ஏழைக்கு ஏழை..
துரை செல்வராஜூ
மெதுவாகக் கதவைத் திறந்த சேகர் காலணிகளை வெளியிலேயே விட்டு விட்டு அறைக்குள் நுழைந்த போது விடியற்காலை மூன்றரை மணி..
தோளில் இருந்த பையை கட்டிலின் மீது வைத்து விட்டு ..
வெளியில் இருந்த அட்டைப் பெட்டிகள் இரண்டையும் எடுத்து வந்து உள்ளே வைத்தான்.. அறைக் கதவை மறுபடியும் சாத்தினான்..
சலசலப்பைக் கேட்டு விழித்தெழுந்த வீரையன்,
" வா.. சேகரு.. ஊர்ல எல்லாரும் சௌக்கியமா?.. எமிரேட்ஸ்..ல வந்தியா!.. " - என்றார், கண்களைத் துடைத்துக் கொண்டே...
" ஆமா.. அண்ணே.. எல்லாரும் சௌக்கியந்தான்.. உங்க தூக்கம் கெட்டுடக் கூடாது.. ன்னு நெனச்சேன்... "
" அதுக்கென்ன... இன்னிக்கு தான் லீவு ஆச்சே.. " - என்றபடி எழுந்து வெளியே கழிவறைக்குச் சென்று வந்தார்..
அதற்குள் வேஷ்டிக்கு மாறியிருந்த சேகர் அட்டைப் பெட்டியை பிரிக்க ஆரம்பித்தான்..
" ம்... மூணு மாச லீவு காத்து மாதிரி ஓடிப் போயிருக்கு.. ஆனா நீ தான் எங்கள ஏமாத்திட்டே!... "
திடுக்கிட்ட சேகர் நிமிர்ந்து பார்த்தான்...
" உங்கல்யாணத்தைச் சொன்னேன்.. " - மெலிதாகச் சிரித்தார்..
சற்று நேரம் மௌனமாக இருந்தான் சேகர்..
" ரெண்டு வருசமா அனுப்புன பணத்துல - அந்தக் கடன கொடுத்தேன்.. இந்தக் கடன கொடுத்தேன்..ன்னு அப்பா கணக்கு சொல்றார்.. அம்மா வாயில்லா பூச்சி.. என்னன்னு கேக்கிறது.. புதுசா ரெண்டு கறவ மாடு வாங்கிக் கட்டியிருக்காங்க.. சைக்கிள்.. ல போயி பால் கொடுத்த வரைக்கும் பிரச்னையில்லை.. எக்செல் வேணும்.. ன்னு வாங்கி மூணாம் நாளே வண்டியோட போய் வாய்க்கால்..ல விழுந்து... "
" அடடே!.. " - வீரையன் முகத்தில் அதிர்ச்சி..
" அப்பாவுக்கு ஒன்னும் அடிபடலை.. இருந்தாலும் வெட்டிச் செலவு.. தங்கச்சியோட படிப்பு ஒன்னு தான் உருப்படியா இருக்கு.. அம்மா கட்டிப் புடிச்சிக்கிட்டு அழுவுறாங்க.. எப்படியாவது கலாவை கரையேத்திடு..ன்னு.. வீட்டுக்கு முன் கூடம் எடுத்து கட்டி இருக்காரு.. பின் கட்டு அப்படியே கெடக்கு.. "
ஒரு நிமிடம் நிறுத்திய சேகர் மீண்டும் தொடர்ந்தான்..
" போனதுமே ரெண்டு மூனு சம்பந்தம் வந்துச்சு.. நெனச்சிருந்தா முடிச்சிருக்கலாம்... எனக்கென்னமோ இஷ்டம் இல்லை.. "
" ஏன்!?.. " - வீரையனுக்கு வியப்பு..
" வீடு இருக்கிற இருப்புல அவசர அவசரமா கல்யாணம் கட்டி ரெண்டு மாசம் வாழ்ந்துட்டு பொட்டியத் தூக்கிக்கிட்டு இங்கே வர்றது அந்தப் பொண்ணுக்கு செய்யிற பாவம்.. ன்னு தோணுச்சு.. "
" சம்சாரி வாழ்க்கையில எந்தப் பக்கம் போனாலும் இடி தான்.. மிதி தான்!.. " - என்றார் வீரையன்..
