சனி, 31 டிசம்பர், 2022

Positive + நான் படிச்ச கதை (JK)

 

இவர் பூங்கொடி. மலைவாழ் கூலித்தொழிலாளி. இரண்டு நாட்களுக்கு முன்பு வங்கிக்கு வந்திருந்தார். 'என்னோட போன் நம்பர்க்கு மத்தவங்க பணம் அனுப்புற மாதிரி பண்ணிக்குடுங்க சார்' என்று கேட்டார். முதலில் புரியவில்லை. பிறகு அவர் UPI பதிவு, அல்லது Gpay, phonepe மாதிரியான செயலிகளை பதிவு செய்துத் தரசொல்கிறாரென புரிந்துகொண்டேன். தவிர இதற்காக கடந்த மாதம்தான் ஆன்ட்ராய்டு போனை வாங்கியிருக்கிறார். பரிசோதித்துப் பார்த்ததில் அவருடைய ஒரே எண் வேறு இரண்டு கணக்குகளிலும் இணைக்கப்பட்டிருந்ததால் UPI பதிவு செய்வதில் சிரமமிருந்தது.

அதனால் மற்ற கணக்குகளிலிலிருந்து அவரது எண்ணை நீக்குவதற்கு முயற்சி செய்து ஒன்றிலிருந்து நீக்கியாயிற்று. மற்றொரு கணக்கு வேறொரு கிளையிலிருந்ததால் அதிலிருந்து நீக்குவது பிரச்சினைக்குரியதாக இருந்தது. அதனால் அவரை அடுத்தநாள் வரச்சொல்லிவிட்டு, சம்மந்தபட்ட கிளையில் அழைத்துப் பேசியிருந்தேன்.
அவர் இன்று வந்திருந்தார். எதற்காக அவருக்கு UPI பதிவு தேவைப்படுகிறதென விசாரித்தேன். அடுத்தவாரம் 'புதுடில்லி பிரகதி மைதான்' தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெறவிருக்கிற 'சர்வதேச மரபுசார் மற்றும் பாரம்பரிய உணவுப்பொருட்கள் சந்தைப்படுத்துதல் கண்காட்சிக்கு' 'ஒரு மாவட்டம் ஒரு விளைபொருள்' திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக தேர்வாகியிருப்பதாகச் சொன்னார். 'கொல்லிமலை மிளகை' சந்தைப்படுத்துவதற்காக டில்லி செல்லவிருப்பதாகச் அவர் சொன்னபோது அவ்வளவு ஆச்சர்யமாக இருந்தது.
அவரிடம் சொந்தமாக மிளகுத்தோட்டமோ, மற்ற எந்த விளைநிலங்களோ இல்லை. சாதாரண கூலித்தொழிலாளியான இவர், தன்னுடைய மக்களின் உழைப்பை சந்தைப்படுத்தி கவனமீர்க்க வேண்டுமென்பதற்காக இதுபோன்ற விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் கண்காட்சிக்குத் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறார். இப்போதுதான் அவருக்கு UPI பதிவின் அவசியம் புரிந்தது. அதனால் Gpay, phonepe மற்றும் எங்கள் வங்கியின் செயலிகளை பதிவுசெய்து எப்படி உபயோகிக்க வேண்டுமென சொல்லிக்கொடுத்ததோடு வங்கிக் கணக்குக்கு QR code ஒன்றை உருவாக்கி laminate செய்து கொடுத்தேன்.
நீங்கள் உங்கள் போன் நம்பரைச் சொல்லி பணம் பெறுவதைக் காட்டிலும், வாங்குபவர்களிடம் இதை scan செய்து பணம் பெறுவது மிக எளிது என்று புரியவைத்தேன். நான் மற்றும் இன்னும் இரண்டு நபர்களை அந்த QR code ஐ scan செய்து கொஞ்சம் பணத்தை அனுப்பிக்காட்டினேன். அட, இது ரொம்ப வசதியா இருக்கே சார் என்று சந்தோஷபடலானார்.
இதனால உங்களுக்கு என்ன லாபம் என்று கேட்டேன். லாபமெல்லாம் ஒன்றுமில்லை, என்னுடைய மக்களின் விளைபொருளை சந்தைப்படுத்த வேண்டும். அதனால் அந்த பொருளும் மக்களும் கவனம் பெறவேண்டுமென அவர் சொல்லும்போது உண்மையிலேயே கண்கள் ஈரமாகியிருந்தன. எவ்வளவு மிளகு எடுத்துட்டு போறீங்க என்று கேட்டபோது 300 கிலோ எடுத்துட்டு போவதாகக் கூறினார். அதை சந்தைப்படுத்தி விற்று வருகிற பணத்தை சம்மந்தபட்ட விவசாயிகளிடமே கொடுப்பதாகக் கூறினார். அதற்காக வட்டார அளவிலான வறுமை ஒழிப்புச் சங்கத்திலிருந்து அவர்களாக பார்த்துத் தருகிற கொஞ்சம் ஊதியத்தை மனதாரப் பெற்றுக்கொள்வதாக நெகிழ்ந்தார்.
இங்க இருந்து அவ்வளவு பொருள எப்படி எடுத்துட்டு போவீங்க என்று கேட்டதற்கு, சென்னை வரை வாடகை வண்டியில் எடுத்துச்சென்று அங்கிருந்து ரயிலில் டில்லிக்கு எடுத்துப்போகவிருப்பதாகக் கூறினார். எப்படிம்மா இந்தியெல்லாம் தெரியுமா? எப்படி அங்க போய் சமாளிப்பீங்க என்று கேட்டேன்.
மலையில இருந்து கீழ எறங்குனப்ப, எல்லாம் தெரிஞ்சிக்கிட்டா சார் எறங்குனேன்? அதெல்லாம் பாத்துக்கலாம் சார் என்று சொல்கிறவரின் பேச்சில் மிளகின் காரம், ஆனால் ஏலக்காயின் வாசம்!
==================================================================================================

