வெள்ளி, 22 ஜனவரி, 2021

வெள்ளி வீடியோ : வண்ண கூந்தல் கையில் இறங்க வட்டக்கண்கள் பாதி உறங்க

சென்ற வாரம் எல் ஆர் ஈஸ்வரி பற்றிச் சொல்லி இருந்தேன்.  அதனால் என்று இல்லை, யதேச்சையாகவே இந்த வாரம் இரு எல் ஆர் ஈஸ்வரி பாடல்கள்.

விவரங்களுக்காக விக்கியைத் திறந்தால் விக்கிக்கு நேற்று முதல்நாள் பிறந்தநாளாம்.  இருபதாவது பிறந்தநாளாம்.  வாழ்த்துகள் விக்கி!



வல்லவனுக்கு வல்லவன், இரு வல்லவர்கள், வல்லவன் ஒருவன்...   அப்புறம் சிம்பு நடித்து கூட வல்லவன் என்று ஒரு படம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.  இன்று இதிலிருந்து ஒரு வல்லவன்!

வல்லவன் ஒருவன்.  1966 ல் வெளிவந்த திரைப்படம்.  மாடர்ன் தியேய்ட்டர்ஸ் சுந்தரம் தயாரிப்பில் ஜெய்சங்கர், மனோகர், விஜயலலிதா, ஷீலா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம்.  வேதா இசை.  பாடல்கள் கண்ணதாசன்.

முதல் பாடல் 'பளிங்கினால் ஒரு மாளிகை'.  எல் ஆர் ஈஸ்வரி குரலில் அபார வெற்றி பெற்ற பாடல்.  வேதா இதனை எங்கிருந்து எடுத்திருக்கிறார் தெரியுமா?

என்ன சத்தத்தையே காணோமே என்று திகைக்காதீர்கள்.  கணினியில் ஏதாவது கோளாறா என்று தேடாதீர்கள்.  இருபதாவது நொடியிலிருந்துதான் சத்தம் வரும்!

 




இனி நம் எல் ஆர் ஈஸ்வரி குரலுக்கு வருவோம்.  காட்சியில் ஆடுவது விஜயலலிதா.   உடன் இருப்பவர் ஜெய்சங்கர்.  அவர் உடல்மொழி என்ன சொல்கிறது?  காதலா, மயக்கமா?  எச்சரிக்கையா?

பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா..

இருப்பதோ ஒரு நாடக மேடை இரவு நேரத்தில் மல்லிகை வாடை
திறப்பதோ ஒரு சிந்தனை கதவு தேடி எடுத்தால் ஆனந்த உறவு
உறவு…உறவு.. உறவு..உறவு..

நாளை வருவது யாருக்கு தெரியும் நடந்து பார்த்தால் நாடகம் புரியும்
காலை பொழுது ஊருக்கு விடியும் கன்னி நினைக்கும் காரியம் முடியும்
முடியும்….முடியும்… முடியும்…முடியும்..

பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம் உன்னை அழைக்குது வா
.


This film is loosely based on the 1964 classic French movie  Banco à Bangkok pour OSS 117 also known as Shadow Of Evil  என்கிறது விக்கி.  some scenes were based on the 1962 Sean Connery movies From Russia with Love and Dr. No, with a few romantic interludes என்றும் சொல்கிறது.

படம் பிரம்மாண்ட வெற்றி அடைந்து ஜெய்யை தென்னாட்டு ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்க வைத்தது.  இதைத்தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் காரர்கள் எடுத்த படம் சி ஐ டி சங்கர்.  இதில் ஒரு பெண் தனது பெல்ட்டில் வெடிகுண்டு  அரசியல்வாதி ஒருவரைக் கொல்வதாக காட்சி வருமாம்.

இந்தப் படங்களின் காட்சிகள் சில கீழ்க்காணும் படத்திலிருந்து உருவப்பட்டதாக வல்லுநர்கள் சொல்கிறார்கள்!



