செவ்வாய், 5 ஜனவரி, 2021

கேட்டு வாங்கிப் போடும் கதை :  அன்பின் வழியது - துரை செல்வராஜூ 

அன்பின் வழியது
துரை செல்வராஜூ 
**********************  

வசுமதி காலையில் இருந்தே ஒன்றும் சாப்பிடவில்லை... கேட்டால் பிரதோஷம் என்கிறாள்... 

' உடம்பு என்னத்துக்கு ஆகிறது காலம் இருக்கிற இருப்பில்!.. '

சங்கரியின் மனம் எதிலும் செல்லவில்லை - 'அக்கா இப்படி உடலை வருத்திக் கொண்டு விரதம் இருக்கிறாளே..' - என்று...

ஆனாலும் வசுமதி மறுபடியும் குளித்து விட்டு கோயிலுக்குப் புறப்பட்டு விட்டாள்...

" சங்கரி.. நீ கிளம்பலையா?..."

" இதோ.. கிளம்பிட்டேன்!... " - முகம் கழுவி தலை முடித்து வேறு உடைக்கு மாறியிருந்தாள் சங்கரி...

அர்ச்சனைக்கான பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டாயிற்று...

" வேற என்னக்கா!.. " - சங்கரி வினவினாள்..

" அங்கே சாமி மாடத்துக்கிட்ட ரெண்டு டிபன் பாக்ஸ் இருக்கு பாரு.. அதையும் எடுத்துக்க!... "

" டிபன் பாக்ஸ்?... அது எதுக்கு!.. " - சங்கரிக்கு ஆச்சர்யம்...

" பிரசாதம் வாங்குறதுக்கு!... "

" கையில கொடுப்பாங்க... வாங்கி சாப்பிட்டுட்டு வராம - டிபன் பாக்ஸ் எல்லாம் எதுக்கு?... "

" நீ அங்கே வந்து பாரு .. உனக்குப் புரியும்!.. "

வசுமதியின் முகத்தில் புன்னகை...

" கோயிலுக்குப் போனோமா... சாமி கும்பிட்டோமான்னு இருக்கணும்... பிரசாதம்ன்னு வரிசையில நிக்கிறது..  இல்லேன்னா கூட்டத்துக்குள்ளே முட்டி மோதி மண்டைய உடைச்சிக்கிறது...  அங்கே எல்லாம் இந்த  கிராமம் மாதிரி இல்லை!... "  என்றாள் சங்கரி...

அங்கே என்பது தமிழகத்தின் பெரியதொரு நகரத்தை...

அதை நினைத்ததும் சிரிப்பு வந்தது வசுமதிக்கு...

" அப்பாவுக்கு மாற்றல் ஆனதாலே மகாராணி நீங்க இப்போ அந்த ஊர் வாசி!..அதுக்கு முன்னால இந்த மாதிரி கூட இல்லை.. இதை விட சின்ன கிராமத்துக்காரி தானே!... "

" அதுக்காக பட்டிக்காடாகவே இருக்கணுமா!.. " - சங்கரிக்கு வியப்பு...

" எது பட்டிக்காடு?.. கோயில்ல பிரசாதம் வாங்குறதா!... " - வினவிய வசுமதியை சங்கரி இடைமறித்தாள்...

" அதுசரி.. நீ பாட்டுக்கு கோயிலுக்குக் கிளம்பிக்கிட்டு இருக்கிறே.. அத்தான் வந்துடுவாங்களே!... "

" அவங்க ஏழரை மணி பஸ்ல தான் வருவாங்க... அதுக்குள்ளே நாம திரும்பிடலாம்.. "

" ஓ.. கதை அப்படி போகுதா!... " - சிரித்தாள்...

வீட்டைப் பூட்டிய வசுமதி வாசலில் இருந்த ஸ்கூட்டியை நோக்கினாள்..

" அக்கா!.. செருப்பு போட்டுக்கலையா!.. "

" வண்டியில போறதுக்கு செருப்பு எதுக்கு?.. "

" அதுவும் சரிதான்!.. "

" நீ ஓட்றியா.. நான் ஓட்டவா?... "

" நானே ஓட்றேன்... நீ வழிய மட்டும் சரியாச் சொல்லு... "

கிராமத்தின் சாலையில் விரைந்து  ஓடியது - ஸ்கூட்டி..