 

நான் படிச்ச கதை (JK)

ராஜகுமாரி

கதையாசிரியர்: ஸ்ரீ வேணுகோபாலன்


முன்னுரை

Was this the face that launched a thousand ships? Helen of troy குறித்துள்ள ஒரு பிரபல ஆங்கில மேற்கோள். பெண்களால் எற்பட்ட போர்கள் பல. ராமாயணப் போர் சீதையால் ஏற்பட்டது. மஹாபாரதப் போர் திரௌபதியால் ஏற்பட்டது. அதே போன்று இக்கதையில் ஒரு ராஜகுமாரியால் ஒரு பெரும்போர் நடைபெறுகிறது. இறுதியில் ஒரு சாம்ராஜ்யமே அழிகிறது. அந்தக்  கதையை/வரலாற்றைச் சொல்கிறார் ஸ்ரீ வேணுகோபாலன்.

கதையோ, வரலாறோ சொல்வதை மனதைத் தொடும்படி  சொல்வது சிறந்த எழுத்தாளர்களுக்கு மட்டும் வரும் தனித்  திறமை,  அப்படி இந்தக்கதையும் முடியும்போது மனதில்ஐயோஎன்றொரு தாக்கம் ஏற்படுத்துகிறது.

ராஜகுமாரி

சென்ற நூற்றாண்டின் ஆரம்பம்; ஆங்கிலேயர்களின் கை சிறிது சிறிதாக ஓங்கிக்கொண்டிருந்த காலம். மேவார் ராஜ்யத்தின் பழைய சிறப்பெல்லாம் மறைந்துவிட்டது. பழைய வீரம் ஒடுங்கி விட்டது. பெயரளவில் மாத்திரம் ராணாவாக இருந்து கொண்டு பீம்சிங் அதை ஆண்டு வந்தார். அவரது குமாரிதான் கிருஷ்ணகுமாரி. பதினாறு வயது நிரம்பிய இளமை மயில். ஏற்கெனவே அவளை மார்வார் ராஜாவுக்குத் திருமணம் செய்து கொடுப்பதென்று நிச்சயத்திருந்தார்கள். ஆனால் திருமணமாகும் முன்பே அந்த ராஜா எதிர்பாராமல் இறந்து விட்டார்.

இந்த நிலையில் மற்றொரு ராஜபுத்திர ராஜ்யமான ஜய்ப்பூரிலிருந்து ஒரு படை உதயபூருக்கு வந்துசேர்ந்தது. கிருஷ்ணகுமாரியைத் தங்கள் மன்னர் ஜகத்சிங் என்பவருக்குக் கொடுக்க வேண்டுமென்ற திருமண வேண்டுகோளுடன் அந்தப் படை வந்திருந்தது.

ஜகத்சிங்கின் வேண்டுகோள் வந்த பிறகு, மேவார் ராணா பீம்சிங் பல விதத்தில் யோசனை செய்தார். அதற்கு ஒப்புக் கொண்டு விடுவது என்று தீர்மானித்தார். இல்லையென்றால், தேவையற்ற போர்மூளும். ஜகத்சிங்குக்குத் தமது சம்மதத்தைத் தெரிவித்து தூது அனுப்பினார்.

இதற்கிடையே, ஏற்கெனவே முதலில் நிச்சயித்து இறந்த மார்வார் தேசத்திற்குப் புதிய வாரிசு வந்திருந்தார். அவர் பெயர் ராஜா மான்சிங்! அவருக்கு விஷயம் தெரிய வந்தது. அவர் உடனே மேவார் ராணாவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் ‘‘தங்கள் மகள் கிருஷ்ணகுமாரி ஏற்கெனவே எங்கள் தேச ராஜாவுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தாள்! அவர் இறந்து விட்டதால், அவருக்குப் பதிலாக சிங்காதனம் ஏறிய எனக்குத்தான் கிருஷ்ணகுமாரி உரியவள். இதற்கு எதிராக முனைந்தால், அதன் விளைவுகளுக்குத் தாங்கள் பொறுப்பு ஆவீர்கள்!’’ என்று எழுதியிருந்தார்.

மேவார் ராணா திகைப்பில் ஆழ்ந்து விட்டார். இருந்தும் ஜகத்சிங்குக்கு வாக்கு நேர்ந்து விட்டதால், அதை மாற்ற வழியில்லை என்பதை உணர்ந்தார்.

