செவ்வாய், 5 மே, 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை : இந்தக் கதை அவளுடன் பேசட்டும்!  - ஜீவி   3/3            



இந்தக் கதை அவளுடன் பேசட்டும்!

ஜீவி     


முந்தைய பகுதிகள் :  

ஒன்று ; 

இரண்டு 

தற்கொலையைப் பற்றி விநாயகம் அபிப்ராயம் கேட்டது என்னைத் துணுக்குற செய்தது.  "தற்கொலையா?" என்று நான் கேட்ட பொழுது என் குரல் குழறியது எனக்கே தெரிந்தது.  சுதாரித்துக் கொண்டு, "அது கோழைகளின் செயல்.." என்று வெடித்தேன்.

"அதை நான் ஒப்புக்கொள்கிறேன்.." என்றவன், "இருந்தாலும் தற்கொலை செய்து கொண்டு தான் ஒருவன் நான் உண்மையானவன்னு நிரூபிக்கிற சூழ்நிலை இருந்தால் அவன் என்ன செய்வது?" என்று  கேட்டான்.

"சீ.. அசட்டுப் பிசட்டென்று பேசாதே!  தன்னை மாய்த்துக் கொண்டு அதனால் கேவலம் பிறருக்கு எதையோ நிரூபித்து என்ன பயன்?  இந்த உலகம் எதையாவது பேசிக் கொண்டு தான் இருக்கும்.  அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டால் வாழவே முடியாது.."

"இந்த உலகத்தைப் பற்றி நான் கவலைப்படவில்லை.  என்னைப் பற்றித்தான்..."

நான் படபடத்தேன்.  அவன் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விடலாம் போலக் கூடத் தோன்றியது..  "அப்படியென்ன இப்பொழுது ஏற்பட்டு விட்டது?"

"எல்லாமே ஏற்பட்டு விட்டது..  எனக்கு வாழவே பிடிக்கவில்லை.." என்றவன் ஒரு நிமிடம் தயங்கி,  "நேற்று பிரேமாவின் வீட்டுக்குப் போயிருந்தேன்.." என்றான்.

"என்ன, பிரேமாவின் வீட்டுக்கா?  நீயா?...."

"ஆமாம். நானே தான்.  அவளுக்கு ஏதோ உடம்பு  சரியில்லை என்று  கேள்விப்பட்டேன்.  அதற்குப் பிறகு போகாமல் இருக்க முடியவில்லை.."

நான்  பதிலே பேசவில்லை.

விநாயகமே தொடர்ந்தான்.. "போனேனா?  பிறகு தான் அவள் உடம்புக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்தது.  அவள் திருப்பூருக்கு  டிரான்ஸ்பர் கேட்டிருக்காளாம்.   அவளுக்கு மாற்றல் கிடைத்து விட்டது.  'ஆர்டரை'க் கூட என்னிடம் காட்டினாள்.  நாளை அவள் வேலையில்  ஜாயின் பண்ணப்போவது கூடத்  திருப்பூரில் தான்.."

விநாயகத்தின்  குரல்  உடைந்திருந்தது.  ஒரு சொட்டு கண்ணீர் கூட கன்னத்தில் வழிந்து விட்டது.

எனக்கு அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.   "ஓ.. சீ! இதுக்குப் போய் அலட்டிக்கிறையா?.. இப்போ அவளுக்கு மாற்றல் ஆகிவிட்டால் தான் என்ன, குடியா முழுகிப் போய் விட்டது?  உங்கள் ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க வேண்டியது என் பொறுப்பு.." என்று அவனைத் தேற்றியவள்,  "ஆனால் நீ  பைத்தியக்காரத்தனமாக ஏதாவது செய்து  வைக்காதே..  தற்கொலையாமே,  தற்கொலை?...  உன்னோட புத்தி ஏன் இப்படிப் போறது?... ம்?.. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு  பத்திரிகைலே 'தீப்பிடித்தக் கப்பலில் அம்மணியும் நானும்'னு ஒரு உண்மை நிகழ்ச்சியைப் படிச்சியா?..    ஓ!   தீப்பிடிச்சிண்டு  எரியற அந்தக் கப்பல்லே மாட்டிண்ட அந்தப் பிரயாணிகள் தங்களோட உயிரைக் காப்பாத்திக்க என்ன பாடு  படுகிறார்கள்?  உயிர்னா என்னன்னு நெனைச்சே?..  அத்தனையும் வெல்லம்டா, வெல்லம்!"  என்று சொன்னவள்,  ஏதோ  ஓர் உத்வேகத்துடன் என் கர்ச்சீப்பை எடுத்து அவன் கன்னத்தைத் துடைக்க நீட்டும் போது-----

லேசாக சாத்தி வைக்கப்பட்டிருந்த  கதவு திறக்க...  ஓ,  பிரேமா!

ஆனால் அவளோ நுழைந்தவுடனேயே தலையைக் குனிந்து கொண்டு. "ஸோ, ஸாரி.." என்று கன்னம் சிவக்க வெளியேறி விட்டாள்.  பிறகு  தெரிந்தது,  மாற்றல் ஆகிப்போகும் அவள் எல்லோரிடமும் சொல்லிக் கொள்ள வந்திருந்தாளாம்!..

இரண்டே நாட்கள்..  நான் எதற்கு பயந்தேனோ,  அது  நடந்தே  விட்டது.

விநாயகம் அவசரப்பட்டு விட்டான்.

அளவுக்கு  மீறிய தூக்க மாத்திரைகளாம்!  செய்தி கேட்டு தலைதெறிக்க அரசாங்க ஆஸ்பத்திரிக்கு ஓடினேன்.

ஏழாவது வார்டு.    ஆக்ஸிஜன் குழாய்கள்; பிரபல டாக்டர்கள்;  வெள்ளை யூனிபார்ம் நர்சுகள்;  ஆஸ்பத்திரிக்கே உரிய நெடி.