இனி...   இன்று நான் ரொம்ப விரும்பும் இந்தப் பாடல்.  இந்தப் பாடலில் எல் ஆர் ஈஸ்வரி அம்மாவின் குரல், இசை, அந்த உற்சாகம்...   சரணம் உயரத்தில், பல்லவி கீழே என்று அமர்க்களமான வித்தியாசங்கள்.  

காட்சியில் ஷீலாவின் நளின நடனம்.  உடன் இருப்பவர் ஆர் எஸ் மனோகர்.  மிகவும் கௌரவமான ஆடை அமைப்போடு ஒரு நாகரீகமான...   ஊஹூம்..  எப்படி என்று சரியாய்ச் சொல்ல வரவில்லை.  வித்தியாசமான காதலராக நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

ஒரு சின்ன சோதனை!  எனக்குத் தோன்றுவது போல உங்களுக்கும் தோன்றுகிறதா என்று பார்க்க ஒரு கேள்வி.  இந்தப் பாடல் ஆரம்பத்தைக் கேட்கும்போது எனக்கு வேறொரு பாடல் மனதில் வந்து ஓடுகிறது.  சமயங்களில் அந்த இன்னொரு பாடல் எதுவென்று பிடிபடாமல் கஷ்டப்படுத்தும் ஆயினும் இங்கு உடனே நினைவுக்கு வந்து விட்டது.  உங்களுக்கும் வேறொரு பாடல் அப்படித் தோன்றுகிறதா என்று சொல்லுங்களேன்.  அப்படி நினைவுக்கு வருவது வார்த்தைகளை வைத்து அல்ல, டியூனை வைத்துதான்.  குறிப்பாக ஆரம்ப லலலல்லா கேட்டதும்!  ஒரு சிறு பொறி!

அம்மம்மா கன்னத்தில் கன்னம் வைத்து கொள்ளு
கள்ளுண்ட பூவை கொஞ்சம் கிள்ளு
அம்மம்மம்மா சுகமென்ன சொல்லு
ஹே வாம்மா தங்கத்தில் கட்டி வைத்த பந்து
மஞ்சத்தில் கட்டி வைத்த செண்டு
ஆடட்டும் வந்து அம்மம்மம்மா

வண்ண கூந்தல் கையில் இறங்க
வட்டக்கண்கள் பாதி உறங்க
தன்னந்தனியே கன்னி மயங்க வா
ஆரம்பம் உன்னால் ஆகட்டும் முன்னால்
நேரம் இது தான் வா
முத்தம் என்பது புதுமையா
முகத்துக்கு நேரா வா ..வா.
வாம்மா…
கன்னத்தில் கன்னம் வைத்து கொள்ளு
கள்ளுண்ட பூவை கொஞ்சம் கிள்ளு
அம்மம்மம்மா சுகம் என்ன சொல்லு…

ஒரு தாமரையில் உன்னை எடுத்து
ஓங்கும் மாங்கனி சாறுகொடுத்து
இரவுச்சிறையில் காவலிருப்பேன் வா
பாவனை கண்ணால் பாடட்டும் முன்னால்
பாலம் இதுதான் வா
முத்தம் என்பது புதுமையா
முகத்துக்கு நேரே வா வா.. முகத்துக்கு நேரே வா வா
வாம்மா… கன்னத்தில் கன்னம் வைத்து கொள்ளு
கள்ளுண்ட பூவை கொஞ்சம் கிள்ளு
அம்மம்மம்மா சுகமென்ன சொல்லு  


53 கருத்துகள்:

  1. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு..

    நலமே வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலம் வாழ்க எங்கெங்கும்..