மேவார் ராணாவின் நிலை ராஜா மான்சிங்குக்குத் தெரிய வந்தது. உடன் வெகுண்டெழுந்தார். அவர் படைகளைத் திரட்டிக் கொண்டு, தமக்கு எதிராகக் கிருஷ்ணகுமாரியை மணக்கத் துணிந்த ஜகத்சிங்குடன் யுத்தம் செய்யத் தயாரானார். ஜகத்சிங்கும் மனம் தளரவில்லை. தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை இழந்து விட அவரும் தயாராக இல்லை. இவ்விதம் ஒரு பெண்ணுக்காக இரு ராஜ்யங்கள் போர்த் தயாரிப்பில் ஈடுபடலாயின.

இதில் ஒரு வேடிக்கை!

மராத்திய மன்னர் சிந்தியா, ஏற்கெனவே கிருஷ்ணகுமாரியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார். அவர் இந்தப் பூசலில் இறங்க வேண்டும் என்று தீர்மானித்தார். ராஜாமானுக்கு ஆதரவாக படையைத் திரட்டிக் கொண்டு மேவார் தலைநகரான உதயபூரை முற்றுகையிட்டார்.

மேவார் ராணா மனம் கலங்கினார். தமது மந்திரி கிஷன்தாஸ¤டன் வெகு நாழிகை ஆலோசித்தார். மாலை நேரமாகி இரவும் வந்து கொண்டிருந்தது. ஒரு முடிவும் அவர்கள் எடுக்கவில்லை.

அப்போது இருட்டில் வெளி வாசலில் ஓர் உருவம் தென்பட்டது. இளவரசி கிருஷ்ணகுமாரி, மெள்ள நடை நடந்து உள்ளே வந்தாள். எளிய தோற்றம்தான்! அவள் மீது நகைகளோ, அணிகலன்களோ அதிகம் இல்லை. பல மராத்தியப் படையெடுப்புகளுக்கு ஆளான ராணா, தமது குடும்ப அணிமணிகளைக் கூடக் கப்பப் பணமாக மராத்தியர்களுக்குக் கொடுக்க வேண்டி வந்தது.

‘‘அப்பா’’ என்றாள் மெல்லியதாக. ‘‘நான் குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும். உங்கள் தீர்மானம் என்ன என்று என்னிடம் சொல்லலாமா?’’ என்றாள்.

‘‘இப்போது ஆங்கிலேயர்களின் உதவியைப் பெறலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்’’ குரல் கமறச் சொன்னார் ராணா.

‘‘ஆங்கிலேயர்கள் உதவியையா? வேண்டாம்அவர்களை விட்டு விடுங்கள்.!’’

‘‘வேறு வழி?’’

‘‘சிந்தியா சொல்வதற்கு இசைந்து விடுங்கள்…’’ திடுக்கிட்டார் ராணா!

கிருஷ்ணா திரும்பினாள். விழிகளைக் கைகளால் துடைத்தாள்.

அவள் போன பிறகு ‘‘கிஷன்தாஸ்!’’ என்றார் ராணா.

‘‘ஜகத்சிங்குக்கு என் பெண்ணைக் கொடுக்கப் போவதில்லை என்று சிந்தியாவுக்குத் தெரிவி. ராஜாமானுக்கே கொடுத்து விடுகிறேன்’’ என்றார் தலை குனிந்தவாறு.

சிந்தியாவுக்குச் செய்தி போய்ச் சேர்ந்தது. அவர் தம் படைகளுடன் திரும்பிப் போகலானார். இந்தச் செய்திகள் ஜகத்சிங்குக்குப் போய்ச் சேர்ந்தன. நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்துவது என்பது ராஜபுத்திரர்களிடையே பெரிய அவமானமாகக் கருதப்படும். எனவே, கோபம் கொண்டு பெரிய படையைத் திரட்டினார் அவர். ராஜா மானுடன் (மார்வார் அரசர்) போர் செய்யத் தயாரானார்.

ராஜா மானும் கிருஷ்ணகுமாரியை விட்டு விடத் தயாராயில்லை. சிந்தியாவின் மறைமுக ஆதரவு தனக்குக் கிடைக்கிறது என்று தெரிந்ததும், அவரும் பெரும் படை ஒன்றைத் திரட்டலானார்.

இதனால் போர் மூண்டது. இரு படைகளும் சந்தித்தன. பெரும்போர் தொடங்கியது. போர் ஆறுமாதங்கள் நடந்தன. இருதரப்பாருக்கும் வெற்றி கிடைக்கவில்லை! பெரிய சோதனையாக இருந்தது.

இந்தச் சமயத்தில் ஜகத்சிங்கின் பீரங்கிப் படைத் தலைவன் அமீர் என்பவன் எதிரிப்படை ராஜா மானுடன் சேர்ந்து விட்டான்.

இதனால் எல்லா நாடுகளும் கஷ்டப்பட்டன. ஜனங்கள் வறுமையில் ஆழ்ந்தார்கள். அமீர் மிகவும் வருந்தினான். இதற்கு ஒரு தீர்வு காண விரும்பினான்.