அன்று இரவே  என்  தம்பி  விநாயகம்..  ஓ!  ஓ!..

நான்கு நாட்கள் கழித்து நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு  பள்ளிக்குப் போனேன்.

எதற்காகவோ தலைமை ஆசிரியை அறைக்குப் போனவள்,  உள்ளே கேட்ட பேச்சுக் குரலைக் கேட்டு  ஆடும் கதவுகளுக்கு  வெளியேயே நின்று விட்டேன்.  "விநாயகத்தின் வழியையே  இவள் பின்பற்ற மாட்டாளென்று நான் அடித்துச் சொல்வேன்.  ஏன்னா,  தாலி  கட்டின கணவன்  போயே என்னாலே இத்தனை வருஷம் வாழ முடியும்னு நிரூபிச்ச இவளா இப்போ இப்படிச் செய்வாள்னு  நீ நெனைக்கறே?  என்ன இருந்தாலும்  ஆஃப்ட்ரால்  கள்ளக்..."

ஏன் நெஞ்சு நிறைய நெருப்பைக் கொட்டிய  மாதிரி இருந்தது.  உடல் குலுங்கக் குலுங்கத்  திரும்பி விட்டேன்.

அவர்களுக்கு  நன்றி;  எனக்கு ஒரு வழியைக் காட்டிய அவர்களுக்கு  நன்றி.  தற்கொலை கோழைத்தனம் என்று விநாயகத்திடம் அடித்துப் பேசியவளையே அந்த முடிவைத் தேர்ந்தெடுக்க வைத்து விட்டார்களே,  அவர்களுக்கு  நன்றி..

என் பரிசுத்தத்தை,  விநாயகத்திற்கும் எனக்கும் இருந்த உறவை,  என்  இறப்பிற்குப் பிறகு இந்த 'உண்மைக்கதை'யினால் அவர்கள் புரிந்து கொண்டால் சரி.

                                                                                                    இப்படிக்கு,
                                                                                                         சீதா

(பிரசுரிக்க வேண்டாத)  பி.கு.:-  அ. ஆ.,  கதை கட்டுரைகளில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே என்று போட்டுக் கொள்ளும் உங்கள் பத்திரிகைக்கு இந்த 'உண்மைக்கதை'யை  அனுப்பக் கொஞ்சம் தயக்கமாகத் தான் இருந்தது.

உங்கள் பத்திரிகை பிரேமா தவறாமல் படிக்கும் அவளுக்கு மிகவும் பிடித்தமான பத்திரிகை.   நிச்சயம் அவள் இந்தக் கதையைப் படிப்பாள்.  பெயர்கள்,  நிகழ்ச்சிகள் அனைத்தும் உண்மையாக இருப்பதினால்  அவளுக்கு உண்மை விளங்கும்.  பின்பு அவளிடம் விநாயகத்தின்  அடக்க முடியாத காதலைப் பற்றிப் பேசுவது சுலபம்.  அதாவது....

இன்னொரு  ரகசியம்.  இந்தக் கடிதக் கதையில் முக்கால்வாசி தான் உண்மை.  கதைப்படி விநாயகமும் நானும் தற்கொலையை முடிவாகக் கொண்டாலும் நிஜ வாழ்க்கையில் இல்லை;  இருவரும் உயிரோடு தான்  இருக்கிறோம்.  இன்னும் விநாயகம் பிரேமாவை நினைத்து ஏங்கிக் கொண்டு தான் இருக்கிறான்.

எனக்குப் பதில் இந்தக் கதை பிரேமாவுடன் பேசட்டும்.  இருவரையும் ஒன்றாகச் சேர்த்து  வைக்க உதவட்டும்..

இப்பணியில் உங்கள் பங்கு  மகத்தானது.  அதைச் செய்வீர்களென்று  நம்புகிறேன்.

                                                                                                               அன்புடன்,
                                                                                                                    சீதா

அடுத்த பத்து நாட்களிலேயே  'நிலா' பத்திரிகை ஆசிரியரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது.  அது  இது:

அன்புடையீர்,

வணக்கம்.

தாங்கள் அனுப்பிய சிறுகதை பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.  மே  முதல் வார இதழில் பிரசுரமாகும்.  அதற்கான அன்பளிப்பு  ரூ.500/-  பெற்றுக்கொண்டு
அன்பு கூர்ந்து கீழேயுள்ள ரசீதில் கையெழுத்திட்டு ஒரு வார காலத்திற்குள் எங்களுக்கு கிடைக்கச் செய்யுமாறு வேண்டுகிறோம்.   

                                                                                                           இங்ஙனம்,

                                                                                                            ....................

                                                                                                         (ஆசிரியருக்காக)


சும்மா சொல்லக் கூடாது,  'நிலா' பத்திரிகையில் என் கதையை வண்ண வண்ணப் படங்களோடு பிரமாதமாக பிரசுரித்தார்கள்.


எனது கைப்பேசிக்குத் தொடர்பு கொண்டு கதை பிரசுரமாகியிருக்கும் விவரத்தைச் சொன்னதோடு அல்லாமல்,  என் வீட்டு முகவரிக்கு  பத்திரிகைப் பிரதி ஒன்றையும் அனுப்பி வைத்திருந்தார்கள்.  இந்த  சந்தோஷத்தில் கிட்டத்தட்ட விநாயகம் விஷயத்தை மறந்து  விட்டேன் என்றே சொல்லலாம்.   அதற்கு காரணம் இருக்கிறது.

