திங்கள், 25 ஜூலை, 2022

"திங்க"க்கிழமை  : - நீர்க்கொழுக்கட்டை - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி 

 

 நீர் கொழுக்கட்டை....

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். 


ஊற வைத்த ஒரு டம்ளர் (அரைக்கால் படி) இட்லி அரிசி. ஒரு டம்ளர் அரிசிக்கு  ஒரு மூடி தேங்காய் போதும்.இன்னமும் மேற் கொண்டு அரை மூடியில் ஒரு பாதியளவு போட்டாலும் ருசியாகத்தான் இருக்கும். தேங்காய் அதிமாக வேண்டாம் என்பவர்கள் ஒரு மூடி மட்டும் போட்டால் போதும். 


இது போல் கெட்டியான ஒரு தேங்காய்் மூடி. 


அரிசியும் தேங்காயும் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுத்த (ரொம்ப நைசாகவும் இல்லாமல், பரபரவென்றும் இல்லாமல் அரைக்க வேண்டும்.) கரைசல். நான் கொஞ்சமாக போட்டதினால் மிக்ஸியில் போட்டு விட்டேன். கிரைண்டர், அல்லது ஆட்டுரலில் அரைக்கும் போது அதன் பக்குவம் கைகளுக்கு தெரியும். கல்லுரலில் அரைக்கும் போது ருசியும் மிக நன்றாக இருக்கும். 


மிக்ஸியிலிருந்து ஒரு பாத்திரத்தில் மாவை மாற்றி நீர்க்க கரைத்து வைத்துக் கொள்ளவும். 


ஒரு கடாயில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், (காரம் விருப்பமிருந்தால், ஒன்றிரண்டு பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கி வதக்கி கொள்ளலாம். நான் வீட்டில் சிறு குழந்தைகள் இருப்பதால், காரம் ஏதும் போடவில்லை. (ஆனாலும் அவர்களுக்கு இந்த டிபன் பேரில் அவ்வளவாக நாட்டமில்லை. காரணம் பீட்சா, நூடுல்ஸ் போன்ற புதுவகையான உணவுகளை அவர்கள் சுவைத்ததினால், இந்த பாரம்பரிய உணவை குறித்து ஆயிரம் வியாக்கியானம் அளித்தும் அவர்கள் அதை செவி கொடுத்து கேட்பதற்கு தயாராக இல்லை.....ஹா ஹா ஹா. ) மாவு கரைசலை விட்டு கிளறிக் கொள்ளவும். உருண்டை பிடிக்கும் பக்குவத்தில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு மாவு ஒரளவு ஆறிய பின் உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். 


ஒரு அடி கெட்டியான பாத்திரத்தில்  பச்சை தண்ணீர் வைத்து அது கொதித்ததும், இந்த உருண்டைகளப் பாதியைப் போட்டு உடனே கிளறி விடாமல் வேக விடவும். 


அது வெந்ததும் மீதமுள்ள உருண்டைகளையும் அந்த நீரிலேயே போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம். அப்போது அந்த நீரும் குடிப்பதற்கு ஏதுவாக ருசியுடன் இருக்கும். 

                               

முதல் ஈடு வேக வைத்து எடுத்த உருண்டைகள். 


வெந்து விட்டதா எனப் பார்க்க ஒரு உருண்டையை எடுத்து ஸ்பூனினால் வெட்டி பார்க்க உள்ளே அந்த மாவின் வெள்ளை கலரின்றி அடையாளம் தெரியும். 