    பதிலளிநீக்கு
  3. அப்போதெல்லாம் ஆறு நாள் ஏக்ஷு நாள் என்று இடைவிடாத சைக்கிள் சுற்று நடத்துவார்கள்... மாலை ஆறு மணிக்கு மேல் ஸ்பீக்கரில் ஒலிபரப்பப்படும் பாடல்களில் இந்த இரண்டு பாடல்களும் கண்டிப்பாக இடம் பெற்று இருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சைக்கிளிலேயே அமர்ந்து செய்யும் அந்த நிகழ்ச்சி நானும் பார்த்திருக்கிறேன்.  அப்போதைய பிரபல பாடல்கள் இடம்பெறும்.

      நீக்கு
  4. இப்படியும் ஒரு சோதனை - தை வெள்ளிக்கு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பாடலை ரசிப்பதற்கு நேரம் காலம் எல்லாம் பார்ப்பதில்லை துரை செல்வராஜூ ஸார்.   வெள்ளிக்கிழமைகளில்தான் பாடல்கள் பகிரப்படுவதால் அதன் புனிதம் கெடாமல் பாடல்கள் பகிர்வ்து சற்றே சிரமம்!

      நீக்கு
  5. வெள்ளிக்கிழமை விடியும் நேரம்
    வாசலில் கோலமிட்டேன்...
    வள்ளிக் கணவன் பேரைச் சொல்லி
    கூந்தலில் பூமுடித்தேன்!...

    இதுவும் திரையிசை தந்த தென்றல்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.   அதுவும் இனிய பாடல் என்பதில் சற்றும் ஐயமில்லை!

      நீக்கு
  6. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
    இனிமை ,இசை, பாடல் வரிகள் எல்லாம் அமையப் பெற்ற பாடல்கள்.
    நானும் இந்தப் பாடல்களின் ஒரிஜினல் மேற்கத்திய இசையைக் கேட்டிருக்கிறேன்.

    எல்.ஆர். ஈஸ்வரி அவர்களின் குரல் காந்தம் எங்களுக்கெல்லாம் மிகப்
    பிடிக்கும் வசீகரம்.

    முன்பே சொல்லி இருக்கிறேனோ என்னவோ.
    மாடர்ன் தியேட்டர்ஸின் வண்டிகள் சேலம் டிவிஎஸ்
    வொர்க்ஷாப்புக்கு வந்து கொண்டே இருக்கும்.

    பெரியவர் சுந்தரம், மகன் ராமசுந்தரும் சிங்கத்துக்கு
    சிறந்த நண்பர்கள்.

    அவர்களின் மேனேஜர் திரு சம்பத் என்பவர்
    எங்களிடம் பரிசாக இந்த எல் பி ரெகார்டுகளைக்
    கொடுத்து இருந்தார். எல்லாம் ட்ரம்பெட் இசை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா.  வணக்கம்.  

      //பெரியவர் சுந்தரம், மகன் ராமசுந்தரும் சிங்கத்துக்குசிறந்த நண்பர்கள்.//

      எனக்கு இது புதிய செய்தி...

      நீக்கு
  7. பளிங்கினால் ஒரு மாளிகை
    ஜெய் சங்கர்,விஜயலலிதா. ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...    எல் விஜயலக்ஷ்மி என்று கொடுத்து விட்டேனோ...   பின்னர் மாற்றுகிறேன் அம்மா.

      நீக்கு
    2. விஜய லலிதாவை பார்கக விரும்பும் ஒரு தாத்தாவைப் பற்றி சுகா எழுதி இருப்பார்!:

      நீக்கு
  8. வந்தால் என்னோடு இங்கே
    வா தென்றலே!..

    - என்னும் பாடலும் மேற்கத்திய இசையே..
    ( Come September )

    வெளி இசையை தமிழில் தருவது ஒரு ரசனையாய் இருந்தது அப்போது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.

      அந்நாளில் தஞ்சாவூர் அருள் தியேட்டரில் திரை உயரும்போது வரும் இசை இந்த கம் செப்டம்பர்தான்.