கொஞ்சம் ஜனசந்தடியான கடைத் தெருவைக் கடந்து வடக்காகத் திரும்பியதும் சிவாலயத்தின் கோபுரம் தெரிந்தது...

கோயிலின் வாசலை நெருங்கியதும் பிரமிப்பில் ஆழ்ந்தாள் சங்கரி...


' இந்த சின்ன கிராமத்துல இவ்வளவு அழகான கோயிலா!.. '

மக்கள் பலரும் கோயிலுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள்...

ஸ்கூட்டி வேகம் குறைந்து நின்றதும் அருகம்புல் மாலைகளுடன் சிறுமி ஒருத்தி ஓடி வந்து -

" அக்கா.. அக்கா... ஸ்கூட்டரை அங்கே விடுங்க.. அக்கா... பத்திரமா பார்த்துக்குறோம்... "

" நீ தான் அருகம்புல் மாலை விக்கிறதுக்கு அங்கேயும் இங்கேயும் ஓடிக்கிட்டு இருக்கியே... ஸ்கூட்டிய யார் பார்த்துக்குவாங்க?... "

" அங்கே எங்க அப்பாரு இருக்காங்க அக்கா.. "


" சரி.. மாலை எவ்வளவு?.. " 

" ரெண்டு மாலை அஞ்சு ரூபா!.. " 

இந்தக் கோயிலில் பெரியதும் சிறியதுமாக இரண்டு நந்திகள்...

ஒவ்வொரு மாலையும் ஒன்றுக்கொன்று மூன்று முழத்துக்குக் குறையாமல் இருந்தன..

சங்கரிக்கு ஆச்சரியம்... ' அங்கே மூணு இணுக்கு அஞ்சு ரூபாய்ன்னு
விற்பானுங்களே!.. '

சிறுமி காட்டிய இடத்தில் ஸ்கூட்டியை நிறுத்தியபோது அங்கிருந்தவர் -

" கோயிலுக்குப் போய்ட்டு வந்து காசு கொடுங்க தாயி!... " - என்றார்...

பத்துப் பன்னிரண்டு வண்டிகள் நின்று கொண்டிருந்தன...

ஒவ்வொன்றுக்கும் இரண்டு ரூபாய்..

' அங்கே என்றால் பதினைந்து ரூபாய்க்கு தாளித்து விடுவார்கள்!... சமயத்தில் பெட்ரோலும் காணாமல் போயிருக்கும்!.. '

அருகம்புல் விற்ற சிறுமியிடம்

" ரெண்டு மாலை கொடும்மா!.. " - என்று ஐந்து ரூபாயை நீட்டினாள் வசுமதி...

சங்கரி சும்மா இருக்காமல்,

" பெரிய நந்திக்கு பெரிய மாலை.. சின்ன நந்திக்கு சின்ன மாலை இல்லையா!.. " - என்றாள்...

" பெரிசா இருந்தாலும் சிறுசா இருந்தாலும் நந்தி ஒண்ணு தானே அக்கா!.. "

சிறுமியின் பதில் கேட்டு திகைத்து நின்ற சங்கரியைப் பார்த்து சிரித்தாள் வசுமதி...

' இந்த பதில் போதுமா.. இன்னும் ஏதும் வேணுமா!... ' - என்பது அதன் அர்த்தம்...

அருகிலிருந்த கிணற்றடியில் கால் கை கழுவிக் கொண்டு கோயிலுக்குள் நுழைந்தனர்...

அண்ணாந்து பார்த்து ராஜ கோபுரத்தை வணங்கிக் கொண்டனர்...

நந்தி மண்டபத்தைச் சுற்றிலும் ஜனங்கள்.. பெரியவர்களும் இளையோர்களுமாக  - சும்மா இராமல் உதிரிப் பூக்களைத் தொடுப்பதும் திரவியப் பொருட்களை சேகரிப்பதும்

நாரத்தம் பழங்களை அறுத்துப் பிழிவதும் மஞ்சள் பொடியை நீரில் கரைப்பதும் கனிந்த வாழைப் பழங்களுடன் சர்க்கரையைச் சேர்த்து பஞ்சாமிர்தம் தயாரிப்பதுமாக...

சங்கரி நினைத்துக் கொண்டாள் - 'அங்கே என்றால் எல்லாவற்றுக்கும் கான்ட்ராக்ட் விட்டிருப்பார்கள்!.. '

பிரதோஷ வேளை நெருங்கியதும் ஆலய மணி முழங்கிட பூஜைகள் தொடங்கின...

