல் நெட்டிசன்களின் மனதை உருகச் செய்துள்ளது. இதுவரை சுமார் 2 லட்சம் பார்வைகளை கடந்துள்ள இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் லைக்குகளையும், காவலரை பாராட்டி கமெண்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
================================================================================================================================================================================================================
நான் படிச்ச கதை
- ஜெயக்குமார் சந்திரசேகரன் -
***********
நுகம் - அ. எக்பர்ட் சச்சிதானந்தம்
முன்னுரை
அதிகம் அறியப்படாத பல எழுத்தாளர்கள் சில நல்ல
சிறுகதைகளையும் எழுதியுள்ளனர். வெளிச்சத்திற்கு வராத அத்தகைய எழுத்தாளர்களில் ஒருவர் அ. எக்பர்ட் சச்சிதானந்தம். இவரது கதைகள் கிருத்துவ சமுதாயத்தில் நிலவும்
அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஊழலுக்கு மதம்,
ஜாதி ஏதும் விலக்கல்ல என்று இவரது கதைகள் மூலம் அறியலாம். இன்று நாம் காணப்போகும் “நுகம்” கதையும் அது போன்ற ஒன்றே. எஸ்ரா இக்கதையை நூறு சிறந்த சிறுகதைகளில்
ஒன்றாகத் தேர்ந்தெடுத்துள்ளார்.
கதைச்சுருக்கம்.
தேவன்பு இரண்டாம் தலைமுறை கிருத்துவர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரான இவரது அப்பா, தேவபுத்ரன் என்ற ஆயரால் மதமாற்றம் செய்யப்பட்டவர். இவரது மனைவி ஞானம். மூன்று பெண் குழந்தைகள். மூத்தவள் சலோமி. எலிசபெத், ப்ரீடா இளையவர்கள்.
சலோமி பி எட் முடித்து எட்டு வருடங்களாக வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறாள். தற்போது ராஜம் பேட்டை பள்ளியில் உள்ள ஒரு காலி இடத்திற்கு விண்ணப்பித்து இருக்கிறாள். அந்த வேலைக்கான மனுக்களின் பரிசீலனையும் ஆசிரியரைத் தேர்ந்தெடுத்தலும் அடுத்த நாள் கமிட்டி கூடி தீர்மானிக்க உள்ளது.
கதை, தேவன்பு, மகள் சலோமியுடன் கமிட்டி அங்கத்தினர்களை சென்று கவனிப்பதில் தொடங்குகிறது. அதற்காக தேவன்பு கமிட்டி பாதிரியார்களுக்குப் பிரியாணி விருந்து ஏற்பாடு செய்கிறான். முதலில் கமிட்டி சேர்மனை அவரது உதவியாளர் ஜேம்ஸின் சிபாரிசுடன் பார்க்கிறான்.
ஜேம்ஸ் “ஐயா நான் சொன்னனங்களே தேவன்பு, இவந்தாங்க. அவ சலோமி. மகளுங்க.”
முகத்திலிருந்து லுங்கியின்
கீழ் தெரிந்த கால்வரை துழாவியது சேர்மன் பார்வை. “நீதானா” மீண்டும் உற்றுப் பார்த்தார் லேசாகத் தலையசைத்தபடி.
அவன் சங்கடத்துடன் அசைவது இவளுக்குத் தெரிந்தது.
“என்ன வேலையா பாக்ற?”
”பெண்கள் விடுதில தோட்டக்காரங்கயா”
—---
“மொட்டக் கடுதாசி எப்பயிருந்துயா எழுத ஆரம்பிச்சிருக்க?”
”ஐயா?”
”அதாயா,
பெயர் போடாம எழுதற லெட்டர்.”
”ஐயா?”
“நல்லா நடிக்கறயா. உனை மாதிரி எத்னி பேர பாத்திருப்பேன். ஐயருமாருகல்லாம் உனக்கு கிள்ளுக்கீரைகளாய்ட்டாங்க இல்ல?
வெட்டிருவோம், குத்திருவோம்னு எழுதிட்டா பயந்து போய் ஒம் பொண்ணுக்கு வேல போட்டு குடுக்கணும் இல்லையா
தேவன்பு?”
“ஐயா என்ன என்னாலாமோ சொல்றீங்களே.. எனக்கு எய்தவே
தெரியாதுங்கயா..”