என் முதல் கதையே பிரசுரமான ஜோரில் நான் வானத்தில் பறந்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.  சூட்டோடு சூடாக அடுத்த கதையையும் எழுதி 'நிலா' பத்திரிகைக்கே அனுப்ப வேண்டும் என்ற வேகம் என்னில் உருக்கொண்டது.   அதற்காகவே எப்பப் பார்த்தாலும் யோசித்ததில் உருப்படியாக எதுவும் தேறவில்லை.   பிரசுரமான கதை நிஜ விஷயம் சம்பந்தப்பட்டது என்பதினால் கற்பனைக்கு  அவ்வளவு அவசியமில்லாமல்  நடந்த விஷயங்களே வழி நடத்தி என்னை எழுத வைத்து விட்டது என்ற உண்மை லேசாகப் புரிந்தது.  புதுசாக முழு கற்பனையில் வாசகர்கள் நம்புகிற மாதிரி எழுதுவது லேசுப்பட்ட காரியமில்லை என்று தெரிந்தது.   

பத்து கதைகளைப் படித்தால் எழுத்தார்வம் உள்ளவர்களுக்கு தானும் ஒரு கதையை படைக்கலாம் என்று  தோன்றும் என்று தொலைக்காட்சி நேர்காணலில் எந்த எழுத்தாளரோ சொன்னது சட்டென்று நினைவுக்கு வந்தது..   ஒரு கதையைப் பிரசுரித்து விட்டால் போதும், நாம் அடுத்து அடுத்து அதே பத்திரிகைக்கு கதை அனுப்பினால் கண்டிப்பாக பிரசுரம் செய்வார்கள் என்றும் அந்த எழுத்தாளர் ஊக்க டானிக் அந்தப் பேட்டியிலேயே கொடுத்திருந்தார்.   அதெல்லாம் இப்பொழுது நினைவுக்கு வரும் பொழுது எனக்காகவே அவர் அதையெல்லாம் சொல்லியிருப்பது போலத் தோன்றியது.  

முதல் கதை  ஓரளவு நிஜக்கதை.  அதனால் ஒரு பெண் சொல்கிற மாதிரியே எழுதியாகி விட்டது.  அடுத்த கதையை ஒரு ஆணின் மனநிலையில் எழுத வேண்டும் என்று  திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது.  ஒரு பெண், ஆணின் குண லஷணங்களோடு யோசிக்க முடியுமா என்று லேசாக தயக்கம் ஏற்பட்டது வாஸ்தவம் தான்.  இருந்தாலும் முயற்சித்துத் தான் பார்ப்போமே என்ற  துணிச்சலோடு  பேப்பர் பேட், பேனா சகிதமாக  பால்கனி போனேன்.  அந்த இடம் தான் வசதி. டேபிள், சேர், காற்றோட்டம் எல்லா செளகரியமும் இருக்கும் இடம்.

ஆபிஸூக்கு போகும் அவசரத்தில் ஸ்கூட்டரை உதைத்த பொழுது  அது நகர மாட்டேன் என்று அழிச்சாட்டியம் பண்ணிய பொழுது  சேகருக்கு  ஆத்திரம் ஆத்திரமாக வந்தது -- என்று முதல் வரியை எழுதி விட்டு அதே வேகத்தில் வந்த அடுத்த வரியை எழுத ஆரம்பிக்கும் பொழுது கைப்பேசி  அழைத்தது.   

இது  என்னடா தொல்லை என்று மொபைலை எடுத்து  ஹலோ சொன்ன பொழுது,  "நான் பிரேமா பேசறேன், சீதா மேடம்.." என்று படபடப்பாய் குரல் கேட்டு லேசான தடுமாற்றம்.  எனக்குத் தெரிஞ்சது ஒரு பிரேமா தான் என்பதால் புரிந்து கொண்டு, "ஹலோ.. பிரேமா எப்படியிருக்கே ?.." என்று சமாளித்தேன்.

எதிர்முனையில் பதில் இல்லை.  கேவிக்கேவி அழும் சப்தம்.

"பிரேமா.."

"..............."

எனக்குப் புரிந்து போயிற்று..  சட்டென்று, "அந்தக் கதையை படிச்சையா பிரேமா?"  என்று நான் கேட்டதும் தான் தாமதம், "ஓ..."என்று அடக்க முடியாத அழுகை பீறிட்டது அவளுக்கு.

"நான் சொல்றதைக் கேளு..  அந்தக் கதைலே நடந்த மாதிரி எதுவும் நடக்கலே.  விநாயகம்  அப்படி எதுவும் செய்து கொள்ளவில்லை.  வெறும் கதைக்காக எழுதினது அது.  என்னை நம்பு.." என்று அடிக்குரலில் சொன்னதும் தான் அவள் அழுகை நின்றது. 

"என்ன சொல்றீங்க?.." என்றாள் நம்ப முடியாமல். அவள் குரலில் தெளிவு இருந்தது எனக்கு ஆறுதலாய் இருந்தது.

நடந்த விஷயத்தைச் சொன்னேன்.  சீதா என்ற பெயரிலேயே அந்தக் கதை நிலா பத்திரிகையில் பிரசுரமானதால் நான் இறக்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்டதாக பிரேமா சொன்ன போது  எனக்கே வெட்கமாக இருந்தது.  

 உடனே விநாயகத்தைப் பார்க்க வேண்டுமே என்று துடித்தாள்.   திருப்பூர் பனியன் ஃபேக்டரி ஒன்றில் அவள் அப்பாவுக்கு நல்ல வேலை கிடைத்ததால் திருப்பூருக்கு வேலை மாற்றல் கேட்டாளாம்.  ஒரு  டிரான்ஸ்வருக்குப் போய்  இப்படி அவர் கலங்கிப் போயிட்டாரே என்று விநாயத்தின் மேல் பரிவு கொண்டாள்.  பத்திரிகை ஆபிஸில் கேட்டுத் தான் என் அலைபேசி எண்ணைப் பெற்று தொடர்பு கொண்டாளாம்.  வாழ்க, நிலா என்று இரண்டு பேரும் சந்தோஷப்பட்டோம்.