 இப்போது உருண்டைகளை அந்த வெந்த நீரையும் சேர்த்துக் கொண்டு சாப்பிடலாம். பொதுவாக இது சூடாக சாப்பிடுவதை விட  நன்றாக ஆறிய பின் மிகவும் ருசியாக இருக்கும். காரம் வேண்டுமென்றால் ஏதாவது துவையலுடன் சேர்த்து சாப்பிடலாம். இனிப்பாக வேண்மென்பவர்கள் வெல்லம் கரைத்து வடிகட்டி கொதிக்க வைத்த பாகை சிறிதளவு சேர்த்து சாப்பிடலாம். கொஞ்சம் அதிலேயே காய்ச்சிய பாலையும் விட்டுக் கொண்டால், பால் கொழுக்கட்டை சாப்பிடும் எண்ணத்துடன்அமைத்து விடும். (தனியாக அதற்கென மெனக்கெட வேண்டாம். வாசனைக்காக முதலில் போடும் கடுகையும், காரங்களையும் தவிர்த்து விட வேண்டும். ஒரே கல்லில்" வசனம் நினைவுக்கு வருகிறதா? ஹா.ஹா.ஹா ) 

 ஏற்கனவே இதைப்போல் ஒரு ரெசிபியை சகோதரி கீதாரெங்கன் அவர்கள் நன்கு விபரமாக திங்கப் பதிவில் எழுதியிருக்கிறார்கள்.  அவர்கள் அளவுக்கு நான் திறமையாகவும், விளக்கமாகவும் சொல்லவில்லையென்றாலும்," அடாடா சகோதரி.. நானும் இந்த ரெசிபியை பாதி எழுதியும், எழுதாமலும் வைத்திருக்கிறேனே " என அவர் பதிவு வெளி வந்த அன்று கருத்துரையில் நான் சொன்ன போது "நீங்களும் உங்கள் பக்குவம் பிரகாரம் சொல்லுங்கள் கமலாக்கா" என அவர்கள் அன்று சொன்னதின் பேரில் எனக்குத் தெரிந்த மாதிரி எழுதியுள்ளேன். நன்றி சகோதரி. இதையும் படித்து ரசித்ததற்கு உங்களனைவருக்கும் என் அன்பான நன்றிகள். மற்றும் இதை வெளியிடும்  எ.பி ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள். 

43 கருத்துகள்:

  1. எனது அம்மா அடிக்கடி செய்வார்கள். படங்களுடன் விவரங்கள் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள். முதலில் வந்து படங்களுடன் பதிவை ரசித்துப் படித்து கருத்துக்கள் தந்தமைக்கு மிக்க நன்றி. தங்கள் அம்மாவும் அடிக்கடி இதைச் செய்து இந்த உணவை தாங்கள் சாப்பிட்டிருப்பதற்கு மகிழ்ச்சி. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    தாங்கள் இன்று என் ரெசிபியை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி. இந்தப்பதிவுக்கு வந்து பல ஊக்கம் தரும் கருத்துக்கள் கூறப்போகும் எனது சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. அன்பின் வணக்கங்களுடன்..

    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  5. அதிக சிரமம் இன்றி எளிதில் தயாரிக்கக் கூடியது.. உடலுக்கு இன்னல் தராத உணவு..

    சிறப்பான செய்முறைக் குறிப்புகளுடன் இன்றைய பதிவு அருமை..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      /அதிக சிரமம் இன்றி எளிதில் தயாரிக்கக் கூடியது.. உடலுக்கு இன்னல் தராத உணவு../

      உண்மை. நாங்கள் சிறுவயதாக இருக்கும் போது தினமும் இட்லி, தோசைகளுடன் எப்போதாவது வரும் இவ்வித உணவை விருப்பப்பட்டு எதிர்பார்த்து சாப்பிட்டுள்ளோம். இதற்கு "அம்மம்மா கொழுக்கட்டை" எனவும் பெயர் சூட்டி வரவேற்று இருக்கிறோம். சப்பாத்தி, பூரி இவைகள் எங்களுக்கு அப்போது அரிதாகத்தான் கிடைக்கும். தினமும் காலை இட்லிதான். அதுதான் உடலுக்கு தீங்கு தராதது என்ற பெரியவர்களின் சொல்படி வாழ்ந்து வந்திருக்கிறோம்.
      ஆனால் இன்றைய காலகட்டத்தில், இவ்வித உணவுகள் எவருக்குமே பிடிக்காதது.