" எங்கே மணி?.. ஊருக்கு போய்ட்டானா!.. " - எதிர்க் கட்டிலை சுட்டிக் காட்டியபடி கேட்டான் சேகர்..
" நீ போன மறு வாரமே கெளம்பிட்டான்... ஊருக்கு வந்ததும் உனக்கு போன் செய்றேன்..னு சொன்னானே!...
" செய்யாதது வரைக்கும் நல்லது தான்!.. " - சிரித்துக் கொண்ட சேகர் அதிரசம் முறுக்கு சீடை என்றிருந்த பையை எடுத்து வீரையனிடம் நீட்டினான்..
" வீட்டுக்குப் போனியா?.. " - என்றபடி பையை வாங்கிக் கொண்டார் வீரையன்..
" போகாம இருப்பனா!.. " - சேகர்..
" வேஷ்டி துண்டு கேட்டிருந்தேன்.. விபூதி கேட்டிருந்தேன்.. "
" அதெல்லாம் அந்தப் பெட்டியில் இருக்குது.. "
வீரையன், சேகர், மணி - மூவருமே வளைகுடா நாட்டின் கேட்டரிங் கம்பெனி ஒன்றில் துப்புரவு செய்யவும் குப்பை அள்ளிப் போடவும் வந்தவர்கள்..
பொன் விளையும் பூமி.. வரப்பும் வாய்க்காலும் சோறு போடும்.. ஆனாலும், சூழ்நிலை அப்படியில்லை..
வெள்ளாமை செய்றதுல ஏகப்பட்ட பிரச்னை.. வேலைக்கு ஆட்கள் வருவதில் இருந்து கண்டுமுதலை விற்றுக் காசாக்கி கடனை அடைப்பது வரைக்கும் எத்தனை எத்தனையோ!.. எல்லாம் அரசியல்.. அரசியல்..
மாடு சுணக்கமா இருந்தா கசாப்புக் கடைக்காரன் கத்தியோட வந்து நிற்கிறான்..
வயக்காடு சுணக்கமா இருந்தா மனைக் கட்டுக்காரன் மண் வெட்டியோட வந்து நிற்கிறான்..
ஊருக்கு ஊர் இஞ்சிநீர் காலேஜ்.. பசங்க படிக்கப் போறது எல்லாம் டாக்டருக்கு... சொல்றதுக்கு ஒன்னும் இல்லை..
சேகருக்கு சொந்த ஊரு நீடாமங்கலத்துக்குப் பக்கம்.. ஊருக்கு அந்தப் பக்கம் ஒரு ஆறு.. இந்தப் பக்கம் ஒரு ஆறு.. ஆனாலும் சோறு போட்ட பூமி நாலு வழிச் சாலைக்குள்ளே நசுங்கிப் போச்சு..கிழிஞ்ச துணி மாதிரி ஒரு ஓரம் மட்டும் மிச்சம்.. வீட்டுக்கு மட்டும் விளைச்சல்.. ன்னு ஆகிப் போச்சு..
வீரையனுக்கும் மணிக்கும் பட்டுக்கோட்டைக்குப் பக்கம்.. அங்கேயும் இந்தக் கதை தான்.. மழை இல்லை என்றால் தென்னங் குருத்து காய்ந்து போகும்.. மழையும் காற்றும் என்றால் மரமே சாய்ந்து போகும்..
என்னவோ உள்ளாட்சி நல்லாட்சி.. ன்னு போனவன் எல்லாம் குபேரனுக்குக் கூட்டாளி ஆயிட்டான்.. சர்க்கார் வேலைக்குப் போனவன் எல்லாம் சாஸ்வதமா ஆகிட்டான்.. இடை மடையாக் கிடந்தவன் தான் கந்தைத் துணியா கசங்கிட்டான்..
" என்ன சேதி சொல்லி விட்டா.. பையன் எப்படியிருக்கான்?.. " வீரையனின் ஆவல்..