பிரேமா அவள் அப்பாவோடு நாளை காலை என் வீட்டுக்கு வருவதாகச் சொன்னாள்.   கதையைப் படிச்சதிலேந்து  அவனும் இன்னும் மனம் பேதலிச்சுப் போயிருக்கிறான்.  நிஜமாகவே எதுவும் நடந்து விடக் கூடாது.  பிரேமா வரும் நல்ல சேதியை  உடனே விநாயகத்திற்குச் சொல்ல வேண்டும்.   இதோ ஒரே ரிங்கில் விநாயகமும் கிடைத்து விட்டான்.

எல்லாம் கூடி வந்தால் என்ன கன ஜோராய் விஷயங்கள் நடக்குது?
அடுத்த கதைக்கு செண்டர் பாயிண்ட் இதான்.  தீர்மானித்து விட்டேன்.

சீதா தான் ராசியான  பேர் போலிருக்கு.   எந்த பத்திரிகைலே இந்தப் பெயர்லே கதை பார்த்தாலும் படிக்காம விட்டுடாதீங்க..  படிச்சிட்டு
அன்புள்ள ஆசிரியருக்கு கடிதம் போடுங்க.  சரியா?...

                                                                                                             அன்புடன்,
                                                                                                                    சீதா

===========================
                    

53 கருத்துகள்:

  1. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்...

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. என்னென்னமோ எழுதி
    காலையிலேயே கலங்க அடித்து விட்டீர்கள்..

    எப்படியோ நல்லதொரு மதி நுட்பத்தால்
    விநாயத்தின் தோள்களிலும் மணமாலை...

    வாழ்க மணமக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணமாலை கண்ட உங்கள் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன். சந்தோஷம், ஐயா.

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    கதை முடிவு நல்லபடியாக அமைந்தது கண்டு மகிழ்ச்சி. இந்த முடிவினால் சீதாவும், நல்லதொரு எழுத்தாளராக பரிமளித்து அவர் வாழ்க்கையும் எந்த கவலைகளுமின்றி சிறக்க நாமும் பிரார்த்திப்போம். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் வாசிக்கும் கதைகளாவது நல்ல முடிவகளக் கொண்டிருக்கட்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.
      இந்த எதிர்ப்பார்ப்பு அப்படியான முடிவுகளைக் கொண்டிருக்காத கதைகளை வாசிப்பதை தவிர்த்து விடும்
      மனநிலையை ஏற்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது. நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்று உங்களைப் போன்ற பெரியவர்கள் சொல்வார்கள். நிழலின் அருமையைத் தெரியப்படுத்துவதற்காக வெயிலின் தகிப்பை இந்தக் கதையில் கொஞ்சம் கூடுதலாக வெளிப்படுத்தி விட்டேன் போலும். அடுத்த கதையில் இந்த அதிகபட்சத்தைக் குறைத்துக் கொள்ள பார்க்கிறேன்.

      கதை வெளியானவுடனேயே வாசித்து தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, சகோ.

      நீக்கு
  5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், சென்னையில் கொரோனா எந்த அளவுக்கு இருக்கோ தெரியலை. திருச்சியில் பதினைந்து நாட்களாக எதுவும் இல்லாமல் இருந்தது நேற்றிலிருந்து நான்காக ஏறிவிட்டது! நேற்றுத் திருச்சி நகரிலும் கூட்டம் அதிகம் என்றார்கள்! என்னவோ, கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. கதையின் முடிவு சுற்றி வளைத்துக் கொஞ்சம் கொஞ்சம் இல்லை நிறையவே சினிமாத்தனமாக முடிந்திருக்கிறது. விநாயகம் இறக்கவில்லை எனில் எல்லோர் கண்களிலும் படாமல் எங்கே ஒளிந்திருந்தான்? எப்படி அதிகாரபூர்வமாகத் தான் வேலை செய்யும் பள்ளியிலேயே இறந்துவிட்டான் எனச் சொல்ல முடிந்தது. கடைசிக்காரியத்துக்குக் கூடப் பள்ளியிலிருந்து யாரும் விநாயகம் வீட்டுக்குப் போகவில்லையா? இது கொஞ்சம் நாடகத்தனமான முடிவாகத் தெரிகிறது. தர்க்கரீதியாக யோசித்தால் ! ம்ம்ம்ம், ஏமாற்றத்தைக் கொடுத்த கதை!மன்னிக்கவும். என் கருத்து அனைவருடனும் ஒத்துப் போகாமல் இருக்கலாம்.இருக்கும், ஆனால் எனக்குத் தோன்றியது இதுதான். ஜீவி அவர்களிடமிருந்து பெரிதாக எதிர்பார்த்து ஏமாந்து விட்டேன். :((((((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையில் தானே இறக்கிறார் ?? நிஜத்தில் இல்லையே . அதுவரை கதைதானே எழுதி இருந்தாங்க அதன்படிதான் படிக்கணும்

      நீக்கு
    2. கதைப்படி இறப்பதாக எழுதினாலும் அது கதாநாயகியைப் பொறுத்தவரை உண்மை அல்லவா? ஆனாலும் தர்க்கரீதியாகச் சரியாக இல்லை என்றே தோன்றுகிறது. என் எதிர்பார்ப்பும் ஒரு காரணம்.