      நீக்கு
  9. சிலசமயம் சொன்னதையே திருப்பி சொல்கிறேனோ என்று தோன்றுகிறது:)
    மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோ வீட்டிலிருந்து ஏற்காடு போகும் வழியில்
    இருந்தது.
    ராம்சுந்தரின் மனைவி கலை.
    அவரும் குழந்தைகளும் யூகே சென்றார்கள்.
    ராம்சுந்தரின்
    அம்மா ஐரிஷ் ,அப்பா தமிழர். இவர் பேசும் தமிழ்
    வினோதமாக இருக்கும்.
    வேதாவின் இசையில் பல பாடல்கள் வெற்றி
    பெற்றன. ராம்சுந்தர் சிறு வயதிலியே இறைவனடி சேர்ந்தார்.
    எல்லாம் ஏதோ கனவு போல இருக்கிறது.
    நல்ல பாடல்களை இங்கே பதிவிட்டதற்கு நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமயங்களில் மீண்டும் சொல்வதால் தவறில்லைம்மா...    முன்பு அறியாதவர்கள் அறிய வாய்ப்பு..   பாடல்களை  ரசித்ததற்கு நன்றி அம்மா.

      நீக்கு
    2. நன்றி மா ஸ்ரீராம். கவனம் இல்லாமல் போகிறது.
      மிக நன்றி.

      நீக்கு
  10. அம்மம்மா.பாடல் காட்சி மனோகர்
    கச்சிதமாக நடித்திருப்பார்.
    அப்பழுக்கில்லாத கௌரவமான அணுகல் முறை.
    சிறந்த அனுமன் பக்தர்.

    குள்ளமான உருவம். நம் பாங்க் ஹனுமாரை
    ராம் ராம் என்று கூவி அழைத்தபடி
    வேகமாகச் சுற்றி வருவார்.

    நல்ல வலுவான உடல் அமைப்பு.
    அப்போது புராண நாடகங்களை மேடைகளில்
    நடத்திக் கொண்டிருந்தார்.
    இலங்கேஸ்வரன் மிகுந்த புகழ் பெற்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  அந்தக் காட்சியில் மனோகரின் உடை நேர்த்தியும் மிடுக்கான நடிப்பும் கவர்ந்து விடும்.  ஓ...  உங்கள் வீட்டுக்கு அருகில்தான் அவர் வீடா?

      நீக்கு
    2. அது தெரியாது மா. எல்லா ஆஞ்சனேயரும் தரிசிக்கப் போவார் என்று சொல்வார்கள்.

      நீக்கு
  11. ஆமோரே. அமோரே மைன்...Amore mine. My love.
    இந்தப் பாடலின் மறுவடிவம் அம்மம்மா.
    தேடிப் பார்க்கிறேன் கிடைக்கவில்லை.
    அந்த இசைத்தட்டுகள் எல்லாம் தேய்ந்து உடைந்து விட்டன.
    ஆர்டீ ஷா வாசிப்பது க்ளாரினெட்.
    ட்ரம்பெட் என்று தவறாகச் சொல்லிவிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...    அப்படியா அம்மா?  தேடிப் பார்க்கிறேன்.

      நீக்கு
    2. வல்லி நன்றாக அலசி இருக்கார். இவ்வளவெல்லாம் நினைவில் வைத்திருக்கையிலேயே நினைவு சரியில்லைனு குறைப்பட்டுக்கறாரே! அபாரமான நினைவாற்றல் வல்லி.

      நீக்கு
    3. அன்பு கீதாமா,

      பாடல்களைப் பொறுத்தவரையில் நினைவு இறைவன் கொடுத்த வரம்.
      இந்தச் சொன்னதையே
      மீண்டும் சொல்வதைத் தான் யோசிக்கிறேன்.
      I keep on repeating the same thing.

      மகள் மகன்களிடம்
      அவ்வப்போது சொல்லி விடுவேன் ஏற்கனவே
      சொல்லி இருக்கிறேனோ என்று:)
      நன்றி மா.