      உங்களின் பாராட்டான நல்லதொரு கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      நீக்கு
  6. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள். தொற்றுக் குறைந்திருப்பதாக 2 நாட்களாகச் செய்தியில் சொல்கின்றனர். அது தொடரப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  7. இதே மாதிரி மாவு அரைச்சுக் கிளறிப் பால் கொழுக்கட்டைப் பண்ணி இருக்கேன். ஆனால் இந்தக் கொழுக்கட்டை என்னமோ எங்க வீட்டில் யாருக்கும் பிடிக்கலை. ஆகவே பண்ணுவதில்லை. என்றாலும் ஒருநாள் கொஞ்சமாகப் பண்ணிப் பார்க்கணும். நான் தான் சாப்பிடணும். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      பால் கொழுக்கட்டையும் இதே பக்குவந்தான். கொஞ்சம் உப்பு காரம் குறைவாக இருக்கும் இந்த உணவு யாருக்குமே பிடிக்காததுதான். இதிலேயே மாற்றாக பால் கொழுக்கட்டையும் செய்யலாம் என இறுதியில் சொல்லியுள்ளேனே... தாளிக்காமல், விட்டால் சேவை மாதிரி பிழிந்து அதில் விதவிதமாகவும் செய்யலாம். ஆக எல்லாமே திப்பிசங்கள் சிறப்பாகச் செய்யும் நம் கையில்தான் உள்ளது. உங்களுக்கு தெரியாததா?

      நீங்களும் இந்த மாதிரி கொஞ்சமாக செய்து சாப்பிடலாம் எனச் சொன்னது மகிழ்வாக உள்ளது. நீங்கள் மட்டும் இரண்டு எடுத்துக் கொண்டு உங்கள் கணவருக்கு சூடாக இருக்கும் போதே சேவையாக பிழிந்து தந்து விடுங்கள்.:))) உங்களின் அன்பான வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  8. நேற்று முழுவதும் காலையில் வேலைகள் இருந்தாலும் மதியம் உட்கார்ந்தாலும் இணையம் படுத்தல் தாங்கலை. ஜிமெயிலே திறக்கவே இல்லை. வலைப்பக்கம் சுத்தம். முகநூல் போனாலும் அங்கேயும் போயிட்டுப் போயிட்டு வந்தது. :( இன்னிக்குப் பிள்ளையாரை வேண்டிக் கொண்டு வந்திருக்கேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விநாயகன் விக்னம் விலக்கட்டும்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      விநாயகர் அருள் அனைவருக்குமே பரிபூரணமாக கிடைக்கட்டும் என நானும் வேண்டிக் கொள்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  9. நானும் தி/கீதா இதே செய்முறை போட்டிருந்தாங்களே என நினைத்துக் கொண்டேன். இது செட்டி நாட்டில் சிறப்பு உணவு என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      ஆம்.. இது ஏற்கனவே சகோதரி கீதா ரெங்கன் அவர்கள் செய்து வெளியிட்டு விட்டார்கள் என நானும் கூறியுள்ளேன்.. அப்போதே இந்தப்பதிவை எ. பிக்கு அனுப்பத்தான் நான் பாதி தொகுத்தும், தொகுக்காமலும் வைத்திருந்தேன். அவர்களின் ஊக்குவிப்பால் மறுபடி நிறைவு செய்து இங்கு அனுப்பினேன். அவர்கள் அளவுக்கு இதில் திறமையாகவோ, இதில் பயன்படுத்தும் அரிசிகளைப்பற்றியோ விலாவாரியாக நான் எழுதவில்லை. ஏதோ.. என் போக்குப்படி ஒரு பதிவாக உருப்பெற்று இங்கு வந்து அமர்ந்துள்ளது. சகோதரி யையும் இரண்டு தினங்களாக காணவில்லை. வேலைகள் அதிகம் போலிருக்கிறது.