" என்னைப் பார்த்ததுமே அக்கா அழுதுட்டாங்க.. "
" நா உடம்பு சரியில்லாம லீவுல இருந்ததைச் சொன்னியா?.. "
" நான் சொல்லுவேனா!.. அக்கா மனசுல அந்த அளவுக்கு உளச்சல்... "
சட்டென வீரையனின் கன்னத்தில் கண்ணீர்..
" சந்திராவுக்குத் தான் எவ்வளவு கஷ்டம்.. எனக்கு ஒடம்பு சரியில்லாம இருந்தது மட்டும் அவளுக்குத் தெரிஞ்சிருந்தா பெரிய கலவரமே ஆயிருக்கும்.. "
சேகர் தொடர்ந்தான்..
" உங்களுக்கு ஒரு மாசம் சம்பளம் இல்லாம இருந்தது அக்காவுக்கு தெரியாதே.. அதனால, வீட்டுக்கு ஏன் பணம் அனுப்பலை?.. ன்னு கேட்டாங்க... ரெண்டு மாசமா கம்பேனியில யாருக்கும் சம்பளம் போடலை.. இப்போ தான் கொடுத்தாங்க.. ன்னு சொல்லிட்டு, நீங்க என் கையில கொடுத்து விட்டதா சொல்லி பத்தாயிரம் ரூபாய கொடுத்துட்டு வந்தேன்... "
" அது தானா விசயம்!.. நான் போன மாசம் வேலைக்குப் போய் சம்பளம் எடுத்ததும் அனுப்பி வச்சேன்.. நீங்க அனுப்பி வச்ச பணம் கெடைச்சது.. ன்னு மட்டும் ஒரு வரி எழுதியிருந்தா.. அந்த ஒரு மாசம் ஏன் அனுப்பலே.. ன்னு ஒன்னும் கேக்கலை.. அது இப்ப தான் புரியுது.. நல்ல காரியம் செஞ்சுட்டு வந்திருக்கே சேகரு!.. "
வீரையனின் வார்த்தைகள் தடுமாறின..
" ஸ்கூலுக்குப் போயிருந்த பையனை கூட்டிட்டு வந்து காட்டுனாங்க.. பையன் வளர்ந்து இருக்கான்.. மத்தியானம் மீன் கொழம்பு வச்சி சாப்பாடு போட்டாங்க.. கடலக் கொல்லையப் போயி பார்க்க நேரமில்லை.. "
" என்னமோ சேகரு.. ஏழைக்கு ஏழை எடுத்து வச்ச துணை.. ன்னு சொல்லுவாங்க.. ஒனக்கு ஆயிரம் பிரச்னை இருந்தும் என் வீட்டுக்கு ஒத்தாச பண்ணிட்டு வந்திருக்கே.. அந்த மகமாயி ஒரு நாளும் கை விட மாட்டா.. "
வீரையனின் கன்னங்களில் மறுபடியும் கண்ணீர்..
" சரிண்ணே.. மணி நாலரை ஆச்சு.. கீழே டைம் கீப்பர் நிப்பான்.. அவங்கிட்ட பாஸ்போர்ட்ட கொடுத்துட்டு வர்றேன்.. மத்தியானமா வேலைக்கு போகலாம்!.. "
" அட.. சேகரு... நான் மடையன்.. மறந்தே போயிட்டேன்.. உனக்கு இனிமே கிச்சன்ல வேலை இல்லே!.. "
" அப்புறம்!.. "
" ஸ்டோர்ல உனக்கு வேலை போட்டுருக்காங்க!.. அங்க செல்வகுமார் சார் இருக்காரு.. நீ தான் காலேஜ் வரைக்கும் படிச்சவனாச்சே.. வேலை கத்துக்கலாம்!.. சம்பளமும் கொஞ்சம் கூடும்.. ஓவர் டைமும் கிடைக்கும்.. கவலை இல்லே.. மகமாயீ!.. "
கை கூப்பினார் வீரையன்..
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
பதிலளிநீக்குசெய்யாமை செய்யாமை நன்று
தமிழ் வாழ்க..