மேவார் ராணாஜிக்கு வேண்டப்பட்ட ஒருவரைச் சந்தித்தான் அமீர். தனது திட்டத்தை விவரித்தான்.

‘‘ராணாவிடம் நான் சொல்வதைத் தெரிவியுங்கள்! ஒன்று அவர் தமது வாக்குறுதியை மறந்து விட்டு கிருஷ்ணகுமாரியை ராஜாமானுக்குக் கொடுக்க முன் வர வேண்டும்! அது அவருக்கு அவமானம் தருவதோடு ஜகத்சிங்குடன் தீராப் பகையையும் உண்டாக்கி விடும். அப்படிச் செய்யாமல் ஜகத்சிங்குக்குக் கொடுத்தால் ராஜா மானின் சீற்றத்துக்கு அவர் ஆளாக வேண்டும். மேவாரையும் ராணாவையும் அழித்துவிட ராஜா மான் தயங்க மாட்டார். எனவே, இரண்டு வழியிலும் ஆபத்துஉண்டு. இவை இரண்டையுமே தவிர்க்க வேண்டுமானால், மூன்றாவது வழி ஒன்று இருக்கிறது’’ என்றார் அமீர்.

‘‘என்ன வழி?’’

‘‘கிருஷ்ணகுமாரி இறந்து விடுவது தான்!’’ வந்தவர் திடுக்கிட்டார்.

‘‘யோசனை வேண்டாம், உங்களை இங்கே அழைத்திருப்பதன் காரணமே இதற்குத்தான். போங்கள், ராணாவிடம் அமீரின் யோசனை இதுதான் என்று தெரிவியுங்கள்!’’ என்று அழுத்தத்தோடு கூறினான் அமீர்.

அமீரின் மூன்றாவது வழியைக் கேட்டதும் ராணா அதிர்ந்து போய் உட்கார்ந்தார். ஏற்கெனவே பொருளெல்லாம் இழந்து நொந்து போயிருந்தார் ராணா! ஒரு அரசருக்குரிய குறைந்த வசதிகளைக் கூட அவர் இழந்திருந்தார். அமைச்சரவையில் இருந்தவர்களும் அமீர் சொன்ன வழியை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றார்கள்.

ராணா தம் முடிவை ராணியிடம் தெரிவிக்க மூன்று நாட்கள் ஆயின. அதை ஏற்றுக் கொள்ள ராணிக்குப் பல நாட்களாயின. புகழ் பெற்ற செளரா வம்சத்தைச் சேர்ந்தவள் ராணி. ஒரு குடும்பத்துக்காக ஒருவரை இழப்பதெல்லாம் அவர்கள் இரத்தத்திலேயே ஊறி வந்த ராஜபுத்திர வழக்கம்.

இருப்பினும் தனது உயிருக்கு உயிரான ஒரே மகளை, பதினாறு வயது நிரம்பிய இளங்கன்னியை இழப்பதென்றால்?

‘‘அம்மா, அழாதே! என்றைக்கு எனக்கு நிச்சயிக்கப்பட்டவர் இறந்தாரோ, அன்றைக்கே என் விதி எனக்குப் புரிந்து விட்டது. எனக்காக வருந்தாதே. எனக்காக எத்தனை சண்டைகள் நடந்து விட்டன! இன்னும் எத்தனை நடத்த மன்னர்கள் காத்திருக்கிறார்கள்! நாட்டையும், ஊர்களையும், மக்களையும் பாழடித்து விட்டார்கள் இவர்கள். கேவலம் ஒரு பெண்ணுக்காக எவ்வளவு அநியாயம் செய்யத் தயாராயிருக்கிறார்கள்! என் விதி இது! அப்பா எடுத்த முடிவு சரியான முடிவு. எனக்காகப் பல ராஜ்யங்களில் உள்ள பல்லாயிரம் மக்கள் உயிர் இழப்பதை விட நான் என்னையே இழக்கத் தயாராக இருக்கிறேன் அம்மா! இதில் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை’’ என்றாள் கிருஷ்ணகுமாரி.

அவளது நிர்மலமான முகத்தை உற்று நோக்கினாள் ராணி. துக்கம் அடைத்து வந்தது.

குறித்த நாள் வந்தது. கிருஷ்ணகுமாரி வெண்மை நிறத்தில் உடை தரித்து, குடும்பக் கடவுள்களை வணங்கினாள். பிறகு தன் அறைக்கு வந்தாள். எளிமையான பஞ்சணை மீது படுத்துக் கொண்டாள்.

ராணி ஒரு பாத்திரத்தை எடுத்து, அவள் முன்பாக வந்தாள். கண்களில் கண்ணீர் பொழிந்து வந்தது. அந்த அறையில் அவர்களைத் தவிர, ஒரு பணிப்பெண் மாத்திரம் இருந்தாள்.