      நீக்கு
    3. காலை நேரத்தில் பெண்களுக்களுக்கான நெருக்கடி வேலைகளுக்கு நடுவே கதையை வாசித்ததோடு அல்லாமல் மனத்தில் பட்ட எண்ணத்தையும் பதிந்தமைக்கு நன்றி, கீதாம்மா. இந்தக் கதை நேரடியாக ஒரே பகுதியாக வெளியாகாமல் பிரித்துப் பிரித்துப் போட்டதில் ஒட்டு மொத்த கதையை இலகுவாகப் புரிந்து கொள்வதில் கொஞ்சம் சிரமம் ஏற்படத்தான் செய்யும் என்பது எனக்குப் புரிகிறது.

      சினிமாத்தனமும், நாடகத்தனைமும் எழுதுகிற கதைத்தனத்திலிருந்து பிறந்தவை தானே, கீதாம்மா.
      அதனால் இயல்பாகவே இந்த மூன்றிலும் நீரோட்டமான ஒரு தொடர்பு இருக்கத் தானே செய்யும் என்று
      சொல்லிவிடப் போவதில்லை நான். நீங்கள் சொல்ல வந்தது எனக்குப் புரிகிறது. சினிமாக்களிலும், நாடகங்களிலும் இருக்கும் இன்றைய காட்சி வெளிப்பாட்டு குறைபாடுகள் எழுதும் கதைகளிலாவது இருக்க
      வேண்டாமே என்று நினைக்கிறீர்கள். சரி தான். ஒரு சிறுகதைக்கு இவ்வளவு வளைசலும் நெளிசலும் தேவையில்லை தான். ஆனால் இந்தக் கதையை எழுதும் முறையில் ஒரு புதுவித பரிசோதனையை எடுத்துக் கொண்டேன். அது ஒரே வாசிப்பில் இல்லாமையால் சிலருக்குப் புரிபடாமல் போய்விட்டது என்று தெரிகிறது.
      இதற்கான பதிலை நானே சொல்வதை விட பின்னால் வாசிக்கும் யாராவது சொல்ல வேண்டுமே என்ற எதிர்ப்பார்ப்பு என்னிடம் இருந்தது. நான் எதிர்பார்த்தபடியே பின்னால் வந்த எல்.கே. மிகச் சரியாக விளக்கம் கொடுத்ததும் அப்பாடி என்றிருந்தது எனக்கு.

      நீக்கு
    4. கதை இல்லைஎன்பதும் உண்மைக்கதையைப் பத்திரிகைக்கு எழுதி அனுப்பி அதன் மூலம் கதாநாயகியைப் புரிந்து கொள்ள வைக்கிறார் என்பதும் தெரிந்தே/புரிந்தே தான் என்னுடைய கருத்து சொல்லப்பட்டது. கொக்கு தலையில் வெண்ணெயை வைத்துப் பிடிக்கிறாப்போல் தோன்றவே ஜீவி சாரிடமிருந்து இப்படி ஒரு கதையா என வருத்தமே வந்தது. மன்னிக்கவும். :(

      நீக்கு
    5. என்னோட கருத்தையே நினைத்துக் கொண்டிருந்ததில், கதையின் போக்கு இப்படி மாறியதில் நிலா பத்திரிகையின் லே அவுட் திரு கௌதமனால் தயாரிக்கப்பட்டு வெளியிட்டிருப்பதைக் கவனிக்கவே இல்லை. பாராட்டுகள் ஆசிரியருக்கு. நன்றாக வந்திருக்கு என்பதோடு அதில் தேதியைக் குறிப்பிட்டிருப்பது இன்னமும் அருமையான யோசனை. வாழ்த்துகள்.

      நீக்கு
    6. படப் பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  7. அடி விழறதுக்குள்ளே ஓடிடறேன்! விடு ஜூட்! :)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அடி விழறதுக்குள்ளே ஓடிடறேன்! விடு ஜூட்! :))))))) //

      ஹஹ்ஹஹ்ஹா.

      நீக்கு
    2. //கதைப்படி இறப்பதாக எழுதினாலும் அது கதாநாயகியைப் பொறுத்தவரை உண்மை அல்லவா? ஆனாலும் தர்க்கரீதியாகச் சரியாக இல்லை என்றே தோன்றுகிறது. என் எதிர்பார்ப்பும் ஒரு காரணம்.//

      என்ன தர்க்க ரீதி?.. புரியலையே! எதுவுமே உண்மையில்லை. எல்லாமே ஒரு கதையை நடத்திச் செல்வதற்காக கதாசிரியர் அமைக்கும் களம் தானே, கீதாம்மா?.. இறந்தவராக கதையில் சொல்லப்படுபவர், இறக்கவில்லை என்று கதாநாயகிக்கு தெரியப்படுத்தப்படுகிறார். அவ்வளவு தானே?.. எல்லாமே கதை நிகழ்வுகள். இதைப் புரிந்து கொள்வதில் என்ன சிக்கல்?.. உங்கள் எதிர்பார்ப்பும் காரணம் என்றால் உங்கள் எதிர்பார்ப்பு என்ன? எதிர்மறையாகவா?.. சுப முடிவுக்கு எதிராக உங்களை எதிர்ப்பார்க்க வைத்து சுப முடிவில் கதையை முடித்ததா?
      வழக்கமாக நீங்கள் வாசிக்கும் கதைகள் போல் அல்லாமல் ஒரு சோதனை முயற்சியை மேற்கொண்டதால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை போல் தோன்றுகிறது: அது என்ன சோதனை முயற்சி?

      ஆரம்பத்திலிருந்து ஆரம்பித்து, இப்படிக்கு சீதா என்று முடியும் வரை எங்கள் பிளாக்கில் ஒரு கதையை பிரசுரித்து விட்டு இந்தக் கதையை மாற்றி எழுத வேண்டும்..' என்று ஒரு போட்டி வைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

      'சும்மா சொல்லக்கூடாது.. நிலா பத்திரிகையில்' என்று ஆரம்பிக்கும் பகுதியிலிருந்து--- அன்புடன், சீதா' வரை வரும் பகுதி தான் அப்படி மாற்றி எழுதப்பட்ட கதை.