—--
“ஐயா பைபிள் மேல ஆணையா நா செய்லீங்கயா. நா என்னா பாவஞ் செஞ்சேன்...
இப்டிலா ஐயா சொல்றாறே சாமி...”
சேர்மன் கால்களை அங்கியோடு கட்டிப்பிடித்துக்
கொண்டான்.
“சே எழுந்திரியா, எழுந்திரி... ஜேம்ஸ், எழுப்புய்யா இந்தாள...”
அவன் உடம்பு வேகமாகக் குலுங்கிக் கொண்டிருந்தது.
“தேவன்பு...
ஏம்பா....” அவன் முழங்கையைப் பிடித்திழுத்தார் ஊழியர்.
இவள் அவன் முதுகைத் தாங்கி நிறுத்தினாள்.
“இட்டுக்னு போம்மா. பேஜாரா பூட்ச்சி.”
“நீங்கதாங்யா எம்மவளுக்கு வேல போட்டுத் தரணும்,
எட்டு வருஷமா சும்மாயிருக்கிதுங்யா. சத்யமா கைநாட்டுதாங்கயா
வெக்கத் தெரியும். வேறொண்ணும் தெரியாதுங்கயா...”
சலோமி வீட்டிற்கு
திரும்பினாள். தேவன்பு விருந்து
சரியாக்க சென்றான்.
—---
இரண்டரைக்கு அவசரமாக
வந்தான் தேவன்பு……
தேவன்புவும் சலோமியும்
செங்கல்பட்டு ஆஸ்பத்திரியைத்
தாண்டி என்.ஜீ.ஓ.காலனிக்கு நடந்தனர். பெஞ்சமின் வேதநாயகம் ஈஸிசேரில் உட்கார்ந்திருந்தார்.
“என்ன தேவன்பு, என்ன விஷயம்?”
”ஐயா எம்மவ பிஎட் பட்சிருக்காங்க, ராஜம்பேட்டைல வேல
ஒண்ணு காலியாக்துங்க. நாளைக்கி மீட்டிங்ல
எம்பொண்ணுக்கு நீங்க தாங்க சிபார்சு பண்ணனும்.”
”நீ இஞ்ச வந்து பார்த்து ஒண்ணும் பிரயோஜனமில்ல. என்னைலா பிடிக்காதுல உங்க ஊர்க்காரனுங்களுக்கு.
நாவர்கோயில்காரனுவல்லா நாடார்களா? என்னையும் நாடாக்கமார்களோட சேத்துட்டானுகலெ. எங்கல போய் முட்டிக்றது? இப்பம் என்ன
செய்றது? சேர்மன் அவருக்கு வேண்டிய ஆளுக்கில்லா
சப்போர்ட் பண்ணுவார்... ஐசக்க தெரியுமால உனக்கு?”
“தெரியுங்கயா,
கருங்குழிலக்றாருங்க.”
“ஆ,
நீ அவர போயி பாரு. ஏரியா செக்ரட்டில அவரு. அப்பம் பொறப்படு.
—----
மதுராந்தகத்திற்கு பஸ் ஏறினர் வில்ஃபிரட்டைப் பார்ப்பதற்கு. வில்ஃபிரட் வீட்டில்
இல்லை. ஸ்கூலுக்குச் சென்றனர்.
அடர்ந்த மீசையைத் தடவிக் கொண்டான் வில்ஃபிரட். “இந்த வேல
ஒனக்குதா. சர்தானா? நாடாருக ஆராச்சும் இருந்தாதா பிரச்னை.
சேர்மன் அவுங்களுக்குதா சப்போர்ட் பண்ணுவான்.
இதுல அந்த பிரச்னை இல்ல.
என்னை மீறி எதுவும் செய்ய மாட்டாயா, செய்யவும் முடியாது.” குவிந்த இருபுற கன்னங்கள், சிரிக்கிறான் என்பதைக் காட்டியது இவளுக்கு.
—--
அடுத்து கருங்குழி
சென்றனர் தந்தையும் மகளும்.