வாழ்க... வாழ்க,,,
நீக்குஇன்று எனது ஆக்கத்தினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் அழகுக்கு அழகு சேர்த்த சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..
பதிலளிநீக்குஎங்கள் நன்றியும்....
நீக்குஎன் நன்றியும்!
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க...
நீக்குஇன்று கதைக் களம் காண வருகை தரும் அனைவருக்கும் நல்வரவு..
பதிலளிநீக்குவரவேற்போம் அன்புடன்...
நீக்குஅந்த ஊரில் இருந்தவங்களுக்குத்தான் அங்கு சாதாரண நிலையில் உழைக்கும் மக்களின் கஷ்டங்கள் தெரியும்.
பதிலளிநீக்குஎப்படியோ கஷ்டப்பட்டு அனுப்பும் காசைப், பொறுப்பில்லாமல் இங்கே வீண்டிப்பதும், கஷ்டப்படுபவனிடத்திலேயே பொறுப்புகளைத் தள்ளிவிடுவதும், அவனுடைய வாழ்க்கை கருகுவதைப் பற்றி அக்கறை கொள்ளாமல் சுயநலத்தோடு இருந்துவிடுவதும் ... எனப் பல்வேறு வேதனைகள். இதில் ஆறுதல், அந்த ஊரில் அமையும் நல்ல நட்புகள்தாம்.
கடைசியில் இந்தியா திரும்பி வந்தாலும், சுகப்படமுடியாத முறிந்த உறவினர்கள், செலவழித்துத் தேய்ந்துபோன பர்ஸ்.. என்ற நிலைமை
சிறுகதை பல்வேறு உணர்வுகளைத் தொட்டுச் செல்கிறது.
// எப்படியோ கஷ்டப்பட்டு அனுப்பும் காசைப், பொறுப்பில்லாமல் இங்கே வீண்டிப்பதும்//
நீக்குஇதுதான் இங்கே 90℅ குடும்பங்கள நடப்பது.. பிரச்னையின் ஆரம்பப் புள்ளியே இதுதான்..
தங்கள் அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
அனைவருக்கும் காலை/மாலை/மதியம் வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கமலா உடல்நிலை எப்படி உள்ளது? இரண்டு நாட்களாகக் காணோமே! தொடர்பு கொள்ளும் வழியும் தெரியலை.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா .. வணக்கம். பிரார்த்திப்போம். கமலா அக்கா குணமடைந்து வருகிறார் என்று நம்புகிறேன்.
நீக்குஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அவர்கள் விரைவில் குணமடைவதற்கு வேண்டிக் கொள்வோம்..
நீக்குஉள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்லும் நிகழ்வு. கதைனு தாண்டிச் செல்ல முடியாது. பொறுப்பில்லாத் தந்தை இங்கே எனில் மற்ற இடங்களில் தாய், தந்தை, உடன்பிறந்தோர் எல்லோருமே இருப்பார்கள். பல குடும்பங்களின் நிலையைப் பிட்டுப்பிட்டு வைத்து இருக்கார் தம்பி துரை. கண்ணீர் விடுவதைத் தவிர்த்து வேறே என்ன செய்ய முடியும்? வெளிநாட்டில் வேலை பார்த்து உழைப்பவர்கள் அனைவரும் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைப்பவர்களை என்ன சொல்ல முடியும்?
பதிலளிநீக்கு// வெளிநாட்டில் உழைப்பவர்கள் அனைவரும் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைப்பவர்களை என்ன சொல்ல முடியும்?.. //
நீக்குஅக்கா அவர்களது வருகையும் நெகிழ்ச்சியான கருத்தும் நன்றி.. நன்றி..
இன்றைய படம் மனதைக் கவரவில்லை. ஏதோ சிறைச்சாலை அறை போல் இருக்கு. :(
பதிலளிநீக்கு:(((((
நீக்குஇப்படித்தான் ஒரு அறையில் இரண்டு, நான்கு கட்டில்கள் இருக்கும். இதிலாவது ஒரு சிறிய ஃப்ளாட் மாதிரி இருக்கு. சில அறைகளில் (12க்கு 10), 8 பேர் படுக்கும்படியான, ஒரு வரிசையில் 3 படுக்கைகள் மேல்மேல் இருக்கும்படி இருக்கும். படம் சரியாகத்தான் அமைந்திருக்கிறது.