‘‘ஏன் அம்மா அழுகிறாய்? என் வாழ்க்கையின் துக்கங்கள் இன்றோடு முடிகின்றன என்று நீ மகிழ்ச்சிகொள்! ராஜபுத்திர குலத்தில் ஒரு பெண் பிறந்தால் தியாகத்திற்காகவே தான் அவள் பிறக்கிறாள்! என் தியாகம் எனக்குப் பெருமை! உனக்கும் பெருமை! நம் நாட்டிற்கே பெருமை!’’ கூறிவிட்டு அவள் சட்டென்று பாத்திரத்தில் இருப்பதை வாங்கிக் குடித்தாள். மறுகணம் உள்ளே ஒரு தீ பாய்வது போலிருந்தது.

சிறிது நேரம் ஆகியது. இளவரசியின் உயிர் இன்னும் நீங்கி விடவில்லை. விஷம் சரியாக வேலை செய்யவில்லை என்று தெரிந்தது. மீண்டும் ஒரு பாத்திரத்தில் விஷம் கொண்டுவரப் பணிப் பெண்விரைந்தாள்.

இரண்டாவது பாத்திரத்தை நடுங்கும் கைகளில் ஏந்தினாள் இளவரசி. விஷத்தை இரண்டாவது தடவை அருந்தினாள்.

அந்த தடவையிலும் எதிர்பார்த்தது நடக்கவில்லை,. ஆகவே, அதிக உக்கிரமான கலவையில் விஷம் மேலும் இரு தடவைகள் கொண்டுவரப்பட்டன. நான்காவது தடவையில் பலன் கிடைத்தது. இளவரசி கிருஷ்ணகுமாரி கண்களை மூடினாள். பஞ்சணையில் மீளாத் துயிலில் ஆழ்ந்து விட்டாள்.

அரண்டு புரண்டாள் ராணி. அரண்மனை முழுதும் வீறிட்டுக் கொண்டு அலைந்தாள். நான்கு நாட்கள் உணவும் தண்ணீரும் இல்லாமல் அவள் வாழ்ந்தாள். ஐந்தாவது நாள் அவள் எதிர்பார்த்தது அவளுக்கும் கிடைத்தது. மரணம் அவளையும் தழுவியது. மேவார் ராஜ்யம் முழுவதும் துக்கம் ஒரு கிரகணம் போல் இறங்கியது.

மக்கள் துயரத்தில் கண்ணீர் வடித்தார்கள். சீக்கிரமே மேவார் களை இழந்தது!  நாடு முழுவதும் பஞ்சம் நிறைந்தது; நகரங்கள் அழிந்தன. மக்கள் வெளி ராஜ்யங்களுக்கு ஓடலானார்கள். ஒரு பெண்ணைக் கொன்ற தோஷத்திற்கான சாபம் போல் ராஜபுதனம் முழுவதுமே அழியலாயிற்று என்று சரித்திரக்காரர்கள் கூறுகிறார்கள். அந்த அழிந்த மேவாரை நேரில் கண்ட ஆங்கிலத் தளபதி கலோனல் டோடும் (ராஜபுதன சரித்திரம் எழுதியவர்) இது குறித்து உருக்கமாக எழுதியுள்ளார்.

முடிவு?

கி.பி. 1817_ல் மேவார் ராணா ஆங்கிலேயப் பாதுகாப்புக்குள் அடங்குவதாகப் பத்திரங்களில் கையெழுத்திட்டார்.

எண்ணுறு வருடங்களாகச் சுதந்திர ராஜ்யமாக விளங்கிய மேவார் தனது சுதந்திரத்தைக் கடைசியில் இழந்தது.

பின்னுரை.

இவர் பற்றிய விவரங்கள் புஷ்பா தங்கதுரை என்ற இவரது புனை பெயரில் சென்ற வாரம் தரப்பட்டது. ஸ்ரீ வேணுகோபாலன் என்ற பெயரில் இவர் எழுதிய  பிரபல படைப்புகள் திருவரங்கன் உலா (4 பாகங்கள்), மதுரா விஜயம், மோகவல்லித் தூது, மன்மத பாண்டியன், கள்ளழகர் காதலி முதலியன.

இவரது திருவரங்கன் உலா நாவல் மிகவும் பிரபலமானது. இந்த நூலை எழுதியதற்காக அவரை  ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து அவரை யானை மீது அமர வைத்து ஊர்வலமாகக் கொண்டு சென்று கெளவரப்படுத்தினர்.


சுட்டி

ஸ்ரீ வேணுகோபாலன்.

 

41 கருத்துகள்:

  1. கதையை ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு பின்னுரையில் குறிப்பிடப் பட்டிருக்கும்
    அந்த 'யானையின் மீது அமர வைத்து' சமாசாரம் பற்றித் தான் பின்னூட்டங்கள் அதிகம் வரும் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவரங்கன் உலா எழுதியவரை யானை மேல் திருவரங்க உலா செய்ய வைத்தனர்.

       கழுதை மேல் உலா என்பதற்கு எதிராக என்றும் பொருள் விளங்குகிறது. இதையா நீங்கள் ஒரு செயல் இரண்டு கவுரங்கள் (அரங்க உலா, யானை உலா) என்று குறிப்பிட்டீர்கள்? 

      Jayakumar

      நீக்கு
    2. கீழே சொல்லியிருக்கிறேன், ஜெஸி ஸார்.

      உங்களிடம் ஒரு வேண்டுகோளும் வைத்திருக்கிறேன்.

      நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. வினையால் வினையாக்கிக் கோடல் நனை
    கவுள்
    யானையால் யானையாத் தற்று.

    பதிலளிநீக்கு
  4. முழுப்பொருள்
    ஒரு செயலை செய்யும் பொழுதே மற்ற செயல்களையும் செய்து நிறைவேற்றிக்கொள்வது என்றென்பது (உள்வாயில் இருந்து) மதநீர் ஒழுகும் யானையை (அதாவது கூடல் வேட்கையுடன் இருக்கும் யானை) மற்றொரு (கும்கி)யானையைக் கொண்டுப் பிடிப்பதுப்போலாகும். ஒரு செயலை செய்யும் பொழுதே, அதனால் வரும் பயன் அல்லது ஒத்த எண்ணங்களைக் கொண்டு மற்ற செயல்களைச் சாதிப்பது செயல் திறனாகும். ஆங்கிலத்தில் synergy என்று ஒரு வார்த்தை உண்டு. அது போலவே இதுவும்

    பதிலளிநீக்கு
  5. எழுத்து நடையிலும் பொருளிலும் எப்படி மாறுபாடு செய்கிறார் என்பதைக் கண்டீர்களா. வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரலாற்று கதைகளில் ஒரு சிக்கல் இருக்கிறது.
      எது வரலாறாக உண்மையில் நடந்தது
      எது கதாசிரியனின் கற்பனை என்று வாசிப்பவருக்குத் தெரியாத பட்சத்தில்
      கதாசிரியனை பாராட்டுவதில் அர்த்தமில்லை.
      எனக்குத் தெரியாததால் கேட்கிறேன். இப்பொழுது சொல்லுங்கள். இந்தக் கதையில் எதெல்லாம் கதாசிரியரின் கற்பனை என்று சொன்னீர்கள் என்றால் கதைப் பொருளை அவர் எந்தளவுக்கு சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் என்பதைச் சொல்ல முடியும், ஸார்.

      நீக்கு
    2. என்னைப் பொருத்த மட்டில் இந்தக் கதையில் எழுத்து நடை என்பது சொதப்பல்.
      ஒரு ஆரம்ப எழுத்தாளனால் கூட இதை விட சிறப்பாக எழுத முடியும். சிலருக்கு எப்படியோ பத்திரிகைப் பிரசுர வாய்ப்பு கிடைத்து விடுகிறது. யாரைப் பிடித்து எப்படி சாதித்துக் கொள்வது என்று தெரிந்திருக்கிறது.
      எழுதும் எதுவும் பிரசுரமாகி விடுவதால் அவர்களுக்கு எழுதிச் சொல்வதில் அக்கறையில்லாமல் போய் விடுகிறது என்றே நினைக்கிறேன்.

      நீக்கு
    3. எழுத்து நடையிலும் பொருளிலும் எப்படி மாறுபாடு செய்கிறார்
      என்பதைக் கண்டீர்களா என்று கேட்டிருக்கிறீர்கள்.
      மன்னிக்கவும். அப்படி எதுவும் எனக்குத் தெரியவில்லை. நீங்கள் சொன்னால்
      அறிவேன். சொல்லவும் வேண்டுகிறேன்.

      நீக்கு
    4. புஷ்பா தங்கதுரையாக எழுதிய பொருள், நடை, இவற்றிற்கு மாறாக ஸ்ரீ வேணுகோபாலன் என்ற பெயரில் எழுதிய இந்தக் கதை வேறுபடுவதைத் தான் சுட்டி காட்ட விரும்பினேன். இருவரும் ஒருவர் தான் என்பதை அவர் சொல்லாமல் கண்டுபிடிப்பது கஷ்டம். 

      சின்னசின்ன வாக்கியங்கள், குறிப்பால் உணர்த்துவது போன்றவை புஷ்பா தங்கதுரையின் பாணி என்றால், சரித்திர பாடமாக படிப்பவர்களும் அந்த கால கட்டத்திற்கு செல்லும் வகையில் விவரமாக எழுதும் பாணி ஸ்ரீ வேணுகோபாலனுடையது என்று நான் கருதுகிறேன்.  

      Jayakumar

      நீக்கு
    5. புஷ்பா தங்கதுரையை ஏன் இங்கு இழுக்கிறீர்கள்? கீழே நெல்லையும் சொல்லியிருக்கிறார்.
      200 சிறுகதைகளுக்கு மேல் பிரசுரம் கண்டவரின் எழுத்து நடை ஏமாற்றம் தான்.
      இவர்களெல்லாம் மனத்தில் தோன்றுவதை அப்படியே மடமடவென்று எழுதி விடுகிற ரகம். அச்சில் வருகிற விஷயமாயிற்றே என்ற அக்கறை இவர்களுக்கு என்றும் இருந்ததில்லை.