கருங்குழி சர்ச் வாசலில்—ஐசக் பெருங்கோபத்துடன் பேசினார். “டயசிஸ்ல நீ வேலை பார்க்றனா அது எத்தனையோ பேருக்கு கிடைக்காத சிலாக்கியம். அதுக்கு நீ தகுதி வாய்ந்தவனா இருக்கியா? நியுமிகின் துரை அந்த காலத்ல தென்னேரி வட்டாரத்துல சுவிசேஷ நற்செய்தி பிரசங்கித்ததாலதான் உங்கப்பா கிறிஸ்துவைப் பற்றி அறிய முடிஞ்சிச்சி. உனக்கு, அவரோட பக்தி, விசுவாசம், அடக்கம் இதெல்லாம் வச்சிதா இந்த தோட்டக்கார வேல கெடச்சிச்சி, ஆனா நீ கடவுளுக்குப் பயந்து நடக்காம பாவமான வழியில போய்ட்டிருக்க.”
”ஐயா நா ஒரு தப்புஞ் செய்லீங்க.”
“தெரியாதுனு நெனைக்காதயா. உங்க பாஸ்டரேட் எக்ஸ் ட்ரஷரர் பால்ஜோசப்போட சேர்ந்துக்னு ஏரியா சேர்மனுக்கு ஆபாசமான லெட்டர் எழுதியிருக்கியே, அதுக்கு என்ன சொல்ற?”
“சேர்மனு ஐயாகூட அப்டிதா சொன்னாருங்கயா. நா செய்லிங்கயா.”
மறு நாள்
மாலை மனைவி ஞானம் அறிவுரைப்படி மீண்டும் சேர்மனை காண வந்தனர் தேவன்புவும்
சலோமியும்.
ஐந்தரைக்கு ஏரியா சேர்மன் வீட்டை அடைந்தனர். “நீ போயி
கண்டுக்னு வா. நா இங்கியே நிக்றேன்.” இவள் கேட்டுக்கு வெளியில் நின்று கொண்டாள்.
சேர்மன் எதிரே தேவன்பு நிற்பது தெரிந்தது ஜன்னல் வழியே. கையாட்டிப் பேசிக் கொண்டிருந்தார். ஓரமாக வந்த ரிக்ஷாவுக்கு வழிவிட்டு
மீண்டும் பார்த்தாள். தேவன்பைக் காணவில்லை. சேர்மன் குனிந்தார். தேவன்பு கீழிருந்து நிமிர்ந்தான். அவன் முதுகை
சேர்மன் தட்டிக் கொடுத்தார் சிரித்தபடி.
பத்து நிமிடங்களுக்குப்
பிறகு இவளிடம் வந்தான் தேவன்பு. “ஐயா மீட்டிங்ல பேசுறேன்னாருமா. மின்னாடியே ஐயாவ பார்த்திருக்கணும், பால் ஜோசப்
ஐயா பேச்சக் கேட்டது தப்பா பேய்ரிச்சி. வூட்டுக்கு போலாமா?”
“மீட்டிங் முடிஞ்சப்புறம் போலாம்.”
—--
சர்ச் மையத்தில் 15, 16 அங்கத்தினர்கள் இருந்தனர். முதல் வரிசையில் ஐசக், ஞானப்பிரகாசம்.
கடைசி வரிசையில் வில்ஃபிரட், பெஞ்சமின்.
இரண்டாவது வரிசையில் போதகர்களின் வெண்ணங்கிகள்
ஐந்தாறு தெரிந்தன. எல்லோருக்கும் முன்னால் நின்றிருந்தார் ஏரியா சேர்மன்.
—--
”ராஜாம்பேட்டை இடத்துக்கு நான்கு பேர் விண்ணப்பித்து இருக்காங்க. அதுல ரெண்டு பேர் நான் கிறிஸ்டியன்ஸ்...”
“வீ நீட் நாட் கன்சிடர் தெம்.”
ஒரு போதகர் சொன்னார்.
“மற்ற இரண்டுல... ஒன்று தேவன்பு சாமுவேலின் மகள் சலோமிரோஸ், இன்னொன்று ரெவ்ரென்ட் காட்வின் துணைவியார்
திருமதி ரஞ்சிதம்... காட்வின் வரலையா?”
“அவர் சம்பந்தப்பட்ட விஷயம்னு வரலீங்கயா.” ஐசக் குரல் கேட்டது.
—---
சேர்மன் ஃபைலைப் புரட்டினார். “ திருமதி ரஞ்சிதம் பிஎஸ்ஸி பிஎட்.