      இந்த இரண்டு பகுதிகளையும் ஒன்றாக்கி சீதா என்ற கதாசிரியர் ஒரே கதையாக நிலா பத்திரிகையில் எழுதியிருக்கிறார். அவ்வலவு தான். இப்பொழுது புரியும் என்று நினைக்கிறேன்.





      நீக்கு
  8. பதில்கள்
    1. ஆஹா.. அந்த சுபத்தில் தான் டிடிக்கு எவ்வளவு திருப்தியும், நிம்மதியும்?..

      சுபமாய் முடிந்ததல்லவா, அதுவே போதும் என்ற திருப்திக்கு இணை வேறெதுவும் இல்லை, டிடி. நன்றி.

      நீக்கு
  9. நல்லா இருக்கு .. முடிவு சுபமாய் முடிக்கணும்னு இப்படி ஒரு முடிவு :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரெக்ட்! அதுக்குத் தானே இத்தனை பாடும்.. அப்பொழுது தான் சிந்திய வியர்வையின் அருமையும் புரியும்.

      //கதையில் தானே இறக்கிறார் ?? நிஜத்தில் இல்லையே . அதுவரை கதைதானே எழுதி இருந்தாங்க அதன்படிதான் படிக்கணும்//

      சரியான வாசிப்பில் விளைந்த பலன். நீங்கள் இந்த பின்னூட்டை இட்ட தருணம் அருமையானது.
      இரண்டே வரியில் வாசிப்பின் தாத்பரியத்தை விளக்கியிருக்கிறீர்கள். நன்றி.


      நீக்கு
  10. பதில்கள்
    1. அது நல்லதாக மனதுக்கு படும். அவ்வளவு தான் வெங்கட்.

      பலவித சிக்கல்களுக்குப் பிறகு சுபம் என்பது தான் ஆழ்ந்து ரசிக்கப்படுவதாக இருக்கும் என்பது உளவியல் உண்மை. அதனால் சுபம் இல்லாத நிலைகளுக்கு எல்லாம் போக்குக் காட்டி சுபத்தில் முடிவதாக
      பல கதைகள் அமைகின்றன.

      நீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. எங்கள் பிளாக் ஆசிரியர் குழுவிற்கு,

    நிலா பத்திரிகைக்கான அந்த அட்டைப் படம் பிரமாதமாக இருக்கிறது. அதுவும் பத்திரிகையின் பெயரின் கீழே மே 5,2020 என்ற தேதி, பத்திரிகையின் நிலா லோகோ எல்லாமே பிரமாதம்! ஒரு பத்திரிகையின் அட்டையை மனதில் உருவாக்கிக் கொள்வதில் எவ்வளவு கற்பனைத் திறன் என்று வியந்து போனேன். நாம் எல்லாம் சேர்ந்து ஒரு சிறு பத்திரிகை ஆரம்பிப்போம் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு நிலா என்றே பெயரிடுவோம்.

    எங்கள் பிளாக்கின் திறமைக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இதனை ஆதரிக்கிறேன்..

      யாரது அங்கே!..
      நிலா உதயமாகட்டும்!..

      நீக்கு
    2. பாராட்டுகளுக்கு நன்றி!

      நீக்கு
    3. உதயமாகட்டும்; அதற்கான முயற்சிகளை எவ்கள் பிளாக் எடுக்கட்டும்.

      இன்று வந்ததும் அதே நிலா என்றில்லாமல் புதுமையாக இருக்கட்டும்.

      நீக்கு
  13. கதையில் நிறைய திருப்பங்களை கொடுத்து கதையை சுபமாய் முடித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, கோமதிம்மா. கதையை எழுதிய முறை புரிந்ததில் எனக்கும் திருப்தி.

      நீக்கு
  14. பழைய சம்பவங்கள் நினைவில் இருப்பது போல் அண்மைய நிகழவுகள் நினைவில் இருப்பதில்லை இந்தக்கதையையே எடுத்துக் கொள்ளுங்கள்முதலிரு வாரம் படித்தது இனைவுக்கு வரவில்லை கோர்வையாக எண்ண மறுமுறையும் படிக்கவேண்டி வந்தது பொதுவாக கதைகள் அதன் ஆசிரியரின் கற்பனை நன்றாக உள்ளது இல்லை என்று அபிப்பிராயம் சொல்வதில்லை ஆனால் கதையை சிரமப்பட்டு நகர்த்தினால் போல் தெரிகிறது ஜீவியின் திறமை எடுபடவில்லையோ என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கதையை சிரமப்பட்டு நகர்த்தினால் போல் தெரிகிறது ஜீவியின் திறமை எடுபடவில்லையோ என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை..//

      அடுத்த கதையை எடுபடுகிற மாதிரி இதே பகுதியில் எழுதுகிறேன். நன்றி ஐயா.