நீக்குபுறாக்கூடு மாதிரியான அறைகள் எல்லாம் உள்ளன..
நீக்குகீழ்நிலை ஊழியர்களது குடியிருப்புகளில் நுழையவே முடியாது..
அரபு நாடுகளின் இருண்ட பக்கங்கள் பலவும் இங்கே இருப்பவர்களுக்குத் தெரிவதே இல்லை..
கௌதம் ஐயா. இன்றைய படத்தில் ரூம் கதவு வெளிப்பக்கம் திறப்பதாக வரைந்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஅதில் தவறு எதுவும் இல்லை. இப்பொழுது நான் உட்கார்ந்திருக்கும் அறையில் கூட, கதவு அப்படித்தான் அமைந்துள்ளது. இரண்டு பக்கமும் சாவி துவாரம் மற்றும் door knob இருக்கும்.
நீக்குதாங்கள் சொல்வது சரி..
நீக்குவளைகுடா நாடுகளில் வேலை செய்வோரின் நிலையயை அப்பட்டமாக எடுத்துக் காட்டும் கதை . ஊரின் நிலையும் அழகாக எடுத்துக் காட்டப்படுகிறது.
பதிலளிநீக்குபடிக்கும் போது அவர்கள் நிலை மனதை தொட்டு நிற்கிறது.
// வளைகுடா நாடுகளில் வேலை செய்வோரின் நிலையயை அப்பட்டமாக எடுத்துக் காட்டும் கதை . ஊரின் நிலையும் அழகாக எடுத்துக் காட்டுகிறது.//
நீக்குஅன்பின் வருகையும் நெகிழ்வான கருத்தும் நன்றி.. நன்றி....
நிகழ்ந்த, நிகழும் உண்மைகள்...
பதிலளிநீக்கு// நிகழ்ந்த, நிகழும் உண்மைகள்..//
நீக்குதாங்கள் அறியாததா ஜி..
மகிழ்ச்சி.. நன்றி..
அன்பின் வல்லியம்மா இந்தப் பக்கம் வருவதே இல்லை.. பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் வெளிநாட்டில்..
பதிலளிநீக்குஇடையில் சில நாட்களாக கோமதி அரசு அவர்கள் கோவைக்குச் சென்று விட்டார்கள்.. கமலா ஹரிஹரன் அவர்களுக்கு உடல் நலமில்லை.. சகோதரி கீதா ரங்கன் அவகளைப் பற்றி யாதொரு செய்தியும் இல்லை..
எபியில் எனக்கான பக்கங்கள் காற்றோட்டமாகக் கிடக்கின்றன..
வருத்தம் தான் மிச்சம்..
துரை அண்ணா நான் தான் தினமும் வந்துகொண்டிருக்கிறேனே. உங்கள் பதிவுக்கும்...
நீக்குஎனக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. பதிவு எழுதி, மற்ற பதிவுகளுக்குக் கருத்து போட்டு வீட்டு வேலைகள், பொறுப்புகள் என்று எல்லாம் சமாளிக்கத் திணறலாக இருக்கிறது. இங்கு வந்தால் வீட்டுப் பொறுப்புகளில் ஏதேனும் விட்டுப் போய்விடுகிறது. வீட்டுப் பொறுப்புகளில் கவனம் சென்றால் இங்கு வர முடிவதில்லை.
கீதா
எனக்கிருந்த குழப்பத்தில் தங்களது பெயரையும் சொல்லி விட்டேன்..மனதில் ஒன்றும் வைத்துக் கொள்ள வேண்டாம்..
நீக்குவல்லிக்கு முகத்தில் கண்ணருகே மரு வந்து வீங்கிப் போய்க் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கார். இப்போ வீக்கம் குறைஞ்சிருக்குனு சொன்னாலும் இன்னமும் இணையத்திற்கு வர முடியலை போல! அனைவர் உடல்நிலையும் விரைவில் சரியாகப் பிரார்த்திப்போம்.