நந்தியம்பெருமானுக்கு குளிரக் குளிர பதினான்கு வகையான அபிஷேகங்கள்..

அவை முடிந்து புது வஸ்திரங்கள் சாற்றி மலர் அலங்காரம்... மகா தீபாரதனை...

முட்டி மோதிக் கொள்ளாமல் அனைவரும் தரிசனம் செய்தனர்.. மக்களிடையே கற்பூர ஆரத்தியை எடுத்துக் கொண்டு வந்தார் குருக்கள்...

திருநீறு குங்குமம் அபிஷேக சந்தனமும் அவ்வாறே வழங்கப்பட்டன..

'எனக்கு... உனக்கு..' என்று தள்ளு முள்ளு ஏதும் இல்லை..

அபிஷேக பஞ்சாமிர்தம் தொன்னையில் வழங்கப்பட்டது...

சங்கரிக்கு ஆச்சர்யம்... ' இப்படியும் மக்கள்.. என்ன ஒரு ஒழுங்கு!.. ' என்று..

புஷ்பாஞ்சலி செய்யப்பட்ட பூக்களை வயதான பெண்மணி ஒருவர் எல்லாருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார்...

அவரிடமிருந்து பூக்களைப் பெற்றுக் கொண்டு மூலஸ்தானத்தில் ஸ்வாமி அம்பாளை தரிசனம் செய்தனர்..

பாலாலயம் செய்யப்பட்டிருப்பதால் உற்சவ மூர்த்தி ரிஷப வாகனத்தில் எழுந்தருளியிருந்தார்..

அம்பாள் சந்நிதியில் இருந்த குருக்கள் வசுமதியைக் கண்டதும்

" வாம்மா.. குழந்தே... ஆத்துக்காரர் வரலையா!.. " - என்றார்...

" அவர் பேங்க் விஷயமா கும்பகோணம் போயிருக்கார்... " 

" இவ உன் தங்கையா?..." 

" ஆமாம்... ஸ்வாமி... " 

" என்ன பேர்!.. "

" சங்கரி!... "

சர்வாங்க சுந்தரிங்கறது அம்பாளோட  விசேஷமான நாமம்... நக்ஷத்திரம்?...

சொன்னாள்..

" ஓம்!... "

சங்கல்பத்துடன் அம்பாள் பாதத்தில் குங்கும அர்ச்சனை செய்து ஜாக்கெட் துணி ஒன்றுடன் எலுமிச்சம்பழம், மஞ்சள், சந்தனம், குங்குமம் எல்லாம் கொடுத்து

" சீக்கிரமே மாங்கல்ய பாக்யம் கிடைக்கும்!.. " - என்றார்...

சங்கரிக்கு கண்ணீர் வந்து விட்டது...

அம்பிகையை மீண்டும் வணங்கி விட்டு திருச்சுற்றில் நடந்தனர்...

வடக்குப் பிரகாரத்தில் பிரசாத விநியோகம் நடந்து கொண்டிருந்தது...

சர்க்கரைப் பொங்கல், புளியோதரை,  தயிர் சாதம், சுண்டல் என தனித் தனியாக இலைகளில் வழங்கிக் கொண்டிருந்தனர்..

பிரசாதங்களை வாங்கிக் கொண்டு ஓர் ஓரமாக அமர்ந்து சாப்பிட்டனர்...

வந்திருந்த எல்லாரும் பூஜை முடிந்ததும் பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டு போய் விட்டனர்..

இருந்தும் பொங்கலும் புளியோதரையும் வாளிகளில் ஓரளவுக்கு மீதமிருந்தன..

வசுமதி எழுந்து சென்று கை நீட்டினாள்..

சங்கரிக்கு திடுக்..  - என்றிருந்தது...

" அக்கா!... " - என்றாள்...

" என்ன நினைப்பாங்க உன்னப் பற்றி?... இல்லாதவங்க வேற யாரும் வருவாங்க தானே!.. "

மறுபடியும் இலைகளில் கொடுக்கப்பட்ட பிரசாதத்தை வாங்கி டிபன் பாக்ஸில் வைத்துக் கொண்ட வசுமதி சங்கரியைப் பார்த்து மெலிதாகச் சிரித்தாள்...