விருப்பப் பாடங்கள் ஆங்கிலம், ஃபிஸிகல் சயன்ஸ், குமாரி சலோமி ரோஸ் பிஏ., பி எட். வரலாறு, ஆங்கிலம் விருப்பப் பாடங்கள்.”
”பிஎட் எப்பங்க முடிச்சாங்க?”
“தொன்னூறுல காட்வின் சம்சாரம் முடிச்சிருக்காங்க. சலோமி எண்பத்தி
மூணு.”
—-
வில்ஃபிரட்— “கல்வித் தகுதியை பொருளாதார நிலைய அடிப்படையா வச்சுப் பாருங்க. சலோமிதா செலக்ட் பண்ணப்பட வேண்டியவ. சலோமி தகப்பனாருக்கு முன்னூறு ரூபாய் கூட நம்ம மிஷன் சம்பளமா குடுக்காது. இந்த சம்பளத்ல மகள அவரு படிக்க வெச்சது மிகப் பெரிய அற்புதந்தாங்க. இதுக்கெல்லாம் மேலாக சலோமி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவ.”---”எனவே எவ்வித வசதிகளும் வாய்ப்புகளும்
இல்லாத சலோமிக்கு இந்த வேலையைக் கொடுத்துவிட்டு, இனிவரும் வாய்ப்பை
காட்வின் ஐயர் துணைவியாருக்கு
அளிக்கும்படியாக கேட்டுக் கொள்கிறேன்.”
—--
“காட்வின் ஐயர் துணைவியாருக்கே இந்த வாய்ப்பை அளிக்க வேண்டும்.”
“ஐயருக்கு ஐயருமாருக சப்போர்ட்டா?”
“சபையார் ஊழியர்கள அவமானப்படுத்தறப்போ நாங்க அதைத்தான் செய்ய வேண்டி வரும். எங்களுக்கெல்லாம் மூத்த சகோதரனாக இருந்து வழி நடத்தி வரும் ஏரியா சேர்மன் அவர்களை மிகவும் ஆபாசமான முறையில் வேலை கேட்டும் சலோமியின் தந்தை ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.”
—--
“போதகர்களுடைய கோபத்துல, நியாயம் இருந்தாலும், தகப்பனார் செய்த தவறுக்காக மகளை தண்டிக்க நான் பிரியப்படலிங்க.
அடுத்த வாய்ப்பு வரும்போது சலோமி ரோசை நாம் கட்டாயமாக நியமனம் செய்ய வேண்டும்.
ஐயர் தீர்மானத்தை எழுதிக்கோங்க. ராஜாம்பேட்டை காலியிடத்தில்
திருமதி ரஞ்சிதம் காட்வின் அவர்களை...”
இவள் எழுந்தாள்.
“எதாமா?ஐயரை பாத்துக்னு போலாம்மா?”
“நீ பாத்து, கால்ல வுழுந்து எந்திரிச்சி வா.
நா மீனாட்சிய பாக்கணும். ஸ்கூலு வெக்ற விஷயமா. இவுங்க தயவு ஒண்ணும் இனி தேவல்ல எனக்கு.”
என்ன நுகம் என்ற தலைப்பு ஏன் என்று கதையில் ஒரு விவரமும் இல்லை நினைக்கிறீர்களா? இருக்கிறது.
—
கருங்குழி சர்ச் வாசலில் தொங்கிக் கொண்டிருந்த
படத்தில் இரண்டு மாட்டு வண்டிகள் நின்றன. ஒரு வண்டிமாட்டின் கழுத்தில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கழுத்தின்மீது பதிந்திருந்த நுகத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று தெரியவில்லை. அருகில் சென்றாள்.
சாத்தான் என்றிருந்தது. வண்டி மீதிருந்த பாரங்கள் - வறுமை,
வியாதி, பாவப்போராட்டம், பிசாசின் வேதனைகள், அதே பாரங்களுடன் நடந்த மற்றொரு வண்டி மாட்டின் நடையில் உற்சாகம் தெரிந்தது. நுகத்தின்
மீது சிவப்பில்
இயேசு கிறிஸ்து என்ற வார்த்தை இருந்தது. படத்தின் கீழ் விளிம்பில் மத்தேயு 11:29 வசனம் எழுதப்பட்டிருந்தது.
‘என் நுகத்தை ஏற்றுக்கொண்டு என்னிடத்தில்
கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள்
ஆத்மாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.’