நீக்குகதை அருமை...
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..
கல்ஃப் நாடுகளில் வாழ்பவர்களின் நிலை இப்படித்தான். வீட்டு நிலைமையை உத்தேசித்து, குடும்பத்திற்காக உழைப்பவர்கள் அதிகம். என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் சிறு வேலைகள் செய்பவர்களின் வாழ்க்கை பரிதாபத்திற்குரியது.
பதிலளிநீக்குஅதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் துரை செல்வராஜு சார். நம் நட்புகளிலும் நீங்கள் உட்பட இருந்திருக்கிறீர்களே.
கேரளத்திற்கும் கல்ஃப் நாடுகளுக்கும் பெரிய அளவில் தொடர்பு உண்டு என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். எங்கள் பகுதியில் அதிகம்தான். அதனால் அவர்கள் வாழ்க்கை நிலை தெரியும். நல்ல வேலை செய்பவர்கள் நல்ல பணம் ஈட்டுபவர்கள், பிஸினஸ் செய்பவர்களும் உள்ளனர்தான். எங்கள் பகுதியில் கல்ஃப் தாக்கம் நிறைய உண்டு.
துளசிதரன்
கல்ஃபின் கதைகள் என்றே இன்னும் பல எழுதலாம்.. மனம் வலிக்கின்றது.. எழுதி வைத்திருக்கின்றேன்.. அவ்வப்போது நமது தஞ்சையம்பதியில் வெளியாக இருக்கின்றன..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்து மகிழ்ச்சி.. நன்றி சகோ..
ரொம்பவே யதார்த்தமான கதை துரை அண்ணா. நிஜமாக நடக்கறதுதான்.
பதிலளிநீக்கு//ரெண்டு வருசமா அனுப்புன பணத்துல - அந்தக் கடன கொடுத்தேன்.. இந்தக் கடன கொடுத்தேன்..ன்னு அப்பா கணக்கு சொல்றார்.. அம்மா வாயில்லா பூச்சி.. என்னன்னு கேக்கிறது.. புதுசா ரெண்டு கறவ மாடு வாங்கிக் கட்டியிருக்காங்க.. சைக்கிள்.. ல போயி பால் கொடுத்த வரைக்கும் பிரச்னையில்லை.. எக்செல் வேணும்.. ன்னு வாங்கி மூணாம் நாளே வண்டியோட போய் வாய்க்கால்..ல விழுந்து... "//
இந்த வரிகள் நிறைய நினைவுகளையும் நடப்பதையும் நினைவுபடுத்துகின்றன. பல வீடுகளில் மகனோ மகளோ அனுப்பும் பணத்தில் அந்தக் குழந்தைக்கு சேர்த்து வைக்காமல் செலவு செய்து தங்களை நன்றாக்கிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். வேதனை. அவர்கள் சம்பாதிக்கும் குழந்தைகளின் வாழ்க்கையைப் பத்திக் கொஞ்சம் கூட யோசிப்பதில்லை.
எனக்குத் தெரிந்து ஒரு பெண் குவைத்தில் ஒரு வீட்டில் வேலை செய்கிறாள். அவள் அனுப்பும் பணத்தில் மகளின் மாமியார் குடும்பம் வாழ்கிறது!!!!!!!
//" அப்பாவுக்கு ஒன்னும் அடிபடலை.. இருந்தாலும் வெட்டிச் செலவு.. தங்கச்சியோட படிப்பு ஒன்னு தான் உருப்படியா இருக்கு.. அம்மா கட்டிப் புடிச்சிக்கிட்டு அழுவுறாங்க.. எப்படியாவது கலாவை கரையேத்திடு..ன்னு.. வீட்டுக்கு முன் கூடம் எடுத்து கட்டி இருக்காரு.. பின் கட்டு அப்படியே கெடக்கு//
இப்படித்தான்....
கீதா
// இந்த வரிகள் நிறைய நினைவுகளையும் நடப்பதையும் நினைவு படுத்துகின்றன.//
நீக்குஇப்படியான சோகங்கள் இங்கே நிறையவே உள்ளன.. பலஹீனமானவர்கள் வழி தவறிப் போவதுவும் இதனால் தான்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்து மகிழ்ச்சி..