      இந்தப் பதிவுக்கு வந்து தந்த தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம். நீர்க்கொழுக்கட்டை ஏற்கனவே வந்திருக்கிறேன் என்று நினைத்தேன். எங்கள் வீட்டில் பால் கொழுக்கட்டையை விரும்பும் அளவிற்கு இதை விரும்புகிறவர்கள் குறைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு வி ச நாளில் செய்யப்படும் இ கொழுக்கட்டை & உ கொழுக்கட்டை மட்டுமே பிடிக்கும்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      பெயரில்லா என்ற பெயரில் வரும் உங்கள் கருத்துக்களை எ. பியில் அடிக்கடி பார்த்துள்ளதால், நீங்கள் பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களாகதான் இருக்க வேண்டுமென நினைக்கிறேன்.

      ஆம். இது சகோதரி கீதாரெங்கன் அவர்களால் முன்னரே எ. பியில் வந்த ரெசிபிதான். மேலே சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் கருத்துக்கும் இதையே பதிலாக தந்துள்ளேன்.

      வெறும் சுவையேதும் இல்லாத இப்பண்டம் சிலருக்கு பிடிக்காததுதான். ஆனால் உடலுக்கு எளிதில் ஜீரணமாகும் ஒரு உணவு. இதையே நம் விருப்பபடி மாற்றியும் செய்து கொள்ளலாம்.

      தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வணக்கம் கெளதமன் சகோதரரே

      இ. கொவையும், உ. கொவையும் உலகில் விரும்பாதவர் உண்டா?:)
      ) அது தினமும் செய்தால் கூட ஒன்றிரண்டு எடுத்துக் கொள்ளலாம் என்ற ஆசை வருவது இயல்புதானே... இதையே வெல்லம் சேர்த்து இனிப்பாகவும் மாற்றிச் செய்து சாப்பிடலாம். தங்கள் கருத்துக்கும் என் அன்பான நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  12. திருப்பதியில் இருக்கிறேன். துவாதசி.. நீர்கொழுக்கட்டை... அப்புறம் எடுத்துக்கறேன் கஹ மேடம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நிதானமாக வந்து நீர்கொழுக்கட்டையை பார்த்து ரசியுங்கள். அவசரமேயில்லை. அருமையான பயணமாக அமைந்திருக்கும் திருப்பதி வெங்கடேஸ்வரர் தரிசனத்தில் இருந்தாலும் என் பதிவுக்கு வந்து தாங்கள் கருத்து தந்தது கண்டு என் மனம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறது.

      நானும் பாலாஜியை மிகவும் விசாரித்ததாக கூறுங்கள். என் பக்தியுடன் கூடிய பணிவான நமஸ்காரங்களை அவரிடம் தெரிவியுங்கள். எங்கள் அனைவருக்காகவும் பிராத்தனைகள் செய்யும் உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  13. பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்திற்கும் என் மனமார்ந்த நன்றி.

      /எளிதான செய்முறை... அருமை.../

      ஆம் எளிதான செய்முறை. உடல் நலம் பாதுகாத்து எளிதில் ஜீரணமாக்கும் உணவு.
      அருமை என்ற தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இதற்கு வரிசை கிரமமாக நான் தங்களுக்கு நன்றி தெரிவித்து பதில் கருத்து தந்திருந்தேன். அதைக் காணவில்லையே? நீர் கொழுக்கட்டை நீரில் அதுவும் கரைந்து போய்விட்டது போலும்.:)))
      போகட்டும்..

      இது எளிதான உணவு மட்டுமில்லாமல் எளிதில் ஜீரணமாகும் உணவும் கூட.. தங்களின் அன்பான கருத்துக்கும், அருமை என்ற பாராட்டிற்கும் என் மனம் நிறைந்த மகிழ்வுடன் கூடிய நன்றிகள் சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  14. நீர் கொழுக்கட்டை படங்களுடன் செய்முறை நன்றாக இருக்கிறது.