—
இரவு சலோமி
உறக்கம் வராமல் சங்கீத புத்தகத்தில்
முதல் அதிகாரத்திலிருந்து தூக்கம்
வரும்வரை விடாது வாசித்துக் கொண்டிருந்தாள். உடல் வியர்த்துக்
கொண்டேயிருந்தது. உறங்கியது தெரியவில்லை. கனவு.
வண்டியை இழுக்க முடியாது திணறிக் கொண்டிருந்தாள். பாதை முழுதும்
வேலிக்காத்தான் முட்கள். பாதத்தில் முள்குத்தி ரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது. எங்கும் பாதத்தின் ரத்தச் சுவடுகள்.
இழுக்கவே முடியாதா? இதென்ன கழுத்தில்? பாம்பின் அருவருப்புடன் நுகத்தடியாய்
கருப்புக் கயிறு இறுக்கிக் கொண்டிருந்தது
கழுத்தை. கடவுளே!... வண்டி முழுவதும் பாரங்கள், பாரங்கள். சக்கரங்கள் சதுரங்களாகி நின்றன. பலங்கொண்ட மட்டும் இழுத்தாள். இயேசுவே! ... வண்டி நகரவே மறுத்தது. கழுத்தில் வலி தாங்க முடியவில்லை. கத்தினாள். சப்த அதிர்வுகள் குரல்வளைக்குள்ளேயே அறுந்து தொங்கின. கயிறு இறுகிக் கொண்டே இருந்தது. இன்னும் இன்னும்...
விழிப்புத் தட்டியது. தொண்டைமீது அழுத்திக்
கொண்டிருந்த பைபிளை எடுத்து வைத்துவிட்டு
எழுந்து அமர்ந்தாள்.
“பாம்பின் அருவருப்புடன் நுகத்தடியாய் கருப்புக் கயிறு இறுக்கிக் கொண்டிருந்தது கழுத்தை. “இந்த கறுப்புக்
கயிறு என்ன என்று புரிகிறதா?
“ரவுண்ட் பங்களா எதிர்புறக் கிணற்று மேட்டில் இவள் தேவன்புடன் உட்கார்ந்தாள். வராண்டாவில் அங்கியினுள் ஏரியா சேர்மன் இருந்தார்.
இடுப்புக் கறுப்புக் கயிற்றின்
முனை தோளில் தொங்கிக் கொண்டிருந்தது.”
இப்போது புரிகிறது.
கதையின் சுட்டிகள்
அழியாச் சுடர்கள்: நுகம்
- அ. எக்பர்ட் சச்சிதானந்தம்
இனி மற்றவர்கள்,
கதையைப் பற்றியும் ஆசிரியரைப்
பற்றியும் கூறுவதைப் பார்க்கலாம்.
எஸ்ரா :
நுகம் நல்ல சிறுகதை…. ஏழை ஏழை என்று உருகிய ஏசுவின் பேரால் அமைந்த மதம் எப்படி ஏழைகளை ஒதுக்குகிறது என்று casual ஆகக் காட்டிவிடுகிறார்.
அமைப்பு
என்று ஒன்று ஏற்பட்டுவிட்டாலே
லட்சியங்கள் மதிப்பிழந்துவிடுகின்றன என்பதை பிரமாதமாகக் காட்டி இருக்கிறார். கட்டாயம் படிக்க வேண்டிய கதை.
தேவாலயம் ஒரு பெரிய வணிக நிறுவனம் என்பதோடு கிறிஸ்துவ பள்ளிகளுக்குள்
உள்ள புரையோடிப்போன நடைமுறைகளை, திருச்சபையின் அதிகார ஆசைகளை சுட்டிகாட்டுகிறார் சச்சிதானந்தம்.
அவை இதன் முன்னே இலக்கிய வாசகர்களின் கவனம் பெறாத விஷயங்களாகும்.
சிறுகதையின் வடிவ ஒழுங்கு குறித்தோ, அதன் கலைநேர்த்திகள் குறித்தோ சச்சிதானந்தம்
பெரிதும் கவலைபட்டவரில்லை. அதனால் அவரது கதைகள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதிலே முக்கியமாக கவனம் கொள்கின்றன.
எனக்கு அவர் கதைகளில் வரும் மனிதர்களும் அவர்களது சுபாவமும் பிடித்திருந்தது. எக்பர்ட் சச்சிதானந்தம் தேடி வாசிக்கபட வேண்டிய சிறுகதையாசிரியர்.