      நீக்கு
  12. வித்தியாசமான குரலுக்கு சொந்தக்காரர்... இனிமையான பாடல்கள்...

    எல்லா லலலலல பாடலும் ஞாபகம் வருகிறது... ஆனால் ஏதோ ஒரு 'ல' தொண்டையில் சிக்கி வெளியில் வர மாட்டேங்குது...!

    பதிலளிநீக்கு
  13. ஜெய்சங்கர், விஜயலலிதா, எல்.ஆர்.ஈஸ்வரி என்றெல்லாம் கதைத்துவிட்டு கடைசியில் சிம்பு, சொம்பு என்கிறீர்களே.. உங்களை என்ன செய்வது இந்த வெள்ளியில்!

    பதிலளிநீக்கு
  14. பாடல்கள் நன்று. மாலையில் தான் கேட்க முடியும்.

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  15. பளிங்கினால் ஒரு மாளிகை - பாடலைப் படித்துக் கேட்டபிறகு, அடுத்த பாடல் சப்பென்றிருந்தது.

    என்ன ஒரு அருமையான திறமைசாலி இந்த எல்.ஆர்.ஈஸ்வரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன இப்படி சொல்லி விட்டீர்கள் நெல்லை...   நான் அந்த இரண்டாவது பாடலைத்தான் இன்னும் ஸ்பெஷலாக நினைத்தேன்!

      நீக்கு
    2. இரண்டுமே அடிக்கடி கேட்டது தான். இரண்டும் ஈஸ்வரி குரலில் அருமை.

      நீக்கு
  16. அடிக்கடி கேட்ட பாடல்கள் ஜி

    பதிலளிநீக்கு
  17. பளிங்கினால்.. வரிகள் அந்தக் கூத்துக்கேற்றபடி அமைந்திருந்தாலும் (அங்கேயும் தத்துவம் - நாளை வருவது யாருக்கு தெரியும் ..நடந்து பார்த்தால் நாடகம் புரியும் !), ஈஸ்வரி அதைப் பாடியிருக்கும் விதம்..class. அதனால்தான் பாடல் மனதில் இணைகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணதாசன்!

      சில சமயம் பாடும் குரலும் டியூனும் கவர்ந்து விடும்.  உதாரணமாக மாளிகைக்குப் பின்னே இருக்கும் மரத்தடிக்குப் போனேன்..  முள் குத்தி விட்டது என்று ஒரு பாடல்..  வரிகளில் என்ன..  பாடல் என்னை கிறங்க அடிக்கும்.  நாட்டியமும்!

      நீக்கு
  18. அம்மம்மா.. என்று இரண்டாவதில் கண்பட்டவுடன் பி.சுசீலாவின் (’சுசீலா அம்மா’வின் அல்ல!) -

    அம்மம்மா ..காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
    பூவாடை கொண்ட மேனிதன்னில் ஆசை வெள்ளம் ஓடும்..

    என ஓடும் பாடலே நினைவில் ஆடியது. கண்ணதாசன் வரிகளை (என நினைக்கிறேன்) எப்படித்தான் பாடியிருக்கிறார் சுசீலா. ஆஹா..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பி.சுசீலாவின் குரலுக்கு ஈடு இணையில்லை.
      ஒரு லதா என்றால் ஒரு ஆஷா பான்ஸ்லே ஊறுகாய்
      ஜி.
      :)

      நீக்கு
    2. வெண்ணிற ஆடை.  பி சுசீலா அமர்க்களப்படுத்திய படம்.

      நீக்கு
  19. இரண்டு பாடல்களும் பிடித்த பாடல். வானொலியில் முன்பு அடிக்கடி ஒலிக்கும் பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அக்காவின் பின்னூட்டத்தை காணும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது.

      நீக்கு
  20. L.R.Easwari is a phenomenal singer! பளிங்கினால் ஒரு மாளிகை.. பாடல் சாகா வரம் பெற்ற பாடல்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!