" அட.. அல்பமே!.. செய்றதையும் செஞ்சிட்டு சிரிப்பு வேற... நீ வீட்டுக்கு வா... உனக்கு இருக்கு!.. "

சங்கரி மனதுக்குள் கொதித்தாள்.. குமுறினாள்... கடுகடு என்றிருந்தது அவள் முகம்..

" அவங்க என்ன நெனைப்பாங்க?.. "

எதைப் பற்றி அவள் கேட்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட வசுமதி

" ஏதாச்சும் நெனைச்சுக்கட்டும்!... " - என்றாள்..

கோயிலுக்கு வெளியே கூட்டம் இல்லை..

சூரியன் இறங்கிய பின்னரும் வெளிச்சமாக இருக்க -

அந்த ஓரத்தில் இவர்களுடைய ஸ்கூட்டி மட்டும் தனியாக நின்றிருந்தது..

அருகில் அந்தச் சிறுமியும் அவளது அப்பாவும்...

" கோயிலுக்கு வந்தீங்களா.. சாமி கும்பிட்டீங்களா?... "

இயல்பாகக் கேட்டாள் வசுமதி...

" நம்ம கையில.. ஒரு பொழப்ப வாங்கியாச்சு... அத உட்டுட்டு நம்ம இஷ்டத்துக்குப்  போறது தப்பு ஆச்சே தாயி!.. கோயிலுக்கு உள்ள ஐயரு சொன்ன மந்திரம் எல்லாம் மைக்கு வழியா காதுல விழுந்துச்சு.. அதைக் கேட்டுக்கிட்டு கையெடுத்து கும்பிட்டுக்க வேண்டியது தான்!... "

சலனமில்லாமல் சொன்னார் அவர்...

" இந்தாங்க.. சாப்பிடுங்க...

உங்களுக்காகத் தான் கொண்டு வந்தேன்!.. " - என்றபடி டிபன் பாக்ஸில் இலையோடு இருந்த பிரசாதத்தை எடுத்து இருவரிடமும் கொடுத்தாள்...

" பாருங்க.. சாமியே சாப்பிடக் கொடுத்து விட்டுருக்கு இதுக்கு மேல என்ன வேணும்?... " 

அவர் கோயிலைப் பார்த்துக் கை கூப்பினார்...

" சரி..  நாங்க போய்ட்டு வர்றோம்!.. " - என்றபடி இரண்டு ரூபாயை நீட்டினாள் வசுமதி...

" என்னா இது?.. "

" வண்டிக் காசு!.. "

" எதுக்கு இது?.. எங்களையும்  மதிச்சு பொங்க சோறு கொடுத்தீங்களே... அந்த மாதிரி நா ஒங்களை மதிக்க வேணாமா?.. "

" அது வேற.. இது வேற... "

" ரெண்டும் ஒண்ணு தான் தாயி... முன் கை நீண்டாத் தான் முழங்கை நீளும்!... இனிமே எப்ப கோயிலுக்கு வந்தாலும் ஒங்களுக்கும் ஒங்க வண்டிக்கும் நான் காவல்... நம்ம எல்லாருக்கும் அந்த ஈசுவரன் காவல்!... "

இப்போது வசுமதியின் கண்களில் நீர்..

சங்கரி முகம் மலர்ந்து அக்காவின் கன்னங்களை வருடி முத்தமிட்டாள்.


ராஜ கோபுரத்தின் உச்சியில் - பளீர்.. என விளக்கு ஒளிர்ந்தது...

ஃஃஃ

56 கருத்துகள்:

  1. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி..

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...
    என்றென்றும் நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  3. இன்று எனது கதையைப் பதிவு செய்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் திரு கௌதம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி...

    பதிலளிநீக்கு
  4. இன்று கதைக் களம் காண வரும் அனைவருக்கும் அன்பின் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  5. இன்றொரு ஓவியரும் புதிதாய்த் தோன்றியிருக்கின்றார் எனில்
    தமிழுலகம் செய்த புண்னியம் தான் என்னே!...

    மகிழ்ச்சி.. நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வணக்கம் துரை,
      இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      எல்லோரும் எப்போதும் நலமாக இருக்க வேண்டும்.
      இறையருள் முன்னிற்கட்டும்.

      நீக்கு
    2. து செ சார் ! :))))
      இறையருள் முன்னிற்கட்டும். நன்றி.