1950 ஆம் ஆண்டு பிறந்த எக்பர்ட் சச்சிதானந்தனின் சொந்த ஊர் மதுரை. பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் இவர் தற்போது காஞ்சிபுரத்தில் வசிக்கிறார்.
அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம் நல்வரவு, வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா.. வணக்கம்.
நீக்குமேலே சொல்லப்பட்டிருக்கும் அனைத்து நற்செய்திகளுக்கும் முக்கியமாக மணிப்பூர் பற்றிய மிக நல்ல செய்திக்கும் நன்றி. வாழ்த்துகள். பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குநுகம் கதை பற்றியோ ஆசிரியர் பற்றியோ தெரியாது. இன்று தான் அறிந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குமயிலாடுதுறை நூலகர் ஜெயக்குமார் பிரமிக்க வைக்கிறார்.
பதிலளிநீக்குமாணிக்க ராகேஷ் உட்பட செய்திகள் அனைத்தும் அருமை...
பதிலளிநீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குவாழ்க நலமுடன்..
வாழ்க வளமுடன்..
நலம் செய்த நல்லார் நானிலத்தில் நின்று வாழ்க..
பதிலளிநீக்குஇப்பொழுதுதான் வருகிறேன் . செய்திகள் அறிந்திருப்பீர்கள் மக்கள் ஜனாதிபதி மாளிகையுள் புகுந்து விட்டார்கள் தலைவர் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக செய்திகள் சொல்கினறன .
பதிலளிநீக்குநலம் விசாரித்த அன்புள்ளங்களுக்கு நன்றிகள்.
பதிவு இனிமேல்தான் படிக்கப்போகிறேன்.
அனைத்து நல்ல செய்திகளும் அருமை.
பதிலளிநீக்குமயிலாடுதுறை நூலகர் வாழ்க வளமுடன்
மணிப்பூர் மாநில விவசாயிகளின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டு வந்துள்ள ராகேஷ் வாழ்க வளமுடன்.
ஜெயக்குமார் சந்திரசேகரன் சார் பகிர்ந்த கதையை முன்பே அழியா சுடரில் படித்து இருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅ. எக்பர்ட் சச்சிதானந்தம்
அவர்களை பற்றி எஸ் ரா சொன்னதை வாசித்தேன். நன்றி.
எக்பர்ட் சச்சிதானந்தத்தின் கதை,பாரபட்சம் காட்டாது, உண்மையில் கூர்மை காட்டி ஒளிர்கிறது. எஸ்ரா-வின் 100 சிறந்த கதைகளில் ஒன்றாக இது வந்ததில் ஆச்சர்யமில்லை. இவரது வேறு கதைகள் கிடைத்தால் படிக்கவேண்டும் எனத் தோன்றுகிறது. ஜேசி சாருக்கு நன்றி
பதிலளிநீக்குhttps://www.sirukathaigal.com/tag/%e0%ae%85-%e0%ae%8e%e0%ae%95%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/
நீக்குஇவரது 5 கதைகள் சிறுகதைகள்.காம் இல் உள்ளன. மேலே உள்ள சுட்டியில் சென்றால் காணலாம். கருத்துரைக்கு நன்றி.
கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி.
பதிலளிநீக்குஅனைத்து நல்ல செய்திகளும் அருமை அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகதை இப்பொழுதுதான் படித்தேன் .நன்றி.
'நுகம்' என்ற சொல்லே இன்று பழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது. ஆனால் அதிலிருந்து பிறந்த 'நுகத்தடி' இன்னும் விவசாயிகளுக்குக் தெரிந்த வார்த்தைதான்.
பதிலளிநீக்குகிறித்தவ பள்ளிகளில் ஆளெடுப்பு எப்படி நடக்கிறது என்று மலையாள எழுத்தாளர்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள். ஆனால் தமிழில் அத்தகைய துணிச்சலுள்ள கிறித்தவ எழுத்தாளர்கள் கிடையாது. காரணம் சமுதாயரீதியாக அவர்களை ஓரம் கட்டிவிடு வார்கள். இந்தச் சூழலில் பார்க்கும்போது எக்பர்ட் பாராட்டப்பட வேண்டியவரே
போற்றுதலுக்கு உரியவர்கள். போற்றுவோம்
பதிலளிநீக்கு