நன்றி சகோதரி..
கல்ஃப் வாழ்க்கைத் துயரங்கள் பற்றி தம்பி துரை நிறையக் கதைகள் எழுதி விட்டார். அதனால் அவரின் இந்த மாதிரி எந்தக் கதையைப் படித்தாலும் ஏற்கனவே படித்த மாதிரி இருக்கும்.
பதிலளிநீக்குவிக்கிரமாதித்தன் கதைகள் மாதிரி.
வாசகருக்கு அப்படியானால் எழுத்தாளனுக்கு அப்படியில்லை. ஒன்று போல இன்னொன்று இருந்திடாதவாறு ஒரு சிறு துணுக்கு போல் அவற்றில் அவர் காட்டும் வித்தியாசத்தைக் கண்டு கொள்வது தான் வாசித்த்தின் நேர்த்தியாகிறது. தனது மற்ற கல்ஃப் கதைகளிலிருந்து இந்தக் கதையை தம்பி எப்படி வித்தியாசப்படுத்தி இருக்கிறார் என்பதை வாசித்தவரின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.
// ஒன்று போல இன்னொன்று இருந்திடாதவாறு ஒரு சிறு துணுக்கு போல் அவற்றில் அவர் காட்டும் வித்தியாசத்தைக் கண்டு கொள்வது தான் வாசித்த்தின் நேர்த்தியாகிறது...//
நீக்குஆகா... சரியாக கிடுக்கியைப் போட்டு விட்டீர்களே அண்ணா..
எந்த இடத்தில் கதை மாறுபடுகின்றது என்பதையும் தாங்களே சொல்லி விடுங்கள்..
தங்கள் அன்பின் வருகையும் வித்தியாசமான கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி அண்ணா..
வாசித்த -- வாசிப்போகிறவர்கள் யாராவது சொல்கிறார்களா என்று காத்திருப்போம்.
நீக்கு** வாசிக்க போகிறவர்கள்
நீக்கும்ம்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்..
நீக்குஎந்த எழுத்தாளருக்கும் கதைகள் எழுதுவதற்கு பொறி போல ஏதோ ஒரு விஷயம் கிடைத்து விடுகிறது தான். இப்படித் தான் முடிவு இருக்கும் என்று யூகிக்க முடிகிறது
பதிலளிநீக்குஎன்று தனக்குத் தானே ஷொட்டு கொடுத்துக் கொள்கிற மாதிரி பின்னூட்டங்களில் சிலர் சொல்வதுண்டு. இதெல்லாம் சரி தான்.
ஆனால் அந்த முடிவை நோக்கி கதையை நடத்திச் செல்வதில் அந்தக் கதாசிரியன் படுகிற பாடு இருக்கிறதே -- இது தான் எழுதுவோனின் எழுத்துச் சிறப்பு. கதாசிரியனின் இந்த 'எழுதும்' சிறப்பை பின்னூட்டங்களில் எடுத்துச் சொல்லுகிற மாதிரி நம் வாசிப்பு அனுபவம் இருப்பது வாசகரின் வாசிப்பு சிறப்பு.
ஜெஸி ஸார் எழுதும் சனிக்கிழமை பதிவுகளில் கூட எழுதுவோனின் இந்தத் திறமை எடுத்துச் சொல்லப் பாடாதது அந்தப் பகுதியின் பெரும் குறை.
'மாடு சுணக்கமா இருந்தா....நிற்கிறான்.'
'வயக்காடு ... நிற்கிறான்'
'ஊருக்கு ஊர் இஞ்சிநீர் காலேஜ்....
'சோறு போட்ட பூமி நாலு வழிச்சாலைக்குள் நசுங்கிப் போச்சு. கிழிஞ்ச துணி மாதிரி ஒரு ஓரம் மட்டும் மிச்சம்.. வீட்டுக்கு மட்டும் விளைச்சல்னு ஆகிப் போச்சு..'