      நீக்கு
  6. நந்தி மத்தளம் கொட்ட சிவ நடனம் நடக்கும் பிரதோஷ வேளைக் கதை
    அன்பின் வடிவமாக வந்திருக்கிறது.
    ஸ்கூட்டி வைத்திருக்கும் கிராமத்து வசுமதி.
    சென்னையுடன் ஒப்பிடுவதிலேயே
    இருக்கும் சங்கரி.
    டிஃபன் பாக்ஸ் மர்மம் எல்லாமே சுவை.

    கோவில் அழகு.
    மக்கள் அருமை.
    பூ விற்கும் சிறுமியும் ,தந்தையும் பேரருமை.
    கேஜி ஜியின் ஓவிய ஆற்றல் இத்தனை நாள் எங்கிருந்தது!!!!

    ''கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே.
    சங்கு சுட்டாலும் வெண்மை தரும்''

    வசுமதியின் உள்ளத்துக்கு நல்ல பதில் தந்த பெரியவர்.

    இனிமை நிறைந்த கதையைத் தந்த அன்பு துரைக்கு
    மனம் நிறை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. அன்பின் வாழ்த்துரைக்கு நன்றியம்மா..

      நீக்கு
  7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் பெருகித் தொற்றுக்கான தடுப்பு மருந்து நன்கு செயல்படவும் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  8. சர்வாங்க சுந்தரி என்றதும் அசந்துட்டேன். அட இது நம்ம கருவிலி கோயில் ஆச்சே என்னும் நினைப்புத் தோன்றியது. அதே போல் அங்கே நடப்பது போன்ற விஷயங்கள் இங்கேயும் நேரில் பார்த்தாப்போல் காட்டிவிட்டார் தம்பி துரை அவர்கள். ஆனால் அங்கே கோயில் வாசலில் பூக்கடைகள் கிடையாது. செருப்புக்களையோ, வண்டிகளையோ பார்த்துக்கொள்ளும் பொறுப்பிலும் இன்னமும் யாரும் கிளம்பவில்லை. கோயில் வாசலில் வண்டிகளை நிறுத்திட்டு உள்ளே போய் ஸ்வாமி தரிசனம் செய்யலாம். செருப்புக்களையும் அங்கேயே ராஜகோபுர வாசலில் வெளியே போட்டுட்டுப் போகலாம். மற்றபடி உள்ளே நடப்பவை எல்லாம் சற்குணேஸ்வரரையும், சர்வாங்க சுந்தரியையுமே நினைவூட்டியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்.. பரிகாரக் கோயில்கள் என்று பிரபலப்படுத்தப்பட்ட பெரும்பாலான கோயில்களில் வசூல் வேட்டை தான்.. திருநாகேஸ்வரத்தில் பார்க்க வேண்டுமே!.. இன்னும் கருவிலிக் கொட்டிட்டை தரிசனம் செய்ததில்லை.. ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன் மங்கையர் மலர் வழியாக அறியப் பெற்ற திருத்தலம்...

      நீக்கு
  9. சென்ற வார என் கதைக்குக் கூட கௌதமன் சார் தான் படம் வரைந்திருந்த நினைவு. அன்றே சொல்ல நினைச்சு விடுபட்டுவிட்டது. அழகாய்ப் பொருத்தமான படம். ராஜகோபுரம் அழகும் கடைகள் வரிசை கட்டி நிற்பதும் கூட அழகு தான். ஆனால் சில கிராமங்களில் இந்தக் கிராமம் மாதிரிக் கம்மி விலையில் அருகம்புல் மாலையோ, மற்றப் பூக்கள் கொண்ட மாலைகளோ விற்பதில்லை. விலை அதிகம் சொல்லுவார்கள். அதோடு சில கிராமங்களின் ஊருக்குள் நுழையும்போதே நுழைவு வரியும் வசூலிப்பார்கள். இது அதிகம் பிரபலம் ஆகாத கிராமத்துக் கோயில் என்பதால் இன்னமும் கிராமத்தின் பண்பு சீர்கெடாமல் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. நல்லதொரு கதையைக் கொடுத்து அதன் மூலம் நினைவலைகளை மீட்டிய துரைத் தம்பிக்கு மனமார்ந்த நன்றி கதை வழக்கம்போல் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  11. நல்ல கதை. அருமையான உரையாடல்கள். நல்ல பண்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறீர்கள். பாராட்டுகள் துரை செல்வராஜு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. 'சங்கத் தமிழ் மூன்றும் தா..' என்று இறைவனிடமே கோரிக்கை வைத்த அன்பிலே பிறந்த கதை போலிருக்கு.
    வீட்டிலேயே ச.பொங்கல் செய்து கொண்டு போய் அதை இறைவனுக்கு படைத்து தான் படைத்ததைப் பகிர்ந்து பகிர்தலின் ஆழ்மன அர்த்தத்தைக் கூட்டியிருக்கலாம் என்று வாசிப்பின் நேர்த்தி உணர்த்தியதை மறைக்காமல் சொல்லி விடுகிறேன்.
    கதை அம்சத்தைக் குறைத்து நிகழ்வு வர்ணிப்பில் அதிகம் கவனம் செலுத்துவதில் லேசான மாற்றங்கள் கொள்ளலாமோ என்றும் தோன்றிற்று.
    படைப்பாக்கங்களில் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள், தம்பி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி அண்ணா..