    //அரிசியும் தேங்காயும் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுத்த (ரொம்ப நைசாகவும் இல்லாமல், பரபரவென்றும் இல்லாமல் அரைக்க வேண்டும்.) //

    இது மிகவும் அவசியமான குறிப்பு. அம்மா சொல்வார்கள் மிகவும் நைசாக அரைக்க கூடாது, பிறு பிறு என்று அரைக்க வேண்டும். மிகவும் வழு வழு என்று உருட்ட கூடாது, கொஞ்சம் கிள்ளி போட்டது போல உருட்டி வேக வைக்க வேண்டும் என்று.

    அளவாக வேக வைக்க வேண்டும் அதிகம் வெந்தால் கொழுக்கட்டை கட்டை மாதிரி ஆகி விடும் பூ போல இருக்காது என்று அம்மா சொல்வார்கள்.

    சிறு வயதில் அம்மாவீட்டில் வாரம் ஒரு நாள் உண்டு.
    கொழுக்கட்டை நாலு ஐந்து சாப்பிட்டு கொழுக்கட்டை வெந்த தண்ணீரில் வெல்லம், ஏலக்காய் , தேங்காய்பூ போட்டு கொதிக்க வைத்த நீரை கொஞ்சம் குடித்தால் போதும் வயிறு நிறைந்து விடும்.

    அப்பாவிற்கு இது பிடிக்காது என்பதால் அம்மா தேங்காய் , சிவப்பு மிளகாய் அரைத்த கலவையில் சிறு கொழுக்கட்டையை போட்டு கொஞ்சம் நெய் விட்டு தாளித்து கொடுப்பார்கள். அப்பாவிற்கு மிகவும் பிடிக்கும்.
    சின்ன சின்னதாக உருட்டி ஆவியில் வேக வைத்தும் தாளித்து கொடுப்பார்கள் .
    உங்கள் பதிவு என் சிறு வயது நினைவுகளை மீட்டது.
    எங்கள் வீட்டிலும் என் கணவருக்கு தாளித்த கொழுக்கட்டை தான் பிடிக்கும் அப்பாவுக்கு செய்வது போல செய்து கொடுப்பேன்.
    என் குழந்தைகள் இரண்டையும் விரும்பி சாப்பிடுவார்கள். கொழுக்கட்டை அரைத்து செய்தால் சுவைதான். அரிசு மாவு வைத்து வைத்து செய்வது வேறு சுவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் விரிவான நல்லதொரு கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

      ஆமாம் அப்போது கல்லுரலில் அரைக்கும் போதே இதன் பக்குவம் பற்றி எங்கள் அம்மா சொல்லி தந்திருக்கிறார்கள். . சேவைக்கு அரைக்கும் போது நைசாக அரைக்கவேண்டும். நாங்கள் சேவைக்கு தயார் செய்யும் போதும் இவ்விதமாக கொழுக்கட்டைகள் செய்துதான் பிழிவோம். அம்மா வீட்டில் முறுக்கிக் பிழியும் நாழி இல்லை. (அப்போது அது பயன்பாட்டுக்கு வரவில்லையோ என்னவோ தெரியவில்லை) மரத்தில் கண் ஓட்டைகள் உள்ள சேவை நாழியை பதித்து, அதில் மரத்தினாலான அதற்கேற்ற பொருத்தமான கட்டையை வைத்து அழுத்தி சேவைகள் செய்வோம். இப்போது விதவிதமாக சேவை நாழிகள் வந்து விட்டன. இதை செய்ய சோம்பலாக்கும் வண்ணம் பாக்கெட்டில், தீடீர் சேவைகள் வந்து விட்டன. வாங்கினோமா, வெந்நீரில் ஊற வைத்தோமாவென வேலைகளை சுலபமாக்கும் வண்ணம் வந்து விட்டன.