      நீக்கு
  15. நிலா பத்திரிக்கையின் அட்டை எபியின் டிசைனா

    பதிலளிநீக்கு
  16. ஜிவி சார், இப்போதுதான் வர முட்ந்தது. தாமதத்திற்கு மன்னிக்கவும். எவ்வளவு திருப்பங்கள், எவ்வளவு திக் திக் கணங்கள். இதை எல்லாம் தாண்டி சீதாவை சந்தேகிக்கும் மனிதர்களை நிந்திக்க தோன்றுகின்றது. ஆனால், அதுதான் உலகம் என்பதும் புரிகின்றது. நான் மத்திய சுங்கத் துறையில் வேலை செய்வதால், என் மாமனார் அடிக்கடி சொல்வார் "நாம் நெருப்பாக இருந்தால் போததம்மா. நாம் நெருப்பு, தொட்டால் சுடும் என்பதை பிறருக்கு உணரும்படி நடந்து கொள்ள வேண்டும்" என்று. ஆண் என்பதால் அவருக்கு அதில் உள்ள சிக்கல் புரியவில்லை. எவ்வளவு பேரிடம் சென்று இதை உணர்த்துவது? இதுவே வாழ்க்கை வழியாகி விடும் போலிருக்கின்றதே என்று நினைப்பேன். சீதாவின் நிலையும் அதுதான்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்பொழுது வந்தால் என்ன?.. படித்து விட்டீர்கள், அல்லவா?.. சீதாவின் நிலை வித்தியாசமானது.. அதனால் தான் சமூகத்தின் பார்வை கோணலாகிறது. தங்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  17. காலையில் மூன்றாம் பகுதி படித்தேன். உண்மையா, தலையும் புரியலை வாலும் புரியலை. இரண்டு வாரங்கள் ஓரளவு சீராகப் போன கதை, இன்றைக்கு எப்படி எப்படியோ போயிருக்கிறதே, ஜீ வி சாரிடமிருந்து இப்படியா எனத் தோன்றியது (இதற்கு முன்பு எழுதிய கதை-அதுவும் மூன்று வாரங்கள்தான். ரொம்பவே நன்றாக-சூப்பராக எழுதப்பட்டிருந்த கதை). இன்றைய பகுதியில் என்னைக் கவர்ந்த ஒரே விஷயம் மிகப் பொருத்தமான படம். அது மட்டும்தான் ஆச்சர்யப்படுத்தியது.

    மதியம் மீண்டும் மூன்று பாகத்தையும் படித்து எப்படி எழுதியிருக்கிறார் எனப் பார்த்தேன். கதையின் வடிவத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. நல்ல முயற்சி.

    இருந்தபோதிலும் இந்தக் கதை முழுவதுமாக என்னை ஈர்க்கவில்லை. சச்சின் டெஸ்ட் மேட்சில் 57 ரன்கள் அடித்தால் வரும் ஏமாற்றத்தைப் போல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாசிப்பு அனுபவங்கள் இன்னும் சிறக்க வேண்டும். எதை வாசித்தாலும் நம் வாசிப்பைத் தொடர வைப்பது அதை சொல்லியிருக்கும் விதம் தான். விஷயமே ஒன்றுமில்லாது இருக்கலாம். இருந்தாலும் ஆறு பக்கங்களுக்கு கதை என்ற பெயரில் இவர் இதை எப்படி நடத்திச் சென்றிருக்கிறார் என்று பாருங்கள். சுவாரஸ்யம் ஏற்படும். இது ஒரு கலை. சொல்லப்போனால் கல்வியும் கூட. பல பேரால் சிறப்பாக கதை சொல்ல முடியும். ஆனால் அதை எழுத்தில் வடிப்பது என்பதற்கு பயிற்சி வேண்டும். கதை என்பது எப்பொழுதுமே ஒரு வரி தான். அந்த ஒற்றை வரியை எப்படி நாலு பக்கங்களுக்கு இழுத்தடித்துச் செல்ல முடிகிறது என்பது தான் கதை. கதையே இல்லாமல் கதை எழுதுவது தான் கில்லாடித்தனம். எப்படியோ கால் மணி நேரம் உங்களை தன் எழுத்தை வாசிக்க பிடித்து வைத்திருந்தால் போதும், உங்களை அவர் வெற்றி கொண்டு விடுகிறார். அவ்வளவு தான் விஷயம். இதில் ஈர்ப்பதற்கு ஒன்றுமில்லை. ஈர்க்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. 'நமக்கும் தெரிந்த விஷயம் தான் இது; இவனுக்கு மட்டும் இதை எப்படி இப்படிச் சொல்ல முடிந்தது' என்று ஜஸ்ட் நீங்கள் வியந்தால் போதும். உங்களில் இல்லாத ஒரு திறமை அந்த ஆளிடம் இருக்கிறது என்று அர்த்தம். அந்த ஆளிடம் இல்லாத இன்னொரு திறமை உங்களிடம் இருக்கும். அதனால் இதெல்லாம் விஷயமே இல்லை. ஒரு தேடல் தான். உலகத்தில் இந்த மாதிரி நிறைய தேடல்கள் இருக்கின்றன. வெறும் துளைகள் போட்ட மூங்கில் குழாய் தான். அதை விற்றுக் கொண்டு வரும் இளைஞன் அதை வாசித்துக் கொண்டே வருவான். 'அட, இவ்வளவு ஈஸியா இது?' என்று வாங்கி உதட்டில் பொறுத்தி வாசித்துப் பார்த்தால் நம்மால் முடியாது. அது தான் பயிற்சி; தொடர்ந்த பயிற்சி தான் கலையாகிறது.

      வாழ்க்கை என்பது நிமிஷத்துக்கு நிமிஷம் ரசனை தான். நமக்குத் தான் தெரிவதில்லை.

      நீக்கு
    2. வாசிப்பு அனுபவத்துக்கும் இந்தக் கதை விமரிசனத்துக்கும் என்ன சம்பந்தம்னு புரியலை. பக்கங்கள் ஒரு பொருட்டே இல்லை. சொல்லப்படும் விஷயம், கதைக்கரு கவரவில்லை. அதைத் தான் நெல்லையும் சொல்லி இருக்கார்னு நினைக்கிறேன்.

      நீக்கு
  18. மிக மிகத் தாமதமாக வருகிறேன்.
    மன்னிக்கணும் ஜீவி சார்.
    வாழ்க்கையில் நடப்பது போலவே பல நிகழ்ச்சிகளைக் கோர்த்து
    கதை செல்கிறது.
    சந்தேகத்தின் பேரில் முடியும் வாழ்க்கைகள் எத்தனையோ.
    நானும் பார்த்திருக்கிறேன்.
    இந்த எழுத்தின் உரிமை கோரும் சீதா ,
    நல்ல எழுத்தாளினியாக மாறிவிட்டார்.
    அதன் மூலம் காதலர் இருவரையும் சேர்த்து வைத்திருக்கிறார்.
    இத்தனை எழுதியும் கதை பிரசுரமாகாதிருந்தால்
    விரயமாகி இருக்கும்.