      நீக்கு
    2. கதை இப்படிப் போயிருக்கலாம் என்று சொல்வது சரியாகுமா ?

      பிரசாதத்தில் மருந்து கலந்து எலிகளுக்கு வைத்தாள் என்று கூட கதாசிரியர் எழுதலாம். அது அவர் உரிமை அல்லவா ?

      உணவைக் காசு கொடுத்து வாங்கி கோயில் வாசலில் ஏழைகளுக்கு வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்த ஒரு உறவினர் இருந்தார்.

      நீக்கு
    3. தங்களுக்கு நல்வரவு..
      அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  14. ஒரு கோவில் தரிசனம் கதையாகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  15. கருணை, மனித நேயம்,இவைகளை கிராமீயத்தோடு கலந்து தருவதில் துரை செல்வராஜூ சாருக்கு இணை அவர்தான். கோவிலுக்குச் செல்லும் வசுமதி ஒரு டிபன் பாக்ஸுகளை எடுத்துக் கொள்ளும் பொழுதே கதையின் ஓட்டம் புரிந்து விடுகிறது, என்றாலும் ரசிக்க முடிந்தது. ஒரு சின்ன சந்தேகம், நகர்ப்புற கோவில்களில் நடப்பது போல் விமர்சையாக பிரதோஷம், சங்கடஹரசதுர்த்தி போன்றவை கிராமங்களிலும் நடக்கின்றதா? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      ஆங்காங்கே வழிபாட்டுக் குழுக்கள் அமைக்கப் பெற்று விசேஷ நட்சத்திர நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன...

      அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
    2. நாங்கள் அறிந்தவரை கருவிலி, ப்ரவாக்கரை இரண்டு கிராமங்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. அந்த அந்த மாசத்தில் என்னென்ன வழிபாடுகள் சிவனுக்குச் சிறப்போ அவற்றை முறையாகச் செய்கின்றனர். எங்களுக்கு வழிபாடு/அபிஷேஹங்கள் முடிந்ததும் கருவிலிக் கோயிலில் இருந்து படங்களோடு தகவல் வரும். இப்போது தான் நடராஜர் அபிஷேஹத்தைத் திருவாதிரை அன்று வாட்சப் மூலம் நேரிலேயும் பார்த்தோம். பின்னர் படங்களும் வந்தன.

      நீக்கு
    3. கருவிலி கோயிலில் பிரசாதம் மிஞ்சினால் அக்கம்பக்கம் உள்ள பட்டி, தொட்டிகளில் உள்ளவர்கள் அனைவரையும் அழைத்தூக் கொடுப்பார்கள். எல்லாக் கோயில்களுக்கும் நாம் வீட்டிலேயே செய்து கொண்டு போகவும் முடியாது. அரிசி, பருப்பு, வெல்லம், நெய்,முந்திரிப்பருப்பு, ஏலக்காய் போன்றவற்றை குருக்களிடம் அவர் கேட்டாற்போல் கொடுத்தால் அவர் தான் செய்து நிவேதனம் பண்ணுவார். நம்மைப் பண்ணி எடுத்துவரச் சொன்னால் அதைக் கருவறையில் வைத்து நிவேதனம் பண்ண முடியாது. அதிலும் இம்மாதிரிப் பிரதோஷம் போன்ற நாட்களில் நாம் தனியாக நிவேதனம் கொண்டு போனால் (பெரும்பாலும் காப்பரிசி, தயிர்சாதம்) அதை நாம் தனியாகத் தான் ஸ்வாமிக்கும், நந்திக்கும் காட்டி நிவேதனம் செய்து நாமே விநியோகிக்க வேண்டும். இங்கே அம்மாமண்டபம் காவிரிக்கரையில் உள்ள சிவன் கோயில் பிரதோஷத்திலும் அப்படியே நடந்தது. குருக்கள் தயாரிப்பில் நிவேதனம் தயாரித்து வழிபாடூ செய்து நிவேதனமும் செய்து
      வழிபட்ட பின்னர் விநியோகித்தால் அது தான் பிரசாதம். நாம் கொண்டு செல்வது நம்மளவில் வேண்டுமானால் பிரசாதம் எனலாம்.