      நான் இதேயே சேவையாக செய்யலாம் என கூறியுள்ளேன். அதற்கும் கண் சற்று பெரிதாக இருக்கும் சேவை நாழிதான் அதிக பயனுள்ளதாக அமையும். இல்லையென்றால் கொஞ்சம் கடினந்தான். இல்லையென்றால் மாவை சற்று நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

      உங்கள் வீட்டிலும் இது விருப்பமான உணவு என்றதற்கும், நீங்களும் இதையே விதவிதமாக செய்து தந்திருப்பது கண்டும் மகிழ்ச்சியடைகிறேன். நம் காலம் வேறு.. கால மாற்றத்திறகேற்ப இப்போது இந்த உணவு அவ்வளவாக குழந்தைகளுக்குப் பிடிப்பதில்லை. பூரி, சப்பாத்திதான் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். என்றோ ஒரு நாள் செய்து அதையும் நாம்தான் விரும்பி சாப்பிட வேண்டியதாயிருக்கிறது. ஹா.ஹா.ஹா..

      இன்றைய பதிவு தங்களின் மலர்ம் நினைவுகளை மீட்டியதற்கு மிக்க மகிழ்ச்சி. பதிவை ரசித்துப் படித்து தந்த தங்களின் அன்பான விபரமான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  15. பொதுவாக கொழுக்கட்டை என்றாலே பிடிக்கும். நீர் கொழுக்கட்டை மிகவும் பிடிக்கும். ஆனால் பாஸ் செய்யமாட்டார். யார் அடுப்பில் கிண்டுவது என்று செய்ய மாட்டார்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களுக்கும் இவ்வகை உணவு பிடிக்கும் என சொன்னதற்கு மகிழ்ச்சி. ஆமாம் கை விடாமல் கிண்டுவது கொஞ்சம் சிரமமான செயல்தான். மிகவும் கெட்டியாக மாவை அரைத்துக் கொண்டால் கிளறாமல் அப்படியே போடலாம். ஆனால் அது கல்லுரலில் மட்டுமே அவ்வாறு அரைக்க முடியும். மிக்ஸி, கிரைண்டர் எல்லாம் மாவரைக்க கொஞ்சம் கூடுதலாக தண்ணீர் கேட்கும். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. ஆவியில் வேக வைத்து தான் வழக்கம் இம்மாதிரி செய்ததில்லை அன்புடன்

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      தங்களின் அன்பான வருகையும், கருத்தையும் கண்டு மனம் நிறைந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

      சேவை செய்யும் போது ஆவியிலும் வேக வைத்தும், நீரிலும் கொழுக்கட்டைகளாக உருட்டிப் போட்டு செய்வோம் இல்லையா? அது மாதிரிதான் இந்த ரெசிபியும். ஒருநாள் இப்படியும் செய்து பாருங்கள்.

      உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  16. நீர் கொழுக்கட்டை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகையும், கருத்தும் மகிழ்ச்சியை தருகிறது. தங்கள் கருத்துக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  17. கமலாக்கா நீர்க்கொழுக்கட்டை நன்றாக வந்திருக்கிறதே...ஏன் நான் செய்வது போல் இல்லை என்றெல்லாம்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு தினுசாகச் செய்வதுதானே அக்கா. நீங்கள் செய்யும் முறைதான் நானும் செய்வது...

    நம் வீட்டில் நீர்க்கொழுக்கட்டை ரொம்பப் பிடிக்கும் எல்லோருக்குமே. அந்தப் புழுங்கலரிசி மணம் தேங்காய் எண்ணை எல்லாம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

      எனக்கும் நன்றாகத்தான் வந்தது. நான் சொல்ல வந்தது உங்களைப் போல் விதவிதமான அரிசிகளை குறிப்பிட்டு அதன் பக்குவங்களை குறித்து சிறப்பாக எழுதவில்லை என்பதே.. வேறு ஒன்றுமில்லை.

      தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!