'உள்ளாட்சி நல்லாட்சின்னு போனவனெல்லாம் குபேரனுக்கு கூட்டாளியாயிட்டான். சர்க்கார் வேலைக்குப் போனவனெல்லாம் சாஸ்வதமாயிட்டான். இடைமடையாய் கிடந்தவன் தான் கந்தைத் துணியாய் கசங்கிட்டான்..'
என்ற நிகழ் உண்மையின் வெளிச்சம் இருக்கே -- அட்சர லட்சம் பெறும்..
புதுமைப்பித்தனின் எள்ளாடல் வேறொரு நேர்த்தியில் தம்பி துரைக்கு கை வந்திருக்கு.
புதுமைப்பித்தன் எழுதினால் தான் 'ஆஹா.. ஊஹூ..' என்போம். தம்பி துரை என்றால் இந்தச் சிறப்புகளெல்லாம் நம் கண்ணிலேயே படாது என்றால்....
ஏற்கனவே சொன்ன பறம்பு மலை கதை தான்;
பறம்பு மலையில் வாழ்வோருக்கு அதன் இயற்கை வளம் பற்றித் தெரியாது என்பது தான்!
இல்லை, ஜெமோ -- எஸ்ரா வகையறாக்கள் தம்பி துரையின் எழுத்துச் சிறப்பை வாசித்துச் சொல்லக் காத்திருக்கிறோமோ -- தெரியவில்லை.
//ஜெமோ -- எஸ்ரா வகையறாக்கள் தம்பி துரையின் எழுத்துச் சிறப்பை வாசித்துச் சொல்லக் காத்திருக்கிறோமோ -- தெரியவில்லை..//
நீக்குஇந்த மாதிரியான ஆசைகள் எல்லாம் இல்லை.. இங்கே வந்து கொஞ்சநேரம் கதை வாசிப்பவர்கள் ஒருவகையில் மன மகிழ்ச்சி அடைய வேண்டும்..
கூடுமானவரை இளங்காலைப் பொழுது இனிமையாக இருக்க வேண்டும்..
கண்ணுக்கு எட்டியவரை கழனிகள் காய்ந்து கிடக்கின்றன.. மழைக் காலத்திலும் குளங்கள் நிரம்புவதில்லை..
ஆண்டான் அடிமை என்று சொல்லி கட்டமைப்பை உருக்குலைத்து விட்டார்கள்..
விளைவு பாலைவன்ம் பங்களாக்கள் பளபளப்பாக மின்னிக் கொண்டிருக்கின்றன..
அந்த ஆதங்கத்தில் விளைந்ததே இந்தக் கதை..
தங்களது அன்பின் விமர்சனத்துக்கு நெஞ்சார்ந்த மகிழ்ச்சி.. நன்றி அண்ணா..
உங்களுக்கு ஆசை இருக்க வேண்டும் என்றில்லை, தம்பி.
பதிலளிநீக்குகோர்வையாக ஒரு கதை எழுதுதல் என்பது எழுதுபவரின் உள் மன எழுச்சிகள் சம்பந்தப் பட்டவை. உடல், பொருள், ஆவி என்று சொல்கிறோமே அதில் மூன்றாவது சமாச்சாரம்.
வாசிக்கும் பொழுதே எழுதியவனின் உணர்வுகளோடு ஒன்றரக் கலக்கும் விஷயம்.
அதனால் அது பற்றி சொல்ல நேர்ந்தது.
எப்படியோ தங்களது மதிப்பீட்டுக்கு ஆளாகி விட்டது கதை.. அந்த அளவில் மகிழ்ச்சி.. நன்றி அண்ணா..
நீக்குஎழைக்கு எழை - கதை மிக அருமை. சக மனிதரின் மேல் வைக்கும் அன்பு விலைமதிப்பற்றது என்பதை உணர்த்தும் தங்களின் முத்திரை கதை! இத்தகைய செல்வத்தினை பெற்றவர்கள் எளிமையான மனிதர்களே!
பதிலளிநீக்கு// ஏழைக்கு ஏழை - கதை மிக அருமை. சக மனிதரின் மேல் வைக்கும் அன்பு விலைமதிப்பற்றது//
நீக்குதங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்திற்கு நன்றி..