      ஆனானப்பட்ட கல்கியே புரூஃபை
      வாங்கி வாங்கி மறுபடியும் திருத்துவராம். திருப்பித் திருப்பி தான் திருத்தித் தருவதை அலுத்துக் கொள்ளாமல் அச்சேற்றிய விந்தனை அதனால் தான் அவருக்குப் பிடித்துப் போனது.
      இதில் நடந்த வேடிக்கை என்னவென்றால் கல்கி திருத்தித் திருத்திக் கொடுத்ததை அச்சேற்றியே விந்தனுகும் எப்படியெல்லாம் எழுத வேண்டும் என்று அத்துப்படி ஆயிற்றாம்.
      'பாலும் பாவையும்' எழுதிய விந்தன் கல்கி அலுவலகத்தில் அச்சுக் கோர்ப்பவராய் இருந்தவர். கல்கி அலுவலகத்தில் ஆஸ்தான அச்சுக் கோர்ப்பவராய் இருந்த ராஜாபாதர் எழுத்தாளராகி விடவில்லை என்பதையும் சொல்ல வேண்டும்.

      நீக்கு
    6. விந்தனின்  மிஸ்டர் விக்ரமாதித்தன் கதைகளில் இருந்து ஒரு கதையை இப்பகுதியில் வெளியிட தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன். பின்னர் வரலாம்.  

      Jayakumar

      நீக்கு
  6. உரை அருமை,.ஜெஸி ஸார்.
    (சுருக்கமாக): ஒரு செயலால் இன்னொரு செயலையும் முடித்துக் கொள்வதென்பது ஒரு யானையின் உதவி கொண்டு மற்றொரு யானையைப் பிடிப்பது போலாகும்.

    பதிலளிநீக்கு
  7. திருவரங்கன் உலா எழுதி
    யானை மீதமர்ந்து ஊர்வலம் வந்ததற்காக மேற்கண்ட குறள் உதாரணமாயிற்று.

    பதிலளிநீக்கு
  8. பதில்கள்
    1. கொல்லிமலை மிளகில் ஏலக்காய் வாசம் எப்படி வந்தது?

      நீக்கு
    2. கடைசி வரி!!!!! பாருங்க நெல்லை....அதன் அர்த்தம்

      கீதா

      நீக்கு
  9. ஸ்ரீவேணுகோபாலனின் நந்தா என் நிலா யாருக்காவது நினைவுக்கு வருகிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரவர்களுன் சகாப்தம் முடிந்தபிறகு அவர்கள் எழுத்து நடை செத்துவிடுகிறது. அப்படி இருக்கும்போது அந்த எழுத்தாளர்களின் ஒரு நாவலை யார்தான் நினைவில் கொள்ளமுடியும்?

      கல்கி தவிர காலத்தை விஞ்சி நிற்கும் எழுத்து அபூர்வம் ..... நெல்லை

      நீக்கு
  10. புதிய தொழிலதிபர் உருவாகிறார். பெறும் வெற்றிபெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. வரலாற்றை எழுதியதுபோல் இருக்கிறது. சிறுகதை வடிவம் சரியாக இல்லை. உரைநடை போல் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை சார். ஒரு வேளை இவரும் ஒரு ghost writer வைத்திருந்தாரோ என்னவோ? 2000 நாவல்கள், 1000 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுத ஒரு ஜென்மம் போதுமா?  ஒரு மாசம் ஒரு நாவல் எழுதினாலும் 2000/12 = 167 ஆண்டுகள் ஆகின்றனவே! 

      நீக்கு
    2. இவர் இவ்வளவு எழுதியதுபோலத் தெரியவில்லை, அதிலும் நாவல்கள். நம்ம நாட்டில்தான் நெடுங்கதையை நாவல் என்று சொல்லி, பாக்கெட் நாவல்கள் எழுதி நாவலாசிரியர்கள் என்று சொல்லிக்கொள்ள முடிகிறது. பிரபல எழுத்தாளர்கள் பிடி சாமி, சரோஜாதேவி உட்பட...... நெல்லை

      நீக்கு
  12. பலருக்கு எதையும் வித்தியாசமாக, பாப்புலாரிட்டிக்காக, சரித்திரத்தையே மனம் போன போக்கில் எழுதி, சரித்திரத்தை மாற்றிவிடுவார்கள், தி.க செய்வதைப் போல

    அப்படி இல்லாமல் நடந்த வரலாற்று நிகழ்வுகளை மாற்றாமல், ஆனால் பலரும் படிக்கும்படியாக எழுதியதால் ஶ்ரீவேணுகோபாலனுக்குச் சிறப்பு செய்தார்கள்.

    பதிலளிநீக்கு
  13. அதற்கெல்லாம் கஷ்டப் பட்டு காரணத்தைக் கண்டு பிடிக்காதீர்கள், நெல்லை. சிறப்பு செய்ய முடிந்தவர்களால் சிறப்பு பெற்றார். அவ்வளவு தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த சிறப்புச் செய்ய முடிந்தவர்கள் ஏன் எல்லா எழுத்தாளர்களுக்கும் சிறப்புச் செய்யலை? எழுத்தாளர்கள் தங்கள் நாவல்கள், அபிமான எழுத்தாளர்களைத் தவிர பிறரை அங்கீகரிப்பதில்லை, குறைகள் காண்கிறார்கள், நாங்கள், அதிமை பெஸ்ட், திமுக திருடர்கள் என்று சொல்வதைப்போல.... நெல்லை

      நீக்கு
  14. பூங்கொடி பிரமிக்க வைக்கிறார்.