    நிஜ வாழ்க்கை நாடகத்தை விட உண்மையானது.
    இளவயதில் முதிர்ச்சி அடையாமல் தற்கொலைக்கு முயல்வதும்
    நடப்பதே.
    அருமையான கதைக்கும் எபியின் நிலா பத்திரிக்கை லே அவுட்
    பிரசுரத்திற்கும் வாழ்த்துகள். பிரமிப்பாக இருக்கிறது.
    வாழ்த்துகள் கௌதமன் ஜி, அண்ட் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  19. தற்கொலை தவிர்க்கப்பட்டது வரை நலமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த விஷயத்தில் பல தற்காலிகமாக இருப்பது தான் வேதனையே, தேவகோட்டையாரே!

      நீக்கு
  20. பல திருப்பங்களுடன் சுபமான முடிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுபமான முடிவுக்காக பல திருப்பங்கள் என்பதே சரிங்க.

      நீக்கு
  21. எனக்கு கதையைப் புரிந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை. கீதா அக்காவின் பின்னூட்டம்தான் என்னை குழப்பியது. மீண்டும் கதையை முழுமையாக படித்துவிட்டு பின்னூட்டமிடலாம் என்று  நினைத்தேன். அதற்கு இவ்வளவு நேரம் ஆகிவிட்டது. நான் சொல்ல நினைத்ததை எல்.கே. சொல்லி விட்டார். இதற்கு முன்னாள் விவரித்த சம்பங்கள் எல்லாம் கதை என்பது ஒரு முக்கியமான ட்விஸ்ட். சேர்ந்தாற்போல் படித்திருந்தால் அதி புரிந்து கொள்வதில் சிரமம் இருந்திருக்காதோ? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, பா.வெ!

      எஸ். நீங்க சொல்றது தான் சரி. கீதாம்மாவுக்கு சென்ற கதை போக்கு மறந்திருக்கலாம். முக்கியமாக பத்திரிகையில் சீதா எழுதும் முழுக்கதையும் இது தான் என்பது இரண்டாம் அத்தியாயம் வாசிக்கும் பொழுது புரிபடாமல் போயிருக்கலாம். அதனால் தான் பள்ளிக்கூட நடவடிக்கைகளை மட்டும் உண்மைக் கதையாக நினைத்திருப்பார்கள் போலிருக்கு.

      நெல்ல விஷயம் நமக்குத் தெரிந்தது. கோர்வையாக முழுக்கதையும் படிப்பது தான் அவருக்கு பழக்கமானது.
      முழுப்புத்தமாக இருந்தால் கூட ஆரம்ப டிவிஸ்ட் வரும் பொழுதே பொறுக்க முடியாமல் இறுதி அத்தியாயத்தைப்
      பார்த்து இதற்காகத் தான் இது என்று தெரிந்து தான் தொடர்ந்து வாசிப்பதே வழக்கமாக இருந்திருக்கிறது. அதனால் தான் மூன்று அத்தியாயத்தையும் சேர்ந்து படிக்கையில் கதையின் போக்கு அவருக்கு தெரிந்திருக்கிறது.
      இருந்தாலும் கதையின் சில நிகழ்வுகள் அவருக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம்.

      ஆரம்ப வரியிலிருந்து கடைசி வரி வரை நிலா பத்திரிகையில் பிரசுரமான கதை என்பது தான் கூடுதல் சுவாரஸ்யம்!

      நீக்கு
  22. அடடா! எப்போ வந்தா என்ன வல்லிம்மா, வாசித்து விட்டீர்கள் அல்லவா?.. அதுவே பெரும் திருப்தி.

    'இத்தனை எழுதியும் கதை பிரசுரமாகாதிருந்தால் விரயமாகி இருக்கும்' என்ற வரியைப் பார்த்து சிரித்தே விட்டேன். நிஜ வாழ்க்கை நேரடி சூடு! அந்த சூட்டை எப்படித் தவிர்க்கலாம் என்பதற்கான யோசனைகள் தாம் இந்த மாதிரி கதை, நாடகம் எல்லாம். எங்காவது, யாருக்காவது, எப்படியாவது உதவியாக இருப்பது தான்
    எழுத்தின் வீரியம். சொல்லப்போனால் நடந்தவைகள் தாம் நடந்திருக்க வேண்டாமே என்ற கோணத்தில் யோசனைகளாகின்றன. அறியாமைத் தவறுகளைக் களைவதே எழுத்தின் பணியாக இருப்பதே ஆரோக்கியமானது.

    கெள அண்ணனின் கைவண்ணம் போலிருக்கு; அசந்தே போய் விட்டேன். சத்தப்படாமல் செயல்பாடு அவரது.
    கதையில் கரெக்டாக தேதி மாற்றியிருக்கிறார்; 'நிலா' முகப்பு அட்டையில் அதே தேதியைப் போட்டிருக்கிறார்;
    எல்லா தேதிகளையும் இந்தக் கதையின் மூன்றாவது பகுதி வெளிவரும் இன்றைய தேதியாக இருக்குமாறும் கவனம் கொண்டிருக்கிறார். அட்டைப்பட நங்கை நல்லாள் யாரது யாரது - பேரெது, பேரெது மட்டும் எனக்குத் தெரியாத விஷயம். எங்கள் பிளாக்கின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எல்லாமே அஸ்திவாரமாக இருப்பது தான் நம் மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!