      நீக்கு
  16. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  17. புது ஓவியர் திரு.கே.ஜி.ஜி. அவர்களை கை தட்டி வரவேற்கும் அதே நேரத்தில், அவருடைய ஓவியத்தில் சில குறைகளை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்(அதுதானே,அது இல்லாமலா?)இரண்டு இளம் பெண்கள், இருவருமே புடவை அணிந்து கொண்டிருப்பது போல் வரைந்திருக்கிறார். இந்தக் காலத்தில் எந்த  இளம் பெண் புடவை கட்டிக் கொள்கிறாள்? புடவை என்பது பண்டிகை காலங்களில் மட்டும் அணியும் ஒரு உடை ஆகி விட்டது. கிராமத்து பெண்..? என்று கேட்கிறீர்களா? கிராமங்களிலும் இன்று இதே நிலைதான். கிராமங்களில் வசிக்கும் இளம் பெண்கள், அதுவும் ஸ்கூட்டி  ஓட்டும்  பெண்கள் புடவை அணிவார்களா?இரண்டாவது தவறு, அதில் ஒரு பெண் குட்டைக் கை ரவிக்கையும், இன்னொரு பெண் நீள கை ரவிக்கையும் அணிந்திருப்பதாக வரைந்திருக்கிறீர்கள். நீள கை ரவிக்கை அவுட் ஆப் பேஷன். பெண்கள் படங்கள் வரையும் முன் இந்த விஷயங்களை  கவனியுங்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நியாயம் தான்..
      நானும் கருத்தில் கொள்கிறேன்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. ம்ம்ம்ம், பானுமதி இந்தக் காலத்தில் கூட நீளக்கை வைத்துப் போடுவதைப் பார்த்ததே இல்லை போல! பல நெடுந்தொடர்களிலும் ஒரு சில நிகழ்ச்சிகளிலும், விளம்பரங்களிலும் இளம்பெண்கள் நீளக்கை வைத்தும் ப்ளவுஸ் போட்டுக்கொள்கிறார்கள். அதோடு கோயிலுக்கு வரும் பெரும்பாலான பெண்கள் எங்கள் கிராமத்தைப் பொறுத்தவரையில் புடைவை அல்லது பாவாடை, தாவணி அணிந்தே வருவதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். ஒரு சில இளம்பெண்கள் சல்வார், குர்த்தாவில் வந்தாலும் அவர்கள் பள்ளியில் படிப்பவர்களாய் இருப்பார்கள், இப்போதெல்லாம் அரசுப் பள்ளிச் சீருடையே சல்வார், குர்த்தா தானே!

      நீக்கு
    3. ஒரு சில கோயில்களில் உடைக்கான கட்டுப்பாடுகள் இன்னமும் கடைப்பிடிக்கின்றனர். அதோடு வசுமதி திருமணம் ஆனவள், சங்கரி திருமணம் ஆகாதவள், அந்த வித்தியாசத்தைக் காட்டக் கூட திரு கௌதமன் அப்படி வரைந்திருக்கலாம். இது என் யூகமே! மற்றபடி இப்போதும் நீளக்கை முழங்கைக்கும் கீழ் வரை வரும்படி தைத்து அணியும் பெண்கள் உண்டு.

      நீக்கு
  18. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    தாங்கள் எழுதிய கதை மிகவும் நன்றாக உள்ளது. சிவன் கோவில் பிரதோஷ தரிசனங்களை கதை வழியே நன்றாக மனத்திற்கு திருப்தி தரும் வண்ணம் தந்திருக்கிறீர்கள். வசுமதியின் நல்ல செயல் பாராட்டதக்கது. ஏழைகளுக்கு உதவும் நல்ல எண்ணம் கொண்ட அவளை இறுதியில் தங்கை புரிந்து கொள்வது போன்று கதை முடித்திருப்பது சிறப்பாக இருக்கிறது.