    பதிலளிநீக்கு
  15. ஜெகசிற்பியன் பிறப்பால் ஒரு கிறிஸ்துவர். சைவ வைணவ கோட்பாடுகளில் எந்தப் பிழையும் இல்லாமல்
    ஆழ்வார்களையும் நாயன்மார்களையும் எவ்வளவு உயர்வாக மனத்தில் இருத்தி சரித்திர உண்மைகளிலிருந்து விலகி விடாமல் வரலாற்றுக் கதைகளை
    படைத்திருக்கிறார் என்பது ஊரறிந்த உண்மை.

    பதிலளிநீக்கு
  16. இன்றைய பாசிட்டிவ் செய்தி புல்லரிக்க வைக்கிறது!!!

    பூங்கொடி அவரின் நோக்கம் நிறைவேற வேண்டும். கண்டிப்பாக நிறைவேறும். வாழ்த்துவோம். என்ன ஒரு முயற்சி....!!!! பாராட்டுகள்,

    வாழ்த்துகள் பூங்கொடி! கொல்லி மலை மிளகை உலகறியச் செய்யுங்கள்

    கீதா

    பதிலளிநீக்கு
  17. கொல்லி மலை மிளகு அத்தனை வாசனையுடன் இருக்கும் காரமும் தான். அது போல அங்கு கொய்யா அத்தனை சுவையுடன் இனிப்பாகவும், அன்னாசிப்பழமும் கூட மிக மிகச் சுவையாக இருக்கும். கொல்லிமலையே அத்தனை அழகு. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி எல்லாம் வாவ் எவ்வளவு ரசித்துக் குளித்திருக்கிறேன். அது போல அங்கு விளைபவற்றையும் சுவைத்திருக்கிறேன்

    நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலும் இங்கிருந்து வருபவரை சந்தைப்படுத்தப்படும்...கொல்லி மலைப் பூண்டும் அத்தனை நன்றாக இருக்கும்.

    எனக்கு மிகவும் பிடித்த மலை....மூலிகை வாசமும் உள்ள மலை.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. ராஜகுமாரி கதை - உண்மையான வரலாறா, ஆசிரியரின் கற்பனையா என்று தெரியாது ஏனென்றால் உண்மையான வரலாறு தெரியாது. மேவார், ராணாசிங்க் எல்லாம் தெரிந்த பெயர்கள் அவ்வளவே...

    கற்பனையோ உண்மையோ ஆனால் இப்படியும் கூடவா என்று தோன்றுகிறது. ஒரு பெண்ணிற்காக போர், இறுதியில் அப்பெண்ணே யாருக்கும் தொந்தரவு வேண்டாம் என்று தற்கொலை....ஏனோ மனம் ஏற்க மறுக்கிறது இவ்வளவு மோசமான மன்னர்கள் ஆண்டார்களா என்று...

    வரலாறு அறிய பிடிக்கும்தான் ஆனால் இப்படியான வரலாற்று நிகழ்வுகளை அல்ல....மனம் ஏற்க மறுக்கிறது. கதையாகவே இருந்தாலும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் ராணியே / அம்மாவே தன் கையால் விஷம் கொடுத்தல்...கொடுமை...

      கீதா

      நீக்கு
  19. பூங்கொடிக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.அவர் தன்னம்பிக்கை வாழ்க!

    பதிலளிநீக்கு
  20. வரலாற்று கதைகள் பல இப்படி சோக முடிவுதான்.
    எளிமையாக கதையை சொல்லி விட்டார்.

    பதிலளிநீக்கு
  21. பூங்கொடிகளின் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள் .
    வரலாற்றுக்கதை இப்பொழுதுதான் படித்து அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  22. பூங்கொடி பற்றி முன்னரே படிச்சிருக்கேன். போற்றுதலுக்கு உரியவர். இந்த ராஜஸ்தான் கதையைப் பற்றி நாங்க ராஜஸ்தானில் ஆறேழு வருடங்கள் இருந்தப்போ அங்கே யாரும் எதுவும் சொன்னது இல்லை. இப்படி நடந்திருக்கலாம் என்பதும் ஓர் அனுமானமாகவே இருக்கும். ஸ்ரீ வேணுகோபாலன் கோயிலொழுகு என்னும் திருவரங்கக் கோயில் சரித்திரத்தில் உள்ளது உள்ளபடி அநேகமாக எதையும் மாற்றாமல் விவரித்து எழுதினார். அந்தக்கால கட்டத்துத் தமிழகத்து நிலைமையை நன்கு உள்வாங்கிக் கொண்டு எழுதி இருக்கிறார். சும்மாவானும் அவருக்கு மரியாதை கொடுத்துவிடவில்லை.. பல வருஷங்களாகத் தமிழகத்து மக்களுக்கே தெரியாமல் மறைந்திருந்த ஓர் உண்மையை உலகம் அறியும்படி வெளிக்கொணர்ந்தார். அடிப்படையில் அவரும் ஓர் வைஷ்ணவர் என்பதும் காரணமாக இருந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!