    ஒவ்வொரு உயிருக்கும் தினமும் படியளப்பதைதானே மகேஷ்வரர் செய்து வருகிறார். பிரதோஷ நாளில் தன் ஆடல் முடிந்ததும் வாயிலில் தங்கள் கடமையை கருத்தாக செய்து வரும் அவ்விருவருக்கும் வசுமதி மூலமாக தன் கடமையாக அவரும் படியளந்து விட்டார். நல்ல முடிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    எனக்குத்தான் இன்று வலை தளங்கள் வர தாமதமாகி விட்டது. இறுதியாக வந்தமைக்கு மன்னிக்கவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் கெளதமன் சகோதரரே

    சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் எழுதிய இன்றைய கதைக்கு தாங்கள் வரைந்த ஓவியங்கள் அழகாக இருக்கின்றன. சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல் பழக பழக மிகவும் நன்றாக வந்து விடும். மிக அழகான ஓவியங்களை வெகு விரைவில் எங்களுக்கு தரப் போகும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
    நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      தாமதமாக வந்து நன்றி சொல்கிறேன்..

      இங்குள்ள சூழ்நிலை அப்படி அமைந்து விடுகிறது... தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  20. மிக அழகிய சூப்பரான உரைநடை.. கண்ணுக்கும் மனதுக்கும் இதமாக இருந்தது வசனங்கள்.. கதையில் வருவோர் எல்லோருமே ரொம்ப நல்லவர்களாக இருக்கினமே.. அதிராவைப்போல:)).. சரி சரி முறைக்கக்கூடாது:))..

    ஆனா படிக்கப் படிக்க ஏதோ ருவிஸ்ட் வைக்கப்போகிறார் துரை அண்ணன் எனும் எதிர்பார்ப்புடனேயே படிச்சுக்கொண்டு வந்தேன் ஆனா ருவிஸ்ட் இல்லாமல் முடிச்சிட்டீங்கள், ஏதாவது ஒரு மாற்றம் முடிவில் கொண்டு வந்திருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தை மகள் அதிராவுக்கு நல்வரவு.. வெகுநாள் கழித்து எனது கதைக்கு வந்திருக்கின்றீர்கள்... தங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  21. //" எது பட்டிக்காடு?.. கோயில்ல பிரசாதம் வாங்குறதா!...//

    அதானே இந்த வசனத்தைக் கேட்டாலே.. கீசாக்கா நெ தமிழன் ஸ்ரீராம் எல்லோரும் அடிக்க வருவினம்:)). ஹா ஹா ஹா..

    இதையும் தாண்டி இப்போ நம் பிள்ளைகளும் கோயில் பிரசாதம் முடிஞ்சுபோச்சுதெனில் முகம் வாடிவிடுகிறது:).. வீட்டில எப்படி றிச் ஆக சமைச்சாலும் பிடிக்காமலும் போயிடும் ஆனா கோயிலில அந்தக் குண்டுக் குத்தரிசிச் சோறும் ஒரு சாம்பாறும் கிடைச்சாலே அமிர்தம் போல மீண்டும் கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறார்கள் நம் வீட்:)).. என்ன டிஷைனோ அல்லது கோயிலின் மகிமையோ என நினைப்பேன் நான் ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தை தை தை மகளே! அதிரடி, கோயிலில் கருவறையில் வழிபாடு முடிந்து குருக்களோ, பட்டாசாரியாரோ நிவேதனம் செய்து கொடுக்கும் பிரசாதம் எல்லாக் கோயில்களிலும் கிட்டுவதில்லை. ஒரு சில நவீனக் கோயில்களில் பக்தர்களைக் கொண்டு வரச் சொல்லி ஒரு பெஞ்சில் அவற்றை வைத்துக் கொடுப்பார்கள். அது பிரசாதமே அல்ல.

      நீக்கு
  22. பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  23. கொடுப்பது தரும் மகிழ்ச்சியை இந்தக் கதை மையமாகக் கொண்டிருப்பது சிறப்பு. பட்டண வாழ்க்கை பணத்தைத் துரத்துவதாக இருப்பதையும் அதற்கு மாறான இயல்புகள் வரவேற்கத் தக்கவை என்பதையும் எளிதாக விளக்கி இருப்பது நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!